Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமயச்சாரல்

Featured Replies

 

இமயம் நோக்கி மீண்டும்…

மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம்.
ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை.
ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்காக உடற்பயிற்சிகளும் செய்தாகிவிட்டது. வீணாகக்கூடாது. ஆகவே திட்டமிட்டபடியே பயணம் செய்கிறோம். நாளை 26 அன்று மாலை கிளம்பி கோவை. 27 அன்று விமானத்தில் டெல்லி. நேராக சண்டிகர் வழியாக ஜம்மு. இமயத்தின் சில சரிவுகள். சில மலைகள்.
நான், கிருஷ்ணன் [ஈரோடு], விஜயராகவன் [ஈரோடு] ராஜமாணிக்கம் [திருப்பூர்] பிரசாத் [சேலம்] ராஜகோபாலன் [சென்னை] சுதாகர் [பட்டுக்கோட்டை] ஆகியோர் பயணத்தில் சேர்ந்துகொள்கிறோம். ஜம்முவிலும் மழை உண்டு. மலையேறுவதெல்லாம் கடினம் என்றார்கள். பார்ப்போம்.

 

இமயச்சாரல் – 1

 

இருபத்தாறாம் தேதி கோவைக்கு ரயிலில் கிளம்பும்போது அப்பயணம் காஷ்மீர் வரை நீளவிருக்கிறது என்பதே உற்சாகம் தருவதாக இருந்தது. குழுவில் எவருக்குமே கன்யாகுமரி முதல் காஷ்மீர்வரை என்ற அனுபவம் இல்லை. கிளம்புவது வரை கடுமையான பணிகள். எழுதிக் கொடுத்தாக வேண்டிய சினிமா வேலைகள், வெண்முரசு, கட்டுரைகள். கிளம்பும் கணம் வரை பரபரப்புதான்.

அருண்மொழியும் பரபரப்பாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் வந்திருந்தனர். சென்ற சில வாரங்களுக்கு முன் இங்கே என் வாசகரும் நண்பருமான தெரிசனங்கோப்பு மகாதேவன் அவர்களின் புகழ்பெற்ற சாரதா ஆயுர்வேதா மருத்துவமனையில் அரங்கசாமி வந்து தங்கி ஒரு பஞ்ச கர்மா சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டார். பிறவி விற்பனையாளரான அரங்கா பஞ்சகர்மா என்னும் மாபெரும் அனுபவத்தை அருண்மொழிக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட அவளும் தெரிசனங்கோப்புக்கு திங்கள் முதல் செல்வதாக திட்டம்.

ரயில்பயணங்களின் அவஸ்தைகள் பெருகி வருவதற்கு குடி ஒரு முக்கியமான காரணம். அந்திமயங்கியபின் குடிக்காமலிருக்க முடியாதவர்களாக தமிழர்கள் மாறிவிட்டார்கள். குடித்தால் கத்தி கூச்சலிட்டு ரவுடித்தனம் செய்வதும் இளைஞர்களின் இளமையின் அடையாளம் என்று நிறுவப்பட்டுவிட்டது. நெல்லையில் ஏறிய நான்குபேர் கொண்ட ஒரு கும்பல் மதுரை வரை சலம்பிக்கொண்டே இருந்தது. இந்த வீணர்களை கட்டுப்படுத்த இன்று எந்த சட்டமும் அமைப்பும் இல்லை.

காலையில் விஜய் சூரியன் வந்து ஏ பி லாட்ஜுக்கு அழைத்துச்சென்றார். அங்கே ஏற்கனவே சேலம் பிரசாத் வந்திருந்தார். கிருஷ்ணன் சற்று நேரத்தில் வந்தார். அதன்பின் செல்வேந்திரன் திருக்குறள் அரசி மற்றும் இளவெயினி. கீதா கபேயில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஷிமோகா ரவி வந்தார். பயணத்துக்கான உற்சாகங்கள், அர்த்தமற்ற பதற்றங்கள்.

