Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் – கலாநிதி கெனடி விஜயரத்தினம். ( வீடியோ)

Published on April 10, 2016-9:57 am   ·   No Comments

kennady(கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. எனினும் 2009களுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்டவராக காணப்பட்ட கெனடி 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டார். அவர் சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்த போது வழங்கிய விசேட செவ்வியை இங்கே தருகிறோம். – இரா.துரைரத்தினம்)

கேள்வி விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டிய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி என பிரிந்து நின்று தங்களுக்குள் மோதுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் தமிழ் மக்களுக்கான விடுதலை அரசியலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்ற சூழலில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தலை மையப்படுத்தியே அரசியல் செய்கிறார்கள். விடுதலை அரசியலில் தேர்தல் அரசியல் ஒரு பகுதியாக இருக்கலாம். குறிப்பாக மக்களை தெளிவூட்டி தமிழ் தேசியத்தின் பால் அவர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் வெறும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் தான் தமிழ் மக்கள் மத்தியல் அதிகம் இருக்கின்றன. இது வருதத்திற்குரிய விடயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கிழக்கில் சிவராமுடன் சேர்ந்து செயல்பட்டேன். ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் அவர்களின் கொள்கைகள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக தலைவர் சம்பந்தன் அவர்களின் போக்கில் நம்பிக்கை கிடையாது.
ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததை விட மக்கள் அவர்களுக்கு கூடிய வெற்றியை வழங்கியிருக்கி;றார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

கேள்வி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்காக வெளிநாடுகளில் மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் கடினமாக உழைத்தார்கள். அவர்களின் தோல்விக்கான காரணம் என்ன?

பதில் தமிழ் தேசிய அரசியலில் ஒரு எதிர்க்கட்சி தேவை என்ற ரீதியில் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆகக்குறைந்தது ஒரு ஆசனமாவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கடந்த தேர்தல்களில் இந்திய உளவுத்துறை உட்பட பல சக்திகள் மறைமுகமாக செயற்பட்டன. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் ஈழ அரசியலில் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியுமா? எந்த களத்தில் செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தமிழ் கட்சிகளிடம் கொள்கை தொடர்பாக அழுத்தம் கொடுக்கலாம். அழுக்க குழுக்களாக செயல்படலாம். அதற்கு அப்பால் வாக்கை அவர்களால் சேகரிக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு தளம் இருந்ததே தவிர மக்கள் மத்தியில் இருந்தது என சொல்ல முடியாது. புலம்பெயர் தேசங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு தளம் என்பது சமூக வலைத்தளங்களில் தான் காணப்பட்டது. ஈழத்தில் உள்ள மக்கள் மத்தியில் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை கொண்டவர்களாக புலம்பெயர் தமிழர்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி அப்படியானால் தமிழ் மக்கள் அரசியலை சரியாக புரிந்து கொண்டு செயல்படவில்லை என எண்ணுகிறீர்களா?

பதில் யாழ்ப்பாண மக்களின் மனோநிலையில் மாற்றத்தை கொண்டுவருவது என்பது இலகுவான காரியமல்ல. யாழ்ப்பாண மக்கள் அடிப்படையில் நில உடமை சமூக சிந்தனை கொண்டவர்கள். இன்றைக்கு 200வருடங்களுக்கு முதல் மேற்குலகம் கைவிட்ட நில உடமை சிந்தனையை தன் தலையில் வைத்திருக்கிறார்கள். ஆகவே யாழ்ப்பாண சமூகம் மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த முடியாது. யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சியான தமிழரசுக்கட்சியை ஆதரிக்கும் போக்கை இலகுவில் மாற்ற முடியாது.

தமிழ் அரசியல் கட்சிகளும் சரியான கொள்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் மந்திர சொல்லாக இருக்கிறது. அதை உடைப்பது கஷ்டம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மிக பாதகமான முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்பதை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். தமிழ் தேசியத்தை நீர்த்து போகச்செய்யும் நடவடிக்கைகளில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கேள்வி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான் விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் விடுதலைப்புலிகளின் நீட்சிதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்றும் கடந்த தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தோல்வி விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என அர்த்தப்படுத்தி கொள்ளலாமா?

பதில் விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறரா இல்லையா எங்கிருக்கிறார் என மக்கள் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சில சர்வதேச நாடுகளும் ஊடகங்களும் சித்தரித்தன. அதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளும் இருந்தார்கள். விடுதலைப்புலிகள் நாடாளுமன்ற ஆசனங்களை மையப்படுத்தி அரசியல் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த போது எவரையும் தங்கள் அரசியல்வாரிசுகளாக சொல்லவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட எந்த தமிழ் அரசியல் கட்சியும் விடுதலைப்புலிகளின் நீட்சி என உரிமை கோரமுடியாது.

