Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!

Featured Replies

"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!
 
 
"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!
இன்று முழு உலகமும் உல்லாசப் பயணத்துறையை நினைவுகூர்கின்றது. இயந்திரம் போல கடுமையாக உழைத்து களைத்து, உற்சாகமாக சில வாரங்களைக் கழிப்போம் என்ற நோக்கோடு, விமானத்தில் பறந்தோ, கப்பலில் மிதந்தோ, ரயில் பயணங்களை மேற்கொண்டோ அல்லது தமது சொந்த வாகனங்களில் பயணித்தோ உல்லாசமாக இருந்து விட்டு வருவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அறியாத ஒன்றல்ல.
 
thumbnail_lanka2.jpg
 
 
பறவைகள் இடம்பெயர்ந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்துச் செல்வது போல, கூட்டம் கூட்டமாக காட்டுவிலங்குகள் புதிதாக பயிர்பச்சைகள் உள்ள இடங்கள் நாடிச் செல்வதுபோல, நாட்டுக்கு நாடு மக்கள் பயணித்து வருகின்றார்கள்.
 
இந்தப் பயணங்களால் இன்று பல உலகநாடுகள் பெருமளவு சம்பாதித்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணத்துறையில் உலக நாடுகளை ஆய்வு செய்த மாஸ்டர் கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனம், கடுகதி வளர்ச்சிப் பாதையில் இலங்கை நான்காவது இடத்தில் நிற்கின்றது என்று அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. 
 
அதிலும் 132 உலக நாடுகளோடு போட்டிபோட்டுக் கொண்டு, இந்த நான்காம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விடயந்தான். போர்வடுக்களை இனனமும் சுமந்து கொண்டு நிற்கும் ஒரு குட்டி நாட்டுக்கு இந்த அந்தஸ்து ஒரு வரப்பிரசாதமே! 
 
1475046493_thumbnail_Sri-Lanka-tourism.jpg
 
இலங்கையை விடுத்து இந்த உல்லாசப் பயணத்துறை சர்வதேசரீதியாக என்ன நிலையில் இருக்கின்றது?
 
உல்லாசப்பயணத் துறை 2015 இல் 4.6 வீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகெங்கும் பயணிக்கும் உல்லாசப் பயணிகள் தொகையானது 1,184 மில்லியனைத் தொட்டுள்ளது என்கிறார்கள்.  
 
இந்தச் சுற்றுலாத் துறை சர்வதேசரீயில் ஒப்பிடும் போது ஏற்றுமதி வருவாயாக ரூபா 1.5 ரிறில்லியன் தொகையை சம்பாதித்துள்ளது. 
 
2030ம் ஆண்டளவில் உலக நாடுகளுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் தொகை 1.8 பில்லியனைத் தொடும் என்று ஆருடம் சொல்கிறது.
 
thumbnail_lanka1.jpg
கணிசமான வளர்ச்சிதான்.
உல்லாசப் பயணிகளை எதிர்பார்க்கும் நாடுகளுக்கு இது உற்சாகமான செய்திதான். பணம் காய்க்கும் மரம் நாட்டுக்குள் முளைவிடுவதை எந்த அரசுதான் விரும்பாது?
 
தேர்ந்தெடுத்த 132 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில்தான் இந்த வருட உல்லாசப் பயணத்துறை நாள் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இடம்பெறப் போகின்றன.
 
உல்லாசப் பயணத்துறை வளர்ச்சி ஒருபுறமிருக்க இந்தத் துறை தரும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் சற்று நோக்க வேண்டியுள்ளது.
 
பல வேலை வாய்ப்புகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் வழங்குவது இதிலுள்ள பெரிய சௌகர்யம். இந்த உல்லாசப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சாதனங்கள் மறைமுகமாக வருவாய் தேடிக்கொள்கின்றன. 
 
இவர்கள் தங்க இடம்கொடுக்கும் விடுதிகள் பணம் சம்பாதிக்கின்றன. இப்படி ஒன்றைத் தொட்டு இன்னொன்று என்ற கதையாக உல்லாசப் பயணிகள் வருகை பலருக்கு பல வழிகளில் உழைப்பைத் தேட வழி சமைக்கின்றன.
 
இவை மட்டுமின்றி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து பேண இந்த உல்லாசப் பயணத்துறை உதவி வருகின்றது என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். 
 
1475046510_thumbnail_tourists.jpg
தன் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணித்து வருபவர், அந்த நாட்டுக்கே தனித்துவமாக விளங்கும் மொழி, உடைக் கலாச்சாரம், உணவு முறை, நாட்டியங்கள், தேசிய விழாக்கள் போன்றவற்றையே பார்த்து, ரசித்து, சுவைக்க விரும்புகின்றார். 
 
