Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் ஒரு ஜெயசிக்குரு?

Featured Replies

கிழக்கில் ஒரு ஜெயசிக்குரு?

-விதுரன்-

மட்டக்களப்பில் பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் கடைசி படை நடவடிக்கையே, மட்டக்களப்பிலிருந்து புலிகளை வெளியேற்றும் தாக்குதலென படைத்தரப்பு கூறுகிறது. ஆனாலும், இது எந்தளவுக்கு சாத்தியப்படுமென்பதை அங்கு புலிகள் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்கள் அரசுக்கு தெளிவுபடுத்தும்.

தெற்கில் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிழக்கில் சில வெற்றிகள் தேவைப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிரிகள் தற்போது வெளியிடும் தகவல்கள் மகிந்தவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கவும் கட்சிக்குள் தனக்கு ஏற்படப்போகும் அதிருப்திகளை எதிர்கொள்ளவும் ஜனாதிபதிக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையடுத்தே அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் நோக்கில் தற்போது கிழக்கில் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவை பிரித்த பின்னர், வடக்கு- கிழக்கையும் பிரிக்க வேண்டிய தேவை மகிந்தவுக்கு ஏற்பட்டது. கருணா குழுவை பயன்படுத்தி பல்வேறு காரியங்களை சாதிக்க வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு இணைப்பு பெருந்தடையாகும். இதனால் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு- கிழக்கை பிரித்த ஜனாதிபதி மகிந்த, தற்போது கிழக்கை மேலும் தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவதன் மூலம் அங்கு கருணா குழுவின் கையை ஓங்கச் செய்வது இனவாதிகளின் நோக்கமாகும். கிழக்கில் புலிகள் நிலை கொண்டிருந்தால் அது வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தும். கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் அதேநேரம், வடக்கு- கிழக்கு இணைப்பை எதிர்க்கும் கருணா குழுவின் கையை ஓங்கச் செய்வதன் மூலம் வடக்கு- கிழக்கை நிரந்தரமாகப் பிரித்து விடுவதே இவர்களது திட்டமாகும்.

இதேநேரம், கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்கும் அதேநேரம், கிழக்கில் தமிழர்களின் பலத்தை குறைப்பதிலும் அரசு மிகக் கவனமாகியுள்ளது. வடக்கு- கிழக்கு இணைந்திருக்கும் போது தமிழர்களின் பலம் மிக அதிகம். கிழக்கை தனிமைப்படுத்தி விடுவதன் மூலம், குடியேற்றங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட சிங்களவர்களதும் முஸ்லிம்களினதும் பலம் அதிகமாகிவிடுமென அவர்கள் கருதுகின்றனர்.

இணைந்த வடக்கு- கிழக்கு, தமிழீழம் என்பதெல்லாம் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் வரையே எனக் கருதும் இனவாதிகள் வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்து புலிகளை வடக்குடன் மட்டுப்படுத்தும் அதேநேரம், கிழக்கில் கருணா குழுவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கிழக்கை தம்வசப்படுத்திவிடலாமெனவும் கருதுகின்றனர்.

இதேநேரம், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை தென்னிலங்கை கட்சிகளிடையே எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தென்பகுதிக் கட்சிகள் ஒருமித்து எவ்வித தீர்வை முன்வைக்கப்போகின்றன என சர்வதேச சமூகம் கேள்வியெழுப்பி வருகிறது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில், தெற்கிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் யோசனைகளை முன்வைத்து இதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இறுதி யோசனையொன்றை பெற்றுவிட வேண்டுமெனக் கூறப்பட்டாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை தனது யோசனையை முன்வைக்கவில்லை.

வடக்கு- கிழக்கு, நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுவிட்டது. கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இது சாத்தியப்படும் வரை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி தனது யோசனையை முன்வைக்க மாட்டாது.

கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் படை நடவடிக்கை வெற்றி பெற்றால் உடனடியாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடத்தி தனக்கு விருப்பமான தரப்பை ஆட்சியதிகாரத்துக்கு வரச் செய்வது ஜனாதிபதியின் திட்டமாகும். அதற்கேற்ப அங்கு ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்திவிட்டால் அவர்கள் ஆதரவுடன் தேர்தலில் குதிக்க எவருமே முன்வரமாட்டார்கள். அவ்வாறு புறப்படுபவர்களை அப்புறப்படுத்தும் விதத்திலேயே அங்கு களநிலைமைகளை அரசு உருவாக்கி வருகிறது.

