Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Featured Replies

அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

 
raja_3

 

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் எனும் இளையராஜாவுக்கு இன்றோடு வயது 74. ஞானதேசிகன் என்றிருந்த இயற்பெயரை பள்ளியில் சேர்க்கும் போது ராஜைய்யாவாக்கினார் ராஜாவின் தந்தை. வீட்டுக்கு ராஜைய்யாவாக இருந்தாலும் ஊர்மக்களுக்கு ராசைய்யாவாக இருந்தார் சில காலம். 70 களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ரயிலேறியதும் ராஜையாவை அவரது இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர் ‘ராஜா’ மட்டும் போதுமென சுருக்கினார்.  தமிழ் சினிமாவில் முன்னதாக பிரபலமான இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா இருக்கும் போது மேலுமொரு ராஜா வந்தால் வித்யாசம் தெரியாமல் போய் விடும் என்றோ என்னவோ ராஜாவை இன்றைய இளையராஜாவாக்கி விட்டார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். இளைய ராஜாவை அன்னக்கிளி மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய அதிருஷ்டக்காரர் அவர் தான்.

தமிழ் நாட்டில் ராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. சந்தோசமா? சோகமா? துக்கமா? கோபமா? அளவு கடந்த உற்சாகமா? அதி பயங்கர வன்மமா? எல்லாவற்றுக்கும் வடிகாலாக ராஜாவின் இசை இருந்தது... இப்போதும் இருக்கிறது.

அன்னக்கிளியில் ‘மச்சானைப் பார்த்திங்களா... மலவாழத் தோப்புக்குள்ள’ வில் தொடங்கிய ஒரு இசைப் பிரவாகத்தின் நெடும் பயணத்தில் பயனடைந்தவர்கள் அவரைக் காட்டிலும் அவரது ரசிகர்கள் தான் அதிகம். 70 களின் இறுதியில் இருந்து இன்று வரை ராஜாவின் பாடல்கள் ஒலிக்காத ஒருநாளை நம்மால் எளிதாக கடந்து விட முடியாது. ராஜா சிகரத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா பல இசையமைப்பாளர்களைக் கண்டிருக்கிறது. அந்நாளில் சங்கர் கணேஷ், தேனிசை தென்றல் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் என்று ரசிக்கத் தக்க பல இசையமைப்பாளர்கள் தமிழில் அவ்வப்போது பெரும்புகழ் பெற்று விளங்கி இருந்தாலும் ரசிகர்களின் எல்லா விதமான உணர்வுகளுக்கும் இசையமைத்த பெருமை ராஜாவைத் தவிர வேறு யாருக்குமே இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை  1000 படங்களுக்கும் மேல் 6000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா. அவற்றில் பாடல்கள் தாண்டி அவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. அதில் மகுடத்தில் பதித்த ஒற்றை ரத்தினம் போல எளிதாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்ல வேண்டுமெனில் அந்தப் படம் ’முதல் மரியாதை’ சிந்தித்துப் பாருங்கள் முதல் மரியாதையில் ராஜாவின் இசை செய்த மாயாஜாலத்தை! 

ஆனால் அந்தப் படத்துக்கு ராஜா சம்பளம் பெறவில்லையாம். காரணம் இந்தப் படம் வெற்றி பெறாது, வெற்றி பெறாத படத்துக்கு எதற்கு சம்பளம்? நட்புக்காக இசை அமைத்ததாக இருக்கட்டும் என்று சொன்னாராம். ராஜாவின் அனுமானத்தை பொய்யாக்கி படம் பெருவெற்றி பெற்றது. காரணம் இசையும் தான். ராஜாவின் ரசிகர்களைக் கேட்டால் இசையால் தான் படம் பெருவெற்றி பெற்றது என்று கூட அடித்துச் சொல்வார்களாய் இருக்கும். இதெல்லாம் ராஜாவுக்கும், (பாரதி) ராஜாவுக்குமான நட்புச் சண்டையாக இருந்து விட்டுப் போகட்டும். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே! வெற்றி பெறாது என்று தீர்மானமாய் நம்பிய ஒரு படத்துக்கும் கூட தரமான பின்னணி இசையையும், பாடலிசையையும் வழங்கத் தயங்காத அவரது அர்ப்பணிப்பு உணர்வைத் தான். மனிதர் முதல் மரியாதையின் பொருந்தாக் காதலுக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பொருத்தமாக இசைக்கோர்வைகளை இணைத்து மகுடிக்கு மயங்கிய அரவங்களாய் இன்று கூட அந்தப் பாடல்களைக் கேட்பவர்களை மதி மயங்கச் செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது பொய்யில்லை.

