Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெ.ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

கேப்டவுன் டெஸ்ட் - டீன் எல்கர் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 266/8

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS #CapeTownTest

 
கேப்டவுன் டெஸ்ட் - டீன் எல்கர் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 266/8
 
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்கா சார்பில் டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது.

201803222329225951_1_4cl3bujd._L_styvpf.jpg

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஸ்டார்க் பந்தில் பவுண்டரி விரட்டி டீன் எல்கர் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 178 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் ஹசில்வுட் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார்.

அணியின் எண்ணிக்கை 220 ஆக இருக்கும் போது டி வில்லியர்ஸ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கியவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் தென் ஆப்ரிக்கா அணி 87 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 121 ரன்களுடனும், ரபாடா 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் பால் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மைகேல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #SAvAUS #CapeTownTest #Tamilnews
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/22232922/1152607/south-africa-2668-in-third-test-first-day-against.vpf

  • தொடங்கியவர்

கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 311 ரன்னில் ஆல்அவுட்

 

கேப் டவுனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 311 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SAvAUS

 
கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 311 ரன்னில் ஆல்அவுட்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் டீன் எல்கரின் சதத்தாலும், டி வில்லியர்சின் அரைசதத்தாலும் தென்ஆப்பிரிக்கா சிறப்பான ஸ்கோரை எட்டியது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் புயல்வேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 60 ஓவர்களுக்குப் பிறகு சிறப்பாக பந்து வீச தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.

201803231514028664_1_patcummins-s._L_styvpf.jpg

டீன் எல்கர் 121 ரன்னுடனும், ரபாடா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரபாடா 22 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அதேஓவரில் மோர்னோ மோர்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 97.5 ஓவரில் 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. டீன் எல்கர் 141 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #SAvAUS

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/23151403/1152751/Cape-Town-Test-south-africa-311-all-out.vpf

  • தொடங்கியவர்

பத்தில் ஐந்து கேட்ச்... ஸ்லிப் ஃபீல்டிங்கில் கோலிக்கு பாடம் எடுக்கும் ஸ்மித்! #SAvAUS

 

`விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்’ என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும், இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும், 'சர்வதேசக் கிரிக்கெட்டின் இரு துருவங்களாக உருவெடுத்து நிற்கும் அவர்கள் இருவரில், சிறந்த ஃபீல்டர் யார்' என்ற கேள்விக்கு கோலியை பல மைல் தூரம் பின்னுக்குத் தள்ளுகிறார் ஸ்டீவ் ஸ்மித். அதுவும் ஸ்லிப் கார்டனில் ஸ்மித் வேற லெவல்! கேப் டவுனில் நடக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 கேட்ச்கள் பிடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்.

ஸ்டீவ் ஸ்மித்

 

கோலி, தவான், ஜடேஜா, ரோஹித், ரஹானே, விஜய், ராகுல் என இன்றைய இந்திய அணியின் ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டர்கள். கடந்த கால இந்திய அணிகளைவிட, இந்த இளம் படை தனித்துத் தெரியக் காரணம் இவர்களின் ஃபீல்டிங். துடிப்பும் வேகமும் நிறைந்த இந்திய அணியின் ஃபீல்டிங், ஸ்லிப்பில் மட்டும் ஏனோ தொடர்ந்து சொதப்பிக்கொண்டே இருந்தது. இலங்கை, தென்னாப்பிரிக்கா என அனைத்து தொடர்களிலும் அது தொடர்ந்தது. அதிலும் குறிப்பாக, கோலி பல கேட்ச்களை ஸ்லிப்பில் நழுவவிட்டார். ரஹானே தவிர, ஸ்லிப்பில் வேறு எவரும் சரியாக செயல்படவில்லை. இதைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. 

``ஒரு நல்ல ஸ்லிப் ஃபீல்டர், மிகச் சிறந்த விக்கெட் கீப்பரைப் போல் பயிற்சி எடுக்கவேண்டும்" என்றார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கன்னினன். அவர் தலைசிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவர். தென்னாப்பிரிக்க தொடரின்போது ஸ்லிப்பில் இந்திய வீரர்கள் நிற்கும் முறையே தவறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். வேகப்பந்துவீச்சுக்கு உகந்த, ஸீமுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் இரட்டை மடங்கு கவனம் அவசியம். அது இந்திய வீரர்களிடம் இல்லை. தனது பேட்டிங்கின், சின்னச் சின்னத் தவறுகளையும் உடனுக்குடனே திருத்திக்கொள்ளும் விராட், இந்த விஷயத்தில் தன் தவறை, தன் அணியின் தவறை சரி செய்யவே இல்லை. 

