Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: விளைநிலத்தின் அறுவடை

Featured Replies

பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: விளைநிலத்தின் அறுவடை
 

article_1459399346-Belgium.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் ஒழிக்க முடியாது. ஒரு பயங்கரவாதத்துக்கெதிரான இன்னொரு பயங்கரவாதம், இரு தரப்பிலும் அழிவுகளை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறது. ஆனாற் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதை உணர்வதில்லை. அதை என்றோ உணரும் போது காலங் கடந்துவிடுகிறது. உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதங்கட்கு வித்திடுகிறது.

கடந்த வாரம், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பெல்ஜியத்தை உலகெங்கும் பரவும் பயங்கரவாதத்தின் இன்னொரு பலிபீடமாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைநகரும் நேட்டோவின் தலைமையலுவலகம் அமைந்த நகரும் எனுஞ் சிறப்பு அடையாளம் பெற்ற பிரசல்ஸ் நகரின் மீதான தாக்குதலின் குறியீட்டு முக்கியத்துவம், கூடவே சில கேள்விகளையும் விட்டுச் சென்றுள்ளது.

பிரசல்ஸ் மீதான தாக்குதல் எதிர்பாராததல்ல. பெல்ஜியம், மிக நீண்டகாலமாக ஜிகாதியப் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நாடு. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைநகரான பிரசல்ஸைக் குறிவைப்பது ஜிகாதிகளின் ஆட்சேர்ப்புக்குப் பல வழிகளிற் பயனுள்ளது. அண்மையில் வெளியான புலனாய்வு அறிக்கைகளின் படி, கடந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 4,000 பேர், ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜிகாதிய அடிப்படைவாதக் கவர்ச்சியால் சிரியாவில் பஷார்

அல் அசாத்தின் ஆட்சியை வீழ்த்தப் போராடப் போயிருக்கிறார்கள். இதில் அதிகளவானோர் பெல்ஜியத்தைச் சேர்ந்த இளைஞர்கள். பெல்ஜிய அரசாங்கம் இதையறியும். பெல்ஜியப் பொலிஸார்

இது பற்றிய சகல ஆவணங்களையும் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால் எவரையும் கைது செய்யவில்லை.

இவ்விடத்து, பெல்ஜியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஸ்புட்னிக் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் சொன்னவை முக்கியமானவை. '2012ஆம் ஆண்டிலிருந்தே பெல்ஜியத்தின் சில இடங்களில் ஜிகாத்துக்கு ஆட்சேர்ப்பு நடப்பதாக அறிந்திருந்தோம். ஆனால், உயர் மட்ட அரச நிர்வாகிகள் அதையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. 2014ஆம் ஆண்டு  பிரசல்ஸில் உள்ள யூத அருங்காட்சியகம் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடந்த போதும் பிரான்ஸின்

சார்ளி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் பெல்ஜியர்கள் என நிறுவப்பட்ட போதும் அரச அதிகாரிகள் மௌனங் காத்தனர்'.

கடந்த பல ஆண்டுகளில் பெல்ஜியம், ஐரோப்பாவில் பயங்கரவாதிகளின் விளைநிலமாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அதன் உறுப்பு நாடான பெல்ஜியத்துக்கும், சிரியாவில் ஆட்சி மாற்றம் தேவை. எனவே அங்கு போர் புரிய ஜிகாதிகள் தேவை. எனவே, பெல்ஜியத்தில் தொடர்ந்த ஆட்சேர்ப்பைக் கண்டும் காணாமல் விட்டனர். அவர்களைப் பொறுத்தவரை ஆட்கள் சேர்கிறார்கள், சிரியாவில் சாகிறார்கள், எனவே கவலைப்பட அதிகம் இல்லை.

