Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது

முத்துக்குமார்

 

அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது
 

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இனச்சுத்திகரிப்புப் பிரச்சாரம் அவுஸ்ரேலியாவரை தாக்கம் செலுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் கூட்டமொன்றில் அவரை பேசவிடாது தடுத்திருக்கின்றனர். ஜனநாயக ரீதியாக இளைஞர்களின் செயல்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களிடமிருந்த தேசிய உணர்வை குறைத்து மதிப்பிடமுடியாது. வெறுமனே சுமந்திரனின் கருத்துக்கெதிரான செயல்கள் என்பதாக அல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள் பற்றிய ஒட்டுமொத்த அதிருப்தியின் விளைவு என்றே அதனைக் கூறவேண்டும்.

எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இணக்க அரசியலுக்குச் சென்றமை, உள்ளக விசாரணைக்கு ஆதரவு கொடுத்தமை, அரசியல் கைதிகள் விடயத்தில் போதியளவு அக்கறை எடுக்காமை, தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ் இறக்குகின்ற நடவடிக்கைகளில் இறக்குகின்றமை, முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் என்பன தொடர்பாக பாரிய அதிருப்தி தமிழ்மக்களின் ஒரு பிரிவினரிடம் உண்டு. தாயகத்தில் ஜனநாயகரீதியாகக்கூட இந்த அநீதிகளைத் தெரிவிக்கக்கூடிய போதிய களங்கள் இல்லை. ஒப்பீட்டு ரீதியில் களங்களைக்கொண்டிருப்பது புலம்பெயர்நாடுகள் தான்.

சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்ற விடயத்தில் மிகப்பெரும் செலவுகளுடன் கடினமாக உழைத்தவர்கள் புலம்பெயர் மக்களே. அந்தக் கோரிக்கை நீர்த்துப்போவதற்கு கூட்டமைப்பினர் காரணமாக இருக்கின்றனர் என்கின்ற கோபமும் புலம்பெயர் இளைஞர்களிடம் இருந்திருக்கலாம். இங்கு உணர்ச்சி அரசியல் அறிவு அரசியலினால் மாற்றீடு செய்யப்படல் வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனால் உணர்ச்சி அரசியலிலுள்ள நேர்மைத்தன்மையை ஒருபோதும் ஒதுக்கிவிடமுடியாது.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியமை மிகப்பெரிய தவறு, கண்டிக்கத்தக்கது என சுமந்திரன் கூறியிருந்தால் இது மிகப்பெரிய விடயமாக வந்திருக்காது. இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தை பயன்படுத்தியதும் அதுவும் இந்தக் காலகட்டத்தில் வெளிப்படுத்தியதும் தான் அவருடைய நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடைபெற இருக்கின்ற சூழலில் சுமந்திரனின் இக்கருத்து போர்க்குற்றச் செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவுவதாக இருக்கும் என்பது பலரது அபிப்பிராயம்.

இதுவரை காலமும் முஸ்லிம் அமைப்புகள் இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தை பெரியளவிற்கு பயன்படுத்தவில்லை. சுமந்திரனின் கருத்துக்கு பிறகு அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இப்பதத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் கண்டியில் நடைபெற்ற தனது பேராளர் மாநாட்டில் இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தினை பயன்படுத்தியதுமல்லாமல், போர்க்குற்ற விசாரணை 1985 இலிருந்து 2014 வரையான காலத்தை ஒட்டியதாக இருக்கவேண்டும் என தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியுள்ளது.

அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது

இனச்சுத்திகரிப்பு என்பது ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாக அகற்றும் நோக்கத்தைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் புலிகள் அப்போதைய தமது இராணுவத் தேவைக்காக தற்காலிகமாக அகற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தார்களே தவிர நிரந்தரமாக அகற்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அது தவிர பகிரங்கமாக அதனைத் தவறு என்றும் ஏற்றிருந்தனர். சமாதானகாலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் ஒப்பந்தமும் செய்தனர். மீள்குடியேற்றத்திற்கும் இணங்கியிருந்தனர். இத்தனைக்கு பின்னரும் இதனை எழுப்பவேண்டுமா என்ற நியாயமான கேள்வி எழுகின்றது. இது எந்த வகையில் தமிழ், முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு உதவக்கூடியதாக இருக்கும்?

