Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை

Featured Replies

ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை -ச.பா.நிர்மானுசன்-

Sunday, 28 January 2007

இந்தோனேசியாவின் விசேட ஆட்புலமாக அமைந்துள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்த ஆச்சேயினுடைய விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் உலகளாவிய ரீதியில் முனைப்படைந்திருந்தது.

2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நோக்கி சிந்திக்க வைத்தது. அதன் விளைவு போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அடித்தளமிட்டது.

முன்னைய காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விகளையும் அதனூடான படிப்பினைகளையும் அலசி ஆராய்ந்த பின் பின்லாந்தின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆழிப்பேரலை இடம்பெற்று சுமார் 1 மாதத்தின் பிறகு (ஜனவரி 28-30,2005) ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை கரடு முரடான பாதைகளைக் கடந்து ஆகஸ்ட் 15, 2005 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கைச்சாத்திட்டதுடன் "தற்காலிக வெற்றியை" அடைந்தது.

அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு இணங்க ஆளுனர், மேயருக்கான தேர்தல்கள் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்றன. இந்தத் தேர்தலை கண்காணிப்பதற்காக ஆசியாவிலிருந்து 10 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இதில் இலங்கைத் தீவிலிருந்து சென்றிருந்த ச.பா.நிர்மானுசன் தனது அனுபவங்களை `தினக்குரல்' வாசகர்களுக்காக எழுதுகிறார்.

ஆச்சேயினுடைய போராட்ட வரலாறு என்பது விடுதலையை மூச்சாகக் கொண்ட ஒரு தேசத்தின் கதை. சவால்களை, சந்தித்து நிற்கின்ற சுதந்திரப் போராட்டங்களுக்கு ஆச்சேயின் விடுதலைக்கான போராட்டம் சில உதாரணங்களை சொல்கிறது.

ஆச்சேயின் பின்னணி

சுமார் 4.3 மில்லியன் சனத்தொகையை உள்ளடக்கிய ஆச்சேயில் 97.6%மாக உள்ள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 1.7% மாக கிறிஸ்தவ மதத்தினரும், 0.55% மாக பௌத்த மதத்தினரும் 0.08% மாக இந்து மதத்தினரும் காணப்படுகின்றனர்.

பிரதான இனக்குழுமங்களாக ஆச்சே, கயோ, அலுர், பமினங், அகனக், ஜமிகுலட், புலொ, சிங்கில் ஆகியவை உள்ளன. ஆச்சே இனத்தவருக்கே உரித்தான பஹாசா பிரதானமான மொழியாக உள்ள போதிலும் இந்தோனேசிய மொழியும் பிரசித்தமான ஒன்றாகவே தென்படுகிறது. அத்துடன், மத்திய ஆச்சேப் பகுதியில் கயோ மொழி செல்வாக்குடன் திகழ்கிறது.

இயற்கை வளங்கள் நிறைந்த ஆச்சேயில் எண்ணெய் வளம் தாரளமாகக் காணப்படுகிறது. அது தவிர்ந்த பிற பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தங்கம், பிளட்டினம், இரும்பு, தேயிலை, கோப்பி, இறப்பர், பைன்மரம் போன்றவை காணப்படுகின்றன.

ஏழு விமான நிலையங்களையும் 13 துறைமுகங்களையும் கொண்ட ஆச்சே கடலாலும் மலைகளாலும் சூழ்ந்து காணப்படுகிறது. வறுமை அவர்களைத் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக ஓய்வடைந்தாலும் அன்றாட வாழ்க்கைக்கான ஜீவனோபாய மார்க்கத்திற்கான நெருக்கடி நிலையில் நேர்முனை மாற்றங்கள் எதுவுமே இல்லை. கல்வியில் முன்னணி வகிக்க வேண்டுமென்பதில் மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரித்த அந்தக்கடல் இலங்கையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை முயற்சிகள் போல் அமைதியாகவே உள்ளது.

கடற்றொழிலும் விவசாயமும் பெரும்பான்மையான மக்களிடத்தில் பிரதான தொழில்களாக உள்ளன.

இலட்சக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் அழித்த அந்தக் கடல் இன்று மௌனியாக என்றைக்கும் எதுவும் நடக்கலாம். எதுவுமே எதிர்வு கூற முடியாத சூழல் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கூட.