நாதன் லயான்

``ஸ்லிப் ஃபீல்டர் என்பவர் ஒவ்வொரு பந்துக்கும் கழுகைப் போல் காத்திருக்க வேண்டும். அவரது கவனம் 100 சதவிகிதம் இருக்கவேண்டும். ஒரு சதவிகிதம் கவனக் குறைவு ஏற்பட்டாலும் பிசகு ஏற்படும். அப்படி ஏற்பட்டால், `டெண்டுல்கர் ட்ராப்டு ஆன் 20 அண்ட் 180 பை கல்லினன்' என்பதுபோன்ற பெயர்தான் நமக்கு மிஞ்சும். அது ஏற்படாமலிருக்க உச்சபட்ச கவனம் அவசியம்" என்கிறார் கல்லினன். நேற்று லயான் இப்படியான சங்கடத்தைத்தான் சந்தித்தார். 53 ரன்களில் இருந்தபோது எல்கர் அடித்த பந்தை பாயின்ட் திசையில் நின்றிருந்த லயான் தவறவிட்டார். எல்கர் சதமடித்துவிட்டார். கடைசிவரை ஆஸ்திரேலிய பௌலர்களுக்குத் தண்ணிகாட்டினார். அவர் பௌண்டரி அடிக்கும்போது, சதத்தை நெருங்கும்போது என எந்நேரமும், 'எல்கர் ட்ராப்டு ஆன் 53 பை லயான்' என்ற வாசகம்தான் ஸ்கோர் போர்டை நிரப்பியிருந்தது. ஒரு கேட்சை மிஸ் செய்வது என்பது அந்த அளவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதுவும், ஸ்லிப்பில் எந்த நேரமும் பந்து வந்து இப்படியான சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஆனால், ஸ்டீவ் ஸ்மித்..! நேற்று முதல் நாள் வேகப்பந்துவீச்சில் 3 கேட்ச்கள் பிடித்திருந்தவர், இன்று நாதன் லயான் பந்துவீச்சில் 2 கேட்ச்கள் பிடித்தார். இந்த இன்னிங்ஸில் மட்டும் 5 கேட்ச்கள் பிடித்ததன்மூலம், ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்குக் காரணம், அவரது பெர்ஃபெக்ஷன். நேற்று பிடித்த 3 கேட்ச்களுமே ஒன்றோடொன்று மாறுபட்டவை. ஒவ்வொன்றும் ஒரு ரகம். 

ஸ்டீவ் ஸ்மித்

மார்க்ரம் கொடுத்த அந்த முதல் கேட்ச், முதல் ஸ்லிப்புக்கும் இரண்டாவது ஸ்லிப்புக்கும் இடையில் மிகவும் தாழ்ந்து வந்தது. இருவருக்குமே கடினமான வாய்ப்புதான். அந்த ஷாட் அடிக்கப்படும்போது, ஸ்மித் தன் கைகளை முழங்கால் மீது வைத்திருந்தார். ஸ்லிப் ஃபீல்டிங் நுணுக்கங்களைப் பற்றி டேரில் கல்லினன் கூறியபோது, இப்படி முழங்கால்களின்மீது கைகளை வைத்திருப்பது தவறு என்று குறிப்பிடுகிறார். இதனால் ரியாக்ஷன் டைம் குறையும் என்பது அவர் கருத்து. அதுதான் உணமையும் கூட. இந்திய வீரர்கள் ஸ்லிப்பில் சொதப்பியதற்கு மிகமுக்கியக் காரணம் இதுதான். 

ஆனால், ஸ்மித் எப்படி சரியாக அதைப் பிடித்தார்..? அவரது கவனம் பந்தின்மீது 200 சதவிகிதம் இருந்தது என்றுதான் கூறவேண்டும். அவர் வலதுகை பழக்கம் உடையவர். பந்து வருவதோ இடதுபுறம். அதுவும் தாழ்வாக. பெரும்பாலான ஃபீல்டர்கள் இடையை இடதுபுறம் சாய்த்து, இடது கையால் பிடிக்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்யும்போது கேட்சைத் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம். ஸ்மித் மிகவும் தெளிவு. முழு உடலையும் திருப்பி, இரண்டு கைகளையும் நீட்டி டைவ் அடித்தார். பந்து தப்பிச் செல்வதற்கு வழியே இல்லை. மார்க்ரம் அவுட்.

அடுத்து டு ப்ளெஸ்ஸி... இம்முறை ஸ்மித்தின் வலதுபுறம் மார்பளவு எழும்பி வந்தது. இப்பொழுதும் மிகத் துல்லியமாக பந்தைக் கணித்தார் ஸ்மித். வலது காலில் நன்றாக அழுத்தம் கொடுத்து, உடலை வளைத்து வலதுபுறம் திரும்பி, இரண்டு கைகளாலும் எளிதாகப் பிடித்தார். பௌலரின் கையிலிருந்து வெளியேறி, பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டுத் தன் கைகளை அடையும் அந்த நொடி வரை, ஒரு மைக்ரோ செகண்ட் கூட ஸ்மித்தின் கவனம் பந்தை விட்டு விலகுவதில்லை. மூன்றாவது கேட்ச் கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. டெம்பா பவுமா எட்ஜாக, ஸ்மித்தின் அடிவயிறு உயரத்துக்கு வந்தது பந்து. மிகவும் எளிதான கேட்ச். அவர் எப்படி மிஸ் செய்வார்..?

ஸ்டீவ் ஸ்மித்

ஃபாஸ்ட் பௌலிங்கின்போது ஸ்லிப்பில் நிற்பது ஒரு ரகம் என்றால், ஸ்பின் பௌலிங்கின்போது அங்கு நிற்பது இன்னொரு ரகம். இன்னும் கூடுதலாக மெனக்கெடவேண்டும். தூரம் கம்மி... எதிர்வினையாற்ற இருக்கும் நேரமும் கம்மி... அப்படியான தருணத்தில் இன்னும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும். கவர் டிரைவ், ரிவர்ஸ் ஸ்வீப், ரிஸ்ட் ஸ்பின் போல் இதுவும் இரு கலைதான்! அந்தக் கலையில் ஸ்மித் கைதேர்ந்தவர். 

