Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்காத்து தப்பித்தல்

Featured Replies

தற்காத்து தப்பித்தல்
 

- வரதராஜன் யுகந்தினி   

டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச ‘எயிட்ஸ்’ தினம்

உலகில் வாழ்கின்ற மனிதர்களில் பெரும்பாலானோர் இன்பங்களைச் சுகிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். அதிலும், சிற்றின்பத்தை (உடலுறவு) அனுபவிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.   

தனது இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக இயற்கையால் கொடுக்கப்பட்ட இன்ப நுகர்ச்சியை ஒழுக்கநெறி, பண்புசார்நெறி சார்ந்த எல்லைகளைக் கடந்து, சிற்றின்பத்தில் ஈடுபட்டு, வம்பை விலைக்கொடுத்து வாங்குவதைப் போல், உயிர்கொல்லி நோயைத் தானாகத் தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்றார்கள்.   

இதனால் ஏற்படும் விளைவானது, குறுகிய காலத்திலே நோயாளியாகி, உறவுகளைத் தவிக்கவிட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள்.   

விலைமதிக்க முடியாத உயிருக்கு, வேட்டு வைக்கும் நோயைதான் உலகமே ‘எயிட்ஸ்’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. ‘எயிட்ஸ்’ நோய், ‘எச்.ஐ.வி’ வைரஸ் எனப்படும் ஒருவகை கொடியதும் இலகுவில் தொற்றக்கூடியதுமான வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்றது.   

அதாவது, மனித உடலானது தானாகத் தனது அழுக்குகளை வெளியேற்ற முற்படும்போது, உருவாகும் உபாதைகளே காய்சல், தலைவலி, இருமல், தும்பல் போன்றவையாகும். இந்தவகை உபாதைகள் வைரஸ் கிருமிகளினால்தான் உருவாகின்றன. ஆனால், மருந்துகளை உட்கொள்ளாமலேயே இவை குணமாகிவிடுவதுண்டு.   

ஆனால், எச்.ஐ.வி தொற்று நிகழ்ந்த பின்னர், எயிட்ஸ் நோயின் குணங்குறிகள் வெளிப்பட ஆரம்பிப்பதற்கு நீண்ட காலம் செல்கின்றது. ஒருவரின் உடலுக்குள் எச்.ஐ.வி கிருமி தொற்றி, நீண்டகாலம் வாழும்போது, அவரின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக இழக்கும் போதுதான், அவருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்படுகின்றது.   

இந்த வைரஸானது, ஓர் உயிருள்ள கலத்தைத் தெரிவுசெய்து, அதில் பல்கிப் பெருகி, அக்கலத்தை முழுமையாக அழிக்கும் தொழிற்பாட்டைச் செய்கின்றது; அல்லது அக்கலத்தின் செயற்பாட்டை இல்லாமல் செய்து விடுகின்றது.   

பொதுவாக இந்த எச்.ஐ.வியானது, மனித உடலில் காணப்படுகின்ற நிணநிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள ‘ரீ- ஹெல்பர்’ கலங்களையே தாக்கியழித்து, அக்கலத்திலிருந்து வெளியேறுகின்றது. வீரியத்துடன் வெளியேறும் வைரஸுகள் அழிந்துபோவதில்லை; மாறாக வேறு கலங்களுக்குள் புகுந்து அவற்றையும் தாக்கி அழித்து அல்லது அதனுடைய செயற்றிறனையும் அற்றுப்போகச் செய்து பல்கிப் பெருகுகின்றன.   

எச்.ஐ.வி தாக்கிய கலங்களைச் சாதாரண நுணுக்குக்காட்டியின் மூலம் இனங்காண முடியாது. அதிசக்தி வாய்ந்த நுணுக்குக்காட்டியின் மூலமாகவே இனங்காண முடியும்.   
அபிவிருத்தி அடைந்த நாடு, அபிவிருத்தியடையாத நாடு எனப் பேதம் பாராமல் அனைத்து பகுதிகளிலும், அனைத்துக் காலநிலைகளிலும் எயிட்ஸ் நோய் புயல் வேகத்தில் பரவி, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. அதனால், எச்.ஐ.வி தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்கள், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.   

