Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா?

Featured Replies



தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா?
 
 

 

article_1476764282-dcf.jpgப.தெய்வீகன்

ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. 

இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக்காள் ‘கொம்பு சீவும்’ அறிக்கைகளும் ஊடகங்களை நிரப்பிய வண்ணமுள்ளன. தங்களது எதிர்ப்புகளை நேரடியாக முன்வைப்பதிலும் பார்க்க, மக்களின் ஊடாக அதனை முடுக்கிவிடவேண்டும் என்பதில் பல்வேறு தரப்புக்களும் ஆர்வமாக உள்ளன.  

சரி! இப்போது கேள்வி என்னவென்றால்?  

சிவசேனா அமைப்பு எதிர்க்கப்பட வேண்டியதுதானா? ஆம், என்றால் அதனை எந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்? இது தொடர்பாகத்தான் இந்தப் பத்தி ஆராயவிருக்கிறது.  

இந்தியாவின் அகன்ற பாரதக்கொள்கையின் ஒரு படிமுறை நிகழ்ச்சியாக இந்துத்துவ கொள்கையில்த் தோய்ந்து எழும்பிய மதவாத அமைப்புகள் இந்தியாவின் உள்ளும் புறமும் பிரத்தியேக நிகழ்ச்சி நிரலின் ஊடாகத் தங்களது சிலந்தி வலைகளைப் பின்னி வருகின்றன. சீனா எவ்வாறு தனது ‘முத்துமாலை’த் திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோன்ற உபாயத்தை இந்தியா தனது அயல் தேசங்களில் மிகச்சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. 

ஈழத்தமிழர்களின் தாயகத்தில் ஊடுருவுகின்ற இவ்வாறான அமைப்புக்களினால் ஏற்படப்போகும் தாக்கங்களும் அதன் விளைவுகளும் மிகப்பாரதூரமானவை என்பதில் எந்த ஐயப்பாடும் இருக்கமுடியாது.  

உண்மையிலேயே மத ரீதியான, தூய சிந்தனையுடன் இப்படியான அமைப்பு வடக்கில் தொடங்கப்படவேண்டுமானால், அந்த நோக்கத்தை இந்த அமைப்பை ஆரம்பிப்பதன் ஊடாகத்தான் மேற்கொள்ளவேண்டும் என்றில்லை. தமிழர் தாயகத்தில் ஏற்கெனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏதாவது ஓர் அமைப்பின் ஊடாகவோ, இல்லை ஏதாவது அரசியல் கட்சியின் ஊடாகக்கூட அந்தச் செயல்திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். வடக்கிலுள்ள குறிப்பிட்ட சமய அமைப்புக்களுடன் கலந்துரையாடியிருக்கலாம். ஆனால், அப்படியான தெரிவுகளையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தானே நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் இந்த அமைப்பின் - கட்சியின் - எதிர்கால நிகழ்ச்சி நிரல் என்ன என்பது வெளிப்படையாக துலங்கியிருக்கிறது. 

மறைமுகமாகச் செய்யவேண்டிய காரியங்களைக்கூட வெளிப்படையாக மேடைபோட்டுச் செய்யுமளவுக்கு ஈழத்தமிழர்களது அரசியல் களம் அவ்வளவு ஜனநாயகச் செழுமையடைந்துவிட்டதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் போவதற்கு முன்னால் இந்தப் பத்தியின் மிகமுக்கியமான விடயத்துக்கு வருவோம்.  

இப்போது ஈழத்தமிழர்களின் முன்னிருக்கும் தெரிவுகள் என்ன?  

இந்துத்துவத்தை எதிர்ப்பதா? அல்லது  

இந்துத்துவமே இந்தியா என்று கொண்டு, வருகின்ற இந்தியாவை எதிர்ப்பதா? அல்லது 

இணையத்தில் எல்லோராலும் குதறி எடுக்கப்படும் சிவசேனாவின் ஈழப்பொறுப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை எதிர்ப்பதா? அல்லது, இவை மூன்றையும் ஒருங்கே எதிர்த்துத் தனித்துப் போரிடுவதா? 

இந்த வினாக்களின் ஊடாகத்தான் தமிழர்களின் தாயகத்தில் கால்பதித்திருக்கும் சிவசேனாவின் வருகை குறித்து விவாதிக்க முடியும்; அல்லது உருப்படியான விடைகளைக் காணமுடியும்.  

