Jump to content

மஞ்சள் மழையே பொழிக!


Recommended Posts

பதியப்பட்டது

மஞ்சள் மழையே பொழிக!

தேனருவி முழுக்க முழுக்க சித்தர்களின் அருவி. இங்கு எப்போதுமே அரூப நிலையில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அருகிலுள்ள குகைகளில் அமர்ந்து தவம் புரிகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவாக அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி தோறும் ஈசனை தேனால் அபிஷேகம் செய்கிறார்கள். எனவேதான் இங்கு சித்ரா பௌர்ணமி தோறும்  மஞ்சள் மழை பொழிகிறது. அதை காணத்தான் இந்தக் கடினமான பயணம். எனவேதான் குற்றால மலையில் ஆற்றைத் தாண்டி கடினமான பாதை வழியாக மேலே வந்தோம். இருபது நிமிடங்கள் நடந்திருப்போம்.

அங்கு ஆங்கிலேயர்கள் நடந்து செல்ல பயன் படுத்திய இரும்புக் கம்பி வளைந்து நெளிந்து கிடந்தது. திடீர் திடீரென்று சிற்றாற்றில் வரும் வெள்ளத்தால்தான் இந்தக் கம்பி இப்படி நெளிந்து விட்டதாம். ஆனால், நூற்றாண்டை கடந்தும் கம்பிகள் துருப்பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்! ஆங்கிலேயர்கள் போட்ட தரம் மிக்க இரும்புப் பொருள் என்பதால் இது துருப்பிடிக்க வில்லையா அல்லது தேனருவியிலிருந்து விழும் சுத்தமான தண்ணீ ரின் தன்மையால் இந்தக் கம்பி துருப்பிடிக்காமல் இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது அந்தக் கம்பி.

கம்பியே கெடாமல் இருக்குமானால், ஒரு மனிதன் இங்கு வந்து வாழத் தொடங்கினால் அவன் மனமும், உடலும் துருப்பிடிக்குமா என்ன? இதுவே சித்தர்களின் செயல்தான். தூரத்தில் தேனருவி விழும் சத்தம். அருகில் வந்து விட்டோம். என்ன ஆனந்தம்! 200 அடி உயரத்திலிருந்து தேனருவி விழுந்து கொண்டிருக்கிறது. அதன் இரைச்சல் மனதைக் கொள்ளை கொள்வதாக இருந்தது. கண்களுக்கு விருந்தாய் இருந்தது. இந்த இடத்தில்தான் சிவனை, தேவி தேனால் அபிஷேகம் செய்துள்ளாள். அருவி அழகைக் கண்டு ரசித்தவுடன் பாறை மீது ஏறி, இறங்கி, தாவிச் சென்றோம்.

எங்கள் முன்னால் சிறுவர்கள் துள்ளிக் குதித்து ஓடினார்கள். பாறையில் எங்கும் மஞ்சள் மழை விழுந்த அறிகுறி இருந்தது. எங்களை அழைத்துச் சென்றவர், ‘‘சித்ரா பௌர்ணமி முதல் நாள் பகலில் இந்த இடத்தில்  வெள்ளை வேஷ்டியை விரித்து வைத்திருந்தால் அந்த வேஷ்டி மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதுபோன்ற மஞ்சள் மழை தான் இது’’ என்றார். ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாறை முழுவதுமே மஞ்சளாக இருந்தது. பாறை மீது சொட்டுச் சொட்டாக  மழை விழுந்ததன் அடையாளம் தெரிந்தது. ‘‘அடுத்த மழை பெய்யும் வரை இப்படித்தான் இருக்கும்.

