Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் கூத்துகள்: வீணைக்கும் வித்தி அண்ணருக்கும் தலாக்… தலாக்…

Featured Replies

vithi-douglas

‘தேசிய மட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் தான் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தேர்தல்களத்தில் போராளிகள் இறங்க விரும்பிய போதும் அதைத் தவிர்த்தார்கள்.

யாழ் மாவட்டத்தில் எங்களை மக்கள் அங்கீகரிப்பார்கள் என உரிமையுடன் எதிர்பார்க்கிறோம். அந்த வெற்றி மூலம் கூட்டமைப்புக்குள் எங்கள் பிரசன்னத்தை பங்களிப்பை உறுதிசெய்வோம். கூட்டமைப்பையே கட்டுறுதிமிக்க அமைப்பாக மாற்றுவோம்.’ – இவ்வாறு பொழிந்திருக்கிறார் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன்.

போராளிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதனால் தனது மகன் பகீரதன் தலைமையில் தமிழீழ தேசிய இராணுவம் என்ற ஓர் ஆயுத அமைப்பை புதிதாக உருவாக்கிய அமிர்தலிங்கம், பத்திரகாளியின் பக்தன் என்பதால் சிங்கக்கொடியை ஆட்டிய சம்பந்தன் ஐயா வரிசையில் கூட்டமைப்பைப் பலப்படுத்த கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுகிறார்களாம். அப்படியானால் இதுவரை நாளும் மாற்றுத் தலைமை, புதிய கட்சியின் தேவை பற்றி பொழிந்ததெல்லாம் என்னாச்சு?

‘சம்பந்தன் ஐயா கடலைக்கடை நடத்தத்தான் லாயக்கானவர்’என்று தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததும் கூறியமை என்னாச்சு? போராளிகளின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர்களாக உங்களை யார் நியமித்தார்கள்?

செஞ்சோலை சுகன்யா சித்தி என்றழைக்கப்படும் சின்னமணி கோகுலவாணி மற்றும் ஏனைய மாவட்டங்களில் போட்டியிடும் முன்னாள் போராளிகளுக்கு வாக்களிக்கக் கூடாதென்ற நிலைப்பாடு எடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சரிபோகட்டும்.

திருமலை மாவட்டத்தில் சம்பந்தன் ஐயாவைத் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளரை நியமிக்க அல்லது கண்டுபிடிக்க எந்தக் கட்சியாலும் முடியவில்லை. இத்தனைக்கும் இருதடவைகள் இவரைத் தோற்கடித்தவர்கள் திருமலை மக்கள்.  1989 தேர்தலில் நாடாளுமன்ற அரசியலுக்குப் புதியவர்களான ஈரோஸ் குழுவால் தோற்கடிக்கப்பட்டவர் தான் இவர். அந்தத் தேர்தலில் ஈரோஸ் திருமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு வாக்களித்து இவருக்கு தமது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தினர் வாக்காளர்கள். பாதையில் இருந்து இவர் மாறினாலும் தாம் மாறவில்லை என்பதே அவர்கள் சொன்ன அழுத்தமான செய்தி. அடுத்த தடவை விருப்பு வாக்கில் முதலிடத்தை அ.தங்கத்துரைக்கு வழங்கி, சிறிதுகாலம் சம்பந்தன் ஐயாவுக்கு ஓய்வு கொடுத்தார்கள்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை எப்படித்தான் முயன்றாலும் ஓர் ஆசனத்துக்கு மேல் பெறமுடியாது. ஆகவே அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடாது என்பதை ஒருவாதத்துக்கேனும் ஏற்றுக்கொள்ளலாம். இந்த நிலைப்பாட்டில் தான் பிள்ளையானும் உள்ளார்.

வன்னியிலும் மட்டக்களப்பிலும் முன்னாள் போராளிகள் தெரிவாகக் கூடாது, அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் வெல்ல வேண்டும் என்று வித்தியாதரன் தலைமையிலானோர் எப்படி முடிவு எடுக்கலாம்?