சிவசேனாவின் ஈழப்பொறுப்பாளரான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் - இலக்கியப் பரப்பில் பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பணிகள் கணக்கிடமுடியாதவை. ஆனால், இந்தப் பணியின் முன்பாக அவர் விலை போய்விட்டார் என்றும் கொள்கைளில் தவறிவிட்டார் என்றும் மேற்கொள்ளப்படும் வாதங்கள் வெறுமனே செல்லாக்குரல்களே அன்றி வேறொன்றுமில்லை. அப்படியே விலைபோய்விட்டார் என்று அவரைக் கைக்கூலியாக முத்திரை குத்திவிட்டாலும் இந்தியாவின் இந்தத் திட்டத்துக்கு நாளை வேறொருவர் கிடைத்திருப்பார். அவ்வளவுதான்! மற்றும்படி, சிவசேனாவின் வருகை என்பது திசை மாறியிருக்க வாய்ப்பில்லை.  

அப்படியென்றால், மிகுதி இரண்டு கேள்விகளும்தான் ஈழத்தமிழர்களின் முன்பாக வியாபித்திருக்கப் போகின்றன. 

அதாவது, தங்களது நலன்களுக்குப் பங்கம் தரக்கூடிய இந்துத்துவத்தையும் இந்தியாவையும் முற்றாகப் புறக்கணிக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை நிராகரிக்கவும் ஈழத்தமிழ் சமூகம் இன்றைய காலகட்டத்தில் முழுமையான சக்தியை கொண்டிருக்கிறதா? தங்களது இனமானம் சார்ந்த ஓர்மத்தினை அல்லது அந்த வீச்சு மிக்க சக்தியை தமிழர்களின் தற்போதைய தலைமை தனது மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறதா? 

ஈழத்தமிழர்களின் தீர்வெனப்படுவது பாரதத்தின் அரவணைப்பில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதுபோன்ற வாதங்கள், அரசியல் கொள்கைப் பிரகடனங்கள் எல்லாம் ஒருபுறமிருக்கச் சமரசம் செய்யப்பட முடியாத ஈழத்தமிழர்களின் நலன்களின் மீது ஆழமான தாக்கங்களைச் செலுத்தும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதனை எதிர்க்கும் சக்தியை இன்று ஈழத்தமிழர்கள் முழுமையாக பெற்றிருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.  

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், இந்தியா என்று வந்துவிட்டால் அதன் சார்பில் மேற்கொள்ளப்படும் எதனையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு கையறுநிலையில் கிடக்கிறது. 

சுருக்கமாகச் சொன்னால், ஈழத்தமிழர்களின் மொத்த அடையாளத்தையும் இந்தியா, மெல்ல மெல்லத் தனது காலாசாரப் பொருளாதார மேலாதிக்கத்தினால் விழுங்கி வருகின்றது. போன தலைமுறையிலும் பார்க்க, இந்தத் தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் தங்களை அறியாமலேயே இந்த மாய வலையில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

கிழக்கிலுள்ள முஸ்லிகளின் செறிவு காரணமாகவும் அங்கு அவர்கள் வியூகப்படுத்தியுள்ள அரசியல் காரணமாகவும் அப்பிரதேசத்தில் ஆழமாகக் காலூன்ற முடியாத இந்தியா, வடக்கை முழுமையாக வசதிப்பட வைத்திருக்கும் இந்தத் திட்டமொன்றும் யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல; இதற்காக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் தூதரகம் ஆற்றிவரும் இரவுபகல் பாராத பணியும் எவருக்கும் புரியாதது அல்ல.  

இனி, இரண்டாவது விடயத்தைப் பார்த்தால், இந்து மதம் சார்பானது.  

தமிழர்களது போராட்டம் எனப்படுவது மதங்களைக் கடந்தது என்று எத்தனை வருடங்களுக்குத் தமிழர்கள் பெருமையாக மார் தட்டிக்கொண்டாலும் மதமும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள போலிக்கோட்பாடுகளும் சாதியைப்போல தமிழினத்தில் ஆழமாக வேரூன்றிக் கிடப்பவை ஆகும். இந்த யதார்த்தத்தை விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில்கூட தமிழர் தாயகத்தில் காணக்கூடியதாக இருந்தது. இப்போதும் அதன் பிற்போக்கான வளர்ச்சியைக் காணக்கூடியதாகத்தான் உள்ளது.  

