Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!

Featured Replies

ந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன.

முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவட்டத்தில் நடந்தது. அம்மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த ஒரு போராளியைச் சுட்டுக் கொல்வதற்காக வந்த இந்திய இராணுவத்தைத் தடுத்து நிறுத்திய அக்கிராம மக்கள், அப்போராளியைத் தப்ப வைக்கும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களைக் கற்களைக் கொண்டு தாக்கினர். அச்சமயத்தில் இராணுவத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையே நடந்த மோதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் படுகாயமடைந்தனர். கிராம மக்களின் இரத்தத்தில் தனது பூட்ஸ் கால்களை நனைத்த பிறகுதான், அந்தப் போராளியை இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்ல முடிந்தது.

Kashmir-people-protest-3-400x212.jpg

சீறிநகரில் அரசுப் படைகளைக் கல்லெறிந்து விரட்டும் கல்லூரி மாணவர்கள்.

“முன்பெல்லாம் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடக்கும்போது, பொதுமக்கள் அந்த இடத்திலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இப்பொழுதோ பொதுமக்கள் தீவிரவாதிகளின் கேடயமாக மாறி, இராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள்” என இப்புதிய நிலைமையைப் பற்றி பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி குறிப்பிடுகிறார்.

இரண்டாவது சம்பவம், ஏப்ரல் மாதத்தில் சிறீநகர் மற்றும் ஆனந்த்நாக் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களையொட்டி நடந்தது. 35,000 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள சிறீநகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு 17,000 சிப்பாய்களை இறக்கியிருந்தது, இந்திய அரசு. தேர்தலுக்கு முதல்நாள் இணைய தள சேவையும் அரசால் தடை செய்யப்பட்டது. ஆனாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 9 அன்று சிறீநகர் இடைத்தேர்தலை “அமைதியான” முறையில் நடத்தி முடிக்க முடியவில்லை. அத்தேர்தலை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் ஏப்ரல் 9 அன்று நடந்த சிறீநகர் இடைத்தேர்தலில் வெறும் ஏழு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. அத்தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 12 அன்று நடத்தப்பட்ட மறுவாக்குப் பதிவில் வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 28 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை. “காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட, இவ்வளவு குறைவான வாக்குகள் பதிவானதில்லை” எனக் குறிப்பிட்டுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர்கள், “இத்தேர்தல் புறக்கணிப்பு 1989 காலகட்டத்திலிருந்து வேறுபட்டது, காஷ்மீர் முசுலீம்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு” எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

Kashmir-people-protest-6-400x269.jpg

சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது, ஓட்டுப்போட ஒருவர்கூட வராமல் வெறிச்சோடிப் போன ஒரு வாக்குச்சாவடி.

90 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறீநகர் இடைத்தேர்தல் முடிவும்கூட, அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணிக்கு எதிரானதாகவே அமைந்தது. அத்தேர்தலில் காங்கிரசு-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளரான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். ஆனந்த்நாக் இடைத்தேர்தலில் இதைவிடத் தீவிரமான எதிர்ப்பையும், தோல்வியையும் ஆளுங்கூட்டணி சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில், மோடியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக இடைத்தேர்தலையே காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டது, இந்தியத் தேர்தல் ஆணையம்.

