Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலியா இங்கிலாந்து ஒருநாள் போட்டி செய்திகள்

Featured Replies

அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம்

 

அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம்


அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள முதலாவது ஓடி போட்டி நாளை அவுஸ்ரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இவ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 1 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதவுள்ளன. இந்நிலையில் முதலாவது ஓடி போட்டி நாளை மெல்பேர்ன் மைதானத்திலும், 2 ஆவது ஓடி போட்டி 19 ஆம் திகதி பிறிஸ்பேன் மைதானத்திலும், 3 ஆவது ஓடி போட்டி 21 ஆம் திகதி சிட்னி மைதானத்திலும், 4 ஆவது ஓடி போட்டி 26 ஆம் திகதி அடெலெயிட் மைதானத்திலும், 5 ஆவது ஓடி போட்டி 28 ஆம் திகதி பெர்த் மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.

https://news.ibctamil.com/ta/cricket/australia-vs-england-first-odi

  • தொடங்கியவர்

ஒருநாள் கிரிக்கெட் அணியில் கிளென் மேக்ஸ்வெல் இல்லை: ஆஸி. அதிர்ச்சி முடிவு

 

 
maxwell

கிளென் மேக்ஸ்வெல் தேர்வாகவில்லை.   -  படம். | கெட்டி இமேஜஸ்

டெஸ்ட் போட்டி அணியிலேயே இருந்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி 14-ல் மெல்போர்னில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலை ஆஸ்திரேலியா தேர்வு செய்யாமல் அதிர்ச்சியளித்துள்ளது.

அதே போல் மேத்யூ வேடும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை, கேப்டன் ஸ்மித்தின் செல்ல நண்பர் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், டி20 அதிரடி வீரர் கிறிச் லின் ஒருநாள் தொடர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பாட் கமின்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணித்தேர்வுக்குழு தலைவர் டிரவர் ஹான்ஸ் கூறும்போது, “கிளென் மேக்ஸ்வெல் திறமை குறித்து யாருக்கும் சந்தேகம் எதுவும் இல்லை, ஆனால் அவர் சீராக ரன்களை எடுப்பதில்லை. இந்த வடிவத்தில் கடைசி 20 போட்டிகளில் மேக்ஸ்வெலின் சராசரி 22 மட்டுமே. கிறிஸ் லின் உள்நாட்டு கிரிக்கெட்டில் பிறருக்கு அச்சமூட்டும் ஒரு வீரராக திகழ்கிறார் அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்க முடியாது.

அதே போல் டிம் பெய்ன் தன்னைத்தானே தேர்வு செய்து கொண்ட வீரராகிறார், ஆஷஸ் தொடரில் பெய்ன் தன்னை நிரூபித்துள்ளார்” என்றார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் அணி:

ஸ்மித் (கேப்டன்), வார்னர், ஏரோன் பிஞ்ச், கமின்ஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்ப்பா.

http://tamil.thehindu.com/sports/article22359491.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

 
அ-அ+

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #AUSvsENG #MelbourneODI

 
 
 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
 
 
மெல்போர்ன்:
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. 
 
ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோயின்ஸ், டிம் பெயின் (விக்கெட்கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் சாம்பா
 
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மார்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட்கீப்பர்), மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், லியாம் பிளங்கீட், மார்க் உட்
 
201801140917215129_1_ausvseng-finch._L_styvpf.jpg
 
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவிச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. பிஞ்ச் 16 ரன்களுடனும், ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். #AUSvsENG #MelbourneODI

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/14091722/1140207/England-won-toss-and-chose-to-bowl-against-Australia.vpf

  • தொடங்கியவர்
  •  
England won by 5 wickets (with 7 balls remaining)
 
 
  • தொடங்கியவர்

ஜேசன் ராயின் சாதனை 180 ரன்கள்: ஆஸி.யின் 304 ரன்களை விரட்டி இங்கிலாந்து அபார வெற்றி

