Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வேல் தர்மாவுக்கு 

f-35.jpg?w=300&h=169அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457  F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.

Hot loading என்னும் உடன் ஏற்றல்

குண்டுகளை வீசிவிட்டு வரும் விமானங்கள் தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்திய பின்னரே அதில் படைக்கலன்களை ஏற்ற முடியும். ஆனால் F-35 போர் விமானங்கள் குண்டு வீசிவிட்டு வந்து தரையிறங்கி இயந்திரத்தை நிறுத்தாமலே குண்டுகளையும் ஏவுகணைகளையும் மீள் நிரப்பல் செய்ய முடியும். இதனால் குண்டு வீச்சுக்கள் தாமதமின்றி செய்ய முடியும். அத்துடன் F-35 போர்விமானங்களுக்கு எந்த இடத்தில் வைத்தும் எரிபொருள் மீள்நிரப்ப முடியும். பொதுவாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தனியிடம் அமைக்கப்படும்.

F-35 போர் விமானங்கள் பரிஸ் காட்சியில் இல்லை

2017 ஜூன் மாதத்தில் பிரெஞ்சுத் தலைநகர் பரிசில் நடக்கவிருக்கும் விமானக் கண்காட்சியில் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் பங்கு பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர் விமான உற்பத்திக்கும் பிரெஞ்சுப் போர் விமான உற்பத்திக்கும் இடையில் இருக்கும் போட்டியின் ஓர் அம்சமாகவே இது பார்க்கப்படுகின்றது. பிரெஞ்ச் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது அமெரிக்கர்களை ஆத்திரமும் பொறாமையும் அடைய வைத்தது. F-35 இன் உற்பத்தியாளர்களான லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தினர் தமக்கு பரிஸ் விமானக் காட்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கவில்லை என்கின்றனர். 2015-ம் ஆண்டு பிரித்தானியாவில் நடந்த காட்சியில் F-35 இன் B வகையைச் சேர்ந்த விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியா, பெல்ஜியம், பின்லாந்து, சுவிற்சலாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல துருக்கி கூட F-35 போர்விமானங்களை வாங்கவிருக்கும் போது பிரான்ஸ் அதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள் F-35உடன் ஒப்பிடுகையில் புலப்படாத்தன்மைத் தொழில் நுட்பத்தில் மிகவும் பின் தங்கியவை.

எஸ்த்தோனியாவிற்கு F-35

இரசியா 2017-ம் ஆண்டின் இறுதிக்குள் தனது படைகளை நேட்டோ நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் பெலரஸ் நாட்டில் நிறுத்தவிருக்கின்றது. அத்துடன் பெலரஸ் படைகளுடன் இணைந்து பெரும் படை ஒத்திகையையும் செய்யவிருக்கின்றது. இந்த ஒத்திகைக்கு ஜப்பாட்-2017 என்னும் குறியீட்டுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட எஸ்த்தோனியா நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்கஸ் சங்கா (Margus Tsahkna) இரசியா தனது படை நகர்வுக்கு என தொடருந்துப் பெட்டிகளை பெலரஸுக்கு அனுப்பியுள்ளது. படை ஒத்திகைக்கு என்னும் போர்வையில் பெலரஸ் செல்லும் இரசியப் படைகள் திரும்பி இரசியா செல்ல மாட்டாது எனவும் மார்க்கஸ் தெரிவித்தார். இரசியா தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும் இரசிய அச்சுறுத்தல் என்னும் புரளியைக் கிளப்பி அமெரிக்கா தனது படைகளையும் படைக்கலன்களையும் இரசிய எல்லைகளில் குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்கா 4000 படையினரை போல்ரிக் நாடுகளிலும் போலந்திலும் சுழற்ச்சி முறையில் நிறுத்தியுள்ளதையும் இரசியா சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் எஸ்த்தோனியா சென்றுள்ளன. இரசிய எல்லையில் இருந்து 150 மைல்கள் தொலைவில் உள்ள எஸ்த்தோனியாவின் அமாரி விமானத்தளத்தில் F-35 போர்விமானங்கள் பறப்புப் பயிற்ச்சிகளில் ஈடுபடவுள்ளன.

கலிங்கிராட்டில் உள்ள எஸ்-400 உடன் F-35

போல்ரிக் கடலை ஒட்டி போலாந்துக்கும் லித்துவேனியாவிற்கு இடையில் உள்ள காலிங்கிராட் என்னும் சிறிய பிரதேசத்தை இரசியா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் உள்ள இரசியக் கடற்படையினரைப் பாதுகாக்க இரசியா தனது எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை எஸ்த்தோனியாவில் நிறுத்தப்பட்டிருக்கும் F-35 சமாளிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. எஸ்த்தோனியாவைத் தொடர்ந்து மற்ற ஒரு போல்ரிக் நாடான ருமேனியாவிற்கும் F-35 போர்விமாங்கள் அனுப்பி வைக்கப்படவிருக்கின்றன.

