Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்!
 

 

ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது.

இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் விவாதங்களில் புலம்பெயர்ந்து வாழும் சமூகங்கள் தாம் பிறந்து வளர்ந்த நாட்டுடன் பேணும் எல்லாவகையான தொடர்புகளும் எதிர்மறையாகப் பார்க்கப்படுவதில்லை. இதேபோல் பண்பாட்டு வடிவத்தில், பழக்கவழக்கங்களாக நாம் பிறந்த வளர்ந்து நமது நாட்டில் இருந்து புலத்துக்கு இறக்குமதி செய்துள்ள எல்லா விடயங்களும் பெரும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதில்லை. புலத்தில் வாழும் வெளிநாட்டுப் பின்னணி கொண்ட மக்களின் வாழ்க்கையில் காணப்படும் பேணப்படும் எல்லா அம்சங்களும் பெரும் சமூகத்தால் பிரச்சினைக்குரியதாகப் பார்க்கப்படுவதில்லை. சில ஏற்கப்படுகின்றன. வேறு சில நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, மனிதாபிமானம், மனித உரிமைகள் தொடர்பாக அரசுகளிடம் ஓர் இரட்டைத்தன்மை இருந்தாலும் பெரும் சமூகத்தின் மக்கள் மத்தியில் இவற்றுக்கு மதிப்பு உண்டு. இதன்பாற்பட்ட செயற்பாடுகள் இவர்களது கவனத்தை ஈர்க்கும்போது அதற்கான ஆதரவினை இவர்கள் வழங்குவார்கள். இதற்கு 2004 டிசெம்பரில் சுனாமி பேரலை விளைவித்த அனர்த்தங்களுக்காக தமிழ் மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியுதவித் திட்டங்களுக்கு இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் பெரும் சமூகம் அளித்த ஆதரவு நல்லதொரு உதாரணம். பாலஸ்தீனர்களுக்கெதிராக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேல் நடாத்திய தாக்குதல்களுக்கு எதிராக உலகம் எங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அந்தந்த நாடுகளின் பெரும் சமூகங்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் பங்குபற்றலும் இருந்தது. இப் போராட்டங்கள் மனிதாபிமானத்தின் பாற்பட்டதாக மட்டுமல்லாது, இஸ்ரேலின் பாலஸ்தினியர் தொடர்பான அரசியலுக்கு எதிரான போராட்டங்களாகக்கூடக் கொள்ளப்படக்கூடியவை.

இதேநேரம் உலகில் இடம்பெறும் எல்லா நிகழ்வுகளும், எல்லா மனித உரிமை மீறல்களும் அநீதிகளும் பெரும் சமூகத்தின் கவனத்தை ஒரேயளவில் ஈர்ப்பதில்லை. தமது கவனத்தை ஈர்க்காத விடயங்களில், சாதகமான பொதுமக்கள் அபிப்பிராயம் எட்டப்படாத விடயங்களில் பெரும் சமூகத்தின் பங்குபற்றுதல் இருப்பதில்லை. அல்லது மிகக் குறைவாகவே இருக்கும். இதற்குப் பல்வேறுவகையான காரணங்கள் உண்டு. இக் காரணங்களுக்குள் இப் பத்தி நுழையவில்லை. ஏனைய நாடுகளில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக செயற்பாடுகள் அல்லது எதிரொலிகள் அனைத்துமே இவர்கள் வாழும் நாடுகள் அல்லது அந்நாடுகளின் பெரும் சமூகம் இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசமாகவோ, அல்லது அவை தொடர்பான பிரச்சினையாகவோ பார்ப்பதில்லை.

