Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்!

 

p42e.jpgடகிழக்குப் பருவமழையில் நனைந்த படியே வந்த கழுகார், ‘‘தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் நவம்பர் 8-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்குமோ என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது’’ என்றபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.  அதை, கறுப்பு நாளாக அறிவித்திருக்கின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 18 கட்சிகள். தி.மு.க சார்பில் அன்றைய தினம், ‘மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில், அந்த நாளை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளது பி.ஜே.பி. ஒரே நாளில் மத்தியில் ஆளும் கட்சி ஒரு பக்கமும், ஆளும் பி.ஜே.பி-யை எதிர்க்கும் மற்ற கட்சிகள் மறுபுறமும் களத்தில் இறங்குகின்றன. அது, அரசியலில் முக்கியத் திருப்புமுனை நாளாக அமைய வாய்ப்புள்ளது.’’

‘‘நவம்பர் 7-ம் தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறதே?’’

‘‘நவம்பர் 8 பரபரப்புக்கு அது முன்னோட்டமாக இருக்கலாம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்தில் தி.மு.க-வையும் டேமேஜ் செய்யும் விவகாரமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு உள்ளது. இப்படி, தேதிகள் அடுத்தடுத்து அமைந்ததுதான் பலருக்கும் ஆச்சர்யம். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் வருமானவரித் துறை, சி.பி.ஐ ரெய்டுகள், நீதிமன்றங்களில் வழக்குகள் என எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள்.

p42f.jpg

மத்திய பி.ஜே.பி ஆட்சியில், இது அதிகமாக இருக்கிறது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதிமன்றங்களின் தீர்ப்பு தேதிகள்கூட எதேச்சையாக அமைந்தாலும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் தொனியில்தான் வெளியாகின்றன என விமர்சனங்கள் கிளம்புகின்றன. ஒன்பது மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி, சட்டென சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வெளியானது. அதுபோல, 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதியும் அமைந்துவிட்டது. இந்த வழக்கில், இதற்கு முன்பு இரண்டு முறை தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்தார் நீதிபதி ஓ.பி.சைனி.’’

‘‘எதனால் தீர்ப்புத் தேதி தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது?’’

‘‘2ஜி வழக்கு விசாரணை, நீதிபதி ஓ.பி.சைனி அமர்வுக்கு வந்தது முதல் அவர் இந்த வழக்கை மிகக் கறாராக விசாரித்தார். நீதிமன்றத்தில் ஒருநாள் ஆஜராகாத காரணத்துக்காக, கனிமொழிக்கு ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார். அப்படி நடத்தப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நிறைவடைந்தது. அதன்பிறகு ஜூலை 5-ம் தேதியன்று, ‘இந்த வழக்கின் கூடுதல் ஆவணங்கள், வாதங்களில் திருத்தங்கள் இருந்தால் அனைத்துத் தரப்பும் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். அன்றுடன் வழக்கின் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 5-ம் தேதி நீதிமன்றம் கூடியபோது, ‘2ஜி வழக்கில் மிக விரிவாகத் தீர்ப்பு எழுத வேண்டியுள்ளது. அதற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வழங்கப்படும்’ என்றார். இதன்பின் அக்டோபர் 26-ம் தேதி நீதிமன்றம் கூடியபோது, ‘நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பின் தேதியை அறிவிக்கிறேன்’ என்றார். இப்படி தீர்ப்புத் தேதி தள்ளிப்போவதற்கு காரணம், வழக்கின் தன்மைதான். அமலாக்கத் துறை, சி.பி.ஐ தொடர்ந்த வழக்குகளில் வலைப்பின்னல் மிகச் சிக்கலானது. 2ஜி வழக்கு ஒருபுறம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணம் வந்தது மறுபுறம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விவகாரம் இன்னொருபுறம் எனச் சிக்கலான வழக்காக உள்ளதால் விரிவான, விளக்கமான தீர்ப்பெழுத ஓ.பி.சைனி காலஅவகாசம் எடுத்துக்கொண்டிருக்கலாம்.’’

‘‘தீர்ப்பு என்ன பாதிப்பை உண்டாக்கும்?’’

‘‘தீர்ப்பு பாதகமாக அமைந்தால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்குப்  பின்னடைவாக இருக்கும். அதேநேரம், தி.மு.க-வுக்குள் சலசலப்பை உண்டாக்கலாம். அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் கனவில்இருக்கும் தி.மு.க-வின் இமேஜும் சரியும். ஆனாலும் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியைத் தீர்ப்பு பெரிதாகப் பாதிக்காது என்கின்றனர் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள்.’’

‘‘2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைப் பாதித்த 2ஜி விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தாதா?’’