இஸ்ரேல் பலப்பரீட்சை செய்து பார்த்ததா?

அமெரிக்க வான்படைக்கு அடுத்தபடியாக F-35 போர்விமானங்களைப் பாவித்த நாடு இஸ்ரேலாகும். 2017 ஜனவரியில் இரண்டு F-35 இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2017 ஏப்ரலில் மூன்று அனுப்பப்பட்டன. அது சிரிய வான்வெளியில் புகுந்து சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானுக்கு எடுத்துச் செல்லும் படைக்கலன்களை அழித்தது. F-35 போர்விமானங்களை சிரியாவில் உள்ள இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இனம் காண முடியாமல் போய்விட்டதா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இரசியா தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் ரடார்களையும் அமெரிக்கப் போர்விமானங்களுக்கு எதிராகப் பரிசோதனை செய்யும் முகமாக சிரியாவில் நிறுவியிருந்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி F-35 புலப்படாத்தன்மையைப் பரிசோதிக்க அமெரிக்கா இஸ்ரேல் மூலம் சிரியாவுக்குள் அனுப்பியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து சிரியாவில் இருந்து படைக்கலன்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானுக்கு எடுத்துச் சென்று இஸ்ரேலிய எல்லையில் நிறுத்துவதைத் தடுக்க பல தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவுக்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்கள் செய்தன. ஆனால் இரசிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் சிரியாவில் நிறுத்தப்பட்ட பின்னர் இஸ்ரேல் இரசியாவிடம் தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தது. இஸ்ரேலின் எல்லா விமான நடமாட்டங்களையும் சிரியாவில் உள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் அவதானிக்க முடியும். இப்படியிருக்கையில் சிரியாவில் பல படைக்கலக் கிடங்குகளை இஸ்ரேல் 2017 ஜனவரிக்குப் பிறகு அழித்தது எப்படி என்ற கேள்விக்கு விடையாக இஸ்ரேல் F-35 போர்விமானங்களைப் பாவித்தது என ஊகிக்கலாம். பிரெஞ்சு உளவுத் துறையின் தகவல்களை இரகசியமாகப் பெற்ற பிரெஞ்சு ஊடகவியலாளர் ஒருவர் இஸ்ரேல் F-35 போர்விமானங்கள் மூலம் சிரியாவில் தாக்குதல்கள் செய்தன எனக் கூறுகின்றார். அமெரிக்காவின் F-35 போர்விமானங்களையும் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் ஒப்பிட்டு பல படைத்துறை நிபுணர்கள் தொடர்ச்சியாக எழுதிவந்த ஆய்வுகளுக்கு இஸ்ரேல் விடையளித்து விட்டதா? இதே வேளை சிரியாவில் வேதியியல் குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து மத்தியதரைக் கடலில் உள்ள அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைதாங்கி நாசகாரக் கப்பல்களில் இருந்து சிரிய விமானத் தளத்தை நோக்கி வீசப்பட்ட 59 ரொமொஹோக் ஏவுகணைகளில் ஒன்று ஏவப்பட்டவுடன் சிதறிவிட்டது. ஏனயவற்றில் 30 மட்டுமே இலக்கைத் தாக்கின. மிகுதி 28இற்கும் என்ன நடந்தது என்பதைப்பற்றி படைத்துறை நிபுணர்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றை இரசிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இடைமறித்து அழித்திருக்கலாம் என ஓர் ஊகம். இரண்டாவது ஊகம் சற்று மோசமானது. தான் சிரியாமீது ஏவுகணை வீசப் போவதை அமெரிக்கா இரசியாவிற்கு முன் கூட்டியே அறிவித்திருந்தது. இதனால் இரசியாவின் இணையவெளிப் போராளிகள்  இணையவெளி ஊடுருவல் மூலம் அமெரிக்காவின் ரொமொஹொக் ஏவுகணைகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அவற்றை மத்திய தரைக் கடலில் விழச் செய்திருக்கலாம். ரொமொஹோக் வழிகாட்டல் ஏவுகணைகளின் பாயும் பாதை விழும் இலக்கு போன்றவை கணினிகள் மூலம் தீர்மானிக்கப்படுபவை. F-35 போர்விமானங்களை களமுனையில் பாவித்து அதில் உள்ள சிறப்புத்தன்மைகள் பற்றியும் குறைபாடுகள் பற்றியும் லொக்கீட் மார்ட்டீனுக்கு சிறந்த அறிக்கை கொடுக்கக் குடிய திறன், அறிவு, அனுபவம் ஆகியவை இஸ்ரேலிய விமானப்படையினரிடம் தாராளமாக உண்டு என்பதாலேயே இஸ்ரேலுக்கு முதலாவதாக F-35 போர்விமானங்கள் வழங்கப்பட்டன.

