Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா: ஒரு பட்டை ஒரு பாதை

Featured Replies


சீனா: ஒரு பட்டை ஒரு பாதை
 
 

article_1495092035-China-new.jpg- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன.

மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது.

எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன.  

இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு பட்டை ஒரு பாதை (One Belt One Road) மாநாடு உலகளாவிய அரசியல் அரங்கில் முக்கியமான ஓர் அம்சமாகும்.

மாறிவரும் உலக அரசியல் அரங்கில் சீனாவின் புதிய வகிபாகத்தைக் கோடுகாட்டும் நிகழ்வாகவும் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திட்டமிட்டதை முன்னகர்த்துவதில் பின்வாங்குவதில்லை என்பதை சீனா உலகுக்கு உணர்த்திய ஓர் அரங்காகவும் இம்மாநாடு அமைந்தது.

ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் புதிய பட்டுப்பாதையை மையமாகக் கொண்டதாக இம்மாநாட்டின் தொனிப்பொருளும் பேசுபொருட்களும் திட்டமிடப்பட்டிருந்தன.   

இம்மாநாடு இரண்டு விடயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவது திறந்த சந்தையினதும் சுதந்திர வர்த்தகத்தினதும் பிரதான தளகர்த்தாவாக கடந்த அரைநூற்றாண்டு காலமாகத் திகழ்ந்த அமெரிக்கா மெதுமெதுவாக அதிலிருந்து பின்வாங்கி தனித்திருத்தலையும் வர்த்தகரீதியான பாதுகாப்பையும் வேண்டுகையில் சுதந்திர வர்த்தகத்தின் புதிய மையமாகவும் திறந்த சந்தையை முன்னோக்கித் தள்ளும் சக்தியாகவும் சீனா மாறுகின்றதா அதற்கான விருப்பு ஒருபுறம் சீனாவிடமும் மறுபுறம் ஒரு பட்டை ஒரு பாைத கூட்டில் இணைந்துள்ள நாடுகள் அதற்கான வாய்ப்பை சீனாவுக்கு வழங்கத் தயாராகவுள்ளனவா என்பதும் முக்கியமானது.   

இரண்டாவது, ஒரு பட்டை ஒரு பாைத  திட்டம் முன்மொழியப்பட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் அத்திட்டம் இப்போது எக்கட்டத்தில் இருக்கிறது, அதன் நிகழ்நிலை என்ன, அதில் தொடர்புபட்டுள்ள நாடுகள் இத்திட்டம் தொடர்பில் என்ன நினைக்கின்றன, இதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேடுவதும் இத்திட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. 

சீன ஜனாதிபதி சீ சின்பிங் செப்டெம்பர் 2013 இல் பட்டுச் சாலை பொருளாதாரப் வாரையும், அக்டோபர் 2013 இல் பட்டு கடற்பெருவழியையும் அறிவித்தார். இது அறிவிக்கப்பட்ட போது சீனா முன்னெப்போதுமில்லாதளவுக்கு உலகளாவிய அலுவல்களில் செல்வாக்கு செலுத்த எதிர்பார்க்கிறது என்பது விளங்கியது.

உலகின் பிரதானமான பொருளாதார வல்லரசாக சீனா முன்னேறிய நிலையிலும் ஜனாதிபதி சீ சின்பிங்னிற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எவரும் இவ்வாறான பிரமாண்டமான திட்டத்தினை முன்மொழியிவில்லை. இத்திட்ட முன்மொழிவானது பலவகைகளில் புதிய திசையில் பயணிக்கின்ற சீனாவின் அயலுறவுக் கொள்கைகளைக் கோடிகாட்டி நின்றது.   

article_1495092070-China-06-new.jpg

குறிப்பாக உலகளாவிய அரசியல் அரங்கில் ஒதுங்கிய ஒரு பாத்திரத்தை தொடர்ந்து வகித்து வந்த சீனா, பொருளாதார நலன்களை மட்டுமே மையப்படுத்தியதான - பல சந்தர்ப்பங்களில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட - அயலுறவுக் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 

