Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றின் கனவுகளாகவும் சிதைவுகளாகவும் காட்சிதரும் இலங்கைப் பாராளுமன்றின் நினைவலைகள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ் எம் வரதராஜன்

வரலாற்றின் கனவுகளாகவும் சிதைவுகளாகவும் காட்சிதரும் இலங்கைப் பாராளுமன்றின் நினைவலைகள்:-


எனது மதிப்பிற்குரிய நண்பரும் கௌரவ  அமைச்சருமான மனோ கணேசன்  அவர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துள்ள படம் எனக்கு பல நினைவலைகளை வாசகர்களுடன் பகிரத் தூண்டியது .
 
வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவரால் திரு மனோ கணேசன் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ள  இப் படத்தில் அவரின் பின்னணியில் உள்ள சுவர் ஒன்றில் பல பிரமுகர்களின் படங்கள் தெரிவதைக் காணாலாம். பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இவை என்னவென்று தெரியும்.
 
நான் செய்தி  சேகரிக்கப்பதற்காகாச்  சென்றதில்லை . பல தடவை பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் (தகவல்/ ஊடகம்) பங்குபற்றச் சென்றிருக்கிறேன். இரண்டு அமைச்சர்கள் "மீடியா" அமைச்சர்களாக இருந்த வேளை சுயாதீன தொலைகாட்சி சார்பில் பங்குபற்றியுள்ளேன் . அந்நேரம் தொலைபேசியில் படம் எடுக்கும் வசதிகள் இருக்கவில்லை.  இந்தப் படங்களைத் தாண்டிச் செல்லும் போதேல்லாம் இதனை எடுக்க வேண்டும் எனத் தோன்றும்.
 
நான் நெருங்கிப்  பழகிய தலைவர்கள்  அமரர்கள்  மு சிவசிதம்பரம் . ,த இராசலிங்கம் , க துரைரத்தினம்  ஆகியோர் அங்கு என்றும் காட்சி தருவர் .  செய்தியாளனாக அவர்களுடன் பணியாற்றிய பல நினைவலைகள் தோன்றும். 
  
1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு 1978 ஆம் ஆண்டு ஜப்பானின் உதவியுடன்  திறக்கப்பட்ட இந்தப் புதிய பாராளுமன்றத்தில் வந்த - 168 பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும்  படங்கள் அங்கு  'பதிக்கப்  கப்பட்டுள்ளன. இன்று போல இவர்களின்  படங்கள் -  கையை நீட்டி  விரலை   நீட்டி  பலவகை  வண்ணக் கழுத்துக்களுடனான   ஒலி வாங்கிகளின்  முன்  பேசும் நிலையில் பலவகைப்  "போஸ் " களில் ஊடகங்களில் வருவதில்லை. தினபதி வீரகேசரி போன்றவற்றில் பல வருடங்களாகவே- வந்த மனதைவிட்டகலாத அவர்களின் படங்களே பாராளுமன்றத்தில் பதிக்கப்பட்டுள்ளன.  கறுப்பு வெள்ளைப் (Black and white) படங்களிலேயே அவர்கள்  இறக்கும் வரையில் தம் மக்களுடன் இதழூடகங்களில்   தரிசனம் தந்தது போலவே பாராளுமன்றத்திலும்   உள்ளனர் .
 
 வடக்குக் கிழக்கு அனைத்துத் தொகுதி மக்களின்  தமிழ்  ஈழத்துக்கான அமோக   ஆணையைப்  பெற்று (கல்குடாவில் ஐ தே  க வில் போட்டியிட்ட கே டபிள்யூ தேவநாயகம் ஒருவரைத் தவிர ) பாராளுமன்றம் வந்திருந்த தமிழர் விடுதலைக்  கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு காட்சி தருகின்றனர் என்று சொன்னால் அது உயர்வு நவிற்சியோ அல்லது இகழ்ச்சியோ அல்ல. அது ஒரு வரலாற்றுக் கனவின் பதிவு.  
 