இதன் மூலம் கிழக்கில் தனக்குப் பிடித்த ஒரு தரப்பை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்து விட்டால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இறுதித் தீர்வுத் திட்டத்தை சுலபமாக முன்வைத்துவிட முடியுமென இவர்கள் கருதுகின்றனர்.

வடக்கு- கிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்களையும் தமிழீழத்தை எதிர்ப்பவர்களையும் கிழக்கில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திவிட்டால் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு குறித்து தெற்கில் சுலபமாக இணக்கப்பாடொன்றை எட்டிவிட முடியுமென இனவாதிகள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலையில் வடக்கு- கிழக்கு இணைந்த தீர்வுத் திட்டத்தையே சர்வதேச சமூகம் ஆதரிக்கிறது. கிழக்கில் தமிழர்களின் பலத்தை முடக்கி வடக்கு- கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் தமிழீழத்திற்கு எதிராகவும் கிழக்கு மக்களின் ஆதரவை தேர்தல் மூலம் பெற்றுவிட்டால் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வில், வடக்கு- கிழக்கு இணைப்பென்ற பேச்சே இல்லாது போய்விடுமென்றும் இனவாதிகள் கருதுகின்றனர்.

இதனால் கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தி, கிழக்கு மாகாண சபைக்கு அவசர அவசரமாக தேர்தலொன்றை நடத்தி, அதன் மூலம் வடக்கு- கிழக்கு இணைப்புக்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெற்று, அதன் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இறுதி யோசனையை முன்வைப்பதுடன் வடக்கு- கிழக்கு இணைக்கப்படாத ஒருமித்த யோசனையொன்றை தெற்கில் உருவாக்கிவிட வேண்டுமென்பதும் இனவாதிகளின் திட்டமாகும்.

இந்த நிலையில்தான் சர்வகட்சி பிரதிநிதிதிகள் குழுக் கூட்டத்தில் தனது யோசனையை முன்வைக்க முன்னரும் கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்னரும் கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீவிர அக்கறை செலுத்துகிறார். இதற்காகவே தற்போது அரசு மட்டக்களப்பில் பாரிய படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாடு தொடர்ந்து அமுலிலிருக்கையில் தொடர்ந்தும் போர் நடைபெறுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை விட்டு உடுத்த உடுப்புடன் பாதுகாப்புத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி புலிகள் தங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகக் கூறிக்கொண்டு மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து படையினர் அகோர ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்டமே அதிர்ந்து கொண்டிருக்கிறது.

ஒருபுறம் வாகரையிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசு மட்டக்களப்பிலிருந்து மக்களை குடிபெயர்த்து வருகிறது. இதனால் சுமார் 20,000 மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

தங்களை புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதிலிருந்து தப்பி ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் வந்து கொண்டிருப்பதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. அரசையும் படையினரையும் நம்பியே இந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உண்மை அதுவல்ல. புலிகள் மீது இந்த மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டதாலேயே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகிறார்கள். தமிழ் மக்களை கொன்று குவிக்கும் நோக்கில் ஈவிரக்கமின்றி இரவு பகலாக கண்மூடித்தனமாக படையினர் ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இதனால், பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் நூற்றுக் கணக்கான வீடுகள் முற்றாக நாசமாகியுள்ளன. தமிழ் மக்களின் பிரதேசங்கள் மீது படையினர் கடும் தாக்குதலை நடத்துவது போல் படைமுகாம்களை நோக்கிபுலிகள் ஷெல் தாக்குதல் நடத்துவது கிடையாது. படைமுகாம்களுக்கு அருகில் தவறி ஷெல்கள் வீழ்ந்து விட்டால் அது மக்களையே பாதிக்குமென்பதால் புலிகள் படைமுகாம்களை நோக்கி ஷெல் தாக்குதலை நடத்துவதில்லை.

இதனாலேயே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் புலிகள் ஷெல் தாக்குதல்களை நடத்த மாட்டார்களென்பதால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள், படையினரை நம்பியல்ல புலிகளை நம்பியே பாதுகாப்புத் தேடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்றனர்.