‘‘சில விவகாரங்கள் அதிகபட்சம் இரண்டு தேர்தல்களோடு முடிந்துவிடும். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தொடர்ந்து அது பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், அந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தி.மு.க-வின் பிரதான எதிரிக் கட்சியான அ.தி.மு.க சிதறிக்கிடக்கிறது. அதை, பொம்மை அரசாங்கம்போல பி.ஜே.பி நடத்திக் கொண்டிருக்கிறது என்ற கடுமையான விமர்சனம் தமிழக மக்கள் மனதில் இருக்கிறது. இதில் மக்கள் வெறுப்படைந் துள்ளனர். இப்படியான நேரத்தில், 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்து முன்னாள் அமைச்சர் ராசாவோ... தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியோ சிறைக்கு அனுப்பப்பட்டாலும், அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறது தி.மு.க. அதற்கேற்பதான் 2ஜி விவகாரம் கட்சிக்கு அப்பாற்பட்டது போன்று ஸ்டாலின் அரசியல் செய்கிறார். கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரைக்கும் 2ஜி விவகாரத்தில் கருத்துகளைச் சொல்லி வந்தார். அதனால், அது தி.மு.க-வின் விவகாரம் என்பதுபோல் தெரிந்தது. ஆனால், ஸ்டாலின் அப்படியல்ல. அதற்காக, கனிமொழியையும் ராசாவையும் கவனமாக விலக்கியே வைத்துள்ளார்.’’

p42d.jpg

‘‘தீர்ப்பு பாதகமாக அமைந்தால் தி.மு.க-வுடன் இணக்கமாக உள்ள இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க ஆகியவை விலகுவதற்கு வாய்ப்புள்ளதா?’’

‘‘2ஜி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே திருமாவளவன் தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். முஸ்லிம் லீக்கும், தி.மு.க-வும் வேறு வேறல்ல. மனிதநேய மக்கள் கட்சி, பி.ஜே.பி எதிர்ப்பு கொள்கை அடிப்படையில் தி.மு.க-வைவிட்டு விலகாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.க-வை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியும் ம.தி.மு.க-வும் 2ஜி தீர்ப்பைப் பொறுத்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றலாம். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி சிதறியுள்ள நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட தி.மு.க-வின் கூட்டணி பலம் கூடியிருக்கும் சூழலில், 2ஜி தீர்ப்பு எதிராக அமைந்தாலும் அது, தி.மு.க-வுக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்காது என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.’’

‘‘ஓஹோ’’

‘‘அதே நவம்பர் 7-ம் தேதி கமல் என்ன அறிவிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  ஆனால், ‘கட்சி அறிவிப்பு எதுவுமில்லை’ என ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் கமல். ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7,இயக்கத்தார்கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என ட்விட்டரில்  குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியிருக்கும் கமல்ஹாசன், விரைவில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க இருப்பதாக  சொல்லியிருந்தார். ஏன் இப்போது ஜகா வாங்குகிறார் எனப்  பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள்,  நவம்பர் 7-ம் தேதி கமல் வெளியிடப்போகும் பொது அறிவிப்புகளில் அரசியல் இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தன் ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்காக மொபைல் ஆப்-பைத் தயாரித்திருப்பதாகவும், அதை அன்றைய தினம் கமல் வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள்.’’

p42a.jpg

‘‘விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே என்னதான் பிரச்னை?’’

‘‘தமிழகத்தில் தனக்கான வாக்கு வங்கியை உருவாக்கத் திட்டமிட்டது பி.ஜே.பி. அதற்காக, பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்க நினைத்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முயற்சி வெற்றிபெற்றது. அதே ஃபார்முலாவைக் கையிலெடுத்து, குறிப்பிட்ட வாக்கு வங்கியுடனும் அமைப்பு பலத்துடனும் இருக்கும்  கட்சித் தலைவர்களை வளைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சிக்கினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவனின் அலுவலகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, ஐந்து முறை திருமாவளவனோடு பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், திருமாவளவனை அவர்களால் வளைக்க முடியவில்லை. அதேநேரம், மத்திய பி.ஜே.பி அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார் திருமாவளவன். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி திருமாவளவன் சென்னையில் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஸ்டாலின், கி.வீரமணி ஆகியோரைப் பேச வைத்தார்.  இதன்பிறகு விடுதலைச் சிறுத்தைகள் மீதான பி.ஜே.பி. எதிர்ப்பு அதிகமானது. தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலரும், திருமாவளவனைக் குறிவைத்துத் பேசத் தொடங்கினார்கள். இதில்தான் கரூரில் கொஞ்சம் களேபரம் ஆனது.’’