முதன் முதல் புதிதாகப் பாராளுமன்றம் செல்லும் வடகிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களைத்  தலை  வணங்கித்தான் செல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் சொல்லும் செய்தி இன்றுள்ள நாடு கடந்த அரசாங்கமோ அல்லது விடுதலைப் புலிகளோ சொல்லும் செய்தி அல்ல.  ஒரு காலத்தில் வடகிழக்குத் தமிழ்ப்பேசும் மக்கள் இவர்களை  ஓர்  ஆணை கொடுத்து அனுப்பி வைத்தர்கள் என்பதும் அவர்கள் ஏன் இவர்களை இங்கு அனுப்பி வைத்தார்கள் என்ற  செயயுமே அது !
  
இவர்கள் பாராளுமன்றம் வருவதற்கு முன்னர் கிழக்கில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கிழக்கின் பெருமகன்  எம் எச் எம் அஷ்ரப்  அவர்கள்  "அமிர்தலிங்கத்தால் தமிழ் ஈழம் எடுக்க முடியாவிடின் நான் எடுத்துத் தருவேன் " எனப் பேசியிருந்தார். இப்படியான  தமிழ் முஸ்லிம்  மக்களின் ஏகோபித்த  ஒருமையான போராட்டத்தின் அறுவடையாகப் பிறந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் அடுத்த  கட்டமாக -வெற்றி வாகை சூடி  வந்தவர்கள் தான் இப்படங்களில் உள்ளவர்கள
  
தங்களது  ஒவ்வொரு தொகுதிகளிலும் சுமார் 80 வீ த வாக்குகளைப்  பெற்று 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றம் வந்த அமரர்கள் துரைரத்தினம்  (பருத்தித்துறை) இராசலிங்கம்  (உடுபிட்டி) நவரத்தினம் (சாவகச்சேரி)  கதிரவேற்பிள்ளை  (கோப்பாய் ) அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை ) சிவசிதம்பரம்) நல்லூர் , திருநாவுக்கரசு  (வட்டுக்கோட்டை)  யோகேஸ்வரன் (யாழ்ப்பாணம்) , க பொ  இரத்தினம்  (ஊர்காவற்துறை) தர்மலிங்கம்  (மானிப்பாய்) கணேசலிங்கம்  (பட்டிருப்பு) கனகரத்தினம்  (பொத்துவில்) சிவசிதம்பரம்  (வவுனியா ) செல்லத்தம்பு (முல்லைத்தீவு) திருவளர்கள்  சம்பந்தன் (திருமலை) , இராச துரை (மட்டக்களப்பு )ஆனந்தசங்கரி (கிளிநொச்சி) சூசைதாசன் (மன்னார்  ) ஆகியோரே அவர்கள்.


இவர்கள் எடுத்த வாக்கு விபரம் இது :-
Votes and seats won by TULF by electoral district
Electoral District    Votes    %    Seats    Turnout    TULF MP
Batticaloa
26,648    24.70%    1    71.15%    Chelliah Rajadurai
Chavakachcheri
20,028    63.27%    1    85.65%    V. N. Navaratnam

Jaffna
16,251    56.62%    1    82.32%    V. Yogeswaran

Kalkudah
12,595    43.07%    0    86.02%    
Kalmunai
7,093    27.38%    0    89.86%    
Kankesanthurai
31,155    85.41%    1    83.08%    A. Amirthalingam

Kayts
17,640    64.05%    1    75.72%    K. P. Ratnam

Kilinochchi
15,607    73.42%    1    79.71%    V. Anandasangaree

Kopay
25,840    77.20%    1    80.03%    S. Kathiravelupillai

Manipay
27,550    83.99%    1    79.28%    V. Dharmalingam

Mannar
15,141    51.58%    1    92.40%    P. S. Soosaithasan
Mullaitivu
10,261    52.36%    1    79.34%    X. M. Sellathambu
Mutur
7,520    27.00%    0    91.65%    
Nallur
29,858    89.42%    1    83.05%    M. Sivasithamparam

Paddirippu
15,877    49.17%    1    89.92%    P. Ganeshalingam
Point Pedro
12,989    55.91%    1    81.66%    K. Thurairatnam

