Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதுமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை

ஜெயமோகன்

சுந்தர ராமசாமி அவரது அறுபது வயது வாக்கில் முதுமை பற்றி நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தார். காதலைத் தேடிச்செல்லும்போது முதுமை வந்து அணைத்துக்கொள்வது பற்றிய கவிதை பிரபலம். அந்த வயது வரை மாய்ந்து மாய்ந்து தேடிக்கொண்டிருந்தால் வராமல் என்ன செய்யும்?

முதுமையைப்பற்றிய பழமொழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று இளைஞர்களின் அருகாமை, வாய்ப்பிருந்தால் இளைஞிகள். முதுமையை அகற்றும் என்பது. அனேகமாக இப்படிச் சொல்பவர்கள் இளமையில் முதியவர்களின் அருகாமையை அதிகம் நாடியமையால் அப்படிச் சொல்லும் நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இம்மாதிரி கவைக்குதவாத அருவமான விஷயங்களை நம்பாமல் கோத்ரெஜ் முடிமையைத் தேடிச்செல்பவர்களே நம்மில் அதிகம். மைமுடியர்கள் இளமையிலேயே முதுமைகொண்டவர்கள் என்ற மாற்று வாசிப்புக்கு வாய்ப்புள்ள முகம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதுமையிலும் இளமை என்ற யதார்த்தவாதம் எவ்வளவோ மேல்

இவர்கள் காலை எழுந்ததுமே இளமையாக இருப்பதற்கான எத்தனங்களை ஆரம்பிக்கிறார்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிலும் அதற்கான நிரூபணங்களை தேடுகிறார்கள். இதற்கு காலையிலேயே தனக்கு வயதாகிவிட்டது என்ற கவலையை அடையவேண்டியிருக்கிறது. அந்தக் கவலை மேலும் வயதாக ஆக்குவதென்பதனால் மேலும் கவலை கொள்ளவேண்டியிருக்கிறது.

எதற்காக முதுமையை ஒத்திபோடவேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அது பாட்டுக்கு வந்து ஓரமாக அமர்ந்திருந்தால் என்ன தப்பு? நான் முதுமையை விரட்ட நினைக்கவில்லை. விரட்டுவதற்கு நேரமில்லை, இளமை புயல்வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. கரைந்துவிடப்போகிறது. அதற்கு அப்புறம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ஏதாவது செய்துகொள்ளலாம்.

அதைவிட முக்கியமான ஒரு கேள்வி, ஏன் அறுபது வயதில் முதுமை அடைந்துவிடுவதாக திடீரென்று தோன்ற ஆரம்பிக்கிறது? முடிமை நோக்கிச் செல்வதா வேண்டாமா என்ற ஆழமான தத்துவக்குழப்பம் வரும் வயதை இளமையின் முடிவு என்றும் இதன் பிறகு எதற்கு முடிமை என்று தோன்றும் வயது முதுமையின் ஆரம்பம் என்றும் சொல்லலாம். இந்த நடுக்காலகட்டம் சிலருக்கு முப்பது நாற்பது வருடங்கள்கூட நீண்டுவிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் முதுமையையும் இளமையையும் தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறது. நாம் எடுத்துக்கொள்வதை அதேபோல பிறர் எடுத்துக்கொள்வார்களா என்ற சிக்கலும்.

எனக்கெல்லாம் முதல்நரை வந்தது ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு. கன்னங்களின் ஓரமாக வெண்ணிறக் கீற்று. அதிகமாக வெட்டப்பட்ட அல்லது மழிக்கப்பட்ட முடிதான் முதலில் நரைக்கிறது. பிறந்தது முதல் முடிகளையாமல் இருந்தால் எழுபதில்தான் நரைக்கும் என்றார் ஒரு சித்த மருத்துவர். அறுபதில் இளமையோடிருக்க இருபதில் கிழக்கோலம் கொள்ள பலர் முன்வருவார்கள் என நான் நினைக்கவில்லை.

என் முகத்தை தினமும் கண்ணாடியில் பார்ப்பதை கைவிட்டு பத்து வருடமாகிறது. குளித்து தலைதுவட்டி கையாலேயே ஒரு இழுப்பு இழுத்து சீவிச் சாய்த்துவிட்டால் முடி படியும். எப்போதுமே முகச்சுண்ணம் வழக்கமில்லை. அது நாடகக் கலைக்கு இட்டுச்சென்று நல்ல நாயருக்குரிய போர்க்கலை — மனைவியுடன்தான் — யிலிருந்து விலக்கும் என்று அப்பா நினைத்திருந்தார். நான்குநாட்களுக்கு ஒருமுறைதான் மழித்தல். அதை வள்ளுவர் சொல்லியிருக்கிறார், மழித்தலும் நீட்டலும் வேண்டா நடுத்தாடியே நலம் என