இதேவேளை, சோமாலியாவிலோ அல்லது ஏனைய எந்த நாடுகளிலோ ஆயுதம் தாங்கிப் போராடுவதற்கோ அல்லது தற்கொலைப் படையணியின் அங்கமாகத் தன்னை அழித்து எதிரிக்கு சேதம் விளைவிக்கவோ- புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து எவராவது புறப்படுவது செய்தியாக வரும்போது அதனை இந்த நாடுகளின் அரசுகளும் பெரும் சமூகமும் பிரச்சினையாகப் பார்க்கிறது. இது அரசியல் தளத்தில் அமைந்த ஓர் உதாரணம்.

இதேபோல் சமூக பண்பாட்டுத்தளத்திலும் பல உதாரணங்கள் உண்டு. இந்திய உபகண்டத்தின் இருந்து படைப்பாகும் இசைப் படிமங்களை, நடன வடிவங்களை, உணவுவகைகைள விரும்பி வரவேற்கும் மேற்குலக பெரும் சமூகம், தமது நாடுகளில் உள்ள இந்திய உபகண்ட மக்களின் மத்தியில் இடம்பெறும் ஏற்பாட்டுத் திருமணங்களை (arranged marriages) விரும்பி வரவேற்பதில்லை. இவற்றை கட்டாயக் கல்யாணத்துக்கு (forced marriages) வழிகோலும் நடைமுறையாகப் பார்ப்போர் பெரும் சமூகத்தின் மத்தியில் நிறைய உண்டு. பெரும் சமூகத்தின் பலருக்கு ஏற்பாட்டுத் திருமணத்துக்கும் கட்டாயக் கல்யாணத்துக்குமிடையிலான வேறுபாடுகள் தெரிவதில்லை. இரண்டையும் ஒன்றாகவே நோக்குவோர் பெரும் சமூகத்தின் மத்தியில் பலர் உண்டு. இருப்பினும் கட்டாயக் கல்யாணம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது போல ஏற்பாட்டுத் திருமணங்களை தடைசெய்யும் முயற்சிகள் இடம்பெறவில்லை.

இவையெல்லாம் பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்குள்ளும் இடையே அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் இருக்கும் வேறுபாடுகளில் எல்லா வேறுபாடுகளும் பெரும் சமூகத்தால் நிராகரிக்கப்படவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. சில வேறுபாடுகள் பண்பாட்டுத் தனித்துவங்களாகக் கருதப்பட்டு பெரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, ஏன் போற்றவும் படுகின்றன. மாறாக வேறு சிலவகையான வேறுபாடுகள் பெரும் சமூகத்தால் மறுக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன. பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த மக்கள் சமூகங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் எவ்வடிப்படையில் பெரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும்படுகின்றன? இது முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு வெவ்வேறு வகையான வியாக்கியானங்கள் நமக்குள் இருக்கக்கூடும்.

இவ் விடயத்தில் நோர்வேயின் புகழ்பெற்ற சமூக மானுடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen தனது அவதானிப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார். பெரும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்த மக்கள் சமூகங்களுக்கும் இடையில் உள்ள மாறுபாடான அம்சங்களின் சிலவற்றை சாதகமாகவும் வேறு சிலவற்றைப் பாதகமாகவும் பெரும் சமூகம் கணிப்பதனை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் பேராசிரியர் எரிக்ஸன் அடையாளம் காட்டுகிறார். பெரும் சமூகம் பாதகமானதாக நோக்கும் மாறுபாடான அம்சங்களை, வேறுபாடுகள் (differences) என வகைப்படுத்தும் பேராசிரியர் எரிக்ஸன், பெரும் சமூகம் சாதகமானது அல்லது பிரச்சினைகளற்றது எனக் கருதும் மாறுபாடான அம்சங்களை பல்வகைமை (diversity) எனவும் வகைப்படுத்துகிறார். அடிப்படையில் நோக்கினால் இவை இரண்டுமே பெரும் சமூகத்துடன் மாறுபட்ட அம்சங்கள்தான். புலம்பெயர்ந்து வாழும் சமூகங்களைப் பொறுத்த வகையில் இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இருப்பினும் இம் மாறுபாடுகளை பெரும் சமூகம் இரு வேறுபட்ட முறையில் கையாள்வதால் அவற்றை வேறுபாடுகள் எதிர் பல்வகைமை (Difference vs Diversity) என்ற அணுகுமுறையின் ஊடாக வகைப்படுத்த பேராசிரியர் எரிக்ஸன் முயல்கிறார்.

புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்!

இங்கு வேறுபாடுகள் (differences) என்பது வாழும் நாட்டின் பெரும் சமூகங்களின் விழுமியங்களுக்கும் (norms) பெறுமானங்களுக்கு (Values) முரணான வகையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கொண்டிருக்கும், கடைப்பிடிக்கும் நடைமுறைகள் பழக்கவழக்கங்களைக் குறித்து நிற்கும். தமது சமூகங்களின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவை எனப் பெரும் சமூகம் கருதக்கூடிய விடயங்களும் வேறுபாடுகளாக நோக்கப்படுகின்றன. சமூகப் பிரச்சினைகளாக உருவெடுக்கக்கூடிய விடயங்களாக பெரும் சமூகம்  கருதக்கூடிய அம்சங்களும் இந்த வேறுபாடுகள் என்ற வகைக்குள் வருவன. கட்டாயக் கல்யாணங்கள் இந்த எதிர்மறை வகையினுள் அடங்குவதால் இவை வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. சில சமூகங்கள் மத்தியில் காணப்படும் பண்பாட்டுப் பழக்கவழக்கமான female genital mutilation அல்லது female circumcision என அழைக்கப்படும் பெண்களின் உள்ளுறுப்புகளைச் சிதைக்கும் அல்லது அகற்றும் நடைமுறையும் சமூக பிரச்சினையாக, வேறுபாடாக நோக்கப்படுகிறது.

பெரும் சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் பெறுமானங்களுக்கு முரணாக அமையாத பல்வேறு வெளிப்பாடுகளும் பழக்க வழக்கங்களும், அழகியல் அம்சங்கள் சார்ந்தவையும் கூடுதலாக பல்வகைமையாகப் (diversity) பெரும் சமூகத்தால் பார்க்கப்படுகின்றன. இதனால் இவை வரவேற்கப்படுகின்றன. குறைந்த பட்சம் எதிர்ப்புக்குள்ளாவதில்லை. நாம் மேற்குறிப்பிட்ட இந்திய உபகண்டத்தின் இசை, நடனம், உணவு வகைகள் போன்றவை இப் பல்வகைமை என்ற வகையினுள் அடங்குபவை. இந்த அவதானிப்பை பதிவு செய்யும் பேராசிரியர் எரிக்ஸன் நோர்வேயினை உதாரணமாகக் கொண்டு கூறுகையில், பெரும் சமூகத்தின் விழுமியங்களும் பெறுமானங்களும் தாராளவாத ஜனநாயகத்தின் பாற்பட்டதாகவே தற்போது அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார். இது ஏனைய மேற்குலகப் பெரும் சமூகங்களுக்கும் பொருந்தும்.

இதேவேளை பெரும் சமூகம் தமது சமூகத்துக்கு அந்நியமான விடயங்களில் கொண்டிருக்கும் moral panic எனப்படும் ஒரு வகையான அச்ச உணர்வும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைமுறை தொடர்பாக எழுப்பும் அச்சங்களுக்கு காரணமாக இருக்கிறது என்ற கருத்தும் புறந்தள்ள முடியாதது.

புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் இவர்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் எவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் பெரும் சமூகங்கள் ஏற்றுக் கொள்கின்றன? அல்லது நிராகரிக்கின்றன? இவை குறித்த கவனத்தைப் புலம்பெயர் தமிழ் மக்கள் கொண்டிருத்தல் பயன் தரக்கூடியது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=232cdf73-e72d-4864-92a8-d5f08fa9b5be

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.