புலிகளின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்தே தாங்கள் தாக்குவதாக படையினர் கூறுகின்றனர். அப்படியென்றால் படையினரின் தாக்குதலில் புலிகளல்லவா கொல்லப்பட வேண்டும். புலிகளின் முகாம்களல்லவா அழிக்கப்பட வேண்டும். இத்தனை வருட காலப் போரில் கொல்லப்பட்டதெல்லாம் அப்பாவி மக்களென்பதுடன் அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களது வீடு வாசல்களே.

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது புலிகளா அல்லது படையினரா என்பது குறித்து விவாதம் தேவையில்லை. வடக்கு - கிழக்கில் படை முகாம்களெல்லாம் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே உள்ளன. இராணுவத்தினரின் ஆட்லறிகளும், பல்குழல் ரொக்கட்டுகளும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலிருந்தே ஏவப்படுகின்றன.

ஒரு புறம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றிக் கொண்டு மறுபுறம் புலிகளின் பகுதிக்குள் பாரிய படை நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் இந்தப் பாரிய படைநகர்வு ஆரம்பமானது.

தற்போது படையினர் ஒரே நேரத்தில் பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு மற்றும் முகமாலைப் பகுதிகளை மையப்படுத்தியதே இந்த இராணுவச் செயற்பாடாகும்.

கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்ற மட்டக்களப்பில் பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. வடக்கிலிருந்து கிழக்கிற்கு, புலிகளின் பிரதான தரைவழிப் போக்குவரத்து மையமாக திருகோணமலை வடக்குப் பகுதியிருப்பதால் கிழக்கில் புலிகளுக்கான தரை வழி விநியோகங்களைத் தடுக்க கும்புறுப்பிட்டி, கோமரங்கடவெல, பேராறு பகுதிகளில் இராணுவத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் இருதயப் பிரதேசமாக மணலாறு உள்ளது. முல்லைத்தீவிலிருந்து மணலாறு மற்றும் திருகோணமலை வடக்கு ஊடாகவே புலிகளின் விநியோகங்கள் கிழக்கே நடைபெறுகின்றன. இதனால், மணலாறு பகுதியில் படைகளைக் குவிப்பதன் மூலம் கிழக்கிற்கான விநியோகங்களைத் தடுக்க முடியுமென படையினர் நம்புகின்றனர்.

இதேநேரம், மட்டக்களப்பில் பாரிய இராணுவ நடவடிக்கை இடம்பெறும் போது புலிகள் வடக்கில், குறிப்பாக யாழ் குடாவில் பாரிய தாக்குதலைத் தொடுத்தால் அவர்களது கவனத்தை திசை திருப்புவதற்காக மணலாறில் நிலைகொண்டுள்ள படையினரை முல்லைத்தீவு நோக்கி நகர்த்தி புலிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தலாமென்றும் படையினர் கருதுகின்றனர்.

இதேநேரம், யாழ். குடாநாட்டில் சுமார் 40,000 படையினர் நிலைகொண்டுள்ளனர். குடாநாட்டின் மீதான முற்றுகை 40,000 படையினரினதும் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடுமென்பது படைத் தரப்பு அறிந்த விடயம். குடாநாட்டுக்குள் புலிகள் நுழைவதாயின் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதியை கைப்பற்ற வேண்டும்.

இந்தப் பகுதிகளில் புலிகள் ஒன்று கூடுவதைத் தடுக்கவே தினமும் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் விமானத் தாக்குதலையும் நடத்தி குடாநாட்டின் மீதான புலிகளின் தாக்குதல் முன்னேற்பாடுகளைத் தடுத்து நிறுத்த முற்படுகின்றனர்.

இவ்வாறு திருமலை வடக்கு, மணலாறு மற்றும் முகமாலைப் புகுதியில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கையில் மட்டக்களப்பில் புலிகளின் பகுதிகளினுள் நுழைய படையினர் பகீரதப் பிராயத்தனத்தில் ஈடுபடுகின்றனர்.

மூதூர் கிழக்கு, வாகரைப் பகுதிகளிலிருந்து பின்வாங்கியது போல் மட்டக்களப்பிலிருந்து புலிகள் பின் வாங்க மாட்டார்களென்பதை படையினர் நன்கறிவர். கிழக்கில் புதிது புதிதாக பல பிரதேசங்களை படையினர் கைப்பற்றி பெருமளவு படையினர் அந்தப் பகுதிகளில் நிலை கொள்ள வைக்கப்பட்டிருப்பதால் படையினர் ஆளணிப் பற்றாக குறையை எதிர்நோக்குகின்றனர். இதனால், ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் பிரதானமாக நம்பி படையினர் களமிறங்கியுள்ளனர்.

