Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் ஒப்பரேசன் II

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் ஒப்பரேசன் II

நிர்மானுசன் பாலசுந்தரம்

ரணிலின் ஒப்பரேசன் <strong>II</strong>
 

 

ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சிறிலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்தில் ரணில் தனது பிரதமர் பதவியை இழந்தார். அதன் பிற்பாடு, ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி சுமார் இருபதுக்கு மேற்பட்ட தேர்தல்களில் (உள்ளுராட்சி சபை, மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சனாதிபதித் தேர்தல்) தோல்வியடைந்தது. இதனால், ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆயினும், ரணில் தலைமைப் பதவியிலிருந்து விலகவில்லை. பல தோல்விகள், படுதோல்விகள் மற்றும் நீண்டகால காத்திருப்புகளிற்குப் பிறகு, சுமார் பதினொரு வருடம் கழித்து, கடந்த சனவரி 9ம் திகதி சிறிலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்றார்.

பதவியாசை ரணிலுக்கு இருந்தபோதும், ஒப்பீட்டு ரீதியில் ராஜபக்சாக்களைப் போல வெற்றிகளுக்கோ சாதனைகளுக்கோ மார்தட்டி உரிமைகோருவது குறைவு. ராஜபக்சாக்களைப் போல ஆரவாரத்துடனோ அல்லது தெருச்சண்டியர்கள் போன்றோ ரணில் செயற்படுவதில்லை. மாறாக, அமைதியாக ஆனால் தூரநோக்குடனும் புத்திசாதுரியமாகவும் செயற்படும் பண்பைக் கொண்டவர். ஒருதுளி இரத்தமும் சிந்தாமல் கருணாவை தனது பொறிக்குள் வீழ்த்தி போராட்டத்தை சிதைத்தமை இதற்கு ஒரு உள்நாட்டு உதாரணம்.    

ரணில் ஏப்ரல் 2004ல் பதவியை இழந்தபோது அவரது மற்றுமொரு இரகசிய நகர்வு முற்றுப்பெற்றிருக்கவில்லை. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களையும் அவர்களது கட்டமைப்புகளையும் பலவீனப்படுத்துவதே ரணிலின் முற்றுப்பெறாத அந்த திட்டமாக இருந்தது. அந்த திட்டத்தை முழுமையடையச் செய்வதற்கு ரணில் இந்த ஆட்சிக்காலத்தை நுட்பமாகக் கையாளுகிறார். ரணிலின் தொலைநோக்குப் பார்வையென்பது, தனது பதவி, தனது கட்சி என்பதை கடந்து சிங்கள தேசத்தின் நலன்களை பேணிப் பாதுகாத்தலே ஆகும். ராஜபக்சாக்களைப் போலவோ அல்லது சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேக போன்று ரணில் இதை வெளிப்படையாக பேசுவதில்லை. ஆனால், செயற்பாட்டில் அவர்கள் எல்லோரையும் விட திறம்பட செயலாற்றும் வல்லமை கொண்டவர்.

சிங்கள தேசத்தை இலங்கைத் தீவில் மேலாண்மையுடையதாக நிலைநிறுத்த வேண்டும் என்றால், தமிழ்த் தேசிய சித்தாந்தத்தையும், தமிழர்களின் தனித்துவ அடையாளங்களையும் சிதைக்க வேண்டும். தமிழர்களின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் அழிக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்பது திரிபுபடுத்தப்பட்ட மகாவம்ச மனப்பாங்கு. பலர் அதனை பேசினாலும் சிலரே அதனைச் செய்துள்ளனர், செய்துவருகின்றனர். அதில் ரணில் முதன்மையானவர். ஆனால், ராஜபக்சாக்களை போன்று தன்னை இனவாதியாகவோ தேசியவாதியாகவோ காட்டிக்கொள்வதில்லை. மாறாக தனக்கு 'லிபரல்வாதி' முகமூடி போட்டுள்ளார்.

இந்த லிபரல் முகத்துடனேயே முற்றுப்பெறாத தனது திட்டத்துக்கு முடிவுரை எழுத ரணில் மீண்டும் திடங்கொண்டு செயற்பட்டு வருகிறார். அதன் அங்கமாகவே, புலம்பெயர் அரசியற் செயற்பாட்டாளர்களையும் கட்டமைப்புகளையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை தான் பதவியேற்ற காலம் தொடங்கி மீண்டும் அமுல்படுத்தி வருகிறார். விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சவாலான தரப்பாக புலம்பெயர் சமுகம் இருக்கும் என்பதை ரணிலும் அவருக்கு ஆதரவான சக்திகளும் கணக்கு போட்டன. இந்தப் பின்னணியிலேயே, புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவாறே புலிகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ரணில் தரப்பு, சமாந்தரமாக புலம்பெயர் தமிழர்களையும் அழிப்பதற்கு திட்டம் போட்டது.

