Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த்தவின் காவடியாட்டம்

Featured Replies

 

மஹிந்த்தவின் காவடியாட்டம்

 

 

மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு அணியான அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஒருவாறு முடிவடைந்து விட்டது. பொது எதிரணியைப் பொறுத்தவரை இந்த பாதயாத்திரை மாபெரும் வெற்றி என்று கூறிக் கொண்டிருப்பதுடன். ஆளும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சுபநேரம் ஆரம்பமாகி விட்டது எனவும் அந்த அணியினர் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம் கால்வீக்கம் ஏற்படும் வரை பாதயாத்திரை செய்வதனால், எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. இனவாதத்தை பொங்கியெழ மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டார்கள் என தமக்குத்தாமே சமாதானம் அடைந்து கொள்வதுடன். தோல்வி அடைய வைத்துவிட்டோமென அரசாங்கத் தரப்பினர் தம்பட்டமும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மேற்படி, பாதயாத்திரை சம்பந்தமாக எந்த கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்காமல் புதினம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் காணப்படுகிறது.

அரசைக் கவிழ்க்க நினைக்கும் மஹிந்த அணியினரின் பாதயாத்திரை தோல்வி, அல்லது மஹிந்தவின் இனவாதப் போக்குக்கும் முன்னெடுப்புக்கும் பெரும்பான்மை மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளிக்கவில்லை, அந்த அணியினர் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் பங்கேற்கவில்லை, என்ற வாதங்களும் அளவீடுகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருக்கட்டும். மஹிந்த அணியினரின் குறித்த பாதயாத்திரை சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் என்ன விளைவுகளை உண்டாக்கப்போகிறது. இப்பாதயாத்திரையின் மூலம் என்ன விதைக்கப்பட்டிருக்கிறது என்பதே கனத்த கேள்வியாக ஆராயப்பட வேண்டும். வரலாற்று பூர்வமாக ஆராயப்பட வேண்டும்.

வீசப்பட்ட விஷவிதைகள் எல்லாம் அழிந்து போவதுமில்லை. அவை விருட்சங்களாக வளர்வதற்கு கால இடுகைகள் தோற்றுப் போய் விடுமென்று சொல்லிவிடவும் முடியாது. எல்லாவற்றையும் தீர்மானிப்பது காலமும் சூழ்நிலையும் என்பதை வரலாறு பாடத்தில் நாம் படிக்காமலுமில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடுமைவாத அரசியல் போக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மென்மை வாத அரசியல் போக்கில் சூழ்நிலையின் கைதிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதேயுண்மை. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடும் ஒரு நெருக்கடி சூழ்நிலையில் அகப்பட்டு அவஸ்தைப்படுகிறார்கள் என்பது சூட்சுமமாகவே உணரப்படுகிறது.

நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு, இன்னுமொரு வகையில் வியாக்கியானப்படுத்துவதாயின், நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் மயப்பட்ட காத்திரமான தீர்வொன்று விரைவில் பெற்றுவிட முடியுமென்ற ஆழமான நம்பிக்கைகள் ஈடாடிப் போய்க்கிடக்கும் சமூகப் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினூடாக பரிகாரம் கண்டுவிட முடியும் இராஜதந்திர நகர்வுகள், சர்வதேச அனுசரணை இவற்றினூடாக உயர்ந்த நீதியைப் பெற்றுவிட முடியுமென்ற அதிதீவிரமான நம்பிக்கை கொண்டவர்களாக தமிழ்த் தலைமைகள் இயங்கி வருகின்றனர் என்பதும் யதார்த்தம்.

ஆனால் இலங்கை அரசியலின் அண்மைக்கால போக்குகளும் நகர்வுகளும் தமிழ்த்தலைமைகளின் நம்பிக்கைவாதத்துக்கு உரமிடுமா என்பது கேள்வியாக மாற்றப்பட வேண்டியுள்ளது. ஜனவரிப்புரட்சியென்று வர்ணிக்கப்படுகின்ற ஆட்சி மாற்றத்துக்குப்பின் மஹிந்த ராஜபக் ஷவை விசுவாசமான தலைமையாக ஏற்றுக் கொண்டு இயங்கிவரும் பொது எதிரணியினரின் தீவிரத்தன்மை கொண்ட நடத்தைக் கோலங்கள், காளான்கள் முளைப்பது போல் இனவாதக்குழுக்களின் மீள் எழுச்சிகள், தேசிய அரசாங்கத்துக்குள் நிலவிவரும் நீறுபூத்த நெருப்பைப் போன்ற பனிப்போர் நிழல் தன்மை முரண்பாடுகள், கூட்டுத்தன்மை இன்மை போன்ற சங்கடநிலைமைகள் தமிழ்த் தலைமைகளின் நேர்கோட்டு சிந்தனைகளுக்கு சாதகமாக இல்லையென்ற உண்மையையே புலப்படுத்துகிறது.

