Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார் , பறவைகள் பூங்கா ,த்ரில் போட்டிங்

Featured Replies

மலேசியா லங்காவி பயணம் – கேபிள் கார்

 

என்னுடைய பெற்றோரை ஒரு மாதம் சிங்கப்பூர் அழைத்து இருந்தேன். ஏன் என்றால் திரும்ப சரியான வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ அதோடு இருவருக்கும் வயது வேறு ஆகிறது தாமதமாகிக்கொண்டு சென்றால் ரொம்ப சுற்ற முடியாது என்பதால் வரக்கூறி இருந்தேன்.

சிங்கப்பூர் வந்தால் அனைவரும் கண்டிப்பாக செல்வது மலேசியா காரணம் மிக அருகில் இருப்பதும் சிங்கப்பூர் போலவே வண்ணமயமாக மாடர்னாக இருப்பதும் ஒரு காரணம்.

பெற்றோர் வயதானவர்களாக இருந்ததால் மலேசியா சென்றால் ஒவ்வொரு இடமும் சென்று ஏறி இறங்கி கொஞ்சம் அலைச்சல் நடுத்தர வயதினருக்கும் இள வயதினருக்கும் ஓகே.

ஆனால், அதிகம் நடக்க ஏறி இறங்க சிரமப்படுபவர்களுக்கு இங்கே சரிப்பட்டு வராது என்று அருகில் உள்ள பிரபலமான மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவான லங்காவியை தேர்வு செய்தேன்.

புதிதாக திருமணம் ஆனவர்கள், வயதானவர்கள், அமைதியாக விடுமுறையை கழிக்க விரும்புகிறவர்கள் போன்றவர்களுக்கு சிறந்த இடம் த்ரில் விளையாட்டுகளும் உண்டு.

இங்கே செல்ல கப்பல் அல்லது விமானம் தான். மலேசியாவில் இருந்து கப்பல், நாங்கள் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்றோம். விமான நிலையம் சிறியதாக உள்ளது ஆனால் மிக அழாக அளவாக கட்டப்பட்டுள்ளது. பணிபுரிகிறவர்கள் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.

கஸ்டம்ஸ் முடிந்து வந்தால் வாடகைக்கார் போன்றவற்றை அங்கேயே முன்பதிவு செய்யலாம். மிக முக்கியமாக உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்தால் வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு நீங்களே தீவு முழுக்க சுற்றலாம்  .

இணையத்திலேயே ஹோட்டல் முன்பதிவு செய்து விட்டோம். நாங்கள் தங்கி இருந்தது Bay View என்ற ஹோட்டலில்.

லங்காவியில் 90 % மக்கள் முஸ்லிம்கள் மீதி 10 % மற்ற மதத்தினர். முஸ்லிம்கள் அதிகம் இருந்தால் அசைவ உணவு விடுதிகளே அதிகம் இருந்தன. என்னுடைய பெற்றோர் சைவம். சைவ உணவு விடுதியை கண்டுபிடிக்க அந்த ஏரியாவையே சுற்றி விட்டோம் ஒன்று கூட இல்லை.

பிறகு ஒரு கடையில் நூடுல்ஸ் போட்டுத் தரக்கூறி கேட்டு வாங்கினோம். நான் அசைவம் எனக்கு பிரச்சனையில்லை பெற்றோர் சைவம் என்பதால் சிக்கலாகி விட்டது. ஒரு வட (வடா தோசா) இந்திய உணவகம் இருந்தது ஆனால் மதியம் இல்லை என்று கூறி விட்டார்கள்.

மலேசியாவில் இந்தப் பிரச்சனை இல்லை சைவ உணவு எளிதாகக் கிடைக்கும். நான் இங்கே சைவ உணவு கிடைக்க சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இந்த அளவிற்கு மோசமாக அல்ல. ஒரு சில நண்பர்கள் தங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை ஹோட்டல் கிடைத்தது என்றார்கள்.

லங்காவியில் அனைத்து இடங்களும் போக முடியவில்லை. கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள் கேபிள் கார், போட்டிங் (Boat) மற்றும் பறவைகள் பூங்கா. ரொம்ப ரொம்ப அருமையான இடங்கள் இந்த மூன்றும்.