F-35 இஸ்ரேலுக்கு சாதகமான படைத்துறைச் சமநிலை.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா F-35 போர்விமானங்களைக் கொடுப்பதால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன. மொத்தம் ஐம்பது F-35 போர்விமானங்களை இஸ்ரேல் வாங்கவிருக்கின்றது. ஆண்டு தோறும் அமெரிக்கா 3பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்காவிடமிருந்து நிதி உதவியாகப் பெறுகின்றது. இந்த நிதி உதவியைப் பாவித்தே இஸ்ரேல் F-35 போர் விமானங்களை வாங்குகின்றது. 1970-ம் ஆண்டில் இருந்து F-15 மற்றும் F-16 போன்ற அமெரிக்கப் போர்விமானங்கள் மூலம் இஸ்ரேல் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது வானாதிக்கத்தைச் செலுத்தி வந்தது. ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகள் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முயன்ற போது அந்த ஆய்வு நிலையங்களை இஸ்ரேல் தாக்கியழித்தது. இதனால் ஈரான் தனது ஆய்வு நிலையத்தை மலைப்பாறைகளின் கீழ் மேற்கொண்டது. இனி இஸ்ரேல் தன்னிடமுள்ள ஐம்பது F-35 மூலம் தனது வானாதிக்கத்தை மேலும் அதிகரிக்கப்போகின்றது. இஸ்ரேலுக்குச் சாதகமாக இருக்கும் படைத்துறச் சமநிலை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ப்போகின்றது.

 

F-35ஐ வாங்க முயலும் தைவான்

தைவான் தனது பாதுகாப்பிற்கும் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தவிர்ப்பதற்கும் அமெரிக்கா வழங்கும் படைக்கலன்களில் பெரிதும் தங்கியுள்ளது. தைவான் அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை வாங்கப் பெரும் முயற்ச்சி செய்கின்றது. அதிலும் F-35-B போர்விமானங்களை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் ஓடி மேல் எழுந்து செல்லக் கூடியவை. சீனாவுடனான உறவைப் பாதிக்கும் என்பதால் F-35 தைவானுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. 1992-ம் ஆண்டு ஜோர்ஜ் எச் டபிளியூ புஷ் புதியரகப் போர் விமானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். நிக்சனுக்குப் பிறகு வந்த அதிபர்களில் அவர் மட்டுமே சீனாவின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டார். 2010-ம் ஆண்டு பராக் ஒபாமா 6.4பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்தார். சீனாவின் ஆட்சேபனையால் F-16 போர்விமானங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை. தைவான் ஆகக் குறைந்தது புதுப்பிக்கப்பட்ட F-16 போர்விமானங்களையாவது அமெரிக்காவிடமிருந்து வாங்கும். சீன வான் ஆதிக்கத்தைச் சமாளிக்க தைவான் தரையில் இருந்து வானுக்கு வீசக் கூடிய ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்துகின்றது. தப்பித்தவறி தைவான் சீனாவால் கைப்பற்றப்பட்டால் F-35 சீனாவின் கைகளுக்குப் போய்விடும் என்ற அச்சமும் அமெரிக்கா தைவானுக்கு F-35 போர்விமானங்களை விற்பனை செய்வதைத் தடுக்கின்றது.

ஜப்பானிலும் பிரித்தானியாவிலும்  F-35

சீனா அடிக்கடி வலாட்டி வரும் கிழக்குச் சீனக் கடல் பிராந்தியத்தில் அதன் கொட்டத்தை அடக்க அமெரிக்கா தனது F-35 போர்விமானங்களை ஜப்பானில் நிறுத்தியுள்ளது. F-35 போர்விமானங்கள் ஜப்பானுக்கு சென்ற பின்னர் சீன விமானங்கள் ஜப்பானிய எல்லைக்குள் அத்து மீறுவதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிரித்தானியாவிற்கு எட்டு F-35 போர்விமானங்கள் ஏப்ரல் 2017 இல் சென்றன. அங்கு அவை மற்ற நேட்டோ நாடுகளின் போர்விமானங்களுடன் இணைந்து வான் சண்டை மற்றும் பல விதமான தாக்குதல்கள் செய்யும் பயிற்ச்சிகளில் ஈடுபட்டன.

உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையினால F-35 போர்விமானங்கள் சென்ற போதிலும் மிக அதிக எண்ணிக்கையான விமானிகள் சென்றுள்ளனர். அவர்கள் சுழற்ச்சி முறையில் பல பயிற்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது இனி வரும் காலங்களில் F-35 போர் விமாங்கள் மூலம் அமெரிக்கா தனது உலக வானாதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றமையை எடுத்துக் காட்டுகின்றது. இதற்குப் போட்டியாக இரசியாவும் சீனாவும் தமது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் போர்விமானங்களையும் தரமுயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

நன்றி வேல் தர்மாவுக்கு https://veltharma.wordpress.com/2017/05/08/களங்களில்-இறங்கிய-அமெரிக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.