Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருதுகள் 2018 - தி இந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருதுகள் 2018 - தி இந்து

                 ரூ 10 லட்சம் விருது... 6 ஆளுமைகள் கௌரவிப்பு

நாட்டின் புகழ்மிக்க இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கிலத்தைத் தாண்டி தமிழிலும் அடியெடுத்துவைக்கிறது! தமிழகத்தின் தலைநகரை இனி ஆண்டுதோறும் குதூகலப்படுத்தவிருக்கும் இந்தத் தமிழ் இலக்கிய உற்சவத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டாடும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்-தமிழ்’ விருதுகள் வழங்கப்பட உள்ளன. சமகாலத் தமிழைத் தன்னுடைய எழுத்துகளால் அலங்கரிக்கும் ஆறு ஆளுமைகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த விருதுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த படைப்பாளிகளின் பெயர்களில் வழங்குவதில் பெருமை அடைகிறோம். ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ரூ.5 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும் சான்றிதழையும் உள்ளடக்கியது. இந்த விருது மட்டும் ஜனவரி 14, 15, 16-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கில நிகழ்வில் வழங்கப்படுகிறது. ஏனைய ஐந்து விருதுகளும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும், சான்றிதழையும் உள்ளடக்கியவையாகும். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி, ‘சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் அரங்’கில் நாளை (ஜன.7) காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6.15 மணி வரை நடைபெறவுள்ள ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கியத் திருவிழாவில் இந்த 5விருதுகளும் அளிக்கப்படவுள்ளன.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’

வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திரா பார்த்தசாரதி

இ.பா. என்று வாசகர்களால் அழைக்கப்படும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் இயற்பெயர் ரெங்கநாதன் பார்த்தசாரதி. சென்னையில் பிறந்த இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் வளர்ந்தார். அவருக்குத் தற்போது வயது 87. நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். அவரது இலக்கியச் செயல்பாட்டுக்குச் சற்றும் குறையாதது அவரது நாடகச் செயல்பாடு. தனது ‘ராமானுஜர்’ நாடகத்துக்காக ‘சரஸ்வதி சம்மான்’ விருதை இந்திரா பார்த்தசாரதி பெற்றார். சாகித்ய அகாடமி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகிய மூன்று விருதையும் அநேகமாக இந்திரா பார்த்தசாரதி மட்டுமே பெற்றிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் சார்ந்து அதிகமாகப் புனைவுகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர். இவரது நாவல்களிலும் கதைகளிலும் நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. டெல்லி பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர் இந்திரா பார்த்தசாரதி. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் இந்தியத் தத்துவத்தையும் பண்பாட்டையும் கற்பித்திருக்கிறார். கீழ வெண்மணி படுகொலையைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் ‘குருதிப்புனல்’. இ.பா. எழுதிய ‘உச்சி வெயில்’ எனும் குறுநாவல் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் 1990-ல் திரைப்படமானது. இதை இயக்கியவர் சேது மாதவன். தமிழில் இந்தத் திரைப்படத்துக்குத்தான் முதன்முதலில் குடியரசுத் தலைவரின் ‘தங்கத் தாமரை’ விருது வழங்கப்பட்டது. இலக்கியம், நாடகம் என்று இரு துறைகளிலும் பெரும் பங்காற்றியிருக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழா சார்பாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் நூல்களுள் சில: குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, ஏசுவின் தோழர்கள், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேர்ப்பற்று, வெந்து தணிந்த காடுகள், உச்சி வெயில்; இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்.

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள்: ராமானுஜர், ஔரங்கசீப், மழை, நந்தன் கதை, போர்வை போர்த்திய உடல்கள்.

இதுவரை பெற்ற விருதுகளுள் சில: சாகித்ய அகாடமி விருது, சரஸ்வதி சம்மான் விருது, பாரதீய பாஷா பரிஷத் விருது, பத்மஸ்ரீ விருது.

