Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம்

Featured Replies

யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம்
 
 

article_1474517024-Yemen.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

சமகாலத்தில் நிகழ்வனவற்றில் சில கவனத்தைப் பெற்றுவிடுகின்றன; பல கவனம் பெறுவதில்லை. நிகழ்வின் தன்மையை மட்டும் வைத்துக்கொண்டு கவனம் பெறுபவை எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. மாறாக அதனுடன் தொடர்புள்ள அரங்காடிகளும் அந்நிகழ்வு வேண்டி நிற்கும் உலகத்தின் கவனமும் அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே உலகத்தின் கவனிப்பற்று, ஒரு மூலையில் நடைபெறும் கொடுமைகள், பொதுக் கவனத்தை எட்டுவதில்லை.  

யேமன் மீது சவூதி அரேபிய ஆக்கிரமிப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கம் சவூதி தலைமையிலான கூட்டணி யேமனில் விடாது போரிடுகின்றது. இதனால் மத்திய கிழக்கெங்கும் விரிந்துவரும் ஷியா - சுன்னி மோதலின் புதிய சதுரங்கப் பலகையாக யேமன் நிலைமாறியுள்ளது.  

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் புள்ளிவிபரத்தின்படி இன்று யேமனில் 320,000 குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். மேலும் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன. உலகில் மிகவும் மோசமான மனிதாபிமானப் பேரவலம் யேமனில் மௌனமாக அரங்கேறுகிறது. அண்மையில் யேமன் வைத்தியசாலையில் எடுத்த எலும்பும் தோலுமான குழந்தைகளைக் காட்டும் படங்கள் 1990 களில் சோமாலியாவிலும் சூடானிலும் எடுத்த படங்களை நினைவூட்டுகின்றன.  

கடந்த ஓராண்டில் மட்டும் உள்நாட்டுப் போரால் யேமனில் 2,211 குழந்தைகள் உட்பட 9,136 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 1980 குழந்தைகள் உட்பட 16,690 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 2.4 மில்லியன் யேமனியர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். சவூதிப் படைகள் நடாத்தும் விமானத்தாக்குதல்களில் மூன்றில் ஒன்று என பொதுமக்களின் வாழ்விடங்கள்  குறிவைக்கப்படுவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.  

இந்த அவலம் யார் கண்களிலும் தெரியாமல் மறைக்கப்படுகிறது. சிரியாவில் நடப்பவற்றை ஊடகங்கள் கண்களை அகல விரித்து அவதானிக்கின்றன. ஆனால் கொஞ்சம் தொலைவிலுள்ள யேமனில் நடப்பவை தெரியாமற் போனமை குறித்த விளக்கமான விசாரணையை உலகம் வேண்டிநிற்கின்றது.  

வடக்கே சவூதி அரேபியா, மேற்கே செங்கடல், கிழக்கே ஓமான், தெற்கே ஏடன் வளைகுடாவும் அரேபியக் கடலையும் கொண்ட மேற்காசிய நாடான யேமன், அரேபியக் குடாநாட்டின் இரண்டாவது பெரியதும் மத்திய கிழக்கின் மிக வறியதுமான நாடாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டோமன், பிரித்தானியப் பேரரசுகளிடையே இரு கூறாகப் பிரிபட்ட யேமன் 1990 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த நாடானது. 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தத்தின் ஒரு பகுதியாக யேமனில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி அலி அப்துல்லா சாலேயைப் பதவி விலகுமாறும் மக்கள் நலத் திட்டங்களை வழங்குமாறும் கோரி மக்கள் தொடர்ந்து போராடினார்கள். ஒன்றிணைத்த யேமனின் முதலாவது ஜனாதிபதியான சாலேயின் 23 வருட ஆட்சி கள்வர் அரசு - அதாவது, உயர்குடிகள் சிலர் கட்டுப்படுத்தும், அரச நிறுவனம் எதுவுமற்ற கொள்ளையர்களின் ஆட்சி என அழைக்கப்பட்டது.  