 

 
jason%20roy

180 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த ஜேசன் ராய்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஆஸி.யின் 304 ரன்களை மகா விரட்டல் செய்து இங்கிலாந்து அணி 308 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 முன்னிலை பெற்றது இங்கிலாந்து.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச் சதத்துடன் 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 48.5 ஓவர்களில் 308/5 என்று அபார வெற்றி பெற்றது. மெல்போர்னில் இது அதிகபட்ச விரட்டல் ஸ்கோராகும். ஜேசன் ராய் 151 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 180 ரன்களை விளாசினார், இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் இதுவே. ஜோ ரூட் 110 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சு சிதறடிக்கப்பட்டது. மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 71 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் இதில் 9 பவுண்டரிகள் 1 சிக்சரை விட்டுக் கொடுத்தார். லெக் ஸ்பின்னர் ஸாம்ப்பா 10 ஓவர்களில் 73 ரன்கள் விக்கெட் விக்கெட் இல்லை. கமின்ஸ் 10 ஓவர்கள் 63 ரன்கள் 2 விக்கெட். ஜேசன் ராயின் அதிரடியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 171ரன்கள்தான் இங்கிலாந்து ஒருநாள் தனிப்பட்ட வீரர் சாதனையாக இருந்தது.

ராய் இதற்கு முன்னால் இலங்கைக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன்பாக 162 ரன்கள் எடுத்தார், அதனைக் கடந்தார் தற்போது. ஜோ ரூட்டுடன் இணைந்து ஜேசன் ராய் கூட்டணி அமைத்து இருவரும் சாதனை 221 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

முன்னதாக ஏரோன் பிஞ்ச் 119 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 4-வது ஒருநாள் சதத்தை எடுத்தார்.

finchjpg

சதம் எடுத்த பிஞ்ச்.   -  படம். | ஏ.எஃப்.பி.

 

மார்கஸ் ஸ்டாய்னிஸ் (40 பந்துகளில் 60), மிட்செல் மார்ஷ் (68 பந்துகளில் 50) அருமையாக ஆடி ஆஸ்திரேலியாவை நிலை நிறுத்தினர், முன்னதாக டேவிட் வார்னர் (2), ஸ்டீவ் ஸ்மித் (23) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வார்னர் குறிப்பாக மார்க் உட்டின் ஆக்ரோஷமான ஷார்ட் பிட்ச் பந்தில் வெளியேறினார், ஸ்மித், அடில் ரஷித் பந்தில் வெளியேறினார். மொயின் அலி மோசமான ஆஷஸ் தொடரை மறக்கும் விதமாக சிக்கனமாக வீசி 10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இவர்தான் பிஞ்ச் விக்கெட்டை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 14 ரன்களிலும் மோர்கன் 1 ரன்னிலும் பட்லர் 4 ரன்களிலும் வெளியேறினர். ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றதையடுத்து அடுத்த போட்டி பிரிஸ்பனில் வெள்ளியன்று நடைபெறுகிறது

http://tamil.thehindu.com/sports/article22441367.ece

  • தொடங்கியவர்

ஏரோன் பிஞ்ச் சதம் 2-வது முறையாக வீண்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 

 
root

பிரிஸ்பன், 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ்.   -  படம். | ஏ.பி.

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய பிஞ்ச் தொடர்ச்சியாக 2வது சதத்தை எடுத்தார், ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பேர்ஸ்டோ, ஹேல்ஸ் அரைசதங்களுடனும் ஜோ ரூட் (46), பட்லர் (42) ஆகியோரது முக்கியப் பங்களிப்புகளினாலும் 44.2 ஓவர்களில் 274/6 என்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 2 விக்கெட்டுகளையும், 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும் இருந்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.

பேர்ஸ்டோ (60), ஹேல்ஸ் (57) இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர். முன்னதாக மெல்போர்னில் சாதனை 180 ரன்களை விளாசிய ஜேசன் ராய் 2 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தை ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பேர்ஸ்டோ, ஹேல்ஸ் இருவருமே ஆஸ்திரேலிய அறிமுக வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனிடம் ஆட்டமிழந்தனர். நடுவில் மிட்செல் ஸ்டார்க் 38வது ஓவரில் பட்லரின் எட்ஜைப் பிடித்தார். பிறகு அதே ஓவரில் மொயின் அலி (1) யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார். 227/6 என்று சற்றே கவலைக்கிடமானது.

moeen%20alijpg

மொயின் அலி, ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆகும் காட்சி.

 

ஆனால் ஜோ ரூட் (46 நாட் அவுட்), கிறிஸ் வோக்ஸ் (27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் 39 நாட் அவுட்) ஆகியோர் 5.4 ஓவர்கள் மீதம் வைத்து இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 2-வது வெற்றியை இங்கிலாந்து பெற்றது, அதுவும் 1999-க்குப் பிறகு பிரிஸ்பனில் வெற்றி பெறுகிறது.

