Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா!

Featured Replies

கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா!

 

 
carlsen

 

இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.  

‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ரிக் வெற்றி கார்ல்சனின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கர்ஜாகினாலும் இந்த மலையைச் சாய்க்கமுடியவில்லை.  

கார்ல்சனிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வி - வெற்றி ரகசியம். ‘எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டில் சிறப்பாக ஆடுகிறேன். அவ்வளவுதான். நான் ஒன்றும் ஜீனியஸ் கிடையாது’ என்கிறார். ‘என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் கேம்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். என் நினைவில் செஸ் போர்டைக் காட்சிப்படுத்திக்கொள்வேன். அதில் காய்களை நகர்த்தி விளையாடிப் பார்ப்பேன். இதுதான் என் பலம்’ என்கிறார்.     

1990-களில் இந்தியாவில் எப்படி ஆனந்த் ஒரு பெரிய அலையை உண்டாக்கினாரோ, அதேபோல மாற்றத்தை நார்வேயில் கொண்டுவந்துள்ளார் கார்ல்சன். நார்வேயில் செஸ்ஸை விடவும், குளிர்கால விளையாட்டுகளில்தான் (விண்டர் ஸ்போர்ட்ஸ்) மக்களுக்கு ஆர்வம் அதிகம். கார்ல்சனின் வெற்றிக்குப் பிறகு அங்கு செஸ்ஸை விரும்பி ஆடிவருகிறார்கள் இளைஞர்கள். செஸ் வீரராக மட்டுமில்லாமல் மாடலாகவும் இருப்பதால், அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் கார்ல்சன். நார்வே இளைஞர்களுக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக உள்ளார். ‘Magnus Carlsen’s Last Big Title’ என்கிற கார்ல்சன் பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்ல்சனின் வெற்றிப் பாதை அழகாக விவரிக்கப்பட்டிருக்கும்.  

12 வயதுவரை செஸ், கால்பந்து என இரு விளையாட்டுகளிலும் ஈடுபட்டுவந்தார் கார்ல்சன். கால்பந்தில் சாதிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் செஸ்ஸில் தான் மூளை அதிகமாக வேலை செய்தது. அதில்தான் நிறைய வெற்றிகள் கிடைத்தன. 8 வயதிலிருந்து செஸ்ஸை மும்முரமாக ஆட ஆரம்பித்த கார்ல்சன், 13-வது வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 16-வது வயதில் ஒரு பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். இனி பள்ளிக்குப் போகமாட்டேன். முழு நேரமும் செஸ்தான் என்றார். வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. 

“எல்லாம் கார்ல்சனின் முடிவு. செஸ்ஸில் அவனால் சாதிக்கமுடியும் என்று நம்பியதால் நாங்களும் அதைத் தடுக்கவில்லை. கார்ல்சன்மீது எனக்குப் பெரிய கனவு இருந்ததில்லை. மிகவும் மும்முரமாக செஸ் ஆடியகாலகட்டத்திலும் கூட கிராண்ட் மாஸ்டரானால் போதும் என்றுதான் நினைத்தேன். அதற்குப் பிறகு கிடைத்ததெல்லாம் போனஸ்தான் என்கிறார் கார்ல்சனின் தந்தை ஹென்ரிக். பெற்றோர்களுக்கு என் ஆலோசனை, உங்கள் குழந்தைகளை அவர்களின் விருப்பத்துக்கே விடுங்கள். வெற்றி கிடைக்க தாமதமானாலும் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று மற்ற பெற்றோர்களுக்கு ஆலோசனையும் தருகிறார். 

இதுவரையிலான செஸ் உலக சாம்பியன்களில் 90 சதவிகிதம் பேர் ரஷ்யர்கள். நார்வேயிலிருந்து ஒரு சூப்பர் உலக சாம்பியன் உருவாகமுடியும் என்று நிரூபித்துள்ளார் கார்ல்சன். 23 வயதிலிருந்து செஸ் உலகையே தன் காலடிக்குள் வைத்துள்ளார். 13 வயதில் கிராண்ட் மாஸ்டர் (ஃபிஷர்  15 வயதிலும் காஸ்பரோவ் 17 வயதிலும் கிராண்ட்மாஸ்டர் ஆனார்கள்.), 19 வயதில் உலகின் நெ.1 வீரர், 23 வயதிலிருந்து உலக சாம்பியன் என அதிரடியாகச் சாதித்துக்கொண்டு வருகிறார். 

