Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாறுகிறது

 

 

இலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களைக் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறுகின்றது.

india-cricket.jpg

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்று ஆரம்பமாகியது. அதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைப் பெற்றது. தவான் 119 ஓட்டங்களையும் ராகுல் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சகா 13 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். 

 

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய சகா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ஓட்டங்களுடனும், முகமது சமி 8 ஓட்டங்களுடனம் ஆட்டமிழந்தனர். 

 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ரன்கள் குவித்தது. 

உணவு இடைவேளைக்கு முன்னர் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து டில்ருவான் பெரராவிடம் பிடி கொடுத்து 96 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில்  அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். 

இதையடுத்த இந்திய அணி தனது முதல்  இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

 

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லக்‌ஷ்ன் சந்தகன் 5 விக்கெட்களையும் மிலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்களையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.

http://www.virakesari.lk/article/23117

  • Replies 54
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் சுருண்ட இலங்கை..!

 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

i_17358.jpg

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கொழும்புவில் நடந்த 2 வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. கண்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

 

தவான் மற்றும் பாண்டியாவின் சதத்தால் இந்திய அணி 487 ரன்கள் என்ற வலுவான இலக்கை அடைந்தது. அடுத்து பேட் செய்த இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 15 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. கருணாரத்ன மற்றும் மலிண்டா புஷ்பாகுமாரா ஆகியோர் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/99004-sri-lanka-only-got-135-runs-in-1st-innings.html

  • தொடங்கியவர்

பாண்டியா அதிரடி, குல்தீப் அபாரம்; இலங்கை பாலோ ஆன்: 3-வது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

 

 
kuldeep

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவுக்கு பாராட்டு.   -  படம்.| ஏ.எஃப்.பி.

பல்லகிலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 487 ரன்களை எதிர்த்து இலங்கை தன் முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட முடிவில் இலங்கை அணி பாலோ ஆனில் தரங்கா விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

காலையில் 329/6 என்று களமிறங்கிய போது 1 ரன்னில் இருந்த ஹர்திக் பாண்டியா அதிரடி சதம் விளாசி 86 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து பிறகு 96 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தன் பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 122.3 ஓவர்களில் 487 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நல்ல வேளையாக ஆல் அவுட் ஆனது, இல்லையெனில் விராட் கோலி நிச்சயம் 600 ரன்கள் அல்லது பாண்டியா 200 என்று டிக்ளேருக்கு காத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய போது மொகமது ஷமி அபாரமாக வீசினார், உமேஷ் யாதவ்வும், இவரும் தொடர்ந்து இலங்கை தொடக்க வீரர்களான கருண ரத்ன, தரங்காவை அதிகபந்துகளை மட்டையில் விளையாடச் செய்தனர், நன்றாக ஸ்விங் செய்தனர், பந்துகளை மட்டையில் ஆடிக் கொண்டேயிருந்தால் ஒரு பந்தை வெளியே போடும்போது பந்தை ஆட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுபோல்தான் தரங்கா 5 ரன்களில் ஷமி வீசிய உள்ளே வந்த பந்தை அதிக ஸ்விங்குக்காக எதிர்பார்த்து ஆடினார் எட்ஜ் ஆனது சஹா வலது புறம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஆனால் இதைப்போய் தரங்கா ரிவியூ செய்து இலங்கை அணிக்கு ஒரு ரிவியூவையும் காலி செய்தார், மிக மோசமான ரிவியூ.

ஷமி தொடர்ந்து பேட்ஸ்மென்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக வீசினார், கருணரத்ன 4 ரன்களில் இருந்த போது தரங்கா போலவே கூடுதல் ஸ்விங்குக்காக எதிர்பார்த்து வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டார், ஆனால் அது அவ்வளவாக ஸ்விங் ஆகவில்லை, எட்ஜ் ஆனது மீண்டும் சஹா. கிட்டத்தட்ட தரங்காவும் இவரும் ஒரே பாணியில் ஷமியிடம் வீழ்ந்தனர், ஷமி அபாரமாக அவர்கள் அணுகுமுறையை தன்வசமாக்கினார் என்றே கூற வேண்டும்.

மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 18 ரன்கள் என்று நம்பிக்கையுடன் ஆடிவந்த தருணத்தில் அஸ்வினின் அருமையான பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார். அதாவது லெக் திசையில் அஸ்வின் முதலில் நன்றாக பீல்ட் செய்து த்ரோ செய்தார் பந்து ஸ்டம்பில் படாமல் தாண்டிச் சென்றது, ஆனால் கவரில் பந்தைப்பிடித்த குல்தீப் யாதவ் ரன்னர் முனையில் அடிக்க மெண்டிஸ் ரீச் ஆகவில்லை.

அஞ்சேலோ மேத்யூஸ் தன் எண்ணிக்கையைத் தொடங்க்கும் முன்னரே இன்றைய நாயகன் பாண்டியாவின் இன்ஸ்விங்கரில் பீட் ஆகி கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஆனால் இவர் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் பயனில்லாமல் போயிருக்கும், இது பிளம்ப் எல்.பி. இலங்கை 38/4 என்று சரிந்தது.

அதன் பிறகு சந்திமால், டிக்வெல்லா இணைந்து ஸ்கோரை 101 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். டிக்வெல்லா 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் என்று நன்றாகவே ஆடினார், ஆனால் குல்தீப் யாதவ் வீசிய கூக்ளியை இறங்கி வந்து அடிக்க முயன்றார் பந்து திரும்பியதால் மட்டையில் சிக்கவில்லை, மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்தது சஹா சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். 101/4 என்ற நிலையிலிருந்த் டிக்வெல்லா விக்கெட்டுடன் சரிவு தொடங்க அடுத்த 34 ரன்களுக்கு இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுக்குக் காலியானது. அதிகபட்ச ஸ்கோரை எடுத்த சந்திமால் 87 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் பந்தை சரியாக ஆடாததால் பந்து மட்டையில் பட்டு, கால்காப்பில் பட்டு லெக் கல்லியில் கேட்ச் ஆனது.

பெரேரா ஷார்ட் பிட்ச் பந்தை குல்தீப் யாதவ் வீச மிட்விக்கெட்டில் நேராக பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, புஷ்பகுமாரா 10 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மிகவும் ஸ்மார்ட் கேப்டன்சியில் குல்தீப் யாதவ்வுக்கு சிலி பாயிண்டைக் கொண்டு வர கவர் திசை காலியானவுடன் குல்தீப் பந்தை டிரைவ் ஆட முயன்றார், பந்து கூக்ளி ஆனது ஸ்டம்பை பதம் பார்த்தது, இது அருமையான கேப்டன்சி, அதைப் புரிந்து கொண்ட சமயோசித பந்து வீச்சு. 37.4 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

352 ரன்கள் முன்னிலை பெற்றதால் இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தார் விராட் கோலி. ஆட்ட முடிவில் உமேஷ் யாதவ் பந்தில் தரங்கா (7) பவுல்டு ஆக கருணரத்ன 12 ரன்களுடனும், இரவுக்காவலன் புஷ்பகுமாரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர், இலங்கை 19/1 என்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் நிலையில் உள்ளது. 3 நாட்களில் டெஸ்ட் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் இன்னிங்சில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பாண்டியா 1 முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article19486031.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கையை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது இந்தியா

 

 

 

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 

Local_News.jpg

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 க்கு 0 என வெள்ளடிப்பு செய்து சொந்த மண்ணில் இலங்கை அணியை வெற்றி கண்டுள்ளது.

பல்லேகல சர்வதேச விளையாட்டுத் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், பலோ ஒன் முறையில் தனது 2ஆம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இதேவேளை, முதல் இன்னிங்சில் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23148

  • தொடங்கியவர்

இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

 

indian%20teamjpg
winners%20trophyjpg
indian%20teamjpg
winners%20trophyjpg

பல்லகிலேயில் நடைபெற்ற 3வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய, இந்திய அணி முதல் முறையாக அயல்நாட்டுத் தொடரில் 3-0 என்று எதிரணியினரை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் நியூஸிலாந்தில் 1967-68 தொடரில் இந்திய அணி நியூஸிலாந்தை, நியூஸியில் 3-1 என்று வெற்றி பெற்றபோது ஒரு தொடரில் 3 டெஸ்ட்களை வென்றிருந்தது, இது 2-ம் முறை ஆனால் இது ஒயிட்வாஷ் என்பது சாதனையாகும்.

முதல் இன்னிங்சில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தது. மொகமது ஷமி, அஸ்வின் ஆகியோரது உயர்தரப் பந்து வீச்சினால் இலங்கை அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது.