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு கட்டத்திலும் அவர்களால் கைவைத்து தீர்க்கமுடியாமல்போன விடயங்களில் ஒன்றுதான் கட்டுக்கடங்காத மதவாதமும் அதன் போலி கோட்பாடுகளினால் ஏற்பட்ட சிக்கல்களும் ஆகும். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் பல முனைகளில் கூராக வெளித்தள்ளிக்கிடந்த ஒன்றாகும். சமய வழிபாடுகள் என்ற கலாசாரக் கட்டுமானத்துக்கு அப்பால், மதத்தின் பெயரால் இடம்பெற்ற எத்தனையோ சிக்கல்கள், பிடுங்குப்பாடுகள், தான்தோன்றித்தனங்கள் போன்ற சமுதாய பிறழ்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் காலத்தில் இயன்றளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அவை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட முடியாத பெரும்பிரச்சினைகளாகவே காணப்பட்டன. 

அப்பொழுதே அப்படியென்றால் இப்போது எம்மாத்திரம்? இந்தக் கேள்விக்கு அண்மையில் பார்த்த ஓர் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் இங்கு மிகப்பொருத்தமான பதிலாகச்
சுட்டிக்காட்டப்படக் கூடியதாகும். 

அதாவது, ‘புங்குடுதீவு ஒரு சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படத்தில் புங்குடுதீவு பிரதேசவாசி ஒருவர் கூறுகையில், புங்குடுதீவுப் பிரதேசத்தில் ஆலயங்கள் கட்டுவதற்கு ஒரு வருடத்துக்கு மாத்திரம் வெளிநாட்டிலிருந்து 20 கோடி ரூபா அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு காரணம், அந்தச் சிறுதீவில் சாதியின் பெயரால் சிதைந்து கிடக்கும் சமூகங்களாகும். தங்களது கோயில்களாகப் பிரகடனப்படுத்தியுள்ள வணக்கத்தலங்களுக்குள் வேறு சாதிக்காரரை அனுமதிப்பதில்லை என்றும் இதனால் ஒவ்வொரு சாதி அமைப்புக்களும் தமக்குத் தமக்கென்று கோயில்களை கட்டிக் கடவுளை சொந்தம் கொண்டாடுவதில் முண்டியடிக்கிறார்கள் என்றும் அவர் விவரிக்கிறார்.  

இப்படியாக மதமும் சாதியும் ஒன்றுக்கொன்று பிணைந்து, அதற்கு அப்பாலும் பிற காரணிகளால் ஏற்கெனவே உழன்றுகொண்டிருக்கும் சமூகக்கட்டமைப்பில் சிவசேனாவும் இந்தியாவும் இப்போது வந்து புதிதாக என்ன பிரளயத்தை ஏற்படுத்தி விடப்போகிறது? 

மொழியிலும் கலாசாரத்திலும் பண்பாட்டிலும் முற்றுமுழுதாக இந்தியாவின் இன்னொரு மாநிலமாக உருவெடுத்துவரும் வடபுலத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம் புதிதாக என்ன கலவரத்தை ஏற்படுத்திவிடப்போகிறார்? 

வாக்கு அரசியலுக்கு அப்பால் சமூக முன்னேற்றத்திற்காகவும் மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் பிற்போக்குத் தனங்களைக் களைந்து கொள்வதற்காகவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறுபவர்களும் சமூக பிரதிநிதிகளும் என்ன செயல்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்?  

தமிழர்களின் ‘தந்தை நாடு’ என்பதற்காக ஈழத்தமிழர்கள் தங்களது முழுமையான நலன்களை அடகுவைத்துவிட்டுத்தான் அந்தத் தந்தையின் அரவணைப்பையும் பாசத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது என்ன தலையெழுத்தா?  

