Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிவசேனை' – மற்றொரு கண்ணியா? -குணா கவியழகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிவசேனை' – மற்றொரு கண்ணியா? -குணா கவியழகன்

<p>

 

 

 

தமிழர்களின் ஆயுதப்போரைத் தோற்கடித்த தரப்புகள் போரின் மூல அம்சமான அரசியல் போராட்டத்தை விட்டு வைக்குமா? பொருளுள்ள இந்தக் கேள்விக்கு விடையறிய இலங்கைத் தீவின் அனைத்து அரசியல் அசைவுகளையும் ஆய்வுக் கண்ணோடு பின்தொடர வேண்டியவர்களாக இன்று தமிழர்கள் உள்ளனர். இப்போதைய மிகப் புதிய அசைவு 'சிவசேனை'

சிவசேனை என்றொரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, தமிழர்களின் உரிமையை வெல்வதற்கான கதவைத் திறந்துவிடலாம் என்ற கருத்தை முன்கொண்டு அரசியல் அரங்கில் புதிய காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றதற்கான அரசியல் காரணமாகி, தமிழர்களுக்கான உலக ஆதரவுக்கரம் ஒன்றேனும் இல்லாமையை பொதுப்புத்தியாக உணரும் மக்களுக்கு இம்முயற்சி ஒரு ஒளிப்பாதையாக முயற்சியாளர்களால் காட்டப்படுகிறது.

குறிப்பாக அண்டை நாடான இந்தியா, பிராந்தியத்தின் வல்லரசாகவும், இன்றுள்ள உலக அரசியலில் மேற்கு நாடுகளின் கேந்திர அரசியல் பங்காளியாகவும் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆதரவுக்கரம் இல்லாது போனமை தோல்வியின் முக்கிய காரணமாக தமிழ்ப் பொதுப்புத்தியில் உணரப்பட்டிருந்தது. இந்தியாவின் அரசியல் தீர்மானம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு காரணம் என்று உணரப்பட்டிருந்தது.

இந்தப் பொதுப்புத்தியை அறுவடைக்களமாகக் கொண்டு இந்தியாவை தமிழர்களின் பால் சாய்த்து திருப்பும் உத்தியாக சிவசேனை மார்க்கம் காட்டப்பட முயற்சிக்கப்படுகிறது. தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான ஒளிப்பாதையை இவ்வாறு உருவாக்க முடியும் என்பது இந்தத் தரப்பின் வாதம்.

உலகின் மிகப்பெரிய ஆயுதப்போராட்ட அமைப்பொன்றை இக்காலத்தில் கொண்டிருந்த தமிழர்கள் தமது போர்ச்சேனையால் சாதிக்க முடியாது போன அரசியல் அபிலாசையை 'சிவசேனை'யைக் கொண்டு சாதிக்க முடியும் என்றொரு சாணக்கிய மார்க்கம் இருக்குமென்றால் தமிழர்கள் அதனைத் தேர்வு செய்வதில் என்ன தவறிருக்க முடியும் என்ற கேள்வியும் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.

வித்தைக்காரர்களின் சித்துக்களை நம்பிப் பின்தொடர முடியாது எனச் சிந்திக்கும் மக்கள் தரப்பொன்று அதற்கான தர்க்கத்தை வேண்டி நிற்கின்றது. போரில் வெற்றிகொண்ட தரப்பான சிங்கள பௌத்த இனவாதம் இதனை எவ்வாறு அணுகும் என்பது தர்க்கப் பார்வையை உருவாக்குவதற்கு வழிவிடுவதாக இருக்கும்.

தமிழர்கள் தம் விடுதலையின் அரசியல் போராட்டத்தினுடைய ஒரு வழிமுறையாக ஆயுதப்போரை முன்கொண்டு சென்றனர். ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட பின்பும், அரசியல் போராட்டம் தமிழர்களிடையே இருந்து கொண்டுதானிருக்கிறது. அதன் துல்லியமான சாட்சி வெளிப்பாடே தமிழர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாகக் கொண்டு அதனைத் தமது தலைமைத்துவமாகத் தெரிந்து கொண்டனர்.

<p>

 

சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் ஆயுதப்போரைத் தோற்கடித்துவிட்டபோதும் அது தன் இறுதி வெற்றியை அடையவில்லை என்பதை அறியும். தமிழர்களின் அரசியல் போராட்டத்தினுடைய ஒரு வழிமுறையை அது வெற்றி கொண்டது. ஆயினும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை வெற்றி கொள்ளும் இலட்சியம் இன்னும் நிறைவேறாமல் அதனிடம் எஞ்சியிருக்கிறது.