திமுத் கருணரத்னே இன்று முதல் விக்கெட்டாக வெளியேறினார். 3-வது ஓவரை அஸ்வின் வீச ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் நல்ல அளவில் பிட்ச் ஆகி சற்றே எழும்பியது, கிரீசில் ஒட்டிக் கொண்டிருந்த கருணரத்னே காலை நகர்த்தாமல் தன்பாட்டுக்குச் சென்ற பந்தைப் போய் இடித்தார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

முன்னணி பேட்ஸ்மென்களே ஆட முடியாமல் திணறி வரும் நிலையில் இரவுக்காவலன், பவுலர் புஷ்பகுமாரா என்ன செய்ய முடியும்? ஷமி அவரைப் பாடாய்ப்படுத்தினார். கடைசியில் ஒரு பந்தை எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பது போல் வெளியேறினார்.

நம்பிக்கை நட்சத்திரம் குசல் மெண்டிஸ் களமிறங்கி பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விரும்பினார், ஆனால் தவறான ஷார்ட் தேர்வாக முடிந்தது. அதாவது அஸ்வினை ஸ்வீப் ஆடி ஆதிக்கம் செலுத்த அவர் முனைந்தார், ஆனால் அஸ்வின் லேசுபட்டவரா என்ன? தொடர்ந்து பந்தின் வேகத்தில், கோணத்தில், பிட்ச் செய்யும் இடத்தில் மாற்றங்களை நிகழ்த்தி குசல் மெண்டிஸை செட்டில் ஆக விடாமல் படுத்தினார் அஸ்வின். இவ்வாறு அஸ்வினிடம் 16 பந்துகள் சிக்கித் தவித்த குசல் மெண்டிஸ், மொகமது ஷமியின் ஒரு அரிதான ஷார்ட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தை பேசாமல் ஆடுவதை விடுத்து ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து ஆட முயன்றார், ஷமி பார்த்து விட்டார், வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு செல்ல பிளிக் ஆட முயன்றார் மெண்டிஸ் பந்து கால்காப்பைத் தாக்க உடனேயே ராட் டக்கர் கையை உயர்த்தினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே இந்தப் பந்து சென்றிருக்கும் என்று ஹாக் ஐ காட்டினாலும் கடைசியில் நடுவர் தீர்ப்பே வென்றது, இதனால் மெண்டிஸ் ரிவியூ செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய இலங்கை வீரரில் கேப்டன் சந்திமால் தனியாகத் தெரிந்தார், இந்த இன்னிங்ஸிலும் அவர் உமேஷ் யாதவ்வை இரண்டு அபார பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அஸ்வின் பவுலிங் இவருக்குப் புரியவில்லை, ஸ்வீப் ஷாட்டை தவிர உலகில் வேறு ஷாட்களே இல்லை என்பதுபோல் ஆடினார், ஒரே ஓவரில் இருமுறை வலுவான எல்.பி. முறையீடு எழுந்தது. சந்திமாலும் மேத்யூஸும் மேலும் சேதமின்றி உணவு இடைவேளை வரை 82/4 என்று ஸ்கோரை வைத்தனர். இருவரும் இணைந்து 27 ஓவர்களில் 65 ரன்களைச் சேர்த்தனர். அஸ்வினை ஸ்வீப் ஆடுவதை விடுத்து இறங்கி வந்து ஆட முயன்றார் சந்திமால் ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. இருமுறை மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது.

கடைசியில் 89 பந்துகள் போராடி 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த சந்திமால் குல்தீப் யாதவ்வின் திரும்பி எழும்பிய பந்தை ஷார்ட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்த மேத்யூஸ், அஸ்வினின் ஃபுல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆனார்.

உடனேயே திலுருவன் பெரேரா, அஸ்வின் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

7 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இன்னிங்ஸை விரைவில் முடிக்க கோலி வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்தார். ஷமி பந்தில் சண்டகன்வெளியேறினார், டிக்வெல்லா 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் என்று நன்றாக ஆடிய நிலையில் அஜிங்கிய ரஹானேயின் அருமையான கேட்சுக்குஉமேஷ் யாதவ்விடம் அவுட் ஆகி வெளியேறினார். குமாராவை அஸ்வின் வீழ்த்தி இந்தத் தொடரில் தன் விக்கெட் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவணும் தேர்வு செய்யப்பட்டனர்.

http://tamil.thehindu.com/sports/article19491468.ece

 

 

 

இந்த வெற்றி அணியின் உண்மையான வலுவை பிரதிபலிக்கிறதா? - அப்படியல்ல என்கிறார் கோலி

 

 
kohli

டெஸ்ட் தொடரை வென்ற டிராபியுடன் கேப்டன் விராட் கோலி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

இலங்கை அணியை அதன் மண்ணில் ஒயிட்வாஷ் செய்ததையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் வலு, பந்து வீச்சு, பேட்டிங் என்று அனைத்தைப் பற்றியும் விராட் கோலி விரிவாகப் பேட்டியளித்தார்.