கேள்வி தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தான் உருவாக்கினார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் இயக்கங்களையும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் என்றும் அண்மைக்காலத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் பின்னணியில் இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அந்த பின்னணி பற்றி கூற முடியுமா?

பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமை பற்றி பல புனைகதைகள் சொல்லப்படுகிறது. முக்கியமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட சிலர் விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என கூறிவருகிறார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என கூறுவது தவறான தகவல்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை தமிழ் மக்களின் உணர்கொம்புகளாக இருந்த கிழக்கில் இருந்த பத்திரிகையாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் என சிலர்தான் இருந்தார்கள். முக்கியமாக சிவராம் உட்பட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இதன் பிரதான பாத்திரத்தை வகித்தது. தமிழ் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து பலமான அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விரும்பம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
சிவராம் தலைமையிலான பத்திரிகையாளர்கள் இதன் முன்னணியில் இருந்தார்கள். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தான் இதன் பின்னணியில் இருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் கருக்கொண்டு உருவாக்கப்பட்டது என்ற செய்தி பலருக்கு கசப்பாக இருக்கிறது.

1998, 1999 கலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இதற்கான வேலைகளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மேற்கொண்டிருந்தது. அதற்கு சிவராம் முதுகெலும்பாக இருந்தார். சிவராம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் உட்பட மட்டக்களப்பில் இருந்த பொது அமைப்புக்களுக்கு புது இரத்தம் பாச்சினார் என்றே சொல்லலாம்.

மக்கள் மத்தியில் அரசியல் தெளிவூட்டல் கருத்தரங்குள் நடத்தப்பட்டன. இந்த சூழல் சார்ந்து தான் பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.

சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கப்பட்ட போது சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் சார்பில் பேசக் கூடிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையின் அவசியம் உணரப்பட்ட போதுதான் இந்த காரியங்கள் நடைபெற்றன.
கிழக்கில் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் நடத்தப்பட்டன. இதனை தமிழர் தரப்பிலிருந்து தட்டிக்கேட்பதற்கு பலமான ஒரு சக்தி தேவைப்பட்டது.
அந்நேரத்தில் தமிழர் மத்தியில் 8க்கு மேற்பட்ட கட்சிகள் இருந்தன. இவ்வாறு பிரிந்து நிற்பது மாற்று இனத்தவர்களுக்கும் பேரினவாத கட்சிகளுக்கும் வாய்ப்பாக இருந்தன.

2000ஆம் ஆண்டு தேர்தல் தான் இதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்தியது. தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழர் கூட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை.
அதேபோன்றுதான் மட்டக்களப்பு வன்னி போன்ற மாவட்டங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தது.
தமிழ் கட்சிகள் ஒரு அணியாக இருந்தால் தான் தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை முக்கியமாக கிழக்கில் காணப்பட்டது. இதனால்தான் கிழக்கில் இருந்தவர்கள் இதன் அச்சாணியாக செயல்பட்டார்கள்.

கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் படிநிலைகள் எவ்வாறு இருந்தது?

பதில் நான் ஏற்கனவே குறிப்பட்டது போல கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்திற்கு சிவராம் புது இரத்தம் பாச்சியிருந்தார். அரசியல் கருத்தரங்குள் சந்திப்புக்கள் மூலம் இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் செய்திருந்தது. இக்கருத்தரங்குகள் சந்திப்புக்களுக்காக மாவை சேனாதிராசா, விநாயகமூர்த்தி, குமரகுருபரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வி.ரி.தமிழ்மாறன், உட்பட சட்டத்துறை சார்ந்தவர்களும் பத்திரிகையாளர் திசநாயகம் போன்றவர்கள் கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்கள். கிழக்கில் யோசப் பரராசசிங்கம், செல்வராசா போன்றவர்கள் வந்திருந்தார்கள். கஜேந்திரகுமார் அப்போது அரசியலில் இல்லை.

மாவை சேனாதிராசா இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். யோசப் பரராசசிங்கம் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். சம்பந்தனுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவும் இல்லை. கருத்தரங்குகள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதும் இல்லை.   இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கிழக்கில் உள்ள கரிகாலன் உட்பட விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு தெரிந்திருந்தது.