ஆச்சேயின் போராட்ட வரலாறு

இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் கொண்ட ஒரு தேசமாக திகழ்ந்த ஆச்சேயின் மீது மார்ச் 26, 1873 இல் ஒல்லாந்தர் மேற்கொண்ட படையெடுப்பின் காரணமாக அதன் தலைவிதி மாற்றம் காணத்தொடங்கியது. சுமார் 80 வருடகாலம் ஆச்சே பேரரசுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே போர் தொடர்ந்து இடம்பெற்றது. அடக்குமுறைக்குப் பணிய மறுத்தது ஆச்சே. சாவு வந்தாலும் சந்திப்போம் சரணாகதியடையோம் என்ற தொனியில் விடுதலையை மூச்சாகக் கொண்ட அந்தப் போராட்டம் இடைவிடாத கடினமான பாதையில் நீண்ட காலம் பயணித்தது. "தனித்தேசமாக திகழ்ந்த எங்களுக்கு ஒரு தனித்துவமான வரலாறு உள்ளது. ஒல்லாந்தருடன் போரிடு முன்னர் எங்கள் தேசத்தின் சனத்தொகை 18 மில்லியன். போர் முடிவடைந்த பின் வெளிவந்த புள்ளி விபரங்களின் படி 9 மில்லியனாக குறைவடைந்தது எமது சனத்தொகை. மரணங்களைக் கண்டு நாம் அஞ்சவில்லை. தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க எமது மூதாதையர் விரும்பினர். கௌரவத்துடனும் தன்மானத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே தமது உயிர்களை அர்ப்பணித்தார்கள். ஒவ்வொரு ஆச்சேனியனும் இதை பின்பற்றினான். இனியும் பின்பற்றுவார்கள்." என்றார் மத்திய ஆச்சேப் பகுதியின் ரக்கின்கொன்னைச் சார்ந்த முசாரி.

அவர் குறிப்பிட்ட 9M சனத்தொகை குறைவு என்பது தனித்து மரணங்கள் மட்டுமல்ல உள்ளக இடம்பெயர்வும் வெளியக புலம்பெயர்வும் உள்ளடங்கலாகத்தான்.

ஆச்சேயை கைப்பற்றுவதற்காக பல சமர்கள் இடம்பெற்ற போதிலும் மிகப்பெரும் போர்கள் 6 ற்கும் மேற்பட்ட தடவை இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஆச்சேயை ஆக்கிரமிப்பதற்கான ஒல்லாந்தருடைய பூரண நோக்கம் கைகூடவில்லை. இழப்புகளையும் அவலங்களையும் கண்டும் மனம் தளராமல் ஆச்சேனியர்கள் துணிவுடன் போராடியதால் ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பு நோக்கம் தளர்வடையத் தொடங்கியது. ஆச்சே ஆக்கிரமிப்பாளர்களால் வெல்லப்பட முடியாத ஒரு தேசம் என்பதை ஆச்சேனியர்களின் மனவுறுதி எடுத்துக்காட்டியது. ஆச்சேனியர்களின் மக்கள் மயப்பட்ட போராட்டமும் அவர்களின் ஆத்மபலமும் பாரிய ஆயுத ஆட்கள் பலத்தைக் கொண்டிருந்த ஒல்லாந்தரின் கனவுகளைக் கலைத்தது. ஈட்டப்பட முடியாமல் போன வெற்றியும் எட்டாமல் போன முழுமையான இலக்கும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட பகுதியிலிருந்தும் ஒல்லாந்தரை பின்வாங்கச் செய்தது.

1942 இல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து ஒல்லாந்தர் முற்றுமுழுதாக வெளியேறினார்கள். அதன் பிற்பாடு ஜப்பானிய இராணுவம் ஆச்சேயில் தரையிறங்கி சுமார் 3-1/2 ஆண்டுகள் ஆச்சேயை தம்வசம் வைத்திருந்தது.