எப்போதாவது துணிக்கடைக் கண்ணாடிகளில் பார்க்கும்போது ஒரு நடுவயதான ஆள் என்னுடன் வருவதைக் காண்பேன். அவர் என்னுடனேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார். நான் உண்மையில் யாரோ அது எப்போதும் என்னுடன் வருவதென்பது பெரிய சங்கடம்தான். முகம் மழிக்க கண்ணாடியில் பார்க்கும்போது — அப்போது செல்பேசியில் பேச நேர்ந்தால் அதுவும் பார்ப்பதில்லை,பிரெயிலி முறைப்படி சவரித்தல்தான் — அந்த முகம் மாறிக்கொண்டே இருப்பது தெரியவருகிறது. யாரோ மும்முரமாக இருக்கிறார்கள்.

முதல் விஷயம் தலைமுடியின் மாற்றங்கள். வருடக்கணக்காக முடி கொட்டிக்கொண்டே இருக்கிறது. இத்தனை கொட்ட எத்தனை முளைத்திருப்பேன் என்பதே பீதியூட்டுகிறது. நெற்றி மேலேறி கன்னத்துக்கு மேல் முடியில்லாமலாகிறது. பின் இரு ஓடைகளாக தலைநோக்கி வெறுமை விரிந்து செல்கிறது. முடிவெட்ட கடைக்குச் சென்று என்பிம்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் – பிரதிபிம்பம்? – பின் நவீனத்துவ தலையை பார்க்கும்போது அங்கே வட்டமான சொட்டை அல்லது வாசகஇடைவெளி தெரிகிறது. தொட்டுப்பார்த்தால் பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை. கடைக்காரரின் கத்திரி அங்கே வரும்போது தயங்குவது ஓசையால் தெரியும்.

 

என் அண்ணாவுக்கெல்லாம் இருபதுவருடம் முன்னாடியே முடி கொட்டிவிட்டது. அவர் கங்கையையும் காவிரியையும் இணைக்கும் தொழில்நுட்பத்துடன் காதோரமிருந்து எடுத்து மறுபக்கம் கொண்டுவந்து அங்குள்ள பிசுறுகளுடன் பி¨ணைப்பார். ஆனால் சிறப்பாக வளர்த்த நீள்முடி காற்றில் சிலசமயம் தூக்கி வீசப்பட்டு இடக்காதருகே ஒரு சிறகு போல படபடக்கும். அந்தக்காலத்தில் இதனால்தான் முண்டாசு பிரபலமாக இருந்திருக்கிறது.

முடிக்கு இணையானது தொப்பை. எதைத்தின்றாலும் சதைபோடாத ஒரு காலம் இருந்தது. அப்போது உள்ளே இயங்கிய எந்திரமே எல்லா எரிபொருளையும் குடித்துக்கொண்டிருந்தது. இப்போது எதுவுமே சாப்பிடாவிட்டாலும் வயிறு கனத்துச் சரிகிறது. பாதி நடுவயது தொப்பையர் ‘நான் ஒண்ணுமே சாப்பிடறதில்லை சார்’ என்றுதான் சொல்கிறார்கள். ‘தொப்பை இலல சார், எல்லாமே கேஸ்…காலம்பற வீட்டுக்கு வாங்க..அப்டியே சப்பையா இருக்கும்’ என்று துணிபவர்களும் உண்டு. தொப்பை பெரிதானால் துணைக்கு மார்புகளும் சரிய ஆரம்பிக்கின்றன.

கன்னங்களில் தசைகள் கன்ன எலும்பில் இருந்து கொஞ்சம் கழன்று கீழிறங்கியிருந்தால் , தாடைக்குக் கீழே தவளைச்சதை தொங்கினால் ஐம்பது நெருங்குகிறது என்று பொருள். ஒன்றும் செய்யமுடியாது, வழக்கமாக எல்லாரும் சொல்வதுபோல ‘எங்கப்பாவுக்கு முப்பதிலேயே இப்டித்தான் இருந்திச்சு. குடும்பவாகு சார்’ என்று சொல்லிக்கொள்ளலாம். அதைவிட எளிய வழி பொதுவாக குனிந்தே பேசுவது.