இன்று கம்மின்ஸ், ஹேசில்வுட் இருவரின் ஸ்பெல்லும் எடுபடாமல் போக, லயான் கையில் பந்தைக் கொடுத்துவிட்டு, முதல் ஸ்லிப்பில் போய் நின்றார் ஸ்மித். முதல் பந்து, ரபாடா அடிக்க, அவரது வயிற்றுக்கு நேரே சென்றது பந்து. சுழற்பந்துவீச்சின்போது, கொஞ்சம் விலகிச் செல்லும் பந்துகளைக்கூட எளிதாக வளைந்து பிடித்துவிடலாம். ஆனால், இதுபோன்ற பந்துகளைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஸ்மித் தெறி ஷார்ப். கொஞ்சம் பின்னால் விழுந்து, அதையும் எளிதாகப் பிடித்தார். அடுத்த வந்த மோர்னே மோர்கல்... டிட்டோ அதே கேட்ச். ஐந்தாவது கேட்சை அழகாக கம்ப்ளீட் செய்தார் ஆஸி கேப்டன். தென்னாப்பிரிக்கா ஆல் அவுட். 

ஆஸ்திரேலியா ஃபீல்டிங்

 

லயான் தவறவிட்ட ஒரு கேட்ச் தவிர்த்து, ஆஸ்திரேலியாவின் ஃபீல்டிங் பக்கா. தென்னாப்பிரிக்காவின் 10 விக்கெட்டுகளுமே கேட்ச் மூலம் வீழ்ந்தவை. எல்கர், டி வில்லியர்ஸ் அமைத்துக்கொடுத்த அற்புத அடித்தளத்தை உடைத்து, ஆட்டத்துக்குள் ஆஸ்திரேலியாவை எடுத்து வந்தது அவர்களின் ஃபீல்டிங்தான். அதில், அவர்களின் கேப்டனே மிகச்சிறந்த முன்மாதிரி. பேட்டிங்கில் கோலி அடிக்கும் கவர் டிரைவ்கள் போல், ஃப்ளிக் ஷாட்கள் போல் ஸ்மித்தால் அடிக்க முடியாது. அவரது கேமில் ஸ்டைலோ, அழகோ இல்லை. ஆனால், அது பெரிய இழப்பு இல்லை. ஏனெனில், ரன்களை எப்படி எடுக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால், ஃபீல்டிங்கில் ஸ்மித் போல் கோலி செயல்பட்டே தீரவேண்டும். ஏனெனில், 'Catches wins you matches!'

https://www.vikatan.com/news/sports/120026-steve-smith-takes-5-catches-in-slip-as-all-south-african-wickets-were-caught.html

  • தொடங்கியவர்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வார்னர்: ஹாட்ரிக் பவுண்டரி அடித்ததற்கு பதிலடி கொடுத்து அனுப்பிய ரபாடா

 

 
david-warner7591

ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் வார்னர்   -  படம் உதவி: ட்விட்டர்

கேப்டவுன் நகரில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆட்டமிழந்து சென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த வார்னருக்கு ரபாடாவும் தகுந்த பதிலடி அளித்தார்.

தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பேட் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் பந்துவீச்சாளர் ரபாடாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தோள்பட்டையில் மோதியதால், 2 போட்டிகள் விளையாட ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச வரும்போது பரபரப்பான சூழல் நிலவியது.

அதேபோலவே ரபாடா பந்துவீச வரும்போது, டேவிட் வார்னர் அவரின் பந்துகளை பவுண்டரிகளாக அடித்து துவைத்தார். ரபாடா வீசிய 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்த வார்னர் அவரை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.

அதேபோல 5-வது ஓவரை ரபாடா வீச வந்தபோது, முதல் பந்தில் சிக்சர் அடித்தார் வார்னர். ஆனால், 3-வது பந்தை வார்னர் எதிர்பார்க்கவில்லை. ரபாடா வீசிய அந்த பந்து இன்ஸ்விங்கில் வார்னரின் ஆப்ஸ்டிக்கை காலி செய்தது. தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரிகளையும், சிக்சரையும் அடித்த வார்னரை, கிளீன் போல்டாக்கி ரபாடா பதிலடி கொடுத்தார்.

தான் ஆட்டமிழந்த கோபத்தோடு பெவிலியனுக்கு வார்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓய்வறைக்கு செல்லும் மாடிப்படி அருகே நின்றிருந்த ரசிகர் ஒருவர் வார்னரைப் பார்த்து ஏதோ கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த வார்னர் மீண்டும் கீழே இறங்கி அந்த ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் வார்னரை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தார். ஆட்டமிழந்த கோபத்தில் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வார்னரின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23336257.ece

  • தொடங்கியவர்

பேங்க்ராப்ட் பையில் இருந்தது என்ன?: ஆஸி.-தெ.ஆ டெஸ்டில் கிளம்பியது அடுத்த சர்ச்சை

 

 
bancroft

நடுவர்கள் கேள்வி கேட்க கறுப்புத் துணியைக் காட்டும் பேங்க்ராப்ட்.   -  படம். | ஏ.எஃப்.பி.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளன்று தென் ஆப்பிரிக்கா தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவந்த போது ஆஸ்திரேலிய பீல்டர் பேங்க்ராப்ட் பந்தைத் தேய்க்க வெளியிலிருந்து கொண்டு வந்த ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்தியதாக தொலைக்காட்சியில் காட்டப்பட கிளம்பியது இன்னும் சீரியசான சர்ச்சை.