நான் நாகர்கோயில் ரயிலைப்பிடிக்க வரும்போது சாலையை மறித்து தளவாய்சுந்தரம் பங்கேற்கும் அ.தி.மு.க. கூட்டம். ரயிலைப்பிடிக்கவேண்டிய பயணிகள் கதறிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக சந்துகள் வழியாகச் சுற்றி கடைசிக்கணத்தில் ரயிலைப்பிடித்தேன். ராஜகோபாலன் ஏறிய பஸ் மேல்மருவத்தூர் அம்மாவின் பக்தர்களால் நான்கரை மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் பத்தரை மணிக்குத்தான் கோவை வந்தார். பன்னிரண்டுக்கு விமானம். இறங்கிய இடத்தில் இருந்து டாக்ஸியை எடுத்து அடித்துப்புரண்டு கடைசிக்கணத்தில் வந்து சேர்ந்தார். பயணத்திற்கு சுவை சேர்த்த அந்த ‘திரில்’ சில கணங்களிலேயே அணைந்தது. விமானம் நாற்பது நிமிடம் தாமதம்.

அடுத்த ‘திரில்’ ஆரம்பம். டெல்லியில் இருந்து ஜம்முதாவிக்குச் செல்லவேண்டிய எங்கள் ரயில் இரவு எட்டேமுக்காலுக்கு. விமானம் மும்பை வழியாக டெல்லி வருவது. மும்பையில் கனமழை என்று முக்கால்மணிநேரம் வானிலேயே சுற்றிவந்தது. அதன்பின் ஒன்றரை மணிநேரம் தாமதமாக எழுந்து டெல்லியில் மீண்டும் ஒன்றரை மணிநேரம் வானில் சுற்றி எங்களை மாலை ஏழரை மணிக்கு இறக்கியது. பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தபோது எட்டுமணி. அப்போது அடுத்த கிளைமாக்ஸ். ரயில் ஒன்பதே முக்காலுக்குத்தான். சரியாகப் பார்க்காமல் பதற்றம் அடைந்திருக்கிறோம்.

ரயில் நிலையம் எதிரில் ஒரு சின்ன ஓட்டலில் ஆளுக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிட்டோம். மூன்றுபேருக்குச் சேர்த்து 680 ரூபாய் பில் என்றார்கள். சண்டை போட்டால் நாலைந்துபேர் சூழ்ந்துகொண்டார்கள். சரி ஒத்துக்கொள்கிறோம் என்று ரயில்நிலையம் மீண்டோம். அழுக்கான பெட்டியில் வெளியே மழை பெய்துகொண்டிருக்க தூங்கியபடியே ஜம்மு. அழுக்கில் மூழ்கிய ஜம்முதாவியில் எங்கு நோக்கினும் பூரி தின்று கொண்டிருந்தனர். வானம் புகையால் மூடப்பட்டதுபோல இருந்தது.

20140728_144318-1024x576.jpg

சந்தைக்குள் ஒரு சிறிய விடுதியில் ஒற்றை அறையை வாடகைக்கு எடுத்து குளித்து உடைமாற்றினோம். ஈரோட்டைச்சேர்ந்த நண்பர் சரவணன் அங்கே ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவர் வந்து சந்தித்தார். அவர்தான் சென்ற லடாக் பயணத்தில் நரீந்தர் சிங் என்னும் காக்காவை எங்களுக்கு வண்டியோட்டியாக அமர்த்தியவர். இம்முறையும் காக்காதான் வந்தார். கட்டித்தழுவிக்கொண்டோம்.