மஹிந்த ராஜபக் ஷ என்னும் தனிமனித ஆளுமைக்கு உள்ள பலம் பலவீனம் என்பவற்றுக்கு மேலாக பெருமரத்தைச் சுற்றியிருக்கிற பல்லியைப் போல் அவரைச் சுற்றியிருக்கின்ற ஆள்பல அடிமைகள் அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம் என்பவற்றைப் பார்க்கும் போது, மீண்டுமொரு இனவாத கெடுதிகளுக்கான இனவாத அக்கினிக்குஞ்சொன்று மூட்டப்பட்டுவிடுமோ என்ற பயமே தமிழ் மக்கள் மத்தியில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. 1958ஆம், 1977ஆம், 1983ஆம்1990ஆம், ஆண்டுக் கலவரங்கள் போல் மீண்டும் உருவாக முடியாது என்பதற்கு எவரும் சத்தியவாக்கு செய்யமுடியாது.

மஹிந்தவின் ஆதரவு அணி பாதயாத்திரையை மேற்கொண்டதன் நோக்கம் அரசியல் யாப்பு சீர்திருத்தம், சர்வதேச தலையீட்டுடன் மேற்கொள்ளவிருக்கும் போர்க்குற்ற விசாரணைகள், இந்தியாவுடன் மேற்கொள்ளப்போகும் வர்த்தக உடன்படிக்கை, வற்வரி மற்றும் விவசாயிகளுக்கான உரமானியத்தை இல்லாமற் செய்தமை என்ற அட்டவணையின் அடிப்படையில் மேற்படி பாதயாத்திரையை, மேற்கொண்டதாக மஹிந்த ஆதரவணியினர் மக்களிடம் கூறியிருக்கிறார்கள். என்னதான் எத்தகைய காரணங்களை அட்டவணைப்படுத்தி காட்டியிருந்த போதும் எதிரணி முக்கியமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பாதயாத்திரையை நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய உண்மை.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அழைத்து நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்க அரசாங்கம் முற்படுகிறது. புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு சமஷ்டியை வழங்கி நாட்டின் பிரிவினைக்கு அரசாங்கம் வழிகோலிக் கொண்டிருக்கிறது. வற்வரி அதிகரிப்பின் மூலம் மக்களுக்கு வாழ்க்கைச் சுமையை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதும் பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

இவற்றிலும் வற்வரி விவகாரம் என்பது தேசியப் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கொண்டு அதை நீக்கி விட்டு ஏனைய இரு குற்றச்சாட்டுக்களையும் நோக்குவோமாயின் ஏனைய இரண்டும் ஒரு சமூகத்துக்கு வழங்கப்படக்கூடிய அரசியல் உரிமை மற்றும் நீதி சார்ந்த விடயங்களுக்கான இனவாத எதிர்ப்பைக் காட்டும் பாரிய எதிர்ப்பு அரசியல் போர் என்பதை சாதாரண பிரஜை ஒருவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய உண்மையாகும்.

இப்பாதயாத்திரையை, வெறுமனே ஒருபாதயாத்திரை யென்றோ ஊர்வலமென்றோ குறைத்து மதிப்பிடுவது என்பது எதிர்கால அரசியல் போக்கை அளப்பதற்கு ஆரோக்கியமான அளவு கோலாக இருக்கமுடியாது. தமிழ் மக்களும் அவர்களின் தலைமைகளும் என்ன கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். இவ்வருடம் முடிவதற்குள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் சாசனவழி தீர்வு கிடைத்து விடும். இழைக்கப்பட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான நீதியான விசாரணையின் பின் புதிய அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப்படுமென்ற அதீத நம்பிக்கைவாதிகளாக மென் போக்கு அரசியல் வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில்தான் மஹிந்த ராஜபக் ஷ வின் குழுவினரால் பாதயாத்திரையென்ற காவடியாட்டம் ஆடப்பட்டிருக்கிறது. இவை அரசியல் போர் எனமுடி சூடப்பட்டாலும் மறைமுகமாக இனவாத விஷம் ஊட்டப்பட்டிருக்கிறது என்பது சாதாரணமாகவே புரியக் கூடிய ஓர் விடயமாகும்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சமஷ்டிமுறையிலான, வடகிழக்கு ஒன்றிணைந்த அரசியல் சாசனவழித் தீர்வொன்றையே தற்பொழுது கோரி நிற்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயமாகும். இந்த அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது உண்மையான செய்தியாக இருந்தாலும் இதை இல்லாது ஒழிப்பதற்கான சகல கைங்கரியங்களும் நாடுபூராகவும் தூண்டி விடப்பட்டுள்ளன என்பதை சகல ஊடகங்களின் வாயிலாகவும் நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