காலை நேரப் பேருந்து நெரிசலை, மட்ட மத்தியான வியர்வைக் குளியலைப் பொறுக்க மாட்டாத ஆயாசத்தை, மாலை நேரத்தில் கூடடையும் பறவைகளுக்கே உரித்தான மனச்சோர்வை, முயன்றும் நினைத்தது கிட்டாத ஏமாற்றத்தை, கொட்டித் தீர்க்க முடியாத பிரியத்தை, நட்பின் இறுக்கத்தை, பிள்ளைப் பாசத்தை, தாய் மீதான வரையறுக்கவியலாத நேசத்தை, நினைக்கும் தோறும் மனதில் பூ பூக்க வைக்கும் முதற்காதலின் பரிசுத்த உணர்வை என்று ஒவ்வொரு உணர்வுக்காகவும் ராஜா இசையமைத்த  இதுவரையிலான சுமார் 6000 பாடல்களில் எதைச் சொல்ல? எதை விட! என்று தெரியாத திக்குமுக்காடலில் ஒவ்வொருவருக்கும் பெர்சனலாக ஒரு லிஸ்ட் நிச்சயம் இருக்கும். அது அவரவர் கடந்து வந்த சம்பவங்களின் தன்மைகளுக்கு மாறலாம். ஆனால் வயது வேறுபாடுகளே இன்றி சகலருக்கும் பிடித்த பாடல்களே அதிகமிருக்கும். அப்படி நானறிந்த லிஸ்ட் ஒன்றை இங்கே தருகிறேன். 

ராஜாவின் எவர் கிரீன் காதல் பாடல்கள் லிஸ்ட்...

 

  • கேட்டேளே அங்கே அதை பார்த்தேளே இங்கே (பத்ரகாளி)
  • சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை (கவிக்குயில்- பாலமுரளி கிருஷ்ணா)
  • செந்தூரப் பூவே...செந்தூரப் பூவே (16 வயதினிலே)
  • பூவரசம் பூ பூத்தாச்சு, மாஞ்சோலை கிளி தானோ( கிழக்கே போகும் ரயில்)
  • ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ( நெற்றிக்கண்) 
  • காதலின் தீபமொன்று ( தம்பிக்கு எந்த ஊரு)
  • மீண்டும் மீண்டும் வா (விக்ரம்)
  • தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி( தூறல் நின்னு போச்சு)
  • மனசு மயங்கும் மன்மத கானம்( சிப்பிக்குள் முத்து)
  • மெளனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்(சலங்கை ஒலி)
  • தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
  • கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே ( கடலோரக் கவிதைகள்)
  • அடி ஆத்தாடீ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது சரி தானா? (கடலோரக் கவிதைகள்)
  • அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன் (முதல் மரியாதை)
  • செண்பகமே... செண்பகமே... எங்க ஊரு பாட்டுக்காரன்)
  • அந்த மான் எந்தன் சொந்த மான்... (கரகாட்டக்காரன்)
  • காதல் ஓவியம் பாடும் காவியம்...
  • ஆயிரம் தாமரை மொட்டுக்களே...( அலைகள் ஓய்வதில்லை)
  • கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா? (வேதம் புதிது)
  • நான் தேடும் செவ்வந்திப்பூ இது...
  • என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி?
  • சின்னப் பொண்ணு சேலை செண்பகப் பூ போல மலையூர் மம்பட்டியான்)
  • சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? (ஊரு விட்டு ஊரு வந்து)
  • பூ மாலையே தோள் சேரவா... ( பகல் நிலவு)
  • இதழில் கதை எழுதும் நேரமிது ( உன்னால் முடியும் தம்பி)
  • சிங்களத்து சின்னக் குயிலே (புன்னகை மன்னன்)
  • குயிலே... குயிலே பூங்குயிலே (ஆண்பாவம்)
  • எங்க ஊரு காதலப் பத்தி என்ன நினைக்கிறே (புதுப்பாட்டு)
  • வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் (தெய்வ வாக்கு)
  • பேசக் கூடாது... வெறும் பேச்சில் சுகம் (அடுத்த வாரிசு)
  • காதோரம் லோலாக்கு கதை பேசுதடி (சின்ன மாப்பிள்ளை)
  • மாலை என் வேதனை கூட்டுதடி (சேது)
  • சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது( நீ தானே என் பொன் வசந்தம்)