சிற்றுண்டிக்குப்பின் காகாவின் வண்டியில் டயர்கள் மாற்றிக்கொண்டு கிளம்பினோம். முதல் இலக்கு ஜம்முதாவியில் இருந்து நூறு கிமீ தொலைவில் இருந்த சிவ்கொரா என்ற புராதனமான இயற்கை குகைக் கோயிலுக்கு. அங்கே சென்று சேர மூன்று மணி ஆகிவிட்டது. வழியில் நீர் பெருகிச்சென்ற பியாஸ் நதியைக் கடந்தோம். ஜம்மு மிக வளமான சமவெளி. பெரிய அளவில் வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. மண்கூரை கொண்ட பழமையான வீடுகள் இருந்தாலும் நிறைய வீடுகள் புதியவை. எங்கும் நெல் மக்காச்சோளம் பசுமையாகத் தழைத்திருந்தது. ஜம்மு சமவெளி பாஸ்மதி அரிசிக்கு புகழ்பெற்றது.

ஷிவ்கொரா மலையடுக்கின் நடுவே இருந்த ஒரு பெரிய இயற்கைக்குகை. அங்கிருந்த ஒரு ஸ்டால்கமைட் குவையை லிங்கமாக வழிபடுகிறார்கள். முக்கியமான புனித தலமாகையால் நல்ல கூட்டம். வெயில் இல்லை. சிறிய மழைச்சாரலும் இருந்தது. ஆகவே நான்கு கிமீ தூரம் மலை ஏறிச்செல்வது கடினமாக இல்லை. நூற்றுக்கணக்கான குதிரைகள், கோவேறுகழுதைகள். அவற்றில் ஏறி மேலே சென்றுகொண்டே இருந்தது கூட்டம். விதவிதமான பல்லக்குகள். சுமைதூக்கிகளின் நடையசைவு பல்லக்கில் தெரியாத அமைப்பு ஒன்று வியக்கச்செய்தது.

20140728_150916-1024x576.jpg

ஒரு கைடு குகைக்குள் கூட்டிச்சென்று காட்டினார். நீர் கசிந்து உடல்வெப்பத்தால் ஆவியாகி நிறைந்த இருண்ட பாறைக் குகை. நல்ல நெரிசல். குகைலிங்கத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தோம். மாலை ஆறாகிவிட்டது. ஒரு ஓட்டலில் மாகி நூடில்ஸ் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மழையில் மலையேறியதும் விதவிதமான குதிரைகளும் இந்நாளின் சிறப்பனுபவங்கள். வெண்முரசு எழுதும் மனநிலைக்கு குதிரைகளைக் காண்பது கனவு நிகர் அனுபவமாக இருந்தது.

20140728_150919-1024x576.jpg

மாலையில் ரியாஸி என்ற ஊரில் வந்து விடுதியில் அறைபோட்டுத் தங்கினோம். நான் சட்டைகளை துவைத்துப்போட்டேன். மழையில் ஜீன்ஸின் அடிப்பகுதி சேறாகியிருந்தது, அதை மட்டும் கழுவி குளியலறையில் காயப்போட்டேன். மலை ஏறும்போது கண்களில் எவையெல்லாமோ பதிந்துகொண்டிருந்தாலும் மீண்டபின் குதிரைகளின் அசைவுகள் அன்றி எவையும் நிற்கவில்லை. அவற்றின் கவனம் மிக்க நடை. அந்த மெல்லிய நடையிலேயே தெரிந்த கம்பீரம். குதிரைகளுக்கு டயர் வெட்டி லாடமிட்டிருந்தனர். அங்குள்ள படிகளில் ஏற அதுதான் உதவுகிறது போலும். அவை நடக்கும் ஒலி லாடம்போல ஒலிக்கவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது..

திரும்பும் வழியில் ஒரு பெரிய வேடிக்கை. கோவை இண்டியன் எக்ஸ்பிரஸில் இருந்து மீனாட்சி சுந்தரம் என்ற நிருபர் கூப்பிட்டார். கோவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் நிகழ்வதாகவும், அதில் சு.வெங்கடேசன் என்னை கடுமையாக தாக்கிப் பேசியதாகவும் சொன்னார். என்இணையதளத்தில் நான் கணவனின் எச்சிலை மனைவி உண்டால் உடலுக்கு நல்லது என்பதை e=mc2 சூத்திரத்தை வைத்து நிரூபிக்க முயன்றிருப்பதாகச் சொல்லி அக்கட்டுரையை எடுத்துக் காட்டி ‘நார் நாராக’ அதை கிழித்து விமர்சனம் செய்ததாகவும், அதற்கு ஒரு கண்டனத் தீர்மானமே போடவேண்டும் என்றதாகவும் சொன்னார்.

