Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோகினூர் வைரத்தின் கொடுமைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் -1 ( மறு பதிப்பு)

 
மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் கோகினூர் வைரம் மட்டும்தான்.
 
kohinoor-queen+elizabeth.jpg

கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது. அதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்கள் ஏகபோகச் சொந்தம்  கொண்டாடுகின்றன. எங்க பாட்டன் சொத்து எங்க பாட்டிச்  சொத்து என்று சிலர் கட்சி கட்டுகிறார்கள். அருமையான சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும், டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றன.
 
kohinoor-Displayed+at+London+on1849.jpg

மகா அலெக்ஸாண்டர், கஜ்னி முகமது, ஜெங்கிஸ் கான், நாடிர் ஷா, பாபர் போன்ற மாபெரும் மண்ணாசைப் பிரியர்கள் எல்லாம் இந்தியா மீது படையெடுத்ததற்கு மூலகாரணம் இந்தக் கோகினூர் வைரம்தான். அழுத்தமாகச் சொன்னால், கொலை வாசம் வீசிய கோகினூர் வைரம். சும்மா அள்ளி விடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைத் தவிர வேறொன்றும்தெரியாது. முதலில் படியுங்கள். அப்புறம்  சொல்லுங்கள்.

கோகினூர் வைரம் யாருக்குச் சொந்தம் ஆகிறதோ அவர் உலகத்தை ஆள்வார் எனும் அய்தீகம் இன்றும் புரையோடிக் கிடக்கிறது. என்ன அப்பேர்ப்பட்ட பெரிய அய்தீகம். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். இந்த வைரம் கிடைத்த பிறகுதானே ஆங்கிலேயர்கள் முக்கால்வாசி உலகத்தைத் தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொண்டார்கள்.

 

இதற்கு ஒரு சாபக்கேடும் இருப்பதாகக் கதை சொல்கிறார்கள். இதை வைத்திருக்கும் ஆண்கள் மௌனமாக இறந்து போவார்கள் அல்லது கண் குருடாகிப் போவார்கள். அவ்வளவுதான்!   பெண்களாக இருந்தால் அவர்களுடைய உறவுகள் சிதைந்தும் போகலாம். இதுதான் அந்தச் சாபம். இணையத்தில் இந்த மாதிரி கதை சொல்ல ஆள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அப்புறம் என்ன! அதையும் கேட்டுப் பார்ப்போம்.

இதற்கு இங்கிலாந்து எலிசபெத் மகாராணியாரின் குடும்பத்தைச் சொல்லலாம். இப்போது கோகினூர் வைரம் அவர் தலையில்தானே இருக்கிறது. இளவரசி டயானா இறந்து போனார். இளவரசர் சார்ல்ஸ்-கமிலா காதல் விவகாரம். அவருடைய அக்காவின் விவாகரத்து. எலிசபெத் அரசியாரின் பெரியப்பா ஒர் அமெரிக்க நடிகையை மணந்து இங்கிலாந்து அரச முடியைத் தூக்கி வீசியது. விக்டோரியா மகாராணியாரின் காமக் களிபோகங்கள் வெளி யுலகத்திற்குத் தெரிய வந்தது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
queen_victoria.jpg

தெரிந்தும் ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி. ஆசை யாரை விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் விக்டோரியா மகாராணியார் சூட்டிக் கொண்ட கிரீடத்தின் தலையாய வைரம், இந்தக் கோகினூர் வைரம். வழிவழியாக வருகிறது. நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது.

கோகினூர் வைரம் உலகப் புகழ் பெற்ற உன்னதமான வைரம். இந்த வைரத்திற்காகப் பல பயங்கரமான போர்கள்நடந்துள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. பல கோட்டைகள் இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் வாயில்லா ஜ“வன்கள் அழிந்துள்ளன. பல்லாயிரம் அந்தப்புர பெண்கள், போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்க்கும் தீவனங்களாகத் தூக்கி வீசி இறைக்கப் பட்டனர். கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் தூக்கிப் பசியால் வாடித் திரியும் தெருநாய்களுக்குப் போட்ட கதைதான் அந்தப்புரத்து அழகிகளின் கதையும்! எல்லாம் கோகினூர் வைரத்தை அடைய வேண்டும் எனும் ஆதங்கத்தில் வந்தவை.

இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தப் போர் அட்டூழியங்களுக்கும் கோகினூர் வைரத்திற்கும் நேரடியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. மண்ணாசைப் பிடித்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு பாவம் கோகினூர் வைரம் என்ன செய்யும். அதைத்தான் நானும் கேட்கிறேன்.  பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

கோகினூர் வைரத்தின் அருமை பெருமைகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால், அதன் வேதனையான பின்னணியைப் பற்றி கண்டிப்பாகக் கேள்விப் பட்டிருக்க முடியாது.பல கோடி ஆண்டுகள் பூமிக்குள்ளே புதைந்து கிடந்த கலைச் செல்வம் கோகினூர் வைரம். ஏறக்குறைய 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த கோல்கொன்டா நிலப்பகுதியில் கிடைக்கப் பெற்றது. வெகு காலமாக அதற்கு முகவரி இல்லை. அப்படிப்பட்ட ஒரு வைரம் இருப்பதாக யாருக்கும் தெரியாது. இருந்தாலும் பாருங்கள் வெளிநாட்டவர்   தெரிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காலத்து ஒற்றர்களைச் சும்மா சொல்லக்கூடாது.
 