ராஜாவின் மறக்க முடியாத சோகப் பாடல்கள் லிஸ்ட்...

 

 

 

  • உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
  • உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் (அபூர்வ சகோதரர்கள்)
  • ஊரைத்தெரிஞ்சிகிட்டேன் ... உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா (படிக்காதவன்)
  • பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா( பூவே பூச்சுடவா)
  • காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி( வைதேஹி காத்திருந்தாள்)
  • காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ( ஜானி)
  • எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ அறிவாரோ (சேது)
  • சின்னச் சின்ன ரோசாப்பூவே (பூவிழி வாசலிலே)
  • நான் பாடும் மெளனராகம் (இதயக் கோவில்)
  • காதல் என்பது தனி உடமை கற்பு மட்டும் தான் பொது உடமை (பாலை வன ரோஜாக்கள்)
  • நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது 
  • ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி (சின்னப் போவே மெல்லப் பேசு)
  • அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே( சின்ன கவுண்டர்)
  • உள்ளுக்குள்ள சக்க்ரவர்த்தி நான் உருகுற மெழுகுவர்த்தி( பணக்காரன்)
  • பூங்காத்து திரும்புமா... எம் பாட்டை விரும்புமா (முதல் மரியாதை)
  • குயிலப் பிடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் (சின்னத் தம்பி)
  • அண்ணன் என்ன... தம்பி என்ன... நன்றி கெட்ட உலகத்திலே (தர்ம துரை)
  • உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
  • ஒரு வெண்புறா (அண்ணாமலை)
  • சின்னத்தாயவள் பெற்ற ராசாவே(தளபதி)

இப்படி ராஜாவின் கிளாஸிக் பாடல்களைத் தேடத் தேட மடை திறந்த வெள்ளம் போல பாடல்கள் வந்து கொட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. இவற்றில் சிச்சுவேஷன் சாங் என்ற கேட்டகிரியில் சில ரசமான பாடல்கள் பல உண்டு அவற்றில் சில கேட்கும் போதெல்லாம் அந்தந்த சூழலுக்கேற்ப நவரசமான உணர்வுகளை வரவழைப்பவை;

 

கரகாட்டக்காரனில் வரும் “ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க”

சின்னத்தம்பியின் “குயிலப் பிடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்”

பாலைவன ரோஜாக்களில் வரும் “ காதல் என்பது பொது உடமை, கற்பு மட்டும் தானே தனி உடமை”

மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் வரும் “என்னம்மா கண்ணு செளக்யமா?!”

ஊரு விட்டு ஊரு வந்து திரைப்படத்தின் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?”

நெற்றிக்கண்ணில் வரும் “மாப்பிள்ளை மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு”  பாடல்கள் எல்லாம் எல்லா தலைமுறையினருக்கும் பொருத்தமான எவர் கிரீன் சிச்சுவேஷன் பாடல்கள்.

