Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதியின் விளையாட்டு (சிறுகதை)

Featured Replies

வேதியின் விளையாட்டு (சிறுகதை)

pinky-love[1]

அது சரிவராது போலத்தான் இருக்கு…,’ என்ற மனைவியின் பதிலால், பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது!

பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர்மானித்துத் திட்டமிட்டுக்கொள்வது அவரது சுபாவம். இதுதான் அவரது பலமும், பலவீனமும்!
படுக்கையில் புரண்டு படுத்தார் பென்னம்பலம்.

‘என்னப்பா, நித்திரை கொள்ளாமல், யோசிச்சுக் கொண்டிருந்தால், எல்லாம் நடந்திடுமே…? பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு படுங்கோ.’
அவருடைய மனைவியோ அவருக்கு நேரெதிர்! தலையே போனாலும் கவலைப்படமாட்டார். நடக்கிறது நடக்கும் என்பது அவரது போக்கு. எல்லாப் பாரத்தையும் கடவுளின்மீது போட்டுவிட்டு நிம்மதியாக இருப்பார்.

பொன்னம்பலம் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறியவர். பல்கலைக் கழகத்திலிருந்து அவர் என்ஜினியராக வெளிவந்தபோது, பெரியபெரிய இடங்களிலிருந்தெல்லாம், கொழுத்த சீதனத்துடன் பலர் போட்டி போட்டுக்கொண்டு பெண்கொடுக்க முன்வந்தார்கள்’. அந்தக் காலத்தில் படிப்பும் அரசாங்க உத்தியோகமுமே புருஷலட்சணஙகளாகக் கொள்ளப்பட்டன. ‘சம்பளம்’ ‘கிம்பளம்’ பற்றிய சோடிப்புகள் கலியாணத் தரகரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. பெம்பிளை பார்த்தபின், பெண்ணைப் பிடிக்கவில்லையென்று மாப்பிளை நிராகரிக்கலாம். அதையே ஒரு பெம்பிளை செய்தால், அவள் ‘ஆட்டக்காரி’ அல்லது ‘சதிர்க்காரி’ என ஊரில் பட்டம் கொடுத்துவிடுவார்கள். கலியாணச் சந்தையில் அப்போது முற்றுமுழுக்க ஆணாதிக்கமே கோலோச்சியது. ஊரிலே நடைமுறையிலிருந்த இத்தகைய கம்பசூத்திரத்தைப் பயன்படுத்தி பொன்னம்பலத்தார் அவுஸ்திரேலியாவில் தன்னுடைய பிள்ளைகளை வளர்த்ததுதான், இப்போதைய அவரது கவலைகளுக்கு மூலகாரணம்.

இலங்கையில் அரச நிறுவனமொன்றின் பணிப்பாளராக சகல செல்வாக்குகளுடனும் வலம்வந்த பொன்னம்பலத்தை எண்பத்துமூன்றாம் ஆண்டு இனக்கலவரம் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயரவைத்தது. கொழும்பிலுள்ள சீதன வீடு காடையர்களால் அடித்து முறித்து எரிக்கப்பட்டபின், சகல தேட்டங்களையும் இழந்த நிலையில், நண்டும் சிண்டுமாய் இரண்டு வயதும் நான்கு வயதுமான இரண்டு பெடியன்களுடனும், இளம் மனைவியுடயுனும் வந்தவர், இங்கும் தனது உழைப்பையும் சிக்கனத்தையும் மூலதனமாக்கி முன்னேறினார். பிள்ளைகளும் பெற்றோரின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், நல்லவேலைகள் கிடைக்கும் துறைகளிலே பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்று, கொழுத்த சம்பளத்துடன் வேலைகளிலும் சேர்ந்துவிட்டார்கள்.