இங்கே சென்றால் இந்த மூன்று இடங்களும் செல்லாமல் போகவே கூடாது. இந்தப்பதிவில் கேபிள் கார் பற்றி கூறுகிறேன் அடுத்த பதிவில் பறவைகள் பூங்கா மற்றும் போட்டிங் பற்றி கூறுகிறேன். ஒருவேளை படங்களால் பெரியதாகி விட்டால் மூன்றாவது பதிவில் மீதியைக் கூறுகிறேன்.

மூன்றுக்கு மேல் எழுத மாட்டேன். எனக்கும் இங்கு இது தான் முதல் முறை சொல்லப்போனால் நான் எங்குமே அதிகம் சென்றதில்லை இந்த ஐந்து வருடத்தில்.

இங்கே டாக்சி ஏமாற்றுவதில்லை (நான் இருந்த இரண்டு நாளில் உள்ள அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன்) ஒரே விலையைத் தான் கூறுகிறார்கள் அதனால் முதலில் ஏமாற்றி விடுவார்களோ என்ற தயக்கம் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது.

இது மிகப்பெரிய இடம் என்பதால் காரில் சென்றாலே நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கேபிள் கார் செல்ல 30 நிமிடம் மேல் ஆகியது. இவ்வளவுக்கும் சாலையில் யாருமே இல்லை ஊரே காலியாக இருக்கிறது.

இதை விட உயரமான கேபிள் கார் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இங்கே செல்லும் எவருக்கும் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை. உயரம் என்றால் உயரம் அப்படி ஒரு உயரம்.

எனக்கு எப்படி இவ்வளவு உயரத்தில் இதை அமைத்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. நிஜமாகவே சொல்றேங்க தாறுமாறான உயரம் மிகைப்படுத்திக்கூறவில்லை

Langkawi-cable-car-1.jpg

இதில் சென்றால் இரண்டு இடத்தில் இறங்கி நாம் சுற்றிப்பார்க்கலாம் அதாவது இரண்டு இடத்தில் நிறுத்தம் உள்ளது. கேபிள் கார் வரிசையாக வந்து கொண்டே இருக்கும் எனவே நாம் இறங்கி சுற்றிப்பார்த்து விட்டு திரும்ப அடுத்து வரும் கேபிள் காரில் ஏறிக்கொள்ளலாம்.

Langkawi-cable-car-3.jpg

ஒரு நிறுத்தத்தில் தான் தல பில்லா படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் வரும் தொங்கு பாலம் உள்ளது. நாங்கள் சென்ற போது பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்ததால் இதில் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

Langkawi-cable-car-4.jpg

இங்கே மிகப்பெரிய தொலைநோக்கி கருவி வைத்துள்ளார்கள் இதன் மூலம் மிக தூரமான பகுதிகளை காண முடிகிறது. மிக உயரமான பகுதி என்பதால் ஊட்டி கொடைக்கானல் போல மேகங்கள் நம்மை மோதிச் செல்கிறது.

இந்த இடத்திற்கு வரும் போது கேபிள் காரில் இருந்து கீழே பார்த்தால் அடி வயிறு ஜிலீர் என்கிறது. வழக்கம் போல இது அறுந்து விழுந்தால் என்ன ஆகும் என்ற எண்ணமும் வந்து போகத் தவறவில்லை. விழுந்தால் ஒன்றும் மிஞ்சாது என்னுடைய அம்மா தான் பயந்து விட்டார்கள்.

கேபிள்கார் மேலே செல்லும் போது எதிரே பார்த்தாலே தூரமும் ஆழமும் வயிற்றை புரட்டுகிறது இதனால் என் அம்மா மேலே பார்க்கவே மாட்டேன் என்று கூறி விட்டார்கள்  .

Langkawi-cable-car-2.jpg

இன்னொரு நிறுத்தத்தில் ஒரு கடை உள்ளது. இங்கே காபி குளிர் பானங்கள் என்று அனைத்துமே கிடைக்கிறது. கேபிள் கார் ஆடி வரும் போது வழக்கம் போல இந்த பொண்ணுக கீச் கீச்சுன்னு சத்தம் கெக்க பிக்கேன்னு ஒரே சிரிப்பு பார்க்க காமெடியாக இருந்தது.

எந்த ஊராக இருந்தாலும் பொண்ணுக ஒரே மாதிரி தான் போல  .

இங்கே ஒரு இடத்தில் நம்ம ஊரைப்போல பலர் தங்கள் தங்கள் காதலன் / காதலி பெயரை பொறித்து தங்கள் கடமையை ஆற்றி வைத்து இருந்தார்கள் பெரும்பாலும் மலாய் சீன பெயர்கள் தான் இருந்தன.