ஆனால் ஆழமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரத்தின் இயங்குசக்தியாக அரசியலின் தவிர்க்கவியலாத பங்கும் சீனாவின் அயலுறவுக்கொள்கையின் திசைவழியில் முக்கிய செல்வாக்குச் செலுத்தின. இதன் விளைவிலான மாற்றமடைந்த சீனா அயலுறவுக் கொள்கையின் பகுதியாகவே ‘ஒரு பட்டை ஒரு பாைத’ திட்டத்தை நோக்கவியலும்.   

மத்திய ஆசியா, மேற்காசியா, மத்தியக் கிழக்கு, ஐரோப்பாவில் அமைந்த பழைய பட்டுச் சாலையில் உள்ள நாடுகளே இப்பட்ைடயில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பண்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிகத்தை விரிவாக்குதல் ஆகியவற்றின் வழி இப்பகுதியை ஓர் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாற்றுவதை இத்திட்டம் முன்வைக்கிறது.

தொன்மையான பட்டுச் சாலையில் அமைந்த இப்பகுதியைத் தவிரவும் தெற்கு, தென்கிழக்காசியாவும் இப்பட்ைட விரிவாக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.   

இதேபோல 21 ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பெரும்பாதை என்பது நிலவழிப் பட்டுச் சாலை திட்டத்தோடு தொடர்புடைய மற்றொரு முன்னெடுப்பாகும். தொடர்ச்சியுற அமைந்த நீர்நிலைகளான தென்சீனக்கடல், தென் பசிபிக் பெருங்கடல், அகன்ற இந்தியப் பெருங்கடல் பகுதி வழியே தென்கிழக்காசியா, ஓசியானியா, வட ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதும், கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.  

இத்திட்டத்தின் முன்நகர்வுக்காக சீனா ஏனைய 56 நாடுகளுடன் இணைந்து இதனுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்காகவே ‘ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை’ 2014 இல் தொடங்கியன. இவ்வார் மற்றும் வழியில் அமைந்துள்ள நாடுகள் இவ் வங்கியின் உறுப்பு நாடுகளாகும்.   

இதேயாண்டு சீனா 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகக் கொண்ட ‘பட்டுச்சாலை நிதியை’ உருவாக்குவதாக அறிவித்தது.

இவ்வளர்ச்சி நிதியானது நேரடியாக ‘ஒரு பட்டை ஒரு பாைத’ திட்டத்துடன் தொடர்புபடாவண்ணம் அதேவேளை இத்திட்டத்துடன் தொடர்புடைய நாடுகளுக்கு பயனளிக்கக் கூடியவகையில் அமையும் என சீனா தெரிவித்தது.

இந்நிதியானது செயற்றிட்டங்களுக்கு கடன்வழங்குவது என்றில்லாமல் தொழில்வணிகத்தில் முதலீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வார் முதலீடுகளில் உள்ளடங்காத, பாகிஸ்தானிலுள்ள கரோத் நீர்மின் நிலையத் திட்டம் பட்டுச்சாலை நிதியின் முதலாவது முதலீட்டுத் திட்டமாகும். பாகிஸ்தானின் மீதான சீனாவின் கவனங்குவிப்பு இந்தியாவின் விருப்புக்குரியதாக இல்லை. இவ்வாரம் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

இந்தியா இத்திட்டத்தை எதிர்க்கும் ஒரு சக்தியாக அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து எதிர் கூட்டிணைவுக்கு முனைகிறது. இவை யுரேசியாவின் (Eurasia) ஆதிக்கத்துக்கான போட்டியை இன்னொரு தளத்துக்கு நகர்த்துகின்றன.   

