Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா

Featured Replies

இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா

uss-somerset-32aec2907966ab057b34be61d8e22a1f31c5528e.jpg

 

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் இலங்கையைத் தாக்கிய பின்னர், மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக டியாகோகார்சியாவில் உள்ள தளத்தில் இருந்து மூன்று போர்க்கப்பல்களில் சுமார் 2000 அமெரிக்கப் படையினர் இலங்கைக்கு வந்திருந்தனர்.

அப்போது மீட்பு உதவிப் பணிகளுக்காக அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர், தாம் கொண்டு வந்த இராணுவ வாகனங்களையே பயன்படுத்தியிருந்தனர்.

ஹெலிகொப்டர்களும், படகுகளும், ஏனைய வாகனங்களும், அமெரிக்க கப்பல்களிலேயே கொண்டு வரப்பட்டிருந்தன.

அதற்குப் பின்னர், கடந்த வாரம் தான் முதல் முறையாக அதிகளவிலான அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கையில் நடமாடித் திரிந்தன.

திருகோணமலையில் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ்.சோமசெற் என்ற ஈரூடக போக்குவரத்துக் கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்களும், கவசவாகனங்களும், படகுகளுமே, நீண்டகாலத்துக்குப் பின்னர் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தன.

இந்த ஆண்டில், அமெரிக்கக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றிருந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு யு.எஸ்.எஸ்.சோமசெற் வந்து சேர்ந்தது.

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தபோது, யு.எஸ்.எஸ். புளூ ரிட்ஜ், யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ், யு.எஸ்.எஸ். பிராங்க் கேபிள் ஆகியன, இலங்கைக் கடற்படையினருடன் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன.

அதைவிட, அவசர மருத்துவ தேவைக்காக, கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி, அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல், இலங்கைக் கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவு வரை வந்து சென்றது.

அந்த வகையில், கடந்தவாரம் திருகோணமலைக்கு வந்த யு.எஸ்.எஸ்.சோமசெற், இந்த ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்த ஐந்தாவது அமெரிக்கப் போர்க்கப்பலாகும்.

யு.எஸ்.எஸ்.சோமசெற், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கான பணியில் ஈடுபட்டுள்ள, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பற்படைப் பிரிவைச் சேர்ந்த, மரைன் படைப்பிரிவினரைத் தரையிறக்கும், வசதிகளைக் கொண்ட ஒரு கப்பல்.

இது 800 வரையான மரைன் படையினரை, முழுமையான போர்த்தளபாடங்கள், கவசவாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்களுடன், தரையிறக்குகின்ற வசதிகளைக் கொண்டது. இதற்கென தனியாக மூன்று தரையிறங்கு கலங்கள் மற்றும் ஹெவர்கிராப்ட் வாகனங்களையும் கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பல் தான், திருகோணமலையில் தரித்து நின்று இலங்கை கடற்படையினால் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்திருக்கிறது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தனவின் திட்டத்துக்கமைய, அமெரிக்க கடற்படையில் உள்ள ஈரூடகப் படையணியான மரைன் கொமாண்டோக்களைப் போன்று, ஒரு படைப்பிரிவை இலங்கைக் கடற்படை உருவாக்கி வருகிறது.

கடலிலும், தரையிலும் போரிடத்தக்க வகையிலும், தரையிறக்கங்களை மேற்கொண்டு சண்டையிடத்தக்க வகையிலும், இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்படுகிறது.

மன்னார்- முள்ளிக்குளத்தில் வைத்தே இந்தப் படைப்பிரிவு இரகசியமாக உருவாக்கப்பட்டது.

பின்னர், இந்தப் படைப்பிரிவுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து கிடைக்கத் தொடங்கின.

கடந்த செப்டெம்பர் மாதமே உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும், இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவில், தற்போது 7 அதிகாரிகளும் 150 படையினரும் உள்ளனர்.

இவர்களுக்கே அமெரிக்க கடற்படை மரைன் படையணியினர் கடந்த வாரத்தில் பயிற்சிகளை அளித்தனர்.

கடலில் இருந்தும், வானில் இருந்தும் தரையிறங்கும் பயிற்சிகள், தற்காப்பு உத்திகள், கடற்கரைப் பயிற்சிகள், படகுகளில் சென்று தாக்கும் பயிற்சிகள் என்று அமெரிக்கப் படையினர் தமது வளங்கள் முழுவதையும் பயன்படுத்தி இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்தனர். 

இதற்காக யு.எஸ்.எஸ்.சோமசெற் போர்க்கப்பலில் உள்ள, மரைன் படையினரின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தனை இராணுவத் தளபாடங்களும், வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த பயிற்சிக்கு இலங்கை விமானப்படையின் உதவியோ, இராணுவத்தின் உதவியே பெறப்படுவது முற்றாகவே தவிர்க்கப்பட்டிருந்தது.

முழுமையாக அமெரிக்கா தனது போர்க்கப்பலில் கொண்டு வந்த ஹெலிகொப்டர்கள், கவசவாகனங்கள் மற்றும் ஏனைய போர்த்தளபாடங்களையே இதற்கு பயன்படுத்தியிருந்தது.

