Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயக மாணவர்களின் உரிமைகள், உயிர்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Featured Replies

தமிழர் தாயக மாணவர்களின் உரிமைகள், உயிர்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

* சிவனேசன் எம்.பி. சிறுவர் பாதுகாப்பு நிதிய அதிகாரிக்கு மகஜர்

வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்து மாணவர்களின் மறுக்கப்படும் உரிமைகளும் பறிக்கப்படும் உயிர்களும் தடுக்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி. சிவனேசன் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய யாழ்ப்பாண வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பியுள்ள அவசர மகஜரில் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஸ்ரீலங்காவில் உள்ள வட கிழக்கு பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 1839 ஆம் ஆண்டிற்கு முன்பு வட, கிழக்கு பிரதேசம் தனித்துவமாக மதிக்கப்பட்டமையும் பண்டயகாலத்தில் தமிழரசர் ஆட்சிக்குட்பட்ட தனித்துவமான பிரதேசமாகவும் மிளிர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசம் மீண்டும் எமது தமிழரின் ஆட்சிக்குட்படும்போதே தமிழ் பேசும் மக்களிற்கான உரிமையும் சுதந்திரமும் கிடைக்கும் என்பதற்காகவே தமிழினம் போராடுகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசு இப்போராட்டத்தை பயங்கரவாதம் என உலக நாடுகளுக்கு பறைசாற்றி அவர்களிடமிருந்து இராணுவ தளபாடங்களை கடனாகவும் நன்கொடையாகவும் பெற்று தமிழினத்தை அழித்து தமிழர் தேசத்தை சிதைத்து சுடுகாடாக்கி ஆக்கிரமித்து தமிழர் தேசத்தையும் சிங்கள பௌத்த நாடாக்கும் நீண்டகால சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க முயலுகின்றது.

இத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் வகையிலேயே எதிர்கால சந்ததியினரான தமிழர் தாயகத்து மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும் அவர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டும் தமிழ் மாணவர்களை நவீன உலகிற்கு பொருத்தமற்றவர்களாக்கும் முயற்சியினை ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் முன்னெடுத்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடயத்தில் வடகிழக்கில் வாழும் மாணவர்கள், சிறார்களின் நிலைபற்றி அவதானிப்பது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக 1970 களில் தரப்படுத்தல் நடவடிக்கையுடன் கல்வியில் முன்னிலை வகித்து வந்த பல தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி படிப்படியாக மறுக்கப்பட்டதுடன், சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்பட்டது. இதனால், பல தமிழ் மாணவர்கள் உளரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நடவடிக்கையினைத் தொடர்ந்து 31.05.1981 இரவு யாழ். நூல் நிலையத்திலிருந்த 90,000 இற்கும் மேற்பட்ட விலை மதிக்க முடியாத இலக்கிய வரலாற்று பதிவேடுகளை எரித்ததன் மூலம் எமது பண்பாட்டை படுகொலை செய்ததுடன் மாணவர்களின் அறிவுச் சுரங்கம் அழிக்கப்பட்டது. இக்கொடூரமான பாதகசெயலை ஜெயவர்தனவின் ஆட்சிப் பீட அமைச்சர்களான காமினி திஸாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் நெறிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய செயலை தொடர்ந்து 1990 களில் வடகிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் சில உயர்பாதுகாப்பு வலயங்களாக ஸ்ரீலங்கா இராணுவத்தால் அபகரிக்கப்பட்டதன் விளைவு வடகிழக்கில் இயங்கி வந்த 117 பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டு இயங்காநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது, போர்நிறுத்த காலத்திற் கூட ஸ்ரீலங்கா அரசின் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் 29 பாடசாலைகளும் வடமராட்சி கிழக்கில் 11 பாடசாலைகளும் இயங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும், சில பாடசாலைகள் இராணுவ முகாமிற்குள்ளேயே செயல்படுவதனால் முட்கம்பி சுருள்களுக்கூடாக துப்பாக்கிக் குழல்களுக்கு மத்தியிலும் உயிர் அச்சுறுத்தலுடன் கூடிய கற்கையினை எமது மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர். இச்சூழல் கற்றலுக்கு உகந்ததா?

இந்நிலையில் கல்வி கற்கும் மாணவருக்கு போதிய வகுப்பறைகள் இல்லை, கற்றல் உபகரணங்கள் இல்லை, பாடப்புத்தகங்கள் இல்லை, சீருடைகள் இல்லை போஷாக்கு உணவுகள் இல்லை. மரங்களின் கீழே இருந்து கல்வி கற்கும் எமது மாணவர்களின் அவலம் எப்போது முடிவுறும்? தென்னிலங்கையில் உள்ள பாடசாலைகளில் மேற்குறித்த அனைத்து வசதிகளும் 100 வீதம் கவனிக்கப்படுகின்றது. 1 ஆம் ஆண்டு முதல் 3 ஆம் ஆண்டு வரை கற்கும் மாணவருக்கு ஒருநாள் உணவுக்கு ரூ. 15 வழங்கப்படுகிறது. இதற்காக கல்வி அமைச்சு 100 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. ஆனால், வடகிழக்கு மாணவர்கள் பட்டினியுடன் கூடிய கற்றலையே அனுபவிக்கின்றனர். இந்நிலை பற்றி ஸ்ரீலங்கா அரசு சிந்திக்க விரும்பாத நிலையையே அவதானிக்க முடிகின்றது.

