Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?

வுனியா நகரை எங்களின் கார்  நெருங்கிக் கொண்டிருந்தது.  நாட்டு நிலவரங்களை எங்களோடு துணையாக வந்த சிவா களைப்பில்லாது கொழும்பிலிருந்து சொல்லி வந்துகொண்டிருந்தான். பின்னணியில் சக்தி எப்ஃ எம்மில் ‘வேணாம் மச்சான் வேணாம்’ என்கிற பாடல் போய்க் கொண்டிருந்தது. காதலாய் இருந்தாலென்ன வீரமாய் இருந்தாலென்ன தோற்றுப் போனவர்களின் கதைகளின் உள்ளடுக்குகளில் துயரமே ததும்புகிறது. சிவா பேசிக்கொண்டிருக்கும் விடயங்கள் தற்போதைய மோஸ்தரில் கறுப்பிலா வெள்ளையிலா அல்லது பழுப்பிலா வருமெனத் தெரியாது நான் குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் சிவப்பும் மஞ்சளுமான வர்ணங்களைத் தெரிவு செய்து சிவா ஒரு பெரும் கனவுக்காய்த் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் இருக்கின்றான்.

சிவாவும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாங்கள் வெவ்வேறு ரியூட்டரிகளைத் தேர்ந்தெடுத்திருந்தோம். அவன் சுன்னாகம் பக்கமாகவும் நான் அதற்கு எதிர்த்திசையில் இருந்த அளவெட்டிக்கும் ரியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தோம்.  ஊரை விட்டு தூரம் கூடச் சென்று படித்தால், படிப்பில் ஒரு மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கை எங்களில் பலருக்கு இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தூர நகர் ரியூட்டரிகளில்தான் வேறு பாடசாலை பெண்களைப் பார்க்கலாம் என்கின்ற ஒரு காரணத்திற்காய் மட்டுமே எதிர்க்காற்றில் சைக்கிளை மூசிமூசி மிதித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ், சமயம் போன்ற மேலதிக உதவி தேவைப்படாத பாடங்களைக் கூட  பக்திப் பழங்களாய் வரும் பிள்ளைகளுக்காய்க் கடைசி வாங்கிலிருந்து சிரத்தையாகக் கற்றுக் கொண்டிருந்தேன்.  எங்களை விட இரண்டு வயது கூடிய, என்னை மிருதங்க வகுப்புக்குக் கூட்டிச் செல்கின்ற துவாரகன் அண்ணா, வாணி விழாவில் ‘எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது’  என்ற உருக்கமான இயக்கப்பாடலைப் பாடிவிட்டு அடுத்த கிழமை இயக்கத்துக்குப் போயிருந்தார். நாமெல்லோரும் படித்துக் கொண்டும், பிள்ளைகளின் பின் சுழட்டிக் கொண்டும் திரியும்போது அவரேன் ‘எங்களின் பாதைகள் வளையாது’ என்கிற வழியைத் தேர்ந்தெடுத்தார் என்பது விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாய்த்தானிருந்தது. ஒவ்வொருத்தருக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ள எளிதில் பகிர்ந்து கொள்ள முடியா ஏதோவொரு காரணம் அவரவர் மனதுகளில் இருந்திருக்கும் போலும்.