இவ்விரண்டு சம்பவங்களைக் காட்டிலும், ஏப்ரல் 24 அன்று சிறீநகரில் நடந்த கல்லூரி, பள்ளி மாணவிகளின் போராட்டம்தான் ஆளுங்கும்பலையும் தேசியவாதிகளையும் திகைப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு மாணவி, தனது ஒரு கையில் கூடைப்பந்தையும், இன்னொரு கையில் கல்லையும் ஏந்தியிருந்தார். அப்போராட்டத்தில் கற்களைக் கையில் ஏந்தியிருந்த ஒவ்வொரு மாணவியின் முதுகிலும் புத்தகப் பை இருந்தது. “கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?” என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, “நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்” என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சிறீநகர் மாணவிகள் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி புல்வாமா கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டமாகும். கடந்த ஏப்ரல் 12 அன்று புல்வாமா அரசுக் கல்லூரிக்குள் நுழைந்து சோதனையிட முயன்ற இராணுவத்தை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கண்ணீர் புகை குண்டுகளையும், பாவா (PAVA) என அழைக்கப்படும் மூச்சைத் திணறச் செய்யும் குண்டுகளையும் கொண்டு மாணவர்களைத் தாக்கிய அரசுப் படைகளை, அவர்கள் கற்களைக் கொண்டு தடுத்து நிறுத்தினர்.

இராணுவத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த அம்மோதலில் 40 மாணவிகள் உள்ளிட்டு, 64 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிவரச் சென்ற அவசர ஊர்தியின் ஓட்டுநர், “எனது வண்டி கல்லூரிக்குள் நுழைவது போல எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஒரு போர்க்களத்திற்குள் நுழைந்தது போல இருந்தது” என்கிறார். இந்திய இராணுவம், கல்லூரி மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலின் தீவிரத்தையும் கொடூரத்தையும் அந்த ஓட்டுநரின் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிறீநகர், பந்திபோரா, பாரமுல்லா, ஆனந்த்நாக், புல்வாமா, குப்வாரா, குல்காம், சோபியன் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத மாநில அரசு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளித்து, மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இறங்கியது.

Kashmir-people-protest-2-400x257.jpg

சிறீநகரிலுள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு மேநிலைப் பள்ளி மாணவிகள் லால் சௌக் பகுதியில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து நடத்திய போர்.

ஆனால், கல்லூரிகள் திறக்கப்பட்ட ஏப்ரல் 24 அன்றே சிறீநகரிலுள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் அரசு மேநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டத்தில் இறங்கி, மாநில அரசின் முகத்தில் கரியைப் பூசினர். இந்தப் போராட்டத்தைத் தடுக்க முயன்ற பேராசிரியர்களை, “நீங்கள் மாடா, இல்லை மனுசங்களா?” என எதிர்த்துக் கேட்டு, மாணவிகள் நையாண்டி செய்துள்ளனர்.

கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசைக் கற்களைக் கொண்டு தாக்கிப் பின்வாங்கச் செய்த மாணவிகள், போலீசின் கவச வாகனங்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். அன்று, சீறிநகரின் புகழ்பெற்ற லால் சௌக் பகுதி முழுவதும் போராடிய மாணவிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறுகிறார்கள், அப்பகுதி வணிகர்கள்.

கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளம் வயது போராளி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த காஷ்மீர் மக்களின் கலகம் இன்னமும் தணிந்துவிடவில்லை. இக்கலகத்தை ஒடுக்க ஜூலை 2016 தொடங்கி டிசம்பர் 2016 முடியவுள்ள ஆறு மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் முசுலீம்களின் மீது 1,60,000 கண்ணீர்ப் புகை குண்டுகளும், பாவா குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இவையல்லாமல், பல இலட்சம் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பெல்லட் குண்டுகள் தாக்கி கண்பார்வையை இழந்துபோனவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தைத் தாண்டுகிறது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இத்துணைக்கும் பிறகுதான் மேலே கூறப்பட்டுள்ள மூன்று சம்பவங்களும் நடந்துள்ளன.

Kashmir-people-protest-1-400x222.jpg

புர்ஹான் வானி இறுதி ஊற்வலம்

“காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை எல்லாத் திசைகளிலும் நசுக்கி வருகிறது, அரசு. இந்த நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, எங்களால் எப்படி ஒதுங்கிப் போய்விட முடியும்? காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனக் கூறுகிறார் பன்னிரெண்டாவது படிக்கும் ஒரு மாணவி. இந்திய அரசுக்கு எதிரான வெறுப்பையும் விடுதலை வேட்கையையும் கொண்ட இந்த மாணவர்களை, இளைஞர்களை வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களைக் கொண்டோ, துப்பாக்கி தோட்டாக்கள், பெல்லட் குண்டுகள், கருப்புச் சட்டங்கள், சிறை தண்டனை – என நீளும் அடக்குமுறையின் மூலமோ வீழ்த்திவிட முடியாது என்பதை இந்திய ஆளுங்கும்பல், குறிப்பாக மோடி அரசு உணர மறுக்கிறது.