Pottuvil
23,990    26.97%    1    179.02%    M. Kanagaratnam
Puttalam    3,268    10.52%    0    83.58%    
Sammanthurai
8,615    34.65%    0    91.04%    
Trincomalee
15,144    51.76%    1    81.78%    R. Sampanthan

Udupiddy
18,768    63.44%    1    80.05%    T. Rasalingam
Vaddukoddai
23,384    70.18%    1    81.90%    T. Thirunavukarasu
Vavuniya
13,821    59.02%    1    82.31%    T. Sivasithamparam

Total    399,043    6.40%    18        

இவர்கள் வந்த நோக்கத்தின் காரணிகளை  -இவர்களின் குரலை இந்தப் பாராளுமன்றம் கேட்டதா ? இவர்களுக்கு மேலால் இது  கூக்குரலிட்டதா ? இவர்களை உள்ளே வர விடாமல் ஆறாம் திருத்தம் என்று  கொண்டு வந்து இவர்களை இங்கே வர விடாமல்  இந்தியாவுக்கு துரத்தியதா? என்றெல்லாம் ஓர் அரசியல் சமூக ஆய்வாளனுக்கு  நினைக்கத் தோன்றும். இங்கு  பாராளுமன்றம்  என்பதை ஆகுபெயராகக் கொள்ளலாம்.
  
இவர்கள் பிரதிநிதித்துவம் செய்த மண்ணின் கலைப் பொக்கிசமாக இருந்த யாழ் நூலகம் கொழுந்து விட்டு எரியப்  பார்த்தது இந்தப் பாராளுமன்றம். தனக்குரிய ஒரு பகுதி மக்களை கொன்று எரித்து அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு கப்பலில் நாட்டின் ஒரு முனைக்கு அனுப்ப வைத்ததும்  அதனைப்   இதே பாராளுமன்றம் . பக்கத்து நாட்டுப்  பிரதமரும் வந்து தன்னை மீறி தனது நாட்டின் தலைவருடன் ஒப்பந்தம் செய்யவும் பார்த்து நின்றது இதே பாராளுமன்றம் . அதே நாட்டுப் படைகள் வந்து பல அநியாயங்கள் செய்யப் பார்த்தும் இதே பாராளுமன்றம் தான்.  இந்நாட் டு மக்களின் ஒரு  பகுதியினர்    நாடுகளுக்கு அகதிகளாகப் போக வைத்ததும் இதே  மன்றம் தான்.  நாட்டின் வளமான  சக்தியான ஒரு பகுதியின் இளைஞர்களை எண்ணிக்கைக் கணக்கில்  டயர்களால்  கொளுத்தித் தீயிட பார்த்ததும் இதே பாராளுமன்றம் தான்.   ஈற்றில் சர்வதேச விசாரணை என்று ஒன்றை நடத்தக் கோரும் அளவுக்கு உள்  நாட்டு  விவகாரங்கள்  பரிணாமம் பெறவும் 
பார்த்துக்  கொண்டிருப்பது இதே பாராளுமன்றம் தான். இப்படி எழுதிக் கொண்டே  போகலாம்..! 
 
1978 இல் இங்கு வந்த எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இன்னமும் அப்படங்களில் இப் பாராளு மன்றதிலிருந்து கொண்டே இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறர்கள் !
 
அப்படங்களில் திகழும் இவர்களுடன்  காட்சி  தருபவர்களில் இதே பாராளுமன்றத்தில்     இன்றும்    உயிருடன் இருப்பவர்கள் இருவர். ஒருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள்.
 
இந்தப் பாராளுமன்றத்திற்கு மட்டுமல்ல சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்திலும்  இவர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். 1977 பொதுத்  தேர்தலில் திரு ரணில்  விக்ரமசிங்க -கம்பஹா   மாவட்டத்தில் பியகம தொகுதியிலிருந்து அந்தப் பழைய பாராளுமன்றத்திற்கு வந்தார்.  திரு சம்பந்தன் 
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைத் தொகுதியிலிருந்து வெற்றிவாகை சூடி வந்தார்.
 