சமகால இலக்கியச் சாதனைக்கான ஜெயகாந்தன் விருது: இமையம்

தமிழ்நாட்டின் ஊர்ப்புறத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தைத் தனது படைப்புகளின் வழியாகக் கடந்த 24 ஆண்டுகளாக முன்வைத்துவருபவர் இமையம். 1994-ல் வெளியான ‘கோவேறு கழுதைகள்’ நாவல் இலக்கிய உலகில் இமையத்தின் வரவை அறிவித்தது. இமையத்தின் இன்று வரையிலான படைப்புலகம் ஐந்து நாவல்கள், ஒரு நெடுங்கதை, ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சாதி ஆணவக் கொலையைப் பற்றிய இவரது ‘பெத்தவன்’ நெடுங்கதை குறுநூலாக வெளியிடப்பட்டு இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகிச் சாதனை படைத்தது. ‘பெத்தவன்’ கதையும் ‘எங் கதெ’ நாவலும் விரிந்த வாசகப் பரப்பை இமையத்துக்குப் பெற்றுத்தந்தன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திராவிடச் சித்தாந்தம், அம்பேத்கரியம், மார்க்ஸியம் போன்ற சிந்தனை மரபுகளால் மிகுந்த தாக்கம் பெற்றவர். 53 வயதாகும் இமையம் விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அதன் ஈரத்துடனும் வலியுடனும் எழுதிவரும் இமையத்துக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழா சார்பாகச் சமகால இலக்கியச் சாதனையாளருக்கான ‘ஜெயகாந்தன் விருது’ வழங்கப்படுகிறது.

இமையத்தின் நூல்கள்: கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் (நாவல்கள்); மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுசோறு, நறுமணம் (சிறுகதைத் தொகுப்புகள்), பெத்தவன் (நெடுங்கதை)

 

அபுனைவு எழுத்துக்கான ஏ.கே. செட்டியார் விருது: ராமாநுஜம்

நாடகத் துறை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் ராமாநுஜம் தற்காலத் தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். சென்னையில் இடதுசாரிக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ராமாநுஜம் கம்யூனிஸம், காந்தியம் உள்ளிட்ட சிந்தனைப் போக்குகளிடையிலான ஒரு உரையாடலைத் தொடர்ந்து தன் கட்டுரைகளில் மேற்கொண்டுவருபவர். சாதத் ஹசன் மண்ட்டோ, டி.ஆர்.நாகராஜ், அர்துரோ வாகனோ என்று முக்கியமான ஆளுமைகளை மொழிபெயர்ப்பின் வழி தமிழுக்குக் கொண்டுவந்த ராமாநுஜத்தின் மிக முக்கியமான பங்களிப்பு சாதியத்தின் வேர்களை அணுக முற்படும் அவருடைய ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூல். ‘சென்னைக் கலைக்குழு’, ‘பல்கலை அரங்கம்’, ‘ஐக்கியா’, ‘பரீக்ஷா’ ஆகிய நாடகக் குழுக்களில் பங்காற்றிய ராமானுஜம் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய நாடகக் குழு‘ஆடுகளம்’. அபுனைவுப் பிரிவுக்காக ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் சார்பாக ராமாநுஜத்துக்கு ‘ஏ.கே.செட்டியார் விருது’ வழங்கப்படுகிறது.

ராமாநுஜத்தின் நூல்கள்: காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும் (கட்டுரைத் தொகுப்புகள்);

மண்ட்டோ படைப்புகள், ‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள் - சாதத் ஹசன் மண்ட்டோ, மெளனவதம் - அர்துரோ வாகனோ, தீப்பற்றிய பாதங்கள் - டி.ஆர்.நாகராஜ் (மொழிபெயர்ப்புகள்); ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் (இயக்கி, நடித்த நாடகங்கள்)

 