மக்கள் போராட்டங்களின் விளைவால் சாலே, ஆட்சியைப் பிரதி ஜனாதிபதி ரபு மன்சூர் ஹாதியிடம் கையளித்து விட்டு நாட்டை விட்டு ஓடினார். மக்கள் போராட்டங்கள் அத்துடன் முடிவுக்கு வந்தாலும், அவை உரிமைக்கான போராட்டங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தன. 2004 ஆம் ஆண்டு முதல் வட யேமனில் உள்ள ஹெளதியர்கள் எனப்படுகின்ற ஷெய்டி - ஷியா பிரிவினரான அன்சார் அல்லாஹ் குழுவினர் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். யேமனிய முஸ்லீம்களில் 40 சதவீதமானோர் ஷெய்டி-ஷியா பிரிவினராவர். 2011 ஆம் ஆண்டு வரை யேமனின் வட மாகாணங்களில் இடம்பெற்று வந்த ஹெளதியர்களின் கிளர்ச்சி, அரபு வசந்தத்தின் பகுதியான யேமன் புரட்சியின் போது நாடு தழுவியதானது. ஹெளதியர்கள் மக்கள் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார்கள்.  

சலேயைத் தொடர்ந்து ஜனாதிபதியான ஹாதி ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து, அதில் அவர் மட்டுமே போட்டியிடும் வகையில் தேர்தலை நடாத்தி, தன்னை ஜனாதிபதியாக அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த ஹெளதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடாத்திப் பல பிரதேசங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சில இடங்களில் ஹெளதிகளும் அல் கைதாவினரும் சண்டையிட்டனர். ஜனாதிபதி ஹாதி தனது பதவியைத் தக்கவைக்க அல் கைதாவின் உதவியை நாடினார். இன்னொரு வகையில், ஷியா பிரிவு ஹெளதிகளுக்கும் சுன்னி பிரிவு அல் கைதாவுக்கும் இடையிலான போராக இது அமைந்தது.  

ஹெளதிப் படைகள் யேமனின் பல பகுதிகளைத் கைப்பற்றி தொடர்ந்து முன்னேறினர். 2014 ஓகஸ்டில் தலைநகர் சனாவின் பெரும் பகுதி ஹெளதிக் கிளர்ச்சியாளர்கள் வசமானது. ஆனால் நெருக்கடி முடியவில்லை. 2015 ஜனவரியில் ஹெளதிகள் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றினர். ஜனாதிபதியும் அமைச்சர்களும் பதவி விலகினர். தடுப்புக் காவலில் இருந்த ஜனாதிபதி ஹாதி தப்பியோடி துறைமுக நகரான ஏடனுக்குச் சென்று, அங்கிருந்து தான் பதவி விலகவில்லை எனவும் தொடர்ந்தும் தானே யேமனின் ஜனாதிபதி எனவும் அறிவித்ததைத் தொடர்ந்து சவூதி அரேபியாவுக்குத் தப்பியோடினார். 

அதைத் தொடர்ந்து, சட்டத்துக்குப் புறம்பான சக்திகள் யேமனில் இயங்குவதாகவும் ஜனாதிபதி ஹாதிக்கு ஆதரவாக இராணுவ வழியில் தலையிடுவதாகவும் சவூதி அரேபியா அறிவித்தது. சவூதி அரேபியாவுடன் குவைத், கட்டார், பஹ்ரேன், ஐக்கிய அரபு எமிரேற்ஸ், ஜோர்தான், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகள் ஒன்றிணைந்தன. யேமனில் அமைதி மீளவேண்டி இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு உதவிகளை சவூதி அரேபியக் கூட்டணிக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனிதாபிமானப் பேரவலத்தை சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளிகளும் யேமனில் நிகழ்த்துகின்றன. 

‘நியூயோர்க் டைம்ஸ்’ தகவலின்படி 500 க்கும் மேற்பட்ட இலத்தீன் அமெரிக்கக் கூலிப்படையினர் ஐக்கிய அரபு எமிரேற்றில் பயிற்சி பெற்று, இன்று சவூதி அரேபியாவுக்குச் சார்பாக யேமனில் போரிடுகின்றனர்.  

மத்திய கிழக்கில் இலத்தீன் அமெரிக்கக் கூலிப் படையினரின் பிரசன்னம் புதிதல்ல. குறிப்பாக பல்தேசியக் கம்பெனிகளும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களும் இலத்தீன் அமெரிக்கக் கூலிப்படையினரை ஈராக்கிலும் லிபியாவிலும் பணிக்கு அமர்த்தியுள்ளமை நன்கறிந்ததே. ஆனால் நேரடியாகப் போருக்கு அனுப்பப்படுவது இதுவே முதன்முறை. இது இனி உலகளாவிய ரீதியில் நடைபெறவுள்ள யுத்தங்களின் புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றது.  