ஒருநாள் ரியூசனுக்குப் போன சிவாவையும் அவனின் நண்பர்கள் சிலரையும், இயக்கம் பங்கர் வெட்டுவதற்கென கட்டுவன் பக்கமாய் கூட்டிக் கொண்டு போயிருந்தார்கள். றெக்கி பார்த்துக்கொண்டு இருந்த ஆமிக்காரன், இவர்கள் ஏதோ தாக்குதலிற்குத் தயாராகிறார்கள் எனத் தவறான செய்தியை அனுப்பியிருக்க வேண்டும். பலாலியிலிருந்து சரமாரியாக ஷெல்லைப் பட்டப்பகலிலேயே குத்தத் தொடங்கிவிட்டாங்கள். அதிஸ்டவசமாய் சிவா செல் தாக்குதலில் தப்பிவிட்டான், ஆனால் அவனின்  இரண்டு நண்பர்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறிச் செத்துப் போய்விட்டார்கள். எந்நேரமும் கலகலப்பாய்த் திரியும் சிவா கொஞ்சக்காலம் மவுனச்சாமி போல நடமாடிக்கொண்டிருந்தான். பிறகொருநாள் துவாரகன் அண்ணா போலவே இயக்கத்தில் இணைந்து விட்டான். அவனைத் தேடு தேடென்று அவனது வீட்டுக்காரர்கள் தேடியதில் இறுதியில் ‘லுமாலா’ சைக்கிள் மட்டுமே அகப்பட்டது. பயிற்சிக்காய் அவனை வன்னிப்பக்கமாய்க் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி பின்னாட்களில் சாடைமாடையாய்ப் பேசப்பட்டது. என் வயதொத்த மச்சாள்காரிதான் சிவாவை அடிக்கடி நினைவுபடுத்தி என்னிடம் கதைகள் பல கூறிக்கொண்டிருப்பாள்.

சிவா ஏழெட்டு வருடம் இயக்கத்திலிருந்துவிட்டு சுனாமி நேரத்தில் போராடியது போதுமென ‘துண்டு’ கொடுத்துவிட்டு வந்திருந்தான். எனது மச்சாளைத்தான் மணமுடித்தும் இருந்தான். . நாங்கள் யாழ்ப்-பாணத்துக்குப் போகும் வழியில், உமா மகேஸ்வரனின்  பெயருடைய வீதியிலிருக்கும் மச்சாளின் வீட்டில் சாப்பிட்டுப் போவதென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பெருந்தெருவிலிருந்து உமாமகேஸ்வரன் வீதியில் திரும்பும்போது, யாரையோ ஒருவரைக் காரின் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டு சிவா, ‘இந்த நாசமாய்ப் போகிறவன் ஏன் இங்கை இப்ப வந்து நிற்கிறான்’ என முணுமுணுத்தான். அவனைப் பார்த்ததன் பின் சிவாவிடம் அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகங்கூட கொஞ்சம் வடிகட்டிப்போனது போலத் தோன்றியது.


ச்சாளின் வீட்டு முற்றத்தில் நிறைய செவ்வந்திப் பூக்கள் பூத்துக் கிடந்தன. முன்பொரு காலத்தில் ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இதென’ மச்சாளைப் பின் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வந்து போயின. ஆனால் பிறகு விக்ரர் அம்மானிற்கும் இந்தப் பாட்டுத்தான் பிடிக்கும் என்பதைக் கேள்விப்பட்டபின் இதைப் பாடுவதைக் குறைத்துக் கொண்டேன். சிலவேளைகளில் இந்தப் பாட்டுக்கு இயக்கம் உரிமை கோரியிருக்கிறதோ என்னவோ, ஏன் வீண் பிரச்சினை என்று இதை நிறுத்திவிட்டு ‘நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா’விற்கு மாறியிருந்தேன். மச்சாளின் பின் நான் பாடித்திரிந்த நன்றிக்கடனிற்காகவோ என்னவோ மச்சாள் தன் வீட்டுச்சேவலை அடித்துப் பொன்னியரிசியோடு அமர்க்களமாய் விருந்து தயார் செய்துவைத்திருந்தார்.

