Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம்

Featured Replies

தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம்

 
 

எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட  சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...!  

அருவி

 

அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்த வயசுகளுக்கே உரிய உரையாடல்கள் நடக்கும் நண்பர்கள் குழு, 'லவ் யூ அருவினு வெள்ளைப் பேப்பர்ல எழுதிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணணும்' என்ற சினிமாத்தனமான  ஆசை - இதுதான் அருவியின் உலகம். வெளிப்பார்வைக்கு அருவி நம்மைச் சுற்றி நடமாடும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி. பின் எது அவளைத் தனித்துவமானவள் ஆக்குகிறது என்ற கேள்விக்குப் பதிலாக விரிகிறது இந்த இரண்டு மணிநேர பயணம்.  

ஒரு பிரச்னை காரணமாக அருவி வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. இரண்டு பைகளோடு தெருவில் இறங்கும் அவள் தனக்கான கூட்டைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைகிறாள். கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழும் அவளுக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்கிறார்கள். அரங்கிற்குள் சராசரி சமூக மதிப்பீடுகளின்படி '.............' அருவியாக நுழையும் அவள், அங்கிருந்து வெளிவரும்போது அதே சமூக மதிப்பீடுகளின்படி 'தீவிரவாதி' அருவியாக வெளிவருகிறாள். உண்மையில் அருவி யார்? எது அவளை வீட்டை விட்டு வெளியேற்றி டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தது? டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் செட்டுக்குள் என்ன நடந்தது? தவறு யார் மேல் என்பதையெல்லாம் அடுத்தடுத்த திருப்பங்களின் வழியே முகத்திலறைந்து சொல்கிறது திரைக்கதை.

அதிதி பாலன்

நீண்ட நாட்களுக்குப் பின் முழுக்க முழுக்க ஒரே ஒரு பெண் கேரக்டரை மையமாக வைத்து வெளியான படம். அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு புதுமுக நடிகையைப் பார்த்து பிரமித்ததும் இந்தப் படத்தில்தான். 'யப்பா என்னம்மா நடிக்குதுய்யா இந்தப் பொண்ணு' என நிச்சயம் ஒரு ஃப்ரேமிலாவது நம் வாய் முணுமுணுக்கும். சின்னச் சின்ன கண் சிமிட்டல்கள், ஒருகணம் சோகமாக... மறுகணம் வீம்பாக என்று சட்சட்டென நிகழும் முக மாறுதல்கள், நெகிழ்ச்சியான பின்பாதியில், உள்ளிருந்து ஓலத்தோடு எழும் சிரிப்பு என முதல் படத்திலேயே உணர்வுகளின் கலவைகளைக் கொட்டியிருக்கிறார் அதிதி பாலன். இந்த ஆண்டின் பெருமைக்குரிய அறிமுகம் இவர் என்பதில் சந்தேகம் இல்லை.    