‘அவர் சொன்னப்ப சந்தேகமா இருந்திச்சு சார். நியூஸ் குடுத்திருக்காங்க சார். தெரியாம போட்டு நான் மாட்டிக்கக்கூடாதுன்னு நேர்ல கூப்பிட்டேன்… நீங்க அப்டி எப்ப எழுதினீங்க?’ என்றார். ‘நான் அது பகடி சார். அதான் வெங்கடேசனுக்கும் முற்போக்கு தோழர்களுக்கும் புரியலை’ என்றேன். சிரித்துக்கொண்டே இருந்தோம். கொஞ்சநேரம் சிரித்து அடங்கியபின் யாராவது ஒருவர் வெங்கடேசன் பற்றி ஏதாவது சொல்ல மீண்டும் சிரிப்பு. இந்தநாளின் இத்தனை உடற்களைப்பையும் இல்லாமலாக்கிய வெங்கடேசனை நினைத்தபோது நன்றியில் கண்ணீர் மல்கினேன்.

http://www.jeyamohan.in/58173

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

இமயச்சாரல் – 2

 

ரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை. அமர்நாத் பயணம் செல்பவர்கள் மட்டுமே ஓரளவு இப்பகுதியின் சுற்றுலாத்தொழிலை நிலைநிறுத்துகிறார்கள்.

2

காலையில் எழும்போது நல்ல வெளிச்சம். இங்கே இரவு எட்டரைக்குத்தான் ஒளி மறைகிறது. காலை ஐந்துக்கே விடிந்தும் விடுகிறது. ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் அருகே மலையடிவாரத்தில் சீனாப் நதியின் துணையாறு ஒன்றின் கரையில் இருந்த ஒரு சோலைக்குள் இருந்த ஊற்றைப் பார்ப்பதற்காகச் சென்றோம்
அதிக ஆழம் இல்லை ஒரு கிலோமீட்டர் ஏறி இறங்கவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே வியர்த்து வழியத்தொடங்கியது. காற்றில் இருந்த நீராவிதான் காரணம். அந்த ஊற்று ஒரு மலையிடுக்கில் இருந்து பெருகி வருகிறது. தவம் செய்யும் பகீரதன் சிலையும் ஒரு சிறிய சிவன் கோயிலும் இருந்தன. சுற்றிலும் ஓர் அழகிய பூங்கா. காலையில் ஏழு எட்டு சிறுவர்களுடன் ஒரு சுற்றுலாக்குழு வந்து நீராடிக்கொண்டிருந்தது.
 

6

 

அந்த ஆறு செக்கச்சிவப்பாக குருதிவெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது. விஷ்ணுபுரத்தின் சோனா நினைவுக்கு வந்தது. ஏதோ செம்மண்பாறையில் ஊறி வரும் நதி. ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை. பச்சை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவிசெறிந்த காற்று. இளமழை. காலைநடையே மனஎழுச்சி அளிப்பதாக இருந்தது. திரும்பிவந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே சுதாகர் வந்து சேர்ந்துகொண்டார்
நேராக ரியாசிக்கு அருகே இருந்த அருவிக்குச் சென்றோம். ஆறு மழையில் பேருருவம் கொண்டிருந்தது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு மூன்று கிலோமீட்டர் அகலத்துக்கு விரிந்து செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்துக்கொப்பளித்து சென்று கொண்டிருந்தது. முதலில் பல ஆறுகள் என்றுதான் எண்ணத்தோன்றியது.
 