ஏற்கெனவே வீரர்களுக்கு இடையேயான சர்ச்சைப் போதாது என்று ஆஸ்திரேலிய வீரர் பேங்க்ராப்டினால் தற்போது பந்தின் தன்மையை மாற்றும் ‘பால் டேம்பரிங்’ என்ற பந்தை சேதப்படுத்தும் சீரியசான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேங்க்ராப்ட் பந்தைத் தேய்க்க மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை பயன்படுத்தியதாக கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆக அதன் ஒரு பக்கத்தைத் தேய்த்து இன்னொரு பக்கத்தை பளபளப்புக் குன்றாமல் பராமரிக்க வேண்டும், இதனை இயற்கையான முறையில்தான் செய்ய வேண்டுமே தவிர உப்புக் காகிதம், சோடாபாட்டில் மூடி போன்ற வெளியிலிருந்து கொண்டு செல்லும் பொருளினால் செய்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது, கடும் அபராதம், தடை உள்ளிட்ட தண்டனைகளுக்குரியதாகும்.

நடுவர்களான நீஜல் லாங், இல்லிங்வொர்த் ஆகியோர் பேங்க்ராப்ட்டுடன் இது குறித்து பேசியதும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஆனால் பந்தையும் மாற்றவில்லை, இதற்கான முதற்கட்ட 5 ரன் அபராதமும் விதிக்கப்படவில்லை.

நடுவர்கள் பேங்க்ராப்டுடன் பேசும்போது அவர் உபயோகித்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட மஞ்சள் நிற பொருளுக்குப் பதிலாக கறுப்பு நிற துணியைத்தான் காண்பித்தார்.

முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார், ஆஸ்திரேலியர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கூறினார்.

வர்ணனையிலிருந்த ஷேன் வார்னும் உண்மையை ஆஸ்திரேலியா ஒப்புக் கொள்ள வேண்டும் இதில் பேங்கிராப்ட் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார், டேரன் லீ மேன், கேப்டன் ஸ்மித் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23343931.ece?homepage=true

  • தொடங்கியவர்

கேப்டவுன் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 238/5

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS #CapeTownTest

 
கேப்டவுன் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 238/5
 
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டு மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்கா சார்பில் டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமாக ஆடினர். அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் 64 ரன்களில் அவுட்டானார்.  டீன் எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 97.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 141 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் பால் கம்மின்ஸ் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

201803242331510035_1_taw9of20._L_styvpf.jpg

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்ட், வார்னர் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க  வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

பான்கிராப்ட் ஓரளவு தாக்குப்பிடித்து 77 ரன்கள் எடுத்தார். நாதன் லியான் 47 ரன்னும், வார்னர் 30 ரன்னும் எடுத்தனர். இரண்டாம்  நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டிம் பைன் 33 ரன்களுடனும், ஹேசில்வுட் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 69.5 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  டிம் பைன் 34 ரன்னுடன் ஆவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்னி மார்கல், ரபாடா ஆகியோர் 4 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராம், டீன் எல்கர் களமிறங்கினர்.

முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய எல்கர் 14 ரன்னில் அவுட்டானார். அடுத்தி இறங்கிய அம்லா, டு பிளசிஸ், பவுமா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கார்கிராம் பொறுப்பாக ஆடி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ் 51 ரன்களுடனும், டி காக் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டார்க், ஹேசில்வுட், லியான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவை விட தென் ஆப்பிரிக்கா 294 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #SAvAUS #CapeTownTest #Tamilnews  

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/24233151/1153014/south-africa-2385-in-third-test-day-three-against.vpf

  • தொடங்கியவர்

https://www.cricket.com.au/news/cameron-bancroft-umpires-pockets-pants-yellow-sunglasses-case-australia-south-africa-cape-town-video/2018-03-25

 

பேங்க்ராப்ட் பையில் இருந்தது என்ன?: ஆஸி.-தெ.ஆ டெஸ்டில் கிளம்பியது அடுத்த சர்ச்சை

  • தொடங்கியவர்

பான்கிராப்ட்டின் செயலால் எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - சுமித்

 

 
 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் போன்ற நடவடிக்கையால் எனது நேர்மை குறித்து கேள்வி எழும்புகிறது என்று ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். #SAvAUS #Bancroft #Smith

 
 
 
 
பான்கிராப்ட்டின் செயலால் எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - சுமித்
 
கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீல்டிங் செய்த போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.

தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறுகையில், ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார்.
 
201803250937368322_1_Bancro._L_styvpf.jpg


ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில் ‘உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது’ என்றார்.