Aruvi

அருவியோடு படம்நெடுகப் பயணிக்கும் திருநங்கை எமிலியாக சிறப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி வரதன். பெரும்பாலான சினிமாக்களில் சித்திரிக்கப்படும் திருநங்கை கேரக்டரில் இருந்து அவருடையது வேறுபட்டிருப்பது பெரிய ஆறுதல். ஆனால் அந்த விடலைப் பையன் அவரைப் பற்றி கேட்கும் சந்தேகம் திரும்பத் திரும்ப வருவது சற்றே நெருடல் `டேய் ஃப்ரேமே சரி இல்லடா' என உதவியாளர்களிடம் எகிறிவிட்டு அடுத்தகணமே 'நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம் மேடம்' என பம்மும் ரியாலிட்டி ஷோ இயக்குநராக இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில்கவிதா பாரதி கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சுவாமி, சுபாஷாக வரும் விடலைப் பையன், தமிழைக் கடித்து துப்பும் போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் பொறுப்பு உணர்ந்து பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் அவள் உடல் சார்ந்தே முன் வைப்பது, பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும், 'அவ அப்படி இருக்கப் போய்தான் இப்படியாச்சு' என திரும்பவும் அவளையே குற்றம்சாட்டுவது என புரையோடிப் போயிருக்கும் பிற்போக்கு எண்ணங்களை சுளீர் வசனங்கள் மூலம் விமர்சனத்துக்குளாக்குகிறார் இயக்குநர் அருண்பிரபு. அதுவும் இடைவேளைக்கு முன் அருவி மூச்சுவிடாமல் பேசும் வசனத்திற்கு கைதட்டல்கள் அள்ளுகின்றன. நான் லீனியர் பாணியில் முன் பின்னாக நகரும் கதை சொல்லல், இறுக்கமாக நகரும் காட்சிகளிலும்கூட இயல்பான நகைச்சுவைக்கு இடம் கொடுக்கும் காட்சியமைப்பு என ரொம்பவே மெனக்கெட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். தனிநபர் வாழ்க்கையில் மீடியாவின் தலையீடு, சாமியார்கள் மேல் கட்டப்படும் புனிதப் பிம்பம் என போகிறபோக்கில் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றாலும் படத்தின் மையப்புள்ளியை விட்டுவிலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது கதை.

ஒரே ஒரு சின்ன இடத்தில் நடக்கும் கதை. ஆனாலும் அதை சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக பரிமாறியதில் வெற்றி கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். ஆர்ப்பரிக்கும் நிஜ அருவியின் சாரல்கள் நம் மீது விழுவதற்கும், அழுது புழுங்கும் கதாநாயகி அருவியின் கண்ணீர்துளிகள் நம் மீது தெறிப்பதற்கும் இவரின் கேமரா வித்தை முக்கிய காரணம். பிந்துமாலினி - வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அழகு. படத்தின் பாடல்கள் அனைத்துமே கதையோடு ஒன்றிப்போவதும் கதையின் நகர்விற்கு உதவுவதுமாக அமைந்திருக்கின்றன. 

 

இயக்குநர், அதிதி பாலன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக வேலை எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவிற்குத்தான். நான் லீனியர் பாணியில் கொஞ்சம் தவறினாலும் அயர்ச்சி தோன்றிவிடும் வாய்ப்புகள் அதிகம். போக, திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவந்த படங்கள் என்றாலே மெதுவாக நகருமோ என்ற தயக்கம் உண்டாவதும் இயல்பு. அந்த அயர்ச்சியும் தயக்கமும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ரேமண்ட்டின் வெற்றி. 

படத்தில் இப்படி எக்கச்சக்க ப்ளஸ்கள் இருந்தாலும் சிற்சில லாஜிக் உறுத்தல்கள் கண்ணுக்குத் தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை. முக்கியமாக அருவி வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கும் 'அது'. நடைமுறையில் அப்படி நிகழ வாய்ப்புகள் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. முதல்பாதியில் யாருக்கும் பயப்படாத துணிச்சல்காரியாக வரும் அருவி இரண்டாம் பாதியில் எல்லாவற்றுக்கும் கலங்குவது ஏன்? ரியாலிட்டி ஷோவிற்கு வரும் மூன்று பேருக்கும் எந்த 'ஆபத்து'மில்லை என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது? குண்டுகளே தீராத அந்தத் துப்பாக்கியை அவ்வளவு சிறப்பாக அருவி கையாள்வது எப்படி என்ற கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கலாம்.