இலங்கை வருபவருக்கு மேற்கத்தைய நடனங்களில் நாட்டம் இருப்பதில்லை. மாறாக இங்குள்ள கிராமப்புற நடனங்களே அவர்களைக் கவர்கின்றன. இங்குள்ள பாராம்பரிய திருவிழாக்களே அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன. எனவே பலராலும் கைவிடப்பட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளுக்கு இந்த உல்லாசப் பயணத்துறை உயிர் கொடுக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. 
 
கத்தி இருந்தால் கழுத்தை அறுக்கலாம் கத்தரியையும் அறுக்கலாம் என்ற அந்தப் பழைய உதாரணத்தைத்தான் மீண்டும் சொல்லவேண்டியள்ளது. 
 
உல்லாசப் பயணத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயிர்நாடியாக இருப்பினும், சில நெருடல்களையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
 
சனநெரிசல் என்பது முக்கியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கொழும்பு போன்ற பெரிய நகரங்கள் வாகனங்கள், பொதுமக்கள் என்று நெரிசல் மிகுந்த நகரங்களாகி இருக்கின்றன. 
இந்த நெரிசலை அதிகப்படுத்துவது போல உல்லாசப் பயணிகளின் வருகையும் சில சமயங்களில் அமைந்து விடுகின்றது. போதை வஸ்துகள் புழங்குவதற்கும் இந்த உல்லாசப் பயணிகளே காரணிகளாகி விடுகின்றார்கள். 
 
விபச்சாரம் அதிகரிக்க, மதுபாவனை உயர இதே உல்லாசப் பயணிகள் ஒரு காரணமாக அமைவதில் ஆச்சரியமேதும் இல்லை. வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க புதிதாக எழும்பும் பல கட்டடங்கள், பல ஏழைமக்களின் குடிமனைகளை பாதிக்கவும் தவறவில்லை. 
 
இயற்கையாகவே ஒரு நாட்டிற்கு கிடைக்கும் மூலவளங்கள் கூட உல்லாசப் பயணிகள் வருகையால் பாதிப்பு அடைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக தண்ணீர் விநியோகம் தடைப்படுதல், பாரம்பரிய இடங்கள் பாதிப்படைதல், சூழலை மாசுபடுத்தும் அதிக கழிவுகள், அதிக வாகனங்களால் வெளிக்கிளம்பும் புகை,  மாசுபடும் கடற்கரையோரங்கள், பவளப் பாறைகள் என்று பட்டியல் நீள்கின்றது.
 
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த உல்லாசப் பயணத்துறையில் சாதகங்கள் அதிகம் போல் தோன்றும். அரசு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்து கெடுபிடியாக இருந்தால், உல்லாசப் பயணத்துறையின் சாதகங்களே மிகையாக இருக்கும் என்பது திண்ணம்.
 
thumbnail_lanka.jpg
சரி இலங்கை இத்துறையில் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. சந்தோஷந்தான் நான்காம் இடத்தில்தானே இருக்கின்றது? முதலாம் இடத்தைப் பிடிக்க வேண்டாமா?
 
உல்லாசப் பயணத்துறை என்பது எல்லா வயதினருக்கும் உரியது. ஆனால் உல்லாசப் பயணம் என்பது இளம் வயதினருக்கு உரியது என்றொரு மாயை நிலவுகின்றது. 
 
இருப்பினும் 2030இல் வயதாளிகள் தொகை பெருமளவு அதிகரிக்கப் போகின்றது என்று புள்ளி விபரங்கள் சொல்லும்போது, வருவாய் ஈட்டும் இந்தத் துறை வயதாளிகளைக் குறிவைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றவில்லையா?
 
2030இல் ஐ.நா.சபையின் புள்ளி விபரங்களின்படி, உலக ஜனத்தொகையில் அறுவரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவர் 60 வயதைத் தாண்டிய முதியவராக இருப்பாராம்.
2015ம் ஆண்டில் இலங்கை வருகை தந்த உல்லாசப் பயணிகள் தொகையை நோக்கினால் இதில் 11.4 வீதமானவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
 
எனவே ஏனையவர்களை விட அதிக ஓய்வு நேரமும், நிரந்தர ஓய்வூதிய வருமானமும் கொண்ட இவர்களை நன்கு ஆதரிக்கும் நாடு என்ற பெயரைத் தட்டிக் கொண்டால், இந்தப் பதினொரு வீதம் இரண்டு மடங்காகவோ, மூன்று மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புண்டல்லவா?
 