இதன்பிற்பாடுதான் இறைமையுடைய சுதந்திர ஆச்சே அரசின் தலைவிதியை ஆட்டம் காணச் செய்வதற்கான "சர்வதேச மோசடி"யில் இந்தோனேசிய குடியரசும் ஒல்லாந்தரும் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஆச்சேயின் "இறைமையை" சட்ட விரோதமாக மாற்றுவதற்காகன ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதனூடாக ஆச்சேயின் "இறைமை" இந்தோனேசிய குடியரசுக்கு உரித்தாகியது. ஆச்சே மக்களிடத்தில் கருத்துக் கணிப்புகளோ சர்வசன வாக்குரிமையோ நடத்தப்படாமலேயே ஆச்சேயினுடைய இறைமையையும், மில்லியன் கணக்கான மக்களின் தலைவிதியையும் இருநாட்டு அரசாங்கங்கள் முடிவு செய்தன. காலனித்துவவாதத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து கொள்கைகளுக்கும் எதிரான முறையின் இருநாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அத்துடன், சர்வதேச சட்டங்கள் மற்றும் சமவாயங்களை வெளிப்படையாகவே மீறியது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1514(XV), 2625(XXV) னை நோக்குவதனூடாக ஆச்சேக்கு இழைக்கப்பட்ட `சர்வதேச அநீதி'யை விளங்கிக் கொள்ளலாம்.

"ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகள், சமாதானம் என கோஷமும் வேஷமும் போடுகிற சர்வதேச சமூகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஆச்சேயின் விடுதலைக்கான போராட்டம் நல்லதொரு எடுத்துக் காட்டென்கிறார்" மலேசியாவின் சமூக செயற்பாட்டாளரான அமீன் ஸ்கன்டர்.

ஆச்சேயின் சுதந்திரத்திற்கான மறு பிரகடனம்

டிசம்பர் 4, 1976 ஆச்சே சுதந்திர இயக்கம் (Free Aceh Movement) (GAM - Gerakan Aceh Merdeka) ஸ்தாபிக்கப்பட்டது. 1970 அக்டோபர் 14 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 2711 (XXV) தீர்மானத்திற்கு இணைவாக ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட விடுதலைப் போராட்டங்களுக்கான சட்டபூர்வ முறை, காலனித்துவ பிடியிலிருந்து விடுவித்து சுயநிர்ணய அடிப்படையில் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளல், காலனித்துவ மேலாண்மை, வெளிநாட்டுப் பிடியிலிருந்து விடுபடல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி ஆச்சே சுதந்திரப் போராளிகளின் `சுதந்திரப் போராட்டம்' தோற்றம் பெற்றது. சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.நா.வின் தீர்மானத்திற்கு அமைவான முறையில் ஆச்சேயின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்தபோது `பயங்கரவாதம்' என முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆச்சே சுதந்திர இயக்கத்தின் உருவாக்கத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தோனேசியப் படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக பல நூற்றுக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1970 களில் ஜனாதிபதி சுஹாட்டோவின் பணிப்பின் பேரில், இந்தோனேசியப் படைகள் சுதந்திரப் போராளிகள் என்று கருதியோரைக் கைது செய்யும் மிகப்பெரும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தலைமறைவாகிய ஆச்சே சுதந்திரப் போராளிகள் 1989 இல் மீண்டும் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்தனர். இராணுவ நிலைகள், பொலிஸார் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன. இவ்வாறான தாக்குதல்கள் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசாங்கம் ஆச்சேயை "இராணுவ நடவடிக்கை வலயமாக பிரகடனப்படுத்தியது. அதன் பலாபலனாக மனித உரிமை மீறல்கள் பரவாலக இடம்பெற்றது. படுகொலை கலாசாரம் தலைவிரித்தது. அராஜகமும் கொடும் அடக்குமுறையும் தாண்டவமாடியது. போராளிகளை களையெடுப்பதாக வெளியே கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டதோடு கடும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்தது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறான இராணுவ அட்டூழியங்களால் சுதந்திரப் போராளிகளுக்கான ஆதரவு மென்மேலும் பெருக ஆரம்பித்தது. இளைஞர்களை கொன்றொழிப்பதனூடாக சுதந்திரப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று கருதிய இந்தோனேசிய அரச படைகளின் எண்ணம் தவிடுபொடியாகியது. தமது பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் தொடக்கம் இந்தோனேசிய இராணுவத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட பலரும் போராளிகளுக்கு பல்வேறு வழிகளிலும் ஆதரவினை வழங்கத் தொடங்கினர். விடுதலைப் போராட்டங்களுக்கு மிக மிக அவசியமான மக்கள் ஆதரவும் அதனூடான மக்கள் மயப்பட்ட போராட்டமும் துளிர்விடத் தொடங்கியது.

பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் போராளிகளின் இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு வேவு பார்ப்பவர்களாக, அவர்களுக்கு உணவினை வழங்குபவர்களாக, போராளிகளின் நடமாட்டங்களுக்கு துணைபுரிபவர்களாக எனப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை நல்கினார்கள். போராளிகளுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையும் அதிகரித்தது. இதன் காரணமாக மக்கள் மென்மேலும் அவலங்களை சுமப்பவர்களாக ஆக்கப்பட்டார்கள். ஆனால், எந்தக் கட்டத்திலும் விடுதலைப் போராட்டத்திற்கு உதவி வழங்க பின்னடிக்கவோ அல்லது ஒதுங்கி நிற்கவோ விரும்பவில்லை.

ஆச்சேப் போராளிகள் இழப்புகளை சந்தித்தார்கள், தோல்விகளை எதிர்கொண்டார்கள். தந்திரோபாய பின் நகர்வுகளை மேற்கொண்டார்கள். திடீர் அதிரடி தாக்குதல்களை இராணுவத்தினர் மீது மேற்கொண்டார்கள். போராளிகளின் வெற்றிகள் தோல்விகள் என்றில்லாமல் எல்லாவகையான நகர்வுகளுடனும் போராளிகளையும் போராட்டத்தையும் வலுப்படுத்துபவர்களாக, துணைபுரிபவர்களாக மக்கள் இருந்தார்கள்.

அத்தகைய மக்கள் ஆதரவுதான் ஆச்சே போராளிகளை பல்வேறு நெருக்கடி நிலைகளிலிருந்தும் மீட்டெடுத்தது. போராளிகள் போராடுவார்கள். எமது உரிமைகளை மீட்டெடுப்பார்கள் என்ற எண்ணத்தில் ஆச்சேயின் பெரும்பாலான மக்கள் எண்ணியதில்லை. தமது விடுதலைக்கு - சுதந்திரத்திற்கு தமது பங்களிப்பு போராட்டத்திற்கு அவசியமென சிந்தித்தனர். அதனையே செயற்படுத்தினர்.

மேற்குறிப்பிடப்பட்டது போன்ற மக்களின் மனவுறுதிக்கு அஞ்சியே இந்தோனேசியாவை சுமார் 32 வருடங்கள் (1966-1998) ஆட்சிபுரிந்த சுஹாட்டோ 1989 இல் ஆச்சேயை இராணுவ நடவடிக்கை வலயமாகப் பிரகடனப்படுத்தினார். இராணுவ நடவடிக்கை வலயம் 10 ஆண்டுகள் (1989 - 1999) வரை நீடித்திருந்தது. 1990 - 1992 வரையான காலப்பகுதியில் இராணுவ அடாவடித் தனம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.

குறித்த ஒரு தசாப்த காலத்திற்குள் மட்டும் சுமார் 25 ஆயிரம் ஆச்சேனியர்கள் இராணுவப் பிடிக்குள் சிக்குண்டு மரணமடைந்தார்கள். தன்னிச்சையான கைதுகள், படுகொலைகள் தொடர்ச்சியான சித்ரவதைகள், காணாமல் போதல்கள், புதைகுழிகள், பாலியல் பலாத்காரங்கள், மரண தண்டனைகள் என இராணுவ அட்டூழியம் தலைவிரித்தாடியது.

ஆச்சேயின் சுதந்திரப் போராளிகள் மீதான அழுத்தங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தன. அழுத்தங்களுக்கு ஏற்ப தந்திரோபாயங்களை கையாண்டனர் போராளிகள். ஆயிரக் கணக்கான ஆச்சே மக்கள் அண்டை நாடான மலேசியாவிற்கு புலம்பெயர்ந்தனர். ஆகஸ்ட் 7, 1998 இந்தோனேசிய படைத் தளபதியான ஜெனரல் விரான்றோ தனது படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்காக வருத்தம் தெரிவித்ததோடு பகிரங்க மன்னிப்பும் கோரினார்.

படுகொலைகளுக்கும், அவலங்களுக்கும் இடையில் வாழ்ந்தபடியே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆச்சே `மக்கள்' நடத்திய தளர்வடையாத போராட்டமே ஒரு நாட்டின் படைத்தளபதி தமது படைகள் செய்த அக்கிரமங்களுக்காக மன்னிப்புக் கோரத் தூண்டியது.