2003 ஒக்டோபர் 5ம் திகதி மலேசியாவின் சுபங் என்ற இடத்திலுள்ள செறெற்ரன் விடுதியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியாவில் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. ‘தமிழ் டயஸ்பொறா’ (Tamil Diaspora) என்ற அடையாளத்தோடு மிளிரும் ஈழத்தமிழர்களை ‘சிறிலங்கன் டயஸ்பொறா’ (Sri Lankan Diaspora) என்ற அடையாளத்துக்கு மாற்றுவதே இந்த கூட்டத்தின் இரகசிய நோக்கமாக இருந்தது. அதற்கமைவாக, மலேசியாவில் செயற்பட்ட பல தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பலர் அதைப் புறக்கணித்தார்கள். சில அமைப்புகள் பங்குபற்றியிருந்தன. இறுதியில், பங்குபற்றிய அமைப்புகளை ஒன்றிணைத்து மலேசியன் - சிறிலங்கன் அமைப்புகளின் சம்மேளனம் உருவாக்கப்பட்டது.  ஆயினும், புலிகள் பலமாக இருந்த காரணத்தால் தமிழ் டயஸ்பொறாவை பலவீனப்படுத்தும் ரணிலின் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை. ரணிலை தொடந்து வந்த ராஜபக்சாக்கள் தமக்கு தலையிடி கொடுத்து வந்த புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் கட்டமைப்புகளையும் சிதைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தார்கள். தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு இருந்துவரும் புலம்பெயர் தமிழர்களை நோக்கி ராஜபக்சாக்கள் மேற்கொண்ட உளவியல் போர் கணிசமான வெற்றியைப் பெற்றது. ராஜபக்சவின் காலத்தில் புலம்பெயர் கட்டமைப்புகள் பலவீனப்படத் தொடங்கி விட்டன.

புலம்பெயர் சமூகம் ஒரு சவால் விடும் சக்தியாக இருக்கக் கூடாது என்பதில் ரணில் மிகக் குறியாக இருந்து செயற்படுகிறார். ஆதலால், தமிழ்த் தேசிய செயற்பாடுகளோடு தம்மை இணைத்திருந்த குறிப்பிடத்தக்களவு செயற்பாட்டாளர்களையும், சில புலம்பெயர் அமைப்புகளையும் ஒரு கூட்டு வலைக்குள் வீழ்ந்தி வருகின்றார். சிலர் தம்மை அறியாமல் இந்த பொறிக்குள் சிக்குண்டுள்ளனர். தமது சுய நலன் சார்ந்து செயற்பட்டு வந்த சிலர், பலம் உள்ள பக்கம் சாய்வோம் என்ற அடிப்படையில் சிறிலங்காவின் பக்கம் சென்றுள்ளனர். இதேவேளை, எங்கள் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு இருந்தவர்களோ இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம் என்ற நோக்கில் சிறிலங்கா அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற முயல்கிறார்கள்.

ரணிலின் ஒப்பரேசன் <strong>II</strong>

அன்று சமாதானம் என பேசியபடியே புலிகளை அழித்தவர்கள் இன்று நல்லிணக்கம் எனப் பேசியபடியே தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கடந்த யூன் மாதம் 11ம் திகதி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஒரு குழுமமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார். 'தமிழ் டயஸ்பொறா' என்ற அடையாளம் அற்று 'சிறிலங்கன் டயஸ்பொறா' என்ற ஒற்றை அடையாளத்தோடு அனைவரும் செயற்பட வேண்டும் என்ற தொனியே அவரது பேச்சில் தெரிந்தது. ராஜபக்சவால் அமைக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே புலம்பெயர்ந்து வாழ்வோருடனான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் மங்கள தெரிவித்திருந்தார்.