எயிட்ஸின் வரலாறு

அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் திகதி நோய்க்கட்டுப்பாடு தடுப்பு நிலையம் (சி.டி.சி) ஆண் ஓரினச்சேர்க்கையாளர் ஐந்து பேரிடம் ஓர் அரியவகை நிமோனியாக் காய்ச்சலைக் கண்டறிந்து, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கைதான் முதலாவது எயிட்ஸ் நோய் பற்றிய ஆவணமாகும்.   

எயிட்ஸ் நோய், 1981ஆம் ஆண்டில் அறியப்பட்ட போதிலும் 1983 ஆம் ஆண்டில்த்தான் எச்.ஐ.வி இனங்காணப்பட்டது. அதாவது, பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் வைத்து, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியான லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியினாலே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.   

அப்போது ‘எல்.ஏ.வி’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. பின்னர், 1984ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ‘தேசிய புற்றுநோய் நிறுவனம்’ எயிட்ஸ் நோயை, வைரஸ் கிருமிதான் உருவாக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியது. அதன் பின்னர்தான், ‘எச்.ஐ.வி’ எனப் பெயரிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டுதான் எச்.ஐ.வி உறுதிப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.   

எயிட்ஸ் நோய் பரவும் முறைகள்

1. பாதுகாப்பற்ற பாலியல் உறவு   

2. எச்.ஐ.வி தொற்றுடைய இரத்த மாற்றீடு அல்லது தொற்றுடைய ஊசி, கூர்மையான பொருட்கள்   

3. எச்.ஐ.வி தொற்றுடைய தாயொருவருக்குப் பிறக்கும் குழந்தை அல்லது தொற்றுடைய தாய் பாலூட்டல்   

பாதுகாப்பற்ற பாலியல் உறவு 

எயிட்ஸ் தொற்றுவதற்கு பிரதான காரணியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது பாதுகாப்பற்ற உடலுறவாகும். எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் எந்தப் பாதிப்பும் இல்லை. பொதுவாக கணவன் - மனைவி இருவரிடையேயான தாம்பத்திய உறவு, பாதுகாப்பானது என மருத்துவ உலகம் சிபார்சு செய்கின்றது. ஆனால், முன்பின் தெரியாத அந்நியருடன் உடலுறவை வைத்துக்கொள்ளுதல் அல்லது பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவை வைத்துக் கொள்ளுதல் எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றது. மேற்கத்தைய நாடுகளில் சட்டத்தில் அனுமதிபெற்ற பாலியல் தொழிலாளர்களுக்கு ஆணுறையைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆணுறை எச்.ஐ.வி தொற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பளிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.   

ஊசிகள்

எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவருக்கு ஏற்றப்பட்ட ஊசியை, சுத்தம் செய்யாமல் மற்றவருக்கு செலுத்துவதால் எச்.ஐ.வி பரவக்கூடும். மற்றும் எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்தும்போதும் தொற்று ஏற்படக்கூடும்.   

கர்ப்பிணித்தாய்

எச்.ஐ.வி தொற்றுள்ள தாயிடமிருந்து கர்ப்பத்திலுள்ள சிசுவுக்குப் பரவுகின்றது. அதாவது, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான தாயின் கர்ப்ப காலம், தாய்ப்பால் ஊட்டும் காலங்களிலேயே குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது.   

இவை தவிர்ந்த கைகுலுக்குதல், பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்தல் , பாத்திரங்கள், கண்ணீர், இருமல், காய்ச்சல் ஆகிய செயற்பாடுகளினால் ஒருபோதும் பரவுவதில்லை.   