இவை தவிர; 

  • “ஓரம் போ... ஓரம் போ ருக்குமணி வண்டி வருது” ,
  • ”சிங்காரி சரக்கு நல்ல சரக்கு”,  
  • “அண்ணே... அண்ணே சிப்பாயண்ணே நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே”,
  • முள்ளும் மலரும் திரைப்படத்தின் "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே",  
  • நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்”  

போன்ற பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை. ராஜா ரசிகையாக இவற்றுக்கு மாற்றாக இன்னும் பாடல்கள் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்கள் தனிமையில் இருக்கும் போது பாடும் பாடல்களாக சில நூறு ஹிட் பாடல்கள் உண்டு. அனைத்துமே பயணங்களின் போது கேட்க மிக அருமையானவை; அந்த வகையில்;

 

  • உல்லாசப் பறவைகளில் வரும் “ தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்”,  
  • ராஜாதி ராஜாவில் வரும் “மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் அருவி”
  • பரதன் படத்தில் வரும் “ மாலையில் யாரோ மனதோடு பேச”  
  • முள்ளும் மலரும் படத்தின் “ செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்”
  •  உதிரிப் பூக்களின் “அழகிய கண்ணே”
  • நடிகன் படத்தின் “ இவளொரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி” எல்லாம் கிளாஸிக் வகை.

இவற்றில் எதுவும் சோடை இல்லை. ஆனால் இத்தனை ஆயிரம் பாடல்களிலும் ஒரே ஒரு பாடல் கண்டங்கள் தாண்டியும் பல்வேறு நாட்டினரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. அந்தப் பாடல் தளபதி படத்தில் ராஜா இசையமைத்த, 

ராக்கம்மா கைய தட்டு.. புது ராகத்தில் மெட்டுக் கட்டு பாடலே!


 
2003 ஆம் ஆண்டில் பிபிசி நிறுவனத்தார் உலக அளவில் பிரபலமான பாடல்கள் குறித்த ஒரு சர்வே நடத்தினர். சர்வ தேச அளவில் 155 நாடுகளின் மக்கள் கலந்து கொண்டு ஓட்டளித்த இந்தப் போட்டியில் ராஜாவின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலுக்கு 4 ஆம் இடம் கிடைத்தது. சர்வ தேச அளவில் பிரபலமான 10 ஹிட் பாடல்களில் இப்போதும் ‘ராக்கம்மா கையத் தட்டு’ இருக்கிறது.

 

2013 ஆம் வருடம் ‘100 ஆண்டுகால இந்திய சினிமா’ எனும் கலை விழாவுக்காக சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி பொது மக்களிடையே நடத்திய சிறந்த 25 இசையமைப்பாளர்களுக்கான போட்டியில் இளையராஜாவுக்கு கிடைத்தது 9 வது இடம். 

14 வயதில் தனது சகோதரரான பாவலர் வரதராஜனுடன் இணைந்து கம்யூனிஸ மேடைகளில் ஒலிக்கத் தொடங்கிய இளையராஜாவின் இசை அடுத்த பத்தாண்டுகளில் பாவலர் சகோதரர்களின் இன்னிசைக் குழு கச்சேரியாக தென்னிந்தியா முழுவதையும் சுற்றி வந்தது. இளையராஜாவை சினிமாவை நோக்கி நகர்த்திய விசயங்களில் அவர் முதன் முதலாக இசையமைத்த இரங்கற்பாவுக்குத் தான் என்றும் முதலிடம். பண்டித ஜவகர்லால் நேரு இறந்து விட்டார். அவருக்காக கண்ணதாசன் தினத்தந்தி நாளிதழில் ஒரு இரங்கற்பா எழுதினார். அந்தப் பாடலுக்கு 17 வயது ராஜைய்யா இசையமைத்துப் பாடியது தான் இசையமைப்பாளராக அவரது முதல் பங்களிப்பு என்று அவரே ஒரு இசை நிகழ்வில் கூறுகிறார். 

ராஜாவின் குரலில் “சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் வதனம் எங்கே?” எனத் தொடங்கும்  அந்தப் பாடலை இங்கே கேட்கலாம்...

