Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறிந்த பனை - அழிவைப் பற்றிய மக்களின் குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழிவைப் பற்றிய மக்களின் குரல் / கிருஷ்ணமூர்த்தி

 

download (9)

2013 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் பிரச்சினைல் படுகொலை செய்யப்பட சிறுவனுக்காக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். எல்லா கல்லூரிகளிலிருந்தும் பெருவாரியாக மாணவர்கள் தர்ணாவிற்காக கல்லூரியின் வாசலிலும் அல்லது இரண்டு மூன்று கல்லூரிகளுக்கு பொதுவான இடங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். வெயில் தணியாத சூட்டுடன் இருக்கும் சாலைகளில் அமர்ந்தபடியே தங்களின் எதிர்ப்பை காட்டியது மாணவர் குழுமம். நான் அதில் பங்கு கொள்ளவில்லை. ஒரு வாரம் விடுமுறை என வீட்டிற்கே விரைந்து கொண்டிருந்தேன். அந்நேரம் என்வசம் அபத்தமான நியாயவாதம் இருந்தது. அது இரண்டு அடிப்படை விஷயங்களை தர்க்கத்திற்கு கொண்டுவருவதற்கான கேள்விகள்.

1. இந்த போராட்டத்தால் என்ன விளையப் போகிறது ?
2. ஈழம் சார்ந்த பிரச்சினை எதுவுமே தெரியாத பட்சத்தில் அதில் கலந்து கொள்வதில் அர்த்தமே இல்லையே ?
இந்த இரண்டு கேள்விகளும் அப்போது என்னை கட்டாயப்படுத்திய பலரை புண்படுத்தியது. சிலரின் பதில் எனக்கும் தான் தெரியாது ஆனா நான் கலந்துக்கல என்பதாகவே இருந்தது.

இப்படி போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனது எனக்குள் ஆழ்ந்திருக்கும் மேட்டுக்குடி வளர்ப்பின் மனோபாவத்தையே பிரதிபலித்தது என்பதை அச்சம்பவத்திற்கு பின்னால் அதனை நினைக்கும் போது உணர்ந்தேன். போராடுபவர்கள் போராடிக் கொண்டிருப்பர் அங்கே எனக்கென்ன வேலை என்பதையே மேட்டுக்குடி மனோபாவம் என குறிப்பிட விரும்புகிறேன். அதன் அத்தாட்சியாக அப்போது நான் இருந்தேன் என்பதை இப்போதே உணர்கிறேன். கிட்டதட்ட குற்றாவாளிக் கூண்டில் என்னையே நான் இப்போது பார்க்கிறேன்.

இந்த சம்பவம் நிகழும் போது என்னுள் இருந்த சின்ன ஆசை அந்த பிரச்சினை சார்ந்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. அப்போது மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருந்தேன். அதாவது அரசியல் பிரச்சினையான ஈழத் தமிழர்களின் அவலங்கள் ஏதேனும் ஒரு பக்க சார்புடனேயே இருப்பதாக அறிந்தேன். படுகொலை செய்பவர்கள் ஒரு பக்கம். படுகொலைகளை எதிர்ப்பவர்கள் மறுப்பக்கம். எதிர்ப்பவர்களும் அதிகாரம் செய்பவர்களை தாக்கி கொல்கிறார்கள். ஆக இரண்டு பக்கமுமே கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் சில கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. சில அபத்தமாகின்றன. அப்படியெனில் நடுநிலையாக அங்கே நிகழ்வது என்ன ? மக்களின் பார்வையில் அதைக் கூறுவதே உசிதமாகும்.