அதன் ஒருசில பகுதிகள் இதோ:

இந்த வெற்றி இந்திய அணி எவ்வளவு வலுவுடன் உள்ளது என்பதை பிரதிபலிக்கிறதா?

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடினோம். அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் வென்றோம். பிட்சின் தன்மையும் ஒரு பெரிய காரணி என்பதையும் மறக்கலாகாது. 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றிருந்தால் நிச்சயம் நாம் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்போம். எனவே இத்தகைய விஷயங்களையும் கணக்கில் எடுத்து கொண்டு பெரிய பின்புலத்தில் இதனை யோசிக்க வேண்டும். இப்படிப்பார்க்கும் போது 3-0 என்று வெற்றி பெற நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினோம் என்பதே முக்கியம். எதிரணியின் மீது சீராக அழுத்தத்தைச் செலுத்தினோம், இந்த்த் தொடரில் பெரும்பாலான செஷன்களில் ஆதிக்கம் செலுத்தினோம். இதுதான் க்ளீன் ஸ்வீப்புக்கு இட்டுச் சென்றது. இது ஒரு அணியாக எங்களுக்கு நிறைய பெருமை சேர்க்கிறது.

ஹர்திக் பாண்டியா இன்னிங்ஸ் பற்றி...

ஹர்திக் பாண்டியா ஆடிய இன்னிங்ஸ் எதிரணியினரின் மனநிலையை மாற்றியது, அவர்கள் 100 ரன்கள் அதிகம் கொடுத்து விட்டோம் என்று கூடுதல் அழுத்தத்தே ஏற்றிக் கொள்ள ஹர்திக் பாண்டியா வித்திட்டார். 320/6 என்ற நிலையிலிருந்து 487 ரன்கள் என்பது எதிரணியினரின் மனநிலையில் ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பாண்டியா பற்றி வேறு எதுவும் நான் புதிதாகக் கூற விரும்பவில்லை. அவரது ஆட்டம் அவரைப்பற்றி அதிகம் பறைசாற்றுகிறது. வெளியில் அவர் எப்படிப்பார்க்கப்படுகிறார் என்பதில் பிரச்சினையில்லை, ஆனால் அணியாக அவர் மீது எங்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர் சுதந்திரமாக தன்னை பேட்டிங்கில், களத்தில் வெளிப்படுத்திக் கொள்ளட்டும். நம்பர் 8-ல் இறங்கி முதல் 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம், ஒரு அதிரடி சதம் என்பது அவரிடம் சிறப்பான திறமை இருப்பதையே அறிவுறுத்துகிறது. அவர் கண்டபடி மட்டையை சுழற்றவில்லை. அவர் மூளையைப் பயன்படுத்தி ஆடினார், அதுவும் பின்கள வீரர்களுடன் ஆடியது என்பது மிகமிக நல்ல அறிகுறி. அவர் அணியில் சமச்சீர் நிலையைக் கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு துல்லியமான பீல்டர், பவுலிங்கில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார். பேட்டிங்கில் அவரால் என்ன முடியும் என்பதைப் பார்த்தோம். வெளியிலிருந்து எழும் ஐயங்களை விடுவோம் எங்கள் மத்தியில் அவரிடம் 120% நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர் பற்றி...

இந்தத் தொடர்கள் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதில் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை. எந்த அணிக்கு உத்வேகம் இருக்கிறதோ அது வெற்றி பெறும். இரு அணிகளுமே சிறந்த கிரிக்கெட்டை ஆடும் போது அது விறுவிறுப்பான தொடராக மாறுகிறது. தென் ஆப்பிரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் 4 மாதங்களாக இங்கிலாந்தில் உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து அங்குதான் உள்ளனர், இது அவர்கள் மனதில் நிலைத்திருந்ததாக அவர்களே கூறியுள்ளனர். எனவே இத்தகைய விஷயங்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார் கோலி.

http://tamil.thehindu.com/sports/article19492618.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.