Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்லைப்பிட்டி: குருதியில் குளித்த பூமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By: அருள்

Courtesy: விடுதலைப் புலிகள்

11.08.2006 - வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணி.

முகமாலையிலும், அதனை அண்டிய இடங்களிலும் உள்ள சிறிலங்கா இராணுவ முன்னரங்கக் காவலரண் பகுதிகளில் இருந்து இராணுவம் வன்னிப்பகுதியை நோக்கி வலிந்தவொரு தாக்குதலைத் தொடுத்தது. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள படையினருடன் மேலதிக படையினரையும் இணைத்து, இப்பகுதிக்கு நகர்த்தி, வழமையான பாணியில் இத் தாக்குதலை இராணுவம் ஆரம்பித்து, வழிநடாத்திக்கொண்டிருந்த போது வலிந்தெடுத்த களமுனைக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அல்லைப்பிட்டிக் குக்கிராமத்தினை ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினரும் தம்பாட்டிற்கு வன்னிப்பகுதியை நோக்கி எறிகணைகளை கண்டபடி ஏவிய வண்ணம் இருந்தனர்.

நேரஞ்செல்ல மண்கும்பான், மண்டைதீவு தெற்குக் கடற்கரையோரங்களில் தளம் அமைத்திருக்கும் கடற்படையினரும் தீவீரமாக வன்னிப்பகுதியை நோக்கி எறிகணைகளை ஏவத்தொடங்கினர். இந்நேரம் கடற்பகுதியிலிருந்தும் குண்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின.

இவ்வேளை யாழ் இராணுவ கட்டளை அதிகாரியினால் பிறப்பிக்கப்பட்ட யாழ் குடா நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தினை அரச வானொலி அறிவித்துக்கொண்டிருக்க, விடுதலைப்புலிகள் தங்கள் வானொலி மூலம் தென்மராட்சி உட்பட யாழ் நகரை அண்டிய சில கடற்கரைப்பகுதி மக்களையும் மண்டைதீவு, அல்லைப்பிட்டிக் கிராம மக்களையும் இராணுவ முகாம்களிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் விரைவாக விலகிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு விநயமாகவும், அவசரமாகவும் அடிக்கடி வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தனர்.

இவ்வானொலி ஒலிபரப்பை இராணுவ பிரசன்னம் சற்றுக் குறைவான பகுதியில் வசிப்பவர்களாலேயே கேட்கமுடிந்தது. இதற்கமைய எங்கே போவது? எப்படிப் போவது? போன்ற சஞ்சலமான வினாக்கள் மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுப் பிய்த்துக்கொண்டிருந்தன. மூன்று பக்கமும் கடல்களால் சூழப்பட்ட மிகவும் ஒடுங்கிய நிலப்பரப்பை அமைவாகக் கொண்ட அல்லைப்பிட்டிக் கிராமத்தின் கடற்கரையோரங்களில் கடற்படை குந்தியிருக்கின்றது. தரையாக உள்ள ஒரேயொரு பக்கத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் வீதிக் காவலில் கடற்படை ஈடுபட்டிருக்கின்றது. போதாக்குறைக்கு இரவு நேரங்களில் படையினர் பற்றைக் காடுகள், பனங்கூடல்களுக்குள் பதுங்கி இருப்பார்கள். இந்நிலையில் எப்படி வெளியேறுவது? பொறிக்குள் அகப்பட்டவர்களாய் அக்கிராம மக்கள் ஏக்கமும் பயமும் குடிகொள்ள செய்வதறியாது பிரமையிலிருந்தனர்.