இந்த குழப்ப நிலை என்னுள் பலகாலமாக இருந்தே வந்தது. அப்போது தான் லீனா மணிமேகலையின் white van stories என்னும் ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது. மங்கியிருந்த என்னுடைய குழப்பத்திற்கு இது தூபம் போடுவதாய் அமைந்தது. இப்படத்தில் இராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்காக இரண்டு பக்கத்திலிருந்தும் மக்கள் கூட்டி செல்லப்படுவார்கள். இதை மக்களின் பார்வையில் அவர் சொல்லும் போது காணாமல் போனவர்களை தேடும் விஷயமாக மாறுகிறது. அதனூடே மக்களின் பார்வையில் இரு பக்க அரசியல் சார்ந்த ஏமாற்றங்களும் எதிபார்ப்புகளும் நம்பிக்கை கீற்றுகளும் படத்தில் காட்டப்பட்டன. இதை முக்கியமான ஆவணமாகவும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன். இங்கே என்னுடைய அடுத்த கேள்வி ஆரம்பமானது. இதன் வேர் என்ன ? இனப்பிரச்சினையும் இன அழிப்பு சார்ந்த பிரச்சாரங்களும் யாரைக் காப்பாற்ற ? யாரிடமிருந்து காப்பாற்ற ? இந்த கேள்விகளுக்கான பதிலை இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் சந்திக்க நேர்ந்தது.

சேலத்திலுள்ள பாலம் புத்தக கடையில் இலங்கை பிரச்சினை சார்ந்த நூலினை காட்டி இந்நூலினை வாசியுங்கள் நடுநிலையாக பிரச்சினையை அணுகுகிறது என்றார் அக்கடை ஊழியர். அதன் விலை அதிகமாக இருந்ததால் அச்சமயம் வாங்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அக்கடையினை சுற்றி பார்க்கும் போதும் அந்த நூலை எப்படியும் வாங்க வேண்டும் என்றிருந்தேன். அதன் பதிப்பு இப்போது இல்லை எனக் கூறும் போது சட்டென வாங்கிவிட்டேன். அந்த நூல் தான் ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே.ஶ்ரீதரன் ஆகியோர் எழுதி தொகுத்த “முறிந்த பனை” என்னும் கட்டுரை தொகுப்பாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே ராஜனி திராணகம தான் இதை எழுதுவதால் கொல்லப்படலாம் என வாக்குமூலத்தையும் அளித்துள்ளார். அதே போல அவர் கொலை செய்யவும் பட்டார். அதற்கு பிறகு இந்நூல் வெளியாகியிருக்கிறது. ஆங்கிலத்தில் The broken palmyra என வெளியான நூலை தமிழில் மொழிபெயர்த்து பயணி வெளியீடாக வெளிவந்துள்ளது.

இந்நூல் இரண்டு பாகமாக பிரிந்து இருக்கிறது. முதல் பாகம் முழுக்க ஈழப்பிரச்சினைக்கான ஆரம்ப வரலாறுகள் முதற்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஈழப்பிரச்சினைக்கு பின்னால் இருக்கக்கூடிய political historyஐ இந்நூல் விரிவாக பேசுகிறது. பல கட்சிகள் உருவான காரணங்களையும் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள் கொண்டிருந்த கொள்கைகளையும் அதே நேரம் அக்கட்சிகள் வீழ்ந்ததன் காரணங்களையும் ஒருங்கே பதிவு செய்கிறது இந்நூல்.

பிரிவினையின் பிரச்சினை மட்டுமே அரசியல் ஆதிக்கங்களால் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டது. அதை சரிவர தீர்க்க தெரியாமல் ஒவ்வொரு கட்சியினரும் தேசத்தின் உணர்வு சார்ந்து அதை மாற்றியிருக்கின்றனர். அதாவது இலங்கையின் பூர்வக்குடியினராக சிங்களவர்களை முன்னிறுத்தி இலங்கையின் பிரதான மொழியாக சிங்களத்தை வைப்பது. இதை அங்கீகரித்தவுடன் அவர்களைத் தாண்டி அவ்வூரில் இருக்கக்கூடிய வேறு மக்களை அரசியல்வர்க்கம் பிரதான படுத்த ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் யாரெனில் தென்னிந்திய தமிழர்கள், ஈழத் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள். அவர்கள் பெரும்பாலான இலங்கையின் இடத்தை ஆக்ரமித்திருப்பதால் பூர்வக்குடியாக அங்கீகரிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு இடம் இல்லை என்று முன்மொழிதல். இதனால் அவர்கள் இருக்கும் இடங்களில் சிங்களவர்களை குடியேற்றம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். இதற்கு துணைப் போவது போல ஏனையோரின் குடியுரிமைகள் பறிக்கப்படுதல் போன்ற செயல்களும் துரித கதியில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அரசாங்கமே இதை ஏற்று செய்யும் தரப்பில் மக்களை வெளியேற்ற இராணுவத்தை கையிலெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வேறு கட்சிகள் ஆட்சியினை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இழந்த உரிமைகளை மீட்டுத்தருவோம் என தமிழர்களிடம் சொல்லி ஓட்டினை பெற முயன்றிருக்கின்றனர். அரசியல் என வரும் பட்சத்தில் இரண்டு விதமாக மட்டுமே ஆட்சியினை பிடிக்க முடியும் என்னும் நிலை அங்கு நிலவியிருக்கிறது. ஒன்று தமிழர்களுக்கு இழந்த உரிமையினை மீட்டுத்தருவோம் என்னும் அறைகூவல். மற்றொன்று சிங்களவர்களுக்கு அவர்களுடைய இடத்தை அவர்களுக்கே உரித்தாக்குவோம் என்னும் கோஷம். இரண்டில் இரண்டாவது தீவிர கதியில் இயங்கியமையால் தமிழர்கள் மேலான வன்முறைகளை சந்திக்க நேர்ந்தது. இதில் விஷயம் யாதெனில் மேற்கூறிய இரண்டுமே நடைபெறாமல் வன்முறைகள் மட்டுமே அவற்றை காரணங்காட்டி நிகழ ஆரம்பித்தன.