koh-i-noor-diamond.jpg

கோல்கொன்டா என்ற பெயர் ஞாபகத்திற்கு வரலாம். 1950-60களில் ரேடியோ மலாயாவில் வாரத்திற்கு ஒருமுறை நேயர் விருப்பம் வரும். அதைக் கேட்க தோட்டமே திரண்டு நிற்கும். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அது ஒரு கனாக்காலம். அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும். அந்தக் கோல்கொன்டா தோட்டத்திற்கு இந்தியாவின் கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் பெயர் அப்போது வைக்கப் பெற்றது. நான் பிறந்து வளர்ந்த டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும்.

இப்போது அந்தக் கோல்கொன்டா தோட்டம் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அந்த அளவுக்கு பல தோட்டங்கள் அத்திம்மேடுகளாகி விட்டன. கதைக்கு வருகிறேன்.

ஒரு காலத்தில் கோல்கொன்டா சாம்ராஜ்யம் பேர் போனது. ஹைதராபாத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அந்தச் சாம்ராஜ்யத்தின் கால வடுக்கள் இன்னும் மகிமை பாடுகின்றன. அடித்து நொறுக்கப்பட்ட கோட்டைகள், கலைத்திரை கிழிக்கப்பட்ட கல்தூண்கள். கற்புத்திரை கசக்கப்பட்ட கலைச் சிற்பங்கள். காம்போதி ராகம் பாடும் கவின்மிகு கோயில்கள். அரிச்சுவடி இல்லாத அரச வளாகங்கள். பார்க்கும் எல்லாமே சிதைந்து சிதிலடைந்து போய் கிடக்கின்றன.வந்து போன காட்டு மிராண்டிகள் யாரும் எதையும் விட்டு வைக்கவில்லை. கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டனர். கிடைக்காதவர்கள் உருட்டிப் பெயர்த்துப் போட்டனர். நானும் என் மனைவி ருக்குமணியும் இந்தியாவில் பார்த்த வரலாற்றுக் கலைபாடுகளில் மனதில் நிற்பவை   செஞ்சிக் கோட்டையும் இந்தக் கோல்கொன்டாவும்தான். ஆக, இந்தியாவிற்குப் போனால் போய்ப் பாருங்கள்.
 
golconda-fort-265_m.jpg

கோல்கொன்டா சாம்ராஜ்யம் நல்ல நிலையில் போய்க் கொண்டிருந்த போது, மேலே டில்லியில் ஓர் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த துக்ளக் மன்னராட்சியில் போர் வெறி தலைதூக்கியது. இவை எல்லாம் 14ஆம் நூற்றாண்டில் நடந்தது.அந்தக் காலத்தில் அந்தப்புரங்களிலும் ஆஸ்தானங்களிலும்  ஒரே புலம்பல் மயம். என்ன தெரியுமா. ஓர் அரசன் இருந்தால் அந்த அரசனுக்கு போர் ஆசை எந்த நேரத்தில் வந்து தொலைக்கும் என்று யாருக்குமே தெரியாது. 

பக்கத்தில் படுத்திருக்கும் மகாராணிக்கே தெரியாதாம். படுத்து இருக்கும் அரசன் எழுந்து உட்கார்ந்த அடுத்த நொடியே போர்ப்பாசறைச் சாற்றி சண்டைக்கு கிளம்பி விடுவானாம். அப்படிப்பட்ட நிலைமை இருந்தது.

காற்று வேக கண வேகத்தில் துக்ளக் படை கீழே இறங்கி வந்தது. வாராங்கல் எனும் தலைநகரத்தைத் தாக்கியது. நார் நாராகக் கிழித்துப் போட்டது. கோல்கொன்டாவின் செல்வம் சிறப்பு எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது. அந்தச் சூரையாடலில் மாட்டிக் கொண்டதுதான் நம்முடைய இந்தக் கோகினூர் வைரம். டில்லிக்குப் போன  வைரம் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு துக்ளக் மன்னர்களின் அந்தப்புரங்களில் அலங்கார மாகக் காற்று வாங்கியது. அந்தச் சகவாசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அப்போது அதன் எடை 793 காரட். 