மோதுகையை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இராணுவ வலிந்து தாக்குதல்களை நிறுத்தவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும், எதிர்கால சமாதான நடவடிக்கைகளுக்காகவும் மே, 2000 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் இந்தோனேசிய அரசாங்கமும், ஆச்சே சுதந்திர இயக்கமும் கைச்சாத்திட்டன. ஜனவரி 15, 2001 வரை அது நீடித்திருந்தது. இந்த உடன்படிக்கை மூலம் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும், உள்ளக இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இருப்பிடங்களுக்கு மீளக்குடியமரவும் மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வழியேற்பட்டது.

சுமார் 26 வருடங்கள் ஆகியிருந்த மோதலுக்கு தீர்வு காணும் முகமாக சுவிஸ் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் மனிதாபிமான சொல்லாடலுக்கான ஹென்றி டன்ட நிலையத்தின் மத்தியஸ்தத்துடன் மோதலுடன் தொடர்புபட்ட இருதரப்புகளுக்குமிடையிலான ஒப்பந்தம் டிசம்பர் 9,2002 இல் கைச்சாத்திடப்பட்டது.

சமாதானப் பேச்சுகளால் நீண்டகாலத்திற்கு நிசப்தமாக இருக்கமுடியவில்லை.

மே 19,2003 இல் மீண்டும் போர் வெடித்தது. மேகவதி சுகர்னோபுத்ரி தலைமையிலான அரசாங்கம் ஆச்சே மாநிலத்தில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சில ஆயிரக்கணக்கான ஆச்சே சுதந்திர இயக்கப் போராளிகளுக்கு எதிராக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசிய இராணுவ பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆச்சே போராளிகளின் இராணுவப் பிரிவாக (Tentara Nasional Aceh- TNA) செயற்பட்டது. சுமார் 20 வருடங்களாக போரிட்டும் தோற்கடிக்க முடியாததற்குக் காரணம் இராணுவத்திற்கு தீர்மானம் எடுப்பதற்குப் போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்ற வாதம் இராணுவத் தரப்பால் முன் வைக்கப்பட்டது. அவ்வாறான கருத்து மேற்கிளம்பிய பின்னரே ஆச்சே போராளிகளை அழிப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். என்ற அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் அதிகரித்து மனித உரிமை மீறல்கள் உயர்வடைந்ததோடு போராளிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகள் கைப்பற்றப்பட்டன.

ஆனால், அதன் காரணமாக போராளிகளின் நிலைகள் மாறியதே தவிர போராட்டத்தின் வீச்சில் குறைவிருக்கவில்லை. போராளிகளின் தளங்கள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்தும், எதிர்காலத்தில் இந்தோனேசிய இராணுவத்தினர் மீதான பெரும் தாக்குதல்களுக்காகவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆச்சே போராளிகள் நெருக்கடி கொடுக்கக் கூடிய தாக்குதல்களை இராணுவம் மீது கொள்ளவில்லை.

"இன்று நாம் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளோம். 2005 கடல்கோளுக்கு முன்னர் போராளிகளாக இருந்தோம். நாம் பல அதிர்ச்சிகளை இந்தோனேசிய இராணுவத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தோம். சில பின்னடைவுகளை நாமும் எதிர்கொண்டோம். குறிப்பாக எமக்கு ஏற்படவிருந்த ஆள், ஆயுத இழப்புகளை தவிர்ப்பதற்காக எமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை கைவிட்டு மலைகள், காடுகளுக்குள் இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எமது பின் நகர்வுகளை அடுத்து குறித்த பகுதிக்குள் உட்புகுந்த இராணுவம் கடும் மனித உரிமை மீறல்களை உண்டுபண்ணியது. எமது மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்தனர். இது எமக்குள் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. இருந்தாலும் நாம் ஒரு கெரில்லாப் போராளிகள் என்ற முறையில் நிலப்பரப்புகளை தக்கவைப்பதிலும் பார்க்க எமது ஆள், ஆயுத வளங்களை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தினோம். அத்தகைய முன்னேற்பாடுதான் எமது தூரநோக்கு இலக்கான எமது மக்களின் நிலையான சுபிட்சமான வாழ்வை உறுதிப்படுத்தும்" என்றார் சுமார் 20 வருடங்கள் ஆச்சே சுதந்திர இயக்கத்தோடு தனது வாழ்வை அர்ப்பணித்திருந்த களமுனைத் தளபதிகளில் ஒருவரான மொகமட். ஆயுதப்போராட்டத்தின் தீவிரம் ஆழிப்பேரலை ஆச்சேயை அழிக்கும் வரை ஓயவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.