கடந்த இருமுறையும் ஆனந்துடன் மோதினார். சென்னையில் நடந்த போட்டியை தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இதில் 6.5-3.5 என்ற புள்ளிக்கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்று ரசிகர்களை ஏமாற்றினார் கார்ல்சன். அடுத்தமுறையும் ஆனந்தே போட்டியாளராக வந்தார். உண்மையில் 2014-ல் நடந்த இந்தப் போட்டியில் ஆனந்த் தான் வெற்றி பெற்றிருக்கவேண்டும். ஆனால் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆனந்த் செய்த ஒரு தவறால் நல்ல வாய்ப்பை இழக்க நேர்ந்தது. தப்பிப்பிழைத்த கார்ல்சன், 6.5-4.5 என வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனார்.

இந்த வருடம் புதிய போட்டியாளர். ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின். ஆரம்பத்தில் 7 சுற்றுகள் வரை அனைத்தும் டிரா ஆன நிலையில் 8-வது சுற்றை வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கர்ஜாகின். இதனால் இந்தமுறை புதிய செஸ் உலக சாம்பியன் கிடைக்கப்போகிறார் என்றே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால் 10-வது சுற்றில் பதிலடி கொடுத்து புள்ளிகளைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் கார்ல்சன். அடுத்த இரு சுற்றுகளும் டிரா ஆக, கடைசியில் டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார் கார்ல்சன். 

சென்ற தலைமுறை, புதிய தலைமுறை என இரு தரப்பு வீரர்களும் உலக செஸ் போட்டியில் கார்ல்சனுடன் மோதிவிட்டார்கள். ஆனால் இந்தச் சக்தியை அசைப்பது அவ்வளவு எளிதல்ல என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுகிறார் கார்ல்சன். வெல்ல முடியாதவராக உள்ளார். செஸ் உலகம், கார்ல்சன் என்கிற இந்தப் பலம்வாய்ந்த ராஜாவை எப்போது தாண்டிச் செல்லப்போகிறது? அடுத்தச் சிலவருடங்களில் அது சாத்தியமாகும் வாய்ப்பு உண்டா? இல்லை, இன்னும் அடுத்த ஐந்து, ஆறு வருடங்களுக்கும் கார்ல்சனே உலக சாம்பியனாக நீடிக்கப் போகிறாரா? சுவாரசியமான தருணங்கள் காத்திருக்கின்றன.  

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

பிறந்தநாளன்று வாகை சூடிய கார்ல்சன்!

 

 
carlsen89

 

உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் - கர்ஜாகின் ஆகிய இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறையில் வெற்றி கண்டு 3-வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார் கார்ல்சன். இன்று அவருடைய 26-வது பிறந்தநாள். இந்த நாளில் மீண்டும் உலக சாம்பியன் ஆனதால் அவருக்கு இம்முறை பிறந்தநாள் வாழ்த்துகள் உலகெங்கிலும் இருந்து கிடைத்துவருகின்றன. 

11-வது சுற்று டிரா ஆனபோது இதுதான் நடக்கும் என்று எனக்குத் தெரியும். சில நாள்கள் ஓய்வில் இருந்து பயிற்சியிலும் ஈடுபட்டதால் இன்று நல்ல உணர்வுடன் இருந்தேன். 2-வது சுற்று கொஞ்சம் கடுப்பேற்றியது. இருந்தாலும் எப்படியோ அதைத் தாண்டி வெற்றிபெற்றுவிட்டேன் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கார்ல்சனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பாடல் வழியாக தெரிவித்தார்கள் நிருபர்கள்.  

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

“ஹிட்லரை படித்தேன்...ஜெயித்தேன்”- செஸ் உலகில் ஆனந்தை மிஞ்சும் மேக்னஸ் கார்ல்சன்!

கார்ல்சன்

சர்வதேச அளவில் இந்தியா என்றதும் நினைவுக்கு வருவது எது என நண்பன் கேட்ட கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன். அவனே தொடர்ந்தான். ‛மகாத்மா காந்தி, தாஜ் மகால், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான். ஓ.கே.வா...?’ 

ம்ம்ம்...

‛இந்த வரிசையில விஸ்வநாதன் ஆனந்த் பெயரையும் சேர்த்துக்கோ. அவரால இந்தியாவுக்கு பெருமை. சும்மால்ல... 5 முறை வேர்ல்ட் சாம்பியன்.  அவர் இன்டர்நேஷனல் லெவல்ல டாப் -10ல வந்தப்போ, இந்த பொடியன் பிறக்கவே இல்லை. அவன்ட்டயாவது ஆனந்தாவது தோக்கிறதாவது. எவ்வளவு பெட்...’ என  பர்ஸில் இருந்து ரூ.500யை எடுத்து டேபிளில் வைத்தான் அந்த செஸ் வெறியன். ஆனந்த் மீது அவ்வளவு பிரியம்.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் ஆஃபீஸ் கேன்டீனில் சந்தித்தோம். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பே, தோல்வியை ஒப்புக் கொண்டு 500 ரூபாயை பையில் திணித்து விட்டு  ‛அப்புறமா பேசுறேன்’ என விரைந்தான். 