தமிழ் பெயர் உள்ளதா என்று பார்த்தேன் நம்ம மக்கள் பெயரும் இருந்தது [அதானே!  ] எங்கே சென்றாலும் மேன் மக்கள் மேன் மக்களே  .

Langkawi-cable-car-5.jpg

இங்கே மேலே கீழே படிக்கட்டில் நடந்ததில் என் அம்மா அப்பா ஓய்ந்து விட்டார்கள் எனவே ஹோட்டலுக்கு மாலை திரும்பி விட்டோம். மதியமே ஒழுங்கா சாப்பிடாததால் ரொம்ப களைப்படைந்து இருந்தார்கள்.

நான் அந்த ஏரியா முழுக்க சல்லடை போட்டு தேடி கஷ்டப்பட்டு ஒரு Sweet Bread வாங்கி என்னுடைய அப்பாவிற்கு கொடுத்து வந்தேன். எனக்கு இதே போதும் நீங்க போய் சாப்பிட்டு வந்துடுங்க என்று கூறி விட்டார்.

என்னுடைய அம்மாவிற்கோ ரொம்ப பசி.. என்னடா பண்ணுறது என்று மண்டை காய்ந்து விட்டது.

சரி Pizza வாவது சாப்பிடலாம் என்று சென்றால் தெய்வம் மாதிரி நம்ம வட இந்திய ஹோட்டல் திறந்து இருந்தார்கள்.

இந்த ஹோட்டல் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு மிக அருகிலேயே உள்ளது ஆனால், திங்கள் செவ்வாய் மதியம் இல்லையாம் இரவில் மட்டும் தான் திறந்து இருக்குமாம்.

எங்க கிரகம் நாங்க போனது இந்த இரண்டு நாட்கள் தான் 

உள்ளே சென்றால் எல்லாம் நம்ம ஐட்டம். நான், சப்பாத்தி என்று வழக்கமான உணவுகள். என்னோட அம்மாவை அப்போது தான் நிம்மதியாகப் பார்த்தேன். அங்கே சர்வ் செய்தவர்களும் ரொம்ப நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.

நாங்க “சென்னா நான்” ஆர்டர் செய்தோம் செமையாக இருந்தது. நான் ஒரு டைகர் பீர்  . ஒரு வாட்டர் பாட்டில் கூறி அதை திறக்க அங்கே இருந்தவரை அழைத்து என் அம்மா தமிழில் கூறியவுடன் அவர் விழித்தார் காரணம் அவர் (வடா தோசா) ஹிந்தி வாலா  .

அப்புறம் என்னோட அம்மா கிட்ட அம்மா! அவர் குச் குச் கோத்தா ஹை அவருக்கு தமிழ் தெரியாது என்று கூறி அவரிடம் ஆங்கிலத்தில் கூறி திறக்க வைத்தேன் .

ஒழுங்கா சாப்பிட்டதும் தான் என் அம்மாவிற்கு பேச்சே வந்தது. அடுத்த பதிவுகளில் போட்டிங் மற்றும் பறவைகள் பூங்கா பற்றி கூறுகிறேன்.

http://www.giriblog.com/2012/05/malaysia-langkawi-cable-car.html

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மலேசியா லங்காவி பயணம் – பறவைகள் பூங்கா

 

Langkawi-Bird-park-5.jpg

லங்காவி பறவைகள் பூங்கா எனக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் அதற்கு காரணம் இருக்கிறது.

நான் இங்கே செல்கிறேன் என்று கூறிய போது அனைவரும் கேபிள் கார் போட்டிங் பற்றித் தான் அதிகம் கூறினார்களே தவிர யாரும் பறவைகள் பூங்கா பற்றி கூறவில்லை.

நாங்கள் போட்டிங் செல்ல ஒரு வாடகைக் காரில் சென்றோம் வண்டி ஓட்டிச்சென்றது ஒரு மலாய் முஸ்லிம் பெண் அவருடன் மலாய் தமிழ் இந்துப்பெண்.

இவர் நாங்கள் தமிழ் என்றதும் ரொம்ப சந்தோசமாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் தான் பறவைகள் பூங்கா பற்றிக் கூறி இங்கே செல்லக் கூறினார்.