விமான இருக்கைகளில் சக்கர நாற்காலிகளுடன் கூடிய வசதி என்று தொடங்கி, இவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அவர்களை கவனிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் அவர்களின் மொழி தெரிந்த நபர், மற்றும் அவர்களுக்கான துரித மருத்துவ சேவை, வினைத்திறனான பணப்பரிமாற்று சேவை, அவர்களை கவரும் பொழுதுபோக்குகள் வரை வசதிகள் செய்து கொடுக்கப்படுமாயின் இந்த ஓய்வு பெற்றவர்கள் இங்கு அதிக தொகையில் வரலாம் அல்லவா?
 
இந்த வசதிகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், இணையப் பிரச்சாரங்கள் மூலம் இவற்றறை உலகறியச் செய்யும்போது, வாய்ப்புகள் விரிகின்றன என்று சொல்லவும் வேண்டுமா?
 
ஒரு நாட்டிற்கு வருகை தருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வருகை தருகின்றனர். நாம் இவர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக உல்லாசப் பயணிகள் என்று முத்திரை குத்தி விடுகின்றோம். 
 
1475046530_thumbnail_tourists-at-the-maha-oya-river-.jpg
தமது வேலைத் தலங்களில் ஆற்றிய சேவைக்காகக் ளெரவிக்கப்பட்டோ, அல்லது பாராட்டப்பட்டோ பரிசாக ஒரு பயணத்தைப் பெற்று உல்லாசப் பயணிகளாக நாடு விட்டு நாடு செல்பவர்கள் ஒரு சாரார். 
 
தங்கள் உடல்நிலை அசௌகர்யம் காரணமாக ஒரு வாரமோ ஒரு மாதமோ தங்கியிருந்து நல்ல சிகிச்சை பெற்று சொந்த நாடு திரும்புபவர்களும் உல்லாசப் பயணிகளே. தமது வர்த்கப் பரிமாற்றத்திற்காக, பேச்சுவார்த்தைக்காக எனப் புறப்பட்டு ஒரு வார காலம் நின்று திரும்புவோரும் உல்லாசப் பயணிகள்தான். சில வருடங்கள் தங்கியிருந்து பல்கலைக் கழகப் படிப்பை முடிக்கவோ, அல்லது மேற்படிப்பை முடிக்க ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருப்பவர்களையும் நாம் உல்லாசப் பயணிகள் என்றே அழைக்கின்றோம்.
 
ஆபத்தானவைகளாக இருந்தாலும், அதை நேசிப்பவர்கள் (உதாரணத்திற்கு மலையேறுவது) சாகசங்களை விரும்பி உல்லாசப் பயணிகளாக இன்னொரு நாட்டிற்கு போய் வருகின்றார்கள். சமய அனுஷ்டானங்களுக்காக, யாத்திரை மேற்கொள்பவர்களும் உல்லாசப் பயணிகளே.
 
வேலைப் பளு கொஞ்சம் குறையட்டும் என்று மனைவி பிள்ளைகளோடு, பாடசாலை விடுதலை நாட்களில் இன்னொரு நாட்டிலுள்ள உறவினர் வீடு சென்று அங்கு தங்கி நாட்டையும் சுற்றிப் பார்த்து வீடு திரும்புபவர்கள் இன்னொரு ரக சுற்றுலாப் பயணிகள்.
 தனியனாக தோளில் பொதிகளுடன் எந்த விடுதிகளையும் நம்பாமல் பாதையோரங்களில் படுத்துறங்கி நடையில் பலதையும் பார்த்து ரசிக்கும் உல்லாசப் பயணிகளும் இருக்கின்றார்கள். விளையாட்டு விழாக்களில் போட்டியாளர்களாகப் பங்கேற்க வந்து, மேலதிகமாக ஒரு வாரத்தையும் கழித்து விட்டு செல்லும் உல்லாசப் பயணிகளையும் நீங்கள் காணலாம்.
 
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, உல்லாசப் பயணிகள் என்றால் அதில் கூட பலரகம் என்பதை நீங்கள் இப்பொழுது நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள்.
 
அது எந்த ரகமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அதே உல்லாசப் பயணியை இருட்டில் மடக்கி வல்லுறவு கொள்ள முயல்வதோ அல்லது, அவர்களது விலையுயர்ந்த கைப்பேசியை திருட எத்தனிப்பதோ, அல்லது அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபடுவதோ ஒரு நாட்டின் உல்லாசப் பயணத்துறையை வளர்க்க என்றுமே உதவப் போவதில்லை..
 
வளர்சிப் பாதையை நோக்கி வீறுநடைபோட்டு நடக்க வேண்டுமானால் அரசு மட்டுமல்ல நாட்டு மக்களினன் கணிசமான பங்களிப்பும் இருந்தால்தான், இந்தத் துறை வளரும், முதலாம் இடத்தைப் பிடிக்கும்.
 

http://onlineuthayan.com/article/253

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.