சென்னையில் 2013ல் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோது அரங்கேறிய சம்பவம் அது. நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் இருவருக்கும் யார் சாம்பியன் என்பதில் போட்டி.  ஆனந்தின் அனுபவம் கார்ல்சன் வயது (அப்போது 23). எனவே உலகெங்கும் நூறு கோடி பேர், இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.  இறுதியாக ஆனந்தை தோற்கடித்து, ஜெயலலிதாவிடம் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை வாங்கி விட்டு சலாம் போட்டு சென்றான், நண்பன் சொன்ன அந்த பொடியன். 

கார்ல்சன்

அடுத்த ஆண்டு அதே நவம்பர் மாதம். ரஷியாவின் சோச்சியில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப். இந்தமுறையும் ஆனந்த் - கார்ல்சன் மோதல்.  உலகமே எதிர்பார்த்தது. ஆனந்த் பதிலடி கொடுப்பார் என்று. இந்த முறையும் ஆனந்த் பணிந்தார். இரண்டாவது முறையாக  கார்ல்சன் சாம்பியன். ஆனந்த் இனி ஓய்வுபெறலாம் என்றனர்.  ‛எங்க வயசுல நீ (ஆனந்த்) பேட்டைக்காரன். இப்ப உள்ள பசங்களுக்கு அவன் (கார்ல்சன்) பேட்டைக்காரன்’ என, முன்னாள் ஜாம்பவான்கள் லெக்சர் எடுத்தனர். செஸ் என்பது உடல் சார்ந்த விளையாட்டு அல்ல. அறிவு சார்ந்தது. அறிவுக்கு ஏது ஓய்வு? ஆனந்த் இன்னமும் ஆடுகிறார். 

கார்ல்சனும் ஆடுகிறார். எப்படி... இன்னும் நேர்த்தியாக, இன்னும் ஸ்மார்ட்டாக... சமீபத்தில் நியூயார்க்கில் நடந்து முடிந்த 2016 வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில், மீண்டும் கார்ல்சன் சாம்பியன். தொடர்ந்து மூன்று முறை வேர்ல்ட் சாம்பியன் என்பது கூடுதல் கெளரவம். இந்தமுறை தன்னை விட ஒரு வயது மட்டுமே மூத்த ரஷ்யாவின் செர்ஜி கர்ஜகினை வீழ்த்தியுள்ளார். ரெகுலர் கேம் 6-6 என முடிந்ததால் டை பிரேக்கரில் 3-1 என எளிதாக ஜெயித்தார். 

கர்ஜகினும் லேசுப்பட்டவர் அல்ல. இள வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆனவர்.  புடின் உள்பட ஒட்டுமொத்த ரஷ்யாவும் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தது. ‛தனிப்பட்ட முறையிலும், நாட்டுக்காகவும் இதில் நான் வென்றாக வேண்டும்’ என போட்டிக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார். வெற்றிக்கு ரொம்பவே மெனக்கிட்டிருந்தார். அந்த உழைப்பு போட்டியில் தெரிந்தது. ஆனந்தை போல கர்ஜகினை கார்ல்சன் எளிதில் தோற்கடிக்க முடியவில்லை. இதுபோதும் கர்ஜகின் பவர் என்னவென்று அறிய. 

hqdefault_11314.jpg

ரஷ்யா எப்போதுமே சதுரங்கத்தில் கிங். வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் ஜெயிப்பது அவர்களுக்கு மான பிரச்னை. தன் நாட்டைச் சேர்ந்த ஒருவர்  சாம்பியன்ஷிப்பில் ஆடுகிறார் எனில், எதிர்த்து ஆடும் வீரர் சார்ந்த நாடு மீது, ரஷ்யா மறைமுகமாக ஒரு யுத்தமே நடத்தும்.  1972 வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் அப்படித்தான் நடந்தது. அப்போது யதார்த்தமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும்,  சோவியத் யூனியனுக்கும் இடையே நிஜமான பனிப்போரும் நடந்தது. ‛சதுரங்கத்தில் நாம் தோற்கக் கூடாது’ என ரஷ்யா கங்கணம் கட்டியது. ‛அரசியல் காரணங்களுக்காகத்தான் அந்த மோதல் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதே தவிர, உண்மையிலேயே ஜாம்பவான்கள் மோதினார்கள் என்பதால் அல்ல’ என பின்னாளில் சொன்னார் ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் சாம்பியன் கேரி காஸ்பரோவ், 