ஐரோப்பிய நாடுகளின் இம் மனநிலை, ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் சிரியாவுக்கு போரிடச் செல்ல வழி வகுத்தது. ஐரோப்பிய நகரங்களில் இருந்து துருக்கிக்கு விமானம் ஏறும் பலர் சிரியாவில் போராடவே போகிறார்கள் என ஐரோப்பிய நாடுகள் அறியும். துருக்கியும் அறியும். உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை முடக்கத் துருக்கி தனது எல்லைகளைக் கவனமாகக் கண்காணிப்பதனூடு,

அவ்வாறானோர் சிரியாவுக்குள் செல்வதைத் தடுக்கலாம். ஆனால், அவ்வாறானோர் செல்வதையே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியும் விரும்புகின்றன. அவர்கள் வேண்டுவது சிரியாவில் ஆட்சி மாற்றம். அதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஊட்டி வளர்த்தனர்.

பலமடைந்துள்ள சிரியா - ஹிஸ்புல்லா - ரஷ்யக் கூட்டணி, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு அளவிறந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தளப்பிரதேசங்களில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பின்வாங்கியுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு ஆட்கள் தேவை. எனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்கள் வந்து சேர்வதை இவை விரும்புகின்றன.

ஆட்சேர்ப்புக்கு மேலைத்தேய ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பை, கடந்த சில ஆண்டுகளாக ஊடக வெளிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புப் பெற்ற முக்கியத்துவத்தினின்று விளங்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸைப் பலமிக்க மாபெரும் அமைப்பாகக் காட்சிப்படுத்தியதில் மேலைத்தேய ஊடகங்களின் வகிபாகம் பெரிது. இவ்விடத்தில், கைதிகளிடம் ஆங்கிலத்தில் உரையாற்றிய பின் கொல்லும் பயங்கரவாதியான 'ஜிகாதி ஜோன்' ஊடகங்களிற் பெற்ற முக்கியம் கவனிப்புக்குரியது. இவ்வாறு, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸைப்; பலம்வாய்ந்த அமைப்பாக மக்கள் மத்தியிற் கவர்ச்சிகரமாகக் கொண்டு சென்றதன் மூலம் சிரியப் போருக்கான ஐரோப்பிய ஆட்சேர்ப்பில் ஊடகங்கள் பெரும் பங்காற்றின.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மூலம் சிரியப் போருக்கு ஆட்சேர்ப்பு நடந்ததைக் கண்டுங் காணாமல் விட்டதன் விளைவாக, இன்று பெல்ஜியத்திலேயே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மேலைத்தேய நலன்கள் இன்னமும் சிரியாவில் மையங் கொண்டுள்ளன.

இன்று ஐரோப்பா எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியினின்று ஒரு திசைதிருப்பியாக இத்தாக்குதல்கள் அமைகின்றன என்பதும் உண்மை. ஐரோப்பிய நாடுகளில் நிலப்பரப்பிலும் சனத்தொகையிலும் சிறிய நாடுகளில் பெல்ஜியம் ஒன்று. எனினும், எவ்வாறு பெல்ஜியத்தில் இருந்து அதிக ஜிகாதிகள் உருவாகினர் என்ற கேள்வி நியாயமானது. இதை விளங்க பெல்ஜியத்தின் வரலாற்றைப் பார்ப்பது உதவும்.