ஐ.சி.சி. போட்டி நடுவரின் விசாரணைக்கு பிறகே பான்கிராப்ட் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும். 25 வயதான பான்கிராப்ட் முதல் இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. #CameronBancroft #Bancroft #Smith #SAvAUS #CapeTownTest

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/25093737/1153038/Steven-Smith-says-Question-of-my-honesty-comes-from.vpf

  • தொடங்கியவர்

கேப் டவுன் டெஸ்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா

 

 
 

கேப் டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 322 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது. #AUSvSA #SAvAUS #CapeTownTest

 
 
 
 
கேப் டவுன் டெஸ்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா
 
 
 
கேப் டவுன்:
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் கடைசி வரை களத்தில் நின்று 141 ரன்கள் அடித்தார். டி வில்லியர்ஸ் 64 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
 
201803252135006055_1_saaus2503-3._L_styvpf.jpg
 
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, மோர்கல் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சால் 69.5 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா 255 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பான்கிராப்ட் 77 ரன்னும், நாதன் லயன் 47 ரன்னும் எடுத்தனர். ரபாடா, மோர்கல் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்ற தென்ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மார்கிராம் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 51 ரன்னுடனும், டி காக் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி வில்லியர்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். பிலாண்டர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய டி காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
201803252135006055_2_saaus2503-2._L_styvpf.jpg
 
ரபாடா 20 ரன்கள் எடுத்த நிலையிலும், மகாராஜ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் பிலாண்டர் அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய மோர்கல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 373 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பிலாண்டர் 52 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 429 ரன்கள் முன்னிலைப்  பெற்றுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 430 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள தென்ஆப்பிரிக்கா. 430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கெமரான் பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடினர். பான்கிராப்ட் 26 ரன்களிலும், வார்னர், 32 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.
 
அதன்பின் வந்தவர்கள் தென்ஆப்ரிக்கா அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிச்செல் மார்ஷ் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் மார்னே மார்கல் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 
 
201803252135006055_3_saaus2503._L_styvpf.jpg
 
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்ரிக்கா அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. #AUSvSA #SAvAUS #CapeTownTest

https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/25213500/1153126/South-Africa-beat-Australia-by-322-runs-in-Cape-Town.vpf

  • தொடங்கியவர்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்- அம்லா சொதப்பல்- மார்கிராம் அசத்தல் சதம்

 
அ-அ+

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் அம்லா 27 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மார்கிராம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். #SAvAUS

 
 
 
 
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்- அம்லா சொதப்பல்- மார்கிராம் அசத்தல் சதம்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணியில் வார்னர், பான்கிராப்ட், ஸ்மித் ஆகியோருக்குப் பதிலாக ரென்ஷா, ஜோ பேர்ன்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் சேயர்ஸ் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

201803301930366010_1_amla-s._L_styvpf.jpg
அம்லா விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்

டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்கிராம் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய மார்கிராம் 90 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தால் தென்ஆப்பிரிக்கா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்தது. அப்போது மார்கிராம் 53 ரன்னுடனும், அம்லா 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் மார்கிராம் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். ஆனால் அம்லா 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அம்லா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த மூன்று டெஸ்டுகளில் 0, 8, 56, 27, 31, 31 ரன்கள் மட்டுமே அடித்தார்.

201803301930366010_2_markram-sss._L_styvpf.jpg
சதமடித்த சந்தோசத்தில் மார்கிராம்

அடுத்து மார்கிராம் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். மார்கிராம் 152 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை எட்டினார். இது அவரின் 4-வது சதமாகும். தென்ஆப்பிரிக்கா தேனீர் இடைவேளையின் போது 55 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிராம் 111 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/30193036/1154145/SAvAUS-Johannesburg-Test-markram-century.vpf

  • தொடங்கியவர்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்களுக்கு ஆல் அவுட்

 
அ-அ+

ஆஸ்திரேலியாவுக்கான நான்காவது டெஸ்ட் போட்டியில் மார்கிராம், பவுமா ஆகியோரின் அபார ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS

 
 
 
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்களுக்கு ஆல் அவுட்
 
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
 
டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 19 ரன்கள் எடுத்த நிலையில் 
ஆட்டமிழந்தார். அடுத்து மார்கிராம் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார். 
 
அம்லா 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அரை சதமடித்த டி வில்லியர்ஸ் 69 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மார்கிராம் ஒரு சிக்சர், 17 பவுண்டரியுடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரின் 4-வது சதமாகும். அவரை தொடர்ந்து இறங்கிய டு பிளஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரபாடா ரன் எடுக்காமலும், டி காக் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவுமா பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல்
95 ரன்கள் எடுத்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், சாயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. #SAvAUS #Tamilnews

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/31180625/1154321/south-africa-all-out-in-488-in-first-innings-in-foruth.vpf

  • தொடங்கியவர்

மிகப்பெரிய தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா: நசுக்கும் தென் ஆப்பிரிக்கா

 

 
philander

பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டைக் கொண்டாடும் வெர்னன் பிலாண்டர்.   -  படம். | ஏ.பி.

ஜோஹன்னஸ்பர்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 488 ரன்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்து மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்கியுள்ளது.