இப்போது அதனுடைய நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்குமென்று ஒரு கேள்வி இருக்குமானால், அது தமிழர்களின் அரசியல் போராட்டத்தை முறியடித்து வெற்றி கொள்வது என்பதே பதிலாக இருக்க முடியும். அல்லாதவிடத்து ஈட்டப்பட்ட வெற்றி வெறும் போர் வெற்றியாக சுருங்கிப்போகும்.

இதற்கு முதலில் தேவைப்படுவது தமிழர் அடையாள அரசியலை இல்லாதொழிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலை ஒழிப்பதே அதன் இறுதி இலட்சியமாக இருக்க முடியும். இதே குறிக்கோள் தமிழர்கள் இத்தீவில் ஒரு தனித்த தேசிய இனமாக தேசியவாழ்வை எட்டக்கூடாதென்ற நலன் உலகில் யார்யாருக்கெல்லாம் உண்டோ அவர்களுக்கும் இந்த இலட்சியம் இன்னமும் இருக்கிறது.

தமிழர் அரசியல் போராட்டத்தின் மூலக்கோரிக்கை இலங்கைத் தீவில் தம்மை ஒரு சிறுபான்மைமைத் தேசியமாக (Minority Nation) அங்கீகரிக்க வேண்டும் என்பதே. இலங்கையில் சிங்களவர்கள் எண்ணிக்கையில் அதிகமான தேசிய இனத்தவராகவும், தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனமாகவும் இருக்கும் நிலையான இரு தேசியத்தை வலியுறுத்துவதே இதன் அடிப்படை.

அடிப்படையில் தனித்த தேசமாக தமக்குண்டான இறைமை அங்கீகரிக்கப்பட்டு, அதனைப் பிரயோகிக்கும் அரசியல் உரிமை தமக்கு வேண்டும் என்பதே இத்தனை ஆண்டுப் போராட்டத்தின் மூலக்கோரிக்கை.

இந்தப் போராட்டத்தின் மூலக்கோரிக்கையை சிங்களத்தரப்பு மறுவளமாக எதிர்கொண்டது. தமிழர்கள் இந்த நாட்டின் சிறுபான்மைத் தேசியம் அல்ல, மாறாக அவர்கள் தேசிய சிறுபான்மையினரே (National minority). இலங்கையில் வாழும் ஒரு சமூகக் குழுவே தமிழர்கள் என்பதே இதன் அர்த்தமாகிறது. இந்த அடிப்படையிலேயே பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் முன்னெடுப்புகள் இருந்தன.

இந்த நிலையை ஆயுதப்போரை வென்றுவிட்டதனால் மட்டும் அதனால் அடைந்துவிட முடியவில்லை. ஆக அது இறுதி வெற்றியை அடையும்வரை இயங்கிக்கொண்டுதான் இருக்கும். தேசிய இனத்தை படுகொலை செய்வதற்கான அதன் முயற்சியில் மனிதப்படுகொலைகள் மூலம், அதனை நிகழ்த்துவதற்கான களத்தை அது யுத்தத்தின் முடிவோடு இழந்துவிட்டது. எனவே இனப்படுகொலையை அமைப்பியல் (Structural Genocide) வடிவில் நிகழ்த்துவன் மூலம் அது இறுதி வெற்றியை அடைய முயற்சிக்கக்கூடும். இதில் 'சிவசேனை' என்ற கட்சி எத்தகைய தாக்கத்தை உருவாக்கம் என்பது முக்கியமானது. புரிந்து கொள்ளவேண்டியதும் அதுவே.

இப்பிராந்தியத்தில் அரசியல் அதிகாரம் மிக்க இந்தியா, இலங்கையில் தமிழ்த்தேசிய இருப்புக் குறித்து எத்தகைய நலனோடு இருக்கிறது என்பது இந்தியாவை தமிழர் பக்கம் வளைப்பதற்கான மார்க்கத்தைத் தேடுவதற்கும், அதனை நம்புவதற்கும், புரிந்து கொள்வதற்கும் அடிப்படை அறிவைத் தரக்கூடியது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனமாக இருப்பதை இந்தியா, தனது நலனுக்கு சாதகமாக கருதியிருந்தால் அது தமிழர்களின் ஆயுதப்போரை அழிக்க இலங்கை அரசுக்கு உதவியிருக்காது. அது விடுதலைப் புலிகள் மீதான அச்சம் காரணமாக நிகழ்ந்தது என்றொரு வாதம் இருப்பின் விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலத்தில் இந்தியா, தமிழ்த் தேசிய அரசியலுக்கு தனது ஆதரவை எப்படி வெளிப்படுத்தியது என்பது கவனத்திற்குரியது.

ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்றப் பிரேரணைக்கு இந்தியா, தமிழர்களுக்கு அநீதியாகச் செயற்பட்டு இலங்கை அரசின் பக்கம் சாய்ந்தது. ஆனால் தமிழர்கள் வேண்டுவதோ, இது போர்க்குற்றம் என்று சுருக்கப்படாமல் நிகழ்த்தப்பட்ட பேரழிவை அரசின் நீண்ட கால உள்நோக்கம் கொண்ட செயற்பாட்டின் குரூர வடிவமாகப் புரிந்து கொண்டு, அது இனப்படுகொலையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே. இதன் மூலம் இத்தீவில் தாம் ஒரு சிறுபான்மைத் தேசியமாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு பரிகாரத் தீர்வை தமக்கான அரசியல் பாதுகாப்பாக்க உதவ வேண்டும் என்பதே.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவிற்கு இலங்கையில் தமிழ் தேசிய இருப்பு நலன் தருவது என்று கருதியிருந்தால், இனப்படுகொலை என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டு அதனை இந்தியா சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.  ஆனால் இந்தியா போர்க்குற்றம் என்பதைக்கூட ஆதரிக்க மறுத்தது. மட்டுமல்ல அதனை எதிர்த்தும் நின்றது.

இதனை இன்னொரு உதாரணம் மூலமும் சொல்லலாம். இலங்கை- இந்திய உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, இந்தியா இதற்கு எதிர்வினையாற்றவில்லை. தமிழ்த் தேசிய இருப்பு இந்தியாவின் நலனாக இருந்திருக்குமேயானால் அதற்கு அடிப்படை ஆதாரமான தமிழரின் ஒருங்கிணைந்த தாயகத்தை அது பாதுகாக்க முனைந்திருக்கும். பிரிப்பை எதிர்த்திருக்கும். தவிரவும் இரு நாட்டு ஒப்பந்தம் ஒரு தலையாய் மீறப்பட்ட போது இந்தியா தலையீடு செய்து தவிர்த்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை.

ஆக, இந்தியா தனது நலனுக்கு இலங்கையில் தமிழ்த் தேசிய இருப்பு அவசியமானதென்று அது இன்றளவும் கருதவில்லை.

ஆனால் இலங்கை என்ற சிறுதீவு இந்து சமுத்திரத்தில் தன் அரசியல் ஆளுகைச் செல்வாக்கிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இந்திய நலனாக இருக்கிறது. இதனால் இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து தப்பித்து உலக உறவுகளைத் தமக்கு பாதுகாப்பாகத் தேடும்போதெல்லாம் இந்திய நலனும் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குள்ளாகின்றது.

இத்தகைய தருணங்களில் இலங்கையை இந்தியாவை நோக்கிக் குனிய வைப்பதற்கு இலங்கையில் அரசுக்கு எதிராக அழுத்தக்குழுக்களை உருவாக்கிப் பேணிப்பாதுகாப்பதே இந்தியாவின் அணுகுமுறையாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அது இத்தகைய அழுத்தக்குழுக்களை உருவாக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் திறனை கைவசம் வைத்திருக்க விரும்புகிறது. அதற்குப் பொருத்தமான அழுத்தக்குழுக்களை அது தேடுகிறது.

இலங்கையில் முஸ்லிம் மக்களை அழுத்தக்குழுவாக இந்தியா கொள்ள வாய்ப்பில்லை. அது அடிப்படையில் இந்தியாவுக்கு அச்சத்தைத் தருவது. சிங்கள இடதுசாரிகளை இந்தியா நம்பாது. சிங்கள இடதுசாரி ஆயுத இயக்கம் இருந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரான அமைப்பாகத் தான் தனது அரசியல் நிலைப்பாட்டினை அந்த அமைப்பு நிறுவியது. இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு முன்னர் வெளியேற வேண்டியதற்கான புறநிலையை ஏற்படுத்தியதும் சிங்கள இடதுசாரிகள் தான்.

