Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை; உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை; ஆட்சி மாற்றம் தீர்வல்ல – மு. திருநாவுக்கரசு

Featured Replies

President_PM_OppositionLeader-415x260.jp

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இருபெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இனவாத அரசியல் பொறுத்து ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். ஒன்று பதவியில் இருக்கும் போது மற்றையது இனவாதத்தை முன்னெடுப்பதற்கான ஏதுக்களை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வழங்கும். பதவிக்கு வரமுனையும் கட்சி தமிழ் மக்களுக்கு தீர்வுகாணத் தயார் என்ற உத்தரவாதங்களை அளிக்கும்.

ஆனால் அது பதவிக்கு வந்த பின்பு எதிர்கட்சியினரின் எதிர்ப்புக்களை காரணங்காட்டி அது இனவாதத்தை நடைமுறைப்படுத்தும். இதன் மூலம் ஆளும்கட்சி இனவாதத்தை நடைமுறைப்படுத்த துணையாக நிற்கின்றது என்பதே இதனுடைய அரசியல் பொறிமுறை உண்மையாகும். இதன் மூலம் இருகட்சிகளும் இனவாத பொறிமுறையில் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும்.

இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து “நல்லாட்சி” என்ற பெயரில் “தேசிய அரசாங்கத்தை” அமைக்குமிடத்து அதனால் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்திக் கூறியது. ஆனால் உண்மையில் இனவாத உள்ளடக்கத்தைக் கொண்ட இருகட்சிகளும் ஓர் அரசாங்கத்தை கூட்டாக அமைக்கும் போது அவை இனவாதத்தை நடைமுறைப்படுத்தவதற்கான வலுவைப் பெற்று இனவாத அரசையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க முடியுமே தவிர தீர்வைத் தரமுடியாது.

அத்துடன் இருகட்சிகளும் ஒன்று சேர்ந்து தேசிய நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போதிலும் ராஜபக்ச தலைமையில் ஒரு பிரிவினர் கூட்டு எதிரணி என்ற பெயரில் உத்தியோகபூர்வமற்ற எதிர்கட்சியாக செயற்படத் தொடங்கினர். இந்த கூட்டு எதிரணிதான் நடைமுறையில் உண்மையான எதிர்கட்சியாகும். இந்த எதிரணியை ஒரு பெரும் பூதமாகக் காட்டி நல்லாட்சி அரசாங்கத்தினர் தமது இனவாதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கையின் இனவாத அரசியல் பொறிமுறையில் இருந்து இன்னொரு வகையில் பெற்றனர்.

இதன் மூலம் இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்தன என்பது ஒருபுறம் பொய்யானதுடன் மறுபுறம் கூட்டுச் சேர்ந்த இருகட்சியின் தலைவர்களும் இனவாத உள்ளடக்கத்தை கொண்டவர்களாக இருப்பதால் மானசீகமாக இனவாதத்தின் பக்கம் இயல்பாகவே செயற்படுகின்றனர். ஆனால் அந்த செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு எதிரணி கூட்டமைப்பு அதற்கு துணையாக இருக்கிறது.

மேலும் பௌத்த மஹா சங்கம் இலங்கையின் பௌத்த இனவாத அரசியலின் அச்சாணியாகும். அது அரசோடும் சிங்கள மக்களோடும் பின்னிப்பிணைந்த பலமான எழுத்தறிவுசார்; நிறுவனமாகும். அத்துடன் அது இனவாத வரலாற்று உணர்வின் ஆத்மபூர்வமான பொக்கிசமுமாகும். இவறற்றிற்கு அப்பால் இராணுவம் பலம்பொருந்திய அரசியல் சக்தியாக உருப்பெற்றுவிட்டது.

எனவே ஆட்சியாளர்களை நிர்ணயிக்கவல்ல பௌத்த மகா சங்கமும், தனிச் சிங்கள இராணுவமும் கூடவே சிங்கள ஆதிக்க உணர்வு கொண்டு பொலிஸ் மற்றும் நீதித்துறையும் அரசியல் போக்கை நடைமுறையில் நிர்ணயிக்க வல்லவையாகும்.

மேற்படி இத்தகைய பொறிமுறையின் கீழ் அரசியல் தலைவர்களின் எத்தகைய வாக்குறுதிகளும் நற்பலனுக்குரியவைகளல்ல. இதனால் இனப்பிரச்சனை சார்ந்து அவை தீவிர இனவாதத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு என்ற விடயத்தையே சமூக அரசியல் ரீதியில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான ஏதுவாக மாற்றிவிட்டனர். அதுதான் உத்தேசிக்கப்படும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கமாகும். இங்கு பால் பானை என்று கூறி நஞ்சுப் பானை முன்வைக்கப்படுகிறது.

