Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’

Featured Replies

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’

 

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’

வீரகத்தி தனபாலசிங்கம்

உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட சிவில் சமூக அமைப்பென்று கூறப்படுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து ஆராயப்பட்ட போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் புதிய கூட்டணி அமைக்கும் ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. அங்கு உரையாற்றிய பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் தங்களுக்கு மாற்றுத் தலைமை தேவையென்று உணர்ந்துள்ள நிலையில் புதிய கூட்டணிக்கு சகல தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கஜேந்திரகுமார் தனதுரையில் புதிய கூட்டணியை உருவாக்கி தாங்கள் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்ளவிருப்பதாகவும் இந்தத் தேர்தலை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பான கருத்துக் கணிப்பாக நோக்கும் வேலைத் திட்டத்துக்கு சகல தரப்பினரும் இணங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, மறுபுறத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மத்தியில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்திருக்கும் முரண்பாடுகளை இணக்கபூர்வமான முறையில் முடிவுக்குக் கொண்டு வந்து ஐக்கியத்தை தொடர்ந்து பேணுவதற்கு மன்னார் ஆயரின் அனுசரணையுடன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பிலான கூட்டமொன்று கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒரு சிலவற்றின் தலைவர்களே பங்குபற்றியிருந்தனர். சகல கட்சிகளினதும் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய கூட்டணியின் பிரதான தலைவர்களில் ஒருவராக விளங்கப் போகும் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடுகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான இந்த முயற்சிகள் குறித்து பகிரங்கமாக எதையும் கூறவில்லை என்கின்ற அதேவேளை, அவரின் கட்சியை சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலான தனது கட்சியின் செயற்பாடு குறித்து பிரேமச்சந்திரன் புதிர் வாய்ந்த நிலைப்பாடொன்றை எடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதாவது தனது கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேறப் போவதில்லை என்றும் ஆனால் அதேவேளை, முன்னைய தேர்தல்களில் செய்ததைப் போன்று உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார். அவருடைய இந்த நிலைப்பாடு உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய கூட்டணியின் மக்கள் செல்வாக்கு நிலையைப் பரீட்சித்துப் பார்த்த பின்னர் அதன் அடிப்படையில் தனது எதிர்கால அரசியல் தந்திரோபாயத்தை வகுப்பதற்கு அவர் தீர்மானித்திருக்கிறார் என்பதையே வெளிக்காட்டுகிறது எனலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் அரசியல் அணுகுமுறைகளை கடுமையாக விமர்சிக்கின்ற அதேவேளை, கூட்டமைப்பின் சில அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேரவையின் கொள்கைகள், செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது தங்களது கடமை என்று கூறியிருப்பதன் மூலம் புதிய கூட்டணிக்கு ஆதரவளிப்பதிலான தனது நாட்டத்தை தவிர்க்க முடியாமல், மறைக்க முடியாமல் வெளிக்காட்டியிருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். 2015 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க மறுத்தவேளையில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தனது மனக்கிடக்கையை பூடகமாகச் சொன்னதைப் போன்று முதலமைச்சர் இனிமேலும் செய்யக் கூடிய வாய்ப்பில்லை. அதற்கான தேவை தனக்கு இருப்பதாக கருதக்கூடிய மன நிலையிலும் அவர் இல்லை என்றே தோன்றுகிறது.

கடந்த ஞாயிறன்று தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன் தனிப்பட்ட கட்சி பேதங்களும் அதிகாரப் பேராசையும் தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்பதே பேரவையின் வலியுறுத்தலாகும் என்றும் பெரும்பாலான எமது கட்சித் தலைமைகள் 60 வயதைத் தாண்டியவர்கள். அடுத்த கட்டத் தலைமை இப்போதிருந்தே அடையாளப்படுத்தப்பட்டு அதிகாரத்தில் இருத்தப்பட்டு போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற நாம் இடமளிக்க வேண்டும். மாறாக நாம் இன்று காண்பது தலைமைத்துவங்கள் தம்மைப் பதவிகளில் நீடிக்க பல வழிகளிலும் பாடுபடுவதையே என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Wigneswaran and kamaraj