நிலப்பரப்பால் ஒன்றிணைக்கப்பட்ட ஆசியா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களின் பகுதி யுரேசியா என அழைக்கப்படுகிறது. உலக சனத்தொகையில் 70%மானவர்களைக் கொண்டதும் பூமியின் நிலப்பரப்பில் 36%ஐக் கொண்டதுமான மிகப்பெரிய நிலப்பரப்பாக இது திகழ்கிறது. இப்பகுதியினுள் 90 நாடுகள் உள்ளடங்குகின்றன.

இவை உலகளாவிய ஆதிக்கத்துக்கான அவாவின் மையமாக யுரேசியாவை நிலைபெறச் செய்கின்றன. சீனாவின் ஒரு பட்ைட ஒரு பாதைத் திட்டமானது, அவ்வகையில் முழு யுரேசியாவையும் இணைக்கிறது.  

சீனாவின் இத்திட்டத்தின் நோக்கை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் சீனாவைப் புறந்தள்ளி 2010இல் முன்மொழியப்பட்ட பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையின் (Trans Pacific Partnership) எதிர்வினையின் வடிவமாகவும் கொள்ளலாம்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஆசியாவின் மீதான அதீக கவனங்குவிப்பும் அதிகரித்த அமெரிக்க இராணுவ நிலைகொள்ளல்களும் சீனாவின் புதிய அயலுறவுக் கொள்கையை வடிவமைக்க தூண்டியது.

சீனா உள்கட்டமைப்புக்கு கணிசமான முதலீட்டை வழங்குவதன் மூலமாகவும், வர்த்தக மற்றும் பொருளாதார இலாபங்களை அதிகரிப்பதினூடாகவும், யுரேஷியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை நட்பாக்குவதன் ஊடு அமெரிக்க மிரட்டலை எதிர்கொள்ள விளைந்தது.

இதனடிப்படையிலான நீண்டகாலத் திட்டமிடலின் விளைவாகவே ‘ஒரு பட்ைட ஒரு பாைத’ திட்டத்தை நோக்கவியலும்.   

இத்திட்டம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. தென்சீனாவிலிருந்து தென் கிழக்கு ஆசியா எங்கிலும் தரைவழி போக்குவரத்து இணைப்புகளை ஸ்தாபிக்கவும் அத்துடன் கிழக்காசியப் பிராந்தியத்தில் துறைமுக வசதிகளை மேம்படுத்தவும் சீனா உறுதிபூண்டுள்ளது.

சீனா மற்றும் ஆசியாவுக்கு இடையே பொருளாதார உறவுகளை அதிகரிப்பது, அத்துடன் இருதரப்பு வர்த்தகத்தை 2020 க்கு முன்னதாக 1 ட்ரில்லியன் டொலரை எட்டும் வகையில் செய்வது என இந்த தரைவழி இணைப்புகள் ஒரு மூலோபாய நோக்கத்தையும் கொண்டுள்ளன.

இது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை தென்கிழக்கு ஆசியா வழியாக இறக்குமதி செய்யும் கப்பல் போக்குவரத்து வழிகளைச் சீனா சார்திருப்பதைக் குறைக்கிறது. மலாக்கா ஜலசந்தி மீது கட்டுப்பாட்டை அமெரிக்கா உறுதிசெய்யுமாயின் சீனாவின் கடற்போக்குவரத்தை முற்றுகையிடவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

article_1495092105-China-07-new.jpg

இதை சீனா நன்கறியும். அதனாலேயே தரைப்போக்குவரத்து இணைப்பில் சீனா முன் நிற்பேதாடு ஒரு பட்ைட ஒரு பாைத திட்டத்தின் முக்கிய கூறாகவும் இது உள்ளது.   

இத்திட்டத்தின் இன்னொரு கட்டமாக கிழக்கு ஐரோப்பா, பால்கன்கள் மற்றும் பால்டிக் நாடுகள் ஐரோப்பாவுக்கான கிழக்கு வாயிலாக உள்ள நிலையில், ஒரு பட்டை ஒரு பாதைத் திட்டத்தின் பாதைகளில் அவற்றை உள்ளடக்குவதனூடு சீனா-ஐரோப்பா தரைவழி-கடல்வழி விரைவு சாலையைக் கட்டமைக்கவும் மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் பயன்படுகிறது. 