வன்னியிலும் மட்டக்களப்பிலும் 1989 தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் இருந்து தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர். வித்தியாதரன் அணியிலிருந்து போட்டியிடுபவர்களில் எவராவது 1990க்கு முன்னர் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்ததாகத் தெரியவில்லை. 1990 வரை ஈரோஸில் இருந்துவிட்டு அந்த அமைப்பு புலிகளுடன் சங்கமமாகிய போது அதில் பணியாளராக 2008 வரை இருந்து, அதன்பின் இறுதிக்கட்ட ஆட்சேர்ப்பின் போது புலியான ரவிராஜ் தான் இவர்களில் மூத்தவர்.

இவர் இறுதிப்போரின் பின் ஈ.பி.டி.பியுடன் திரிந்ததையும், யாழ் கிளிநொச்சி மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தக்கூடிய இரணைமடு நீரை யாழ் வரை கொண்டு வருவதற்கான விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதையும் மறக்கமுடியாது. இவர் போன்றோருக்காக 1984இல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியில் உயர்தர வகுப்பு படிக்கும் போதே ஒரு தமிழ் இளைஞருக்கான கடமையை ஆற்றப்புறப்பட்ட சமயலிங்கம் அண்ணாத்துரை போன்றோர் மட்டக்களப்பில் இருந்து தெரிவாகக்கூடாது என்று எப்படி முடிவெடுக்கலாம்?

யாழ்ப்பாணத்துக்கு அப்பால் உள்ளவர்கள் மாற்றுத் தலைமை பற்றி முடிவெடுக்க முடியாது என்ற வித்தியாதரனின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதா?  தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நாடாளுமன்றில் கூறிய பாக்கியசெல்வம் அரியநேத்திரன், இந்திய இராணுவ காலத்தில் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி விஜி என்ற உயர்தர வகுப்பு மாணவியைப் படுகொலை செய்து ஆற்றில் வீசிய குழுவின் தலைவர் ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரன், தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வணசிங்க முதலான கல்வியாளர்களை படுகொலை செய்த குழுவின் தலைவர் இரா.துரைரத்தினம் போன்றோர் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

ஜனா குழுவாலும், இரா.துரைரத்தினம் குழுவாலும் படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் பட்டியல் மிக நீளமானது. மாவீரர் பட்டியலில் இருந்து இந்தப் போராளிகளின் பெயர்களை நீக்க வித்தியாதரன் குழுவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

செல்வம் அடைக்கலநாதனும் இனத்துக்குத் தலைமை தாங்கத் தகுதியானவர் என்று இப்போதும் கருதுகிறாரா? அடைக்கலநாதன் போன்றோரெல்லாம் தொடர்ந்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் போகவேண்டும் என்பதும் வித்தி குழுவின் வேண்டுகோளா?

அண்ணாத்துரை போன்றோரை நிராகரித்து கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டுமென்பது வித்தி தரப்பு வாதம். எனவே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் யார் என மக்கள் முடிவெடுக்கட்டும். கூட்டமைப்பு என்பது வெறும் சொல் தான். அது எந்தக் காலத்திலும் பதிவு செய்யப்பட முடியாதது. அதன் கடிவாளம் சம்பந்தன் ஐயாவிடமும், சுமந்திரனிடமும் மட்டுமே உள்ளது. வேறு எவரும் அதில் கைவைக்க முடியாது. அதில் கைவைக்கும் உரிமையை தனக்கும் தரவேண்டும் என்பதே வித்தியாதரனின் நிலைப்பாடு.

‘வீட்டில் கட்டில் நின்று புல்வெளியில் புளுகோடு மேய்ந்து கொண்டிருந்த மாடு நினைத்ததாம், இனிமேல் தான் தனக்கு சுதந்திரம் என்று.’ இந்திய இராணுவம் கால்பதித்த 1987இல், இலங்கை இராணுவம் முடக்கப்பட்ட காலத்தில் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த கவிதை இது.

யாழ் மாவட்டத்தில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்னர் ஒரு முன்னாள் போராளி ‘தற்போது முன்னாள் போராளிகள் எதுவித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளவில்லை. தெற்கு அரசு எங்களை ஜனநாயக ரீதியில் அங்கீகரித்திருக்கிறது’ என்று கூறியதாக வித்தியாதரன் முன்னர் ஆசிரியராக இருந்த உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேல்குறிப்பிட்ட கவிதைக்குப் பொருள் என்னவோ அதே பொருள்தான் இந்த முன்னாள் போராளியினுடைய உண்மையான நிலையாகும்.