அமெரிக்காவின் பாபி ஃபிஷர், சோவியூத் யூனியனின் பாரிஸ் ஸ்பாஸ்கி மோதிய 1972 வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர், இந்த நூாற்றாண்டின் சிறந்த போட்டியாக கருதப்பட்டது. இந்த யுத்தத்தில் ரஷ்யாவை தோற்கடித்தது அமெரிக்கா. ஆம், டிஃபண்டிங் சாம்பியன் ஸ்பாஸ்கியை தோற்கடித்து, வரலாறு படைத்தார்  பாபி ஃபிஷர். தன்னை ‛பொடியன்’  என சொன்ன ஸ்பாஸ்கிக்கு தான் யாரென நிரூபித்தார்.  கூடவே, செஸ்ஸில் அதுவரை கொடிகட்டிப் பறந்த சோவியூத் யூனியன் ராஜாங்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 

கிட்டத்தட்ட, கார்ல்சன் - கர்ஜகின் மோதலும் இன்னுமொரு பனிப்போர் போலத்தான் இருந்தது. தனிநபர் மோதல் என்பதைக் கடந்து நார்வே - ரஷ்யா மோதலாகத்தான் 2016 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் பார்க்கப்பட்டது. 1972க்குப் பின் இந்த போட்டியை எல்லை கடந்து ஒட்டுமொத்த செஸ் உலகமும்  எதிர்பார்த்திருந்தது.  காரணம், எந்நேரத்திலும் நார்வே மீது தாக்குவதற்கு தயாராக பால்டிக் கடல் அருகே ஏவுகணைகளை நிறுத்தி இருந்தது ரஷ்யா. இதற்கு நேடோவில்  ( North Atlantic Treaty Organization) உள்ள நார்வேயைச் சேர்ந்த உயரதிகாரி, ‛இது பயங்கரவாத மிரட்டல்’ என கண்டித்தார். கம்ப்யூட்டரில் ரகசியமாக சேகரித்து வைத்திருக்கும் ஆட்டம் குறித்த நுணுக்கங்களை, ரஷ்யா ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதால், மைக்ரோசாஃப்டிடம் உதவி கோரி இருந்தார் கார்ல்சன். இந்த மோதலை ரஷ்யர்கள் எவ்வளவு சீரியஸாக கருதினர் என்பதற்கு இதுவே சான்று. 

chess-1_11299.jpg

உலகம் முழுவதும் 100 கோடி பேர் ஆன் லைனில் பார்த்த இந்த போட்டியில் வென்று மீண்டும் ஒருமுறை ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கார்ல்சன். அதனால்தான் கார்ல்சனை கொண்டாடுகிறது செஸ் உலகம். ‛கர்ஜிகினுக்கு ஃபுடின்  பக்க பலமாக இருப்பார் என எனக்குத் தெரியும்.  அதை சமாளிக்கும் வழிகளையும் நான் அறிவேன்’ என நம்பிக்கையுடன் சொல்லி இருந்த கார்ல்சன், இந்த தொடரில் 9வது கேம் வரை முன்னிலை வகிக்கவில்லை. ‛என்ன ஆச்சு உங்களுக்கு’ என கேட்டதற்கு ‛இன்னும் மூனு கேம் இருக்கு. எப்படி ஜெயிக்கிறேன்னு மட்டும் பாருங்க’ என, கெத்தாக பதில் சொன்னார். 

‛பொதுவாக ஓய்வு நேரத்தில் செஸ் குறித்து யோசிக்க மாட்டேன். புத்தகம் படிப்பேன். சமீபத்தில்  ஹிட்லர் பற்றிய புத்தகம் படித்தேன். வெற்றிகளுக்கும், தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் ஹிட்லர் கையாண்ட வழிமுறைகள் என்னை பிரமிக்க வைத்தது. ஹிட்லரைப் படித்த பின், நெப்போலியனை ஆழ்ந்து படித்தேன். அவர் என் சின்ன வயது ஹீரோ.  அவரைப் போல, ஒரு குறிப்பிட்ட காலம் வரை வியூகங்கள் வகுப்பதில் உச்சத்தில் இருந்த வேறு ஒருவரை நான் பார்த்ததே இல்லை’ என முன்பு சொல்லி இருந்தார் கார்ல்சன். ஆக, அவர்  சாம்பியன் ஆனதில் ஆச்சரியமில்லை.