இவ்வருடம் ‘மே’ மாதம் குஞ்சு குழந்தைகள் உட்பட ஒன்பது பேரைக் கடற்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின் இரவு நேரத்தை ஊரிலுள்ள சென் பிலிப்புநேரியார் தேவாலயத்தில் கழித்து வந்த இக்கிராமத்தின் பெரும்பாலானோர்; அன்றைய பொழுதையும் வழமைபோல அங்கேயே கழிப்பதற்கு குழுமியிருந்தனர். இவர்கள் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தினால் விடுதலைப்புலிகளின் வானொலி ஒலிபரப்பை நீண்ட நாட்களாக செவிமடுக்க முடியாத நிலையிலுள்ளவர்கள். ‘மே’ மாதப் படுகொலையின் பின்னர் கடற்படை மக்களுக்குத் தாம் பாதுகாப்பு அளிப்பதாக மாயங்காட்டி, கபடநோக்கில் மிகச் சிறிய இவ்வூரைப் பலதுண்டுகளாக்கி ஒவ்வொன்றையும் சுற்றி இராணுவ வேலியை ஏற்கனவே அமைத்திருந்தது.

திட்டமிட்டு சாதுரியமாக விரிக்கப்பட்ட இச் சதி வலையினால் அசாதாரண வேளைகளில் ஒருபகுதி மக்கள் மறுபகுதியினருக்கு இத்தகைய செய்திகளை தெரிவிதுக் கொள்ளவோ, பாதுகாப்புக் கருதி வெளியேறவோ முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர். இக் காரணத்தினால் விடுதலைப்புலிகளின் அன்றைய வேண்டுகோளை அறிந்தவர்கள் கூட அதை மறுபகுதியினருக்குத் தெரிவிக்க முடியாதவர்களாய் இருந்தனர். தொலைபேசிகள் கூட துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் பெரும்பான்மையோர் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

ஆயினும் ஏவப்படும் செல் வீச்சுக்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு தாமாகவே விலகிக்கொள்ள ஆலயச் சூழலைக் கண்காணிக்கின்ற காவல்துறையினரும், ஊருக்குள் கண்ட இடமெல்லாம் பதுங்கி நிற்கின்ற படையினரும் தடையாய் இருந்தனர். அத்தோடு அந்நேரம் மண்கும்பான் பகுதியிலுள்ள கடற்படையினர் தீவிர செல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் இருந்தமையால் மேற்கு நோக்கி அப்பகுதிக்கு செல்வதும் உயிராபத்து என மக்கள் கருதிக்கொண்டார்கள்: இதனால் ஆலயத்தினையும் தமது வாழ்விடங்களையும் விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வழமை போல அங்கேய தங்கி விட்டனர் ஏக்கமும்,பீதியும் கொடுமையாக அவர்களைக் கலக்கி அடித்துக்கொண்டிருந்தன.

அன்றைய நாள் இரவு மெல்ல மெல்ல நகர்ந்து நடுநிசியைத் தாண்டிக் கொண்டிருந்தது. இதுவரை நேரமும் கேட்டுவந்த ஒருபக்கத் தாக்குதலின் செல் வீச்சுச் சத்தங்களுக்கு மாறுபாடாக இருசாரார் மோதிக்கொள்ளும் வேறுவகையான குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்பதை இனம் பிரித்து உணரக்கூடியதாக இருந்தது. இதனால் விடுதலைப்புலிகள் இங்கே தரையிறங்கி விட்டார்கள் என்பதை அநேகர் உறுதியாக உணர்ந்து கொண்டார்கள். நாளைய பொழுதில் படையினர் வீடுகளுக்குள் புகுந்து எம்மைக் கண்டபடி சுட்டுக்கொல்வார்கள் இன்றைய இரவு விடியாமலே இருந்தால் என்ன, என்று ஏங்கிய மனங்களில் புது வகையான ஒரு தெம்பு பிறந்து கொண்டது.

இப்போது மண்டைதீவு தெற்கு கடற்கரைப்பகுதியிலிருந்தும் பரஸ்பரம் வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. அல்லைப்பிட்டிக்கு வடகிழக்கே பண்ணைக் கடலுக்கு அப்பாலிருந்து ஏவப்பட்ட எறிகனைகள் மண்கும்பான் பகுதியில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அப்பகுதி விடுதலைப் புலிகளின் வசமாகி வருகின்றது என்பதற்கான அறிகுறியும் மெல்ல மெல்ல புலனாகிக் கொண்டு வந்தது.