மழை பெய்த பிறகு கரைந்து விடும்’’ என்று அந்த அன்பர் தொடர்ந்து சொன்னார்.  தேனருவிக்கு ‘சிவமது கங்கை’ என்று பெயர். சிவபெருமானை நோக்கி பார்வதிதேவி தவமிருந்து தேனால் அபிஷேகம் செய்துள்ளாள். ஆகவேதான் இந்த இடத்திலுள்ள தேனருவிக்கு சிவமது கங்கை என்று பெயர். தற்போதுகூட இந்தத் தேனருவி விழும் பாறை இடுக்குகளுக்கிடையே தேன் கூடுகளைப் பார்க்க முடிகிறது. தேனருவிக்குச் செல்லும் இடத்தில் ஒரு பெரிய தடாகம் உண்டு. இந்தத் தடாகத்தின் நீளம் சுமார் 180 மீட்டர். இதில் நீந்திச் சென்றால் அங்கே இடது புறம் ஒரு குகை உள்ளது.

இந்த குகைதான் பார்வதி தவமிருந்த இடம் என்கிறார்கள். இங்கு அகத்தியர், அத்ரி, தேரையர் போன்ற சித்தர்கள் கூடியிருந்து தவம் செய்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல் தேனருவியின் மேல் புறத்தில் இவர்கள் மூவரும் அமர்ந்து தவம் செய்த இடம் தற்போது ‘கூடாரம் மொட்டை’ என்று பெயர் பெற்றுள்ளது. இந்த தேனருவியை இறைவனின் இருப்பிடம் என்றே கருதுகிறார்கள். ஆகவேதான் அங்கு போனவுடனே நம்மையும் அறியாமல் ஆன் மிக அதிர்வு ஏற்படுகிறது. எனவே, ஆங்காங்கே பாறை மீதும், குகை போன்றுள்ள பாறை இடுக்கிலும் அமர்ந்து மக்கள் தியானம் செய்கிறார்கள்.  

தேனருவிக்கு மேலே அத்ரி மகரிஷி தவமிருந்த இடம் ஒன்று  உள்ளது. அந்த இடத்தை ‘கருக்காபிள்ளை ஓடை’ என்கிறார்கள். அத்ரி மகரிஷி தனக்கு புத்திரன் வேண்டுமென்பதற்காக ஈசனை நோக்கி தவமிருந்துள்ளார். தேனருவி கீழே விழும் அற்புதமும், அழகான தடாகமும் நம் நெஞ்சை கொள்ளை கொள்வதாகவே இருந்தன. இந்த இடம் நிச்சயம் சித்தர்களின் உறைவிடமாகத்தான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனாலும், சித்தர்கள் சென்ற இடமெல்லாம் நம்மால் செல்ல முடியுமா என்ன?

கூடார மொட்டை, கருக்காப்பிள்ளை ஓடை போன்ற இடங்களுக்கு நாம் செல்ல முடியாது. மேலும் அவர்கள் சென்ற பாதையில் ஒரு வகையான  செடிகள் உள்ளன. அவை நம்மீது பட்டு விட்டால் போதும், நமக்கு குளிர் ஜன்னி வந்து விடும். அதன் பிறகு உயிர் பிழைப்பதே கடினம்! அத்ரி தபோவனத்திற்கு மேலே, கருப்பசாமி கோயிலுக்கு மேலே உள்ள ஆற்றை கடக்கும்போது அங்கு சிலந்தி கூடுகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த சிலந்தி கூடுகள் உயிர் பலி வாங்கி விடும்.

எனவேதான் சித்தர்கள் சென்ற பாதையில் எல்லாம் சாதாரண மனிதர்களான நாம் செல்ல முடியாது. தேனருவி வந்த சந்தோஷத்தோடு இப்போது நாம் வந்த பயணத்தினை விடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், இதற்குப் பிறகு இந்த வழியாகவே கருப்பசாமி கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் வருடத்திற்கு ஒருமுறைதான் செல்ல முடியும்.  அது எப்போது? ஒரு வருடத்திற்கு ஒருமுறை அப்படி என்னதான் அந்தக் கோயிலில் நடக்கிறது?  

- முத்தாலங்குறிச்சி காமராசு                                 
படங்கள்: பரமகுமார்

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=5392&cat=3

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.