இது இப்படியிருக்க மங்கோலிய பாரம்பரியத்தில் இருந்து வந்த பாபர், 1526ல் இந்தியாவின் மீது படை எடுத்தார். இந்த பாபர்தான் இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். பாபரின் பேரன்தான் புகழ்பெற்ற அக்பர். பாபர் டில்லியைத் தாக்கினார். அவருடைய மகன் ஹுமாயுன் ஆக்ராவைத் தாக்கினார்.
 
kohinoor-babur.jpg

அப்போது டில்லியில் முகமது பின் துக்ளக் ஆட்சி நடைபெற்று வந்தது. அதற்கு சுல்தான் இப்ராஹ’ம் லோடி என்பவர் மன்னர். அவர்தான் துக்ளக் ஆட்சியின் கடைசி சுல்தான். அவருக்குத் துணையாக விக்கிரமாதித்தியா என்பவர் இருந்தார். பயங்கரமான போர் பானிபட் என்ற இடத்தில் நடந்தது. இந்தப் போரில் மன்னர் இப்ராஹ’ம் லோடியும், தளபதி விக்கிரமாதித்தியாவும் இறந்து போனார்கள். சரி! கோகினூர் வைரம் என்ன ஆனது. விஷயத்திற்கு வருவோம்.
(தொடரும்)

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் - 2 (மறு பதிப்பு)

 
humayun_ve_babur.jpg

போருக்குப் பின் ஹுமாயுன் ஆக்ரா நகரத்தையே வேட்டை ஆடத் தொடங்கினான். முதுகெலும்பையே முறித்தெடுக்கும் வேட்டை. கடைசியில் மன்னர் லோடியின் தாயாரைக் கண்டுபிடித்தான். ஒரு வீட்டில் மறைந்து இருந்தார். வயதான பெண். ஹுமாயுன் ஒன்றும் செய்யவில்லை. எதிரியின் தாயாராகப் பார்க்கவில்லை. ஒரு வயதான பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தான்.
 
babur.jpg

இருந்தாலும் ஹுமாயுனைச் சாந்தப்படுத்த ஒரு பெட்டி நிறைய தங்க ஆபரணங்களையும் நவரத்தின கற்களையும் சேர்த்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அந்தப் பெட்டிக்குள்தான் கோல்கொன்டாவில் இருந்து டில்லிக்கு வந்த கோகினூர் வைரம் இருந்தது. 
 
kohinoor+diamond.jpg

அவற்றை எடுத்துக் கொண்டு போய் தன் தந்தை பாபரிடம் கொடுத்தான் ஹுமாயுன். அதனுள் இருந்த கோகினூர் வைரத்தைப் பார்த்து எல்லோருமே மலைத்துப் போனார்கள். அப்பேர்ப்பட்ட ஒளி, அப்பேர்ப்பட்ட பிரகாசம், அப்பேர்ப்பட்ட வசீகரம். கோகினூர் வைரம் என்றால் சும்மாவா!
 
கோகினூர் வைரம் காலம் காலமாகப் பட்டைத் தீட்டப்படாமல் இருந்தது. வைரத்தை அழகு படுத்த வேண்டும் என்று மன்னர் பாபர் ஆசைப்பட்டார். ஆக, போர்கியோ எனும் பொற்கொல்லனைக் கூப்பிட்டு பட்டைத் தீட்டித் தருமாறு கேட்டார். பொற்கொல்லனும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போனான். பாபர் கொடுக்கும் போது அந்த வைரத்தின் எடை 793 காரட். உலகத்திலேயே அப்போதைக்கு பட்டை தீட்டப்படாத பெரிய வைரம் அதுதான். 
kohinoor+diamond.jpg

பொற்கொல்லன் என்ன செய்தான் ஏது செய்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பட்டைத் தீட்டிக் கொண்டு வந்து மன்னனிடம் மறுபடியும் கொடுக்கும் போது அதன் எடை 186 காரட்டாகக் குறைந்து போயிருந்தது. 607 காரட் அபேஸ். கடுப்பாகிப் போனார் பாபர். 
kohinoor-Baburs+tomb.jpg

அப்புறம் என்ன. அவன் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார். அவனுடைய சொந்த பந்தங்களின் நில புலன்களை பறிமுதல் செய்தார். ஆத்திரம் தீரவில்லை. பொற்கொல்லனைத் தூக்கிச் சிறையில் போட்டார். நல்ல வேளை அவனுடைய உயிர் தப்பியது.
sher+khan.jpg

1530ல் பாபர் இறந்து போனார். ஹுமாயுன் பதவி ஏற்ற பத்து ஆண்டுகளில், எங்கிருந்தோ வந்த Sher Khan Sur எனும் பழைய எதிரி மொகலாயர்கள் மீது படை எடுத்தான். அதில் ஹுமாயுனுக்குப் படுதோல்வி. ஹுமாயுன் தன் மனைவி பிள்ளைகளுடன் கோகினூர் வைரத்தையும் எடுத்துக் கொண்டு ஈரானுக்குத் தப்பி ஓடினார். நாடோடியானர் ஹுமாயுன்.சொந்தச் சகோதரர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. இடையே அவருடைய வைரத்தை அபகரித்துக் கொள்ள பல திட்டங்கள் போடப்பட்டன. பல சூழ்ச்சிகள். பணக்காரர்கள் பலர் பலவிதமாகக் கதை கட்டி  கோகினூர் வைரத்தை விலை பேசினர். அதிலிருந்து எல்லாம் தப்பித்துக் கடைசியில் அந்த வைரம் ஈரான் போய்ச் சேர்ந்தது.
iran+palace.jpg