ஆக, எஞ்சியது தமிழர்கள் தான். மலையகத் தமிழ் அரசியலில் செல்வாக்குள்ள சக்தியாக இந்தியா தனது ஸ்தானத்தைப் பேணிய போதும் அது தேசிய அரசியலைப் பாதிக்குமளவிற்கு செயல்விளைவு கொண்டதாக இருக்கவில்லை.

எனவே வடக்கு கிழக்கு தமிழ்த்தேசம் தான் இந்தியாவின் தெரிவாக இருக்க முடியும். ஆனால் இவர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்கள் ஒரு தேசிய இனமாக நிலையூன்றுவதை இந்தியா விரும்பவில்லை. தனது நலனுக்கு இசைவானதாக அது கருதவில்லை.

எனவே தமிழர் அரசியலை தமிழ்த்தேசிய அரசியலாக அல்லாமல், மத அரசியலாக மடைமாற்றம் செய்ய முடிந்தால் அது இந்தியாவிற்கு உவப்பானது. அது விரும்பும் ஒரு வலுவான அழுத்தக் குழுவை உருவாக்கிப் பேணுவதாகவும் அது அமையும். அதேநேரத்தில், தனக்கொவ்வாத தமிழ்த் தேசிய அரசியலைத் தோற்கடித்து விட்டதாகவும் அது இருக்கும்.

இவ்வாறு இந்துமத அடையாளமாக தமிழர் போராட்டத்தை உருவாக்கிவிட்டால் அந்த மத அரசியல் அமைப்பு, தன் ஒரேயொரு அரசியல் நண்பனாக இந்தியாவைக் கொள்ள முடியும். அத்தகைய அமைப்பு ஒன்றுதான் எக்காரணத்தினாலும் தன் கைமீறிப் போகாத கட்டுப்பாட்டுக்குள் நிற்கும் அமைப்பாக இருக்கும்.

இப்படி ஒரு பலமான, உணர்வுக் கொந்தளிப்பான அழுத்தக் குழுவாக தமிழ் அரசியலை மாற்றிப்பேணுவதன் மூலம், இலங்கை அரசு தன் பிடியிழந்துபோய்விடும் போதெல்லாம் அதனைக் கையாளும் மூக்கணாங்கயிறாக இந்த அமைப்பை கையாள முடியும்.

மத அடையாள அரசியலாக தமிழ் அரசியல் மாறும் பட்சத்தில், சிங்கள அரசு உடனடிக்கு அடையப்போகும் விளைவு அதற்குச் சாதகமானது. இதனால் அது கள்ள மவுனத்தோடு இதற்கான இயங்கு வெளியை இப்போது திறந்துவிடவே செய்யும்.

அது என்னவாக இருக்க முடியுமெனில்: இலங்கையில் தமிழர் பிரச்சினை சிறுபான்மை தேசியத்தின் பிரச்சினை என்பதில் இருந்து தேசிய சிறுபான்மையினரின் பிரச்சினையாக மாறிவிடும். அதன் இறுதி வெற்றிக்கு இது வழிதிறக்கும். தமிழர் பிரச்சினை ஒரு மதக்குழுவின் பிரச்சினை என அதனை எதிர்கொள்ளும் பட்சத்தில், அதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் துணை நிற்கும் சூழல் உருவாகும்.

'சிவசேனா' என்றொரு கட்சி தமிழ் அரசியலுக்குள் இடம்பிடித்தால் அதன் உபவிளைவுகளாக, தமிழ்த் தேசியத்திலிருந்து ஏற்கனவே திட்டமிடப்பட்டு உடைக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனை மேலும் கொதிநிலை அடையும். தவிரவும் கிறிஸ்தவர்கள் தனி அடையாள அரசியலைத் தோற்றுவிக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.

இது தவிர மேலும் 'சிவசேனை' என்ற கட்சி அடையாளத்தினுள் வர்ணாச்சிரம தர்மம் என்ற சாதிமனம் உறைந்து கிடக்கிறது என்ற அச்சம் உருவாகும். அதனால் சாதி உணர்வு தூண்டப்பட்டு தமிழருக்குள் ஒடுக்குமுறை வீரியம் பெறலாம். ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களுக்கான அரசியல் உருவாகும் நிர்ப்பந்தச் சூழலும் இதனால் உருவாகலாம். ஆக, தமிழ்த் தேசிய அரசியல் பல துண்டுகளாக சிதறடிக்கப்பட்டுச் சின்னாபின்னமாக்கப்படும்.