12.08.2006 - சனிக்கிழமை

மக்கள் மனங்களை இருள் கவ்வியிருக்க பொழுதோ வழமைபோலப் புலர்ந்து கொண்டது. இராணுவப் பிரசன்னத்தைப் பார்த்து விடிந்ததும் ஊரைவிட்டு எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்றிருந்த மக்களுக்கு யாழ். கட்டளை அதிகாரியினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் முட்டுக்கட்டையானது. உக்கிரமான வெடிச்சத்தங்களும், குண்டுவீச்சுக்களும் மக்களை உன்மத்தம் பிடிக்கவைத்தன. எங்குமே போகமுடியாதநிலை. இதனால் இராப்பொழுதைக் கழிக்க மக்கள் எங்கெங்கு முடங்கினாரோ அங்கேயே பகற்பொழுதையும் கழிக்கமுயன்றனர்.

நேரம் செல்லச்செல்ல மோதல் உக்கிரமடையத் தொடங்கியது. வீதிகள், குடிமனைகள், ஆலயங்கள்பாடசாலைகள் என்று பரவலாக எங்கும் நின்ற படையினர் திடீரென அவ்விடங்களை விட்டு விலகிக் களமுனையைநோக்கிச் சென்றதும் எறிகணைகள் எங்களை நெருங்கி வந்துகொண்டிருந்தன. மரணத்திற்கும் எமக்கும் உள்ள இடைவெளி வரவரக் குறுகி வருவது தெரிந்தது. நாங்கள் பீதியால் விழிபிதுங்கினோம்.

இந்நேரம் அல்லைப்பிட்டி சென்பிலிப்புநேரியார் தேவாலயத்திற்கு நூற்றுக் கணக்கான படையினர் வேகமாக வந்து சேர்ந்தனர். "உங்களை யாழ். அனுப்புகின்றோம் வாருங்கள்" என்று ஆலயத்தில் இருந்தவர்களை அவசரமாக அழைத்தனர். எப்படியாவது இவ்விடத்தை விட்டு தப்பிப் போய்விட வேண்டும் என்றிருந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டனர். மக்களை அல்லைப்பிட்டிச் சந்திவரை அழைத்து வந்த கடற்படையினர் பாதுகாப்பாகத் தாம் படைமுகாமிற்குள் புகுந்துகொண்டதும் அவர்களை வந்தவழியே

போகுமாறு எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். மக்கள் திரும்பவும் ஆலயத்திற்கு வந்து அரைமணிநேரம் ஆவதற்குள் அவர்களை மீண்டும் அங்கே வந்த படையினரில் இன்னொரு பகுதியினர் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டுபோய் திருப்பி அனுப்பினர். இவ்வாறு இன்னும் ஒரு தடவையும் நடந்தது. அகோர வெய்யிலில் தண்ணீர் தாகம், பசிக்களை, மரண பயம் கொண்ட அப்பாவி மக்களை படையினர் மூன்று தடவைகள் மனிதக்கேடயங்களாகப் பாவித்துக் கொண்டார்கள்.

பச்சிளம் பாலகரைக்கூட ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த அல்லைப்பிட்டி தெற்குக் கடற்படையினரே விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் களமுனையை விட்டுத் தப்புவதற்கு பகுதி பகுதியாக வந்து இந்த நாசகார உத்தியைக் கையாண்டவர்கள்.

இலங்கை ஒரு "சோசலிச ஜனநாயக நாடு" (சும்மா பெயரளவுக்குச் சொன்னாலும் எவ்வளவு வலுவான இனிய சொல்) அதன் ஜனநாயகத்தையும், இறைமையையும் கட்டிக் காக்கப் புறப்பட்ட "தேசிய வீரர்கள்" (பகிடி என்பது வேறுவிடையம்) தங்கள் உயிரைத் தக்கவைப்பதற்காக கேவலம் "தமது சொந்த மக்களெனக் கூறிக்கொள்பவர்களையே" (போலி என்பதை விட்டுவிடுவோம்) கேடையங்களாக்கிய இலட்சனம் உலகின் வேறு எந்த மூலையிலுமே நிகழ்ந்திருக்க மாட்டாது.

