Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்!

Featured Replies

கொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்!

 
 

ஜூ.வி லென்ஸ்

 

p42e.jpg

ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. 

கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர்  ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை கொண்டாடிய இருவர் சிறைக்குப் போய்விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், கொடநாடு பங்களா காவலாளி கொல்லப்பட்டு கொள்ளையும் அரங்கேறியது. ஆனால், ‘கொள்ளை போனது என்ன?’ என்பது பற்றி  விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையே கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இருவர் திடீரென அடுத்தடுத்து விபத்துகளில் சிக்குகிறார்கள். அதில் ஒருவர் மரணம் அடைகிறார். இப்படி திடீர் திருப்பங்கள்... ‘த்ரில்’ காட்சிகள் என திகில் படங்களையே மிஞ்சுகிறது கொடநாடு எஸ்டேட் விவகாரம்.

p42c.jpgரகசியத்தைப் பாதுகாக்கும் கொடநாடு!

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த இடமான கொடநாடு எஸ்டேட்டின் சிறிய நீர்நிலையை ஒட்டிய பங்களாவில்தான், ஜெயலலிதா தங்குவார். முதல்வரின் முகாம் அலுவலகமாக கொடநாடு எஸ்டேட் இருந்தது. இரண்டு தளங்களைக் கொண்ட அந்த பங்களாவில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சகல வசதிகளுடன் கூடிய அறைகள், 100-க்கும் அதிகமானோர் பங்கேற்கக்கூடிய மிகப்பெரிய கலந்தாய்வுக் கூடம், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதற்கான மினி மருத்துவமனை, வி.ஐ.பி மீட்டிங் ஹால், வெயிட்டிங் ஹால் என முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கான அனைத்து வசதிகளுடன் இருந்தது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றிய விவரங்கள் உட்பட பல ரகசியங்கள் கொடநாடு பங்களாவுக்குள்  இருந்தாகத் தகவல் உலவியது.

தினகரன் கைதும்... கொடநாடு கொள்ளையும்!

சுமார் 900 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் மத்தியில், ஏராளமான பாதுகாப்பு வசதிகளுடன் பங்களா உள்ளது. பங்களாவை யாரும் பார்க்க முடியாதபடி, மிகப்பெரிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் எதிரில் உள்ள கர்ஷன் எஸ்டேட்டில்தான், ஜெயலலிதாவின் சொத்துகளும், ஆவணங்களும் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

மேலாளர் நடராஜன்தான் கொடநாடு எஸ்டேட்டை நிர்வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவின் கட்டுப்பாட்டில் கொடநாடு எஸ்டேட் இருந்து வந்தது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, தினகரனின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் கைது செய்யப்படுவது உறுதியான நிலையில்தான், கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூரைக் கொன்று கொள்ளையிட்ட சம்பவம் அரங்கேறியது.

p42d.jpg

விபத்தா... திட்டமிட்ட கொலையா?

ஒரு காவலாளியைக் கொன்று, மற்றொரு காவலாளியைத் தாக்கிவிட்டு, ஜெயலலிதா, சசிகலா அறைகளை உடைத்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர், காவி நிற வேஷ்டியால் கட்டப்பட்டிருந்தார். இந்த வேஷ்டிகள் கட்டுபவர்கள் கேரளாவில்தான் அதிகம். அதனால் கேரளாவின் பக்கம் பார்வையைத் திருப்பியது போலீஸ்.

போலீஸின் புலனாய்வில், சிலர் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. இவர்களில் ஒருவர்தான், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரிடம் விசாரணை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். கொள்ளைச் சம்பவத்தில் கனகராஜுடன் உதவியாக இருந்தவர் எனச் சொல்லப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் சயன். இவர், கனகராஜ் இறந்த அதே நாள் பாலக்காடு அருகே காரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரின் மனைவி, மகள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சயன் சேர்க்கப்பட்டுள்ளார். மிக முக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.

“மொத்தம் 11 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மூளையாக இருந்தவர், ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ். அவருடைய நண்பர் சயன் மற்றும் ஒன்பது பேர் உடன் இருந்துள்ளனர். இவர்களில் ஆறு பேரைக் கைது செய்து விட்டோம். கனகராஜ் உயிரிழந்து விட்டார். சயன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மூன்று பேரைத் தேடி வருகிறோம்” எனச் சொல்கிறது காவல்துறை.

போலீஸ் சொன்ன முரண்கள்! 

“எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை. இது வெறும் கொள்ளை முயற்சிதான். அறையின் கண்ணாடியை உடைத்த நபர்கள், தொழிலாளர்கள் வரும் சத்தம் கேட்டு ஓடிவிட்டனர்” என போலீஸ் முதலில் சொன்னது. ஆனால் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகளுக்குள் நுழைய முயற்சித்தனர் என்ற தகவலை போலீஸ் தெரிவிக்கவில்லை. பிறகு, நான்கு பேரைக் கைது செய்தபோது “ஜெயலலிதாவின் அறையில் பீரோவை உடைத்து, விலை உயர்ந்த ஐந்து கைக் கடிகாரங்கள், ஒரு க்ரிஸ்டல் சிலை ஆகியவற்றை  கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். அந்த கைக்கடிகாரங்களை விற்றால் மாட்டிக் கொள்வோம் என்று, அவற்றை கேரளாவில் உள்ள ஆற்றில் வீசிவிட்டனர்” என்றார் நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா. அதன் பிறகு, ‘பிடிபட்டவர்களின் கார்களில் கைக்கடிகாரங்கள் இருந்தன’ என்று சொல்லி, புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது. விலை உயர்ந்த கடிகாரங்கள் என போலீஸார் முதலில் சொன்னார்கள். ஆனால், ஜெயலலிதாவின் படம் பொறித்த விலை குறைந்த கடிகாரங்களின் படங்களையே போலீஸ் வெளியிட்டது. தன் படம் அச்சிட்ட இந்தக் கடிகாரங்களைத்தான் ஜெயலலிதா தன் அறையில் ‘பாதுகாப்பாக’ வைத்து இருந்தாரா? போலீஸ் அடுத்தடுத்து சொல்லும் முரண்பாடான தகவல்கள், இப்படிப் பல சந்தேகங்களை எழுப்பின.

p42.jpg

விடை தெரியாத கேள்விகள்!

சம்பவம் நிகழ்ந்த மறுநாளே, கனகராஜ் மீது சந்தேகம் இருக்கிறது என்றும், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் செய்திகள் கசிந்தன. ஆனால், சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேநாளில், சயனும் விபத்தில் சிக்கினார். இவர்கள் இருவரும் தலைமறைவாகவே இல்லை. குடும்பத்தோடு இருந்திருக்கிறார்கள். இவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

‘கொடநாடு எஸ்டேட், பங்களாவில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை. நாய்களும் இல்லை. அதனால் எளிதில் கொள்ளையடிக்கலாம் என கனகராஜ் திட்டமிட்டார்’ என போலீஸ் சொல்கிறது. ஆனால், கனகராஜ் பணியை விட்டு விலகி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. கொடநாட்டின் இன்றைய சூழல் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஜெயலலிதாவின் அறை பற்றிய விவரங்களை நன்கு அறிந்த முக்கிய நபர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும்.

சம்பவம் நடந்த பிறகு, எஸ்டேட் வளாகத்தில் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கனகராஜும், சயனும் விபத்துக்குள்ளான பிறகு, நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். எப்போதும் மிக இயல்பாகப் பேசக்கூடிய அவர், அன்று எழுதி வைத்த அறிக்கையை வாசித்தார். அதைக் கடந்து வேறு எதையும் அவர் பேசவில்லை. ‘வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் இருக்கிறார்களா?’ எனக் கேட்டபோது, அவர் படபடப்பானார். ‘‘அரசியல்வாதிகளோ, உள்ளூர்ப் பிரமுகர்களோ இதில் சம்பந்தப்பட வில்லை’’ என்றார்.

கனகராஜைக் கண்காணித்து வந்ததாகச்  சொல்லும் போலீஸ், அவரைக் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? விபத்தில் சிக்கிய சயனை விசாரிக்க கேரளா போலீஸார் கோவை வந்தபோது, அவர்களை விசாரிக்க அனுமதிக்காதது ஏன்? ஜெயலலிதா அறையில் இருந்து இந்த ‘சாதா’ வாட்ச்சுகள் மட்டுமே கொள்ளை போயினவா? தமிழக அரசியலின் தற்போதைய சூழலில், இந்த பங்களாவில் நடந்த கொள்ளைக்கு வேறு காரணங்கள் இல்லை என போலீஸ் நம்புகிறதா?

இப்படி விடை தெரியாத கேள்விகள் பல எழுகின்றன.

சஜீவன்  யார்?