தமிழினதும் இன்று ஆழமாகச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய களங்கள் தொடர்ந்தும் துவாரங்கள் நிறைந்தவையாகவே காணப்படுகின்றன. இந்தத் துவாரங்கள் நிறைந்த தளங்களில் இருப்பவற்றையே தேக்கிவைப்பதற்கு வலுவில்லாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

சிவசேனாவின் வருகையில் சீறி சினப்பவர்களும் வெஞ்சினத்தால் வெருண்டு திமிறுபவர்களும் முதலில் அந்த மக்கள் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். அந்த மாற்றங்களின் பாதையில் இனத்தின் நலன்சார்ந்த யதார்த்த அரசியல் கோட்பாடுகளைக் கட்டமைக்க வேண்டும். அதற்கு பின்னர், இந்த எதிர்ப்பு, புறக்கணிப்பு போன்றவற்றை பற்றி பேசலாமே!   

http://www.tamilmirror.lk/184168/தம-ழர-க-க-ச-வச-ன-ப-ர-ம-ச-தன-ய-

  • தொடங்கியவர்
சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி

 

article_1476886201-prujoth.jpgவேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு - கிழக்கைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக ஆளுமை செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், ஓடி ஒழிந்து கொண்டவர்களும் அரங்கிற்கு வர மறுத்தவர்களும் கூட, பிரபாகரனின் அடையாளத்தைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், இந்தத் தரப்பினரின் பின்னணி என்ன? நோக்கம் எவ்வகையானது? என்பது பற்றியெல்லாம் தமிழ் மக்கள் மிகவும் அவதானத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. 

 “பிரபாகரன் மீது எவனாவது கை வைத்தால்; அது இந்தியாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்ரே தன்னிடம் தெரிவித்திருந்ததாகத் தமிழரசுக் கட்சியின்ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், தமிழறிஞருமான மறவன்புலவு க.சச்சிதானந்தம் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கூற்றினை அவர் வெளியிட்ட தருணம் சுவாரஸ்யமானது. ஏனெனில், கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகளில் ஒருவராகக் குறிப்பிட்டளவான பதிவுகளைக் கொண்டிருக்கின்ற மறவன்புலவு க.சச்சிதானந்தம்; தற்போது புதிய வாளொன்றைத் தன்னுடைய கைகளில் ஏந்தி வந்திருக்கின்றார். அந்த வாளின் பெயர் ‘சிவசேனா (சிவசேனை)’.  

வவுனியாவில் கடந்த ஒன்பதாம் திகதி சிவசேனா என்கிற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையில் இந்து மதத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்து மதத்தினைப் பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த அமைப்பினை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்திருக்கின்றார். அந்த அமைப்பின் இன்னொரு முக்கியஸ்தர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்.  

மத - மார்க்கப் பின்பற்றுகை என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட சுதந்திரம். அதுபோல, மத- மார்க்க நெறிகளைப் பாதுகாக்கும் நோக்கில்அமைப்புக்களையும் நிறுவனங்களையும் ஆரம்பிப்பதும் கொண்டு நடத்துவதும் கூட ஜனநாயக உரிமை. அப்படிப்பட்ட நிலையில், சிவசேனாவின் வரவு ஏன் இவ்வளவு அதிர்வுகளை உண்டு பண்ணியிருக்கின்றது என்கிற கேள்வி எழுகின்றது. அந்தக் கேள்வியிலிருந்து சிலவிடயங்களைப் பார்க்கலாம்.  

இந்தியாவில் இரத்தக் களறிகளோடு சம்பந்தப்பட்ட பதிவுகளைக் கொண்டிருக்கின்ற அமைப்பு சிவசேனா. அதுபோல, இலங்கையில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் பௌத்த அடிப்படைவாதத்தை வலியுறுத்தி ஏனைய மதங்கள், மார்க்கங்களின் மீது தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்ற அமைப்பு பொதுபலசேனா. இந்த இரண்டு அமைப்புக்களும் மத அடிப்படை வாதத்தினை முன்னிறுத்துகின்ற அமைப்புக்கள். ‘சேனா’ அல்லது சேனை என்றாலே அடிப்படைவாதிகள் என்கிற உணர்வுநிலை மக்களிடம் ஏற்கெனவே இருக்கின்ற ஒன்று. அப்படிப்பட்ட நிலையில்தான், மறவன்புலவு க.சச்சிதானந்தம் சிவசேனாவை வடக்கு, கிழக்கிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.  