‘‘ம்’’

‘‘கரூரில் பி.ஜே.பி-யின் மாநில பொதுக்குழு, அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பு, ‘திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைத்துப் போடுபவர்’ என பி.ஜே.பி.-யின் மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்தார். இதனை எதிர்த்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைச் சிறுத்தையினர். இதனால் பி.ஜே.பி-யினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் இத்துடன் முடியாது. திருமாவளவனின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் விரைவில் ரெய்டு நடக்கும் என்பதுதான் லேட்டஸ்ட் டாக்’’

p42b.jpg

‘‘இப்படி ரெய்டு நடத்தி பணத்தை யெல்லாம் கைப்பற்றிய சேகர் ரெட்டி வழக்கே பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டதே..’’

‘‘ ‘கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி-க்கள்... பிசுபிசுக்கும் சேகர் ரெட்டி வழக்கு’ என்ற தலைப்பில், 13.8.2017 தேதியிட்ட இதழில் உமது நிருபர் தெளிவாக  எழுதியிருந்தாரே.  சேகர் ரெட்டி வீட்டில் டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ ரெய்டு நடத்தின. அப்போது, அவரது வீட்டில் 33 கோடியே 60 லட்சம் ரூபாய்க்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் செல்லாத நோட்டுகளை மாற்ற சிரமப்பட்ட நேரத்தில், சேகர் ரெட்டியிடம் 33 கோடி ரூபாய்க்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒரு மாதத்துக்குள் சேகர் ரெட்டிக்கு இவ்வளவு தொகை வங்கி அதிகாரிகள் மூலம்தான் கிடைத்திருக்க முடியும். வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என சி.பி.ஐ சொன்னது. ஆனால், சி.பி.ஐ-யால் வங்கி அதிகாரிகளை இன்றுவரை அடையாளம் காண முடியவில்லை.’’

‘‘அதில் என்ன சிக்கல்?’’

‘‘சேகர் ரெட்டியிடம் இருந்த பணத்தின் சீரியல் எண்களை வைத்து ரிசர்வ் வங்கியில் சி.பி.ஐ விசாரித்தது. ஆனால், அவர்கள் வங்கிகளுக்கு அனுப்பிய பணத்தின் சீரியல் நம்பரை நோட் செய்து வைக்கவில்லை. அதனால், எந்த வங்கிகளுக்கு, குறிப்பிட்ட சீரியல் எண் உள்ள பணம் போனது, எந்த வங்கியிலிருந்து அது சேகர் ரெட்டிக்குப் போனது என்பதை சி.பி.ஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில், சேகர் ரெட்டி, தனக்குத் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் லாரிகள் ஓடுகின்றன. அங்கிருந்து அந்தப் பணம் வந்தது எனக் கணக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால், சி.பி.ஐ என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது. வங்கி அதிகாரிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கே தவறானதாகிவிடும். அதேநேரத்தில் சேகர் ரெட்டி, முன் தவணையிட்டு, 30 கோடி ரூபாயைக் கூடுதலாக வருமானவரியாக செலுத்தியுள்ளார். அதனால், வருமானவரித் துறை மூலம் அவருக்குப் பிரச்னை வராது என்கிறார்கள். மேலும், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள் எதுவும் இல்லாதாதால், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கும் வலுவிழக்கும்.’’

p42c.jpg

‘‘சசிகலாவின் கணவர் நடராசன் எப்படி இருக்கிறார்?’’

‘‘நன்றாக இருக்கிறார். ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் நடராசனை மருத்துவமனையில் பார்த்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகியிருக்கிறது. அவருக்குத் தற்போது டிராகியாஸ்டமி நீக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொருத்தப்பட்ட கல்லீரல், கிட்னி வேலை செய்யத் தொடங்கியுள்ளது. ஆனாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இன்னும் இருக்கிறார்” என்றபடியே பறந்தார்.


‘‘அ.தி.மு.க எங்கள் கன்ட்ரோலில்!’’ - தமிழிசையின் ஓப்பன் ஸ்டேட்மென்ட்

p42.jpg

ரூரில் நடந்த பி.ஜே.பி-யின் மாநில பொதுக்குழுவில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சுதான் ஹைலைட்.

‘‘கறுப்பும் சிவப்பும் ஆட்சி செய்த தமிழகத்தில் இனி காவியும் ஆட்சி செய்யும். ஆவியைப் பார்த்துப் பயப்படுவதுபோல் இனி காவியைப் பார்த்துப் பயப்படுவார்கள்’’ என்றவர், ‘‘தமிழக ஆட்சி பி.ஜே.பி-யின் கன்ட்ரோலில் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ‘ஆமாம்’ என்பதுதான்.

அ.தி.மு.க-வை முன்பு அந்த அம்மா கன்ட்ரோலில் வைத்திருந்தார். இப்போது அ.தி.மு.க-வை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும்  மோடி கன்ட்ரோலில் வைத்துள்ளார். அதாவது இப்போது பிரதமர் மோடிதான் இந்தியாவுக்கே அம்மா” என்றார்

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.