மக்களின் அவலங்களும் அழிவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே சென்றன. இவர்களை அழித்தொழிக்க நவீன குண்டுகளும் உருவாக்கப்பட்டன. உதாரணமாக பீப்பாய் குண்டுகளை கூறலாம். இலங்கை ராணுவத்திற்காக முழுமையாக மக்கள் பயப்பட ஆரம்பித்தனர். தமிழர்களின் வாழ்க்கை முழுமையாக நசுக்கப்படும் என்பதில் பூரண நம்பிக்கையிலேயே இந்த பயம் விதைக்கப்பட்டது. அப்போது தமிழர்களுக்கான உரிமையினை மீட்டுத்தருவோம் என ராணுவ வகையிலேயே விடுதலைப் புலிகள் உருவாக ஆரம்பித்தன. மக்களின் நம்பிக்கை கீற்றாக அவர்கள் பிரபாகரன் தலைமையில் இருந்தனர்.

அவர்கள் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தில் சிங்களவர்களுக்கான எதிரிகளாக உருவாக ஆரம்பித்தனர். அநுராதபுரம் என்னும் இடத்தில் இருந்த சிங்களவர்களை கொன்று குவித்தனர். கிட்டதட்ட பழிக்கு பழி என்னும் இடத்தில் தங்களை இலங்கை ராணுவத்திற்கு எதிராக நிலை நிறுத்திக் கொண்டனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மனித உரிமை மீறல்களை இலங்கை கண்டு கொண்டிருந்தது. பிரிவினை அரசியலின் பங்காக மக்கள் அழிவுகளை பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போது இந்தியாவே தங்களின் நம்பிக்கை கீற்று என்னும் நிலையில் மக்களின் நம்பிக்கை இருந்தது. விடுதலைப் புலிகள் இந்தியாவின் உதவி கொண்டு தமிழர்களுக்காக போராடும் குழுமம் தாங்களே என அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டனர். போர் தீவிர நிலையினை அடையும் போது ராஜீவ் காந்தியின் தலைமையில் மக்களுக்கான உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் பெருகுவதற்கான நிலை சின்னதாக எட்டிப் பார்த்தது. மீண்டும் இரண்டு பிரிவுகளுக்கான போர் வலுப்பெறும் தருணத்தில் இந்திய இராணுவம் இலங்கைக்குள் நுழைய ஆரம்பித்து தமிழர்களுக்கு உதவி புரியத் தொடங்கின.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் இறங்கியவுடன் அதன் எழிலைக் கண்டு மயங்கியே இருந்திருக்கின்றனர். இவர்கள் வருவதற்கான காரணம் விடுதலைப் புலிகள் அதிகாரத்தினை பிடிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் போருக்கான ஆயத்தங்களை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் மக்களின் சடலங்கள் மாறி மாறி நிலங்களில் விழுந்திருக்கிறது. அந்நிலையிலேயே தமிழர்களை இந்தியாவின் சார்பில் காப்போம் என இராணுவம் இறங்கியிருக்கிறது. இந்திய ராணுவம் தங்களுக்கான நம்பிக்கை கீற்று என்னும் இடத்திலும் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் இந்திய இராணுவத்தில் ஆட்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இருந்த வெறி மக்களையே பலிகிடாவாக்கியது. இந்திய இராணுவத்தாலும் மக்கள் பெருவாரியாக கொல்லப்பட்டனர். மக்களின் குரல் இந்திய இராணுவத்தை வெளியேற்றுமாறு மாறத் துவங்கியது.