இதேநேரம், வியாழக்கிழமை ஆரம்பமான படை நடவடிக்கையானது, மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள பகுதிகளை இரண்டாகத் துண்டாடி மட்டக்களப்பிற்குள்ளேயே புலிகளுக்கான விநியோகங்களை தடைசெய்து அவர்களை வலுவிழக்கச் செய்து அவர்களது பிரதேசங்களைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டது.

மட்டக்களப்பில் கடலோரப் பகுதியான எழுவான்கரையில் பிரதான வீதியை அண்டிய பகுதிகளே படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. இதனையும் காடுகள் நிறைந்த பகுதியையும் வாவி பிரிக்கிறது. இது படுவான்கரைப் பகுதியாகும். இப் பகுதியிலேயே புலிகளின் முகாம்களுள்ளன.

புலிகளின் வலு நிலைகளாக குடும்பிமலை (தொப்பிகல), கரடியனாறு, கொக்கட்டிச்சோலைப் பகுதிகளுள்ளன. குடும்பிமலையையும் கொக்கட்டிச்சோலையையும் ஊடறுத்து, செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு - பதுளை வீதி (ஏ15) செல்கிறது. இந்த வீதிக்கு வடக்கே குடும்பிமலையும் தெற்கே கொக்கட்டிச்சோலையுமுள்ளன.

மட்டக்களப்பு - பதுளை வீதியில் செங்கலடி கறுத்தப்பாலம் முதல் புல்லுமலை வரையான மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை வரையான தெற்மேற்கு பகுதி புலிகளின் பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் 80 வீதத்திற்கும் மேற்பட்ட பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தற்போதைய படை நடவடிக்கையானது, `ஏ 15' வீதியை கைப்பற்றி குடும்பிமலையையும் கொக்கட்டிச்சோலையையும் பிரிக்கும் நோக்கம் கொண்டது. 1997 வன்னியில் `ஏ9' வீதியைக் கைப்பற்றி புலிகளின் பிரதேசத்தை எப்படி இரண்டாகப் பிரிக்கும் நோக்கில் `ஜெயசிக்குரு' படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோ அவ்வாறானதொரு நோக்கத்திலேயே மட்டக்களப்பு - பதுளை வீதியைக் கைப்பற்றி குடும்பிமலையையும் கொக்கட்டிச்சோலையையும் பிரித்து பின்னர் புலிகளின் பகுதிகளினுள் இலகுவாக நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக செங்கலடி கறுத்தப் பாலத்திலிருந்து `ஏ 15' வீதியூடாக படையணியொன்று புலிகளின் பகுதிக்குள் நுழைய முற்பட்ட அதே நேரம் புல்லுமலைப் பகுதியிலிருந்து `ஏ15' வீதியூடாக மற்றொரு படையணி புலிகளின் பகுதிக்குள் வடகிழக்கு திசையில் நகர முற்படுகிறது.

எனினும், புலிகள் கடுமையான பதிலடி கொடுத்து படையினரின் நகர்வு முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியிலுள்ள பத்திற்கும் மேற்பட்ட படை முகாம்களிலிருந்து மிக உக்கிரமாக ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்தப் படை நகர்வு முயற்சி இடம்பெறுகிறது.

படையினர் இந்த வீதியை கைப்பற்றிப் குடும்பிமலையையும் கொக்கட்டிச்சோலையையும் பிரித்துவிட்டால் அது மட்டக்களப்பில் புலிகள் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தப் படை நடவடிக்கையில் கருணா குழுவும் இணைந்துள்ளதாக புலிகள் கூறுகின்றனர்.

இந்தப் பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டால் படையினருக்கு பின்னடைவாகும். எனினும் அவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்து இந்தப் பாதையை கைப்பற்ற முயலக் கூடும். இதனைத் தடுத்துநிறுத்துவதிலேயே மட்டக்களப்பில் புலிகளின் எதிர்காலம் தங்கியுள்ளதால் இது புலிகளுக்கு மிகப் பெரும் சவாலான படை நடவடிக்கையாகும்.

http://www.thinakkural.com/news/2007/3/11/...u_nilavaram.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.