இனப்பிரச்சனை விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம் இப்படி பால் என்று கூறி நஞ்சைக் கொடுப்பது போல வெளிநாட்டு விவகாரத்திலும் அது சீன சார்பு நிலையில் இருந்து இலங்கை அரசை மாற்றப் போவதாக கூறியதற்குப் பதிலாக முன்னிருந்ததைவிடவும் அதிகமாக இன்றைய அரசு சீனசார்பு கொள்கையை நடைமுறை சார்ந்து, சட்டவடிவம் சார்ந்து அதிகம் பலப்படுத்திவிட்டது.

இதுவிடயத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும், மேற்குலக நாடுகளையும் மிக தந்திரமாக ஏமாற்றிவிட்டது. இதன் மூலம் ஆட்சி மாற்றம் மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்திலும் சரி, சீனசார்பில் இருந்து மாறப்போவதாகக் கூறிய உத்தரவாதத்திலும் சரி இரண்டிலிருந்தும் அது நூறுவீதம் பிறழ்ந்துவிட்டது.

ஆதலால் ஆட்சிமாற்றம் என்பது இனப்பிரச்சனைக்கோ, இலங்கையின் சீனசார்பு வெளியுறவுக் கொள்கை விடயத்திற்கோ தீர்வாகப் போவதில்லை. இலங்கை அரசின் அரசியல் பொறிமுறையைப் புரிந்தால் இத்தகைய ஏமாற்றத்திற்கு இடமிருக்க முடியாது. இனியும் இலங்கை அரசை நம்பி ஏமாந்தால் அதற்கு ஏமாற்றம் என்றல்ல வேறு ஏதாவது பேரே சொல்ல வேண்டும். இதுவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் நம்பிக்கை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.

உள்நாட்டுப் பரிமாணத்தில் தீர்வில்லை.

இலங்கையின் இனப்பிரச்சனையான வெறுமனே ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது ஆழமாக புவிசார் அரசியல் பிரச்சனையும், பெருவல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்கள் சார்ந்த பிரச்சனைகளினதும் கூட்டாகும்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தமிழும், சிங்களமும் உத்தியோக மொழியாக வேண்டுமென்ற மசோதாவை முன்வைத்து வாதிட்ட டொக்டர். என்.எம்.பெரேரா ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் கூறினார். அதாவது சிங்களத்தோடு கூடவே தமிழையும் உத்தியோக மொழியாக்கி தமிழர்களோடு இணைந்து ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை தவறவிட்டால் வெளி வல்லரசுகளின் வேட்டைக்களமாக இலங்கை மாறிவிடும் என்று எச்சரித்தார்.

தனிச்சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பின்புங்கூட 1957ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தலைவர் தந்தை செல்வநாயகத்துடன் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க கொழும்பில் பேசி சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அடுத்து 1965ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் டட்லி சேனநாயக்க கொழும்பில் மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்.

உள்நாட்டு ரீதியில் தீர்வுகாண கொழும்பில் கையெழுத்தான மேற்படி இரு ஒப்பந்தங்களும் கைவிடப்பட்டதோடு இலங்கைக்குள் அரசியல் தீர்வுகாணலாம் என்ற நிலையும் முடிவிற்கு வந்துவிட்டது.

ஆனாலும் தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் இலங்கைக்குள் தீர்வுகாணும் வகைசயில் சிங்களத் தலைவர்களுடன் முயற்சித்த போதிலும் 1970 ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழ்த் தலைவர்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு முற்றிலும் தயாரற்றுப் போனது.

இதன்பின்புதான் தமிழ்த் தலைவர்கள் பிரிந்து சென்று இறைமையுள்ள சுதந்திர தமிழீழ அரசு அமைக்கும் முடிவிற்கு வந்தனர். இத்துடன் இனிமேல் இலங்கை அரசுடன் பேசித் தீர்வுகாணலாம் என்ற நிலை உள்நாட்டு அர்த்தத்தில் சிறிதும் சாத்தியமற்றுப் போனது.

1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலை கலகத்தின் போது தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு தமக்கு உண்டு என்பதை இந்தியாவின் இந்திராகாந்தி அரசாங்கம் இலங்கை அரசுக்கு அறிவித்து அத்தமிழினப் படுகொலை கலகத்தை அடக்குமாறு ஜெயவர்த்தன அரசாங்கத்தை வற்புறுத்தியது.

அத்துடன் இந்தியாவின் வெளிவிகார அமைச்சராக இருந்த திரு.நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி படுகொலை பகுதிகளை வானூர்தியில் இருந்தவாறு பார்வையிட்டு படுகொலையை முடிவிற்குக் கொண்டுவரச் செய்தது. இத்துடன் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது இலங்கையின் எல்லையைக் கடந்த இந்தியாவின் பொறுப்புக்குரிய பிரச்சனையாகவும் மாறியது.