சாப்பிட்டுப் படுத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ‘கனடாவில் ஒழுங்காய் நித்திரை கொள்வதில்லை போல, பாவம் படுக்கட்டுமென’ மச்சாள்தான் என்னை எழுப்ப விடாது தடுத்திருக்கின்றார். நேரம் ஆறு மணியாயிருந்தது. ‘இனி இந்த இரவில் அவசரம் அவசரமாய் யாழ் போய் டக்ளஸசையா சந்திக்கப் போகிறாய், ஆறுதலாய் நாளை போகலாம்’ எனச் சொல்லித் தடுத்தும் விட்டார். நீண்டகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறோம் கதைக்க கனக்க பழைய கதைகள் இருக்கிறதென நானும் வவுனியாவில் நிற்கச் சம்மதித்து விட்டேன். இரவு தேங்காய்ப்பூப் போட்ட குழல்பிட்டும் கணவாய்க்கறியும். இது போதாதென்று கறுத்தக் கொழும்பான் மாம்பழமும் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. பிட்டோடு மாம்பழத்தைப் பிசைந்து சாப்பிடுவதைப் போல ஒரு சுவை எங்கும் வராது. சின்ன வயதிலிருந்தே எனக்கு கணவாய்க்கறியும் மாம்பழமும் புட்டோடு சாப்பிடப் பிடிக்கும் என்பதை இன்னும் மச்சாள் மறக்காமல் இருந்தது நெகிழ்வாய் இருந்தது. ‘எங்கடை அம்மாவைப் போல மச்சாளுக்கும் எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பது நல்லாய்த் தெரியுமென சிரித்தபடி சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்த சிவாவிற்கு வயிறு எரிந்திருக்கும், அதற்காய் மனதில் உள்ளதை நான் சொல்லாமல் விடமுடியுமா என்ன?

இன்னமும் அறுந்து போய்விடாத எங்களின் அந்நியோன்னியத்தைக் கண்டு சிவா சாபம் போட்டானோ என்னவோ தெரியாது, அன்றிரவு எனக்கு வயிற்றைக் குத்தத் தொடங்கிவிட்டது.  காணாததைக் கண்டதைப் போல அளவுக்கு மீறிச் சாப்பிட்ட கணவாய்தான் விளையாட்டைக் காட்டியிருக்க வேண்டும். நான் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு மச்சாள், சிவாவிடம் ‘ஒருக்காய் இவனைக் கூட்டிக்கொண்டு போய் டொக்டரிடம் காட்டுங்கோவன்’ எனச் சொன்னாள். பக்கத்து வீதியில் ஒரு டொக்டர் இருந்தாலும் சிவாவிற்கு அவரிடம் போக அவ்வளவு விருப்பமில்லை. ‘நீயும் வாவன், என்னால் உள்ளே வர முடியாது, நான் வெளியில் நிற்கிறன். நீ இவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டு’ என மச்சாளிடம் கூறினான். மச்சாளும் அவசரம் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு எங்களோடு காருக்குள் ஏறினார்

டொக்டரின் வீடும், நோயாளிகளைப் பார்க்கும் இடமும் ஒரேயிடமாய் இருந்ததால் நல்லதாய்ப் போய்விட்டது.  இரவு பத்து மணியைத் தாண்டியதால் டொக்டர் படுத்துவிட்டார் போலும். அவரின் மனைவிதான் கதவைத் திறக்க, மச்சாள் நிலைமையை விபரிக்க, ‘கொஞ்ச நேரம் இந்தக் கதிரையில் இருங்கோ, அவரை நான் எழுப்பிவிடுகிறேன்’ எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளுக்குள் போய்விட்டார்.  நான் வயிற்றை ஒருகையால் தடவியபடி, ‘ஏன் மச்சாள், சிவா இந்த டொக்டரிடம் வரமாட்டேன் என்று வெளியில் நிற்கிறான்’ எனக் கேட்டேன். ‘அதொரு பெரிய கதையடா, சிவாவும் இந்த டொக்டரின் மருமகனும் முந்தியொரு காலம் இயக்கத்தில் ஒன்றாய் இருந்தவையளடா, அதுதான்’ என்றார் சிரித்தபடி.