முன்னதாக மெல்போர்னில் சதம் கண்ட பிஞ்ச், பிரிஸ்பனில் இன்று 114 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பவுலிங்கை ஆதிக்கம் செலுத்தினார். இங்கிலாந்துக்கு எதிராக 18 இன்னிங்ஸ்களில் இவரது 5-வது சதமாகும் இது. மொத்தமாக இவரது 10-வது சதம் இது.

டேவிட் வார்னர் 35 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்தார். 35-ல் 5 பவுண்டரிகள் அடங்கும். ஜோ ரூட் தன் பந்து வீச்சில் ஸ்மித் (18) விக்கெட்டை எல்.பியில் வீழ்த்தினார். ரிவியூவையும் காலி செய்தார். பிறகு டிராவிஸ் ஹெட் (7) விக்கெட்டையும் ஜோ ரூட் தன் பவுலிங்கில் தானே கேட்ச் ஆக்கி வெளியேற்றினார்.

அடில் ரஷித் (2/71), மொயின் அலி (1/31), ஜோ ரூட் (2/31) ஆகியோருக்கு பிட்சில் சற்றே உதவி இருந்தது. பிஞ்ச் வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 11.4 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் (36) உடன் இணைந்து பிஞ்ச் 85 ரன்கள் சேர்த்தார். 40வது ஓவரில் ஆஸ்திரேலியா 209/3 என்று இருந்தது. கேமரூன் ஒயிட் 15 ரன்களையும் விக்கெட் கீப்பர் கேரி 27 ரன்களையும் எடுக்க ஆஸ்திரேலியா 270/9 என்று முடிந்தது.

ஏரோன் பிஞ்ச் சதம் எடுத்த பிறகு லியாம் பிளெங்கட் பந்தை மிட் ஆனில் ராயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது பிளங்கெட்டின் 100வது ஒருநாள் விக்கெட். இவரது முதல் விக்கெட் பாகிஸ்தானின் மொகமது யூசுப், இது 13 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட விக்கெட்.

3-வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா, சாவா போட்டியாகும், இது சிட்னியில் ஞாயிறன்று நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article22472807.ece?homepage=true

  • தொடங்கியவர்

3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி 3-0 எனத் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

 

சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து 3-0 எனத் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. #AUSvENG #josButtler

3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி 3-0 எனத் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
ஸ்டீவ் ஸ்மித்-ஐ அவுட்டாக்கிய சந்தோசத்தில் இங்கிலாந்து வீரர்கள்
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையடுத்து தற்போது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மெல்போர்ன், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 38 ரன்னாக இருக்கும்போது ஜேசன் ராய் 19 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அலெக்ஸ் ஹேல்ஸ் களம் இறங்கினார். இவர் ஒரு ரன் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் 39 ரன்னிலும், ஜோ ரூட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 22.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

201801211705592279_1_ausveng003-s._L_styvpf.jpg
சதம் அடித்த சந்தோசத்தில் ஜோஸ் பட்லர்

5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் விக்கெட் கீப்பர் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 35 ஓவரில் 172 ரன்னாக இருக்கும்போது மோர்கன் ஹசில்வுட் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 6 ரன்னில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 10 ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி ஓவரில் பட்லர் சதமும், கிறிஸ் வோக்ஸ் அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

201801211705592279_2_ausveng004-s._L_styvpf.jpg
36 பந்தில் 53 ரன்கள் சேர்த்த கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து கடைசி 10 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. 41-வது ஓவரில் 52 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் அடுத்த 31 பந்தில் சதத்தை தொட்டார். கிறிஸ் வோக்ஸ் 36 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

பின்னர் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. பிஞ்ச், வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 24 ரன்னாக இருக்கும்போது வார்னர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் ஒயிட் 17 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 49 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 53 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

201801211705592279_3_ausveng002-s._L_styvpf.jpg
62 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்த பிஞ்ச்

மறுமுனையில் விளையாடிய ஸ்மித் 45 ரன்னில் வெளியேறினார். ஸ்மித் வெளியேறியபோது ஆஸ்திரேலியா 34 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 96 பந்தில் 122 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 55 ரன்னும், ஸ்டாய்னிஸ் 56 ரன்னும் அடித்தனர். என்றாலும் அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்த 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் பெய்ன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

