Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்செழுவில் பிறந்ததனால் இவன் அய்லன் இல்லையா!

Featured Replies

Boat

கொழும்பு மிரருக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பி. தெய்வீகன்

மனுநீதி மறுக்கப்பட்ட இவ்வுலகில் கந்தகத்தின் வெம்மை அடங்காத கொடும்போரின் தீக்குழம்புகள் மானிட வர்க்கத்தின் அடுத்த தலைமுறையும் அழிக்க முடியாத வடுக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இவ்வாறானதொரு, போரின் பக்கவிளைவினால் நுரைகரையும் கடலடியில் உலகின் கன்னங்களில் ஓங்கி அறைந்துவிட்டு உயிர்துறந்த பச்சிளம் பாலகன் அய்லனின் மரணம் உலகின் உதடுகளை உச்சரிக்கவைத்திருந்தமை அனைவரும் அறிந்ததே ஆகும்.

சிரிய போரின் கொடுமையிலிருந்து தப்பித்து ஐரோப்பியாவுக்குள் அலையென வந்திறங்கித் தஞ்சம் கோரும் பல்லாயிரணக்கணக்கான  அப்பாவி பொதுமக்களுடன் அய்லனின் தந்தை தனது இரு குழந்தைகளுடனும் மனைவியுடனும் கடல்தாண்டி  வரும்போது  இடம்பெற்ற அனர்த்தத்தில் தனது முழுக்குடும்பத்தையும் இழந்துவிடுகிறார் அவர். அடுத்தநாள் காலை அவரது மூன்று வயதான மகன் அய்லனின் உடலம் துருக்கி கடலடியில் கரையொதுங்கிய செய்தி உலகத்தையே ஆக்கிரமித்து, அவனது புகைப்படம் எல்லோரையும் தூக்கிவாரிப்போட்டுவிடுகிறது.

இந்த ஒரு சம்பவம் பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அகதிகளை உள்வாங்கும் கொள்கைகள் போன்ற பல முக்கிய விடயங்களை மீள்பரிசீலனை செய்துகொள்ள வைக்குமளவுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது எவரும் மறுக்க முடியாத மிகப்பெரிய உண்மை.

இந்த செய்தியின் பின்னணியில் ஈழத்தமிழினத்தின் விதியை சற்று திரும்பி பார்க்கும்போது அது எவ்வளவு சபிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறெதெயும் எண்ணத்தோன்றவில்லை.

அதற்கான காரணங்கள்-

ஒன்று – 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழினம் சந்தித்த மிகப்பெரிய மனிதப்படுகொலை படலத்துக்கு பின்னர், உலகில் தற்போது எங்கு அழிவு நடைபெற்றாலும் அவற்றைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுமளவுக்கு எமது மக்களின் உணர்வுகள் மறத்துப்போய்விட்டன. அத்துடன், சொந்த மரணம் உட்பட எந்த மரணத்துக்கும் அழுதுகொள்ளுமளவுக்கு எமது மக்களிடம் கண்ணீரும் வற்றிப்போய்விட்டது.

இரண்டாவது – அய்லனுக்கு இடம்பெற்ற அதே கதி எமது மக்களுக்கு ஏற்பட்டபோதெல்லாம் அவற்றுக்கு எந்த நீதியும் நியாயமும் வழங்கப்படவில்லை என்பதற்கு அப்பால், இன்று அய்லனுக்காக உரத்துக்குரல் எழுப்பும் ஊடகங்களினால்கூட எமது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆகிவிட்டார்களா என்ற துயரம்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், ஆக்கிரமிப்பின் வெம்மையை பொறுக்கமுடியாமல் ஆயிரக்கணக்கில் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறி கடல்கடந்து வேறு நாடுகளுக்குத் தஞ்சம்கோரி சென்ற தமிழ் மக்கள் எத்தனைபேர் கடலில் மாண்டுபோனார்கள் என்பதற்கு இன்றுவரை எவரிடமும் சரியான கணக்கு விவரங்கள் இல்லை.