முஸ்லிம்கள் வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்பு எனக் கூறும் சுமந்திரன் முள்ளிவாய்க்கால் படுகொலையையோ, முல்லைத்தீவு தெற்குப்பிரதேசத்தில் தமிழ்மக்களை வெளியேற்றிவிட்டு சிங்களமக்கள் ஆக்கிரமித்து இருப்பதையோ, திட்மிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க்கிராமங்கள் பலவற்றிலிருந்து முஸ்லிம்களினால் தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டதையோ, கிழக்குப் படுகொலைகளில் முஸ்லிம் தரப்பிற்கு இருந்த பங்குகளையோ இனச்சுத்திகரிப்பு எனக் கூறுவதற்கு தயாராக இருக்கவில்லை. இனச்சுத்திகரிப்பு என்பது வெறுமனவே ஆட்களை அகற்றுவதையோ, கொலை செய்யப்படுவதையோ மட்டும் கொண்டிருக்கவில்லை. எதிர்கால வாழ்வாதாரத்திற்கு தேவையான நிலங்களை ஆக்கிரமிப்பது கூட ஒரு இனச்சுத்திகரிப்புத்தான். இந்த வகையில் அல்லைத்திட்டம் தொடக்கம் நாமல் ராஜபக்சவினால் குடியேற்றப்பட்ட கொக்கச்சான் குளக்குடியேற்றம் வரை மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் இனச்சுத்திகரிப்புத்தான். அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது தமிழ்க்குறிச்சி, திராய்கேணி, நிந்தாவூர், மீனோடைக்கட்டு, அட்டாளைச்சேனை, கல்முனை, சம்மாந்துறை, பாலமுனை, அட்டப்பள்ளம் என்பவற்றிலிருந்து தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதுவும் இனச்சுத்திகரிப்புதான். சுமந்திரன் இந்தச் சுத்திகரிப்புகள் பற்றி வாயே திறக்கவில்லை.

தமிழ் - முஸ்லிம் முரண்பாடு என்பது இரு தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடே. இதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்கக்கூடாது. ஒரு தாயகத்தில் வாழும் இருதேசிய இனங்கள் பரஸ்பரம் ஒரு தரப்பின் நலன்களில் இன்னோர் தரப்பு அக்கறையாக இருக்கவேண்டும். முரண்பாடுகளை இரு சமத்துவமான தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளாக கருதி தீர்ப்பதற்கு முயற்சிக்கவேண்டும்.

அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது

புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை ஒரு நிகழ்வு மட்டுமே. இதற்கான அரசியல் காரணங்கள் பல. நீண்ட வரலாறு கொண்டவை. தமிழ்மக்களினால் வட – கிழக்கைப் பாதுகாப்பதற்கென நீண்ட போராட்டம் நடாத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு வெளியில்தான் முஸ்லிம்கள் நின்றனர். ஒருசில தனிநபர்கள் தமிழரசுக்கட்சியிலும், பின்னர் விடுதலை இயக்கங்களிலும் இணைந்துகொண்டார்களே தவிர, முஸ்லிம்கள் ஒரு சமூகமாக இணையவில்லை. இது விடயத்தில் தமிழரசுக்கட்சி காலத்திலிருந்து காட்டிய நேசக்கரங்களையும் முஸ்லிம் மக்கள் முறையாகப் பற்றிக்கொள்ளவில்லை.

இத்தனைக்கும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் மக்கள் கூட்டமாக அரசியல் தீர்வில் இணைக்க தமிழர்தரப்பு என்றுமே தயாராக இருந்தது. தந்தை செல்வா தமிழரசுக்கட்சியின் உருவாக்கத்தின்போதே முஸ்லிம்கள் ஒரு மக்கள் கூட்டமாக தமிழரசில் இணைந்து கொள்ளலாம், விரும்பாவிட்டால் பிரிந்தும் செல்லலாம் எனக் கூறியிருந்தார். தமிழரசுக் கட்சியின் திருமலை மாநாட்டில் தமிழரசு என்ற தீர்மானம் முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் வேண்டுதலின் பேரில் தமிழர் அரசும், முஸ்லிம் அரசும் இணைந்த தமிழரசு என மாற்றப்பட்டது.

முஸ்லிம் தரப்பு இந்த நல்லெண்ண சமிக்ஞைகளை பற்றிப்பிடிக்கவில்லை. மாறாக தமிழ்மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தது. பேரினவாதிகள் மேற்கொண்ட சூழ்ச்சிவலையில் தானாக விழுந்தது. போராட்டத்தை காட்டிக்கொடுத்ததினால் உச்ச சலுகைகளை அனுபவித்தது. தமிழரும் சிங்களவரும் மோதினால் நாங்கள் நீந்துவோம். அவர்கள் ஐக்கியப்பட்டால் நாங்கள் மூழ்குவோம் என்பதே அவர்களது அரசியலாக இருந்தது. முஸ்லிம் ஆய்வாளர் ஒருவர் இதனை சுத்த வியாபார அரசியல் என வர்ணித்தார். போரில் அரசாங்கம் வெற்றியடைந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவிப்பு பதாகைகள் கொழும்பு வீதிகளில் ஏற்றப்பட்டன. அமெரிக்காவினால் ஜெனிவாத் தீர்மானம் சர்வதேச விசாரணை தொடர்பாக நிறைவேற்றப்பட்டபோது அதற்கு எதிராக முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முஸ்லிம் தேசியவாதம், பேரினவாத ஆக்கிரமிப்புக்கெதிராக கட்டியெழுப்பப்படவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே கட்டியெழுப்பப்பட்டது.