அதன்பின் கொழும்பில் பேச்சுவார்த்தைகள் என்ற பரிமாணம் முடிந்து டெல்லியில் பேச்சுவார்த்தை, சாமாதானத் தீர்வில் இந்தியாவின் பங்கு, மேலும் இந்தியாவையும் கடந்து பூட்டானில் உள்ள திம்புவில் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம் என அது இலங்கைக்கு வெளியேயான பரிமாணத்தை அரசியல் இராணுவ வடிவத்தில் பெற்றது.

இதன்பின்பு 2000 ஆண்டைத் தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையுடனான ஓஸ்லோவில் பேச்சுவார்த்தையென அது ஆசியாவையும் கடந்து ஐரோப்பா வரை நகர்ந்தது. நோர்வேயின் பங்களிப்பு இந்தியாவின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை விடயம் இந்தியா, நோர்வே என அது நடைமுறையில் முற்றிலும் உள்நாட்டைக் கடந்து புதிய புதிய பரிமாணங்களை அடைந்தது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்பு இலங்கையின் அரசியல் அதிவேகமான நெருக்கடிகளுக்கு உள்ளானது. 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை படுகொலையை அடுத்து ; இனப்படுகொலை என்ற வார்த்தையை முதல்முறையாக 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய நாடாளுமன்றமான ராஜ்ஜிய சபையில் உரையாற்றும் போது அன்றைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்பு உத்தியோகபூர்வமாக வடமாகாணசபை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பற்றி தீர்மானம் நிறைவேற்றியது. பரவலாக இலங்கையில் இடம்பெறுவது “இனப்படுகொலை” என்ற பதம் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பல்வேறு மட்டங்களிலும் பேசப்படும் பொருளாக மாறியது.

இத்தகைய இனப்படுகொலைக்கு உள்ளான பிரச்சனைக்கு உள்நாட்டு பரிமாணத்தில் ஒருபோதும் தீர்வுகாண முடியாது. ஆனால் அவ்வாறு தீர்வுகாணலாம் என்று நம்பி வரலாற்றின் சக்கரத்தை முற்றிலும் பின்நோக்கி சுழற்றியவாறு முன்னாளில் இனப்படுகொலை புரிந்த அனுபவங்களைக் கொண்ட சிங்களத் தலைவர்களை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனை சம்பந்தமான வடுக்களை தீர்ப்பதற்கான முயற்சியையும், அரசியல் தீர்வுகாண்பதற்கான முயற்சியையும் முன்னெடுத்தது. இது தொடர்பாக திரும்பத் திரும்ப தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அளித்துவந்தது.

ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுக்கான முன்யோசனைகளும், வழிகாட்டு நெறிகளும் இனவாதத்தை அனைத்து வகைகளிலும் பலப்படுத்தவல்லவையாய் அமைந்துள்ளதுடன் தமிழ் மக்களை நீண்டகாலத்தில் அழிக்கவல்ல சமூக அரசியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையின் (Structural Genocide) ஓர் அங்கமாக காணப்படுகிறது.

மொத்தத்தில் உள்நாட்டு அரசியலைக் கடந்து சென்ற இனப்பிரச்சனையை மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் தீர்வுகாணலாம் என்று நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இறுதி அர்த்தத்தில் தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிட்டது. இனி இதனை மீண்டும் எவ்வாறு வெளிநாட்டுப் பரிமாணத்தில் முன்னெடுப்பது என்பதே அடுத்தகட்ட பிரச்சனையாகும்.

இதுவிடயத்தில் ஆட்சிமாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமானது இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணாது ஏமாற்றியது மட்டுமன்றி இலங்கை அரசின் சீனசார்பு கொள்கையில் இருந்து மாறப்போவதாக இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு நம்பிக்கையூட்டியதற்கும் நேர்ரெதிர்மாறாக அது சீனசார்பு கொள்கையை அதிகம் வலுவாக்கிக் கொண்டது.

இலங்கையிடம் காணப்படும் இந்தியா மீதான அச்சமும் இயல்பான இந்திய எதிர்ப்பு வாதமும் இங்கு பலமுற்று இலங்கையில் சீனாவை முன்னிறுத்துவதன் வாயிலாக இந்திய சவாலை வெற்றிகொள்ளும் மூலோபாயத்தை ஆட்சியாளர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நிலைநாட்டிவிட்டன.

ஆதலால் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல எத்தகைய ஆள்மாற்றத்தாலும் இலங்கையில் உள்நாட்டு ரீதியில் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. அது உள்நாட்டு பரிமாணத்தை கடந்துள்ள நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்னெடுப்புக்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

சர்வதேச பரிமாணங்கொண்ட தீர்வு அனுபவங்கள் –

பொஸ்னிய – ஹெசகோவின.