தேசியப் போராட்டம் இறுதியிலும் இறுதி முடிவாக தோற்கடிக்கப்படும். அமைப்பியல் சார் இனப்படுகொலையை (Structural Genocide) வெற்றிகரமாக அரசு நிகழ்த்தி முடித்துவிடும். இத்தகைய அச்சத்தை வலுப்படுத்துவதாக இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த சிறுபான்மையின விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் Rita Izsák-Ndiayeவின் வருகை அமைந்துள்ளது.

அரசு- புலிகள் சமாதான காலத்தில் தேசிய இனப்பிரச்சனையாக இதை அணுக முற்பட்ட சர்வதேச சமூகம், 'பின்-முள்ளிவாய்க்கால்' காலத்தில் இனப்படுகொலையைப் போர்க்குற்றமாக அணுகத் தலைப்பட்டது. அதன் மூலம் தமக்கு வசதியான ஓர் அரசாங்கத்தை மேற்குலகம் இலங்கையில் உருவாக்கியதன் பின்னர், புதிய அரசாங்கத்தின் பக்கம் நின்று, அதன் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினரின் பிரச்சினையாக உருவகப்படுத்த அது முனைகிறதா? அதற்கான கட்டத்தை நோக்கி காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டதா? என்ற நியாயமான அச்சம் உருவாகின்றது.

ஆக, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முடிவிலும் முடிவாகி தோற்கடிக்கப்படுவதற்கு ஏதுவான சூழலை அதன் எதிராளித் தரப்புகள் வகுக்கின்றன. தமிழர்கள் தம்மைத் தாமே கருவறுக்கும் கருவியை எதிர்த்தரப்பிடம் கையளித்துவிட்டு, கழுத்தை நீட்டும் காரியத்தைச் செய்யப் போகின்றனரா? அல்லது எப்போதும் எவர் எவர்க்கோ கருவியாகிய அரசியல் பாடத்தை கடந்த காலத்தில் படித்துக்கொண்ட அனுபவத்தை, அறிவாக்கிக் கொண்டு தப்பிப்பிழைக்க வழி தேடப்போகின்றனரா?

இது இன்றைய அரசியலின் முக்கிய கேள்வி! எதிரே உள்ளவர்கள் பலவான்கள் மட்டுமல்ல. வஞ்சகர்களும்கூட!

**

படம்2: சிவசேனை நிறுவனர் Sanatan Sanstha நினைவு அமைப்பின் நிகழ்வில் எடுக்கப்பட்டது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b3961c4a-b679-4b7b-afe6-e1c058c0df93

 

ஈழத்தமிழர்கள் அனைவரும் சாதி, மதபேதமின்றி தமிழர்களாக ஒன்றுபடக் கூடிய தமிழுணர்வும், அரசியல் வரலாறும் கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதற்குச் சாவுமணியடிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் போல் ஈழத்தமிழர் மத்தியிலும் பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சிவசேனை அமைப்பை வேரூன்றச் செய்து, ஈழத்தமிழினத்தை மேலும் பிளவுபடச் செய்யும் முயற்சி சிலரால் (வெளியாரின் உந்துதலால்) மேற்கொள்ளப்படுகிறது போல் தெரிகிறது. அதை ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இத்தகைய மதவாத அமைப்புக்கான ஆதரவை தடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமையாகும்.
 
image-6-600x400.jpgவடமாகாணத்திலுள்ள வவுனியா நகரில் இந்தியாவிலுள்ளது போன்ற சிவசேனை இயக்கம் இந்தியாவில் வாழ்ந்த அல்லது இந்தியத் தொடர்புகள் கொண்ட ஈழத்தமிழர்கள் சிலரால் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியாவிலுள்ள, அது போன்ற இயக்கங்களின்,  குறிப்பாக சிவசேனா, விஸ்வஹிந்து பரிசத், ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளின் ஆதரவும் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்த இயக்கத்தின் அமைப்பாளராகிய மறவன்புலவு சச்சிதானந்தன் என்ற ஈழத்தமிழர்.