ஆயுத ரீதியில் நேருக்கு நேர் மோதிய விடுதலைப்புலிகளையும் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க தலைவர்களையும் கொக்கட்டிச்சோலையில் தான் முதன் முதலில் சந்திக்க வைத்தோம். 2000ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் சிவராம் நான் உட்பட சிலர் செல்வம் அடைக்கலநாதனை கொக்கட்டிச்சோலைக்கு அழைத்து சென்றோம். ஒரு ஆய்வுக்காக கொக்கட்டிச்சோலைக்கு செல்கிறோம் என இராணுவ சோதனை சாவடியில் கூறிவிட்டே செல்வம் அடைக்கலநாதனை அழைத்து சென்றோம். கரிகாலனும் செல்வம் அடைக்கலநாதனும் முதல் தடவையாக கைகுலுக்கி கொண்ட நிகழ்வு முக்கியமானதாகும். அவ்வாறுதான் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அழைத்து சென்றோம்.

இந்த சந்திப்பின் அன்று மாலை இராணுவ முகாம்களில் செயல்படும் தமது உறுப்பினர்களை விலக்கி கொள்வதாக செல்வம் அடைக்கலநாதன் எமக்கு உறுதி தந்தார்.

கேள்வி மட்டக்களப்பு தளத்திற்கு அப்பால் கொழும்பில் எத்தகைய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. யார் யார் இதில் பங்கெடுத்தார்கள்?

பதில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நான் பங்கெடுக்கவில்லை. ஆனால் சிவராம் அதுபற்றி சொல்லியிருந்தார். கொழும்பில் இதற்காக வி.ரி.தமிழ்மாறன், கந்தையா நீலகண்டன், வடிவேற்கரசன், நிமலன் கார்த்திகேயன் போன்றவர்கள் செயற்பட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதயம் என்ற அறிக்கையை நானும் சிவராமும் இணைந்து தயாரித்தோம்.

இறுதியாக கொழும்பில் 2001 ஒக்டோபர் மாதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சம்பந்தனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி சார்பில் குமரகுருபரனும், ரெலோ சார்பில் சிறிகாந்தாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கைச்சாத்திட்டனர். இந்த நான்கு கட்சிகளின் செயலாளர்கள் இணைந்து கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றையும் தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்தனர். இந்த முக்கியமான சம்பவம் கொழும்பில் வடிவேற்கரசன் வீட்டில் தான் நடைபெற்றதாக அதில் கலந்து கொண்ட சிவராம் கூறினார்.

கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்ற நீங்கள் அதை உடைக்க வேண்டும் என இப்போது செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

புதில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்டவனாக இருந்தேன். சிவராம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முதல் கொழும்பில் அவரை சந்தித்தேன். அவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீது அதிருப்தி கொண்டவராகவே இருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது நான் தமிழ்நாட்டில் இருந்தேன். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசை சந்தித்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22பேரும் ஒன்றாக வந்து தமிழக அரசுக்கும் புதுடில்லி அரசுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு கூறினார். நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை தொடர்பு கொண்டேன். அவர்கள் இதற்கு ஒத்துழைக்கவில்லை. சம்பந்தன் சென்னையில் பங்களாவில் இருந்தார். அவரை தொடர்பு கொள்ளமுடியாமல் இருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநான் என பலரும் தமிழ்நாட்டில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த உருப்படியாக காரியங்களையும் செய்யவில்லை. சிவாஜிலிங்கம் மட்டும் பலரையும் சந்திப்பதற்காக ஓடித்திரிந்தார். தங்களுக்கு வாக்களித்த மக்களை தமிழ் தலைவர்கள் நட்டாற்றில் விட்டார்கள்.

2009க்கு பின்னர் தமிழ் தேசிய ஆதரவாளர்களை சம்பந்தன் புறக்கணிக்கும் வேலைகளைத்தான் செய்து கொண்டிருந்தார். தீவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்டவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து துரத்தும் வேலைகளையே தலைவர் சம்பந்தன் செய்து கொண்டிருந்தார். நாங்கள் நம்பிய குதிரை மூன்று கால் குதிரை என்பதுதான் உண்மை. எனவேதான் தமிழ் அரசியலில் மாற்று எதிர்க்கட்சி ஒன்று தேவை என வலியுறுத்தி வருகிறோம்.

( குறிப்பு இச்செவ்வியையும் காணொளியையும் பயன்படுத்துபவர்கள் நன்றி தினக்கதிர் என குறிப்பிடவும்.)






http://www.thinakkathir.com/?p=64862

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.