இவ்வாறு கடல்மடியில் சாவடைந்தவர்களில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற கோரமான படகு விபத்தில் உயிர்நீத்த ஒன்றரை வயது பாலகன் கிருஷாந்தின் பிரிவை எத்தனை ஊடகங்கள் வெளியிட்டன. அவ்வாறான ஒரு சம்பவம் நடந்ததேனும் யாருக்காவது தெரியுமா?

அய்லனின் மரணத்தை அறிந்த மாத்திரத்திலேயே பச்சிளம் பாலகன் கிருஷாந்தின் மரணத்தை இனியாவது வெளிஉலகிற்குக் கொண்டுசெல்வதற்கு இதுதான் சரியான தருணம் என்ற எண்ணத்துடனும் ஏக்கத்துடனும் இன்னமும் நீதி மறுக்கப்பட்டுள்ள கிருஷாந்தின் பெற்றோரைச் சந்தித்தேன்.

ஆஸ்திரேலியா வருவதற்காக ஊரைவிட்டு வெளியேறி இரண்டு வருடங்கள் வேறு நாட்டில், இடையில் பிள்ளையைப் பறிகொடுத்த கொடூர விதி, மீண்டும் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது அந்த நாட்டுக் கடற்படையினரால் கைதாகி நவ்ரூ தீவுகளில் கொண்டுசென்று அடைக்கப்பட்டு பின்னர் பல முகாம்களுக்குள் தடுப்பு என்று அலைந்து-

தற்போது ஒருவாறு விடுதலை செய்யப்பட்டு தமது இரண்டாவது குழந்தையின் முகத்தில் மலரும் அந்த சிரிப்பினால் மாத்திரம் வாழ்வின் வசந்தத்தை தற்காலிகமாக சுவாசித்துக்கொண்டிருக்கும் விமலராசு தம்பதியினர் “அண்ண வாங்கோ”– என்று இயலுமானவரை முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பித்து வரவேற்றனர்.

வீட்டின் ஒரு மூலையில் ஒய்யாரமாக உயரத்திலிருந்த மேசையின் நடுவில் ஒன்றரை வயது கிருஷாந்தின் படமொன்று வைக்கபட்டிருந்தது. குழைத்தெடுத்த அழகை அப்படியே அப்பிய அந்த செல்லக்குழந்தையின் பிஞ்சுடல் ஆர்ப்பரித்த அலை நடுவில் எப்படித்தான் மரணத்தை எதிர்கொண்டிருக்குமோ என்றெண்ணியபோது ஈரக்குலை நடுங்கியது.

குரலை செருமிக்கொண்டு நடந்த சம்பவங்களை ஆரம்பத்திலிருந்து கூறுமாறு கேட்டேன். கதிரையை எனக்கு அண்மையாக இழுத்து போட்டுவிட்டு சொல்ல தொடங்கினார் விமலராசு.

பிள்ளையை பிரிந்த கவலை மீண்டும் மனதை நிறைத்து அழவைத்துவிடுமோ என்றெண்ணியதாலோ என்னவோ “அண்ண, கதையுங்கோ வாறன்” என்று கைகளில் தவழும் இரண்டாவது உலகத்தை இறுக்க அணைத்து முத்தமிட்டவாறு உள்ளே போய்விட்டார் விமலராசுவின் மனைவி வினோதினி.

Boat toppled

பேசத்தொடங்கினார் விமலராசு.

“அண்ண. எங்கட இடம் யாழ்ப்பாணத்தில அச்செழு. சண்டை முடிஞ்ச கையோட நானும் என்ர மனைவி வினோதினியும் பிள்ளை கிருஷாந்தோட வெளிநாடு போக வெளிக்கிட்டனாங்கள்.

“உண்மையா சொல்லப்போன, கடந்த முண்டு வருசத்தில நாங்கள் பட்ட கஸ்டத்தில எதை சொல்லிறது, எதை விடுறது எண்டு தெரியேல்ல. அவ்வளவுத்துக் செத்து பிழைச்சுப்போனம்”

கண்களை சுருக்கி மேலே பார்த்து நாட்களை ஞாபகப்படுத்திக்கொண்டு தலையை ஆட்டிவிட்டு “ஒஸ்ரேலியா போகவேணும் எண்ட ஆசையோட உயிரை கையில பிடிச்சுக்கொண்டு ஊர விட்டுவந்து இந்தோனேஸியாவில நிண்ட எங்களை ஒருமாதிரி படகில ஏத்தி அனுப்பிற நாளும் வந்திச்சுது.