பிரித்தானியாவையடுத்து, 19ஆம் நூற்றாண்டில் கைத்தொழிற் புரட்சியைச் சந்தித்த நாடு பெல்ஜியம். அதன் விளைவாக பெல்ஜியத்தின் நிலக்கரி, இரும்பு, புகையிரத, கைத்தொழிற் துறைகள் பாரிய விருத்தியடைந்தன. அதை விடவும், பல ஆபிரிக்க நாடுகளைக் கொலனிகளாகக் கொண்டிருந்ததால் அங்கிருந்து சுரண்டிய இயற்கை வளங்களும் கைத்தொழிலின் துரித வளர்ச்சிக்கு உதவின. ஆனால், தொழிற்சாலைகட்கு வேண்டிய மனிதவளம் இருக்கவில்லை. எனவே, வட ஆபிரிக்காவிலிருந்து மிகக் குறைந்த கூலிக்கு மனிதர்கள் கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு பெல்ஜியத்தில் முஸ்லிம்கள் குடியேறினர். அதை விட, பெல்ஜியத்தில் நீண்ட காலத் தேசியப் பிரச்சனையுமிருந்தது. பிரஸல்ஸ் தவிர்ந்த வட பகுதி டச்சு மொழிக்கு நெருங்கிய ‡பிளெமிஷ் மொழிப் பகுதியாயும் தென் பகுதி ‡பிரெஞ்சு மொழிப் பகுதியாயும் இருந்தன. இரு தேசிய இனங்களிடையிலும் கடும்பூசல் இருந்துவந்தது. அது சில ஆண்டுகள் முன் சமஷ்டி ஆட்சியமைப்பால் ஓரளவு தணிந்தாலும் நெருடல் தொடருகிறது.

வெளிநாட்டவர்கள் குடியேறிய பெல்ஜிய நகரங்கள் ஒருசீராக வளரவில்லை. பிரசல்ஸிலும் மிகுந்த பொருளாதார ஏற்றத்தாழ்வும் வறுமையும் வேலையின்மையும் மிகுந்த குடியேறிகள் வாழும் பகுதிகள் இன்றும் உள்ளன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் மொலன்பேக் அவற்றுள் ஒன்று. சென்ற ஆண்டின் பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலையும்; அண்மைய பிரசல்ஸ் விமானநிலைய, புகையிரத நிலையப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்ட, செயற்படுத்திய பயங்கரவாதிகள் இப் பகுதியில் வாழ்ந்;தவர்களே.

பெல்ஜியத்தை இன்று பல வழிகளிற் தோல்வியடைந்த ஓர் அரசாங்கமாககக் கொள்வர். மேற்குலக நாடுகள் பலதில் குடியேறிகள் பெருமளவில் வசிக்கும் நகரங்கள் உள்ளன. அங்கும்; வறுமை, வேலையின்மை, சட்ட ஒழுங்கின்மை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியின் இன வன்முறை அனுபவங்களின் பின் அரசாங்கங்களின் கவனமான திட்டமிடலால் அவை ஓரளவு தணிந்தன. அப்பகுதிகள், நாட்டின் பிற பகுதிகள் போல் விருத்தி கண்டுள்ளன. இதற்கு பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மன் நகரங்களை உதாரணமாகக் கொள்ளலாம்.

பெல்ஜியம், அத்தகைய சீர்திருத்தங்களையோ மக்கள் நலத்திட்டங்களையோ பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக அரசியலணைவு, பாரபட்சம் போன்றவை அரசியலிலும் நிர்வாகத்திலும் வலுவான சக்திகளாகிவிட்டமையால் அரசாங்கம், குடிமக்கள் அனைவரையும் சமமாகக் கவனிக்கத் தவறியது. பெல்ஜியத்தின் வறுமையான சில பகுதிகள் பயங்கரவாதிகளின் விளைநிலமாகவதற்கு இதுவும் உதவியுள்ளது. எனினும், பிரான்ஸுடன் ஒப்பிடின், முஸ்லிம்கள் சமூக ஒதுக்கலுக்குட்படுவது குறைவு. முஸ்லிம் விரோத மோதல்களும் நடந்ததில்லை.

பிரசல்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் எந்த மேற்குலக நகரமும் பாதுகாப்பானதல்ல என மீள உணர்த்தியுள்ளன. எந்த அதிநவீன தொழில்நுட்பமும் புலனாய்வும் பாதுகாப்பு நடைமுறைகளும் இத்தகைய தாக்குதல்களை நிறுத்தா. எந்தப் பயங்கரவாதிகள் உருவாவதை மேற்குலகு ஆதரித்ததோ, அதே பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகும் அபாயத்தை அது எதிர்நோக்குகிறது.