மாறாக, இந்தியாவின் மீது இன்னமும் கொஞ்சநெஞ்சம் நம்பிக்கை வைத்திருப்பவர்களையும்கூடத் தமது அடக்குமுறையின் மூலமாக போராளிகள் பக்கம் தள்ளிவிடும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறது. அதற்கு உதாரணமாக இருப்பவர்தான் 26 வயதான பரூக் அகமது தர்.

இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறீநகர் இடைத்தேர்தலில் வாக்களித்த 7 சதவீத காஷ்மீர் முசுலீம்களுள் பரூக் அகமது தர்ரும் ஒருவர். வாக்களித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பரூக் அகமது தர்ரைப் பிடித்த இந்திய இராணுவச் சிப்பாய்கள், அவரைத் துப்பாக்கியாலும், தடிகளாலும் மயங்கிச் சரியும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். அரை மயக்க நிலையில் இருந்த அவரை, ஒரு இராணுவ ஜீப்பின் முன்பகுதியில் உட்கார வைத்து, இறுகக் கட்டி, “இராணுத்தின் மீது கல்லெறிபவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்” என ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்துகொண்டே இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவமானப்படுத்தி, பீதியூட்டி அதன் பிறகு விடுவித்திருக்கிறது, இந்திய இராணுவம்.

Kashmir-people-protest-5-400x300.jpg

இந்திய இராணுவத்தின் அட்டூழியம்: ஜீப்பில் கட்டி வைத்து இழுத்துச் செல்லப்படும் பரூக் அகமது தர்.

இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்துபோய், தனது வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பரூக் அகமது தர், “நான் செய்த குற்றமென்ன?” எனப் புலம்பி வருகிறார். காஷ்மீரியாக, அதுவும் முசுலீமாக இருப்பதே குற்றம் எனக் கொக்கரிக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

மோடி அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, “காதலிலும் போரிலும் அத்துமீறல்களெல்லாம் வாடிக்கையாக நடப்பதுதான்” என அலட்சியமாகப் பதில் அளித்து, பரூக் அகமது தர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்துகிறார்.

இந்திய இராணுவம் கடந்த முப்பது ஆண்டுகளாக காஷ்மீர் முசுலீம்களுக்கு இழைத்திருக்கும் அநீதிகளைக் கண்டிக்கவோ, அதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீரி முசுலீம்களுக்கு நீதி வழங்கவோ தயாராக இல்லாத உச்ச நீதிமன்றம், கற்களைக் கீழே போடுமாறு காஷ்மீர் இளைஞர்களுக்குக் கட்டளையிடுகிறது. பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக வேறு எந்தச் சனியனைக் கொண்டு காஷ்மீர் இளைஞர்களை அடக்கி ஆளலாம் என மூளையைக் கசக்கி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். வானரப் படையைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியோ இன்னும் ஒருபடி மேலே சென்று, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் முசுலீம்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முகாம்களில் அடைக்க வேண்டும் எனக் கூறி, இட்லரின் யூத அழித்தொழிப்பை நினைவுபடுத்துகிறார்.

ஜம்முவிலுள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் ராகேஷ் குப்தா, முசுலீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கத்தோடு,  ஜம்முவில் குடியேறியிருக்கும் வங்கதேச மற்றும் பர்மிய முசுலீம்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்லுமாறு அறிவிக்கிறார்.