3

 

ஆறு மலையை அறுத்து உருவாக்கிய பள்ளத்தாக்கு வழியாக மலைவிளிம்பைச் செதுக்கி சாலை போடுவதே இமயத்தில் வழக்கம். ஆகவே எங்கள் வலப்பக்கம் சினாப் நதி வந்து கொண்டே இருந்தது. அனேகமாக ஊர்களே இல்லை. ஆங்காங்கே ராணுவமுகாம்களின் மாபெரும் கம்பிவேலி சுற்றப்பட்ட மதில்கள். மலையடுக்குகளில் சில கட்டடங்கள். கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே செந்நிறத்தில் ஒரு மாபெரும் பதாகைபோல நதி.
சியார் பாபா என அழைக்கப்படும் செங்குத்தான அருவி சினாப் நதியின் கரையில் மலை உச்சியில் இருந்து விழுகிறது. சாலையோரம் கொப்பளித்து வரும் நதியை நோக்குவது நெஞ்சடைக்க வைக்கும் அனுபவம். பேசியபடியே திரும்பும்போதுதான் வானில் இருந்து நேரடியாகவே விழுவதுபோல பொழியும் சியார்பாபா அருவியைப் பார்த்தோம். அனைவருமே ஒரு வியப்பொலி எழுப்பிவிட்டோம்.
 

5

 

சிறிய அருவி. சிற்றோடை அளவுக்கே நீர். ஆனால் அது அறுநூறடி உயரத்தில் இருந்து ஒரு நீண்ட வெண்கோடு போல விழுகிறது. கரியமலை தோளில் சரியும் வெண் துகில் போல. நல்லவேளையாக செங்குத்தாக விழாமல் மலையை ஒட்டியே சிதறிச்சிதறி விழுந்தது. எனவே கீழே நின்று குளிக்க முடிந்தது. அந்தக் காலைக்குளியல் வாழ்க்கை அளிக்கும் மகத்தான பரிசுகளில் ஒன்று.
உடனடியாக குறிப்பிடத்தோன்றியது இத்தகைய இடங்களில் கேரள, தமிழ் இளைஞர்கள் நடந்துகொள்வதுபோல பொறுக்கித்தனமாக ஜம்மு பகுதியில் இளைஞர்கள் நடந்துகொள்வதில்லை என்பதுதான். தமிழகத்தின் சுற்றுலாப்பகுதிகளின் மிகப்பெரிய அவலமே குடித்து நிலையழிந்து நாகரீகமோ அடிப்படை ஒழுங்கோ இல்லாமல் நடந்துகொள்ளும் படித்த, பணியாற்றக்கூடிய இளைஞர்கள்தான். பொறுக்கியாக இருப்பதே நாகரீகம் என்ற எண்ணம் இங்கே வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்களும் இயல்பாக நீராடுவதைப்போன்ற ஒரு சூழலை நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கிவிடமுடியாது.
 

இளமழை பெய்துகொண்டே இருந்தது. ஒரு கனவில் நிகழ்வதுபோன்ற அருவி. சில கணங்களில் அது வானிலிருந்து விழும் விழுது. சிலகணங்களில் ஒரு கண்ணாடி மரம். சிலகணங்களில் ஒரு பெரிய ஒளிரும் வாள். சுற்றிலும் பசுமையும் ஈரக்கருமை ஒளிவிட்ட பாறைகளுமாக மலைகள். வாழும் கணங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் எவ்வளவு குறைவானவை.
திரும்ப ரியாசிக்கு வந்து அருகே இருந்த பீம் கர் என்ற மலைக்கோட்டையைப் பார்த்தோம். பழைய கோட்டை அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் டோக்ரி மன்னர்களால் கட்டப்பட்டது. இப்போது தொல்லியல்துறை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. மழையில் நாங்கள் மட்டும் அமைதி சூடி நின்ற கோட்டையை சுற்றிப்பார்த்தோம். செந்நிறக் கற்களால் ஆன கோட்டை தாமிரத்தால் ஆன மணி முடி போல மலைமேல் நின்றிருந்தது.
 

