Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி!

Featured Replies

praba1_20511.jpg

"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும்.  உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இருக்காதா பின்னே....? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே!

கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந்த பெரும் காவல் படையோ, ''எங்கே உங்கள் மகன்? அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்'' என்று மிரட்டினர். நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், 'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்! அவரது பிறந்த தினம் இன்று.

prabha01_20307.jpg

1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையேத் திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான ஆரம்ப விதை அவரது சிறுவயது பிராயத்தில் நிகழ்ந்தது. ஒரு ராணுவ வீரன், ஒரு முதியவரை ரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ''ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்?'' என்று கேட்டார். அவரது தந்தையோ, ''நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ ராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது'' என்றார்.

உடனே பிரபாகரன், "இதே ராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்" என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.

தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில...

prabha4_20164.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து "நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்" என்று ஆலோசனை தந்தார். இதனைக் கேட்டு கடும் கோபம் கொண்ட பிரபாகரன், ''இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள்.  இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்'' என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.

கட்டுநாயக்க பன்னாட்டு விமான தளத்தோடு இணைந்தே இலங்கை விமானப் படைத் தளமும் இருந்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதியன்று இந்த விமான தளத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமான தளத்துக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன், ''பயணிகளில் ஒருவருக்குக்கூட எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்புதான் தாக்குதல் நடத்த வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியும் பெற்றார்

prabha3_20379.jpg

தமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு, பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். ''போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே.... எப்படித் தப்பித்து வந்தாய்?'' எனக் கேட்டார் பிரபாகரன். "நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்? இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்று கடுமையாக எச்சரித்தார்.

இறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த  இலங்கை ராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப் பற்றிக் கூறிய வரிகள் இவை : "பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். அவர் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்த போதும் அன்பான குடும்ப மனிதராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன." என்றார்.

ஒழுக்கமற்றக் காரியங்களையோ, குறுக்குவழி சதி செயல்களையோ விரும்பாதவர் பிரபாகரன். ஆனால், அந்த மாவீரனுக்கு உலக நாடுகள் செய்தது என்னவோ சதியைத் தவிர வேறொன்றும் இல்லை.

 

prabha5_20558.jpg

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பிரபாகரன் கூறிய பதில் மிகவும் பிரசித்தி பெற்றது. "இந்தியாவில் நீங்கள் அமைதி போராட்டம் செய்து வெற்றி கண்டீர்கள், அப்படி இருக்க இலங்கையில் மட்டும் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடுகிறீர்கள்?" என நிருபர் ஒருவர் கேட்க... பிரபாகரன் அளித்தப் பதில் இது... "இந்தியா அமைதியை மதிக்கும் ஒரு நாடு. அதனால் அங்கு அஹிம்சை ஆயுதம் ஏந்திப் போராடினேன். ஆனால், இலங்கையோ அஹிம்சையை மதிக்காத சர்வாதிகார நாடு. நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்தனர்" என்றார்.

http://www.vikatan.com/news/india/73495-lankan-army-general-praised-velupillai-prabhakaran.art

Edited by போல்

  • தொடங்கியவர்

பிரபாகரன் தொடர்பில் அறியப்படாத பல இரகசியங்கள்!!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காவிற்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள்.பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்...

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “பொலிஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்.

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம்.

அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது.“ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான்.

அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.” “பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை.

மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும்.

பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்.

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன்.

அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை. எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார்.

ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை.

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார்.

26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்.

‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்.

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்.

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்.

பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்.

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்.

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்.

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங்.

இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்.

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார்.

பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்.

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்.

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்.

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்.

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன்.

இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்.

“ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்.

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம்.

அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்.

 

http://www.tamilwin.com/ltte/01/126113?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.