கோபிகா வீட்டில் ஒரே பிள்ளை என்றபடியால் அவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்டாள். யௌவனத்தின் அழகு எங்கும் தெறிக்கத் துள்ளிக்கொண்டு திரிந்தவளை யாருக்குத்தான் பிடிக்காது போகும். மேலும் வைத்தியரின் ஒரேயொரு மகள் என்பதால் வரக்கூடிய எதிர்கால அனுகூலங்களையும் கணக்கிட்டும் அவளின் திருவாய் மொழிவிற்காய் நகரில் பல ஆண்கள் காத்துக்கிடந்தனர். தகப்பனின் நிதானமான பேச்சையும், நடத்தையையும் பார்த்ததாலோ என்னவோ அவளுக்கு விளையாட்டுத்தனமும், சாகசமும் நிரம்பிய கபிலனைப் பிடித்துப் போயிருந்தது. அப்படி என்னதான் இருந்து உனக்குக் கபிலனைப் பிடித்துப்போனது என கோபிகாவிடம் கேட்டால், ஒருநாள் தான் பிள்ளையார் கோயிலுக்கு நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, கபிலன் மோட்டார் சைக்கிளில் வந்து சட்டென்று பிரேக் அடித்து,  இரத்தத்தால் ஐ லவ் யூ என்றெழுதி கடிதம் தந்ததுதான் என்பாள். அப்படியாயின் வேறு ஒருவரும் உனக்குப் ப்ரபோஸ் செய்யவில்லையா என மேலும் கேட்டால், மற்றவங்களும் முயற்சித்தவன்கள்தான், ஆனால் கபிலன் கேட்ட ஸ்டைல் அமர்க்களத்தில் அஜித் கேட்டமாதிரி இருந்தது, அதுதான் கபிலனை உடனேயே பிடித்துவிட்டது என வெட்கப்பட்டபடி சொன்னாளாம். போராடப் போனவர்களுக்கு ஒவ்வொரு தனித்துவமான காரணங்கள் இருப்பதைப் போல காதலிக்கத் தொடங்குபவர்களுக்கும் நாம் யோசித்தே பார்க்க-முடியாத பல காரணங்கள் இருக்கின்றன போலும்.

வைத்தியருக்குத் தன் பிள்ளையின் காதற்பித்து சாடையாய்த் தெரிந்தாலும் இந்தப் பதின்மக் காதல் வேப்பமரத்துப் பேய் போல ஒருநாள் தானாய் ஆடி அமுங்கிவிடுமென நம்பினார். ஆனால் கோபிகாவோ யாரோ செப்புத்தகடு புதைத்து மலையாள மாந்தீரிகம் செய்ததுபோல, கபிலன் இல்லாவிட்டால் தனக்கோர் வாழ்வில்லையென ஓரிரு ஆண்டுக்குள்ளேயெ முடிவு செய்துவிட்டாள். சாகசக்காரக் கபிலனுக்கு நகருக்குள் -தண்ணீருக்குள் மீன்கள் போல- நடமாடிய இயக்கத்தோடு நாளடைவில் தொடர்பு ஏற்பட்டதும் தற்செயலானதே. ஒருநாள் இந்த டொக்டரிடம் அவசரமென ஒரு நோயாளி சிகிச்சைக்கு வர வைத்-தியர் அலுப்பில் ‘எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை நாளை வாருங்கள்’ என அனுப்பி வைத்துவிட்டார். இந்தச் செய்தி எப்படி எப்படியோ எல்லாம் திரிபடைந்து இயக்கக்காரர்களின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒரு நாளிரவு ‘டொக்டர் உங்களுக்கு ஓய்வுதானே வேண்டும்; நாங்கள் ஓய்வு தருகிறோம், எங்களோடு வந்து கொஞ்சநாள் இருங்கோ’ எனத் தங்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இயக்கக்காரர் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்.