இனப்பிரச்சினையின் முக்கிய வரலாற்றுக் காரணிகளில் ஒன்றான- தனிச் சிங்களச் சட்டம் - 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பு -தரப்படுத்தல்-என்பன அரங்கேறிய பாராளுமன்றம் அது . இந்த நாட்டின் சுதந்திரத்துக்காய் சிங்களத் தலைமைகளுடன் போராடிய ஒரு  இனத்தின் தலைவர்களை சிறையிலடைத்தும் பின்னர் அவர்களின் குடியியலுரிமையைக் கூட நீக்க  முயற்சித்த காவலர்களைக் கொண்டிருந்த பாராளுமன்றம் அது.   1971 இல் சிங்கள இளைஞர்கள் பலரைக் காவு கொண்ட ,கதிர்காம அழகி மனம்பெரி  கொடூரம் (சிறீமா அரசின் தோல்விக்குரிய  முக்கிய காரணிகளில் ஒன்று)   போன்றவற்றையும் கண்ட வரலாறு அதற்குரியது .
 
இவையிரண்டிலும் நடமாடிய –பல விவாதங்களையும் - பல அரச சாகச நாயகர்களையும் அவர்களின்  கண்டவர்கள் திரு சம்பந்தனும் ரணிலும் ஆவர். 


 
நல்லிணக்கதிற்கான நோக்கத்தில்   புதிய அரசாங்கத்தில்  கௌரவ அமைச்சர் பதவி  வழங்கப்பட்டுள்ள கௌரவ  மனோ கணேசனின் படத்தில் அவரின் பின்னால் இருக்கும் படங்களில் தமது பழைய இளைய முகங்களுடன். இவர்களும் இருப்பதை   இங்கு மீண்டும்  குறிக்க விரும்புகிறேன். சில படங்கள் கதையுடனும் கருத்துடனும்  எடுப்பது .சில படங்கள் சொல்லும் கதைகள் பல .இது இரண்டாம் வகை .
 
திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும்  உள்ளூராட்சித் தேர்தலிலும்   அவரது விளம்பரப்  பணிகளில் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றிற்காக  நான்  பணியாற்றிய வேளை அவருடன்  பழகும் சந்தர்ப்பத்தில் அவர்  எனக்கும் என்னுடன் இருந்த அவரது விளம்பர  இணைப்பாளருக்கும் சுவையாக சில விடயங்களைச் சொல்லும்போது ஒரு கட்டத்தில் சொன்ன   ஒரு விடயம்   எனக்கு நினைவுக்கு வந்தது .
 
திரு சம்பந்தன்  பற்றி  ஒரு  கதை வந்தபோது திரு ரணில்  சொன்னார் " நாமிருவரும் ஒன்றாகப் பாராளுமன்றம் வந்தோம்.  எனச் சொன்னார்.
 
அது மட்டுமல்ல, "புரையோடிப்போயிருக்கிற இனப் பிரச்சினைக்கு நானும் சம்பந்தனும் இருக்கிற காலத்திலேயே ஒரு நல்ல தீர்வைக் காணவேண்டும் என  விரும்புகிறேன்.  எல்லாம் சரியாக அமைய வேண்டும். - என்றும்  சொன்னார்.
 
 இது நடந்தது இன்று நேற்றல்ல.  நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒக்டோபர் மாத காலப் பகுதி என.
 
திரு சம்பந்தன் அவர்கள் பற்றியும் நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.  1990 களில் ஒரு நாள் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் வதிவிடத்தில்  அவரின் உறவினர் ஒருவருக்கு   நான் எனது வதிவிடத்தை (ஹம்டன் லேன் வெள்ளவத்தை) கையில் படம்  வரைந்து காட்டி விளக்குகையில் தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் என்னிடம் "என்ன தம்பி!, சம்பந்தன் மாதிரி கையில வரைந்து விளக்கிறீர் ? ஒரு பேப்பர் எடுத்து வாரும் தம்பி " என்று அங்கிருந்த மற்றவருக்குச் சொல்லி.. கடதாசியில் வரைந்து விளக்கச் சொன்னார்.