அங்கே அந்த வைரத்தை அடமானமாக வைத்து தன் நாட்டை மீட்டுத் தருமாறு ஈரானிய மன்னன் Shah Tamasp ஐக் கேட்டுக் கொண்டார். சம்மதித்த ஈரான் மன்னன் 12000 பாரகத் துருப்புகளை ஹுமாயுனுக்குக் கொடுத்து உதவினான்.  பயங்கரமான போருக்குப் பின்னர்   மொகலாய சாம்ராஜ்யம் மறுபடியும் கிடைத்தது. ஆனால், கோகினூர் வைரம் மட்டும் கிடைக்கவில்லை.  ஈரானிலேயே அடைக்கலம் ஆனது.
golconda-fort-265_m.jpg

அதன் பின்னர், கோகினூர் வைரம் அங்கே பல தலைமுறைகளுக்கு கைமாறியது. ஒரு நூறாண்டுகள் காலத்திற்கு கோகினூர் வைரம் ஈரான் அரண்மனைகளில் வலம் வந்தது. பின்னர், கோல்கொன்டா அரண்மனைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. எப்படி! இங்கேதான் சுவராசியமான கதையே வருகிறது. அந்தக் காலத்தில் கோல்கொன்டா சாம்ராஜ்யம் மிகமிகப் புகழ்பெற்றது. அதன் கீர்த்திகள் உலகம் முழுமையும் பரவி நின்றன. கோல்கொன்டா மன்னருடன் நட்பு வைத்துக் கொள்ள ஈரான் மன்னர் விரும்பினார். அந்த நட்பின் அடையாளமாக கோகினூர் வைரம் கோல்கொன்டா மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. 
mirjumla.jpg

இந்தக் கோகினூர் வைரத்தின் மர்ம ஜாலங்களைப் பாருங்கள். எங்கிருந்து போனதோ அங்கேயே மறுபடியும் வருகிறது. கோல்கொன்டா அரண்மனையில் கோகினூர் வைரம் சில வருடங்கள்தான் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில் கோல்கொன்டா சுல்தானுக்கு மிர் ஜும்லா என்பவர் நண்பராக இருந்தார். மிர் ஜும்லா ஒரு பாரசீக வணிகர். அவருக்கு எப்படியாவது கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் மன்னராக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கோல்கொன்டாவின் இரகசியம் எல்லாம் மிர் ஜும்லாக்கு அத்துப்படி. ஆக, அப்போது Deccan Plataeu எனப்படும் தக்கணபூமியின் ஆளுநராக இருந்த ஒளரங்கசிப்பின் மண்டையைக் கழுவினார் மிர் ஜும்லா.
aurangzeb_reading_the_quran.jpg

மிர் ஜும்லா உசுப்பிய உசுப்பில் சிவனே என்று இருந்த ஒளரங்கசிப் வெறி பிடித்துப் போய் கோல்கொன்டாவையே அழித்து ஒழித்துவிட்டான். கோல்கொன்டா கஜானாவைக் காலி செய்யும் போது இந்தக் கோகினூர் வைரமும் சிக்கியது. அந்த வைரத்தை அப்படியே கொண்டு போய் டில்லியில் இருந்த தன் சகோதரி ஜகநாராவிடம் ஒளரங்கசிப் கொடுத்திருக்கிறான். 
 
jahanara.jpg

அப்போது மொகலாய சாம்ராஜ்யத்திற்கு ஷாஜகான் மன்னராக இருந்தார். ஜகநாரா அதை தன் தந்தை ஷாஜகானிடம் கொடுக்க... கோகினூர் வைரம் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தது. பார்த்தீர்களா. இந்த வைரம் சாமான்யப்பட்ட வைரமா! இனிமேல்தான் கடல் கடந்து போன கதையே வரப் போகிறது. அமைதியாகப் படியுங்கள். (தொடரும்)

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் - பகுதி:3

 
ஒரு நாள் ஒளரங்கசிப்பிற்கு வெறி பிடித்து போனது. என்ன வெறி? அரச வெறி அதிகார வெறி என்பார்களே அந்த வெறிதான். தன் சகோதரர்களைச்  சகட்டு மேனிக்கு வெட்டிக் கொன்று போட்டான். ஒளரங்கசிப்பின் வெறித்தனத்தைப் பார்த்த ஷாஜகான் பயந்து போய் கோகினூர் வைரத்தையும் மற்ற நவரத்தினங்களையும் ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைத்தார். தக்க சமயத்தில் வந்து மகள் Jahanara Begum Sahib தடுத்து நிறுத்தினார். ஷா ஜகானின் மூத்த மகள்தான் ஜகநாரா.
Kohinoor-Jahanara.jpg
 
ஜகநாரா மட்டும் இல்லை என்றால் கோகினூர் வைரமும் இல்லை. இந்தக் கதையும் இல்லை. தன் மகன் ஒளரங்கசிப்பினால் சிறை வைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டிவிட்டார். தாஜ்மகாலைக் கட்டியதால் மொகலாய கஜானா காலியாகிப் போனது. அத்துடன் ஷாஜகான் தன்னுடைய நாட்டு நிர்வாகத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை.  சதா மனைவி மும்தாஜின் நினைவாகவே வாழ்ந்தார். அதற்கு முன்னதாகவே ஷாஜகான் தன்னுடைய மயில் சிம்மாசனத்தில் கோகினூர் வைரத்தைப் பதித்து வைத்திருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
shah_jahan_and_mumtaz_mahal_mf56.jpg
 