உண்மையில் பறவைகள் பூங்கா பற்றி நான் 20 % எதிர்பார்ப்புடனே சென்றேன் யாருமே இதைப்பற்றிக் கூறவில்லையே அதனால் இங்கே என்ன பெருசா இருந்து விடப்போகிறது என்று நினைத்தே சென்றேன் ஆனால் 100 மடங்கு ஆச்சர்யத்துடன் சுற்றிப்பார்த்தேன்.

நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு உள்ளே நுழையும் முன்பே நம்மை அங்குள்ள கிளிகளை நம் கையில் நிற்க வைத்து படம் எடுக்கிறார்கள் கிளி எந்த வித பயமுமில்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறது.

இதை நாம் அனைத்தும் முடிந்து வெளியே வரும் போது பிரிண்ட் போட்டு கொடுத்து விடுகிறார்கள். நமக்குத் தேவை என்றால் வாங்கிக்கொள்ளலாம் இல்லை என்றால் வாங்கத் தேவையில்லை. நுழைவுச்சீட்டை விட இந்தப் படத்தின் விலை அதிகம் என்பது அதிர்ச்சியான ஒன்று.

நினைவாக இருக்கட்டும் என்று நாங்கள் ஒன்று வாங்கிக்கொண்டோம். படம் கொஞ்சம் பெரிது தான் என்றாலும் நம்ம பணத்தில் 600 ரூபாய்க்கு மேல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

உள்ள நுழையும் போதே அங்கே உள்ள பறவைகள் மற்றும் மற்ற விலங்குகளுக்கு கொடுக்க பணம் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அங்கே வருபவர்கள் பெரும்பாலனவர்கள் வாங்குகிறார்கள்.

எனவே, இதை நடத்துபவர்கள் பறவைகள் சாப்பாட்டிற்கு செலவே செய்ய வேண்டியதில்லை. நம்ம கிட்டயே பணத்தை வாங்கி அவர்கள் பறவைகளுக்கு உணவு கொடுத்து விடுகிறார்கள். எப்படி ஐடியா! 

Langkawi-Bird-park-1.jpg

நீங்கள் கவனித்து இருக்கலாம் பெரும்பாலான இடங்களில் நாம் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ சாப்பாட்டு பொருட்களைத் தர தடை இருக்கும் இங்கே அது இல்லை என்பது நல்ல விஷயம்.

பறவைகளுக்கு பழங்கள், கோழி போன்று இருக்கும் பறவைகளுக்கு ஏற்ற உணவுகள் என்று கலந்து கொடுக்கிறார்கள்.

ஏகப்பட்ட கிளிகள் இங்கே உள்ளது அது விசயமில்லை இவை எல்லாம் கூண்டில் இல்லாமல் திறந்த வெளியில் இருப்பது தான். கூண்டில் இருப்பது போலவே எங்கும் செல்லாமல் அதே இடத்திலேயே அமர்ந்து இருக்கின்றன.

எனக்கு ரொம்பப் பெரிய ஆச்சர்யம்! எப்படி இவை பறந்து செல்லாமல் இங்கே இருக்கின்றன என்று. ஒன்று இரண்டு கிளிகள் என்றால் கூட பரவாயில்லை ஏகப்பட்டது இது போல இருக்கு.

Langkawi-Bird-park-4.jpg

கிளிகள் மட்டுமல்ல பல்வேறு பறவைகள் இங்கே உள்ளது உடன் சிறு விலங்குகளும். ஒரு பெரிய இடத்தில் வலை போட்டு மூடப்பட்ட இடத்தில் லவ் பேர்ட்ஸ் ஏகப்பட்டவை உள்ளது.

நம் கையில் அதற்கான உணவை வைத்து நீட்டினால் ஒரு பத்து லவ் பேர்ட்ஸ் கிட்ட வந்து நம் கையில் உட்கார்ந்து அதில் உள்ளவற்றை சாப்பிடுகின்றன. என்னுடைய அம்மா இதில் ரொம்ப சந்தோசமடைந்தார்கள். இங்கே தான் ரொம்ப நேரம் இருந்தோம்.

Langkawi-Bird-park-2.jpg

எங்களுடன் வந்த ஒரு ஜோடி, பறவைகளுக்கு உணவு வாங்கி வராமல் இருந்து விட்டார்கள் எனவே ரொம்ப ஏமாற்றமாகி விட்டார்கள். பிறகு கருணை உள்ளமான என் அம்மா அவர்களுக்கு கொஞ்சம் உணவை கொடுத்து கொடுக்கக் கூறினார்கள்.