 

 

இந்த சின்னச் சின்ன உறுத்தல்களைத் தாண்டிப் படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கூடவே சில கதாபாத்திரங்களும் பயணிக்கலாம். அது 'எனக்கும் உங்களை மாதிரியெல்லாம் வாழணும்னு ஆசை' என சமூகம் ஒதுக்கிவைத்த ஆதங்கத்தில் பொருமும் அருவியாக இருக்கலாம், 'தெருவில இறங்குனா குறுகுறுன்னு பாக்குறானுக, அவ்வளவு அழகாவா இருக்கோம்?' என விரக்தியாய்ப் பேசும் எமிலியாக இருக்கலாம், இல்லை 'நாலு பேரு என்ன சொல்லுவான்?' என கண்ணுக்குத் தெரியாதவர்களைப் பற்றி கவலைப்பட்டு மகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் அருவியின் அப்பாவாக இருக்கலாம். ஆனால், படம் பார்த்த அனுபவமும், உடன் பயணிக்கும் கேரக்டர்களும் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு விலகப்போவதில்லை. தமிழ் சினிமா கானகத்தில் காட்டாறாகப் பாயவிருக்கும்  இந்த அருவியை கொண்டாடித் தீர்க்கலாம் வாருங்கள்..!

https://cinema.vikatan.com/movie-review/110705-aruvi-movie-review.html

  • தொடங்கியவர்

'அருவி' - விருதுக்கானதா, திரை விருந்துக்கானதா? இயக்குநர், நடிகை பேட்டி

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெரும்பாலோனோர் புதியவர்கள் மற்றும் இளைஞர்களே.

'அருவி' : மக்களுக்கான திரைப்படமா? விருதுகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமா?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM

இத்திரைப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வெளியாகும் இத்திரைப்படம் குறித்தும், அருவி குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் பிபிசி தமிழிடம் இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு உரையாடினார்.

அருவி ஒரு சமூக அரசியல் சார்ந்த படமா அல்லது பொழுதுபோக்கு திரைப்படமா என்று கேட்டதற்கு, ''அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு ஜனரஞ்சக திரைப்படம்தான் அருவி. மக்கள் சார்ந்த அரசியல் மட்டுமே இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

''ஆனால், இது அரசியல் சார்ந்த அல்லது நம்மை ஆள்பவர்களை பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களைதான் இந்த திரைப்படத்தில் அலசியுள்ளோம்'' என்று அருண் மேலும் கூறினார்.

அருவி திரைப்பட போஸ்டர் சர்ச்சை

அருவி திரைப்பட போஸ்டர் வெளியான போது எழுந்த சர்ச்சை பற்றி கேட்டதற்கு பதிலளித்த அருண், ''படத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிக்கொணரும் வகையில்தான் போஸ்டர் உருவாக்கப்பட்டது. படம் வெளியானவுடன், அதை பார்த்தவர்கள்தான் படத்தின் கருவை போஸ்டரோடு தொடர்பு கொள்ள முடியும். அப்போதுதான் முழுமையாக புரியும்'' என்று தெரிவித்தார்.

'அருவி' : மக்களுக்கான திரைப்படமா? விருதுகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமா?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM

இது அன்பு குறித்து பேசும் படம். பிரசாரப் படமல்ல என்று அருவி குறித்து அருண், மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச பனோரமா பிரிவு விருது உள்பட பல விருதுகளை அருவி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ளது.

இந்நிலையில், அருவி மக்களுக்காக எடுக்கப்பட்ட படமா, விருதுக்காக எடுக்கப்பட்ட படமா என்று கேட்டதற்கு, ''அருவி மக்களுக்கான திரைப்படம்தான். மூன்றாவது நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி இந்த திரைப்படம் பேசுவதால் இந்த திரைப்படம் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றது'' என்று தெரிவித்தார்.

அதிதி பாலன்

திரைப்படத்தின் சில வசனங்கள் இன்றைய நடைமுறையை, இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று கூறிய அருண், ''திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் முழு திரைப்படம் ஆகிய இரண்டும் வெவ்வேறு அனுபவங்களை தரும். முழுப்படமும் பார்த்தால்தான் சொல்ல வந்த கருத்து தெளிவாக புரியும்'' என்று தெரிவித்தார்.

பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார்.

''பிரதான கதாபாத்திரமான அருவியை தவிர 25 கதாபாத்திரங்களுக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் உள்ளது. படத்தேர்வுக்கு 7 அல்லது 8 மாதங்கள் ஆனது. அனுபவம் வாய்ந்த நடிகர்களை தேடாமல் கதாபாத்திரத்துக்கு பொருந்தும் எளிய மனிதர்களையே நாங்கள் தேர்வு செய்தோம்'' என்று அருண் குறிப்பிட்டார்.