Kashmir-people-protest-4-400x293.jpg

பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரி முசுலீம்கள். (கோப்புப் படம்)

இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மேவார் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் காஷ்மீர் மாணவர்களுள் ஆறு பேர் உள்ளூர் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர்களைத் தீவிரவாதிகள் எனப் பழிபோட்டு அவமானப்படுத்திய அக்கும்பல், படிப்பைக் கைவிட்டு காஷ்மீருக்கு ஓடிப்போய்விடுமாறு மிரட்டியிருக்கிறது.

உ.பி. மாநிலத்தின் மீரட் நகரில், உத்தரப் பிரதேச நவ நிர்மாண் சேனா என்ற இந்து மதவெறி அமைப்பு, ஏப்ரல் 30-க்குள் அந்நகரத்தில் படித்துவரும் காஷ்மீர் மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரித்தும், காஷ்மீரிகளைப் புறக்கணிக்குமாறு உள்ளூர் இந்துக்களைத் தூண்டிவிட்டும் பிரச்சாரத் தட்டிகளைக் கட்டி வைத்திருக்கிறது.

இந்திய இராணுவத்தின் கீழ்த்தரமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட ஜனநாயக, குடியுரிமைகளுக்காகவும் போராடி வரும் காஷ்மீர் முசுலீம்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள் எனப் பலவாறாக அவதூறு செய்து கொச்சைப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் பிற மாநில மக்களிடம் அவர்கள் மீது வெறுப்புணர்வைத் திட்டமிட்டு வளர்த்து வருகிறது, இந்திய ஆளுங்கும்பல்.

காஷ்மீர் முசுலீம்களும் மாணவர்களும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ முடியாது, கல்வி பயில முடியாது என்றால், இந்திய அரசு காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கு, அதனை அடக்கி ஆளுவதற்கு என்ன தகுதியும் உரிமையும் இருக்கிறது? தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீர் முசுலீம்களின் வாழ்வுரிமையைக் காலில் போட்டு மிதித்துவரும் இந்திய அரசுக்கும், அதனின் சட்டங்களுக்கும், இராணுவம் உள்ளிட்ட அதனின் நிறுவனங்களுக்கும் அவர்கள் ஏன் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்?

தற்போது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.-பி.டி.பி. கூட்டணியைத் துரோகத்தின் மறுஉருவாகவே கருதி வெறுக்கிறார்கள், காஷ்மீரி முசுலீம்கள். ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், இன்னொருபுறம் – ஜம்மு காஷ்மீரில் பசுவதைச் சட்டத்தை அமல்படுத்துவது, காஷ்மீரி தேசியக் கொடியை ஒழித்துக் கட்டுவது, ஜம்முவைச் சேர்ந்த மேல்சாதி பார்ப்பன பண்டிட்டுகளுக்கும் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கும் தனி காலனிகளை உருவாக்குவது ஆகிய திட்டங்களின் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்துமயமாக்குவதன் மூலமும் காஷ்மீரை இந்தியாவின் நிரந்தரக் காலனியாக வைத்துக் கொள்ள முடியும் என மனப்பால் குடிக்கிறது, மோடி கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்தத் திட்டங்கள், கடந்த சில ஆண்டுகள் “அமைதியாக” இருந்த காஷ்மீரை எழுச்சியின் எல்லைக்குத் தள்ளிச் சென்றுவிட்டது. “தீவிரவாதிகளின்” கோரிக்கையாக இருந்த விடுதலைக் கோரிக்கையை, பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் உடனடி அரசியல் கோரிக்கையாக மாற்றிவிட்டது. சிறீநகர் தொகுதி தேர்தல் புறக்கணிப்பும், இளைஞர்கள்-மாணவர்கள் நடத்திவரும் கல்லெறி போராட்டங்களும் இந்த மாற்றத்தின் சாட்சியங்களாக உள்ளன.

-செல்வம்
புதிய ஜனநாயகம், மே 2017

 

http://www.vinavu.com/2017/05/30/teen-girls-with-stone-against-indian-army/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.