 
 
இலங்கையில் திட்டமிட்ட சிங்கள – பெளத்த குடியேற்றங்களினால் இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், தமிழர் நிலங்கள் பெளத்தமயமாக்கப்படுவதையும் தடுக்க வேண்டுமெனவும் இலங்கை சிவசேனை குறிப்பிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சிவசேனாவும், ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களும் இந்துத்துவாக்களும் பெளத்தத்தை இந்துமதத்தின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்களே தவிர, அவர்கள் பெளத்தத்தை மட்டுமன்றி சிங்களவர்களையும் எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது இஸ்லாத்தையும், கிறித்தவத்தையுமே தவிர பெளத்தத்தை அல்ல. இந்த லட்சணத்தில் ஈழத்தில் தமிழர் நிலங்களில் திட்டமிட்ட பெளத்த- சிங்கள ஆக்கிரமிப்பை இலங்கையில் சிவசேனை எப்படித் தடுக்கும் என்பதை இதன் அமைப்பாளர் தான் விளக்க வேண்டும். 
 
ஆனால் சிவசேனை இயக்கத்தின் கிறித்தவ எதிர்ப்பு கடைசியில், ஈழத்தமிழர்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி விடும். சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர்கள், கத்தோலிக்கராகி கடைசியில் சிங்களக் கத்தோலிக்கர்களுடன் கலந்து சிங்களவர்களாக மாறிய வரலாற்றை ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது. அவ்வாறு நடந்திராது விட்டால், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையான தமிழ்நிலத்தை இழந்திருக்க மாட்டார்கள். சிவசேனை ஈழத்தமிழர் மத்தியில் வளர்ந்து, அவர்களின் கிறித்தவ எதிர்ப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து - கிறித்தவ பிளவு ஏற்பட்டால், மீண்டும் தமிழ்க்கிறித்தவர்கள் சிங்களக் கிறித்தவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?  அது மட்டுமன்றி, வன்னியில் தமிழ்மண்ணை மீட்கத் தனதுயிரை ஈந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் இந்துவாகவோ அல்லது கிறித்தவனாகவோ சாகவில்லை, தமிழனாக மட்டும் தான் தனதுயிரை ஈந்தான் என்ற உண்மையை இலங்கையில் சிவசேனை இயக்கத்தை உருவாக்க முயல்கிறவர்களுக்கு ஈழத்தமிழர்கள் உணர்த்த வேண்டும்.
சிங்கள - தமிழ் போர்க்காலம் 2002
images?q=tbn:ANd9GcRAwKqA3E3-ozQOctmZEy9PjXhLhWlxSKYtxYbxbyUvLBgtaNMhrAஈழத்தமிழர்களின் ஆயிரக்கணக்கான கோயில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போதும், அதிலும் குறிப்பாக பழம்பெரும் தலமாகிய நகுலேச்சரத்தின் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய போதும், பாடல்பெற்ற தலங்களாகிய திருக்கோணேச்சரம் பெளத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், திருக்கேதீச்சரம் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுச், சூறையாடப்பட்ட போதும், பெரும்பான்மை ‘இந்துக்களாகிய’ ஈழத்தமிழர்கள் கேட்பாரின்றிக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும், இந்தியாவின் இந்து இயக்கங்களும், இந்துத்துவாக்களும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் சிங்களவர்களுக்குத் தான் ஆதரவளித்தனர், ஈழத்தமிழர்களனைவரையும் பயங்கரவாதிகளாக தமது ஊடகங்களில் சித்தரித்தனர். அந்த வரலாற்றை மறந்தவர்கள் தான் தீவிரவாத இந்துத்துவா/பார்ப்பனீயக் கொள்கைகளைக் கொண்ட சிவசேனை போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாக ஆதரவளிப்பர். அது மட்டுமன்றி, இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கெதிராக இயங்கிய வரலாற்றையும் ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது.

இன்று நாம் ஈழத்தமிழர்கள் எமது வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். ஈழத்தமிழர்கள் அனைவரும். சாதி மத, பிரதேச வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றுபட வேண்டிய கட்டாய தருணத்தில், இவ்வாறான மத அடிப்படையிலான பிரிவுகளை ஏற்படுத்தி, ஈழத்தமிழர்களைப் பிளவுபடுத்தி நலிவடையச் செய்யும் எந்த அமைப்பும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாவாதை தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துடன் பார்ப்பது மட்டுமன்றி அத்தகைய முயற்சிகளை முழுமையாக எதிர்க்கவும் வேண்டும்.   
 