பெல்ஜியத்தில் வசிக்கும் சமாதானச் செயற்பாட்டாளரான ‡பிராங் பரட், அண்மைய கட்டுரையொன்றில் பிரசல்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிக் கவனிக்கவேண்டிய சில விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவையாவன:

(1) வீதிகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் குவிப்பதன் மூலம் மக்களுக்குப் பாதுகாப்புணர்வை வழங்க முடியாது. வீதியில், இராணுவத்தினர் இருப்பதனால் மக்கள் பாதுகாப்பாக உணர மாட்டார்கள். வீதியில் இராணுவத்தை இறக்குவது மக்களின் நலனுக்காக அல்லாது பல்தேசியக் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாக்கவே. பொது இடங்களில் இராணுவத்தினரை நிறுத்துதல் மூலம் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்புத் தருகிறோம் என்று அரசாங்கங்கள் சொல்வது ஒரு நாடகமே. ஏனெனில் பயங்கரவாதிகளை உருவாக்கி ஊட்டி வளர்த்ததே இவ்வரசாங்கங்கள் தான்.

(2) வெள்ளை இனவெறியும் குடியேற்ற சமூகங்கள் மீதான வெள்ளை நிறவெறியும் உடையோர் 'நாங்கள் சுதந்திரமாய் இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்று தொடர்ந்து சொல்கிறார்கள். இது பொய்யானது. எல்லோரும் சுதந்திரமாயிருக்கவே விரும்புகிறார்கள். காலை விடிகையில் எல்லோருக்கும் வானம் நீலமாகவே தெரிகிறது. ஒவ்வொருவரது சூழ்நிலையும் அவரைப் பிணைக்கிறது. யாரும் யாரையும் பொழுது போக்குக்காகக் கொல்வதில்லை.

(3) சிறைச்சாலைகள், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வல்ல. மாறாக அவை எதிர்மாறான விளைவையே தருகின்றன. சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள தவறுகளை மூடிமறைக்க, சிறு குற்றங்களைச் செய்தவர்களையும் சிறைக்கனுப்பி, அவர்களைத் திருத்தலாம் என நினைப்பது தவறானது.

(4) பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டின் முதலில் நாம் அதில் பங்குபற்றாதிருக்க வேண்டும். உலகின் ஏதோ ஒரு மூலையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள், தங்கள் நாட்டில் மட்டும் பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டாது என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

மேற்குறித்த நான்கும் இன்று மேற்குலக அரசாங்கங்கள் எதிர்நோக்கும் சவால்கள். ஆனால், இவற்றை அவை கணிப்பிலெடா. ஏனெனில், அவை இலாபம் என்ற நலனால் வழிநடத்தப்படுவன. இன்று நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இத் தாக்குதல்கள் புதிய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன.

இதுவரை கூட்டாக ஆப்கான், ஈராக், லிபிய, சிரியப் போர்களை நடத்திய போதும் கூட்டாகப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை உறுப்பு நாடுகள் எடுத்ததில்லை. ஏனெனில், தாம் விதைத்ததை எப்படி அறுப்பது என்ற கேள்விக்கு அவற்றிடம் விடையில்லை. ஒன்றாகப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் பின்னிற்குங் காரணங்கள் தெளிவானவை.

இன்று தோற்றுவரும் சிரிய யுத்தத்துக்கு ஆட்கள் தேவை. பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் சிரியாவுக்கு ஆட்களை அனுப்புவதைத் தடுக்கும். எனவே அதைச் செய்யவியலாமை தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் கையறு நிலை. இவை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் சார்ந்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

இது, இவ்வளவு காலமும் தமது நலன்கருதி விதைத்ததை அறுவடை செய்யும் காலம். 

 

- See more at: http://www.tamilmirror.lk/169215/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%9F-#sthash.t9HTVKuS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.