4

மதியம் சாபிட்டுவிட்டு கிளம்பி பூஞ்ச் நோக்கி பயணமானோம். எங்கள் திட்டம் இரவுக்குள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் நகரை சென்றடைவது. நாங்கள் இதுவரை செய்திகளில் மட்டுமே கேட்டிருந்த நகரம். போருடனும் தீவிரவாதிகளின் தாக்குதலுடனும் மட்டுமே தொடர்புள்ள இடம்.

http://www.jeyamohan.in/58550

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன்,
இமயச் சாரல் பயணக் கட்டுரையின்..... படங்கள்  இருந்தால், இன்னும் சுவராசியமாக இருக்கும்.
இருந்தால்... இணைத்து விடுங்களேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இமயச்சாரல் – 3

 

இன்று பூஞ்ச் நகரில் காலை கண்விழித்து ஒரு சிங்கிள் டீக்காக நானும் க்ருஷ்ணனும் நகரில் சுற்றினோம். டீக்கடைகள் கண்விழிக்கத் தொடங்கவில்லை. பூஞ்ச் ஒரு அழுக்கான சோகையான நகரம். நம் உளுந்தூர்பேட்டை அளவிருக்கும். இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்நகரம் பழைமையானது. டோக்ரி மன்னர்களின் அரண்மனை நகரின் நடுவே ஓங்கி நிற்கிறது. பயணிகள் பார்க்க அனுமதி இலை. தெருக்கள் அகலமானவை. நம்மூர் ஒன்றில் நடந்துகொண்டிருக்கும் உணர்வையே பெரும்பாலும் அடைந்தோம். ராணுவமுகாம்தான் இன்று ஊரின் மையம். அதைச் சுற்றியே நகர் உருவாகி இருந்தது. முகாம் கம்பிவேலிக்கு அப்பால் தனி உலகமாகப் பதிந்திருந்தது.

1.jpg

ஓருவழியாக டீக்கடையைக் கண்டு டீ குடித்தோம். கூடவே அந்த ஊர் பழக்கப்படி ஒரு ஜாங்கிரியும் சாப்பிடோம். மீண்டும் அறைக்கு வந்தோம். பாதி சீக்கியர்களும் மீதி முஸ்லீம்களும் நிறைந்த இந்தப் பகுதி அடிக்கடி பாகிஸ்தானிய குண்டுகள் வந்து விழுவது. ஊடுருவல் அடிக்கடி நடக்குமாம். ஆனால் மதக்கலவரம் இல்லை. காரணம் சீக்கியர்கள் மிகபெரிய சமூகமாக இருக்கிறார்கள் என்பதுதான்.
 

2-1.jpg

 

பூஞ்ச் வரும் வழி மிகமிக அழகான அனுபவமாக அமைந்தது. ஒரு பக்கம் நதியும் மறுபக்கம் உயர்ந்த மலையும் தொடர்ந்து வரும் இமய நிலப்பகுதி. மலை இன்றும் மலையாக ஆவதாக முழு முடிவை எடுக்கவில்லை. உருண்டு சரிந்து சாலையை நிறைத்துக்கிடந்தன மாபெரும் பாறைகள். ஊருளைக்கல்லாலும் ஜல்லிக்குவியலாலும் ஆன மலைச்சரிவில் செல்லும்போது உருளும் பாறைகள் கவனம் என எழுதிவைத்தே நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
 

9.jpg

 

பூஞ்சில் இருந்து நாங்கள் செல்லவேண்டிய இடம் ஏழு ஏரிகள். அப்படி ஒரு இடம் பூஞ்ச் அருகே இருப்பதாக கூகிள் சொன்னதை நம்பி வந்தோம். அப்படி ஒரு இடமே எவருக்கும் தெரியவில்லை. ஆறுபது கிமீ தொலைவுதான் என்று கூகிள் சொன்னது. ஆனால் இப்பகுதியில் சுற்றுலா எம்பஸி கிடையாது. எவருக்கும் எந்தத் தகவலும் இல்லை. ஓரு வயதான முஸ்லீம் சொன்னார் என்று புகழ்பெற்ற மொகல் சாலையில் ஸ்ரீநகர் நோக்கிக் கிளம்பினோம்.
 