இருந்த போதிலும் இவையெல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசியல் சாசனவழி தர அரசாங்கம் முழுமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது எனவும் வைத்துக் கொள்வோம். அரசியல் சாசனம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று நிறைவேற்றப்பட வேண்டுமென்பது ஒரு தடைதாண்டல், இரண்டாவது தடை தாண்டலாக மக்கள் மத்தியில் ஒப்பம்கோடல், என்ற அரசியல் நியதிக்கு அமைய, சர்வசனவாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும்.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் யாப்பு அரங்கேற்றம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஜனநாயக சோஷலிசக் குடியரசு யாப்பு நிறைவேற்றம் ஆகிய சந்தர்ப்பங்களைத் தாண்டிய ஓர் இறுக்கமான அரசியல் சூழ்நிலைக்குள் இலங்கை அரசியல் உள் நுழைந்து கொண்டிருக்கிறது என்பது பகிரங்கமான உண்மை.

சிலவேளைகளில் பாராளுமன்றத்தில் நல்லாட்சி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கக் கூடிய சூழ் நிலையொன்று பலாத்காரமாகவோ அல்லது சுதந்திரமாகவோ உருவாக்கப்படலாம். இதற்கான அனுசரணைகளை, சிறுபான்மைக்கட்சிகளான, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகள் வழங்கவும் தயாராக இருக்கலாம். ஆனால் இவற்றுக்குள்ளும் ஒரு நேர்த்தியான உடன்பாடுகாணப்படுமா- என்பதும் ஒரு கேள்விக்குறியே. இதற்கு காரணம், வடகிழக்கு இணைப்பு முஸ்லிம் அலகு, கரையோர அலகு என்ற விவகாரங்கள் முற்றுப் பெறாமல், முடிவு காணப்படாமல் நீறு பூத்த நெருப்பாக இன்னும் இருந்து கொண்டிருப்பதுதான். இதற்கான ஒரேவழியும் உபாயமும் சிறுபான்மை சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற கட்சிகள் அரசியல் யாப்பு நிறைவேற்றத்துக்கு முன்னமே தமக்குள் ஒருபுரிந்துணர்வான உடன்பாடு காண்பதுதான் எதிர்கால நன்மைக்கு தீர்க்கமாக அமையும். இல்லையாயின் அப்பம் பிரித்த கதையாகவே ஆகிவிடும் நிலைமை உருவாகலாம்.

இரண்டாவது விடயந்தான் இங்கு அரசியல் மற்றும் சமூகப் போருக்கான ஆயுதமாகப் பாவிக்கப்படலாமென்பது அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டும் விடயமாகும். அதுதான் சர்வசன வாக்கெடுப்பு எனும் வில்லங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பின்வருமாறு விளக்கமளித்தமை ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கை அரசியல் யாப்பு நிறைவேற்றத்தில் சிறுபான்மைச் சமூகம் மற்றும் முற்போக்கு சிந்தனையுள்ள பெரும்பான்மை மக்கள் மானசீகமான ஆதரவை நல்குவார்களாக இருந்தால் சர்வசன வாக்கெடுப்பென்பது சர்வசாதாரண ஒருவிடயமாக இருக்குமென்று கூறியிருந்தார். அந்த முற்போக்கு சிந்தனையாளர்களையும் சிறுபான்மை சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சூட்சும கயிறு அரசாங்கத்தைவிட, சிறுபான்மைத் தலைமைத்துவங்களின் கைகளிலேயேயுண்டு என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.

இருந்தாலும் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதென்பது ஒரு அக்கினிப்பரீட்சை என்பதையும் நாம் உணர்ந்துதான் ஆகவேண்டும். இவ்விவகாரத்தை எதிரணிப் பக்கமிருந்து நோக்குவோமாயின் மஹிந்த ஆதரவணியினரின் பாதயாத்திரையென்பது எல்லாவகை எதிர்ப்புக்குமான ஒரு குறியீடு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த அணியின் பலம் வெறும் தேர்தல் தோல்விகளாலும் வெற்றிகளாலும் நிர்ணயிக்க முடியாது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 4887152 வாக்குகளை தனது வெற்றிக்காகப் பெற்றுக் கொண்டவர் யுத்த வெற்றிக்குப் பிறகு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ எத்தனை இலட்சம் வாக்குவித்தியாசத்தால் வெற்றிவாகை சூடினார் என்பது நாடறிந்த விடயம். அவரின் வெற்றிக் கணக்குகளை வெறும் தர்க்கரீதியான எண்கணித சமன்பாடாக மாத்திரம் கருதிவிடக் கூடாது. பௌத்த வாதம், தேசிய வாதம், பேரினவாதம், இனவாதம் என்ற கூட்டுச் சேர்ப்புகளின் மொத்தவடிவமாகவே அவர் இன்று (சிங்கள மக்களால்) பேரினவாதிகளால் பார்க்கப்படுகின்றார் என்பதேயுண்மை.