ஒவ்வொரு வன்முறை பிரிவுகளும் எப்போது ஊருக்குள் வரும் என்னும் ஐயத்திலேயே அவர்களுக்கான வாழ்க்கை இருக்க ஆரம்பித்தது. யார் வந்தாலும் பலியாகப் போவது தங்களின் உயிர்தான் என்பதில் ஸ்திரமாக இருந்தனர். அவர்களுக்கான பெருத்த ஏமாற்றமாக அமைந்தது என்னவோ இந்திய இராணுவமாகத்தான் இருந்தது. அஹிம்ஸையிலும் வன்முறைக்கு எதிராக கொடிபிடிப்பவர்கள் என்பதற்காகவும் பெயர் போயிருந்த இந்தியாவின் அத்துமீறல்கள் அவர்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்திற்று. இந்திய இராணுவத்தால் நிகழ்ந்த படுகொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் நூறு பக்கங்களையும் தாண்டி இந்நூல் விவரணைக்குட்படுத்தியுள்ளது. வாசிப்பதற்கு தலைகுணிவே என்னுள் மேலோங்குகிறது.

இந்தியா சார்ந்த எதிர்பாப்புகள் மட்டும் தோல்வியுறவில்லை. மாறாக இந்தியாவின் கொள்கைகளும் அங்கு தோல்வியையே தழுவியிருந்தன. குறிப்பாக அஹிம்ஸை போராட்டம். விடுதலைப் புலிகளில் ஒருவரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் என இருக்க ஆரம்பித்தார். அந்த அஹிம்சை போராட்டம் அங்குள்ளவர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. திலீபன் இறந்து போனால் அதற்கு இந்திய அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் குரல்களே மேலோங்கியிருந்தன. கிட்டதட்ட தப்பித்தல் ரீதியாகவே இது அமைந்திருந்தது. இறுதியில் உண்ணாவிரதத்தால் திலீபன் இறந்துதான் போனார். அவரின் இறப்பு அஹிம்ஸையின் தோல்வியாகவே கருதப்பட்டது. அதற்கான ஆய்வினை இரண்டாம் பாகத்தில் கூறுகிறார்.

நூல் இரண்டு பாகமாக பிரிந்திருக்கிறது என்றிருந்தேன். முதல் பாகம் 1983-1987 வரையிலான அரசியல் வரலாற்றை பேசுகிறது. இரண்டாம் பாகமோ அந்த காலகட்டத்தில் நிகழந்த சம்பவங்களை பகுப்பாய்வு செய்கிறது. உதாரணத்திற்கு திலீபனின் மரணத்தை பார்க்கும் போது அரசியல் கட்சிகளின் தேர்வாகவே அந்த மரணத்தை ஆசிரியர் பார்க்கிறார். வன்முறையே தங்களுக்கான விடுதலையினை பெற்றுத் தரும், அதுவே போருக்கான பாதை என்பதை அவரகள் தெரிவு செய்துள்ளனர். அஹிம்ஸையை அவர்கள் போருக்கான ஆயுதமாக பாவிக்கவில்லை. பாவித்திருந்தாரெனில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆக நிச்சயம் திலீபனின் மரணம் அஹிம்ஸையின் தோல்வியாக இருக்க வாய்ப்பில்லை என்பதை எடுத்துரைக்கிறார்.