‘இனியென்ன கலியாணம்தான். பிறகு நிம்மதியாய் பேரப்பிள்ளைகளுடன் காலம் கழிக்கலாம்’ என நிமிர்ந்தவருக்கு, அப்பொழுதுதான் அவுஸ்திரேலியாவிலே, சமகாலத்தில் நிலவும் கலியாணச் சந்தையின் முழுத்தாற்பரியங்களும் புரியலாயிற்று.

நமது ஊரில் கலியாணமென்றால் என்ன? சாதகப் பொருத்தம் பார்ப்பார்கள். குலம், கோத்திரம், குடும்பப்பின்னணி என்பன பார்ப்பார்கள். மாப்பிள்ளையின் குணம், படிப்பு, உத்தியோகம்பற்றித் தெரிந்தவர்களிடம் விசாரிப்பார்கள். பின்பு பெம்பிளை பார்த்துக் கலியாணம் நடக்கும். இப்போது இன்னொன்றும் நடைமுறைக்கு வந்துள்ளதாக மணியம் புதிதாகச் சொன்னார். பரந்த அனுபவமுள்ள பொன்னம்பலத்தாருக்கு இது தூக்கத்தைக் கலைத்தது.

தாங்களே ‘சோடியளை’ தேடிப்பிடிக்காத தமிழ்ப் பெடிபெட்டையளுக்கு, கலியாணங்கள் பொருத்தி விடுவதை, மணியத்தார் பொழுதுபோக்குக்காக அல்லாமல் ஒரு சேவையாகவே செய்கிறார். இதனால் அவர் பலதடவை, சிக்கல்களில் மாட்டுப்பட்டு மகனிடம் பேச்சு வாங்கியதுமுண்டு.

பொன்னம்பலத்தார் பெடியளின் கலியாண விஷயமாய் மணியத்தை அணுகியபோது, அவர்தான் சொன்னார், ‘கலியாணத்தை முற்றாக்க ‘கெமிஸ்றி’ (Chemistry) வேலை செய்யவேணும்’ என்று!

தமிழ் மூத்தபிரைசைகள், புதன்கிழமை தோறும் விளையாடும் செஸ் விளையாட்டின்போது ‘கெமிஸ்றி’ என்கிற சொல்லின் பல்வேறு பரிமாணங்கள் அலசப்பட்டன.

‘Organic chemistry, inorganic chemistry, physical chemistry என்று நான் பள்ளிக் கூடத்திலை படிச்சிருக்கிறன். அதென்னப்பா ‘கலியாணக்கெமிஸ்றி’? – அண்மையில் அவுஸ்திரேலியா வந்து மூத்தபிரசைகள் சங்கத்திலே உறுப்பினராகச் சேர்ந்துள்ள ‘அப்போதிக்கரி’ தம்பிராசா கேட்டார்.

‘அதுதானப்பா சாத்திரத்திலை, வசியப்பொருத்தம் எண்டு சொல்லிறது’ என அதற்கு விளக்கம் சொல்லி, கலியாணப் பொருத்தம் பார்ப்பதை, சைற் பிஸ்னஸ்ஸாகச் செய்யும் சிறாப்பர் கந்தையா உரையாடலிலே புகுந்து கொண்டார்.

‘வசியப்பொருத்தம் உத்தமமாய் இருந்தாலும் பெடிபெட்டையள் கெமிஸ்றி சரிவரேல்லை எண்ணுதுகள்… அப்ப இதுகள் சொல்லுற ‘கெமிஸ்றி’ என்கிற கோதாரிதான் என்ன?’

‘ஆணும் பெண்ணும் கூடிப்பேசும் பொழுது அவர்களுக்குள் ஒரு ரசாயன மாற்றம் நடக்கும். இந்த இரசாயன ஈர்ப்பே கெமிஸ்றி…!’ என பரிமேலழகர் உரை வழங்கினார் பண்டிதர் மகாதேவா.