ரணிலும் சரி ராஜபக்சவும் சரி தங்களுக்கிடையில் போட்டி இருந்த போதும், புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு ஒரு பொது நிகழ்ச்சிநிரல் இருந்தது. அதனடிப்படையில் செயற்பட்டார்கள். இறுதியில், ரணில் விதைத்து உரம் போட்டு வளர்த்ததை ராஜபக்சாக்கள் அறுவடை செய்தார்கள். அதேபோன்று, புலம்பெயர் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவது என்ற திட்டத்தை ரணில் தொடக்கி வைத்து செயற்பட்டார், ராஜபக்சாக்கள் அதனை தொடர்ந்தனர். ரணில் அதனை மீண்டும் கையிலெடுத்துள்ளார். ஆட்சிகள் மாறிய போதும், அணுகுமுறைகள் மாறிய போதும், அவர்கள் இலக்கு மாறவில்லை. அதற்கு அடிப்படையாக அவர்களிடம் சரியானதும் நிலையானதுமான கொள்கை வகுப்பு உண்டு. ஆட்சிகள் மாறினாலும் அணுகுமுறைகள் மாறினாலும் தமிழர் தேசத்தை நோக்கிய சிங்களத்தின் கொள்கைவகுப்பில் மாற்றம் நிகழவில்லையென்பதை கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

தமிழ் தேசியத்துக்கு எதிராக நீண்டகாலமாகச் செயற்பட்டு வரும் ரொகான் குணரட்ண போன்றவர்கள் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள தேசத்தின் கொள்கை வகுப்பில் முக்கியமானவர்களாக திகழ்கிறார்கள். சர்வதேச ரீதியில் பயங்கரவாத முறியடிப்பு நிபுணராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ரொகான் குணரட்ண, சிறிலங்கா அரசை பேணிப் பாதுகாப்பதையும் தமிழ் தேசியத்தை அழிப்பதையும் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகிறார். இவரது கருத்துக்களுக்கும் ரணில் - ராஜபக்சக்களின் நடவடிக்கைகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதை இவரது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அவதானிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். டிசம்பர் 2013 ல் சிறிலங்காவின் டெயிலி நியுஸ் பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில், புலம்பெயர் தமிழர்களை எவ்வாறு பலவீனப்படுத்தலாம் என்பதை ரொகான் குணரட்ண விளக்கியிருந்தார். நாம் சிறிலங்கர்கள் என்ற அடையாளத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை எடுத்துகூறிய ரொகான் குணரட்ண, தமிழ் மக்களின் மனப்பாங்கிலும் அபிப்பிராயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், தமிழ் ஊடகங்களையும் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தார்.

ரொகான் குணரட்ண போன்ற கொள்கை வகுப்பாளர்களையும், ரணில், மைத்திரி, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா போன்ற பல்வேறு அரசியல்வாதிகளையும், அரசியற் கட்சிகளையும் ஒன்று சேர்க்கின்ற இரண்டு விடயங்கள் உண்டு. அவையாவன, சிங்கள தேசத்தின் நலன்களுக்கு பாதகமாக அமையக்கூடிய நிகழ்வுகள் மற்றும் தமிழர் தேசத்துக்கு எதிரான சிங்கள தேசத்தின் செயற்பாடுகள். இந்த விடயங்கள், சகல வேறுபாடுகளையும் கடந்து சிங்கள தேசத்தை ஒரு பொதுத்தளத்தில் ஒன்றிணைக்கின்றன.       

தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக பின்வரும் விடயங்களில் ரணில் தலைமையிலான சிங்கள தேசம் கவனம் செலுத்துகிறது.

1. தமிழ் பேசும் மக்களுக்கிடையில் வேற்றுமைகளை வளர்த்தல்.

2. வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரளாமல் தடுத்தல்.

3. தாயகத்தில் தமிழர் தரப்புகளுக்கிடையிலேயே முரண்பாடுகளை உருவாக்குதல், ஊக்குவித்தல்.

4. புலம்பெயர் தமிழர் தரப்புகளுக்கிடையில் பகைமையுணர்வை நீடிக்கச் செய்து புதிய முரண்பாடுகளை தோற்றுவித்தல்.

5. தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குமிடையில் வேற்றுமைகள், குழப்பங்கள், முறுகல்களை ஏற்படுத்துதல்.