இரண்டு வாரம் இயக்கத்தோடு இருந்துவிட்டு வந்த டொக்டருக்கு அதற்குப் பிறகு இயக்கத்தை மட்டுமில்லை, அதனோடு உறவு வைத்திருந்த கபிலனையும் துப்பரவாய்ப் பிடிக்காது போய்விட்டது. விஜயேந்திரன் என்கின்ற பெயரில் இருந்த தனது வைத்தியசாலையின் பெயரைக் கூட விஜயசேன என மாற்றி இராணுவத்தோடு நல்ல நெருக்கமாய்ப் பழகவும் தொடங்கிவிட்டார்.  இயக்கம் அவரை இரண்டு வாரமும் பங்கருக்குள் போட்டதோ, இல்லை இரணைமடுக்குளத்தைச் சுற்றி ஓடவிட்டதோ என்னவோ தெரியாது. அவரால் இப்படித் தான் கடத்தப்பட்டதை மறக்கமுடியவில்லை. ‘இயக்கக் காவாலி’யான கபிலனோடு தன் மகள் சுற்றுவதை நிறுத்திவைக்க கோபிகாவிற்கும் அவசரம் அவசரமாக ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  இந்த நேரத்தில் ஆமியின் நெருக்கடிகள் அதிகரித்து, கபிலனும் ஒவ்வொரு வீடு வீடாய் ஒளித்து வாழும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் கோபிகா எத்தனை அஜித்குமாரின் படங்களைப் பார்த்திருப்பாள், எப்படியென்றாலும் இறுதிநேரத்தில் கபிலன் வந்து தன்னைக் காப்பாற்றிச் செல்வானென நம்பிக்கொண்டிருந்தாள். தலைமறைவாய் இருந்த கபிலன் கோபிகாவின் திருமணம் பற்றி எப்படியோ கேள்விப்பட்டிருக்கின்றான். ஆனால் இதெல்லாம் கோபிகாவின் சம்மதத்தோடுதான் நடக்கிறதென அவன் வேறொரு கணக்-குப் போட்டிருக்கின்றான்.

திருமணம் நடக்க ஒருவாரத்திற்கு முன்னர் வைத்தியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து,  கபிலன் கோபிகாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். எல்லாவற்றையும் சாகசமாய் செய்து திரிந்த கபிலன், ‘என்னடி உனக்கு ஊரெல்லாம் சுற்றித் திரிய நான்  வேணும், ஆனால் கல்யாணஞ் செய்ய மட்டும் இன்னொருத்தன் தேவையா?’ எனத் திட்டிவிட்டு காலில் இரண்டு வெட்டுப் போட்டி-ருக்கின்றான். தடுக்க வந்த கோபிகாவின் அம்மாவிற்கும் கையில் நல்ல வெட்டு. காலின் நரம்புகள் வெட்டப்பட்டுத் துடித்துக்கொண்டிருந்த கோபிகாவை அவசரம் அவசரமாகக் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுபோனதில் ஒரு கால் காப்பற்றப்பட்டது.  மற்றதில் மூன்று விரல்கள் இயங்கமுடியாமற் போனது. எப்போதும் எல்லா ‘ஏன்’களுக்கும் பதில் கிடைப்பதில்லை போல, கபிலன் ஏன் கோபிகாவை இப்படி வன்மத்தோடு வெட்டப்போனான் என்பதற்கும் ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. இப்படிச் செய்ததன்பிறகு தனக்குப் பாதுகாப்பில்லையென நினைத்துக் கபிலன் வன்னிக்குப் போய் இயக்கத்தில் முழுதாய் இணைந்துவிட்டான்.

கோபிகாவிற்கு நிறையச் சீதனம் கொடுத்து குழம்பிப்போன திருமணத்தைச் சில மாதங்களில் செய்து வைத்தார் அவளின் தந்தையார்.. சாகசக்காரனான கபிலனுக்கு இயக்கத்தின் இறுக்-கமான விதிமுறைகளுக்குள் அடங்கிப் போவது  பெரும்பாடாக இருந்தது. ‘எனக்குத் தகவல் சேகரித்துப் பார்த்த முன் அனுபவம் உண்டு, சிங்களமும் தெரியும். என்னை உளவுவேலைக்காய் கொழும்புக்கு அனுப்புங்கள்’  என அண்ணைக்கு அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். இவ்வாறான விடயங்களில் கபிலனைப் போன்றவர்கள் அல்ல,  இயக்கமே அவ்வேலைகளுக்கு  உரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்கிற புரிதல் கூட இல்லாமல் தன்னை அம்மானின் பிரிவில் சேர்க்கும்படி மன்றாடியிருக்கின்றான். இருந்திருந்து பார்த்துவிட்டு ஒருநாள் எப்படியோ இயக்கத்தைச் சுழித்துவிட்டு வள்ளமேறிக் கபிலன் இந்தியாவிற்கும் போய்விட்டான். விலத்திப் போகின்றவர்களுக்கு எல்லாம் சமையற்பிரிவிலோ அல்லது பங்கர் வெட்டும் வேலையையோ வகுத்துக் கொடுக்கிற இயக்கத்திற்கு இவன் இப்படித் தப்பிவிட்டானே என்ற கோபத்தைவிட ஒரு தொல்லை தங்களை விட்டுப் போய்விட்டதே என நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்பட்டிருக்கவேண்டும்.