இன்றும் யேமனைக் கண்டும்காணாமல் விடக் காரணங்கள் பல உள்ளன. முதலாவதாக, உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல நிறுவனங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகின்றன. சவூதி ஆக்கிரமிப்புத் தொடங்கிய ஓராண்டுக்குள் பிரித்தானியா நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஆயுதங்களைச் சவூதிக்கு விற்பனை செய்துள்ளது. குறிப்பாக, தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பிரித்தானியா சவூதிக்கு விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. அதேவேளை, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனக்கு முன்னர் பதவியிலிருந்த அமெரிக்க ஜனாதிபதிகளைத் தோற்கடிக்கும் அளவுக்கு சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த பெருமைக்குரியவராகின்றார்.  

இரண்டாவது காரணம், சவூதி அரேபியா நீண்டகாலமாக மத்திய கிழக்கின் அமெரிக்க அடியாளாகச் செயற்படுவதோடு மேற்குலகின் நெருங்கிய நண்பனுமாக இருந்து வருகின்றது. எனவே நண்பர்கள் செய்வதைக் கண்டும் காணாமல் விடுவது இயல்பு.  

மூன்றாவதாக, மத்திய கிழக்கில் நிகழும் மாற்றங்கள் அமெரிக்காவிற்கோ மேற்குலகிற்கோ உவப்பானவையல்ல. ஈரானின் வளர்ச்சியும் ஒரு போரிடும் சக்தியாக ஹிஸ்புல்லாவின் வலிமையும் ஈரான் - ரஷ்ய - சீனக் கூட்டும் விரும்பத்தக்கன அல்ல. இதற்கிடையில் தனது கொல்லைப் புறத்தில் இன்னொரு ஷியா சக்தியாக ஹெளதிகள் வளர்வதை சவூதி அரேபியா சகிக்காது. இவற்றின் விளைவுதான் இன்று யேமனில் நிகழும் யுத்தம்.  

யேமனின் அலுவல்களில் சவூதி அரேபியா தொடர்ந்து தனது செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளது. தனது அண்டை நாட்டை எவ்விதத்திலும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் ஊடாக பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தியதோடு யேமனைத் தொடர்ந்து தனது அடியாளாகப் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் யேமனில் இடம்பெற்ற புரட்சி, சவூதி சார்பான சலேயை அகற்றியபோதும் புதிய ஜனாதிபதி ஹாதியும் சவூதியின் கைப்பொம்மையாகவே செயற்பட்டார். ஆனால் ஷியா முஸ்லிம்களான ஹெளதிகளின் எழுச்சி சவூதி அரேபியாவை மிரள வைத்தது. குறிப்பாக, பிராந்தியத்தின் பிரதான அரங்காடி என்ற தகைமையை ஈரானிடம் இழந்துவிட்ட நிலையில் ஒரு வலுச்சண்டையின் ஊடாகவாவது தனது நிலையைத் தக்கவைக்கும் தேவை சவூதி அரேபியாவிற்கு இருந்ததாலேயே கடந்த ஓராண்டாக யேமனில் சண்டையிடுகிறது.  

இத்தனைக்கும் நடுவே சவூதியின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. தொடர்ந்தும் சரியும் எண்ணெய் விலைகள் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. தொடங்கிய பல பில்லியன் டொலர் பெறுமதியான கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பணம் செலுத்த வழியில்லாமல் சவூதி அரசு திண்டாடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் இலங்கை, இந்திய, பாகிஸ்தானியத் தொழிலாளர்களுக்குக் கடந்த பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. 690 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான கட்டுமானங்களை சவூதி அரசாங்கம் இடைநிறுத்தியும் நெருக்கடி தீரவில்லை. 100 பில்லியன் டொலர் துண்டுவிழும் வரவுசெலவுத் திட்டத்தை உடைய நாடு யேமனில் ஒரு யுத்தத்தைத் நடாத்துவது தான் விந்தை.  

அகங்காரம் பொதுவாக யதார்த்தத்துடன் உடன்பட நடப்பதில்லை. அது தனது அழிவிற்கான பாதையைத் தானே தெரிந்துகொள்கிறது. ஏனெனில் அகங்காரமும் அறிவீனமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இது அரசாங்கங்களுக்கும் பொருந்தும். கெடுகுடி நற்புத்தி கேளாது.   

- See more at: http://www.tamilmirror.lk/182394/ய-மன-சவ-த-அர-ப-ய-வ-ன-க-ல-க-களம-#sthash.p3ASH2TP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.