“2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி. எனக்கு நல்ல ஞாபகம்.

“இந்தோனேஷியாவிண்ட ஏதோ ஒரு தீவுக்கு, பெயரும் சரியா ஞாபகம் இல்ல, எங்கள கூட்டிக்கொண்டு போச்சினம். எங்களப் போல கனபேர, வேற வேற இடங்களில இருந்து அங்க கொண்டு வந்து, ஒரு பொதுஇடத்திலி இருந்து வாகனங்களில ஏத்திக்கொண்டு போச்சினம்.

“அடர்ந்த காடு ஒண்டுக்குள் இறக்கிவிட்டுட்டு அதுக்குள்ளால நடந்து நடந்து கடற்கரைக்கு போய்தான் படகில ஏறவேணும் எண்டு சொல்லுப்பட்டுது. வினோவுக்கு பிள்ளைய தூக்கிக்கொண்டு நடக்கிறது கஸ்டம். அப்ப நானும் அவவும் மாறி மாறிப் பிள்ளைய தூக்கிக்கொண்டு, அந்த கும்மிருட்டு காட்டுக்குள்ளால முன்னுக்கு போன ஆக்களை பின்தொடர்ந்து போனம். இது நடந்தது; நடுச்சாமத்தில.

“உயிரை காப்பத்திறதுக்கு ஊரில இருக்க ஏலாது எண்டா, எந்தக் கஷ்டத்தையும் தாங்கத்தானே வேணும் எண்ட ஒரே நினைப்போட கால் வலிக்க நடந்து வந்து ஒரு மாதிரி கடலைக் கண்டம்.

“காலம்பிற 7 மணியிருக்கும், சின்ன சின்ன வள்ளங்களில ஏறி, கொஞ்சத்தூரம் போய் நடுக்கடலில நிக்கிற பெரிய படகில ஏறவேணும் எண்டு சொல்லிச்சினம்.

“சரி எண்டு ஏறினா, அலையடிக்கிற கடலுக்குள்ளால ‘இந்தா பிரட்டிறன் பார்’ எண்டு பயம் காட்டிற அளவுக்கு ஓங்கி அடிச்ச தண்ணிக்குள்ளால கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் போய் பெரிய படகு ஒண்டில ஏறினம்.

“அண்ண, சொன்னா நம்பமாட்டியள், ஏறினது தொடக்கம் எனக்கு அந்த படகில நம்பிக்கை இல்ல. வினோ பிள்ளையோட இருந்ததை பார்த்துட்டு, ஓட்டியிண்ட அறைக்கு பக்கத்தில இருக்கிற இடத்தில கொண்டுபோய், மற்ற குடும்பங்களோட எங்களையும் விட்டிச்சினம்.

“எங்கள மாதிரியே சின்ன சின்ன வள்ளங்களில கரையில இருந்து சாரி சாரியா வந்த கன சனம் படகில ஏறிச்சிதுகள். வேற வேற நாட்டுக்காரரும் வந்தபடியா, எங்கட ஆக்கள் யாரும் இருக்கினமோ எண்டு தேடி தேடி கொஞ்சப்பேரை கதைத்துணைக்காவது கூட்டியந்து வினோவுக்கு பக்கத்தில விடுவம் எண்டு படகிண்ட மற்ற இடங்களுக்கும் நான் ஒரு சுத்து சுத்தி வந்தன்.

“அப்பிடி போகேக்கதான் கேள்விப்பட்டன் எங்களோட சேத்து அந்த படகில ஏறின ஆக்களிண்ட மொத்த எண்ணிக்கை 204. எனக்கு திரும்ப திரும்ப அபசகுணமாகவே நினைப்புகள் வந்தது, ஆனா, அதை கதைக்கப்போய் பிள்ளையோட இருக்கிற வினோவ பயப்படுத்தக்கூடாது எண்டுட்டு மனதை இறுக்கமாக்கிக்கொண்டு இருந்திட்டன்.