கோபிகாவிற்கு மகன் ஒருவன் பிறந்தபோதும் அவளால் ஒரு காலிலேயே முழுப்பாரத்தையும் கொடுத்துத் தாண்டித் தாண்டி நடக்க-வேண்டியிருந்தது. தமிழ்நாட்டுக்குப் போன கபிலன் அங்கேயும் சும்மா இருக்கவில்லை. மன்னாரிலிருந்து படிக்க வந்திருந்த ஒரு கத்தோலிக்கப் பிள்ளையைத் துரத்தித் துரத்திக் காதலித்திருக்கின்றான். ஆனால் அவள் அஜித்குமார் மாதிரி ஒருவரை விரும்பவில்லை போலும். இவனின் சாகசக் காதலை நிராகரித்துக் கொண்டேயிருந்தாள். வவுனியாவில் காதலுக்காய் காலையே வெட்டியவன், மன்னார்ப் பிள்ளையை நுங்கம்பாக்கம் பக்கமாய் வைத்துக் கடத்த முயற்சித்திருக்கின்றான். பிள்ளை கத்திய சத்தத்தில் சனமெல்லாம் கூடிக் கும்மி, கபிலனைப் பொலிஸில் ஒப்படைக்க பொலிஸ் கேஸ் அது இதென கொஞ்சக்காலம் ஜெயிலுக்குள் இருந்துவிட்டு மும்பாய்ப் பக்கமாய் அவன் போயிருக்கின்றான்.

ஒருநாள் வைத்தியரின் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. கோபிகா ஒரு நோட்டில், தானும் பிள்ளையும் கபிலனிடம் இந்தியா போகின்றோம் என்று எழுதி வைத்துவிட்டு ஒருவரிடமும் சொல்லாமல் போய்விட்டாள். என்னதான் யேசுநாதர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கருணையைப் போதித்திருந்தாலும், தன் கால்கள் இரண்டையும் வெட்டியவனிடமே கோபிகா சேர்ந்து வாழப் போனதைத்தான் ஒருவராலும் நம்ப முடியவில்லை. எல்லா ஏன்களுக்கும் பதில் கிடைத்திருந்தால் அல்லது காலத்தில் பின்னோக்கிப் போய் சிலவற்றைத் திருத்த முடியும் என்றால் எத்தனை விடயங்களுக்காய் வருந்தியிருக்கத் தேவையிருந்திருக்காது. கோபிகா அப்படிப்போனதைக் கோபிகாவின் கணவரை விட அவளது தகப்பனால்தான் தாங்க முடியாதிருந்தது. அவளைக் கைகழுவி விட்டேன் என கோபத்தில் கூறிவிட்டாலும் தன் ஒரேயொரு பிள்ளை இப்படி விபரீதமாக நடந்துகொள்கிறாளே என்பதில் நிறைய வருத்தம் அவருக்குள் இருந்தது.

மச்சாள் இப்படி கபிலனதும் கோபிகாவினதும் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, என்னால் இதை நம்பமுடியாது இருக்கிறதெனச் சொன்னேன். ‘என்ன செய்வது சில விடயங்களை நம்பக் கடினந்தான். ஆனால் கண்ணுக்கு முன்னால் இவையெல்லாம் நடக்கும்போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது’ என்றார். நாங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவும்,  ‘என்னால் கூட எங்கள் போராட்டம் இப்படி முடிந்துபோயிற்றென்பதை நம்பமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் அதுதான் கசப்பான உண்மை அல்லவா?’ என எங்கையோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான். அவனுக்குள் பழைய நினைவுகள் அலை புரண்டோடத் தொடங்கியிருக்க வேண்டும். நானும் மச்சாளும் தொடர்ந்து பேச எதுவுமின்றி அமைதியாகினோம்.