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சித்தார் என்றும் குற்றஞ்சாட்டி பூசாவில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை இந்த முன்னாள் போராளி அறிந்திருக்கமாட்டார்.

புனர்வாழ்வு பெற்றோ, வழக்கிலிருந்தோ விடுதலையான ஒருவர் மீது எந்தக்காலத்திலும் திரும்ப வழக்குப் போடமாட்டோம் என்று எழுத்து மூலமான ஆவணம் ஏதாவது வழங்கப்பட்டுள்ளதா? புல்வெளியில் புளுகோடு மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் நிலைதான். நீளக்கயிற்றில் விட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் விடுதலையாக வேண்டுமென்றால் அது தொடர்பாக இப்பிரிவின்டி ஜ.ஜி வரை போய் முடிவெடுக்க வேண்டும். ஆனால் ஒருவரைத் தொடர்ந்து தடுத்து வைக்க ஒரு சாதாரண பி.சிஇன் (Police constable) முடிவே போதும்.

மகிந்த இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த சமயம், சில போராளிகளை விடுதலை செய்யப்படக் கூடியவர்கள் என டி.ஜ.ஜி தீர்மானித்தார். அந்தப்பட்டியலில் சீவரத்தினம் பாலதயாகரன் என்பவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. எனவே பூசா முகாமிலிருந்து நீதிமன்ற நடவடிக்கைக்காக அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் இடத்துக்குக் கூட்டிச்சென்ற பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கே வந்த ஒருவர் பாலதயாகரனை இறக்கிவிட்டார். ஏனெனில் அவர் புலித்தேவனின் சகோதரர் புலிமறவன்.

ஜனாதிபதி தேர்தல் சமயம் இவரை விடுதலை செய்தால் வெள்ளைக்கொடி விவகாரம் ஏதோவகையில் கிளறப்படலாம் என அவர்கள் எதிர்பார்த்தனர். அதனால் டி.ஜ.ஜியின் உத்தரவைப் புறந்தள்ளி அவருக்குக் கீழுள்ளவர் பாலதயாகரனைத் தொடர்ந்து சிலகாலம் தடுத்து வைக்க முடிவெடுத்தார். இதுதான் நிலைமை.

அவர்களின் அரசியலுக்குப் பங்கம் ஏற்படாது எனக் கருதினால் தான் விடுதலை. இல்லையேல் நீதிமன்ற விசாரணை. எனவே தமக்கான சுதந்திரத்தின் எல்லை எதுவென்பதைத் தம்பிமார் புரிந்திருக்க வேண்டும். தமது எதிர்காலம், பாதுகாப்பு, குடும்பம் எல்லாவற்றையும் கருதி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எல்லாம் வித்தி அண்ணர் பார்ப்பார் என்று கழுத்தில் கத்தி விழும் வரை காத்திருக்கக் கூடாது.

வித்திக்கு ஏதாவது என்றால் பலகல்ல முதலான பல இராணுவ அதிகாரிகள் ஏதோ முயற்சி எடுத்துக் காப்பாற்றுவார்கள். படையினர் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை அவர் ‘என் எழுத்தாயுதம்’ என்னும் நூலில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதைவிட ஊடகவியலாளர் என்ற கவசமும் உண்டு. ஆனால் இவர்களுக்கு அது இல்லை.

தோழர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார் ‘தேர்தலின் பின் அமையவிருக்கும் அடுத்த அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தைத் தாக்கல் செய்வேன்’ என்று. அவர் சந்திரிகா கட்சியுடன் நட்பாக இருந்த காலத்தில் தான் நன்னடத்தை அரசாங்கம் ஒன்றை ஜே.வி.பியினருடன் இணைந்து சந்திரிகா அமைத்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குள்ளேயே சிறையில் இருந்த சகல ஜே.வி.பி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதும் பல தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அப்போது ஜே.வி.பியினரை விட கூடுதலான எம்.பிக்கள் ஈ.பி.டி.பிக்கு இருந்தனர். எனினும் இவரால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி எண்ணிக்கூடப் பார்க்க நேரமில்லை.