“காலம்பிற 10 மணியிருக்கும், எல்லா ஆக்களையும் ஏத்தியாச்சு எண்டுபோட்டு, படகு வெளிக்கிட தொடங்கிச்சுது.

“சொன்னா நம்பமாட்டியள் அண்ண, நாங்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில, ஓட்டியிண்ட அறைக்கு பின்னால பெரிய ஒரு கிடங்கு மாதிரி ஓட்டை. படகு அசைய அசைய, அந்த ஓட்டைக்குள்ளால தண்ணி பயங்கரமா உள்ள வாறதும் வெளிய போறதுமாக இருந்துச்சுது. எனக்கென்ன, கடலை பற்றி தெரியும். அப்ப, பயத்தில ஓட்டியிட்ட எட்டி அதை காட்டி சொல்ல சொல்ல, அவனும் ‘பாரப்படகு ஒண்டும் பயப்படாம இருங்கோண்ண’ எண்டு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.

“படகு போகப் போக, அந்த ஓட்டைக்குள்ளால உள்ள வாற தண்ணியிண்ட அளவு கூடிக்கொண்டே போச்சுது. ஆனா, வெளியில போகிற மாதிரி தெரியேல்ல. அப்பத்தான், ஓட்டியும் அவனோட இருந்த ஆக்களும், இது கரைச்சல் குடுக்கப்போகுது எண்டு கொஞ்சம் சீரியஸாகிச்சினம். மோட்டர் ஒண்டக் கொண்டுவந்து போட்டு, தண்ணிய இறைச்சு வெளியில அடிச்சுப்பாத்தினம்.

“மத்தியானம் கடந்து 2 மணிவரைக்கும், தண்ணியோட நடந்த போராட்டத்தில, ஓட்டியால ஒண்டும் செய்ய முடியாம போயிட்டுது. இந்த படகில இப்பிடியே போய் சேரேலாது எண்ட முடிவோட, படகை திருப்பி கரைக்கு கொண்டுபோறது எண்டு முடிவெடுத்திச்சினம்.

“படகில இருந்த சனத்துக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். எங்களுக்கும் என்னடா இது, நாலு மணித்தியாலம் வந்திட்டு, இனி திரும்ப போறமே எண்டு ஒரு பக்கம் கவலை. ஆனா, உயிருக்கு பயந்து நாட்டில இருந்து வந்து கடலுக்கு நடுவில போய் சாகிறதவிட கரைக்கே போவம் எண்டு மனதை சமாதானப்படுத்திக்கொண்டம்.

“படகை திருப்பி கரைக்கு கொண்டுபோறது எண்டு சொன்னாப்போல, அதுவும் லேசான காரியமா தெரியேல்ல. பயங்கர அலை படகை அங்கையும் இங்கையும் மாறி மாறி உலாஞ்சிக்கொண்டே இருந்துச்சுது. படகை கரைக்கு கொண்டுபோறதுக்கு ஓட்டியோ மகா பாடுபட்டான்.

“நாங்கள் ஓட்டியிண்ட அறைக்கு பக்கத்தில இருந்து, உள்ள வந்து அடிச்ச அலையால முழுக்க தோஞ்சுபோனம். வினோ பிள்ளைய இயலுமானவரைக்கும் துவாயால துவட்டி துவட்டி சுத்தி வச்சிருந்தா.

“கரைக்கு போற ஓட்டிக்கும், படகு எங்க போகுது எண்டு தெரியேல்ல. அலையடிக்கிற திசையில படகு இழுபட்டு இழுபட்டு போச்சுது.

“பின்னேரம் அறு மணியிருக்கும் எண்டு நினைக்கிறன். எது நடந்துவிடப்போகிறது எண்டு பயந்து பயந்துகொண்டிருந்தமோ, அது நடந்திட்டுது. ஓங்கி அடிச்ச அலையொண்டு எங்கட படகை அப்பிடியே பிரட்டியது. நான் வினோவை இறுக்க அணைச்சுக்கொண்டன். வினோ பிள்ளைய இறுக்கிப்பிடிச்சிட்டா. படகால தூக்கி எறிஞ்ச எல்லோரைடயும் நாங்களும் அலையில அடிபட்டு கொஞ்சம் தண்ணீக்குள்ள போய், மேல வந்தம்.