நான் விளக்கிக்  கொண்டிருந்த  வேளையிலே தலைவர் சிவா சொன்ன கதை இதுதான். வட கிழக்கு மாகாணங்கள் இணையக் கூடாது; அவை பிரிந்தே இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு  முயற்சி எடுத்து  இலங்கை அரசு கடும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
 
இந்தியாவும் அவற்றைக் கேட்டு விளங்கிய நிலையிலேயே இருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்படும் நிலைக்கு வந்த தறுவாயிலும்  வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்ற நிலையே இருந்தமை  காணப்பட்டது.
 
தென்னிந்தியாவில் விஜயம் மேற்கொண்டு வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இவ்விடயத்தை முக்கியமாக விளக்க ஒரு சந்தர்ப்பத்தை எமது தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் . நேரம் கிடைப்பது கடினமாக இருந்தது.  அமைச்சர் பண்டிருட்டி இராமச்சந்திரனின் முயற்சியால் திருவையாறு உற்சவத்திற்கு (உற்சவப் பெயர் எனக்கு சரியாக நினைவில்லை தியாகராஜா உற்சவமா என்பது தெளிவில்லை -மன்னிக்கவும்)  வந்திருந்த ராஜீவ் காந்தியுடன் விமானத்தில் இவர்களையும் டெல்லிக்கு அனுப்பி  விமானத்தில் வைத்து விளக்கும் வகையில் ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார் பண்டிருட்டியார் .
 
திரு சிவசிதம்பரம்  சொன்னார்:- "நானும் தலைவர் அமிரும் விளக்குவதை விட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தனே விளக்குவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சம்பந்தனையே விளக்க விட்டோம் .நாங்கள் தொடக்கிவிட்டோம். திரு ராஜீவ் காந்தியின் அருகிலிருந்த சம்பந்தன்  கதைக்கத்  தொடங்கினார். பிறகு கொஞ்ச நேரத்தில் பார்த்தால் கையில் ஒரு படம் கீறுகிறார் .ராஜீவும் அவரது கையைப் பார்க்கிறார் .சம்பந்தரும் என்னவோ கையைக் காட்டி  எல்லாம் விளக்குகிறார்.  
 
தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் நகைச்சுவையாகப் பேசுவார் என்பது பலருக்குத் தெரியும். அதே பாணியில் தான் இந்தக் கதையையும் சொன்னார்.
 
விமானம் தரையிறங்கியது .அடுத்த கட்டம் ராஜீவ் எம்மிடம் விடைபெறுவது மட்டுமே. ஏனெனில் அவருக்கு எம்முடன் பேச நேரம் இல்லை. அடுத்த அவசரக் கூட்டம் ஒன்றிற்கு விமான நிலையத்திலிருந்தே  போகவேண்டும் .
 
எனினும் ராஜீவ் காந்தி அவர்கள் திரு சம்பந்தனின் தோள்களைத் தடவிக்கொண்டு  என்னிடமும் தலைவர் அமிர்தலிங்கத்திடமும் சொன்னது இதுதான் ," எனக்குக் கிடைத்த  பல தகவல்கள் முரணானவையாக இருந்திருக்கின்றன என்பது திரு சம்பந்தன் விளக்கிய பின்னர் தான் எனக்கு நன்கு புரிந்தது. உங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியரை வைத்திருக்கிறீர்கள் . வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பற்றி எல்லாம் அத்துப்படியாக வைத்திருக்கிறார் . இது நல்ல சந்திப்பு என்று நினைக்கிறேன் " 

திரு சம்பந்தன் தனது கையை வைத்தே எல்லாவற்றையும் விளக்கினார் ..என்று தலைவர் சிவசிதம்பரம் சொன்னார்.
 
தலைவர் அமிர்தலிங்கமா திரு சம்பந்தனா ஆளுமை மிக்கவர் என்ற  வினாவுக்கு  திரு சம்பந்தனின் ஆளுமை பற்றி நன்கு  தெரிந்த தலைவர் திரு அமிர்தலிங்கம் என்று   பதிலைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123755/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.