மும்தாஜ் இறந்து போன பிறகு, பரந்து விரிந்து கிடந்த மொகலாய சாம்ராஜ்யம், சாளரத்து திரைச் சீலையைப் போல ஆடியது. அப்போது ஷா ஜகானும் நோய்வாய்ப் பட்டிருந்தார். இப்படியே விட்டால் நாடு எதிரியின் கைக்குப் போய்விடும் என்று அச்ச உணர்வு ஒளரங்கசிப்பிற்கு ஏற்பட்டது. இயற்கையான அச்ச உணர்வு.
 
kohinoor-mumtaz-mahal.jpg

ஷா ஜகான் இறந்துவிட்டதாகப் புரளி. உண்மையில் அவர் இறக்கவில்லை. நாட்டை தந்தையாரிடம் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ள ஒளரங்கசிப் தன் சகோதரர்களின் உதவியை நாடினார். அவர்கள் மறுத்தனர். கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அவர்களுக்குள்ளே பதவிப் போராட்டம்.
Murad_Baksh_younger_brother_of_Aurangzeb

தனித்தனியாக படைகளைத் திரட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர். ஆக, வேறு வழியில்லாமல் மூத்த அண்ணன் Dara Shukoh வையும், கடைசி தம்பி Murad Baksh வையும் வெவ்வேறு சம்பவங்களில் கொன்று போட்டார். ஒளரங்கசிப்பின் இரண்டாவது அண்ணன் Shah Shuja மியான்மாருக்கு ஓடிப் போனான். அங்கே Sandathudama எனும் மியன்மார் அரசனுடன் பிரச்னை. அந்தப் பிரச்னையில் ஷா சுஜாவும் அவனுடைய ஆண் ஆட்களும் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் அனைவரும் சிறைக்குள் அடைக்கப்பட்டு பட்டினி போட்டு சாகடிக்கப்பட்டனர்.
dara_shikoh.jpg

ஒளரங்கசிப் தன்னுடைய மூத்த அண்ணன் டாரா சுக்கோவின் தலையை வெட்டி அதை ஷா ஜகானின் பார்வைக்கு அனுப்பினான். அது மட்டுமல்ல. தன் தந்தை ஷாஜகானைப் பிடித்துக் கொண்டு போய் ஆக்ரா சிவப்புக் கோட்டைக்குள் அடைத்து வைத்தான். வைத்தியம் செய்பவர்களிடம் விஷத்தைக் கொடுத்து ஷா ஜகானைக்  கொன்று விடும்படியும் கட்டளை போட்டான். விசுவாசமிக்க வைத்தியர்கள் விஷத்தை ஷா ஜகானுக்குக் கொடுக்காமல் அவர்களே சாப்பிட்டு மடிந்து போனார்கள். இப்படி எல்லாம் அநியாயம் செய்தவன் ஒளரங்கசிப்.
shah+suja.jpg

ஷாஜகான் சிறையின் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொள்வார். கம்பிகளின் ஓர் இடுக்கில் இந்தக் கோகினூர் வைரம் வைக்கப்பட்டது. வைரத்தின் மீது சூரிய ஒளி படும். அந்தப் பிரதிபலிப்பில் தாஜ்மகால் தெரியும். ஆக, தான் கட்டிய தாஜ்மகாலை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் இந்த வைரத்தின் ஒளிப் பிரதிபலிப்பைக் கொண்டு பார்க்க முடிந்திருக்கிறது.கோகினூர் வைரத்தின் வழியாகத் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ஷாஜகான் அழுவாராம். எட்டு ஆண்டுகள் அப்படி அழுது கொண்டே இருந்திருக்கிறார். கடைசியில், அப்படியே இறந்தும் போனார்.
taj-mahal-agra.jpg

ஷா ஜகானின் மூத்த மகள் ஜகநாராவும் அவருடனே எட்டு ஆண்டுகள் இருந்தார். தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஷா ஜகானுக்கு மொத்தம் ஏழு மனைவிகள். அவர்களில் மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மகால். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் இந்த ஜகநாரா, அவுரங்கசிப் எல்லாம்.
ShahJehanPrison.jpg

அவருடைய மூத்த மனைவியின் பெயர் Akbarabadi Mahal ஷா ஜகான் இறக்கும் தருவாயில் தன் மூத்த மனைவியை அழைத்தார். ஜகநாராவைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஷா ஜகானின் உடலுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும் என்று ஜகநாரா விரும்பினார். ஆனால், ஒளரங்கசிப் அதை விரும்பவில்லை. இருந்தாலும் சந்தனக் கட்டையால் செய்யப் பட்ட பெட்டியில் அவருடைய உடல் கிடத்தப்பட்டது. அப்படியே  தாஜ்மகாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே மும்தாஜ் மகாலின் சமாதிக்கு பக்கத்தில் இவருக்கும் சமாதி எழுப்பப்பட்டது. இன்றும் இருக்கிறது.
mumtaz+tomb.jpg