அருவி திரைப்பட நடிகர்களுடன் இயக்குநர் அருண் பிரபு (மத்தியில் இருப்பவர்) Image captionஅருவி திரைப்பட நடிகர்களுடன் இயக்குநர் அருண் பிரபு (நடுவில் இருப்பவர்)

''மக்களை மனிதில் வைத்து எழுதப்பட்டது அருவி திரைப்படம். இது மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும்'' என்று அருண் நம்பிக்கை தெரிவித்தார்.

அருவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?

திரைப்பட பின்னணி எதுவும் இல்லாத அதிதி பாலன், இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அருவி திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பிபிசி தமிழிடம் அதிதி பாலன் கூறுகையில், ''இந்த படத்தின் நடிகர், நடிகை தேர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் வந்த தகவல் மூலம் அறிந்து நான் விண்ணப்பித்தேன். அதன் பிறகு டெஸ்ட் ஷூட் நடந்தது. வசன ஒத்திகையிலும் தேர்வு பெற்று இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்'' என்று தெரிவித்தார்.

அருவி எப்படிப்பட்டவள்?படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM Image captionஅதிதி பாலன்

''இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பலரும் புதியவர்கள். அதனால் மூன்று மாதங்களாக இந்த திரைப்படத்தின் வசன மற்றும் காட்சி ஒத்திகை நடந்தது. அதனால் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாகவே உணர்ந்தோம்'' என்று அதிதி தெரிவித்தார்.

அருவி எப்படிப்பட்டவள்?

அன்பை பகிர்ந்து கொள்ளும் கதாபாத்திரம்தான் அருவி என்று தெரிவித்த அதிதி, படத்தின் டிரெய்லரில் அருவி ஆவேசமாக தோன்றுவார். ஆனால், முழுப்படத்தையும் பார்த்தால்தான் அந்த கோபத்தின் அர்த்தம் புரியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதிதி பாலன்படத்தின் காப்புரிமைDREAM WARRIOR PICTURES/ ARUVI FILM Image captionஅதிதி பாலன்

முதல் திரைப்படத்திலேயே தனக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அதிதி, ''இனிவரும் திரைப்படங்களில் வெவ்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமுள்ளது'' என்று தெரிவித்தார்.

பார்வையாளர்களை ஈர்க்கும் திரைப்படமா அருவி?

அருவி திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திரைப்பட விமர்சகரான சரா சுப்ரமணியம், ''இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். ஆனால், இது விருதுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம் என்று ஒரு தவறான பார்வை உள்ளது'' என்று கூறினார்.

தனி மனித உணர்ச்சிகளுக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கியத்துவம் தந்துள்ளது என்று குறிப்பிட்ட சரா, ''படத்தின் ஆரம்பம் முதல் தொடர்ந்து பார்வையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஒரு முழுமையான அனுபவத்தை இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு தரும்'' என்று தெரிவித்தார்.

சரா சுப்ரமணியம் Image captionசரா சுப்ரமணியம்

''ஒட்டுமொத்த சமூகத்தின் கோபம் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இந்த கோபத்தை தங்களுக்கு நெருக்கமாக உணர்வர்'' என்று அவர் கூறினார்.

'நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை'

''அருவி போல பல நல்ல திரைப்படங்கள் தமிழில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த போதிலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் வசதிகள் இல்லை. இதில் பல சிக்கல்கள் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''பல நல்ல திரைப்படங்களை பொது மக்கள் பார்ப்பதற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. திரைப்பட ஆர்வலர்கள் கொண்டாடும் பல திரைப்படங்களும் மக்களை சென்றடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம் இந்த நிலை மாறினால்தான் மக்கள் நல்ல திரைப்படங்களை காண இயலும்'' என்று சரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42335844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.