“நானும் வினோவும் லைவ் ஜக்கட் போட்டிருந்தனாங்கள். ஆனால், குழந்தைக்கு ஒன்றரை வயது எண்டபடியால் அவருக்கு ஜக்கட் இருக்கயில்லை. அப்ப, நானும் வினோவும் கடலுக்குள்ள விழுந்த உடனயே, எங்கட கைகள குறுக்க பிடிச்சு, ரெண்டு பேரும் சேர்ந்து பிள்ளைய பிடிச்சுக்கொண்டம்.

“கரைக்கு நீந்தி போறதுக்கு முதல்,உயிரோட மிதக்கிறது எப்பிடி?  பிள்ளைய காப்பாத்திறது எப்பிடி எண்டதுதான் எனக்கு நெஞ்சுக்குள்ள திக்கு திக்கு எண்டிருந்தது.

“நானும் வினோவும் பிள்ளைய விடேல்ல. மிதக்கிற எங்களுக்கு மேலால அலை வருகிறது தெரிஞ்ச உடன தண்ணிக்குள்ள பிள்ளையோட மூழ்கி எழும்பிறதன் மூலம் அலை எங்கள திருப்பி கடலுக்குள்ள கொண்டுபோறதில இருந்து தப்பிச்சுக்கொண்டம்.

“பார்வைக்கு எட்டின தூரமெல்லாம், சனம் லைவ் ஜக்கெட்டோட மிதந்து கிடந்து குளறுதுகள். பிள்ளையெலிண்ட வீலிட்ட சத்தம், அதோட அலை அடிக்கிற ஆர்ப்பரிப்பு எண்டு மண்டையே வெடிக்கிறமாதிரி கிடந்துது. அங்க மிதக்கிற ஆக்களில் யார் செத்துக்கிடக்குதுகள். யார் உயிரோட மிதக்குதுகள் எண்டுகூட தெரியேல்ல.

“நாங்கள் தண்ணிய குடிக்காம கொப்புளிச்சு கொப்புளிச்சு வெளியில துப்பிக்கொண்டிருந்தம். ஆனா, பிள்ளைதான் கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய குடிக்க வெளிக்கிட்டிட்டார். அதில பெரிய கொடுமை என்னெண்டால், படகு கவிழ்ந்து அதில இருந்து டீசல் எல்லாம் கடல் தண்ணியில கொட்டி, நாங்கள் மிதந்துகொண்டிருந்த ஏரியா முழுக்க டீசலாக கிடந்தது. அதனால, பிள்ளை கொஞ்சம் கொஞ்சம் இந்த டீசல் படர்ந்த தண்ணிய குடிச்சிட்டார். கன நேரத்துக்கு பிறகுதான், அது எங்களுக்கும் தெரிஞ்சுது. ஏனெண்டால், பிள்ளை வாயால நுரை கக்க தொடங்கீட்டார்.

“பிள்ளையிண்ட உடம்ப அழுத்தி தண்ணியையும் டீசலையும் வெளியில எடுக்கிறதுக்கு எங்களால முடியேல்ல. தண்ணிய வலிச்சு வலிச்சு கரைக்கு போவமெண்டால்,கரையே தெரியேல்ல.

“மாலை ஆறு மணிக்கு பிறகு பிள்ளையிண்ட முகத்தில அசுமாத்தத்த காணயில்லை. மூச்சு விடுகிறமாதிரி தெரியேல்ல” சொல்லும்போது விமலராசுவின் குரல் தழுதழுத்தது.

“உண்மையா அண்ண..கடைசியா அந்த பிள்ளை வாயத் திறந்து திறந்து மூச்சு விடுகிறதுக்கு கஸ்டப்பட்டதும்..அப்ப நுரை மட்டும்தான் வாயால வந்ததும் இன்னும் கண்ணுக்க நிக்குது. பிள்ளை எங்கட கையிலயே செத்துப்போச்சுது. ஆனா, எங்களாலதான் காப்பாத்த முடியேல்ல. அந்த நேரத்தில நாங்களும் தப்புவம் எண்டு எங்களுக்கு தெரியேல்ல. தொடர்ந்து மிதந்து மிதந்து பிள்ளைய கைவிடாம, கரைய நோக்கி வலித்துக்கொண்டு போனம்.