நேரம் மதியமாகிவிட்டது. இதுவரை நேரம் சற்றுத் தொலைவில் இருந்து கேட்ட துப்பாக்கிச் சத்தங்கள் இப்போது கடற்படைத் தளத்தை அண்டிய பகுதிகளில் இருந்து ஆக்கிரோசமாகக் கேட்கத் தொடங்கின. ஊடே குண்டு வெடிப்புக்களும் கிரனைற் வீச்சுக்களும் கேட்டவண்ணமிருந்தன. சில நிமிடங்களில் இச்சத்தங்கள் எங்களை நெருங்கின. துப்பாக்கிச் சன்னங்கள் நாளாபுறம் இருந்தும பாய்ந்து வந்தன. குண்டுவெடிமுழங்க, வேட்டு மழை கொட்டு கொட்டு என்று கொட்டியது. எங்கள் ஊர்மனை போர்முனையானது. நாங்கள் கையில் துப்பாக்கியில்லாமல் களத்தில் நின்றோம்.

அச்சமயம் நூற்றுக்கணக்கான படையினர் விடுதலைப் புலிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடிவந்தார்கள். எந்த இலக்குமின்றி கண்டபடி சுட்டுத் தள்ளிக்கொண்டு தலை தெறிக்க அல்லைப் பிட்டிச் சந்தியிலுள்ள தளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னை மறந்து நின்று பார்த்தேன். உடம்பு புல்லரித்தது. நான் காண்பது கனவா? நிஜமா? அந்தக் கணத்தில் நான் நானாகவே இல்லை.

அல்லைப்பிட்டி தெற்குக் கடற்படைத் தளத்தில் எஞ்சி நின்ற கடற்படையினர் விடுதலைப் புலிகளின் வீரத்திற்கு முன்னே எதிர்நிற்க முடியாமல் ஓடிய ஓட்டமே அது. அந்த ஓட்டம் போர் தந்திரோபாயத் தின்படி சிலவேளைகளில் புத்திசாதுரியமாகக் களமுனையைவிட்டு விலகும் பின்வாங்கல் நடவடிக்கையல்ல. எதிரியைத் திட்டமிட்டு சண்டைக் கிழுத்து, ஈற்றில் எதிர்நிற்கமுடியாமல், மூக்குடை பட்டு, சாவுக்கஞ்சி ஓடிய ஓட்டமே அது. நாடு பற்றி எரியும் போது அதை மூடிமறைக்க கொழும்பில் "சர்க்" ஓட்டப்போட்டி ஆரம்பமாகவிருந்த ஓரிரு நாட்களுக்கு முன், இங்கு படையினருக்கான சாவு ஓட்டப்போட்டி ஆரம்பித்திருந்தது. அதுவும் தடல்புடலாகத்தான். இதுவும் தடல்புடலாகத்தான். ஓடிய படையினர் அல்லைப்பிட்டிச் சந்தியிலுள்ள படைமுகாமை அடைந்தபின்னர் ஊர் பயங்கர நிசப்தமானது. கோரப் புயலடித்து ஓய்ந்தமாதிரி. ஆனால் மக்கள் மனங்களோ அமைதி கொள்ளவில்லை. அடிவாங்கியவன் பழிவாங்குவதற்கு குடிமனைகள் மீது கண்டபடி செல் அடிப்பான். ஊரைவிட்டுத் தெற்குப்புறமாய் நகர்ந்து மேற்கே போனாலும் மண்கும்பானிலும் இதே நிலைதான். இதுவரை வெடித்த எறிகணைகளில் கணிசமானவை மண்கும்பானில்தான் வெடித்தன. மேற்கே சாட்டியிலுள்ள படையினர் வேலணைப் பக்கமும் போகவிடமாட்டார்கள். போதாக்குறைக்கு ஊரடங்குச் சட்டம். எங்குமே நாங்கள் போகமுடியாது. எப்படியும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியவர்களே. இதை உணர்ந்த சிலர் வீடுகளில் பதுங்குகுழிகளை வெட்டினார்கள். கணிசமானோர் வீடுகளிலும், அதிகமானோர் தேவாலயத்திலும், பாடசாலையிலும் தங்கியிருந்தார்கள்.