இந்தியா இலங்கைக்குள் நுழையும் காலக்கட்டம் கிட்டதட்ட தங்களுக்குள் இருந்த அரசியல் நெருக்கடிகளை சமாளித்துக் கொள்வதற்கான வடிகாலாகவே இருந்தது என்பதை முன்மொழிகிறார். ராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் வழக்கினையடுத்து தான் இலங்கை அவர்களின் பார்வைக்குள் வந்திருக்கிறது.

தொலைக்காட்சி வானொலி போன்றவற்றின் செய்திகள் மூலம் தான் அவர்களின் அழிவும் வாழ்வும் அமைந்திருந்தது. அவர்கள் கொடுக்கும் செய்தியினால் தான் சில மக்கள் தப்பித்தனர். சில தவறான செய்திகளினால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நூல் முழுக்க கிட்டதட்ட லட்சக்கணக்கான படுகொலைகளின் விவரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் நோக்கிலோ அல்லது கட்சி சார்பாகவோ எழுதப்படவில்லை. மாறாக மக்களின் குரலாக இலங்கையின் அழிவுகள் சார்ந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

கொலைகளை மக்கள் எதிர்கொண்ட விதம், வன்புணர்ச்சிகளின் போதும் அவற்றிற்கு பிறகாகவும் இருந்த பெண்களின் நிலை, இவ்விரண்டையும் சமூகம் எதிர்கொண்ட நிலை, போர் சார்ந்து நிகழ்த்தப்பட்ட உளப்பகுப்பாயவு, அங்கு நிலவிய நோய்கள், எதிர்த்து நிற்கத் துணிந்த இளைய சமுதாயம், விலங்குகளின் நிலை, புராணீகங்களை திரித்து அதிகாரத்திற்காக மாற்றிய அரசியல் நுட்பங்கள், உரிமையென ஆரம்பித்து வெற்று அரசியலாக மாறிப் போன அவல நிலை, உடைமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதியான நிலை என எல்லாவற்றையும் நுட்பமாக அதே நேரம் மெறுகேற்றாமல் யதார்த்தமாக பதிவு செய்கிறது முறிந்த பனை.

யாழ் பல்கலைகழகத்தில் நிகழ்ந்த ஷெல்(வெடிகுண்டினை ஒத்த ஒன்று) தாக்குதல்களுக்கு பிறகு துணிந்து அவற்றை திறந்து வைத்தவர் ராஜனி திராணகம. அதே நேரத்தில் இலங்கையில் நிகழும் அழிவுகளை நடுநிலையாக எடுத்துக் கூற வேண்டும் என்பதில் தன் பணியை துணிந்த சகாக்களுடன் செய்திருக்கிறார். அவரது அயராத பணியின் சின்ன விளைவே முறிந்த பனை. முன்னுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிடுவது போல இதன் இரண்டாம் பாகத்திற்கான தேவை நிச்சயம் சமூகத்தில் இருக்கிறது. அதற்கு தோதான அரசியல் மாற்றங்களும் இலங்கையில் நிகழ்ந்திருக்கின்றன.

என்னைப் போன்ற அபத்தங்களின் உள்ளிருக்கும் விழுமியங்களை வெளிக்கொணர்வதற்கு முறிந்த பனை போன்ற பாசாங்கற்ற வரலாற்று ஆவணங்கள் நிச்சயம் தேவைப்படுகிறது. இந்நூல் ஈழம் சார்ந்த பிரச்சினைகளை கடந்த காலத்திலிருந்து அறிந்து கொள்ள பலருக்கு நிச்சயம் உதவும். இந்நூலின் பின்னட்டையில் பேராசியர் பிறையன் செனெவிரத்ன எழுதிய சில வரிகள் உள்ளன. கிட்டதட்ட நூலின் ஆன்மாவை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன. அவற்றையே கட்டுரையின் கடைசியிலும் எழுதி கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

“ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்மந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன், சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது, அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நேரங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந்து கொண்டிருக்கிறதென மக்கள் கேள்வி கேட்க இயலுமாயிருக்க வேண்டும்”

••••••••••••

 

http://malaigal.com/?p=7109

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்த பனை சம்பந்தப்பட்ட எவருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை! அநியாயமாக ஒரு புத்திஜிவியின் உயிர்த்துடிப்பை தமிழீழ மண் பிரசவித்த ஒரு மகனின் துப்பாக்கி மௌனமாக்கியது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.