“சொன்னா நம்ப மாட்டியள். சாமம் தாண்டி மூண்டு மணிக்குத்தான் கரைய வந்து சேர்ந்தம். கிட்டத்தட்ட பத்து மணித்தியாலத்துக்கு மேல தண்ணீக்குள்ள கிடந்த எங்களுக்கு உடம்பு உப்பிப்போச்சு. கை, கால அசைக்க முடியேல்ல. ஆனா, கையில கிடந்த குழந்தைய காப்பாத்திறத்துக்கு ஏதாவது செய்ய ஏலாதோ எண்ட ஒரு ஏக்கத்தோட, குழந்தைய கரைக்கு தூக்கிக்கொண்டு ஓடிப்போய் தரையில கிடத்தி, வாயித்த அமத்தி தண்ணிய வெளியில எடுத்துப்பாத்தம்.

“எந்த கரையில வந்து நிக்கிறம் எண்டோ..எங்க போறது எண்டோ..தெரியேல்ல. கொஞ்ச நேரத்தில அந்த பகுதியாக ஒரு மோட்டச்சைக்கிள் வந்தது. அதில வந்த ஆக்களிட்ட கெஞ்சி கூத்தாடி, பிள்ளையையும் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரி ஒண்டுக்கு போனம்.

“அங்க பிள்ளைய உள்ள கொண்டு போயிட்டு, எங்கள வெளியில காத்திருக்க சொல்லிச்சினம். அண்ண..அந்த ஒரு தவிப்பும் கவலையும் அழுகிறதுக்கு கண்ணீரே வரமுடியாதளவுக்கு செத்த மாதிரி கிடந்த நிலையும் எங்கட எதிரியளுக்கும் வரக்கூடாது. அப்பிடி ஒரு நரகம்.

“ஆஸ்பத்திரிக்காரங்கள் பொலிசுக்கு ரிப்போர்ட் பண்ண, அங்க பொலிஸ் வந்து எங்களட பிள்ளைய பொறுப்பெடுத்திட்டுது. டி.என்.ஏ. சோதனை செய்ய வேணும். அந்த சோதனை இந்த சோதனை எண்டு மூண்டு நாளா எங்கள ஆஸ்பத்திரியிலயே வச்து இழுத்தடிச்சினம்.

“எங்களோட கவிண்ட படகில இருந்த மிச்ச சனத்தையும் அந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துச்சினம். நாங்கள் ஆஸ்பத்திரி மண்டபத்தில, மாத்து உடுப்பும் இல்லாமல், கடலுக்குள்ள கிடந்த அதே உடுப்போட பிள்ளையிண்ட பொடிய எடுக்கிறதுக்கு காவல் கிடந்தம்.

“வெளியில வந்த ஆஸ்பத்திரிக்காரரும் பொலிசும் படகு கவுண்டதில் கன பிள்ளையள் செத்ததால, ஆராற்ற பிள்ளையள் எண்டு சரியா அடையாளம் வேண்டும் எண்டும் எண்டும் இப்போதைக்கு பிள்ளையிண்ட பொடி தர ஏலாது எண்டும் பொடி ஐஸ் பெட்டியில இருக்குது எண்டும் சொல்லிப்போட்டினம்.

“இதுக்கு பிறகு அங்க எப்பிடி நிக்கிறது எண்ட கவலையோட, விஷயத்தை கேட்டு அங்க வந்த எங்கட பிரண்ட்ஸோட போய்ட்டோம்.

“மூண்டு மாசமா, எங்கட பிள்ளையிண்ட பொடிய எடுத்துக்கொண்டுவந்து காரியங்களையாவது செய்வம் எண்டு நாயா பேயா அலைஞ்சம். அப்ப எங்களுக்கு ஒவ்வொருநாளும் செத்தவீடுதான். கடைசி வரைக்கும் எங்களால எங்களட பிள்ளைய காணவே முடியேல்ல.

“பிள்ளைய பறிகொடுத்த எங்களுக்கு, அந்த நாடு என்னவோ தெரியேல்ல சுடலை மாதிரியே கிடந்தது.