‘என்ன கோதாரி ஈர்ப்போ…? இளவயதிலை எங்களைவிட்டவை ஆர்…?, எண்ட கெப்பரிலை நிக்கிறது. முப்பதுதாண்ட ஓடி முழிக்கிறது. இப்பிடி கூழ்ப்பானைக்குள்ளை விழுந்தவை பலபேரை எனக்குத்தெரியும். என்னட்டை பெட்டையளின்ரை முப்பத்தைஞ்சு சாதக குறிப்புகள் கையிலை இருக்கு. இதுக்கு தோதாய் பன்னிரண்டு பெடியங்களின்ரை சாதகங்கள்தான் இருக்கு. இப்பிடியேபோனால், மலேசியா சிங்கப்பூர் மாதிரி முதிர் கன்னியளாய் இருக்கிற நிலமைதான் இஞ்சையும்வரும். பெடியங்களும் தங்களுக்குத் தகுதி இருக்கோ இல்லையோ, குஜராத்திப் ‘பெட்டையள்’மாதிரி வெள்ளையாய் கொண்டுவா எண்டு நிக்கிறாங்கள். இது பெத்தவைக்கும் விளங்குதில்லை, பெடிபெட்டையளுக்கும் விளங்குதில்லை…’ என மணியம் தனது அனுபவத்தைச் சொல்லி நொந்து கொண்டார்.

‘நாங்கள் கலியாணம் கட்டி இப்ப நாப்பது வருஷமாச்சு மணியம். நானும் மனுஷியும் ஒருதரை ஒருத்தர் இற்றைவரை சரியாய் தெரிஞ்சுகொள்ளேலாமல் கிடக்குது. இதுக்கிள்ளை பெடிபெட்டையள் மூண்டுமாதம் ஆறுமாதம் கூடித்திரிஞ்சுபோட்டு என்னண்டு புரிஞ்சு கொள்ளப்போகுதுகள்;…?’ என்று மூலையிலிருந்த அதி மூத்த பிரசை ஒன்று பெருமூச்சுவிட்டது.

‘படிக்கேக்கையே, நல்ல பெடியனாய் பாத்து பிடிச்சுக்கொண்டுவாடி எண்டு தாய்மார் தூண்டிவிடுகிறதும், பெடியளை வளைச்சுப் பிடிக்கிறதும், இங்கை பரவலாய் நடக்குது. அதுக்கு வல்லமையும் கெட்டித்தனமும் வேணும்…’ என உலாந்தா இராமலிங்கம் அங்கிருந்த ஆருக்கோ குத்தல்கதை சொன்னர். நிலமையைச் சமாளிக்க புது வருஷப்பிறப்புக் கொண்டாட்டம் பற்றிய தகவலைச் சொல்லி, கதையை திருப்பினார் வில்வரத்தினம். அவர்தான் மூத்தபிரைசைகள் சங்கத்தின் நடப்பாண்டுச் செயலாளர். மணியத்தின் பினாமியாகத் தேர்தலில் வென்றவர்.

தன்னுடைய மகன்களுக்கு கலியாணம் பேசி பொன்னம்பலத்தார் வாய்வைக்காத இடமில்லை. அவங்களின்ரை வேலைக்கும் சம்பளத்துக்கும் பெட்டையள் கியூவிலை நிப்பாளவை எண்டுதான் ஆரம்பத்தில் மணியத்தார் சொன்னார். ஆனால் ‘இவங்கள் பெட்டையளின்ரை ‘வேவ்லெந்துக்கு'(Wave-length), கதைக்கிறாங்களில்லையாம்’ என்று இப்ப புதுக்கதை சொல்லுறார். கால ஓட்டத்தில் பொனம்பலத்தாரின்ரை பெடியங்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ்ப்பெட்டையள் வைச்ச பெயர் ‘மம்மீஸ்போய்’ (Mummy’s boy) என்ற செய்தி சாடைமாடையாக வெளியே கசியவே, நிலமை சுமுகமாகட்டுமென மணியம் இந்தச் சம்பந்தத்தைக் கிடப்பில் போட்டு விட்டார்.