அதேபோல கிரேக்க துறைமுகமான பிரேயுஸ் வரையிலான ஒரு பரந்த ரயில் இணைப்பு திட்டத்தின் பாகமாக, ஹங்கேரி மற்றும் சேர்பியாவின் தலைநகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரயில் போக்குவரத்தைக் கட்டமைக்கும் உடன்படிக்கை ஒன்றில் சீனா கையெழுத்திட்டுள்ளது. பால்டிக் கடல், ஏட்ரியாடிக் (Adriatic) கடல் மற்றும் கருங்கடலின் துறைமுக வசதிகளுக்கான முதலீடுகளையும் சீனா மேற்கொள்கிறது.   

இவையனைத்தும் யுரேசியா மீதான சீனாவின் செல்வாக்கைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளாக உள்ளன. அதேவேளை அமெரிக்காவின் நேட்டோக் கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் யுரேசியா மீதான கட்டுப்பாட்டுக்கான அவாவைக் கொண்டுள்ளதை மறுக்கவியலாது.

குறிப்பாக ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இைத வெளிப்படையாகவே செயல்களினூடாக அறிவித்துள்ளன. ஆனால், இதை சாத்தியமாக்க அமெரிக்காவுடனான கூட்டுப் பயனற்றது என்பதையும் இந்நாடுகள் உணர்ந்துள்ள.

முடிவுக்கு வராத பொருளாதார நெருக்கடியும் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள பொருளாதார மந்தநிலையும் பொருளாதார ரீதியில் தலைமைப்பாத்திரத்தைத் தொடர்ந்து வகிக்கவியலாகியுள்ள அமெரிக்காவின் அரசியற் பொருளாதாரச் சூழல், உலகின் மிகப்பெரிய மலிவு உழைப்பு களமாகவும்; இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நிலைபெற்றுள்ள சீனாவின் எழுச்சி என்பன கவனிப்புக்குரியன.

இவை தவிர்க்கவியலாமல் ஐரோப்பிய நாடுகளை சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளன. இதனாலேயே இந்நாடுகள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன. இதில் இலங்கையும் இணைந்துள்ளது.

இதிலே இணையாத இரண்டு முக்கிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா இன்னொன்று ஜப்பான்.   
பட்டுப்பாதையை மையமாகக் கொண்ட இத்திட்டமானது அமெரிக்க மைய புவிசார் அரசியலை இடம்பெயர்த்து யுரேசியாவை அதன் மையமாக்கியுள்ளது.

அவ்வகையில் புவிசார் அரசியலை அமெரிக்காவிலிருந்து இடம்பெயர்த்தது மட்டுமன்றி அதை சீன மையமாக உருவாக்காமல் யுரேசிய மையமாக்கி அதில் ஐரோப்பாவின் முக்கிய அரங்காடிகளை அதன் பங்காளியாக்கியமை என்ற வகையில் இத்திட்டமானது, சீனாவுக்கு மூலோபாய ரீதியான பாரிய வெற்றியை வழங்கியுள்ளதை மறுக்கவியலாது.   

இத்திட்டம் சீனாவின் உள்நாட்டுப் பொருளாதார விருத்தியை மையப்படுத்தியான அதேவேளை உலகளாவிய கவனங் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ளமையை நினைவுபடுத்தல் தகும். இத்திட்டத்தின் தரைவழி இணைப்பானது, வரலாற்றுரீதியில் பட்டுச்சாலையின் தொடக்கப் புள்ளியாக விளங்கும் சீன நகரமான ஜியானில் இருந்து, சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி மற்றும் மத்திய ஆசியா வழியாக மாஸ்கோ மற்றும் ஐரோப்பாவுக்குச் செல்லும் ஒரு பிரதான பாதையுடன் இணைக்கும் 80,000 கிலோமீற்றர் தூர அதிவிரைவு ரயில் பாதையின் கட்டமைப்பை உள்ளடக்கி உள்ளது.