ஆட்ட நேர முடிவில் கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்களுடனும் கமின்ஸ் 7 ரன்களுடனும் களத்திலிருக்கின்றனர், தென் ஆப்பிரிக்கா தரப்பில் வெர்னன் பிலாண்டர் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ரபாடா, மோர்கெல் மஹராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 299/6 என்று இருந்த போது ஆஸ்திரேலியா பிடியை நழுவ விட தெம்பா பவுமா அருமையாக ஆடி 95 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் 5 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் சேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மார்க்ரம் 17 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 152 ரன்கள் எடுக்க, டிவில்லியர்ஸ் 69 ரன்களை விளாசினார். கடைசியில் தெம்பா பவுமா நிற்க மஹராஜ் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ரன்களையும் டி காக் 39 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 488 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா புதிய தொடக்க வீரர்களான பர்ன்ஸ், ரென்ஷாவைக் களமிறக்கியது, இருவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. பர்ன்ஸ் 4 ரன்களில் ரபாடாவின் வெளியே சென்றப் பந்தை ஆடினார், எட்ஜ் ஆனது 2வது ஸ்லிப்பில் டுபிளெசிஸ் கேட்ச் எடுத்தார். ரென்ஷா 8 ரன்களில் பிலாண்டர் இழுத்த இழுப்புக்குச் சென்று எட்ஜ் செய்து வெளியேறினார்.

வாய்ப்புக்காகக் காத்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பிலாண்டரிடம் பவுல்டு ஆனார். பந்தை ஆடாமல் விட நினைத்தார். ஆனால் மட்டையை குறித்த நேரத்தில் விலக்கவில்லை பந்து மட்டையில் பட்டு ஆஃப் ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. கோல்டன் டக் அடித்தார் ஹேண்ட்ஸ்கம்ப். ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்த பிலாண்டர் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டே இரண்டு வீரர்கள்தான் இரட்டை இலக்கம் கடந்தனர் ஒன்று உஸ்மான் கவாஜா, இவர் 84 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பிலாண்டர் பந்தை லெக் திசையில் தட்டி விட முயன்று குவிண்டன் டி காக்கின் அபாரமான கேட்சுக்கு வெளியேற நேரிட்டது.

மிட்செல் மார்ஷ் ஆட்டம் முடிய 15 நிமிடங்களே இருந்த போது மோர்கெல் பந்தை வாரிக்கொண்டு பெரிய டிரைவ் ஆட முயல பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஷான் மார்ஷ் 16 ரன்களில் மஹராஜ் பந்தில் டிவில்லியர்ஸிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். ஆஸ்திரேலியா 96/6 என்ற நிலையிலிருந்து 110/6 என்று உள்ளது, மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்கி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/article23406445.ece?homepage=true

  • தொடங்கியவர்

விரலில் லேசான எலும்பு முறிவுடன் போராடும் டிம் பெய்ன்; கமின்ஸ் அரைசதம்; 100 ரன் கூட்டணி

 
 
cummins-paine

சதக்கூட்டணி அமைத்த கமின்ஸ், கேப்டன் பெய்ன்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் 488 ரன்களை எதிர்த்து 110/6 என்று தடுமாறிய நிலையில் இன்று களமிறங்கிய ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் மற்றும் கமின்ஸ் ஆகியோர் 7வது விக்கெட்டுக்காக 100 ரன் கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்தத் தொடரிலேயே ஆஸ்திரேலியாவின் சிறந்த கூட்டணியாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிம் பெய்ன் விரலில் காயமேற்பட்டு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்களுடன் ஆடி வருகிறார்.

 

இன்னும் பாலோ ஆனைத் தவிர்க்க 88 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201.

பாட் கமின்ஸ் சமீப காலமாக பேட்டிங்கில் தனது திறமையை ஒரு பேட்ஸ்மென் போலவே வெளிப்படுத்தி வருகிறார், இவர் சற்று முன் 92 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் மஹராஜ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். கமின்ஸின் டெஸ்ட் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் நாட் அவுட் கொடுத்தார், ஆனால் டுபிளெசிஸ் ரிவியூ செய்தார், அதில் கேட்ச் இல்லை என்று தெரியவந்தது, ஆனால் கால்காப்பில் வாங்கியதால் எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெடல் ஸ்வீப் ஆடினார் கமின்ஸ்.

பொறுமையாக ஆடிவந்த கமின்ஸ், மஹராஜ் வீசிய 15வது ஓவரில் ஒரு பேக்ஃபுட் பஞ்ச் கவர் பவுண்டரி, அடுத்ததாக ஒரு மிட்விக்கெட் ஸ்லாக் ஷாட் பவுண்டரி, பிறகு லாங் ஆனில் ஒரு மிகப்பெரிய சிக்ஸ் என்று ஒரே ஓவரில் 15 ரன்கள் விளாசினார்.

டிம் பெய்ன் 45 ரன்களுடன் ஆட நேதன் லயன் தனது புதிய அதிரடி பேட்டிங்குடன் 4 ரன்களுடன் ஆடி வருகிறார்.

http://tamil.thehindu.com/sports/article23406770.ece

  • தொடங்கியவர்

டிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு

 

 
duplessis

4வது டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த டுபிளெசிஸ்.   -  படம். | ஏ.பி.

