Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் பற்றி ஒரு நோக்கு

Featured Replies

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான காலத்தில் அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பது உச்ச கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்று வரை மனித குலம் போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை அமைத்து எமக்குத் தந்து விட்டு மடிந்து போன மானமுள்ள வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கி அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்தமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேச நாடுகளின் தளபதியுடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.

முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படை வீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றுவரை நினைவு கூருகின்றனர். தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27 ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதே போல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும் பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர் வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க் களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசை வரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன என்ற கவிதை வரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.

அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீரர்களின் நினைவு தினமான கார்த்திகை 27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவு தின விழா ஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்பட வேண்டியவையே.

அதே போல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடனப்படுத்திய சுதந்திர தினத்தை ஆண்டு தோறும் தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடி வருவதனைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்குக் காரணம் அந்த இனத்தின் காவலர்களாக அவர்கள் விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்களையும், தியாகங்களையும் செய்த பின் இஸ்ரேல் என்ற நாட்டை அமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுதலை அமைப்பினராக இருந்தமையே ஆகும். அவர்கள் முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.

450 ஆண்டுகளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 அன்று சுதந்திரம் அடைந்தது. அந்த நாள் இன்றும் சுதந்திர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்களின் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம். ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றியையும் விடுதலையையும் வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கு எதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்நாம் படையின் தலைவர் ஹோசிமின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீரர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதே போல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.

இன்று ஈழத் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, விழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப் பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப் பூ பண்டைத் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பத்து அத்தாட்சிப்படுத்துகின்றது.

“மரகத மணித்தாள் செறிந்த மணிக் காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. “காந்தள் முழு முதல் மெல்லிழை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழை நீரால் அடித்து வரப்பட்ட காந்தள் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது. “சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.

“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க் கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப் பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப் பூ நிறைந்து கிடக்கின்றது.

சுதந்திர தமிழீழ விடுதலையை அடி நாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரை வார்த்து தமிழர் மானம் காத்த மாவீரர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை. ஏரி நட்சத்திரங்களாக விடுதலையின் விடி வெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச் சிற்பிகளை நினைவுகூரும் நாள் கார்த்திகை 27 ஆகும். கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள். ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்தும் அளப்பரிய அற்புதங்கள் செய்தும் மயிர் கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச் செய்த இந்த மாவீரர்களின் வீரத் திருநாள் கார்த்திகை 27 ஆகும்.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீரர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடு கற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்க முறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்து விட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள்.

போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு இலக்கியங்கள் சான்றாகின்றது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.

அந்த வகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புகளுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும்.

உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக் குழந்தைகளுக்கு வீரத் தாலாட்டு ஈழத் தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெற்றது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ. அத்துடன் போரில் மாண்ட வீரர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத் தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான் என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருக்கின்றோம்.

அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத் தலைவர் பிரபாகரனாக ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதே போல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்க காலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்கள் எவ்வாறு நினைவு கூரப்பட்டார்கள் என்பதற்கு சான்றாகிறது.

முதன் முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் மாவீரர் வாரமாக 1989 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1307 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர்.

ஆனால் 1991 இலிருந்து வீர மரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனி மேல் எரிக்கப்படாது. விதை குழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங் காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச் சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும் எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள் வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அத்துடன் 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக புலிகளின் கொடியாக இருந்த புலிக் கொடியைத் தேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார்.

அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு தொடக்கம் வீர மரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆம் ஆண்டில் 3750 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவு கூர்ந்தது. அதே வருடம் இடம்பெற்ற மாவீரர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச் சாவடைந்த நேரமான மாலை 06.07 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19887 மாவீரர்களுக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு 24600 ற்கு மேற்பட்ட மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் கிட்டத்தட்ட 43000 மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்ப உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழினம் உலகெங்கும் கார்த்திகை தீபத்தை இம்மான வீரர்களை கௌரவித்து மௌனமாக வணங்குகிறது.

தமது வாயிலிருந்து விடுதலைப் போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரிய வரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன் பாலன், சயனைட் உண்டு வீர காவியமான மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள், தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தகமாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள், எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள், தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழி நடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபு வழிப் படையணியாக மாற்றிய தேசியத் தலைவருக்கு பக்கபலமாக இருந்த படைத் தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், தீபன், ஜெயம், சொர்ணம், சூசை, சசிகுமார் மாஸ்ரர், மணிவண்ணன், பானு, தமிழ்ச்செல்வன், துர்க்கா, விதுஷா, என தமிழீழத் தாய் பிரசவித்த வீரத்தின் சிகரங்கள் அனைவரும் கார்த்திகைப் பூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்களே.

பொதுவாக விடுதலைக்காகப் போராடிய மற்றும் போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீரர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்கா அரசு இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொதுவாகக் காண முடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்ட 58132 அமெரிக்க வீரர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவு நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்திற்கு அருகில் 75 மீற்றர் உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்து வைக்கப்பட்டன.

ஆனால் இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. உலகப் பொது வழக்கங்களுக்கும் இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசு இந்தக் கல்லறைகளை இடித்தது மனித நாகரிக விழுமியங்களுக்கு ஏற்படுத்திய மிகப் பெரிய அவமானம். இந்த ஈனச் செயலுக்கு சிங்கள தேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித் தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித் தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச் சிறப்பாகும். ஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப் பதிவுகளிலுமே மாவீரர் துயிலுமில்லங்களைக் காண முடியும். எனினும் ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லறைகள் அங்கே அழிக்கப்பட்டாலும் சில துயிலுமில்லங்களில் இம்முறை தீபங்கள் ஏற்ற தமிழீழ மக்கள் தயாராகி விட்டனர். ஏமக்காக வீழ்ந்த வீரர்களுக்காக உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களிலும் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது அவர்களின் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

http://www.tamilwin.com/community/01/126114?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.