மாலை 4.00 மணியளவில் மீண்டும் ஆட்லறிகள் எறிகணைகளைக் கக்கத் தொடங்கின. ஒவ்வொருவரும் அந்தந்த இடங்களிலேயே குப்புறப் படுத்துக் கொண்டனர். வீடுகள் அதிர்ந்தன, நிலம் அதிர்ந்தது, விளைநிலங்களும், பயன்தரும் மரங்களும் குண்டுச் சிதறல்களால் சேதமாகிக் கொண்டிருந்தன. அந்தி சாயும் வேளை இந்நிலை தொடர்ந்தது. அதன் பின்னர் இரவு பதினொரு மணிவரை ஆங்காங்கே சில எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. படையினரை விரட்டயடித்தபின் விடுதலைப் புலிகள் தாம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து எதிர்த் தாக்குதலைத் தொடர்ந்தும் படையினர் மீது நடாத்துவதைத் தவிர்த்துக் கொண்டனர். இராணுவமும் கடுமையான எறிகணை வீச்சை நிறுத்தியிருந்தது. எங்களுக்கு எல்லாமே சூனியமாக இருந்தது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களப் படையின் காடைத்தனம் பற்றிய பூரணமான பட்டறிவுள்ள நாங்கள் அவர்கள் அமைதியாய் இருப்பதுபற்றி விபரிதமாக ஆச்சரியப்பட்டோம்.

வெள்ளி பின்னிரவு தரையிறங்கிய விடுதலைப் புலிகள் சனி நண்பகலுக்குள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் தெற்கு கடற்படைத் தளங்களை முற்றாக அழித்து நிர்மூலமாக்கி அப்பகுதிகளைக் குறிப்பிட்ட பல மணித்தியாளங்கள் வரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பின்னர் அன்று முன்னிரவே வன்னி திரும்பி விட்டனர். அது வரை நேரமும் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் வந்துவிட்டோம் என்ற மனோநிலையில் இருந்த எங்களுக்கு விடுதலைப் புலிகள் வன்னி திரும்பியது பலத்த ஏக்கமாக இருந்தது. மீண்டும் இராணுவத்தின் பிடிக்குள் நாம் சிக்கப்போவதை நினைத்துப் பீதியால் துடித்துக்கொண்டிருந்தோம்.

இதுவரை நேரமும் இராணுவம் வாழாதிருப்பது தொடர்பாக ஏற்கனவே நாம் விபரீதமாக ஆச்சரியப்பட்டோமல்லவா? அந்த ஆச்சரியம் தப்பானதாக இருக்கவில்லை. நாங்கள் நினைத்த அந்தக் கொடூரம் நிகழத் தொடங்கியது. ஆட்லறிக் குண்டுகள் எங்கெல்லாமோ இருந்து எங்களைத் தேடி வந்துகொண்டிருந்தன. போதாக் குறைக்கு இடையிடையே கடலில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள், அத்தோடு பல்குழல் பீரங்கியும் முழங்கத் தொடங்கி இடைவிடாது றொக்கெட்டுகளைத் தள்ளிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் இடையே ஒரு கைநொடிப்பொழுது கால அவகாசம்கூட இருக்கவில்லை. ஒரே கணத்தில் பல குண்டுகள் வெடித்தன. குண்டு எங்கே விழுந்தது எனக் கேட்காமல் குண்டு எங்கே விழவில்லை எனக் கேட்கும் அளவிற்கு அங்கிங்கென்னாதபடி எங்கும் விழுந்தது அருகே விழுந்ததும் முன்னே ஓடினோம். முன்னே விழுந்ததும் பின்னே ஓடினோம். அங்கும் விழுந்தது கோடை மழைக்காய் எங்களுக்குக் குண்டுமழை பொழிந்தது. ஓரிரு மணித்தியாளங்கள் அல்ல ஒன்றரை நாட்கள் வரை.