பெண் படைப்புக் குரலுக்கான பாரதி விருது!- தமயந்தி

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புவெளியில் தீவிரமாக இயங்குபவர் தமயந்தி. சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரை ஆகிய வகைமைகளில் இதுவரை 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் சிக்கி பலியாகும் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கைதான் தமயந்தி படைப்புகளின் பிரதான பேசுபொருள். துயரங்களுக்கு இடையிலும் அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன அழகுகளை ரசிப்பவர்களாக தமயந்தியின் பெரும்பாலான பாத்திரங்கள் இருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்கள் மீதான, சுற்றுச்சூழல் மீதான கரிசனமும் தமயந்தி படைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எழுத்து மட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளர், தொலைக்காட்சி ஆவணப் பட இயக்குநர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்று சமூகத்துடன் ஏதாவது ஒரு வகையில் ஊடாடிக்கொண்டிருப்பவர் தமயந்தி. திருநெல்வேலியில் பிறந்த தமயந்தி தற்போது வசிப்பது சென்னையில். வலியில் உழலும் பெண்களின் அசலான படைப்புக் குரலாக வெளிப்படும் தமயந்தி ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவின் ‘பாரதி விருது’ பெறுகிறார்.

தமயந்தியின் நூல்கள்: தமயந்தியின் சிறுகதைகள், அக்கக்கா குருவிகள், சாம்பல் கிண்ணம், முற்பகல் ராஜ்ஜியம், வாக்குமூலம், வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், கொன்றோம் அரசியை (சிறுகதைகள்); நிழலிரவு (நாவல்), தங்களில் படரும் கடல் (கவிதை), இந்த நதி நனைவதற்கல்ல (கட்டுரைத் தொகுப்பு)

 

விளிம்பின் உரத்த குரலுக்கான இன்குலாப் விருது: கீரனூர் ஜாகிர்ராஜா

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புவெளியில் தீவிரமாக இயங்குபவர் கீரனூர் ஜாகிர்ராஜா. வாழ்வாதாரத்துக்கு எழுத்தை முன்வைத்து இயங்க முடியாத சூழல் நிலவும் தமிழ்ச் சமூகத்தில், முழுநேர எழுத்தாளராக வாழும் சிலருள் ஒருவர். பொதுச் சமூகத்துக்கும் இலக்கிய வெளிக்கும் அதிகம் பரிச்சயப்படாத இஸ்லாமிய விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைத் தன் படைப்புகளின் வழியே தொடர்ந்து முன்வைத்துவருபவர். தான் சார்ந்த சமூகத்தின் கொண்டாட்டங்கள், வேதனைகள், பிரச்சினைகள் இவற்றோடு அச்சமூகத்தின் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கும் அரிய படைப்பாளிகளில் ஒருவர். பழனிக்கு அருகில் உள்ள கீரனூரில் பிறந்த இவர் தற்போது தஞ்சாவூரில் வசிக்கிறார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள், தொகை நூல்கள், சிறார் இலக்கியம், தொகுப்பு நூல்கள் என்று 20-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுவந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் ‘இன்குலாப் விருது’ வழங்கப்படுகிறது.

கீரனூர் ஜாகிர்ராஜாவின் நூல்கள்:மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகைவாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் (நாவல்கள்), செம்பருத்தி பூத்த வீடு, பெருநகரக் குறிப்புகள், தேய்பிறை இரவுகளின் கதைகள், கொமறு காரியம் (சிறுகதைத் தொகுப்புகள்), குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை, சுயவிமர்சனம் (கட்டுரைத் தொகுப்புகள்), சேவலும் காகமும், நித்தியாவும் ஜிம்மியும் (சிறார் நூல்கள்)

 