இதனால் தான், நீண்டகாலத்துக்குப் பின்னர் இலங்கை மண்ணில் அமெரிக்க இராணுவ வாகனங்கள் ஓடித்திரியும் நிலை காணப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையான மூன்று நாட்கள், அமெரிக்க படையினர் அளித்த பயிற்சிகள், இலங்கை இராணுவத்துக்கோ, விமானப்படைக்கோ இதுவரை கிடைக்காத வாய்ப்பு என்றே கூறலாம்.

இலங்கையில் அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி இது தான். வேறு எந்த நாடுகளும் இந்தளவு பெரிய பயிற்சியை இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தியதில்லை.

இதன்போது, 157 இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினருக்கு 150இற்கும் அதிகமான அமெரிக்க மரைன் படையினர் பயிற்சி அளித்திருந்தனர்.

ஒரே நேரத்தில் அதிகளவு வெளிநாட்டுப் படையினருடன் அதிகளவு இலங்கைப் படையினர் நடத்திய போர்ப்பயிற்சி இதுவாகத் தான் இருக்கும்.

அதனால் தான் இதனை, அமெரிக்காவிடம் இருந்து இலங்கைப் படைகளுக்கு கிடைத்துள்ள உச்சக்கட்ட வரப்பிரசாதம் என்று கூறலாம்.

இந்தியாவுடன் இணைந்து பல்வேறு பாரிய கூட்டுப் பயிற்சிகளை இலங்கை கடற்படை நடத்தியிருந்தாலும் அவை தனியே கடலில் மாத்திரம் நடத்தப்பட்டவை.

அதைவிட, அந்தப் பயிற்சிகளின்போது, இந்தியா தனது படைக்கலங்களையும், இலங்கை தனது படைக்கலங்களையுமே பயன்படுத்தியிருந்தது.

ஆனால் இப்போது அமெரிக்கா வழங்கிய பயிற்சி கடல் மற்றும் தரையில் வழங்கப்பட்டது என்பதுடன், அமெரிக்கா தனது படைக்கலங்களைக் கொண்டே பயிற்சி அளித்திருக்கிறது.

இதன் மூலம், நவீன போர்த்தளபாடங்களுக்கு இலங்கையின் மரைன் படைப்பிரிவு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், உறுதியும் கிடைத்திருக்கிறது.

போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படை இந்த மரைன் படைப்பிரிவை உருவாக்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் இலங்கைக்கு இத்தகைய ஒரு படைப்பிரிவு தேவையற்றது.

கடற்புலிகளின் பலம் உச்சத்தில் இருந்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்தபோது, இத்தகையதொரு படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தால் அதனை யாரும் ஆச்சரியமான விடயமாக பார்க்கமாட்டார்கள்.

ஆனால், போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், மரைன் படைப்பிரிவுக்குரிய கள வாய்ப்புகள் கிடைக்குமா என்பதே சந்தேகத்துக்குரிய சூழலில், இந்தப் படைபிரிவுக்கு உயர் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, போருக்குப் பின்னர் கடற்படை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

கடற்படைக்கு மேலதிக கப்பல்கள் வாங்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்கி, கடற்படையை பலப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு மலாக்கா நீரிணை வரை பாதுகாப்பு வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் இலக்குடன் தான், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படுகின்றன.

எனினும், ஈரூடகப் படையணியான மரைன் படைப்பிரிவின் உருவாக்கத்துக்கு இலங்கை கடற்படையும், அமெரிக்காவும் முன்னுரிமை கொடுப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் தான்.

தியேட்டர் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் உச்சக்கட்டமாகவே யு.எஸ்.எஸ்.சோமசெற், இலங்கை கடற்படையின் மரைன் படைபிரிவுக்கு பயிற்சிகளை அளித்திருக்கிறது.

இந்தப் பயிற்சிகள் தனியே இலங்கையின் பாதுகாப்பையும் உறுதி நிலையையும் பேணுகின்ற நடவடிக்கையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று கருத முடியவில்லை.

இந்த திட்டத்தில் அமெரிக்கா எடுத்து வரும் கூடுதல் கவனத்தையும், ஆர்வத்தையும் பார்க்கும்போது, பிராந்திய பாதுகாப்புக்கான ஒரு கவசமாகவே இதனை கவனத்தில் எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

எவ்வாறாயினும், போர்க்கால மீறல்களைக் காரணம் காட்டி, இராணுவ ஒத்துழைப்புகள் விடயத்தில் இலங்கையிடம் இருந்து விலகியிருந்த அமெரிக்கா இப்போது அதனை மிகவும் நெருங்கத் தொடங்கி விட்டது.

இதுவரை காலமும் இலங்கைப் படைகளுக்கு மறுக்கப்பட்டிருந்த போர்ப்பயிற்சிகளை, அமெரிக்கா தனது மரைன் படையினரையும், தளபாடங்களையும் கொண்டு வந்து இலங்கையிலேயே வழங்கியமை, இதன் உச்ச நிலையாகும்.

கடற்படைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ள இந்தப் பயிற்சிகள், இலங்கை இராணுவத்துக்கும் விரிவாக்கப்படும் வாய்ப்புகள் வரும் காலத்தில் கிடைக்கக் கூடும். பூகோள அரசியல் நிலை அதற்கான கதவுகளையும் திறக்கும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.