அவர்களுக்கு பரம சந்தோசம் முதலில் கூச்சப்பட்டாலும் பின்னர் எங்களிடம் கேட்டு வாங்கி கொஞ்சம் கொடுத்தார்கள். குழந்தைகள் சந்தோசத்தை பார்க்கவே நமக்கு பெரிய சந்தோசம். லவ் பேர்ட்ஸ் வந்து உட்கார்ந்தால் குழந்தைகளுக்கு ஒரே சிரிப்பு சந்தோசம் 

ஈமூக்கோழி மாதிரி ஒன்று (ஈமூக்கோழி தான் என்று நினைக்கிறேன்) இருக்கிறது அடேங்கப்பா! என்னா உயரம்!! அதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இரண்டே எட்டில் வெகு சீக்கிரம் நம் இடம் வந்து விடுகிறது.

கழுத்து மட்டும் இரண்டடி இருக்கும் போல இதைப் பார்த்தால் அருவருப்பு கலந்த ஒரு பயமாக இருக்கிறது. இங்கே உள்ளவர் சுத்தம் செய்து கொண்டே இருந்தார் தலையை டக் டக் என்று மேலும் கீழும் ஏற்றி இறக்கும் போது நமக்கு பார்க்க வித்யாசமாக இருக்கிறது.

Langkawi-Bird-park-6.jpg

இன்னொரு பகுதியில் மயில் இருக்கிறது. ஆண் இனத்தின் மானத்தைக் காப்பாற்றும் ஒரு பறவைமயில்களில் ஆண் மயில் தான் அழகு என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஆண் மயில் தான் தோகை விரித்தாடும் நாங்கள் சென்ற போது வெள்ளை மயில் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

நான் படம் எடுக்க சிரமப்பட்டது மயிலையும் கோழியையும் எடுக்கத்தான். படம் எடுக்கிற சமயத்தில் தலையை விசுக் விசுக்கென்று திருப்பி விடுவதால் மண்டை காய்ந்து விட்டது அப்படியும் ஒரு குத்து மதிப்பாக எடுத்தேன் .

இங்கே செல்பவர்கள் மறக்காமல் பறவைகளுக்கு உணவு வாங்கிச்செல்லுங்கள். அடுத்த பதிவில் த்ரில் போட்டிங் பற்றி கூறுகிறேன்.

http://www.giriblog.com/2012/05/langkawi-bird-park.html

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மலேசியா லங்காவி பயணம் – த்ரில் போட்டிங்

 

லங்காவி போட்டிங் காலையில் இருந்து மாலை வரை நடைபெறுகிறது. மாங்குரோவ் காடுகள் நிறைந்த பகுதிகளில் கடலின் உள்ளே கொஞ்ச தூரம் சென்று வருகிறது. போட்டிங் என்றதும் நான் முதலில் பெரிய போட்டாக இருக்கும் என்று நினைத்து விட்டேன் .

சென்னை முட்டுக்காடு போட் மாதிரி தான்… என்ன கொஞ்சம் அதை விட பெரியது. இதில் ஷேரிங் முறையில் (இரு குடும்பங்கள்) சென்றால் பணம் குறைவு தனியாகவும் செல்லலாம் அது நமது விருப்பம்.

Langkwai-Boating-1.jpg

போட்டிங் என்றதும் என்னோட அம்மா பயந்து விட்டார்கள். வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன்  முதலில் பீதியாக இருந்தாலும் போகப்போக நல்லா என்ஜாய் செய்தார்கள்.

நான் சென்ற இடங்களிலேயே இங்கு தான் ரொம்ப (பயத்துடன்) சந்தோசமாக இருந்தார்கள்.

Langkwai-Boating-3.jpg

இரண்டு மணிநேரம் சுற்றிக்காட்டுகிறார்கள். இதில் மோட்டல் போன்ற இடமும் உண்டு. நாம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓய்வெடுக்க மோட்டல் இருப்பது போல இங்கேயும் உண்டு. இங்கே சென்று நாம் ஓய்வு எடுக்கலாம் ஏதாவது சாப்பிடலாம் குடிக்கலாம்.

நாங்கள் சென்ற போது அங்குள்ள கடையில் DDLJ பாடல் பாடிக்கொண்டு இருந்தது.