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தன் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் உடைந்து நொறுங்கிப்போயுள்ள ஆஸ்திரேலியாவை மேலும் களத்தில் வாட்டி எடுத்து விட்டது தென் ஆப்பிரிக்கா, டுபிளெசிஸ் 178 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 120 ரன்களையும் ஆஸ்திரேலியாவை வதைக்கும் டீன் எல்கர் 250 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்தார். இந்த வதைப்பு போதாதென்று கடைசியில் பவுமா (35 நாட் அவுட்), பிலாண்டர் (33 நாட் அவுட்) சேர்ந்து 71 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால் இந்த சிதைப்பிலும் பாட் கமின்ஸ் தான் வேறொரு லீகில் உள்ள பவுலர் என்று அதியற்புதமாக வீசி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், முதல் இன்னிங்சிலும் கமின்ஸ் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டிக்ளேர் எப்போது என்று ஆஸி.அணியை வெறுப்பேற்றிய தொடர் பேட்டிங்:

கேப்டன் டுபிளெசிஸ் ஆஸ்திரேலியாவைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவ்வளவு வசையை எதிர்கொண்டிருப்பார் போலிருக்கிறது, அதனால் அணியின் முன்னிலை 400, 500 என்று சென்ற போதும் டிக்ளேர் பற்றி யோசிக்காமல் அவர் தொடர்ந்து தேநீர் இடைவேளை வரை ஆடிக்கொண்டேயிருந்தார்.

காலக்கெடு இல்லாத காலக்கட்டத்தில்தான் டெஸ்ட் போட்டி ஒன்றில் 500க்கும் மேல் 4வது இன்னிங்சில் அடிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் டுபிளெசிஸ் எந்த அடிப்படையில் இன்னிங்சை நீட்டி முழக்கியது ஆஸ்திரேலியாவை சுத்தமாக மனரீதியாகக் காலி செய்யும் நோக்கத்துக்காக இருக்க வாய்ப்புள்ளது.

டீன் எல்கர் விரைவில் ரன் எடுக்க வேண்டும் என்ற கதியில் ஆடவில்லை, தடுப்பாட்ட வெறுப்பேற்றினார், அவரால் அடிக்க முடியவில்லை என்பதல்ல விஷயம் ஏனெனில் அரைசதம் எடுக்க மிட்செல் மார்ஷ் பந்தை லாங் ஆன் தலைக்கு மேல் சிக்ஸ் தூக்கினார். ஆனால் அரைசதம் எடுக்க 199 பந்துகளை அவர் எதிர்கொண்டார். கடைசியில் 81 ரன்களில் ஸ்லாக் செய்துதான் நேதன் லயனிடம் வீழ்ந்தார். குவிண்டன் டி காக் 4 ரன்களில் கமின்ஸிடம் எல்.பி.ஆனார்.

இந்தத் தொடரில் கடுமையாகச் சொதப்பி 20 ரன்களையே அதிகபட்சமாக எடுத்து இந்தச் சதத்துக்கு முன்பாக இந்தத் தொடரில் மொத்தம் 55 ரன்களையே எடுத்த டுபிளெசிஸ் சதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ரன் விகிதத்தையும் கூட்டினார், அதுவும் பாட் கமின்ஸை கவர் பாயிண்ட் மேல் அடித்த சிக்ஸ் அவரது ஆக்ரோஷம் என்பதை விட முன்னதாக கமின்ஸ் பந்தில் விரலில் அடிவாங்கிய வெறிதான் என்று தெரிகிறது. தன் 8வது சதத்தை எடுத்து முடித்தார். 120 ரன்களில் இதே கமின்ஸிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

612 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா 21/0. இன்று இன்னமும் குறைந்தது 29 ஓவர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23416358.ece

  • தொடங்கியவர்

‘ஸ்விங் கிங்’ பிலாண்டர் பிரமாதம்: நொறுங்கியது ஆஸி. - தெ.ஆ. வரலாற்று தொடர் வெற்றி

 

 
south%20africa

வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக் கோப்பையை ஓய்வு பெற்ற மோர்கெலிடம் கொடுத்து அழகு பார்த்த தென் ஆப்பிரிக்கா.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் வெர்னன் பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 119 ரன்களுக்குச் சுருண்டு 492 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது. தென் ஆப்பிரிக்கா அணி 1970-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி 3-1 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

88/3 என்று இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களூக்குச் சுருண்டது. வெர்னன் பிலாண்டர் 13 ஓவர்கள் 5 மெய்டன்களுடன் 21 ரன்களுக்கு 6 விக்கெட் என்று தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை நிகழ்த்தினார். மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அவர் இத்துடன் 309 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் ஓய்வு பெறுகிறார்.

   
morkeljpg

309 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் மோர்கெல் பிரியாவிடை.   -  படம். | ஏ.பி.

 

பிலாண்டரின் ஸ்விங்கும் 200 டெஸ்ட் விக்கெட்டுகளும்!

ஆட்டம் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்குள் சம்பிரதாயங்களை முடித்து வைத்தார் பிலாண்டர். கடைசியில் நேதன் லயன் ரன் அவுட் ஆக, இருதரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதங்களும், காயங்களும், தடைகளும், சர்ச்சைகளும் மிகுந்த, ஒரு டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா ஆதிக்கமும் இத்துடன் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களில் ஒருவர் கூட 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட எடுக்காமல் முடிந்த அதிசயத் தொடர் ஆனது. இன்று முதல் பலி ஷான் மார்ஷ் அவர் 7 ரன்களில் பிலாண்டரின் இன்ஸ்விங்கருக்கு தெம்பா பவுமாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

3 பந்துகள் சென்று மிட்செல் மார்ஷை அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் செய்ய வைத்தார் பிலாண்டர், டி காக் வேலையை முடிக்க பிலாண்டர் தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

philanderjpg

ஆட்ட நாயகன் பிலாண்டர். | ராய்ட்டர்ஸ்.