சின்னஞ்சிறிய இச் சிற்றூரை அழிப்பதற்கு இத்தனை நேரமாய் ஏவியகுண்டுகள் முப்பதிற்கும் மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியும் இனவாதிகளின் கோரப்பசிக்குத் தீனி போட்டிருந்தன. சென் பிலிப்புநேரியார் தேவாலயத்தில் மட்டும் பதினெட்டுப் பேர் இரையானார்கள். எழுபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஆலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்தபோது அங்கு வீழ்ந்த றொக்கெற் குண்டுகளே இவ் அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொண்டும் காயப் படுத்தியும் இருந்தன. பச்சிளம் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரைக்கொன்ற இக் குரூரத்தில் கைமுறிந்த நான்குமாதச் சிசு ஒன்றும், நான்கு வயது நிரம்பாத நிலையில் படுகாயமடைந்த சகோதரிகள் மூவரும் இன்றும் தமது தாய் தந்தையரை ஊரில் பறி கொடுத்துவிட்டு அவர்களின் உடலங்கள் மீட்கப்படாமல் உப்பிப்பருக்க இவர்கள் ஆதரவற்றுத்தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குஞ்சு குழந்தை உட்பட குடும்பமாகக் காயப்பட்டவர்கள்.

அங்கவீனர்கள் ஆனவர்களே இங்கு அனேகர்.

சென் பிலிப்புநேரியார் தேவாலயத்தில் குண்டுகள் விழுந்தபோது மயிரிழையில் உயிர்தப்பி பின்னர் அல்லைப்பிட்டியிற் காணாமல்போன வணபிதா ஜிம் பிறவுன் அடிகளாராலும் யாழ் மேலதிக நீதியாளராலும் பெருமுயற்சி எடுக்கப்பட்டதன் விளைவாக காயப்பட்டவர்களையும் ஆலயத்தில் படுகொலையானவர்கள் பதினெட்டுப் பேரின் சடலங்களையுமே காலதாமதமாகவேணும் மீட்க முடிந்தது. ஏனைய சடலங்களை மீட்க கடற்படை தடையாய் இருந்தது. நீதியாளரின் பணிப்பின் பேரில் சிங்கள பொலிசார் இதற்கான பொறுப்பை ஏற்றும் அதனை நிறைவேற்றவில்லை. மீண்டும் நீதியாளர் எடுத்த முயற்சியினால் அவர் முன்னிலையில் ஏழு சடலங்கள் இருபத்திரண்டு நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன. ஏனையவை இதுவரை மீட்கப் படவோ, அடக்கம் செய்யப்படவோ இல்லை. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அல்லைப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் ஆறு சடலங்கள் இதுவரை மீட்கப் படாமல் இருப்பதாகக் கூறினார். அவரைப் போல் காயமடைந்து சிகிச்சைபெறும் பெண்மணி ஒருவர் தனது வீட்டில் செல் விழுந்ததால் மயிரிழையில் தப்பி ஓடிப்போய் இன்னோர் வீட்டில் பதுங்கியிருந்த போது அங்கே செல் விழுந்ததினால் இறந்த நான்கு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்றார். இதேபோல் இன்னும் இரு சடலங்கள் மீட்கப் படாமல் இருப்பதை அறிந்தேன். அறியாதது இன்னும் எத்தனையோ?