சரி புலிகளைத் தான் விடுங்கள், 2009 ஆம் ஆண்டின் பின் கைது செய்யப்பட்ட யாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பி சார்பான உறுப்பினர் முருகையா கோமகன் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர்களைத் தானும் விடுவிக்க இவர் முயற்சி எடுத்தாரா? கோமகன் விருப்பு வாக்கில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர். இவர் கைது செய்யப்பட்டு ஒருவருட பூர்த்தியை யாழ் மாநகரசபை கேக் வெட்டி கொண்டாடியது என்றால் சும்மாவா. தமது கட்சியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார் என்று கூடப் பார்க்காமல் சந்தோசத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஈ.பி.டி.பியினரை என்னவென்று சொல்ல.

சிறீதர் தியேட்டரில் உள்ள டக்ளசின் காரியாலயத்திற்கு அலைந்தும் மகனை சிறையில் இருந்து எடுக்கமுடியாத தாயார் நோயாளியாகிவிட்டார். இந்த நிலையில் சுமந்திரன் போட்ட நாடகத்தையே இவரும் போடப் புறப்பட்டுள்ளார்.

யாழ் அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஈ.பி.டி.பியினரின் சொல்லின் செல்வர் செல்வவடிவேல் என்பவர் உரையாற்றினார்.  நீதிமன்ற விவகாரத்தில் பல இளைஞர்களை அடையாளம் காட்டி அநுராதபுரம் சிறைக்கு அனுப்பி வைத்த டான் தொலைக்காட்சி இதனை ஒளிபரப்பியது. ‘நாங்கள் வெற்றிலையைச் சப்பித் துப்பிவிட்டோம், வெற்றிலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உங்களுக்குக் கூறுவார்’ என்றார் செல்வவடிவேல். வெற்றிலைக்குத் ‘தலாக்…தலாக்…தலாக்’ என்று கூறி வீணையை மீட்டினார்.

அடுத்த ஆட்சியை அமைக்கக் கூடியவர்கள் வெற்றிலைக் கட்சியினர் அல்லது யானைக் கட்சியினர் தான். வெற்றிலையைச் சப்பித் துப்பிவிட்டோம் என்றால் வெற்றிலைக் கட்சி வெற்றி பெற்றால் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை எப்படி டக்ளஸ் தாக்கல் செய்ய முடியும்? யானை வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைய வேண்டும். அதொன்றும் அவருக்குப் பிரச்சினையில்லை.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரிடம் ஒரு சிங்களவர் கேட்டாராம் ‘உங்களுக்கென்று ஒரு கொள்கை இல்லையா? ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அங்கு நீங்கள் இருக்கிறீர்கள், சுதந்திரக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அதிலும் இருக்கிறீர்கள்’ என்று. அதற்கு அந்த முஸ்லிம் அரசியல்வாதி சொன்ன பதில் ‘நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நாங்கள் எப்போதுமே ஆளும்கட்சி தான், நீங்கள் தான் அடிக்கடி ஐக்கிய தேசியக் கட்சி என்றும் சுதந்திரக் கட்சி என்றும் மாற்றி மாற்றிக் கதிரையில் அமர்கின்றீர்கள்’. இது டக்ளஸிற்கும் பொருந்தும்.

அவர் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்று சொல்லவில்லை. அடுத்து வரும் ஆட்சியில் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பேன் என்று தான் கூறுகிறார். இதற்குள் அடுத்த ஆட்சியில் தான் ஒரு அமைச்சராகப் போவதாக சுமந்திரனும் கனவு காண்கிறார். இந்த அமளிக்குள் அரசியல் கைதிகளை விடுவித்தது யார் என்று கேட்கிறார். இன்னமும் 1977 நினைவிலேயே இருக்கிறார் அவர்.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ என்ற சினிமாப் பாடல் தான் அரசியல் அரங்குகளைக் காணும் போது நினைவில் வருகிறது.

-பகலவன்

நன்றி : பொங்குதமிழ்.கொம்

http://tamilleader.com/?p=50391

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.