3-1.jpg

 

உலகிலேயே அபாயமான பாதையான லடாக் கார்கில் சாலைக்கு சற்றே குறைந்தது மொகல் சாலை. பல இடங்களில் அதலபாதாளத்தின் விளிம்புவழியாக உடைந்து சரிந்த பாறைகள் வழியாகச் சென்றோம். முதல் இலக்கு நந்திஷூல் என்னும் மலையருவி. குளிக்க முடியாது. ஆனல் நுரைநீர்ப் பெருக்கை சென்று பார்க்க அழகான பாதை இருந்தது. செல்லும்போது முன்பு இமயப்பயணத்தில் நாங்கள் தொட்ட அந்தச் செடியை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது கும்பமேளா முடிந்து நாங்கள் சென்ற பயணம். யுவனும் நானும் கிருஷ்ணனும் அந்தச் செடியை தொட்டதுமே மின்னதிர்ச்சியை அறிந்தோம். நம்மூர் செந்தட்டிபோலத்தான், ஆனால் செந்தட்டி அந்த ரசாயனம் உடலில் ஊற இடம் அளிக்கும். இது மின்னதிர்ச்சியை அளிக்கும், உண்மையில் ஒரு அற்புதமான அனுபவம். சுதாகர் மட்டும் தொட்டுப்பார்த்து இரண்டு மணி நேரம் சொறிந்துகொண்டே இருந்தார்.

மொகல் சாலையில் பீர் கி கலி என்ற இடத்தை அடைந்தபோதுதான் குளிர் வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரித்தது. அங்கே ஒரு பெரிய பனிப்பாளத்தைக் கண்டோம். சாலை ஓரமாகவே. நிறுத்தி இறங்கி அதைப் பார்த்தோம், எஸ்கிமோக்களின் பனிவீடு போல் தோன்றியது. அங்கே ஒரு பெரியவரை அறிமுகம் செய்துகொண்டோம். முகமது அயூப் என்பது அவரது பெயர். அவர் அந்த ஏழு ஏரிகளைப்பற்றி அறிந்திருந்தார். அந்த ஏரி இருபது கிமீ நடந்து செல்லவேண்டிய இடம் என்றார். அற்புதமான இடம், பார்த்தாக வேண்டிய இடம் என்றார். அவரது இல்லத்திலேயே தங்கி மறுநாள் அங்கே சென்றால் என்ன என்று நினைத்தோம்.
 

4-1.jpg

 

அயூப்பிடம் கேட்டபோது அவரது முகம் மலர்ந்தது. அதை அவருக்கு அளிக்கப்பட்ட பெரிய கௌரவமாகவே எடுத்துக்கொண்டார். எங்களுக்கு ஓர் அறையும் கம்பிளிகளும் அளிப்பதாக சொன்னார். ஆனால் எங்கள் ஓட்டுநர் அதை உறுதியாக மறுத்துவிட்டார். வீட்டுக்கு வந்து டீ சாப்பிடுங்கள் என்று அயூப் சொன்னார். அவரது அண்னன் மகன் யூனுஸ் மற்றும் குழந்தைகள் இருந்தனர். குட்டிப்பெண் ஒன்றுக்கு பெயர் போடப்படவில்லை, பெயர் குடியா. பொம்மை என்று பொருள். அவரது பீபி எங்களுக்கு காஷ்மீரி கஹுவா செய்து தந்தார்கள். குழந்தைகள் உற்சாகமாக விளையாடின.
 