டுத்த நாள் காலை மச்சாளிடமும் சிவாவிடமும் விடைபெற்றுக்கொண்டு அம்பனையிலிருந்த வீட்டைப் பார்க்க நாங்கள் வெளிக்கிட்டோம். சிவா காலைச் சாப்பாட்டுக்காய் பாண் வாங்க கடைக்குப் போன நேரத்தில் மச்சாளிடம்  ‘நேற்றைக்கு சிவா கபிலனைப் பார்த்தவுடன் ஏன் திட்டிக் கொண்டிருந்தான்?’ எனக் கேட்டேன். ‘அதுவா, இந்தக் கபிலன் சிவா பொறுப்பாய் இருந்த பிரிவில் தான் இயக்கத்தில் இருந்தவன். அவன் இப்படி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவிற்கு ஓடிப்--போனதில் சிவாவிற்கும் பங்கு இருக்கிறதென கொஞ்சநாள் இயக்கம் சிவாவைப் பங்கருக்குள் போட்ட கடுப்புத்தான்’ என மெல்லிய குரலில் மச்சாள் சொன்னார். ‘ஓ அதுதான் அவனைக் கண்டவுடன் சிவாவிற்கு முகம் இருண்டது போலும்’ என நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். ‘கபிலன் பிரச்சினையோடுதான் சிவாவும் இயக்கத்தை விட்டு வெளியே வந்தவர்’ எனத் தொடர்ந்தாள் மச்சாள்.

யாழ்ப்பாணம் போய் கொழும்புக்குத் திரும்பும் வழியில், இனி எப்போது சிவாவையும் மச்சாளையும் பார்க்கமுடியுமோ என நினைத்து, அவர்களிடம் விடைபெற்றுச் செல்லலாம்  என அவர்களின் வீட்டுக்குக் காரைத் திருப்பியிருந்தோம்.  சிவா முதன்முறையாக இப்போதுதான் கபிலனை -அவன் இயக்கத்தை விட்டு ஓடியபின்  சந்தித்திருக்கின்றான். தன் வாழ்க்கையையே ஒரு ஓட்டத்தால் மாற்றியவன் என்பதால் சிவா, கபிலனை வவுனியாச் சந்தையடியில் சத்தித்தபோது கதைத்திருக்கின்றான். ‘அண்ணை நான் இயக்கத்தை விட்டு ஓடவில்லை  அம்மான் தான் என்னை இந்தியாவிற்குப் போய் இயக்கத்திற்காய் சில வேலைகள் செய்ய அனுப்பியவர். இயக்கத்திடம் எல்லாவற்றிற்கும் ஒரு ப்ளான் இருக்குந்தானே. அப்படித்தான் என்னையும் இயக்கத்தைவிட்டு ஓடுகின்றமாதிரி ஒரு நாடகத்தைச் செய்து வள்ளத்தில் அனுப்பி வைத்தவையள்’ என்றிருக்கின்றான். இதைக் கேட்டு சிவாவுக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு ஏறியிருக்கிறது. ‘இயக்கந்தான் ஒரு நாடகம் செய்து உன்னை அனுப்பியதென்றால் பிறகு ஏன்டா என்னை அவங்கள் பங்கருக்குள் போட்டவங்கள்’ எனக் கேட்டிருக்கின்றான். அதற்கு அவன், ‘அண்ணை உங்களுக்கும் தெரியுந்-தானே இயக்கத்தில் எல்லாப் பிரிவிற்குள்ளும் அம்மானின் ஆட்கள் இருந்து உளவு பார்க்கிறவையள். அப்படி அம்மான் தெரிவு செய்துதான் என்னை உங்களின்   பிரிவில் விட்டிருந்தார். வேறொரு அசைன்மென்டுக்காய் என்னை அவசரமாக அனுப்ப வேண்டியிருந்ததால் தான், அம்மானின் ஆட்கள் இப்படியொரு நாடகம் நடத்தி அனுப்பினவையள். அத்தோடு அம்மானின் ஆட்கள் இந்தப் பிரிவில் இருக்கின்றார்கள் என்று மற்ற ஆட்களுக்கு தெரியக்கூடாதென்பதற்காய்த்தான் உங்களுக்குப் பனிஷ்மென்ட் தந்திருக்கினம்’ என்றிருக்கிறான் கபிலன்.