Langkwai-Boating-4.jpg

Eagle’s View என்ற இடத்தில் கழுகுகள் அதிகம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் உள்ளது எப்படி என்று தெரியவில்லை. தண்ணீரினுள் இரையைப் போட்டு அதை பிடிக்க வரும் மீன்களை பிடிக்கிறது. இது எப்புடி?  இதை படம் எடுப்பதற்குள் ஒருவழியாகிட்டேன்.

மின்னல் வேகத்தில் வந்து மீனை பிடிக்கிறது அதனால் நம்மால் சரியான இடத்தில் வைத்து எடுக்க முடியவில்லை. அதிவேக கேமராவாக இருந்தால் சாத்தியம் இல்லை என்றால் பொறுமை வேண்டும் இது இரண்டு என்னிடம் அப்போது இல்லை  .

போட்டில் செல்லும் போது திடீர் திடீர் என்று வேகமெடுக்கிறார்கள் திடீர் என்று வேகம் குறைக்கிறார்கள். நாங்கள் சென்ற போது மழையும் பெய்தது இதனால் அலை அதிகம் இருந்தது அதனால் போட் வேகமாக செல்லும் போது தூக்கி தூக்கிப் போடுகிறது.

என் அம்மா தான் ரொம்ப பயந்து விட்டார்கள்  முகமெல்லாம் வெளிறிவிட்டது. மழையினூடே சென்றது செம த்ரில்லிங்காக இருந்தது. எனக்கும் என் அப்பாவிற்கும் நீச்சல் தெரியும் என்பதால் பயமில்லாமல் இருந்தோம்.

நீச்சல் தெரியவில்லை என்றால் கொஞ்சம் பயம் இருக்கும் என்பது உண்மை தான்.

பாதுகாப்பிற்கு லைஃப் ஜாக்கட் கட்டாயம் அணிய வேண்டும். ஒருவேளை தண்ணீரில் விழுந்தாலும் மிதக்கத்தான் செய்வோமே தவிர ஒன்றுமாகாது.

இருந்தாலும் நீச்சல் தெரியவில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்தப் பாதுகாப்பையும் மீறி ஒரு பய உணர்வு தவிர்க்க முடியாதது தான் அதுவும் மழை காற்று சமயங்களில்.

வேகமாகச் சென்று வளைந்து செல்லும் போது லைட்டா வயிற்றை கலக்குவது போல இருக்கும், நான் ரொம்ப என்ஜாய் செய்தேன்..

எனக்கு எப்போதுமே த்ரில் விளையாட்டுகள் என்றால் ரொம்ப விருப்பம் இது போன்ற விஷயங்கள் எல்லாம் சலிக்காமல் ரசிப்பேன். பைக் ல வீலிங் செய்து பார்த்து இருப்பீர்கள் இங்கே போட்டில் வீலிங் செய்தார்கள். செமையாக இருந்தது.

பைக் போல செல்லாமல் ஒரே இடத்தில் நின்று போட் பின்புறம் தண்ணீரை அருவி போல விழ வைக்கிறார்கள்.

Langkwai-Boating-2.jpg

இங்கே நின்று கொண்டு இருக்கும் சிறிய போட்கள் எல்லாம் என்னவென்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். இங்கே நிற்கும் போட்கள் எல்லாம் அமெரிக்கா, ஹாலந்து மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பயணமாக வந்து இருக்கிறார்கள்.

நங்கூரம் இட்டு பல மாதங்கள் இருக்குமாம்.

என்னால் நம்பவே முடியவில்லை காரணம் படகு ரொம்ப சிறியதாக இருக்கிறது இதில் எப்படி இவ்வளவு தூரம் தைரியமாக வருகிறார்கள்? எப்படி சாப்பாடு சமாளிக்கிறார்கள்? எப்படி இயந்திர கோளாறு இல்லாமல் வந்து சேர்கிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள்.

நீங்க நம்ப மாட்டீங்க ஒரு சில போட்டில் ஒரு சின்ன அறை மட்டுமே இருக்கிறது அதிலே நேராக நிற்பதே சிரமம் இதில் எப்படி?… உண்மையாகவே இவர்கள் எல்லாம் மிகத் தைரியமானவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் தான்.

Langkwai-Boating-5.jpg

முதலை குகை என்று ஒன்றுள்ளது. குகை தான் முதலை குகையே தவிர அங்கே முதலை இல்லை. ஒரு காலத்தில் இருந்தனவாம் தற்போது அழிந்து விட்டது.