இத்தகைய சூழலில், கடந்த ஒகஸ்ட் மாதம் இலங்கைத் தீவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழர் தாயகத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூட்டமைப்பு) வெற்றி பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.முன்னணி) தோல்வியடைந்தது. தேர்தல் காலத்தில் கணிசமான புலம்பெயர் தமிழர்கள் த.தே.ம.முன்னணிக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்கள். அதேவேளை, த.தே.கூட்டமைப்புக்கு திரைமறைவில் கணிசமான ஆதரவு நிலவியது.  ஆயினும், த.தே.ம.முன்னணியின் தோல்விக்குப் பிற்பாடு, புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களை இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற கருத்தியல் போர் ஒன்று மிக நுட்பமான முறையில் சிங்கள கொள்கை வகுப்பாளர்களால் அரங்கேற்றப்பட்டது. கட்சிகளுக்கான பரிபூரண ஆதரவு நிலையும், புலம்பெயர் செயற்பாட்டுத் தளத்தை ஒற்றை அடையாளத்துக்குள் வைத்து தவறாக கணித்தமையும் சிங்கள கொள்கை வகுப்பாளார்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருப்பதாக காட்டிக்கொள்வோரை மட்டுமல்ல தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு இருக்கும் குறிப்பிடத்தக்க அளவானோரையும் இழுத்தது. இருப்பினும், இந்த கருத்துருவாக்கமும் வெற்றி அடையவில்லை. மாறாக, தேர்தல் முடிவுகளுக்கு பிற்பாடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும் புலம்பெயர் தமிழ் மக்களை முதன்மைப்படுத்தி நன்றி தெரிவித்திருந்தார்கள்.

இருப்பினும், தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கும் கூர்மையடையச் செய்வதற்குமான பணிகளை ரணிலை முதன்மையாகக் கொண்ட சிங்கள தேசம் கைவிடவில்லை. இந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ரணில் தமிழர்களையே பிரதானமாகப் பயன்படுத்துகிறார். இதனூடாக, தமிழர்களை வைத்தே தமிழர்களை அழிக்க முடியும் என்ற தனது நகர்வை ரணில் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார்.

புலம்பெயர் தளத்தில் இயங்கும் அமைப்புகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் உண்டு பண்ணும் செயற்பாடுகளுக்கும் ரணிலை முதன்மையாகக் கொண்ட சிங்கள தேசம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. அதில் ஒரு அங்கமே கடந்த நவம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட மீளாய்வு செய்யப்பட்ட தடைசெய்யப்பட்டோர் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அரசியல் அபிலாசையில் உறுதியாகவும், தமிழ் மக்களுக்கு நடந்தது இனஅழிப்பு என்பதில் திடமாகவும் இருப்போரும் தடைநீக்கப்பட்ட எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த நிலைப்பாடுகளில் தற்போது இல்லாத அமைப்புகளும் தனிநபர்களும் இந்த தடைநீக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்னர். இது, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித தெளிவற்ற தன்மையை உண்டுபண்ணியுள்ளது.

இது மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஒரு குழப்பநிலையையும் சந்தேகங்களையும் உருவாக்கக் கூடும். இதனால், குறித்த அமைப்புகளினதும் செயற்பாட்டாளர்களினதும் கவனங்கள் சிதறடிக்கப்பட்டு தமிழ்த் தேசியத்தை நோக்கிய செயற்பாடுகள் மேலும் பலவீனப்படக்கூடும். அந்த நோக்கோடே இந்தப் பொறி வைக்கப்பட்டுள்ளதற்கான சாத்தியப்பாடு தென்படுகிறது. ஆதலால், இந்த பொறி தொடர்பாகவும் சிங்கள தேசத்தின் நிகழ்சிநிரல் தொடர்பாகவும் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளில் முக்கிய தளபதியாக இருந்த கருணாவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்பியவர் ரணில். மகிந்தவோடு நீண்டகாலம் ஒன்றாக இருந்த மைத்திரி, மகிந்தவுக்கு எதிராக போட்டியிட துணையாக இருந்தவர் ரணில். தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ளவர்களைக் கொண்டே வட மாகாண முதலமைச்சரை பலவீனப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளவர் ரணில். இந்த ரணிலே, புலம்பெயர் தமிழர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளார்.

ரணில் உள்நோக்கத்தையும் தூர நோக்குப் பார்வையையும் புரியாவிட்டால், தமிழ் மக்கள் மீது 13ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபையை விடவும் அதிகாரங்கள் குறைந்த தீர்வே திணிக்கப்படும். அத்துடன், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனஅழிப்பு இல்லை என்ற கருத்துருவாக்கம் வெற்றிபெறும். இதனால், குற்றங்களை இழைத்தோர் தண்டனைகளிலிருந்து காப்பாற்றப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்காது.

இந்த நிலை தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களை சிதைத்து, தமிழர் தாயகத்தை அடிமை வாழ்வுக்குள் சிறைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தை அழிக்கும் தூர நோக்குப் பார்வை கொண்டது. ரணிலின் ஒப்பரேசன் II முறியடிக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கும் நோக்கோடு இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களாக தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும். 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=6efe04cb-f3fd-4fb2-9d6a-d8ee1bcb8373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.