ஆனால் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய் கபிலனை அடிக்கச் சிவா போயிருக்கின்றான். மச்சாள்தான் ‘சும்மா இருங்கோ உங்களுக்கு இப்பவும் இயக்கம் என்ற நினைப்பு’ என்று பிடித்து இழுத்துக்கொண்டு வந்திருக்கின்றார். நான் இதையெல்லாம் கேட்டுவிட்டு சிவாவிடம் ‘ஏன்டா சிலவேளைகளில் கபிலன் சொல்வதுபோல் அவன் அம்மானின் ஆளாய்த்தான் இருந்தானோ தெரியாது’. எனச் சொன்னேன். சிவாவிற்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது, ‘விசர்க்கதை கதைக்காதையடா, எங்களின் பிரிவில் அம்மான் தனக்குத் தகவல் திரட்டித்தர நியமித்த ஒரே ஆளே நான் தானடா. கபிலன் தப்பி ஓடிட்டான் என்றவுடன் என்ன பூனாவுக்கு உளவு பார்க்கிறாய் எனச் சொல்லித்தானே பங்கருக்குள் அம்மான் என்னைப் போட்டவர். இல்லாவிட்டால் நான் இயக்கத்தில் இருந்த  காலத்தை வைத்து, நான் விலகிப் போகிறதென்று சொல்லியிருந்தாலே, சும்மாவே போகச் சொல்லியிருப்பார்கள்.  இந்த நாசமறுப்பானால்தான் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. இப்போது என்னடாவென்றால் எனக்கே இவன் கதைவிடுகிறான்’ என முகஞ்சிவக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். ‘அது சரி இப்பவேன் கபிலன் இங்கே வந்து நிற்கிறானாம்?’ என நான் கேட்டேன். ‘கேபியின் நேர்டோவோடு சேர்ந்து ஏதோ வேலை செய்யப்போகின்றான் எனறு சொல்லிக்கொண்டிருக்கின்றான், உண்மை பொய் தெரியாது’ என்றான் சிவா.  அதைக் கேட்டுவிட்டு ‘இதுவரை சனங்களுக்குச் செய்த பாவங்களுக்கு எப்படியோ ஏதோ ஒருவழியில் பிராயச்சித்தம் செய்யத்தானே வேண்டும்‘ என மச்சாள் முணுமுணுத்துக் கொண்டார்.

கொழும்பை நோக்கி எங்களின் கார் பயணிக்கத் தொடங்கியது. வானம் இருண்டு மழை வரும் போலக் கிடந்தது. எனக்கு சிவா சொல்வதா அல்லது கபிலன் சொன்னதா எது உண்மையாயிருக்குமெனக் குழப்பமாயிருந்தது. கார் ஜன்னலைத் திறக்க குளிர்காற்று முகத்தில் படுவது பிடித்தமாயிருந்தது. சட்டென்று சாம்பல் வானத்திலிருந்து மழை பொழியத் தொடங்கியது. நான் ஜன்னலை மூடிவிட்டு இவ்வளவு நடந்ததன் பிறகும், கோபிகாவால் எப்படிக் கபிலனைக் காதலிக்க முடிகிறது என யோசித்தேன். கோபி-காவைப் போலத்தான் சனங்களும் இயக்கத்தை நேசித்திருந்தார்களோ தெரியாது.


2012
 
 
Posted by இளங்கோ-டிசே
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.