சென் பிலிப்புநேரியார் தேவாலயத்தில் இறந்த, காயப்பட்ட மக்கள் மத்தியில் இறுதி நேரம் இருந்த சகோதரியொருவர் தான் நேரில் கண்டதைத் தெரிவிக்கையில், எனது வீட்டு வளவினுள் சனிக் கிழமை பகல் செல் விழுந்தது அதில் ஒருவர் காயப்பட நான் பாடசாலைக்கு ஓடிவந்தேன் அன்றைய இரவை அங்கே கழித்தபோது கண்டபடி செல்கள் விழுந்தன. விடிந்ததும் வீட்டிற்குப் போனேன். அப்பகுதியில் ஒருவரையும் காணவில்லை, மயான அமைதி நிலவியது. பயமாக இருந்தது. ஆலயத்திற்குப் போனால் அங்குள்ளவர்களோடு தங்கலாம் என்ற எண்ணத்தில் அங்கு போனேன். அங்கே நால்வரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. ஆலயம் இடிந்து கிடந்தது. இடிபாடுகளுக்குள் மனிதச் சடலங்கள். இரத்தவெள்ளம். சதைத் துண்டங்கள். காயமடைந்தவர்களின் அவலக் குரல்கள். வேதனையின் துடிப்புக்கள், குற்றுயிர்களின் ஊசலாடல்கள் "அக்கா தண்ணி" மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு இருக்கும் ஜீவன்களின் பரிதாபமான கெஞ்சல்கள்.... கொலைக் களத்தில் பலிக் கடாக்கலான அந்த அப்பாவிகளின் கோரநிலைக் காட்சியினை மேலும் சொல்லத் திரானியற்று அவர் விம்மத் தொடங்கினார்.

இத்தனை அட்டூழியங்களையும் நேரில்கண்டவரும், அனுபவித்தவருமான வண பிதா ஜிம் பிறவுன் அடிகளார் நடந்தேறிய படுகொலைகளின் உண்மை நிலையினை உலகிற்கு அம்பலமாக்கி விடக்கூடிய ஒரேயொரு ஆவனமாக இருந்தமையால் இக் கொடூரங்கள் நிகழ்ந்து ஒரு கிழமைக்குள் அவர் மர்மமாக மறைக்கப்பட்டார். ஈ கூட நுழைய முடியாத அளவிற்கு அதியுச்ச பாதுகாப்பை இச்சம்பவத்தின் பின்னர் ஏற்படுத்தியிருக்கும் சிங்கத்தின் குகைக்குள் இந்த அருட் பணியாளர் காணமல் போனதன் சூத்திரம் உலகிற்கு இன்னும் துலங்கவில்லை என்றால், அது கைப் புண்ணுக்கு கண்ணாடி கேட்கும் சங்கதியே.

சிங்கள இனவாதிகளின் இனவொழிப்புச் செயற்பாடு காலத்திற்குக் காலம் என்ற நிலையிலிருந்து மருவி இப்போது நிமிடத்திற்கு நிமிடம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. இவ்வருடம் ஓகஸ்ற் மாதம் மட்டும் மூதூர் படுகொலை, அல்லைப்பிட்டிப் படுகொலை, தென்மராட்சிப் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, எல்லாவற்றிற்கும் மேலாக நாளாந்தம் தவறாமல் சுட்டுக் கொல்லப்படுவோர் என படுகொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. ஆனால் உலகம் இதைப் பார்த்துக் கொண்டு ஏனோ வாய் மூடி மௌனம் காக்கின்றது?

மானிட நேயம் கொண்ட உலக சமுதாயமே! வாழ்வின்மீது தாகம் கொண்ட எம் உடன் பிறப்புக்கள் நாள்தோறும் மரணத்தின் வாயிலில் நின்று துடிப்பதையும், ஈற்றில் இந்த இதயங்களின் உயிர்த் துடிப்பு அடங்கிப் போவதையும் ஒருகணம் உன் கூர்மதியினால் உணர்ந்து பாரேன்.

நன்றி: விடுதலைப் புலிகள், மாசி 2007

http://www.tamilcanadian.com/tamil/?cat=15&id=211

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.