சிவசேனாவை ஆரம்பித்ததன் பின்னர் மறவன்புலவு க.சச்சிதானந்தம், இந்தியத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி, மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. அந்தச் செவ்வி முழுவதும் ‘தமிழ் இந்துக்கள்’ தனித்து இயங்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை வலியுறுத்தி வருகின்றார். அல்லது, ஈழத்தமிழர்கள் என்கிற அடையாளத்துக்குள் இருக்கின்ற இந்துக்களையும் (‘சைவர்கள்’ என்று அவர் குறிப்பிடவில்லை) கிறிஸ்தவர்களையும் இரு வேறு பிரிவுகளாகப் பிரித்துவிட்டு அரசியலை அணுக வேண்டும் எனும் தொனியோடு பேசுகின்றார். 

ஆரம்பத்தில் பௌத்த மத அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்களிலிருந்து வடக்கு, கிழக்கினையும் இந்து மதத்தினையும் காப்பாற்ற வேண்டிய அவசியமே சிவசேனையை ஆரம்பிக்கத் தூண்டியதாகக் கூறும் அவர், இறுதிக் கட்டத்தில் மிகவும் தெளிவாக, தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பிரித்து தனியே விட வேண்டும் என்கிறார். அதற்காக, அவர் வரலாற்றுப் பக்கங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.  

அதாவது, “இலங்கை மதச் சார்பற்ற நாடல்ல; மாறாகப் பௌத்த மதத்தை அரசியலமைப்பிலேயே முதன்மையாகக் கொண்டிருக்கின்ற மதச்சார்புள்ள நாடு. 1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின், நாடு பூராவும் பௌத்தமே என்கிற கொள்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆக, அதிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.  

இன்னொரு பக்கம், தமிழ் பேசும் மக்களாக இருந்த இஸ்லாமியர்கள் இந்திய அமைதிப் படையின் வருகையோடு (1987), தமிழ் அரசியல் தலைமைகளைப் புறக்கணித்துவிட்டுத் தனியாகச் சென்று விட்டார்கள். அவர்கள், இன்றைக்கு தனித்தே இயங்கி வருகின்றார்கள். அவர்கள், தமிழர் அடையாளத்துக்குள்ளும் வருவதில்லை.  

தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் 2009 இன் மோசமான விளைவுகளைச் சந்தித்ததற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று இந்துக்கள் கருதுகின்றார்கள். இந்தியாவின் ஆதரவு இல்லாமல், ஈழத்தமிழர்களின் சிக்கல் தீராது என்கிற கொள்கைக்கு மாறாக கிறிஸ்தவர்கள் செயற்பட்டார்கள் என்கிற கருத்தும் உண்டு. மேலை நாட்டு ஆதரவுடன் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம் என்கிற கருத்தினைக் கிறிஸ்தவர்கள் முன்வைத்தார்கள். இந்தியா எங்களுக்கு தேவையில்லை; ஏனெனில், இந்தியா இந்துத்துவ நாடு; இந்துப் பெரும்பான்மை நாடு; இந்தியா வந்தால் தங்களுடைய செல்வாக்குக் குறைந்துவிடும் என்ற கண்ணோட்டத்தில் மேலை நாடுகளின் தலையீட்டை கிறிஸ்தவர்கள் விருப்பினார்கள். எங்களுடைய பின்னடைவிற்கு அது பெரிய காரணம்” என்கிற விடயங்களை மறவன்புலவு க.சச்சிதானந்தம் குறிப்பிட்டிருக்கின்றார்.   

தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களின் போக்கில் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை எங்களுடைய அரவணைப்புக்குள்ளிருந்து தொலைத்துவிட்டு, இலங்கையில் சிறுபான்மையினங்களின் பலத்தினைப் பிளவுபடுத்தி விட்டு, ஏமாற்றமடைந்திருக்கின்ற தருணத்தில், தமிழ் மக்களுக்குள் சிறிய தொகையிலிருக்கின்ற கிறிஸ்தவர்களையும் பிரித்துவிட்டு ஒற்றைப் படையான குழுவாக இயங்கக் கோருகின்ற அடிப்படையை சிவசேனாவின் ஆரம்பம் முன்வைக்கின்றது. இந்த நகர்வு, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சாதி ரீதியிலான அடையாளங்கள் சார்ந்தும் பிளவுகளை ஏற்படுத்தி, ஆறுமுகநாவலர் கலாசாரத்தினை மீளவும் தீவிரமாக விதைத்து விடுமோ என்கிற அச்சத்தினையும்தோற்றுவித்திருக்கின்றது.  