இளம் படைப்பாளிக்கானபிரமிள் விருது: சயந்தன்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1980-ல் பிறந்த சயந்தனின் இயற்பெயர் சயெந்திரன் கதிர். 37 வயதாகும் சயந்தன் இந்தியா, ஆஸ்திரேலியா என வாழிடங்களைக் கடந்து, தற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார். சுற்றுலாத் துறையில் பணியாற்றுகிறார். இதுவரை இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். இவரது ‘ஆறா வடு’, ‘ஆதிரை’ ஆகிய இரண்டு நாவல்களுமே படிப்பவர்களை உலுக்குபவை. நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. ஈழப் போராட்டத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வரலாற்று நூல்களைப் போலவே சயந்தனின் நாவல்களும் வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன. மூன்று தலைமுறை ஈழத் தமிழர்களின் சரித்திரத்தையும் சயந்தன் தன் படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறார். ஈழத் தமிழ் இலக்கியத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும் காத்திரமான படைப்புக் குரல்களில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளைஞராக சயந்தன் இருக்கிறார். அடுத்ததாக, ‘கலையாடி’ என்ற இவரது நாவல் வெளியாகவிருக்கிறது. ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவின் சார்பாக இளம் படைப்பாளருக்கான ‘பிரமிள் விருது’ சயந்தனுக்கு வழங்கப்படுகிறது.

சயந்தனின் நூல்கள்:ஆறா வடு, ஆதிரை, கலையாடி (நாவல்கள்); பெயரற்றது (சிறுகதைத் தொகுப்பு).

http://tamil.thehindu.com/general/literature/article22382218.ece

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருதாளர்களின் குரல்கள்!

LFLTamil-FestLogo

தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டாடும் ‘தி இந்து லிட் ஃபெஸ்ட்’ விருதுகள் வழங்கும் விழா, ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. சமகாலத் தமிழுக்கு வளம் சேர்க்கும் ஐந்து ஆளுமைகளுக்கு நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த படைப்பாளிகளின் பெயர்களில் விருதுகள் வழங்கியது ‘தி இந்து’வின் பெருமிதமான தருணங்களில் ஒன்று.

‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெறும் இந்திரா பார்த்தசாரதி, சமகால இலக்கியச் சாதனையாளருக்கான ‘ஜெயகாந்தன் விருது’ பெற்ற இமையம், பெண் படைப்புக் குரலுக்கான ‘பாரதி விருது’ பெற்ற தமயந்தி, விளிம்பின் உரத்த முழக்கத்துக்கான ‘இன்குலாப் விருது’ பெற்ற கீரனூர் ஜாகிர்ராஜா, இளம் எழுத்தாளருக்கான ‘பிரமிள் விருது’ பெற்ற சயந்தன், அபுனைவுக்கான ‘ஏ.கே. செட்டியார் விருது’ பெற்ற ராமாநுஜம் ஆகியோர் தங்கள் எழுத்துலகம், எதிர்காலத் திட்டங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இந்திரா பார்த்தசாரதி

 

08chdasindira-2

 

ல்லூரியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கிவிட்டேன். எனினும், பிரசுரத்துக்கு அனுப்பியதில்லை. 1960-களின் ஆரம்பத்தில் ‘ஆனந்த விகட’னில் ஜெயகாந்தன் கதைகள் வரத் தொடங்கியபோது அவர்கள் தீவிர (சீரியஸ்) கதைகளையெல்லாம் பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவானது.

என் கதையை ‘ஆனந்த விகட’னுக்கு அனுப்பிவைத்தேன். அது முத்திரைக் கதையாக வெளியானது. நா.பார்த்தசாரதி, ‘தீபம்’ இதழுக்கு ஒரு நாவல் எழுதச் சொன்னார். அப்படி நான் எழுதிய முதல் நாவல் ’தந்திர பூமி’. நண்பர் கஸ்தூரிரங்கன் மூலம் ‘கணையாழி’ தொடர்பு ஏற்பட்டது. 1969-70-ல் சிங்கப்பூரிலிருந்து வெளியான ’தமிழ் முரசு’ என்ற பத்திரிகையில் ஒரு நாவல் எழுதச் சொன்னார்கள். அந்தக் கதை நாடகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் அதை ‘மழை’ என்கிற நாடகமாக எழுதினேன்.