அன்று சித்திரை புதுவருஷப்பிறப்பு!

மூத்த பிரசைகள் சங்கம் அதை தடல்புடலாகக் கொண்டாடும். மணியத்தை சந்திப்பதற்காகவே கொழும்பு நாகலிங்கம் வருஷப்பிறப்பு விழாவுக்கு வந்திருந்தார். கொண்டாட்ட ஒழுங்குகளில் மணியம் ஓடியாடித் திரிந்ததால் கொண்டாட்டம் முடியட்டும் என்று, பட்டும் படமலும் நாகலிங்கம் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். சாதாரணமாக அவர் இந்தச் சில்லறை விழாக்களுக்கெல்லாம் போகமாட்டார். அந்தளவுக்கு மூக்கு நீண்ட மனுஷன். இப்போது மணியத்தைத் தேடிவந்ததின் காரணம் பொன்னம்பலத்தாரின் மூத்தபெடியனுக்கு அவர் மூலமாக தன்னுடைய மகளுக்கு சம்பந்தம் கேட்க!

நாகலிங்கம் இலங்கை கஸ்டம்ஸில் கொடிகட்டிப் பறந்ததால் அவரை ‘கஸ்டம்ஸ்’ நாகலிங்கம் என்றால்தான் கொழும்பில் தெரியும். கஸ்டம்ஸில் சம்பாதித்த பணத்தில் அவர் கொழும்பில் பல இடங்களிலும் வீடுகளை வாங்கி வாடைக்கு விட்டதால், அதைப் பராமரிக்கவென அடிக்கடி கொழும்புக்கு சென்றுவருவார். இதனால் சிட்னியில் அவர் கொழும்பு நாகலிங்கமாகிவிட்டார். ஆம்பிளை வாரிசு வேணுமென்ற முயற்சியில் தோற்றுப்போனதால் நாகலிங்கத்தாருக்கு நான்கும் பெம்பிளைப்பிள்ளையள். தான் கறுப்பாக இருந்தாலும் தனக்கு வாறபெம்பிளை சிவப்பாய், வடிவாய் இருக்கவேணுமெண்டு அந்தக்காலத்தில் சல்லடைபோட்டுத்தேடி கலியாணம் கட்டினவராம். தனக்கு பேசிவந்த சம்பந்தங்களில், ஒவ்வொரு நொட்டை சொல்லி மற்றவர்களின் வயித்தெரிச்சலைக் கட்டிக்கொண்ட பாவமோ என்னவோ, அவரது பெம்பிளைப்பிள்ளையள் நான்கும் அச்சொட்டாக அவரைப்போலவே பிறந்தன. ‘சீதனத்தை விசுக்கிஎறிந்தால் எல்லாம் தானாய் வரும்’ என்றிருந்தவர், கெமிஸ்றியின் புதிய விளையாட்டைக்கண்டு நிலைகுலைந்து போனார்.

மணியத்தாரும் கொழும்பு நாகலிங்கத்தின் ஆய்க்கினை தாங்கமாட்டாமல், சந்து பொந்தெல்லாம் புகுந்து தேடியும் சோடிசேர்ப்பு முயற்சி சரிவரவில்லை. நாளடைவில் மணியத்தின் மகனுக்கு அடலெயிட்டில் நல்ல வேலையொன்று கிடைக்கவே, மகன் குடும்பத்துடன் அவர் அடலெயிட்டுக்கு போய் இரண்டு வருடமாச்சு.

‘இங்கையும் கலியாணங்கள் பேசவெளிக்கிட்டு வந்த இடத்திலும் பிரச்சினையளை விலைக்கு வாங்காமல் இருங்கோ…’ என மகன் கட்டுப்பாடுகள் போட்டுள்ளதால், மணியத்தார் இப்போ கலியாணங்கள் பேசுவதில்லை. அங்குள்ள இந்துக்கோயிலுடன் அவரது பொழுது போகிறதாம்.