ஆனந்தை தோற்கடித்ததை விட கர்ஜிகினை தோற்கடித்ததுதான் கார்ல்சன் செஸ் வாழ்வின் உச்சம். ஏனெனில் இருவரும் கம்ப்யூட்டரில் பிளான் போடுபவர்கள். சம வயதினர் என்பதும் காரணமாக இருக்கலாம். அதைவிட  வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பை கார்ல்சன், ஒரு உள்ளூர் டோர்ன்மென்ட் போலத்தான் எடுத்துக் கொண்டார், சீரியஸாக எடுத்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது என்கின்றனர் செஸ் நிபுணர்கள். 

‛கார்ல்சனுக்கு வாழ்த்துகள். அவர் இந்த போட்டிக்கு சீரியஸாக தயாராகமால், செஸ் கடவுள் கெய்சாவின் கோபத்துக்குள் உள்ளானார். நல்ல வேளையாக அந்த கடவுள் கர்ஜிகின் பக்கம் செல்வதை கார்ல்சன் அனுமதிக்கவில்லை’ என காஸ்பரோ ட்வீட் செய்திருந்தார். அசால்ட்டாக  டீல் செய்தார் என்பதற்கு மற்றொரு உதாரணம். கார்ல்சன் ஆரம்ப சுற்றில் Trompowsky Attack மூலம் ஆட்டத்தைத் தொடங்கினார். Trompowsky Attack என்பது டேஞ்சரான மூவ். அதை வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் யாரும் பரிச்சித்து பார்க்க மாட்டார்கள். கார்ல்சன் அதைச் செய்தார் எனில் எவ்வளவு அஜாக்கிரதை? 

கார்ல்சன்

அதேநேரத்தில் கார்ல்சென் சென்டிமென்ட் பேர்வழியும் கூட. ‛ஒரு போட்டியின்போது, டால் - போட்வினிக் இருவரும் 1960 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மோதியது தொடர்பான  புத்தகத்தில் என்னைக் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். ஏனெனில், டால் அந்த முறை சாம்பியன் ஆனார். அப்போது அவர் வயது 23. அதன்பின் அவரால் இன்னொரு பட்டம் வெல்ல  முடியவே இல்லை. ஏனெனில் தோல்வி எனக்குப் பிடிக்காது.’ என்றார் கார்ல்சென். 

கார்ல்சன் மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனதும் ‛yes, Carlsen is greater than Anand' என, அந்த ரூ.500 பெட் நண்பன் வாட்ஸ் அப் அனுப்பினான். கார்ல்சன் - ஆனந்த் ஒப்பீடு தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. சம காலத்தில் இல்லாத கிரிக்கெட் வீரர்களையே நாம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, கார்ல்சன் - ஆனந்த் இன்னும் ஆக்டிவாக விளையாடி வருகின்றனர். இருவரையும் ஒப்பிடுவது சரியே. அதை விட, ஆனந்தை இன்னும் சில ஆண்டுகளில் கார்ல்சன் மிஞ்ச வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது. 

எப்படி கிரிக்கெட்டில் சச்சின் சாதனைகஅர்யல்ன் பட்டம் வென்ற ஆனந்தை மிஞ்சவும் கார்ல்சனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. இப்போது கார்ல்சன் வயது 26. எப்படிப் பார்த்தாலும் இன்னும் 20 ஆண்டுகள் செஸ் அரங்கில் கோலோச்சுவார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேர்ல்ட் சாம்பியன்ஷிப் நடப்பது கூடுதல் போனஸ். தவிர, முந்தைய தலைமுறை ஆனந்தையும் தோற்கடித்து விட்டார், இந்த தலைமுறை கர்ஜகினையும் வீழ்த்தி விட்டார் என்பதால், அடுத்த தலைமுறை வீரரையும் முறியடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவுக்கு ஆனந்த் போல, ஸ்விட்சர்லாந்துக்கு ரோஜர் ஃபெடரர் போல, போர்ச்சுகலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ போல, நார்வேக்கு மேக்னஸ் கார்ல்சன். நார்வே என்றதும் கார்ல்சன் பெயரும், கார்லசன் என்றதும் நார்வேயின் பெயரும் நினைவுக்கு வரும். இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?

http://www.vikatan.com/news/sports/74059-magnus-carlsen-wins-world-chess-championship.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.