201801211705592279_4_stoinis-s._L_styvpf.jpg
56 ரன்கள் எடுத்த ஸ்டாய்னிஸ்

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் இங்கிலாந்து 3-0 எனத் தொடரை கைப்பற்றியது. அத்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் 26-ந்தேதி நடக்கிறது. #AUSvENG #josButtler #ChrisWoakes #Stevesmith

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/21170559/1141381/AUSvENG-sydney-Odi-england-beats-australia-and-capture.vpf

  • தொடங்கியவர்

பந்தை சேதப்படுத்தினேனா?- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித் விளக்கம்

 

 
smith%20apjpg

கோப்புப் படம்: ஏபி

தான் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சந்தேகங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிராகரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், தனது வாயின் ஓரத்திலிருந்து எச்சிலை எடுத்து பந்தில் தடவினார். இது வீடியோவாகவும் பதிவானது. பந்துவீச்சுக்கு சாதகமாக ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தினாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

இது குறித்து பதிலளித்த ஸ்மித், இது வெள்ளைப் பந்தை பிரகாசமாக்க, தான் வழக்கமாக கையாளும் உத்தி என்று கூறினார். "அது எச்சில் மட்டுமே. ஏதோ தைலம் தடவினேன் என்று சிலர் சொன்னார்கள். எனது உதடுகளை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அவை உலர்ந்து போயிருந்தன. என் உதட்டில் எந்தத் தைலமும் இல்லை. எச்சிலை வாயின் ஓரம் கொண்டு வந்து அதை நான் பந்தில் தேய்ப்பதே வழக்கம். வேறெதுவும் இல்லை" என்று ஸ்மித் விளக்கம் தந்துள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை தனது கட்டை விரல் நகத்தால் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாருக்கு இங்கிலாந்து தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்ஸும் இந்தப் புகாரை நிராகரித்தார். செய்தியைப் பார்த்தவுடன் ஆட்ட நடுவர்களிடம் தான் சென்று விளக்கம் கேட்டதாகவும், அவர்கள் இதில் எந்த பிரச்சினையும் இல்லை, கவலை வேண்டாம் என்று பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக 0-4 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22490267.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய அணி வெற்றி

 

 
Travis%20Headjpg

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோஸ் ஹசல்வுட், பாட் கம்மின்ஸ் வேகக்கூட்டணி இங்கிலாந்து டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தது. ஜேசன் ராய் 0, ஜானி பேர்ஸ்டோவ் 0, அலெக்ஸ் ஹேல்ஸ் 3, ஜோ ரூட் 0, ஜாஸ் பட்லர் 0 ரன்களில் வெளியேற 6.2 ஓவர்களில் வெறும் 8 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி கடும் பின்னடைவை சந்தித்தது.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் மோர்கனுடன் இணைந்த மொயின் அலி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். இந்த சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடியது. மோர்கன் 33 ரன்களில் கம்மின்ஸ் பந்திலும், மொயின் அலி 33 ரன்களில் ஆன்ட்ரூ டை பந்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அடில் ரஷித் 7 ரன்களில் வெளியேறினார்.

120 ரன்களுக்கு 8 விக்கெட்கள் சரிந்த நிலையில் கிறிஸ் வோக்ஸ், டாம் குர்ரன் ஜோடி அதிரடியாக விளையாடியது. கிறிஸ்வோக்ஸ் 82 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், குர்ரன் 35 ரன்களும் சேர்த்ததால் இங்கிலாந்து அணியால் சற்று கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்களும் ஹசல்வுட், ஆன்ட் ரூ டை ஆகியோர் தலா 3 விக்கெட்களும் கைப்பற்றினர். 197 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட் 107 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இதனால் அந்த அணி தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த்தில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article22533549.ece

 

 

5-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
 

Dkn_Daily_News_2018__6027337908745.jpg

பெர்த்: 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து அதிர்ச்சி தந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 62, ஜேசன் ராய் 49, பேர்ஸ்டோவ் 44 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆண்ட்ரூ டை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

260 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஆஸ்திரேலியா தடுமாறியது. இறுதியில் 47.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

 

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=370972

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.