ஏனைய ரயில் பாதைகள், தென்சீனாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வழியாக சிங்கப்பூர் வரையிலும் மற்றும் மற்றொன்று ஜின்ஜியாங் இல் இருந்து பாகிஸ்தான் வழியாக சீனா கட்டமைக்கும் அரேபிய கடலில் உள்ள குவதார் துறைமுகம் வரையிலும் உள்ளடக்கி உள்ளது.  

சாலைகள், எண்ணெய், எரிவாயு குழாய்கள், டிஜிட்டல் கம்பிவடங்களின் மிகப்பெரிய விரிவாக்கம், மின்சார உற்பத்தி, மின்சார கம்பிவடங்களின் மிகப்பெரிய விரிவாக்கத்தையும் அத்திட்டங்கள் உள்ளடக்கி உள்ளன. அத்துடன் சீனாவின் வளர்ச்சியடையா உள்நாட்டு பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுபொருளையும் வழங்கும், அந்த உள்கட்டமைப்பு முன்மொழிவுகள் சீனாவின் மிதமிஞ்சிய உற்பத்தி தகைமைகளுக்கு ஒரு வடிகாலை வழங்க மற்றும் சீன பெருநிறுவனங்களுக்கு இலாபகரமான வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பாட்டை ஒரு பாைத திட்டத்தின் கீழ் ஆறு பொருளாதாரப் பாதைகள் உருவாக்கப்படுன்றன. பங்களாதேஷ்-சீனா-இந்தியா-மியன்மார், சீனா-மங்கோலியா-ரஷ்யா, சீனா-மத்திய ஆசியா-மேற்காசியா, சீனா-இந்தோசீன வளைகுடா, சீனா-பாகிஸ்தான் மற்றும் யுரோசியன் தரைவழிப்பாலம்.   

இத்திட்டத்தின் கடல்போக்குவரத்து பாதை துறைமுக வசதிகளை விரிவாக்குவதில், அதுவும் குறிப்பாக சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்குக் கடல் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் கென்யாவிலிருந்து ஆபிரிக்காவை ஒருங்கிணைக்கவும் தென்கிழக்கு ஆசியாவில் கவனம் செலுத்துகிறது.  

நடந்து முடிந்த மாநாட்டில் சீனா இத்திட்டத்தின் பகுதியான நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் 68 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் பலன்கள் எவை என்ற வினாவுக்கான விடையும் இம்மாநாட்டில் கிடைத்தது.

சீனாவால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் ஏற்ெகனவே சீன நிறுவனங்கள் 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதோடு இப்பாதையில் உள்ள 20 நாடுகளில் 56 வர்த்தகப் பொருளாதார வலயங்களை உருவாக்கியுள்ளன.

இதன் விளைவால் இதுவரை 180,000 தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை எதிர்பார்த்த வேகத்தில் இத்திட்டத்தினால் முன்செல்ல இயலவில்லை என்பதை சீனா தெரிவித்ததோடு இதன் நடைமுறைப்படுத்தலில் பூகோள அரசியல் செல்வாக்குச் செலுத்துவதைத் தவிர்க்கவியலாது என்பதை வெளிப்படையான ஒத்துக் கொண்டது.   
மாறுகின்ற காலங்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய எதிர்பார்ப்புகளையும் வழங்குகின்றன. அவ்வாய்ப்புகள் நல்லவையா கெட்டவையா என்பது ஒருபுறம் இருந்தாலும் மாற்றம் ஒன்றே மாறாத நியதி என்பது மீண்டுமொருமுறை உலக அரசியல் அரங்கில் தெளிவாகிறது என்பது மட்டுமே உண்மை.   

- See more at: http://www.tamilmirror.lk/196867/ச-ன-ஒர-பட-ட-ஒர-ப-த-#sthash.zmCkf11f.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.