இதுதான் என்னுடைய சிறுகதைகள். நாவல், நாடகம் ஆகியவை தொடங்கிய விதம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படித்த நான், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்தேன். நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழறிஞர் உலகத்தில் நவீன இலக்கியம் அவ்வளவு முக்கியத்துவத்துடன் பார்க்கப்படவில்லை.

இருந்தாலும் எனக்கு அது தனித்த அடையாளம் கொடுத்தது. இப்போது தமிழ்த் துறையில் இருப்பவர்கள் இலக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்கள். பிறகு டெல்லி பல்கலைக்கழகம் மூலமாக போலந்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ் கற்பித்தேன். பிறகு 1988-ல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையைத் தொடங்குவதற்காக நியமிக்கப்பட்டேன். 1992-ல் ஓய்வுபெற்று சென்னையில் வசித்துவருகிறேன்.

எழுத்து என்பது ஒரு சமுதாயச் செயல். சமுதாயப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பது அவசியம். அதனால்தான் நான் கீழ வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘குருதிப்புனல்’ நாவல் எழுதினேன். தமிழ் எழுத்தின் எதிர்காலம் இப்போது சிறப்பாக இருக்கிறது. இணையம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

எப்போதும் மாறுதல் என்பது வரவேற்கத்தக்கது. மாறுதல் ஏற்பட ஏற்பட எல்லாம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் இறந்தகாலம் என்று ஒன்று இருந்தால்தான் நிகழ்காலம் என்பது உருவாகும். பழைய இலக்கியங்களைப் படிக்காமல் இருக்கக் கூடாது!

இலக்கியத்தின் நோக்கம் அன்புதான்! - இமையம்

 

08CHVCM-EDIT1-imayam

 

எழுதத் தொடங்கிய 1987 காலகட்டத்தில்தான் படிக்கவும் தொடங்கினேன். நல்ல இலக்கியம் எது, மோசமான இலக்கியம் எது என்பது எனக்குத் தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது. எனவே சிறுகதைகள், கவிதைகள் எழுதாமல் எடுத்தவுடனே நாவல் எழுதினேன். 1994-ல் நான் எழுதிய முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ வெளியானது. ஐந்து நாவல்கள். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். இவ்வளவுதான் நான் எழுதியுள்ளவை. இவற்றை எழுதியதன் மூலமாக நான் ஏதோ தமிழ் இலக்கியத்துக்குப் பெரிய பங்களித்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். என்னளவில் என் அறிவுக்கு எட்டிய அளவில் எழுதியிருக்கிறேன். இதுதான் என்னுடைய இலக்கியத்தினுடைய அடிப்படை. இலக்கியம் எழுதப்படுவதன் நோக்கம் அன்பாக இருப்பது என்று சொல்வது, அன்பாகக் இருக்கக் கற்றுத்தருவது. என்னுடைய எழுத்து மற்றவர்களுக்கு அன்பாக இருக்கவும் அன்பாக இருக்கக் கற்றுக்கொடுக்கவும் செய்ததோ இல்லையோ நான் அன்பாக இருக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதுதான் படித்த புத்தகங்களின் வழியாகவும் எழுதிய எழுத்தின் வழியாகவும் நான் பெற்ற பலன்.

என்னுடைய எழுத்தில் பாசாங்கோ பாவனையோ நடிப்போ இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்னுடைய கதைகள் எல்லாமே சமூகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை, சமூகம் எழுதிய கதைகள். நான் எழுதியவை அல்ல. நான் ஒவ்வொரு சிறுகதை எழுதும்போதும் புதிதாக எழுத வந்த எழுத்தாளன்போல் உணர்கிறேன். அதே பயிற்சியோடு, தயக்கத்தோடு, கவலையோடு, எச்சரிக்கை உணர்வோடு எழுதுகிறேன். ஒவ்வொரு நாவல் எழுதும்போதும் புதிதாக எழுத வந்தவர் போலவே சிந்திக்கிறேன், திரும்பத் திரும்ப எழுதுகிறேன். ஒவ்வொரு கதையை எழுதும்போதும் ஒரு புது உலகத்துக்குள் போகிறேன். அந்தப் புது உலகங்கள் என்னை ஒவ்வொரு விதமாக மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு உலகமும் இந்த சமூகத்தைப் புதிதாகப் பார்க்கச் சொல்லிக் கற்றுத் தருகிறது. நான் என்ன கற்றுக்கொள்கிறேனோ அதுவே என்னுடைய எழுத்தாக இருக்கிறது!