 

சினிமாவுக்கு இசையமைக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்ததும் ராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் முறையாக இசைக்கருவிகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இப்படித் தொடங்கிய இசை கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று லண்டன் ‘ட்ரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில்’  தங்கப் பதக்கம் வென்றார் இளையராஜா. அதுமட்டுமல்ல சர்வ தேச அளவில் சிம்பொனி இசையமைத்த இரு இந்தியர்களில் ஒருவர் எனும் பெருமையும் இளையராஜாவுக்கு உண்டு. முதல் நபர் சிதார் கலைஞரான பண்டிட் ரவி ஷங்கர். 

இத்தனை ஆயிரம் பாடல்களிலும் ராஜாவின் இசையில் அதிகம் பாடியவர்கள் என்ற பெருமை எஸ்.பி.பி க்கும் கே.எஸ்.சித்ராவுக்கும், எஸ்.ஜானகிக்கும் தான் உண்டு. எஸ்.ஜானகியைப் பற்றி கங்கை அமரன் எழுதிய நெடுந்தொடர் ஒன்றில் வாசிக்க நேர்ந்த விசயம், ராஜா இசையமைக்க வந்த ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமாயிருந்த பெண் குரல் பி.சுசீலாவுடயது தானாம். எஸ்.ஜானகியின் குரலில் முதலில் ஈர்ப்பில்லாமல் தான் இருந்திருக்கிறார்கள். பி.சுசிலாவை பாடல்களுக்காக ஒப்பந்தம் செய்ய முடியாமலாகும் போது அவர்களது சாய்ஸ் ஆக இருந்தவர் ஜானகி ஆனால் பிற்பாடு ராஜா, எஸ்.ஜானகி காம்பினேஷனில் வெளியான அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் எவர் கிரீன் ஹிட் அடிக்க திரையிசையுலகைப் பொருத்தவரை ராஜா, எஸ்.ஜானகி ராசியான காம்பினேஷனானது நிதர்சன உண்மை!

ராஜாவின் இசையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதற்கொரு முடிவேது? கிடைத்த அவகாசத்தில், மனதில் சட்டென மேலெழுந்து தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட வெகு சில பாடல்களை மட்டுமே இங்கு நான் பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் ராஜா பாடல்களைப் பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நினைவின் அடியாழங்கள் உண்டு. அப்படி உங்களுக்குப் பிடித்த பாடல்களை நீங்களும் இந்நாளில் இங்கே பகிரலாம். அதுவே ராஜாவுக்கு நிஜமான பிறந்தநாள் வாழ்த்தாகவும் அமையக் கூடும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் மேஸ்ட்ரோ!

http://www.dinamani.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'சத்குருன்னு சொல்லிகிட்டு இருக்கவங்கலாம் சத்குரு கிடையாது': இளையராஜா அதிரடி!

 
 

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை, காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் ரமண மகரிஷி குறித்த பாடலை இளையராஜா பாடினார்.

Ilayaraja


இதையடுத்து இளையராஜா பேசுகையில், 'சத்குருன்னு சொல்லிகிட்டு இருக்கவங்கலாம் சத்குரு கிடையாது. ரமண மகரிஷி ஒருவரே சத்குரு. நான் யாரையும் தவறாக பேசவில்லை. ரமண மகரிஷியின் பெருமையை குறித்துதான் பேசுகிறேன். அவர் ஆடு, மாடுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர். கமல் என் சகோதரர். இதை நான் சொல்வதற்காகவே, நேரில் வந்து வாழ்த்து சொல்லியுள்ளார் அவர். ரஜினி எனக்கு போன் செய்து 'வாழ்த்துகள் சாமி' எனக் கூறினார்', என்றார்.

 

கமல்ஹாசன் பேசுகையில், 'இளையராஜாவின் இசை மூலம் முகவரி கிடைத்தவன் நான். அவரை நேரில் வந்து வாழ்த்தும் பாக்கியம் கிடைத்துள்ளது. இன்னும் 300 ஆண்டுகளுக்கு இளையராஜா இசை இருக்கும். நடிக்க வாங்க என்று அவரை நீண்ட நாள்களாக அழைத்து வருகிறேன். விரைவில் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்', என்று பேசினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91190-llayaraja-slams-sathgurus-on-his-birthday-function.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.