ஷாஜகான் ஆசை ஆசையாகக் கட்டிய அந்த தாஜ்மகாலுக்கு உள்ளே அவர் கடைசிவரை போக முடியாமல் ஆகிப் போனது. அதுவும் ஒரு வேதனையான கதை. அப்பா அம்மா பாவம் சும்மா விடாது என்பார்கள். அது ஒளரங்கசிப்பைப் பொருத்த வரையில் மிகவும் சரி. கடைசி காலத்தில் மிக மிக நோய்வாய்ப்பட்டு செத்துப் போனார் ஒளரங்கசிப்.
Mumtaz-Mahal.jpg

கோகினூர் வைரம் மறுபடியும் பாரசீகத்திற்குப் போன கதை வருகிறது. 1700களில் ஈரான் நாட்டை ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்து வந்தது. அவ்வளவு பலம் பொருந்திய நாடாக அப்போது ஆப்கானிஸ்தான் விளங்கியது. ஒரு காலத்தில் ஈரான், ஈராக், மங்கோலியா, இந்தியாவின் வட பகுதி உட்பட்ட பல நாடுகளை ஆப்கானிஸ்தான் ஆண்டு வந்திருக்கிறது. உங்களால் நம்ப முடிகிறதா! இப்போது பாருங்கள். வேதனையான அரசியல் வாழ்க்கை.
 
ஆப்கானிஸ்தானிய ஆளுநர்கள் ஈரானில் மிருகத்தனமான ஆட்சியை நடத்தினார்கள். கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தார்கள். அதனால் ஈரான் மக்கள் குமுறிப் போனார்கள்.
kohinoor-nadir+shah.jpg

இந்தச் சமயத்தில்தான் நாடிர் ஷா எனும் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வந்தான். இவன்தான் இந்திய மொகலாய சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையே மாற்றியவன். பிரான்சில் Joan of Arc இருந்தாரே. அவரைப் போன்ற கதைதான். நாடிர் ஷாவின் வேலை ஆடுகளைப் பார்த்துக் கொள்வது. மற்ற நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து திருடுவது. கொள்ளை அடிப்பது. அவ்வளவுதான்! காலப் போக்கில் இந்த இடையன் அந்தத் திருட்டுக் கும்பலுக்கே தலைவனான்.
Nadir_Shah.jpg

படிப்படியாக வளர்ச்சி அடைந்து இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் சக்தியை உருவாக்கினான். அடுத்தக் கட்டமாக அந்நிய ஆப்கான்காரர்களை நாட்டை விட்டே விரட்டியடித்தான். 1725ல் ஈரான் நாட்டின் தேசிய வீரனாகப் புகழின் உச்சிக்கே போனான்.
Shah_Tahmasp.jpg

ஈரான் நாடே அவன் பின்னால் கைகட்டி நின்றது. சின்ன வயதில் பெரிய சாதனை. 1736ல் நடந்தது. அப்போதைய ஈரானிய மன்னன் Tamasp என்பவர் சிறந்த போர் வீரராகத் திகழவில்லை. பல போர்களில் தோல்வி கண்டவர். அதனால் அவருடைய மகன் Safavid Shah ஐ அரசனாக்கினான் நாடிர் ஷா.
Safavid+Shah.jpg
 
புதிய அரசன் சவிட் ஷா ஒரு சின்ன பாலகன். அதனால் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இளைஞன் நாடிர் ஷாவை புதிய மன்னனாக்கினார்கள். ஆடு மேய்த்த சிறுவனுக்கு வந்த வாழ்க்கையைப் பாருங்கள்.
 
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் பல முறை ஈரானைத் தாக்கியுள்ளது. அதன்  செல்வங் களைத் தாறுமாறாகச் சூரையாடியுள்ளது. இதற்கு எல்லாம் ஒரு பாடம் சொல்லித் தர வேண்டும். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று இளைஞன் நாடிர் ஷா முடிவு செய்தான். (தொடரும்)

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் - பகுதி4

 
சொல்லி வைத்து ஆறே மாதங்களில் தன் படையைத் திரட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தான். கஜ்னி, காபுல், பெஷவார், லாகூர் போன்ற மொகலாய அரண்கள் அத்தனையும் நாடிர் ஷாவின் கால்களில் வந்து விழுந்தன. உலகமே அதிசயமாய்ப் பார்த்த பாபர், அக்பர், ஷாஜகான், அவுரங்கசிப் போன்றவர்கள் கட்டிக்காத்த டில்லி சாம்ராஜ்யம் சுக்கு நூறாக    நொறுங்கிப் போனது.
nadir+shah1.jpg

1739 மார்ச் மாதம் 9ஆம் தேதி மொகலாய சாம்ராஜ்யம் மொத்தமாகச் சரண் அடைந்தது. அப்போது நாசிர் முகமது என்பவர் மொகலாய அரசராக இருந்தார். அவரிடம் 25 இலட்சம் நஷ்டயீடு கேட்டான் நாடிர் ஷா.

கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தால்தானே கொடுப்பதற்கு. கஜானா காலி. என்ன  செய்வது. பல வருடங்களுக்கு முன்னாலேயே கோகினூர் வைரத்தைப் பற்றி  கேள்விபட்ட நாடிர் ஷா தனக்கு அந்த வைரம்தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றான்.
 
chhatrapati_shivaj_galleryfull.jpg

தன்னிடம் இல்லை என்று அரசன் நாசிர் முகமது பொய் சொல்லவே அமைதியாகிப் போனான் நாடிர் ஷா. ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால், அவனுக்குத் தெரியும் கோகினூர் வைரம் அங்கேதான் இருக்கிறது என்று. வைரத்தை எப்படி வரவழைப்பது என்று திட்டம் போட்டான் நாடிர் ஷா. 

கோகினூர் வைரத்தின் மறைவிடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நாடிர் ஷாவின்  வீரர்களுக்கும் மொகலாய உள்ளூர் மக்களுக்கும் சின்ன கலகலப்பு ஏற்பட்டது. இந்தக் கலகலப்பு கடைசியில் பெரிதாகி சில வீரர்கள் இறந்தும் போனார்கள்.
peacocok+throne.jpg

நாடிர் ஷாவுக்கு வேறு துப்பாக்கிச் சூடு. ஆத்திரமடைந்த நாடிர் ஷா டில்லியையே    கொள்ளை அடித்துக் கொளுத்தும்படி கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.
ஈரானிய வீரர்கள் பொதுமக்களைக் கண்ட கண்ட இடங்களில் வெட்டிக் கொன்றனர். வீடுகள் எரிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு கூர்வாள்களினால் செருகினர். ஒரே நாளில் 30000 உயிர்கள் பலி. அத்துடன் கலவரத்தை நிறுத்திக் கொண்டு ஈரானுக்குத் திரும்பிப் போக தன் படைகளுக்கு ஆணை பிறப்பித்தான் நாடிர் ஷா.
nadir+tomb.jpg

கடைசி நேரத்தில் மொகலாய பாரம்பரிய மயில் சிம்மாசனம் நாடிர் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கோகினூர் வைரம் அதில் இல்லை. மொகலாய மன்னர் நாசிர் முகமதுவின் தலைப்பாகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது பரம இரகசியம். இருந்தாலும் அந்தப்புரத்தில் வேலை செய்து வந்த திருமகள் ஒருத்தி, நாடிர் ஷாவிடம் அந்த இரகசியத்தைச் சொல்லி விட்டாள். ஈரானுக்குத் திரும்பிச் செல்லும் போது தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேரம் பேசிக் கொள்ளப்பட்டது. 
peacocok+throne2.jpg

விடைபெறும் கடைசி நாளன்று நாடிர் ஷா ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தான். அந்த விருந்தில்  நாசிர் முகமதுவும் கலந்து கொண்டார். மொகலாய சாம்ராஜ்யத்தை  நாசிர் முகமதுவிடமே ஒப்படைக்கிறேன் என்று சொன்னான் நாடிர் ஷா. அதன் அடையாளமாக தத்தம் தலைப்பாகைகளை மாற்றிக் கொள்வோம் என்று சொல்லியவாறு தன்னுடைய தலைப்பாகையைக் கழற்றி அவரிடம் நீட்டினான்.
painting+done+during+akbar.jpg

நாசிர் முகமதுவும் வேறு வழியின்றி தன் தலைப்பாகையைக் கழற்றி நாடிர் ஷாவிடம் கொடுத் தார். அதற்குள்தான் கோகினூர் வைரம் மறைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கோகினூர் வைரமும் தலை மாறிப் போனது. விருந்து முடிந்த பின்னர் தன்னுடைய அறைக்குச் சென்ற நாடிர் ஷா தலைப்பாகையைப் பிரித்துப் பார்த்தான்.
babur.jpg

அதனுள் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஒளி மின்னலாய்ப் பளிச்சிட்டது. தன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. 'கோகினூர்' என்று உரக்கக் கத்தினான். பாரžக மொழியில் கோகினூர் என்றால் 'மலையைப் போன்ற ஒளி' என்று அர்த்தம். அதன் பின்னர்தான் அதற்கு கோகினூர் என்று பெயர் வந்தது. ஆக, கோகினூர் வைரத்திற்கு பெயர் வைத்தது நாடிர் ஷா எனும் ஆடு மேய்த்த சிறுவன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
Ahmed+Shah+Abdali.jpg
நாடிர் ஷா திரும்பிப் போகும் போது கோகினூர் வைரத்துடன் மட்டும் போகவில்லை. கூடவே சில ஆயிரம் இந்தியப் பெண்களையும், அடிமைகளாக சில ஆயிரம் சிறுவர்களையும் கொண்டு சென்றான். அது மட்டும் அல்ல பல ஆயிரம் யானைகள், குதிரைகள், ஒட்டகங்களையும் உடன் கொண்டு சென்றான்.
 