சில வருடங்களின் பின்னர், திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவென, அடலெயிட்டிலிருந்து சிட்னிக்கு மனைவியுடன் வந்திருந்த மணியம், எதிர்பாராத விதமாக அங்கு பொன்னம்பலத்தாரின் மூத்த மகனைச் சந்தித்தார். அவன் யப்பானியப் பெண்ணுடன் வந்திருந்தான். அவர்கள் இருந்த மேசையிலேயே, மணியம் தம்பதிகளுக்கும் இடம் ஓதுக்கியிருந்தார்கள். கூடவந்த யப்பானியப் பெண் தனது மனைவி என்றும், பெயர் கைக்கோ, தன்னுடன் வேலை செய்கிறாள் என்றும், பொன்னம்பலத்தாரின் மகன் அறிமுகம் செய்தான். கைக்கோ இருக்கையிலிருந்து எழுந்து தலையைக்குனிந்து பணிவாகக் கைகூப்பி வணக்கம் சொன்னாள். கைக்கோவின் இந்தப் பணிவையும் பண்பையும் கண்டு, மணியத்தாரின் மனைவி மலைத்துப்போனார். ‘எங்கடை இந்தக்காலத்துப் பிள்ளையள் இப்பிடிச் செய்யுங்களே…?’ என மணியத்தின் காதுக்குள் குசுகுசுத்தார்’.

கைக்கோவை மணியத்தின் மனைவிக்கு நன்கு பிடித்துக்கொண்டது. இருவரும் ஓயாது பேசிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே இந்துசமய திருமணங்கள் பற்றியும் பேச்சு வந்தது. இந்த சந்தர்ப்பத்தைக் கைவிடாது, ‘உன்னுடைய தமிழ்க் கணவனில் உனக்குப் பிடித்த விஷயம் என்ன…?’ என்று நோண்டினார் மணியம்.

கைக்கோ கணவனை காதல் பொங்க பார்த்து முறுவலித்தபடியே, ‘அவர்களது குடும்பத்திலுள்ள பெற்றோர் பிள்ளைகள் உறவும், பெற்றோர்மீது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பும் எனக்குப்பிடித்துக் கொண்டது. யப்பானிய குடும்ப அமைப்பில், இதற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுப்போம்’ எனச்சொல்லி யப்பானிய குடும்ப உறவுமுறை பற்றி விபரமாகச் சொன்னாள்.

இவர்களுடைய கதைகள் ஒருபுறத்தே தொடர மற்றப்பக்கத்தில் தாலிகட்டு முடிந்தது. ‘மணமக்களை ஆசீர்வதிக்கலாம்’ என ஐயர் அறிவிக்கவே, மணவறையை நோக்கி கியூ நீண்டது. கியூவிவிலே மணியம் தம்பதிகளுக்கு முன்னே ஒரு பிஜிஇந்தியப் பெண், தனது அவுஸ்திரேலிய வெள்ளைக்கார கணவனை அணைத்தபடி நின்றாள்.

பிஜிஇந்தியப் பெண்ணின் ‘மாநிறமும்’ அவுஸ்திரேலிய கணவனின் ‘கடும்வெள்ளை’யும் மணியத்தாரின் கண்களுக்கு அழகாகத் தெரிந்தன. கெமிஸ்றி விளையாட வந்துவிட்டால், கல்யாண பந்தங்களிலே இன-மொழி வேறுபாடுகள் மறைந்துபோய்விடும் போல அவருக்குத் தோன்றியது. இந்த வேதிவிளையாட்டுக்கு பிரத்தியேக ‘கெமிஸ்றி’ ரியுஷன் தேவையில்லை என்கிற உண்மை மணியத்தாரின் மண்டையிலே ஓங்கிக்குட்டியது.

ஆசி கந்தராஜா

http://www.aasi-kantharajah.com/சிறுகதைகள்/வேதியின்-விளையாட்டு-சிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.