எளிய மனிதர்களே என் கதைமாந்தர்கள்: கீரனூர் ஜாகிர்ராஜா

 

jahir

 

பழனிக்கு அருகில் உள்ள கீரனூர் என்னுடைய சொந்த கிராமம். பெரும்பாலும் என்னுடைய புனைவிலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருமே என்னுடைய மண்ணின் மைந்தர்கள்தான். அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், கோபதாபங்கள், காமம், பொறாமை, போட்டி என்று எல்லாவற்றையும் என் எழுத்துக்களாக மொழிபெயர்த்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

உதிரிப் பாட்டாளி வர்க்கத்தினரை, எளிய மனிதர்களை, விளிம்புநிலை மக்களை அவர்களுடைய வாழ்க்கையைக் காத்திரமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற குறிக்கோள் எனக்கு இருந்தது. அதைத்தான் என்னுடைய ஏழு நாவல்களாகவும் 50-60 சிறுகதைகளாகவும் நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளாகவும் கொடுத்துள்ளேன்.

இந்த 25 வருட காலத்தில் அம்மக்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனினும், அந்த மக்களுடைய சமூக அந்தஸ்து அப்படியேதான் இருக்கிறது.

என்னுடைய எழுத்து என்னுடைய இலக்கு அல்லது கனவு என்பது மிக விஸ்தீரணமானது. அது சில நேரங்களில் தொய்வுபெறலாம் சில நேரங்களில் படைப்பூக்கத்தின் காரணமாக மன எழுச்சி காரணமாக நிறைய எழுதலாம்; சில இடைவெளிகள் இருக்கலாம்.

ஆனால் சீராக 20 ஆண்டுகளாக இயங்கிவந்திருக்கிறேன் என்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. குறிப்பாக ‘தி இந்து’ ‘லிட் ஃபார் லைஃப்’ வழங்கக்கூடிய இந்த விருது எனக்குப் பெரிய உத்வேகத்தையும், தொடர்ச்சியாக இயங்குவதற்கான பெரிய படைப்பூக்கத்தையும் கொடுக்கிறது. எளிய மக்களைத்தான் என் படைப்புகளில் தொடர்ந்து பதிவுசெய்வேன். இந்த ஆண்டு இரண்டு நாவல்கள் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

காந்தியம், மார்க்சியத்தின் கலவை!- ராமாநுஜம்

 

08CHVCM-EDIT1-RAMANUJAM

 

அடிப்படையில் நான் ஒரு நாடகக்காரன். அரங்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான புறச்சூழல் இல்லாத காரணத்தினாலேயே மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று தடம் மாறினேன். என்னுடைய சிந்தனை புறவயமாக மார்க்சியம், அகவயமாக ரொமாண்டிக் காந்தியம் என்று கலவையாக இருந்தது. இவ்விரண்டையும் இணைத்துப் பார்ப்பதற்கான முயற்சியாகவே என்னுடைய செயல்பாடுகளைப் பார்க்கிறேன்.

அவ்விதத்தில் சிந்தனையாளர் ஆஷிஸ் நந்தியின் எழுத்துக்கள் எனக்கு பெரும் திறப்பைக் கொடுத்தன. மேற்கத்திய நவீனத்துவ விழுமியங்கள் மீதான விமர்சனப் பார்வை இங்கிருந்துதான் என்னுள் தொடங்கியது. தேசியம், அரசு போன்றவற்றை இங்கிருந்துதான் நிராகரிக்கத் தொடங்கினேன். ஆனால், காந்தியின் மீதான விமர்சனங்களை, குறிப்பாக சாதியம் குறித்தான அவரது பார்வைகள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு நந்தி போதுமானதாக இல்லை.