ஒடுக்குவோரின் நோக்குநிலையில் இருந்தல்ல ஒடுக்கப்படுபவரின் நோக்கு நிலையில் இருந்துதான் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அரசியல் யாப்பு முன்மொழிவுகள் ஒடுக்கும் சிங்கள – பௌத்த இனத்தின் நோக்கு நிலையில் இருந்தும் ஆட்சியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குநிலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளனவே தவிர பேரழிவிற்கு உள்ளான ஒடுக்கப்படும் தமிழினத்தின் நோக்கு நிலையில் இருந்தல்ல. இது தீர்வுகாண்பதற்கு எதிரான ஒரு சமன்பாடாகும்.

கிழக்கு ஐரோப்பாவில் இனப்பிரச்சனை இனப்படுகொலை வடிவம் பெற்றது போல இலங்கையிலும் இனப்பிரச்சனையானது இனப்படுகொலை வடிவம் பெற்றுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் இனப்படுகொலை அரசியலானது அது உள்நாட்டு பரிமாணத்தைக் கடந்துபோல இலங்கையின் இனப்படுகொலையும் அது உள்நாட்டு பரிமாணத்தைக் கடந்த ஒன்றாகும்.

புழைய யூகோஸ்லாவியாவில் செர்பிய இனத்தவர் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்டனர். இதனால் யூகோஸ்லாவியா 5 அரசுகளாக உடையும் நிலை ஏற்பட்டது. இதில் பொஸ்னிய – ஹெசகோவின பிரச்சனையும் ஒன்று. பொஸ்னிய – ஹெசகோவின பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக Dayton Peace Agreement- 1995 சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொஸ்னிய, ஹெசகோவின இனத்தவர்களும், செர்பிய அரசு, குரோஷிய அரசு மற்றும் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இணைந்து மேற்படி சமாதான தீர்வை உருவாக்கின. இதனை நடைமுறைப்படுத்த நேட்டோ படை பயன்படுத்தப்பட்டது.

இந்த சமாதான ஒப்பந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவற்கு பொருத்தமாக பொஸ்னிய – ஹெசகோவின அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் யாப்பில் மேற்படி டேட்டன் சமாதான உடன்படிக்கை 4வது சரத்தாக இணைக்கப்பட்டது. தீர்வுகாணப்பட்ட பின்பு அந்த தீர்விற்கு பொருத்தமான புதிய யாப்பு உருவாக்கப்பட்டமைதான் வரலாறு இங்கு முன்வைத்திருக்கும் படிப்பினையாகும்.

ஆனால் இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் மீது இனப்படுகொலையைப் புரிந்த அரசு தனது யாப்பின் மரபிற்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு ஓர் அரசியல் தீர்வைப் பற்றி பேசுவது தலைகீழ் வடிவம் மட்டுமல்ல அது பொய்யானதுங்கூட.

இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அண்டைநாடான இந்தியாவிற்கு கூடிய பொறுப்பு உண்டு. இந்தியாவின் பங்களிப்பின்றி எந்தவகையிலும் உள்நாட்டு அர்த்தத்தில் தீர்வுகாண முடியாது. இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்புடனான அரசியல் முன்னெடுப்புக்கள் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வாகவும், இப்பிராந்தியத்தின் அமைதிக்கான ஒரே வழியாகவும் அமையமுடியும்.

மொத்தத்தில் இனப்படுகொலை வடிவம் பெற்றுவிட்ட சர்வதேச பரிமாணங்கொண்ட இனப்பிரச்சனையை, அத்துடன் வெளிவல்லரசுகளின் நலன்களோடு சம்பந்தப்படுத்தப்படும் இனப்பிரச்சனையை வெறும் உள்நாட்டு பரிமானத்தில் கொழும்பில் அமர்ந்திருந்து தீர்க்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பின் திண்ணை கட்டியயமை மிகப் பெரும் வரலாற்று முரணாகும்.

“எதை மாற்றமுடியுமோ அதன் மீது செயற்படு; எதை மாற்ற முடியாதோ அதை புரிந்துகொள்” என்று ஒரு தத்துவார்த்த ரீதியான தமிழ்ப் பழமொழியுண்டு. முட்டையை அடைகாத்துத்தான் குஞ்சாக்கலாமே தவிர கல்லை அடைகாத்து குஞ்சாக்க முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்லை அடைகாத்த கதையாக அது மேற்கொண்ட அரசியல் தீர்வு நடவடிக்கைகளும், அரசியல் தீர்வு முன்வரைவும் அமைந்துள்ளது.

http://thuliyam.com/?p=80339

 

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.