எயிட்ஸ் அறிகுறிகள்

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களிடத்தில், ஆரம்பத்தில் நோயின் அறிகுறிகள் மூலம் இனங்காண முடியாது. இரத்த பரிசோதனையின் மூலமாக மாத்திரமே இனங்காண முடியும்.   

மேலும், நீண்ட காலத்தின் பின்னர், எயிட்ஸின் அறிகுறிகளாக உடல் எடைக்குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி மற்றும் இரவு நேரங்களில் நடுக்கம், வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படும். பொதுவாக, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து, சாதாரண நோயின் தாக்கம் வீரியத்துடன் காணப்படும்.   

இருவகையான இரத்த பரிசோதனையின் மூலம் நோயை இனங்காணலாம். முதலாவது இரத்தப் பரிசோதனை ‘எலைசா’ சோதனையாகும்.  

இரண்டாவது இரத்தச்சோதனை ‘வெஸ்டர்ன் புளொட்’ சோதனையாகும். இந்தச் சோதனைதான் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சோதனையாகும். அதாவது “எலைசா” சோதனையில் நேர் வகையைக் காட்டும் ஒவ்வோர் இரத்த மாதிரியும் “வெஸ்டர்ன் புலொட்” சோதனைக்கு உட்படுத்தப்படும். இந்தச் சோதனையில் எச்.ஐ.வி தொற்று காணப்பட்டால் மாத்திரமே பரிசோதனையில் பெறுபேறு கிடைக்கப்பெறும்.   

எச்.ஐ.வி பரிசோதனை யார் மேற்கொள்ள வேண்டும்?

1. தமது பாலியல் உறவு தொடர்பில் சந்தேகம் ஏற்படும் ஒருவர், பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.   

2. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகிக்கும் நபர்.   

3. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறச் செல்வதற்கு முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில், இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.   

4. சுயவிருப்பின் பேரில் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்துக்கொள்ளலாம்   

எயிட்ஸ் மருந்துகள்   

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் மூலம் அந்நோயைப் பூரணமாகக் குணப்படுத்த முடியாது. அதற்கான மருத்துவ முறைகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், எச்.ஐ.வி உடலுக்குள் பரவும் வேகத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் காணப்படுகின்றன. அதாவது ‘அன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்’ இரத்தத்தில் கலந்துள்ள வைரஸின் எண்ணிக்கையை குறைப்பதுடன் அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன.   

மேலும், மருந்துகளினால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைப்பதற்கு அன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளைக் கலப்புச் சிகிச்சை முறையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துகளை முறையாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளெடுக்க வேண்டும்.   

எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டங்கள்   

எச்.ஐ.வி பரவுவதைத் தடுத்து, உயிர்குடிக்கும் எயிட்ஸ் நோயிலிருந்து, தமது மக்களையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள, பெரும்பாலான நாடுகள் பெரும்தொகைப் பணத்தைச் செலவிட்டு, பலவிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 

முக்கியமாக முன்னணி மருத்துவ பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் எயிட்ஸ் நோய் தொடர்பான பரந்துபட்ட ஆராய்ச்சிகளை மில்லியன் கணக்கான பணச்செலவில் முன்னெடுத்து வருகின்றன.   

இலங்கையில் எயிட்ஸ்   

இலங்கையில் 1987ஆம் ஆண்டிலேயே எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டு விட்டனர் என்பது வேதனை தரக்கூடிய விடயமாகும். பின்னர், நோயாளர்களின் தொகை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக ‘பாலியல் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்’ அறிவித்துள்ளது.   

இந்நிலையில், எச்.ஐ.வி தொற்று மற்றும் எயிட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விவரங்களை அருகிலுள்ள அட்டவணை தருகின்றது. இது 2016/2017 ஆம் ஆண்டுகளுக்குரிய விவரங்களாகும்.  

இலங்கையில் எச்.ஐ.வியின் தொற்று அபாயம் காணப்படுவதால் இவ்விடயம் தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.   