ஆனால்  மறுபக்கத்தில் தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வு முயற்சிகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில்தான் முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு தேவை என்பார்கள். தமிழ்மக்களுக்காக விசாரணை நடாத்தப்படுகின்றது என்றால் முஸ்லிம்களுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பார்கள். இது முழுக்க முழுக்க குருவிச்சை அரசியல். வரலாற்று சிறப்புடைய ஒரு தேசிய இனத்திற்கு இது அழகானதல்ல. இன்னொருவர் உழைப்பில் குளிர்காய நினைப்பது ஒருபோதும் அரசியல் அறமாக மாட்டாது.

முஸ்லிம் தரப்பு, தமிழ்த்தரப்புடன் ஐக்கியப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்பை முழுமையாகவே தடுத்திருக்கமுடியும். சிறந்த அரசியல் தீர்வையும் பெற்றிருக்கமுடியும். இன்று கிழக்கு மாகாணம் தமிழ்மக்களின் கைகளிலும் இல்லை. முஸ்லிம் மக்களின் கைகளிலும் இல்லை.

முஸ்லிம் தரப்பு முழு இலங்கைக்கும் பொதுவான முஸ்லிம் அரசியலை முன்னெடுக்க விரும்புகின்றது. தமிழ் அரசியலுடன் இணைந்துகொள்ளாமைக்கு இதுவே பிரதான காரணம். வடகிழக்கிற்கென தனியான முஸ்லிம் அரசியலையும் தென் இலங்கைக்கென தனியான முஸ்லிம் அரசியலையும் முன்னெடுத்திருந்தால் தமிழ்த்தேசியத்துடன் நல்லதோர் பிணைப்பை முஸ்லிம் தேசியத்தினால் மேற்கொண்டிருக்க முடியும். தமிழ்த்தேசியம் மலையகத் தேசியத்தை ஆக்கிரமிக்க ஒரு போதும் முற்படவில்லை.

தமிழ் - முஸ்லிம் முரண்பாடுகளைப் பொறுத்தவரை இருபக்கமும் தவறுகள் உள்ளன. அளவு ரீதியில் தவறுகள் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நூறாகவும் பூச்சியமாகவும் இல்லை. எதிர்காலத்திலாவது இருதரப்பும் முழுமையான சுய விமர்சனத்திற்கு தயாராக வேண்டும். இந்தச் சுயவிமர்சனம் முதலில் இருதரப்பினரதும் புத்திஜீவிகள் மட்டத்தில் நடக்கட்டும். அதன் பின்னர் அரசியல்வாதிகள் மட்டத்தில் நடாத்துவது பற்றி யோசிக்கலாம். அதுவரை இருதரப்பு அரசியல்வாதிகளும் குட்டையைக் குழப்பாதிருப்பது இரு சமூகத்திற்கும் நல்லது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=2b92e218-48be-4d86-a55d-67b2cf5aa6fb

  • 2 weeks later...
On 20.11.2015, 22:01:37, கிருபன் said:

 

தமிழ் - முஸ்லிம் முரண்பாடுகளைப் பொறுத்தவரை இருபக்கமும் தவறுகள் உள்ளன. அளவு ரீதியில் தவறுகள் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நூறாகவும் பூச்சியமாகவும் இல்லை. எதிர்காலத்திலாவது இருதரப்பும் முழுமையான சுய விமர்சனத்திற்கு தயாராக வேண்டும். இந்தச் சுயவிமர்சனம் முதலில் இருதரப்பினரதும் புத்திஜீவிகள் மட்டத்தில் நடக்கட்டும். அதன் பின்னர் அரசியல்வாதிகள் மட்டத்தில் நடாத்துவது பற்றி யோசிக்கலாம். அதுவரை இருதரப்பு அரசியல்வாதிகளும் குட்டையைக் குழப்பாதிருப்பது இரு சமூகத்திற்கும் நல்லது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=2b92e218-48be-4d86-a55d-67b2cf5aa6fb

இணைப்பிற்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.