“நாங்கள் அங்க இருக்கேக்க, பிறகு கேள்விப்பட்டம், எங்கட படகு கவிண்டதில 55 முதல் 60 சனம் செத்தது எண்டும் செத்ததில 25 பிள்ளையள் எண்டும் சொல்லிச்சினம்.எங்கட பிள்ளையோட, எங்கட சனத்திண்ட இன்னும் ரெண்டு பிள்ளையளும் கடலில தாண்டு செத்தது எண்டு கேள்விப்பட்டம். சானுஜா எண்ட ஆறு மாத குழந்தையும் ஜெனிசன் எண்ட பத்து மாத குழந்தையும் இதில செத்ததுகள்.

“அதுக்கு பிறகு 2013 ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி நாங்கள், திருப்பவும் கடலால வந்து ஒஸ்ரேலியாவுக்கு வந்திட்டம். இந்தமுறை, என்ன நடந்தாலும் பரவாயில்லை, செத்தாலும் பரவாயில்லை எண்டுதான் வந்தானங்கள். பிள்ளையே போட்டுது. இனி என்ன வாழ்க்கை எண்டுதான் வந்தம். ஆனால், ஏதோ வந்திட்டம்.

“இதில பெரிய கவலை. நாங்கள் ஒஸ்ரேலியாவுக்கு வாறதுக்கு இரண்டாந்தரம் படகில ஏறின அடுத்த நாள், எங்கட பிள்ளையிண்ட பொடிய இந்தோனேஷியாவில அடக்கம் செய்தார்கள் என்று பிறகு எங்களுக்கு தெரியவந்தது.

“இஞ்ச கிறிஸ்மஸ் தீவுகளில வந்திறங்கி, எங்கள மூண்டரை மாதம் நவ்ரூ தீவுகளில கொண்டுபோய் வைத்திருந்து, பிறகு வினோவுக்கு அங்கு சிறுநீரக தொற்றுநோய் வந்து பேர்த் மாநிலத்துக்கு கொண்டுவந்து, பிறகு மெல்பேர்ன் தடுப்புமுகாமுக்குஎங்களை மாத்தி ஒரு மாதிரி விட்டுட்டினம்”

விமலராசு தன்னுடைய நீண்ட கதைய சொல்லி முடிக்க, மனைவி வினோதினி ஒரு கையில் மகள் ஜஸ்மினுடனும் மறுகையில் தேனீருடனும் வெளியில் வந்தார்.

“அண்ணா…எங்கட பிள்ளை போய் இப்ப ரெண்டு வருஷம் ஆகீட்டுது. நாங்கள் இந்தோனேஷியாவுக்கு போய் அவர் புதைக்கப்பட்டிருக்கிற இடத்தில இறுதிக்காரியங்களை செய்யிறதுக்கோ ஒரு நினைவுக்கல்ல வைக்கிறதுக்கோ செரியான ஆசையா கிடக்குது. அதுக்கு இந்த ஒஸ்ரேலியா அரசாங்கத்திட்ட கேட்டனாங்கள். ஆனா, அதுக்கு எங்களுக்கு அனுமதி தரயில்லை” என்றார் வினோதினி.

கையிலிருந்த ஜஸ்மின் தாய் பேசுவதையோ தனக்கொரு அண்ணன் பிறந்து தன்னை பாராமலே போய்விட்டான் என்பதையோ எதையுமே புரியாமல் ஆச்சரியத்தடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவர்களுக்கு இன்னமும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவில்லை. ஏதோ ஒரு இலக்கத்தில் இவர்களுக்கும் எவர்களுக்கும் புரியாத விஸாவில் இங்கு தற்காலிகமாக தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தங்களது எதிர்காலத்தை நினைத்து வருந்தியபடியே இருக்கிறார்கள்.

அய்லனை சுத்தி சுத்தி படமெடுத்தவர்களே…

இன்னமும் அவன் செய்தி சுமக்கும் ஊடகங்களே…

அச்செழுவில் பிறந்தது கிருஷாந்த் செய்த குற்றமல்ல..

 

http://www.colombomirror.com/tamil/?p=5805

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.