மனம் உடலையா உடல் மனத்தையா முதுமை நோக்கிக் கொண்டு செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மனத்தில் வரும் முதுமையை பிறர் சொல்லித்தான் நாம் அறிகிறோம். பதின்பருவத்துப் பிள்ளைகள் நம்மை முதியவர்களாக்குவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாமே தவறாகத் தோன்ற ஆரம்பிக்கும்போது முதுமை வந்துவிட்டது என்று அர்த்தம்

கழிப்பறைக் கதவை காலால் உதைத்து திறப்பது, குளித்து துவட்டிய ஈரத்துண்டை உடைமாற்றிய இடத்திலேயே மிதிபட விட்டுவிடுவது, சட்டையை கழற்றி புத்தகப்பையுடன் சேர்த்தே வீசுவது, சாப்பிட்ட தட்டை அங்கேயே உலரவிட்டுச் செல்வது, படுக்கையை தட்டாமல் நாள்கணக்கில் அதிலேயே தூங்குவது, சாத்தியமான உச்ச ஒலியில் சங்கீதம் கேட்பது என்பதெல்லாம் நாமே செய்தவைதான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

ஓர் எளிய அறிகுறி, பாண்டை ஒருகால் உள்ளேயும் மறுகால் வெளியேயும் இருக்கும்படி கழற்றி கழற்றிய இடத்திலேயே விட்டுவிட்டு பாய்ந்தால் நீங்கள் பதின்பருவம். இருகால்களும் வெளியே இருக்க கழற்றி கட்டிலிலோ மேஜையிலோ போட்டால் இளமை. கழற்றி கச்சிதமாக மடித்து வைத்தால் முதுமை.

ஆண்களுக்கு எத்தனையோ சுயசோதனைகள் இருக்கின்றன. கல்யாணங்களில் காகிதக் கவரில் நூறு ரூபாய்த்தாளை செருகி மொய் வைப்பதில் , வளைந்த குடையை கையில் வைத்திருப்பதில் கூச்சமில்லாதிருத்தல் போன்றவை நடுவயதுக்கான அடையாளங்கள். வீட்டுக்குள் நுழையும்போது கனைத்துக்கொண்டோ செருப்பைத் தேய்த்துக்கொண்டோ உள்ளே செல்கிறீர்கள் என்றால் முதுமையின் அடையாளம். ‘இந்த சொம்ப இங்க வச்சது யாரு?’ என்பது முதல் கேள்வி என்றால் நீங்கள் குடுகுடு கிழவர்.

வழக்கமான ‘அந்தக்காலத்திலே சரோஜாதேவி இப்டித்தான்…’ என்ற மலரும் நினைவுகள், ‘இவ யாரு?’ என்று புது கதாநாயகியை கேட்டு தெரிந்துகொள்ளும் மசமசப்பு போன்றவை உருவாக இப்போதெல்லாம் கொஞ்சம் தாமதமாகிறது. அதைவிட முக்கியமான பல தடையங்கள் இருக்கின்றன. இன்று செய்தித்தாள்களின் முதல்பக்கத்தை வாசிக்க ஆரம்பிப்பதுதான் முதலில் வந்துசேர்கிறது. சினிமா விளையாட்டுப்பக்கங்களை அப்படியே கழற்றி கீழே போட்டுவிடுவதில் முடிகிறது.

இப்போதெல்லாம் நான் என் முதுமையை உணரும் தருணங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. கல்லூரிகள் பள்ளிகளில் இருந்து பையன்கள் சிருடைக்குவியல்களாக வந்து பேருந்தில் ஏறி உற்சாகமாக சலம்பிக்கொண்டிருக்கும்போது இவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணிக்கொள்கிறேன். பேருந்தில் ஒரு பையன் ஒற்றைக்கை பிடியில் தொங்கிவந்தால் அவனை உள்ளே வந்து விடும்படி அதட்டும் இச்சையை ஐம்புலன்களாலும் அடக்கிக் கொள்கிறேன்.

அதைவிட எதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு? ஆனால் இரவு ஒன்பது மணிக்கு பேருந்து நிலையத்தில் பெரிய புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவியுடன் நின்றிருந்த அழகியைக் கண்டு இவள் எப்போது வீடு போய்ச் சேருவாள், கூட்டிப்போக வீட்டில் யாராவது வருவார்களோ என்று மூளை ஓடியபோது அதை அறிந்தேன், சரிதான்.

சமீபத்தில் ஒருகல்லூரியில் ஒரு கரியநிற அழகியைக் கண்டு பரவசம் கொண்டு ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ என்றேன். ”தாங்க்ஸ்” என்று அவள் முகம் சிவந்து சிரித்தாள். அதன்பின் எண்ணிக்கொண்டேன், பத்துவருடம் முன்பு அதை பத்தாயிரம் தடவை மனசுக்குள் சொல்லிக்கொள்வேன் வாயால் சொல்ல முடியாது. இப்போது வாயால் சொல்லி அடுத்தக்கணம் தாண்டிச்செல்லும் விஷயம் அது. அப்படிச் சொல்லக்கூடியவன் சொன்னால் அவர்கள் ஒன்றும் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் போல.

: மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 24, 2010

http://www.jeyamohan.in/6338#.WbwaDrvTVR4

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத் தெரியவில்லை... சொல்ல முடியவில்லை.... முதுமை அழகானது.....! tw_blush:

இனிமேல் இம்மாதிரி கட்டுரைகளுக்கு விட்டுக் குடுக்காமல் கதைக்க வேணும்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.