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 11 பேர் தவிர, மேலும் சிலர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர் சஜீவன். இவர், கேரளாவைச் சேர்ந்தவர். கூடலூரில் பெரும் மர வியாபாரியாக அறியப்பட்டவர். 2006-ம் ஆண்டுக்குப் பின்னர், கொடநாடு எஸ்டேட்டின் மேல் பகுதியில் பங்களா கட்டத் திட்டமிடப்பட்ட போது, உள்ளே மர வேலைப்பாடுகளைச் செய்யும் பொறுப்பு சஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டது. மிக அழகிய வேலைப்பாடுகளுடன் பங்களாவை அவர் வடிவமைத்தார். ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது, அதிக நாட்கள் கொடநாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சஜீவன் நெருக்கமானார். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா ஆகியவற்றிலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட சஜீவன், ஜெயலலிதாவுக்கு யானைகள் மீதுள்ள விருப்பத்தை அறிந்து, மரத்தால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட யானை சிலைகளைப் பரிசளித்தார். கட்சியிலும், ஆட்சியிலும் கூட, சஜீவன் அதிகாரம் செலுத்தத் துவங்கினார். கொடநாட்டில் யார் அனுமதியும் இல்லாமல் செல்ல, இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

p42a.jpg

மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலாத போலீஸ்!

கொலை செய்யப்பட்ட காவலாளியின் உடல், காவி நிற வேஷ்டியில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டபோதே, சஜீவன் மீது போலீஸுக்கு சந்தேகம் வந்ததாம். ஆனால், சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அவர் துபாய் சென்றார் என்பது தெரியவந்தது. இதேபோல், நீலகிரி மற்றும் கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவை எல்லாம் அடுத்த கட்டத்தை எட்டவில்லை.

இந்த விவகாரத்தில், சஜீவனுக்கு எப்படித் தொடர்பு இருக்கலாம் என நாம் கேட்ட கேள்விக்கு போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட பதில் அதிர்ச்சிகரமானது.

“கொடநாடு எஸ்டேட் மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் மேலும் சில எஸ்டேட்களை ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் வாங்கியுள்ளனர். அவற்றில், கர்ஷன் எஸ்டேட் தவிர மற்ற எஸ்டேட்கள் இவர்களின் பெயர்களில் வாங்கப்படவில்லை. கொடநாடு எஸ்டேட்டை ஒட்டி, பல சிறிய எஸ்டேட்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்பட்டன. சென்னையில் இருந்து வழக்கறிஞர்கள் வந்து இந்த எஸ்டேட்களுக்கான டாக்குமென்ட்களை ரெடி செய்தனர். இவை யார் பெயர்களில் பதிவாகி உள்ளன என்பது தெரியவில்லை. இதேபோன்று, பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட பல சொத்துகளின் ஆவணங்கள், கொடநாட்டில் இருந்திருக்கலாம். சஜீவன் உள்ளிட்ட சிலரின் பெயர்களில், அவை பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த ஆவணங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சியாக இது இருக்கலாம். சம்பவம் நிகழ்வதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு சஜீவன் வெளிநாட்டுக்குப் போனதுதான், அவர் மீது அதிக சந்தேகம் வருவதற்குக் காரணம்” என்றனர். சஜீவன் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய தரப்பு கருத்தை அறிய முடியவில்லை.

‘‘கொடநாடு சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். மூவரைத் தேடி வருகிறோம். இவர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை” என்பதை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இப்படிச் சொல்வதுதான் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

மர்மங்கள் நிறைந்த கொடநாடு விவகாரத்தில், மேலும் மர்ம முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை அவிழ்ப்பதற்கான அறிகுறிகள் எதுவும் காவல்துறையிடம் தென்படவில்லை.

- ச.ஜெ.ரவி
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார்


முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்!

கொடநாடு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் மர்மங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்திரப்பாளையத்தில் கனகராஜின் வீடு உள்ளது. அங்கு நாம் சென்றபோது, குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருந்தனர். கனகராஜின் மனைவி கலைவாணியிடம் பேசினோம். “கொடநாடு கொலைக்கும் என் கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொலை, கொள்ளை நடந்த  24-ம் தேதி, சென்னை வடபழனியில் உள்ள எங்கள் வீட்டில்தான் என் கணவர் இருந்தார். போலீஸார், என் கணவரைச் சந்தேகப்பட்டிருந்தால், அவரை விசாரித்து இருக்கலாம். ஆனால், அவரை விசாரிக்கவே இல்லை. என் கணவரை யாரோ கொன்று விட்டார்கள்” எனச் சொல்லி கதறினார்.