அந்த குகைக் அருகில் எங்கள் படகு சென்றவுடன் என்னுடைய அம்மா முதலையே வந்தது போல பயந்து போட்டை திருப்புங்க திருப்புங்க என்ற கலவரம் ஆகி விட்டார்கள் .

என் அப்பா எவ்வளவோ கூறியும் முடியாது என்று கூறி விட்டார்கள். பார்க்க அந்த இடம் ஹாலிவுட் த்ரில் படத்தில் வருவது போல அமைப்பில் இருந்தது.

Langkwai-Boating-6.jpg

கடலில் கொஞ்ச தூரம் அழைத்துச் செல்கிறார்கள். இங்கே குட்டி குட்டித் தீவாக 100 தீவுகள் இருப்பதாக போட் ஓட்டுனர் கூறினார். இங்கே இருந்து பார்த்தாலே தாய்லாந்து (பட்டாயா) தெரிகிறது.

கடலில் இருக்கும் போது தான் உலகம் உருண்டை என்பதையே என்னால் உணரமுடிகிறது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதா?  எதோ பந்து மேலே போட் போவது போல உள்ளது.

நண்பர்களுடன் கப்பலில் அந்தமான் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

இதன் பிறகு கடைசியாக வவ்வால் குகை என்ற ஒன்று இருக்கிறது. இங்கே மழை பெய்ததால் எங்களால் செல்ல முடியவில்லை. இருவருமே வயதானவர்கள் போட்டில் இருந்து ஏறி இறங்க சிரமம் என்பதால் நான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.

இந்த ஒரு இடம் மட்டும் செல்லவில்லை. லங்காவியில் தவறவிடக் கூடாத இடம் இந்த போட்டிங்.

இரண்டு நாட்கள் போதுமானது இந்த இடங்களை சுற்றிப் பார்க்க. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் சைவ உணவு கிடைப்பது மட்டுமே சிரமமாக இருந்தது மற்றபடி வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஹோட்டலில் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். இங்கே ஒரு பிரச்சனை லிப்ட் ல் செல்லும் போது இவர்கள் அடித்து இருக்கும் வாசனை திரவியத்தால் எனக்கு மூச்சே விட முடியவில்லை. எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்காக அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாங்கள் இருந்தது 11 வது மாடி என்பதால் மெதுவாக நின்று செல்வதால் எப்படா வெளிக்காற்றை சுவாசிக்க முடியும்! என்றாகி விட்டது. எனக்கு மூக்கெல்லாம் எரிச்சல் ஆகி விட்டது.

எங்களுக்கு முஸ்லிம் பெண் தான் கார் ஓட்டினார். இங்கே பெரும்பாலும் பெண்கள் ஓட்டுனர்களாக உள்ளனர். ரொம்ப அருமையாக வண்டி ஓட்டினார் அதோடு எங்களை சைவ உணவு விடுதிக்கு அழைத்து சென்றார். சாப்பாடு நன்றாக இருந்தது.

பல தகவல்களைக் கூறியதோடு மிகவும் பொறுப்பாகவும் நடந்து கொண்டார், அதோடு அனைத்து விசயங்களிலும் முன்னேற்பாடாக இருந்தார். இங்கே ஒரு முருகன் கோவில் உள்ளது ஆனால் நேரமில்லாததால் எங்களால் செல்ல முடியவில்லை. இது எனக்கு ஏமாற்றம் தான்.

லங்காவி விமான நிலையம் சிறிய விமான நிலையமாக இருந்தாலும் வசதிகளுக்கு எந்த விதக் குறைச்சலும் இல்லை. இங்கே நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஆண்கள் பெண்கள் கழிவறை அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடமும் இருக்கிறது.

இதை வேறு எங்காவது வைத்து இருக்கலாம்.

எந்தப் பெரிய விமான நிலையத்துக்கும் குறைந்தது இல்லை என்பது போல பல கடைகளும் இங்கே உள்ளது. அனைத்து இடங்களும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தது. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் சென்று வாருங்கள்.

இதில் நாங்கள் செல்லாத இடங்களும் கூட உள்ளன.

http://www.giriblog.com/2012/06/langkawi-boating.html

இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட பதிவில் பகிராத படங்கள் அனைத்தும் இங்கே 

https://plus.google.com/photos/115360039774237572116/albums/5749465779057636817

  • 5 months later...
  • தொடங்கியவர்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.