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சிவசேனைக்கு அதிகளவு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது, அதற்குக் காரணம் தீவிரவாத இஸ்லாமிய வஹாபியம் தான். இன்றும் தமிழை மட்டுமே தமது தாய்மொழியாகக் கொண்டிருந்தும், இலங்கையில் தமது வரலாற்றைத் திரித்து, எந்த நாட்டிலும் (முஸ்லீம் நாடுகள் உட்பட) இல்லாத விதமாக, மத அடிப்படையில் முஸ்லீம் என்ற இன அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தம்மை அரபுக்களின் வாரிசுகளாகக் ‘கதை’ விட ஆசைப்படும் இலங்கை முஸ்லீம் தீவிரவாதம், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக்குச் சவால் விடுவதும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்த்து, இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு எதிராக இருப்பதும், உண்மை என்றாலும் கூட, அதற்காக சிவசேனை போன்ற அமைப்பை ஈழத்தமிழர்களும் அமைத்துக் கொள்வது சரியான தீர்வு அல்ல. மாறாக, அது ஈழத்தமிழர்களைத் தான் மேலும் பலவீனப்படுத்தும் என்பதை கிழக்குமாகாணத்தில் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 
 
பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் கூட, இந்தியாவிலுள்ள பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கையடிப்படையில் பார்க்கும் போது உண்மையில் ஈழத்தமிழர்கள் "இந்துக்கள்" அல்ல என்று தான் கூறவேண்டும். உதாரணமாக, நாயன்மார்களின் தமிழ்த்தேவாரங்களை வேதங்களுக்குச் சமமாக அல்லது உயர்வாகக் கருதும் பாரம்பரியம் கொண்ட ஈழத்துச் சைவர்கள் எவ்வாறு, தமிழில் வழிபாடு நடத்துவதை எதிர்க்கும், வடமொழியைத் திணிக்கும் இந்துத்துவா/சிவசேனை  இந்துக்களாக இருக்க முடியும். சிவசேனையை இலங்கையில் அமைப்பதை விட, சைவர்களாகிய ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சைவத்தை தமிழாக்க வேண்டும். பார்ப்பனீய சடங்குகளிலிருந்து விலகி எமக்கேயுரிய பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமே தவிர, பார்ப்பனீய, இந்துத்துவா இயக்கங்களுடன் கலந்து காணாமல் போய்விட முயற்சிக்க கூடாது.
தந்தை செல்வா நினைவுத்தூண் யாழ்ப்பாணம் 
 
chelva.jpgஈழத் தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்கினால், எமது முன்னோர்கள் எவ்வளவு தான் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று நம்பினாலும் கூட, அரசியலையும் மதத்தையும் ஒரு போதும் கலக்காமல் தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகும். ஈழத்தமிழர்களுக்கென மத அடிப்படையிலான எந்த அரசியல் கட்சியையும் அவர்கள் உருவாக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து – கிறித்தவ பிரிவினையை சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்த முயன்ற சில தலைவர்கள், அவர்கள் சிறந்த கல்விமான்களாக இருந்தும் கூட காணாமல் போய் விட்டனர் என்பது தான் உண்மை. உதாரணமாக, 1970ஆம் ஆண்டில் யாழ். காங்கேசன்துறை தொகுதியில் ‘தமிழர்தந்தை’ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்கெதிராகப் போட்டியிட்ட கணிதமேதை ‘அடங்காத்தமிழன்’ சி. சுந்தரலிங்கம் சிலுவையா? சூலமா? என்று சைவ- கிறித்தவ பிரிவினையைத் தூண்ட முயற்சித்த போதும், கிறித்தவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனராம் பெரும்பான்மைச் சைவர்களாகிய யாழ்ப்பாணத் தமிழர்கள். 
 
ஈழத்தமிழர்களின்  மதச்சார்பற்ற அந்த அரசியல் வரலாற்றை, சைவ – கிறித்தவ நல்லிணக்கத்தை சிவசேனை போன்ற அமைப்புகள் கெடுத்து விடும். எண்ணிக்கையில் நலிவுற்றுக் கொண்டு செல்லும் ஈழத்தமிழர்களை மறவன்புலவு சச்சிதானந்தனின் 'இந்து அடையாளம்' மேலும் பிளவு படுத்தி, வடக்கு-கிழக்கிலேயே சிறுபான்மையினராக்கி, அழித்து விடும் என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.