தமிழ்த் தேசியப் போராட்டங்களின் போக்கில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்கிற பிரிவினை எந்தத் தருணத்திலும் வந்ததில்லை; குறிப்பாக, தமிழ்த் தேசியத் தந்தையாக கிறிஸ்தவ மதத்தினைப் பின்பற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைத் தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுபோல, புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் மதம் சார்ந்தோ, சாதிகள் சார்ந்தோ எதனையும் முன்னிறுத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில், சிறு பிளவினை முன்னிறுத்தும் விடயமும் கூட மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களின் பெரும்பான்மையானவர்கள் கவனமாக இருக்கின்றார்கள்.  

சிவசேனாவுக்கும் இந்தியாவின் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கும் நேரடியாகத் தொடர்புகள் இல்லை என்று மறுக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தம், சிவசேனாவின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சை ரவுத் தமக்கு உடனடியாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயங்களையெல்லாம் அவர் கூறுகின்ற நிலையில், மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட திட்டங்களோடும் நோக்கங்களோடும் இயக்குகின்ற திறனைக் கொண்டவர் போலக் காட்டிக் கொள்கின்றார். அதுவும் ஒருவகையிலான அச்சுறுத்தலை உண்டு பண்ணுகின்றது. ஏனெனில், மதமொன்றை காப்பாற்றுவதற்கான அமைப்பினை ஆரம்பித்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஒருவர், இரத்தக் களறிகளோடு சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவு கிடைத்துள்ளதான மகிழ்வினைப் பெருவாரியாக வெளியிடுவதும், தமிழ்க் கிறிஸ்தவர்களைத் தனித்து அனுப்ப வேண்டும் என்பதை எந்தவித பதற்றம் இன்றிக் கூறுவதையும் நிச்சயமாக யாராலும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாதது. 

 பௌத்த சிங்கள தேசியவாதம் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் நாடொன்றின் ஏனைய சமூகத்தினர், தங்களது அடையாளங்களைத் தக்கவைக்கப் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால், அந்தப் போராட்டங்கள் இன்னும் இன்னும் குழப்பங்களையோ பிரிவினைகளையோ ஏற்படுத்துதல் ஆபத்தானது. இலங்கையில் பௌத்த அடிப்படைவாத சிந்தனையாளர்கள் மாத்திரமல்ல; இந்து அடிப்படைவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் உண்டு. இவற்றில் மூர்க்கத்தோடு இயக்கும் அமைப்புக்களும் உண்டு. அவ்வாறான அமைப்பொன்றின் வீரியமான வடிவமாகவே சிவசேனாவின் அறிமுகத்தினைப் பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அது முன்மொழியும் விடயங்கள் அப்படியிருக்கின்றன. இதனிடையே, சிவசேனாவின் ஆரம்பம் தொடர்பில் உள்நாட்டு ஊடகங்கள் கவனம் செலுத்தியதைக் காட்டிலும் தென்னிந்திய ஊடகங்கள் பேசிக் கொண்டவை ஏராளம். அதன் பின்னணி பற்றித் தேடிப் பார்த்தாலும் அது எதிர்மறையான விடயங்களையே கொண்டு வந்து சேர்க்கின்றது.  

ஆயுத மோதல்களின் முடிவும் கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் வடக்கு, கிழக்கில் நிறைய விடயங்களையும் தரப்புக்களையும் புதிதாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றில் பல தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலானவையாகவே காணப்படுகின்றன. அதன் நீட்சியாகவே மறவன்புலவு க.சச்சிதானந்தம் சுழற்றியுள்ள ‘சிவசேனா’ என்கிற வாளையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனாலும், அதற்கான ஆதரவினைத் தமிழ் மக்கள் வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவுக்கு இல்லை. சமூகத்தில் புற்றை ஏற்படுத்துவதற்கான நோய்க்கூறினை கண்டறிந்தால் அதனை அகற்றுவதுதான் புத்திசாலித் தனமான அணுகுமுறையாகும். 

http://www.tamilmirror.lk/184319/ச-வச-ன-வ-ன-வர-க-ச-ல-ல-ம-ச-ய-த-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.