இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது?
படக்குறிப்பு,இரானின் உச்ச தலைவர் மீதான இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் மற்றும் அவரது படுகொலையை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் "கடுமையான மீறல்" என்று சீனா வர்ணித்துள்ளது.
கட்டுரை தகவல்
பிரேர்ணா
பிபிசி செய்தியாளர்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல்கள் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை.
மாறாக, இந்த நெருக்கடியான நேரத்தில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் இரானுடன் நிற்க முடிவு செய்துள்ளன என்பதையும் உலகம் உற்று நோக்குகிறது.
இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளின் ஒவ்வோர் அறிக்கையும், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், ஒவ்வொரு ராஜ்ஜீய சமிக்ஞையும் கவனமாக ஆராயப்படுகின்றன.
இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களை 'ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது' என்று சீனா விவரித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "இரானின் உயர்மட்டத் தலைவரின் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும்" என்று கூறியுள்ளது.
"இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கவும் செய்கிறது."
அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
"ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் முழு உலகிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனா தனது எதிர்வினையில் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிற்கு எதிராக எந்த இடத்திலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
சீனாவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து, நிபுணர்களும் சர்வதேச விவகார வல்லுநர்களும் இதன் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கி கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.
இந்தக் காரணங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு முன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே இதேபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது சீனா எப்படி, எந்த வார்த்தைகளில் எதிர்வினையாற்றியது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
முந்தைய மோதலில் சீனாவின் நிலைப்பாடு எப்படி இருந்தது?
கடந்த ஆண்டு இரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சீனா தனது முதல் எதிர்வினையில் இஸ்ரேல் 'சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டது' என்று கூறியிருந்தது.
ஒரு நாள் கழித்து, ஜூன் 14 அன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) இரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.
ஜூன் 15 அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் பேசினார்.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இது இரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று குறிப்பிட்டதுடன், இரானிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களையும் பொதுமக்களின் மரணங்களையும் கடுமையாகக் கண்டித்தது.
சீனா தனது அறிக்கையில், "இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவை. குறிப்பாக, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது" என்று கூறியிருந்தது.
அதாவது, கடந்த ஆண்டும் சீனாவின் எதிர்வினையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பது நாம் கடந்த முறையைத் திரும்பிப் பார்க்கும்போது தெரியவருகிறது.
இதனால் தான் கடந்த ஆண்டும் சீனா ஏன் இவ்வாறான பதிலை அளித்தது என்ற கேள்வி விவாதப் பொருளானது.
அப்போது, புது டெல்லியைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான 'அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின்' சிறப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி ஒரு கட்டுரையில், இரானுடன் வலுவான உறவைக் கொண்டிருந்த போதிலும், சீனா எச்சரிக்கையான மற்றும் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக எழுதினார்.
சீனாவின் சமநிலையான எதிர்வினைக்கான காரணங்கள்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங்.
தற்போது நடந்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனைக் குழுவான 'சாதம் ஹவுஸின்', மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் இணை ஆய்வாளர் அகமது அபுது, சீனாவின் இந்த கட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
அதில், "இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலுக்கு சீனாவின் எதிர்வினை, சீனா இரானைக் கைவிட்டுவிட்டது அல்லது கடினமான காலங்களில் இரானுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக அது இல்லை என்று சிலரை நம்ப வைக்கக்கூடும்" என்றும், "ஆனால் வெனிசுவேலாவில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மூலம் எண்ணெய் துறையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சீனாவின் நெருங்கிய கூட்டாளியான நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியபோது கூட, சீனா எந்தவொரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. எனவே இது சீனாவிற்குப் புதியதல்ல" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரான் குறித்து அவர் எழுதுகையில், "இரானுக்கு நேரடி ராணுவ ஆதரவை வழங்குவதை சீனா எப்போதும் தவிர்த்தே வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் 12 நாள் போரின் போது கூட, சீனா இரானுக்கு எந்தவொரு உண்மையான ராணுவ அல்லது பெரிய பொருளாதார உதவிகளையும் வழங்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இதற்குப் பின்னால் உள்ள இரண்டு முக்கிய காரணங்களை அவர் குறிப்பிடுகிறார்.
இரான் அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பாத சீனா
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரானும் சீனாவும் 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்.
சீனாவும் இரானும் விரிவான மூலோபாய பங்காளிகள் என்றும் , இருப்பினும் 2015 இரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (ஜேசிபிஓஏ) முன்னதாக இரான் மீதான ஐ.நா தலைமையிலான பொருளாதாரத் தடைகளை சீனா ஆதரித்தது என்றும் அகமது அபுது எழுதுகிறார்.
இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தான் எதிர்ப்பதாக சீனா பகிரங்கமாகத் தெரிவிக்கிறது. இரான் அணுசக்தி நாடாக மாறினால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கக்கூடும் என்று அது கவலைப்படுகிறது.
இது நடந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கியமான கடல் வழிகள் மூடப்படலாம், இது சீனாவின் எண்ணெய் இறக்குமதியை பாதிப்பது மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் அதன் பொருளாதார நலன்களையும் பாதிக்கும்.