மேலும் நம்முடைய மரபான சிந்தனைகளோடு சாதியம் குறித்தான நவீன பார்வைகளை இணைக்க முடியவில்லை. இங்குதான் டி.ஆர்.நாகராஜின் எழுத்துக்கள் புரிதலை ஏற்படுத்திக்கொடுத்தன. அம்பேத்கரை, பெரியாரைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் காந்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்ற புரிதலை நாகராஜ் உருவாக்கிக்கொடுத்தார். எனினும், தீண்டாமையைப் புரிந்துகொள்ள நாகராஜ் போதுமானதாக இல்லை. சுந்தர் சருக்கையின் தீண்டாமை குறித்தான தத்துவார்த்த வாசிப்பு பல புள்ளிகளை இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

நாகராஜ், சருக்கை ஆகியோரின் எழுத்துக்களை மொழிபெயர்த்தபோதுதான், எனக்கு தமிழே தெரியாது என்ற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டேன். இந்தத் தவிப்பே மூலப்பிரதியை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவியது. சருக்கையின் தத்துவார்த்த வாசிப்பை இந்தியத் துணைக்கண்ட சிந்தனை மரபோடு, குறிப்பாக பிராமணீயச் சிந்தனை மரபோடு பொருத்திப்பார்க்க முயற்சித்தேன். இதன் விளைவே, ’சந்நியாசமும் தீண்டாமையும்’ என்ற நூல்.

பெண்ணின் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டும்! - தமயந்தி

 

thamaya

 

சிறுவயதில் மனதளவில் இருந்த தனிமையும் நல்ல நண்பர்களும்தான் புத்தகங்களை நோக்கி நான் பயணிக்கக் காரணம். தங்கம் என்றொரு சிநேகிதியின் அத்தை ஒரு பெரிய புத்தக அலமாரி வைத்திருந்தார். அதன் மேல் அப்படியொரு காதல் எனக்கு. இசையும் வாசிப்புமான வாழ்வு, ஆங்கில இலக்கியத்தைப் படிக்கத் தேர்ந்தெடுத்தபோது வளமானது. எழுத்தே வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கவைத்தது.

ஆனால், யதார்த்தம் எளிதாக இல்லை. எழுத்துக்காகக் கொண்டாடப்படும் மனிதர்களின் புறக்கணிப்புகள் , அவமானங்கள் -எழுதுவது மட்டுமே என் வேலை என எனக்கு உணர்த்தின. அகவாழ்வில், எழுதியதற்காக விரல்கள் ஒடிக்கப்பட்ட பெண் நான். இன்று எளிதில் தட்டச்சு செய்யுமாறு அதை நான் பழக்கி விட்டேன். இந்தச் சமூகத்தில் ஒரு பெண் எழுதுவதென்பது அவள் அவளாக அவளின் உலகில் வாழ்வதென்பதைப் போல அத்தனை மகிழ்ச்சியான விஷயம்.

பெண்ணின் தேர்வுகளை இச்சமூகம் மதிக்க வேண்டும். என் காதலை பல்வேறு காரணத்தால் குடும்பமும் சமூகமும் நிராகரித்தது. ஆனால் இன்று நான் தேர்ந்தெடுத்த நபர் மிகச் சரியான நபராக சமூகத்தில் உள்ளார். என் குடும்பம் தேர்ந்தெடுத்தவரே வன்முறையை நம்புவராக இருந்தார். பலர் தனிப்பட்ட வாழ்வை எங்கும் பேசாமல் இருப்பதே மெய்ஞானம் என்கிறார்கள். ஆனால் அதிலிருந்து முளைத்து வந்தவள் நான். அதைப் பேசாமல் ‘நான்’ இல்லை.