8.jpg

 

நாங்கள் அங்கே தங்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டதும் அயூப்பின் முகம் மாறியது. மிகவும் பண்பட்டவர் என்பதனால் உடனே மறைத்துக் கொண்டார். நான் அக்குழந்தைகளை ஆசீர்வதித்து எங்கள் வழக்கப்படி பணம் கொடுக்க விரும்புவதாக அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் மகிழ்ச்சியுடன் சிரித்தார். குழந்தைகளை முத்தமிட்டு ஐநூறு ரூபாய் வீதம் கொடுத்தேன். அவர்களிடம் விடைபெற்றோம். அருகே ஷோப்பியான் என்ற ஊரில் நண்பர் வந்திருப்பதாகவும் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாகவும் சொல்லிவிட்டு வந்தோம்.
அயூப்பின் வீடு அவரே கட்டியது. சாலையில் இருந்து கீழிறங்கிச் செல்லும் காஷ்மீரி பாணி வீடு அது. கூரைக்குமேல் மண் பூசப்பட்டது. தங்கியிருக்கலாம். ஆனால் ஓட்டுநர் ஒத்துகொள்ளவேயில்லை. அவர் அயூப் வீட்டுக்கு வரவோ அயூப்பிடம் முகம் கொடுத்து பேசவோ இல்லை. அயூப் அவரே வந்து பேசியபோதும் கண்களை சந்திக்காமலேயே பேசினார்.
 

5-1.jpg

அருகே இருந்த கீர்போரா என்ற ஊரில் அறைபோட்டோம். முழுக்க முழுக்க சுன்னி முஸ்லீம்களின் நகரம். மறுநாள் காலை கிளம்பிச் செல்லலாம் என்று சொன்னால் ஓட்டுநரும் சரவணனும் மன்றாடினார்கள். அயூப் ஓர் நிறைந்த மனிதராக எனக்குப்பட்டார். விடுதியிலும் உணவகத்திலும் சந்திக்க நேர்ந்த அனைத்து இஸ்லாமியரும் மிக மிக நட்புடன் மட்டுமே இருந்தனர். கன்யாகுமரியில் இருந்து வருகிறேன் என்ற பேச்சே அவர்களை மகிழ்வடையச்செய்தது.
 

 

ஆனால் காகா பொதுவாகவே இவர்கள் நல்ல மனிதர்கள்தான் என்றார். விருந்தினரை வரவேற்பவர்கள். சுற்றுலா பயணிகள் வருவதால் தங்கள் வாழ்க்கைக்கு நல்லது என நினைப்பவர்கள். ஆனால் ஒரு மத ரீதியான ஆணை வந்தாலே மாறிவிடுவார்கள். எந்த உதவியும் செய்யமாட்டார்கள் என்றார். அயூப் புஜார் என்ற சுன்னி பிரிவைச் சேர்ந்தவர். அவர்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றார். அயூப் எங்களிடம் பேசும்போது நீங்களும் நானும் ஒரே நாட்டினர் என்றார். நீங்கள் எங்களவர் என்றார் விடுதியாளர். இதில் எந்தத் தரப்பு உண்மை எனத் தெரியவில்லை. எதுவானாலும் ஓட்டுநரை மீறி செல்ல முடியாது. ஆகவே ஏரிகளை பார்க்கச் செல்லவேண்டாம் என முடிவு செய்தோம்

.7.jpg

காஷ்மீர் முழுக்க ஆழமான அவநம்பிக்கை இருப்பதைக் காணமுடிந்தது. ஊடுருவி வரும் தீவிரவாதிகளும் பிரிவினை அரசியல்வாதிகளும் உருவாக்கிய கசப்பு அது. அச்சம் உருவாக்கிய கசப்பு. அந்தக் கசப்பு இஸ்லாமியருக்கு இந்துக்களிடம் இல்லை. இந்தியாவிடமும் இல்லை. அவர்கள் வணிகத்தை விரும்புபவர்கள், ஆனால் அஞ்சியிருக்கிறார்கள். ஒரு பெட்ரோல் நிலையம் சென்று டீசல் கேட்டோம், ஓட்டுநர் இந்து என்பதனால் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பயணிகள் என்று சொல்லி கெஞ்சியபோது ஐநூறு ரூபாய்க்கு மட்டும் டீசல் அளித்தார். அது இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம். அத்தனை அச்சம் ஆள்கிறது காஷ்மீர் சமவெளியை.

http://www.jeyamohan.in/58591

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.