சிறந்த அறிவையும் ஆற்றல்களையும் கொண்ட இளைய தலைமுறையினருக்கு உள்ளூராட்சி சபைகளில் இடமளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர் அடுத்தக்கட்ட தலைமைத்துவத்தை உருவாக்க இன்றைய தலைவர்கள் காமராஜர் போன்று பின்னணியில் இருந்து பாரிய தமிழர் அரசியல் இயந்திரத்தை இயக்க முன்வர வேண்டும். வருங்காலத்தில் தமிழ்த் தலைமைகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை சிரத்தையுடன் ஆராய்ந்து செயற்படுவது இன்றைய தலைமைத்துவங்களின் தலையாய கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதுமையடைந்திருக்கும் அரசியல் தலைவர்கள் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று 78 வயதான முதலமைச்சர் கூறுவதை எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனால், 60 வயதைத் தாண்டியவர்கள் என்ற அவரின் ‘எல்லைக்கோடு’ அரசியலுக்கு பொருத்தமானதாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உண்மையில் 60 வயதோ அல்லது அதைக் கடந்த வயதோ அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்குரிய ஒரு முதிர் நிலைக்கான எல்லையல்ல. பதிலாக கடந்தகால அனுபவங்கள் ஊடாக படிப்பினைகளைப் பெற்று தவறுகளைத் திருத்தி பக்குவ நிலையை எட்டக்கூடிய வயதெல்லையாக அது அமைய முடியும். 60 வயதில் அல்லது அதைக் கடந்த வயதில் அரசியல்வாதிகள் ஓய்வுபெறுவதாக இருந்தால் உலகம் இன்று முன்னுதாரணமாக நோக்கும் எத்தனையோ அரசியல் ஞானிகளைத் தரிசிக்க எமக்கு வாய்ப்புக்கிடைத்திருக்காது. வாழும் முறையால் வழி காட்டிய பல மாமனிதர்களை நாம் அறிந்திருக்க முடியாது. மனித குலத்தை மானசீகமாக நேசிக்கும் அரசியல் ஞானிகளினால் மரணம்வரை பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற முடியாது. வாழும் முறையால் வழிகாட்டாத அரசியல்வாதிகள் 60 வயதில் அல்ல அதற்கு முன்னரே ஓய்வுபெறட்டும். யாருக்கும் கவலையில்லை.

இது இவ்வாறிருக்க, புதிய கூட்டணியை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு நோக்கப் போகிறார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல்கள் நிச்சயமாக உணர்த்தும் என்பதுடன் தமிழர் அரசியல் தலைமைத்துவம் அண்மைய எதிர்காலத்தில் கைமாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதையும் அது வெளிப்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை. தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதில் பின்னணியில் இருந்து செயற்பட்ட அரசியல் கட்சிகளே புதிய கூட்டணியின் பிரதான பங்காளிகளாகப் போகும் நிலையில் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் பிரசாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்றைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பிலான கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டவையாக விளங்கப் போவது நிச்சயம் ,. இது அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பெரும் சவாலாக அமையக்கூடும்.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றப்படமாட்டாது என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டதன் பின்னரே அதன் இணைத் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்ததாக அடிக்கடி கூறி வந்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதே பேரவையின் கூட்டத்தில் ஆராயப்படுவதற்கும் அதற்கு ஆதரவு திரட்டுவதற்கும் இடமளித்திருப்பது எந்த வகையில் பொருத்தமானது அல்லது எவ்வாறு அதை அவர் நியாயப்படுத்த முடியும் என்பது முக்கியமானதொரு கேள்வியாகும். கட்சி அரசியல் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்காமல் தமிழ் மக்களின் பரந்துபட்ட அரசியல் உரித்துக்களுக்காகப் பாடுபடுவதே தமிழ் மக்கள் பேரவையின் இலட்சியம் என்று பிரகடனம் செய்து கொண்டு தேர்தல் அரசியலுக்கான கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதென்பது எந்த வகையில் இசைவுப் பொருத்தமானது என்பதை விளக்க முதலமைச்சர் கடமைப்பட்டிருக்கிறார். காமராஜர் போன்று முன்னுதாரணமாக செயற்பட தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்திய அரசியலில் 1960களில் ‘கிங் மேக்கர்’ என்று பிரபல்யமாக அறியப்பட்ட கே .காமராஜ் இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு தலைவராவார். 1964–1967 கால கட்டத்தில் அவர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணமடைந்த நேரத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மகள் இந்திராகாந்தி மறுத்ததையடுத்து லால் பஹதூர் சாஸ்திரி அந்தப் பதவிக்கு வருவதற்கு பொறுப்பாக இருந்தவர் காமராஜர். தமிழ் நாட்டின் (அப்போது சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டது) மூன்றாவது முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் 1954–1963 காலகட்டத்தில் அப்பதவியில் தொடர்ந்து இருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் (லோக்சபா) 1952–1954 மற்றும் 1967 –1975 என்று இரு தடவைகள் உறுப்பினராகவும் இருந்த காமராஜர் தனது எளிமையான வாழ்வினாலும் நேர்மையான செயற்பாடுகளினாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.
1967 சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் காமராஜருக்கு எதிராக விருதுநகர் தொகுதியில் மாணவ தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்திய போதிலும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு அந்தத் தொகுதிக்கு செல்வதற்கு அண்ணா ஆர்வம் காட்டவில்லை. காமராஜர் வெற்றிபெற்று சட்டசபைக்கு மீண்டும் வரவேண்டும் என்று அண்ணா விரும்பியதே அதற்குக் காரணம். அந்தளவிற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பெருமதிப்புக்கும் பாத்திரமானவராக காமராஜர் விளங்கினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காமராஜர் அந்த மாணவ தலைவரிடம் தோற்றுப் போனார்.

இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கேற்றவரான காமராஜர் 1957 ஆம் ஆண்டுக்கும் 1962 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று தடவைகள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் அரசாங்கங்களின் முதலமைச்சராக தொடர்ச்சியாக மூன்று பதவிக்காலங்களுக்கு ஆட்சியில் இருந்தவர்.

மத்தியிலும் மாநிலங்களிலும் தொடர்ச்சியாக பல வருடங்களாக காங்கிரஸ் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்து வந்ததன் காரணத்தினால் ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் அதன் செயலூக்கம் படிப்படியாக குறைந்து வந்ததை அவதானித்த காமராஜர் 1963 அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி தினம்) தமிழ் நாடு முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்கள் அதிகாரப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியை மீண்டும் செயலூக்கமிக்கதாக்குவதற்கு தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று காமராஜர் யோசனை கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவிகளைத் துறந்து கட்சிப் இயக்கப் பணிகளுக்கான பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்ற யோசனையை காமராஜர் 1963 ஆம் ஆண்டில் பிரதமர் நேருவிடம் முன்வைத்தார். அதுவே, காமராஜ் திட்டம் என்று பிறகு பிரபல்யமாகியது. காங்கிரஸ் காரர்களின் மனதில் அதிகாரப் பேராசை இருக்கக் கூடாது என்பதும் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கைகளையும் இலக்குகளையும் முன்னெடுப்பதற்கு அர்பணிப்புடன் அவர்கள் செயற்பட முன்வரவேண்டும் என்பதுமே காமராஜ் திட்டத்தின் கருப்பொருளாகும். அதன் பிரகாரம் அன்று நேருவின் மத்திய அமைச்சரவையில் இருந்து லால் பஹதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜக்ஜீவன் ராம் உட்பட 6 அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.

11 வயதில் பள்ளிப்படிப்பை இடை நிறுத்திக் கொண்டவரான காமராஜரின் அந்த அர்ப்பணிப்புச் சிந்தையையும் மதிக்கூர்மையையும் கண்டு பிரமித்துபோன நேரு அவரை தேசிய மட்ட அரசியலுக்கு கொண்டுவரவேண்டுமென்று முடிவெடுத்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக்கினார். 1963 அக்டோபர் 9 ஆம் திகதி அவர் காங்கிரஸ் தலைவராக தெரிவானார்.

1964 ஆம் ஆண்டில் நேரு மரணமடைந்ததையடுத்து தோன்றிய குழப்பகரமான அரசியல் சூழ்நிலைகளில் காமராஜர் காங்கிரஸ் கட்சி பிரச்சினைகளில் சிக்காதவகையில் வெற்றிகரமாக வழி நடத்தினார். அடுத்த பிரதமராக வருவதற்கு வாய்ப்பிருந்தும் அதை ஏற்க மறுத்து புதிய பிரதமராக சாஸ்திரி வருவதற்கும் பிறகு 1966 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக வருவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் காமராஜர். அதன் காரணத்தினாலேயே அவர் ‘ கிங் மேக்கர்’ என்று புகழப்பட்டார். 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவு ஏற்பட்டபோது இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) என்ற பிரிவின் தமிழ் நாட்டுத் தலைவராக காமராஜர் அவரது மரணம் வரை ( 1975) விளங்கினார்.
இதுதவிர, தமிழ் நாட்டின் மிகவும் வெற்றிகரமான ஒரு முதலமைச்சராக அவர் விளங்கியது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும். தமிழ் நாட்டில் கைத்தொழில் மயமாக்கலுக்கு அவரே சூத்திரதாரியாக இருந்து பல தொழிற்சாலைகளை உருவாக்கி பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பைச் செய்தார். அதற்காக இன்றும் கூட மாநில மக்கள் அவரைப் பெருமையுடன் நினைவு கூருகிறார்கள். பிரமாண்டமான அரசியல் இயக்கமொன்றின் அடுத்த மட்டத் தலைமைத்துவத்தை உருவாக்குவதில் தூரநோக்குடனும் தன்னலமற்ற சிந்தனையுடனும் செயற்பட்டமைக்காக காமராஜரை நினைவுபடுத்துகின்ற எமது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாயிருந்தது.

வெற்றிகரமான ஒரு முதலமைச்சராக அவர் திகழ்ந்ததையும் நினைத்துப் பார்க்கத்தவறக் கூடாது.
தமிழ் மக்களுக்கு அடுத்த கட்ட தலைமைத்துவம் குறித்து அக்கறைகொண்டிருக்கும் விக்னேஸ்வரன் காமராஜ் திட்டம் போன்று ஏதாவது திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறாரா? அவரே காமராஜர் போன்று பதவி துறந்து அரசியல் இயக்கப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து முன்னுதாரணமாகத் போகிறாரா?

http://www.samakalam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.