என் முகமூடிகளைக் கழற்றி நாளாகி விட்டது. பெண்கள் அனைவருமே தங்கள் சொந்த முகத்தையே கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். இன்று என் தேர்வு மிகச் சிறியது – அழகியல் சார்ந்த வாழும் அறை, புத்தகங்கள், நல்லிசை, நண்பர்கள், எழுத்து, வாடகை கட்ட பணம், நாளின் ஒரு தடவை நல்ல உணவு, நிறைய அன்பு!

ஏனெனில் நான் தமயந்தி. நானொரு வனதேவதை.

நினைவடுக்கிலிருந்து துயரத்தை எழுதுகிறேன்: சயந்தன்

 

sayanthan

 

என்றோ நான் அறிந்த அல்லது அனுபவித்துக் கடந்த கதைகளை நினைவின் அடுக்குகளில் சுமந்திருந்து அவற்றைச் சொல்ல விழைகிறேன். அவை துயரத்தின் கதைகளாகவே அமைந்துவிட்டன. ‘ஆறாவடு’ என்னுடைய முதலாவது நாவல். நினைவு தெரியத் தொடங்கி பருவத்தில் வாழ்வின் முதலாவது மரண பயத்தை இந்தியாவிலிருந்து ஆயுதங்களோடு வந்தவர்கள் ஏற்படுத்தினார்கள்.

இந்த முரணின் பின்னாலிருக்கின்ற நினைவுச் சேகரங்களே என் முதலாவது நாவலாகியது. இரண்டாவது நாவலான ‘ஆதிரை’ முள்ளிவாய்க்கால் ஊழிக்குப் பிறகு, கைவிடப்பட்டிருந்த சனங்களின் வாழ்வு என்னில் கீறிய குற்ற உணர்ச்சியை எழுதிக்கடந்த ஒரு முனைப்பு என்பேன்.

ஓர் இனத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் முடிவில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான எதிர்காலமும், இன்னொரு பகுதியினருக்கு நம்பிக்கையின்மையும் கிடைத்ததற்குக் காரணமாயிருந்த அந்த ‘ஒன்று’ எது என்ற கேள்விதான் ‘ஆதிரை’.

ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பு என்பது அவர்களுக்கான அரசியல் உரிமை. மக்களுடைய அந்த அரசியல் விருப்பு அப்படியேதான் உள்ளது. அதற்கான காரணங்களும் அப்படியேதான் உள்ளன. புலிகளுடைய ஆயுத வழியின் நடத்தையை முன்வைத்து மக்களுடைய அரசியல் அபிலாஷையை ஒரு போதும் நிராகரிக்க முடியாது.

சுமார் பத்து ஆண்டுகளைப் புலம்பெயர்ந்த தேசத்தில் கழித்திருக்கிறேன். சற்றும் அறிமுகமில்லாத பண்பாட்டுச் சூழலுக்குள் தன்னைப் பொருத்த முடியாமல் திணறிய முந்தைய தலைமுறை, பிறகு மிக இயல்பாக அதற்குள் நுழைவதும்; தன் பெற்றோர் நினைவூட்டுகிற வாழ்க்கை முறையைக் கேள்வி கேட்பதுமான இரண்டாம் தலைமுறையென மிகுந்த அக உணர்ச்சி அலைதல்களோடு வாழ்கின்ற மக்களை நாவலாக்கும் முயற்சிதான் எனது அடுத்த நாவலான ‘கலையாடி’.

 

http://tamil.thehindu.com/opinion/columns/article22395629.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளம் படைப்பாளிக்கானபிரமிள் விருதைப் பெற்ற சயந்தனுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

ஆதிரை, ஆறாவடு நாவல்களைப் படைத்த சயந்தனது கதைகள் யாழ் களத்தில் உள்ளன.

https://www.yarl.com/forum3/topic/108517-90-சுவிஸ்-பிராங்குகள்/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.