இதனடிப்படையில், அண்மையில் ‘பாலியல் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்’ வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கொழும்பு மாவட்டம் எயிட்ஸ் நோயாளர் தொகையில் முதலிடத்தில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 840 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஆனால், அதைவிட அதிகளவு எண்ணிக்கையானோர் தம்மை இனம்காட்டிக்கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள். கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்ததாக களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் காணப்படுகின்றன.  

இலங்கை நாட்டைப் பொறுத்தமட்டில் எயிட்ஸ் நோய் தொற்றானது, பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளின் மூலமாகவே பெரும்பாலும் தொற்றுகின்றது என்பது புள்ளிவிவரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எயிட்ஸ் தொற்றிய ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் இலவசமாகச் சிகிச்சை வழங்குவது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.   
மேலும், வரவேற்கத்தக்க விடயம் என்னவென்றால், இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம், பரந்துபட்ட அளவில் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, கொழும்பு நகரின் பிரதான பாதைகளில் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் தன்னியக்க இயந்திரங்களை குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் நிறுவியுள்ளது.   

அதாவது, கொழும்பிலுள்ள புல்லர்ஸ் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்திலும், வேறு பல இடங்களிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆணுறை தேவையுள்ளவர்கள், தமது அலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு, அதன்பின்னர் கிடைக்கும் பின் இலக்கத்தை இயந்திரத்தில் செலுத்தி, ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பைக்கற்றுக்காக அலைபேசிக் கட்டணத்தில் 50 ரூபாய் வசூலிக்கப்படும். பிற்கொடுப்பனவு முறையில் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்தபவர்களுக்கே இந்த வசதி ஏற்புடையதாகும் எனவும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் தெரித்துள்ளது.   

அதுமாத்திரமின்றி, கர்ப்பிணித்தாய்மாரின் மூலம் சிசுவுக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, எச்.ஐ.வி பரிசோதனைக்கு, அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் உட்படுத்தப்படுத்தும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் அரசாங்கம் இலவசமாகவே மேற்கொள்கின்றது. இவ்வாறு, கற்பிணித்தாயை எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், தாயிடமிருந்து கற்பத்திலுள்ள சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்றுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   

இத்தகைய பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அரசாங்க போதனா மற்றும் ஆதார வைத்தியசாலைகளே வழங்குகின்றன. இந்தச் சேவைகளை, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, பலபிட்டிய, மட்டக்களப்பு, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கல்முனை, களுபோவில, களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மகமோதரை, மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, நீர்கொழும்பு, நுவரெலியா, பொலன்நறுவை, ராகம, இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா, வத்துப்பிட்டிவல ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.   

இலங்கையில் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் சிகிச்சை முறைகளையும் அரசாங்கம் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்ற போதிலும், மக்கள் இவ்விடயத்தில் போதிய அக்கறை அற்றவர்களாகவும் தெளிவற்றவர்களாகவுமே காணப்படுகிறார்கள்.   

எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கு முதலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்படவேண்டும். இதை, சமூக அக்கறையுடன் செயற்படும் நிறுவனங்களும் ஊடகங்களும் இணைந்து செயற்படுத்தலாம். விழிப்புணர்வுப் பேரணிகள், கூட்டங்களை நடாத்தி இந்த எச்.ஐ.வி தொற்றிலிருந்து விடுவிக்க வேண்டும்.   

மனித சமுதாயத்தில் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே, டிசெம்பர் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் அனுஸ்டிக்கப்படுகின்றது. டிசெம்பர் முதலாம் திகதி மட்டுமல்ல, ஒவ்வொரு தினமும் எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக அமைந்தால் மட்டுமே உயிர்குடிக்கும், மனித குலத்தை அழிக்கும் இந்தக் கொடிய நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விழிப்புணர்வை வழங்க முடியும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தற்காத்து-தப்பித்தல்/91-208242

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.