வளங்கள் அற்ற கற்றலின் போதும் வான்படைத்தாக்குதல்கள் எமது மாணவர்களை விட்டுவைக்கவில்லை. 22.09.1995 இல் நாகர் கோவில் அ.த.க. பாடசாலை மீதான வான்படைத்தாக்குதலில் 30 மாணவர்கள் சீருடையோடு கொல்லப்பட்டு சதைக்குவியல்களாக கிடந்தனர். வள்ளிபுனத்தில் முதலுதவி பயிற்சிபெற்ற மாணவிகள் 51 பேர் வான்படைத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டமையும் 150 இற்கும் மேற்பட்டவர்கள் ஊனமுற்றவாழ்வுக்கு தள்ளப்பட்டமையும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. மேலும், 07.09.1996 இல் கிருசாந்தி எனும் பாடசாலை மாணவிபோல எத்தனை மாணவர்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டனர்? இதற்கான விசாரணைகளும் புதைகுழியிலேயே அரசு மூடிமறைத்துள்ளது.

வடகிழக்கு தாயக நிலப்பரப்பில் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளில் மாணவர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் சாதாரணமான நிகழ்வுகளாகின்றன. குறிப்பாக, போர்நிறுத்தம் நடைபெற்று 5 வருடகாலத்தில் 2082 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டில் மட்டும் 451 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடத்தலுக்கும் கொலைகளுக்கும் ஸ்ரீலங்கா பொலிஸாரே துணைபோகின்றனர் எனும் காரணத்தால் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்ரீலங்காவின் காவல்துறை செயலிழந்துவிட்டது எனச் சாடியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் பட்டினி வாழ்வை அனுபவிக்கும் அவலம் காரணமாக 418 பாடசாலையில் கல்வி பயிலும் 155,389 மாணவர்களில் 10,201 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. இவர்களின் எதிர்காலம் என்ன? திருகோணமலை, வாகரை பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்த 76,000 மக்களில் 15,000 சிறுவர்களும் 5000 குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் உணவின்றி உயிர்வாழப் போராடுகின்றனர். இவர்களின் அடிப்படைப் பிரச்சினையை உருவாக்கியவர்கள் உலக நாடுகளின் தொண்டு நிறுவனங்களையும் உதவிசெய்ய தடை செய்துள்ளனர். இத்தகைய கொடூர செயலை செய்பவரை யார் கண்டிப்பது? யார் திருத்துவது?

பல்கலைக்கழக மாணவர்களின் நிலை மோசமடைந்து வருகின்றது. குறிப்பாக பல்கலைக்கழக வளவினுள்ளேயே இராணுவம் உட்புகுந்து தேடுதல் வேட்டை நடாத்துவதும் மாணவர்களை கைது செய்வதும் யாழ். பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சாதாரண விடயமாகிவிட்டது. இதேபோன்று, தான் தொழில்நுட்பக் கல்லூரி, விவசாயக் கல்லூரிகளிலும் நடைபெறுகின்றது. இராணுவத்தால் திருகோணமலையில் 5 மாணவர்களும் வவுனியாவில் விவசாயக் கல்லூரியில் 5 மாணவர்களும் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக 4 ஆம் வருட கலைப்பிரிவு மாணவன் கிருஷ்ணன் கமலதாஸ், செல்வரட்ணம் சிவறஞ்சன் ஆகியோரும் சுடப்பட்டனர். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்வடிவேல் மாணவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. எனவே, மாணவர்கள் தமது உயிரை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என தெரியப்படுத்தினார். இந்நிலை எதனை காட்டுகின்றது?

இறந்த மாணவன் சிவறஞ்சனின் உடலத்தைக் கூட விசுவமடுவில் உள்ள தாயும் சகோதரிகளும் பார்க்க முடியவில்லை. உடலத்தை விசுவமடுவுக்கு அனுப்புவதற்கு த.தே.கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சு மூலம் எடுத்த நடவடிக்கை பலனளிக்கவில்லை. இந்நிலையில் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கல்வி கற்கும் மாணவர்களின் நிலை என்ன? அச்சத்துடன், கல்வி கற்றாலும் இறப்பு ஏற்படின் உடலத்தை உறவுகள் பார்க்க முடியாத நிலை தமிழர் தாயகப் பிரதேசத்தில் உருவாகியுள்ளமை கவலை தருகின்றதல்லவா?

இத்தகைய, சூழ்நிலையில் இன்றுவரை தமிழ்பேசும் மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் உயிர்கள் பறிக்கப்படுவதும் ஸ்ரீலங்கா அரசின் நீண்டகால சிந்தனையுடனான செயற்பாடாகும். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். இச்செயற்பாட்டை தடுத்து தமிழ்பேசும் மக்களின் எதிர்கால சந்ததி உலக அரங்கில் சிறப்புடன் வாழ வேண்டுமானால் ஸ்ரீலங்கா அரசிற்கான அழுத்தத்தை கொடுத்து தமிழ்பேசும் மக்கள் தமது தாயக நிலப்பரப்பில் தன்னாட்சி அதிகாரத்துடன், இறைமையுடன் கூடிய சுதந்திர வாழ்வை வாழ்வதற்கான வழியினை ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு அமைவாக உருவாக்கி எமது எதிர்கால சந்ததியும் உலக வளர்ச்சிப்போக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி தரல் வேண்டும். அதற்காக ஐ.நா.வின் மேலான ஒத்துழைப்பினை தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

http://www.thinakkural.com/news/2007/3/9/i...s_page22931.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.