இன்றைய அரசாங்கம் மஹிந்தவை செல்லாக்காசு ஆக்கும் நடவடிக்கைகளை மிகத்தந்திரமாகவும் மதிநுட்பத்துடனும் மேற்கொண்டுவருகிறது என்பது ஒருபுறமிருக்க, அவரின் ஆளுமைமீதும், ஆதரவு மீதும் அச்சம் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய பல சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடந்தேறியுள்ளன. ஆயிரக் கணக்கான மக்கள் தேசத்தின் தந்தையே நீங்கள்தான் எங்கள் தலைவர் என விளித்ததுடன் கோஷமிட்ட ஆயிரக் கணக்கான மக்கள் அவரை ஆராதனை செய்கிறார்கள் என்ற விடயம் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதையாகப் பார்க்கக்கூடாது.

எதிரணியினரால் பாதயாத்திரையின் போது முன்வைக்கப்பட்ட கோஷங்களும் சாதாரணமாக நோக்கப்படாத கோஷங்களாகவே எதிரணியினர் முன்வைத்துள்ளனர். அரசாங்கம் சொன்னது கிடைத்ததா? இலவசக் கல்வியில் கைவைக்காதே, இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காதே, நல்லாட்சியென்ற பெயரில் சிங்கள மக்களை ஏமாற்றாதே என்ற கோஷங்களின் பின்னணியில் இருக்கின்ற இறுக்கமான இனவாதக் கருத்துக்கள் கடைந்தெடுத்து நோக்கப்பட வேண்டும்.

இன்று இராணுவத்தின் மீது காட்டப்படுகிற இன்னொரு குற்றச்சாட்டாக கசிந்து கொண்டிருப்பது முன்னாள் போராளிகளுக்கு திட்டமிட்ட முறையில் தடுப்புமுகாமில் இருக்கும் போது இரசாயன உணவு தந்தார்கள், ஊசி போட்டார்கள் தடுப்புமுகாமிலிருக்கும் போது ஊசி போட்டதன் காரணமாக முன்னாள் போராளிகள் ஒரேவகை நோய்க்கு ஆளாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரேமாதிரி இறந்துள்ளார்கள் என்ற, புதிய அதிர்ச்சியூட்டும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, யுத்தக்குற்றச்சாட்டுக்களாலும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் சர்வதேசத்துக்கு பதில் அளிக்க முடியாமலும் விசாரணைகளை முடுக்கிவிடமுடியாமலும் திண்டாடிக் கொண்டிருக்கும் அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்தின் இன்னுமொரு வகைப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை உருவாகிவருகிறது. புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் போராளிகளுக்கும் தடுப்பு ஊசி, இரசாயன உணவு, தாக்கங்கள் அவர்களை கொல்லாது கொன்று கொண்டிருக்கிறது என்ற விவகாரமும், முன்னைய அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்திய, மஹிந்த ராஜபக் ஷ சார்ந்த குழுவினரையே நேரடியாக குற்றம் சுமத்தும் நிலையொன்று உருவாகிவருவதை அனுமானிக்கக் கூடியதாகவுள்ளது.

தினந்தோறும் பெருகிவரும் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து ஆடிவருகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அளிப்பதற்கு நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியுமா. முன்னெடுப்பதற்கான பாதை தொடர்ந்தும் திறந்திருக்குமா என்பதெல்லாம் தற்போதைய நிலையில் கட்டியம் கூறமுடியாத நிலையிலே காணக்கூடியதாகவுள்ளது.

இதேவேளை எந்த சவால்கள் வந்தாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனக் கூறிவரும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எத்தகைய உறுதியான முடிவை எடுப்பார் என்பதற்கு ஆருடம் கூற முடியாவிட்டாலும் நாட்டில் உருவாகிவரும் இன்றைய நச்சுச் சூழ் நிலையை வளரவிடாமல் நாடும் நாட்டுமக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் அவர்களின் தலைமைகளும் எதிர்பார்த்து நிற்கும் விடிவுப்பாதையைத் திறந்துவிடுவதற்கு ஜனாதிபதி பின்நிற்க மாட்டார் என்பதை அவரின் உறுதியான செயற்பாடுகளே நிரூபிக்கமுடியும்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=06/08/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.