கனகராஜின் அண்ணன் தனபாலிடம் பேசினோம். “கனகராஜ், பிளஸ் 2 முடித்துவிட்டு சொந்தமாக கார் வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தான். நான், அ.தி.மு.க-வின் கிளைக் கழகச் செயலாளராக இருந்தேன். 2009-ல், சமுத்திரத்தைச் சேர்ந்த சரவணன், அ.தி.மு.க-வின் சேலம் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். கார்டனில் சரவணனுக்கு நல்ல செல்வாக்கு. சரவணன்தான், கனகராஜை கார்டனில் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு போகும்போது, கனகராஜ்தான் காரை ஓட்டிச் செல்வான்.

p42aa.jpg

2011-ல், விபத்தில் சரவணன் மர்மமான முறையில்  மரணம் அடைந்தார். அதன் பிறகு, கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அந்தச் சமயத்தில், என் தம்பி மூலமாக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அம்மா எனக்கு சீட் கொடுத்தார். ஆனால், உள்ளடி வேலைகள் செய்து எடப்பாடி பழனிசாமி அதைத் தடுத்து நிறுத்திவிட்டார். மேலும், என் தம்பி மீது பல ஊழல் புகார்களைக் கூறி, 2012-ல் கார்டனில் இருந்து அவனை நீக்கவைத்தார். பிறகு, சென்னையில் அவன் வாடகைக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்தான்.

2016 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கேட்ட காரணத்துக்காக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கிவிட்டார். இப்படி எடப்பாடி பழனிசாமிக்கும், எங்கள் குடும்பத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது.

கனகராஜ் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் ஏப்ரல் 27-ம் தேதி சித்திரப்பாளையம் வந்தான். வழக்கம் போல, சகஜமாகவே இருந்தான். மறுநாள், தென்னங்குடிபாளையத்தில் எங்கள் உறவினருக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்காகக் காரில் சென்றான். அங்கிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள ஆத்தூருக்கு அவனுடைய நண்பர்களைப் பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளான். அப்போது, கார் மோதி அவன் இறந்துவிட்டதாக என் சித்தி மகன் ரமேஷ் எனக்கு போனில் தெரிவித்தான்.

அப்போது, கோவையில் இருந்த நான், உடனடியாக ஆத்தூர் மருத்துவமனைக்குச் சென்று என் தம்பியின் உடலைப் பார்த்தேன். பிறகு, விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் சந்திரகிரி பிரிவு ரோட்டுக்குச் சென்று பார்த்தோம். விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அந்த இடத்தில் இல்லை. அது விபத்தே அல்ல; திட்டமிட்ட கொலை. என் தம்பியின் மரணத்தில் எனக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது. என் தம்பியின் மரணத்தின் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.

p42b.jpg

கனகராஜின் சித்தி மகன் ரமேஷ், “என் குழந்தையைப் பார்ப்பதற்காக கனகராஜ் என் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், நான் வி.கூட்டுரோட்டில் உள்ள என் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தேன். எங்கள் வீட்டுக்கு வந்திருந்த கனகராஜ், அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஆத்தூர் போய்விட்டுத் திரும்பியபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. மாமனார் வீட்டில் இருந்து நான் என் வீட்டுக்குத் திரும்பியபோது, சந்திரகிரி பிரிவு ரோட்டில் சுமார் பத்து பேர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். விபத்தில் அடிபட்டிருந்த பைக் நம்பரைப் பார்த்ததும் பதறியபடி, பக்கத்தில் போய்ப் பார்த்தேன். கனகராஜ் அடிபட்டுக் கிடந்தார். 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, தனபால் அண்ணனுக்கு போன் பண்ணிச் சொன்னேன். ஆம்புலன்ஸ் வந்ததும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கனகராஜை கொண்டு சென்றோம். ஆனால், அவர் மரணம் அடைந்துவிட்டதாகச் சொன்னார்கள்” என்றார்.

ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு, ‘‘இது விபத்துதான். அவர் எப்போதோ கார்டனில் வேலை பார்த்துள்ளார். அதை வைத்து இதை சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். விபத்தில் சம்பந்தப்பட்ட கார், பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவருடைய மனைவியின் கார். அவர்கள் குடும்பத்துடன் பெரம்பலூர் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மற்றபடி, கொடநாடு காவலாளி கொலைக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது’’ என்றார்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் கேட்பதற்காக, அவருடைய உதவியாளர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டோம். ‘‘சார்... நான் முதல்வரின் அலுவலக உதவியாளர். அரசியல் உதவியாளர் அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் தனக்கென அரசியல் உதவியாளர்களை வைத்துக்கொள்வதில்லை. அரசியல் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் முதல்வரே நேரடியாகக் கையாள்கிறார்’’ என்றவரிடம், ‘முதல்வரின் செல்போன் நாட் ரீச்சபிள் என்றே வருகிறதே’ என்று கேட்டதற்கு, ‘‘என்ன சார் பேசுறீங்க... ஒரு முதல்வரிடம் போனில் பேச முடியுமா? முதல்வரிடம் கேட்க நினைப்பதைக் கட்சிக்காரர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இதுபற்றி மேற்கொண்டு எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.

http://www.vikatan.com/juniorvikatan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.