concubines1.jpg
 
நாடிர் ஷா ஒரு போர் வீரன் என்று சொன்னால் தப்பில்லை. ஆனால் நாட்டு மக்களைச் சரியாகக் கவனிக்கவில்லையே. அதிகமாக வரி வசூலித்தான். வரி கட்டத் தவறியவர்களின் தலைகளை வெட்டி முச்சந்திகளில் வைத்தான். அவனுக்கு மொத்தம் 33 மனைவிகள். எப்போதும் அவனுடைய தாடிக்கு கறுப்பு மை அடித்துக் கொண்டு இளமையாகக் காட்சி அளித்தான்.
 
concubines2.jpg
 
concubines3.jpg

நாடிர் ஷாவின் அட்டகாசங்களைத் தாங்க முடியாமல், அவன் தூங்கும் போது அவனுடைய பாதுகாவலர்களே கழுத்தை அறுத்து கொன்று விட்டார்கள். நாடிர் ஷாவின் சகாப்தம் முடிந்தது. அதன்பின்னர், கோகினூர் வைரம் ஈரானில் கொஞ்ச காலம் இருந்தது. ஏழெட்டு ஆண்டுகள்.
 
concubines4.jpg
 
அதன்பிறகு ஆப்கானிஸ்தானிய அரசன் Ahmed Shah Abdali என்பவரின் கைக்கு வந்தது. இந்த அரசன் ஈரான் மீது தாக்குதல் நடத்தி கோகினூர் வைரத்தைக் கவர்ந்து காபூலுக்கு கொண்டு வந்தான். ஏறக்குறைய 80 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானில் இருந்தது.
 
queenvictoria.jpg

கோகினூர் வைரம் காபூலில் இருக்கும் போது அங்கேயும் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தானிய அரசன் Shah Shuja-ul-Mulk கோகினூர் வைரத்தை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் லாகூருக்கு ஓடி வந்துவிட்டான். பின்னர் அந்த வைரம் பஞ்சாப் மகாராஜா ரஞ்சிட் சிங்கிடம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.
koh-i-noordiamond+186+carat.jpg
Kohinoor-Ranjit+Singh.jpg

ரஞ்சிட் சிங் அதற்குப் பதிலாக கிழக்கு இந்தியக் கம்பெனியின் படைகளை ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பிவிட்டார். கிழக்கு இந்தியக் கம்பெனியினர் சண்டை போட்டு ஆப்கானிஸ்தானை அரசன் ஷா சுஜாவிற்கு மீட்டுக் கொடுத்தனர். சரி!

எங்கே எங்கேயோ போய் கடைசியில் கோகினூர் வைரம் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது. 1839ல் மரணப்படுக்கையில் இருந்த ரஞ்சிட் சிங் ஓர் உயில் எழுதினார். அதன் பிரகாரம் கோகினூர் வைரம் ஒரிசாவிலுள்ள ஜெகநாத் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று எழுதினார். ஆனாலும், சொன்னபடி கோகினூர் வைரம் ஜெகநாத் கோயிலுக்கு வழங்கப்படவில்லை.
 
MaharajaRanjitSIngh.jpg
 
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வந்ததும் கோகினூர் வைரத்தை இங்கிலாந்திற்கு கொண்டு போய் விட்டார்கள். எப்படி? இறந்து போன ரஞ்சிட் சிங்கின் மகன் துலிப் சிங்கிற்கு வயது 13. அவன் தான் கோகினூர் வைரத்தை விக்டோரியா மகாராணியிடம் கொடுக்க வேண்டும் என்று அவனை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
 
dhulipsingh.jpg
 
அந்தச் சிறுவன் மூலமாக வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப் பட்டது. அங்கே 186 காரட்டாக இருந்த வைரம் 105 காரட்டாகப் பட்டை தீட்டப்பட்டது. இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. மேலும் 2000 சின்னச் சின்ன வைரங்களும் சேர்க்கப்பட்டன.

மகாராணிகள் அலெக்சாந்திரா, மேரி அணிந்த அந்தக் கிரீடத்தை இப்போது எலிசபெத் மகாராணியார் அணிந்திருக்கிறார். இப்போது பல நாடுகள் கோகினூர் வைரத்தை உரிமை கோருகின்றன. 1976ல் முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் பூட்டோ பிரிட்டிஷ் பிரதமர் ஜிம் காலகானிடம் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்.
 
bhutto+wants+back+kohinoor.jpg
 
இந்தியாவும் உரிமை கோருகிறது. இந்தியாவிற்கு வைரத்தை எடுத்துச் செல்லும்போது ரஞ்சிட் சிங்கின் மகனுக்கு 13 வயது. அந்த வயதில் கொடுக்கப்படும் சம்மதம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தியா சொல்கிறது. ஏற்கனவே தலிபான் அரசாங்கம் உரிமை கேட்டது. நல்ல தகவல் இல்லை.

எது எப்படியோ அவ்வளவு சீக்கிரத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மனம் இளகி கோகினூர் வைரத்தை விட்டுக் கொடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆனாலும் கோகினூர் வைரம் கதை சொல்லிக் கொண்டிருக்கும். நாம்தான் கதை கேட்க இருக்க மாட்டோம்.

நன்றி http://ksmuthukrishnan.blogspot.ru/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.