இரான் அணுசக்தி நாடாக மாறினால், சீனாவின் மற்ற போட்டியாளர்களான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்கப் போட்டியிடும், இது சீனாவிற்கு ஒரு புதிய பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தும்.
'அமெரிக்காவுடன் சமநிலையான உறவுகளைப் பேண சீனா முயற்சிக்கிறது'
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் செய்யக்கூடும்.
இரண்டாவது காரணத்தை முன்னிலைப்படுத்தி அவர் எழுதுகையில், இரானில் உள்ள ஒரு பலவீனமான ஆட்சியை சீனா தனக்கான அச்சுறுத்தலாகவும் அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் கருதுகிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான அரசாங்கம் இங்கு ஆட்சிக்கு வருவதை சீனா விரும்பவில்லை, ஆனால் தற்போதைய ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, இரானை தன்னை மேலும் சார்ந்திருக்கச் செய்ய முடியும் என்று அது கருதுகிறது.
சீனா தனது நீண்டகால உத்தி சார்ந்த இலக்குகளை அடையவும் முயற்சிக்கிறது, ஆனால் அவ்வாறு செய்யும்போது, அது அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்வதில்லை.
குறிப்பாக, ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமநிலையையும் நிலைத்தன்மையையும் பேண சீனா விரும்புகிறது.
பிப்ரவரி 4 அன்று, டிரம்ப் மற்றும் ஜின்பிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதில் இரான், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இரான் விவகாரத்தில் ஒப்பீட்டளவில் மென்மையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், தைவான் மற்றும் வர்த்தகம் போன்ற தனது முக்கிய நலன்களில் அமெரிக்காவிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கான உத்தியை சீனா பின்பற்றி வருவதை இது உணர்த்துகிறது.
சீனாவின் சிக்கலான வெளியுறவுக் கொள்கை
சீனா வெளியுறவுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பது இப்போது மிகவும் கடினமாகியுள்ளது என்று கூறுகிறார் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் எலாரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரே கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ள அமைப்பின் கீழ் சீனா இயங்குகிறது. இத்தகைய அமைப்பில் வெளியுறவுக் கொள்கை என்பது மிகவும் சிக்கலானது" என்கிறார்.
"இரான் மீதான சீனாவின் அணுகுமுறை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இது பேச்சுவார்த்தை, இறையாண்மை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால், கொள்கை ரீதியான வலியுறுத்தல் மட்டுமே பிராந்திய நெருக்கடிகளைத் தீர்த்துவிடுமா? என்பது தான் கேள்வி."
"கடந்த 30–35 ஆண்டுகளாக, சீனா தன்னை ஒரு பன்முனை உலக ஒழுங்கின் ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தனக்கு வேறுபட்ட உலக ஒழுங்கு வேண்டும் என்று அது மீண்டும்மீண்டும் கூறி வருகிறது. ஆனால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்படும் போது, அதன் செயல்பாடு வரம்புக்குட்பட்டதாகவே தோன்றுகிறது."
"இரான் விவகாரம் இந்த வரம்பை எடுத்துக் காட்டுகிறது, அங்கு சீனாவின் பொருளாதார நலன்கள் பெரியவை, ஆனால் அரசியல் செல்வாக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது"என்றும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சமீபத்திய ஆண்டுகளில் இரான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சீனா முயற்சித்துள்ளது (சீன அதிபர் ஜின்பிங்கின் கோப்புப் புகைப்படம்)
தற்போது, சர்வதேசத் தடைகளால் தத்தளிக்கும் இரானிய பொருளாதாரத்திற்கு சீனா ஒரு பெரிய ஆதரவாக உள்ளது.
2025 ஆம் ஆண்டில் இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியை சீனா வாங்கியது.
இருப்பினும், சீனாவுக்கு மலிவான விலையில் எண்ணெய் கிடைப்பதால், இதன் நன்மைகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல.
ஆனால் பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இரான் உறுப்பினராவதை ஆதரித்ததன் மூலம் சர்வதேச அளவில் இரான் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா முயன்றுள்ளது.
கூடுதலாக, 2021இல் இரு நாடுகளுக்கும் இடையே 25 ஆண்டுகால மூலோபாய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரவிந்த் எலாரியின் கூற்றுப்படி, சீனா இரானுக்கு ஏவுகணை பாகங்கள் மற்றும் எரிபொருளை வழங்கி வருகிறது. பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்திலும் சீனா இரானுக்கு உதவியுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டங்கள் அணு ஆயுதங்களை மட்டுமல்லாமல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இரான் நேரடி ராணுவ அழுத்தத்தையும் பிராந்திய பதற்றங்களையும் எதிர்கொள்ளும் சூழலில், சீனாவின் பங்கு ஒப்பீட்டளவில் வரம்புக்குட்பட்டதாகவும் எச்சரிக்கையுடனும் காணப்படுகிறது.
சீனா தொடர்ந்து பொருளாதார மற்றும் ராஜ்ஜீய ஆதரவை வழங்குகிறது, ஆனால் வெளிப்படையான ராணுவ ஆதரவையோ அல்லது நேரடி மோதலையோ தவிர்க்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இரான் தாக்கப்படும் நிலையில் அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா என்ன செய்கிறது?
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.