 

பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 24 ரன்களில் முதல் இன்னிங்ஸ் ரிபீட் போலவே சற்றே வெளியே சென்ற பந்து மெக்ரா லெந்த், ஹேண்ட்ஸ்கம்ப் மட்டையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. மட்டையில் பட்டு பவுல்டு ஆனது, இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் 50வது விக்கெட்டைக் கைப்பற்றினார் பிலாண்டர்.

அதன் பிறகும் பிலாண்டரின் ஸ்விங் மங்கவில்லை, தீவிரமும் குறையவில்லை 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஓய்வு ஒழிச்சலில்லாத ஸ்விங் பந்து வீச்சில் முன்னால் இழுக்கப்பட்ட டிம் பெய்ன் எட்ஜ் ஆகி வெளியேறினார். அவுட் ஆவதற்கு முன்பாக 2 பந்துகளில் ஒன்று உள்விளிம்பு இன்னொன்று வெளிவிளிம்பு, அடுத்து அவுட். இதுதான் பிலாண்டர். இதே ஓவரில் பாட் கமின்ஸ் இன்ஸ்விங்கரைக் கணிக்கத் தவறி பவுல்டு ஆனார். அடுத்த பந்தே சாத் சேயர்ஸ் எட்ஜ் செய்து 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

ஜோஷ் ஹேசில்வுட் மற்றவர்களை விட நல்ல தடுப்பாட்ட உத்தி வைத்திருந்தார், ஆட்டத்தின் போக்குக்கு எதிராக பிலாண்டரை மிட் ஆஃபில் தூக்கி ஒரு பவுண்டரி அடித்தார். லயன், ஹேசில்வுட் விட்டுக் கொடுக்காமல் 6 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர், இதில் மோர்கெலை லயன் ஒரு அருமையான பிக்ஃபுட் பஞ்ச் ஆடி பவுண்டரி அடித்தார்.

கடைசியில் யாருக்கும் விக்கெட் விழாமல் ரன் அவுட் ஆனார் லயன், கொண்டாட்டங்கள், உணர்ச்சித் தழுவல்கள், வெற்றி ப்பெருமிதங்கள்! 119 ரன்களுக்கு ஆல் அவுட். இன்று 17 ஓவர்களில் கதை முடிந்தது. ஆட்ட நாயகன் பிலாண்டர், தொடர் நாயகன் ரபாடா.

http://tamil.thehindu.com/sports/article23425389.ece?homepage=true

  • தொடங்கியவர்

பந்து சேத சர்ச்சையும் படுதோல்விக்குக் காரணம்: ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்


 

 

ball-tampering-australian-cricket-scandal-tim-paine-pressmeet

(இடது) பந்தை சேதப்படுத்தும் பேன்கிராஃப்ட் - (வலது) டிம் பெய்ன்

 

முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து சேத சர்ச்சையில் சிக்கியது அணியின் ஆட்டத்தை வெகுவாக பாதித்தது என ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா. இந்தத் தோல்வியால் 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா இழந்தது. இதன் மூலம், 1969/70ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விதங்களிலும் ஆஸ்திரேலியாவை விட திறம்பட விளையாடியது என பெய்ன் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய அணி போராடாமல் தோல்வியடைந்தது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் ஃபிலாண்டர் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸி. 

3வது டெஸ்ட் போட்டியில் பந்து சேத சர்ச்சையைத் தொடர்ந்து, 492 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைப் பற்றி பேசுகையில், "எந்த மாதிரியான வாரமாக இது இருந்தது என்பதைப் பற்றி தேவையான அளவு பேசிவிட்டோம். இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடிய முறை ஏமாற்றமளிக்கிறது. இன்று உறுதியாகப் போராட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் அது முடியவில்லை. 

மன ரீதியாக நாங்கள் உறுதியாக இல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மட்டுமல்ல, எந்த போட்டியிலும் லேசான தடுமாற்றம் இருந்தால் போதும். வலுவிழந்துவிடுவோம். நாங்கள் நினைத்ததை விட அதிக தாக்கத்தை அணி வீரர்கள் மீது (பந்து சேத சர்ச்சை) ஏற்படுத்தியது. 

எங்கள் நாட்டுக்குத் திரும்பி மீண்டும் புதிதான தொடக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. அணியின் அணுகுமுறையில் மாற்றம் தொடங்கிவிட்டது. அது தொடர்ந்து நடக்கும். எப்படியும் புதிய பயிற்சியாளர் வரவுள்ளார். அவர் அணியின் அணுகுமுறையை முடிவு செய்வதில் பெரிய பங்குவகிப்பார். எனது பார்வையில் சொல்ல வேண்டுமென்றால், எதிரணியின் மீது மரியாதையோடு ஆடும் அதே நேரத்தில் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு ஆடவும் வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டை கண்டுபிடிக்கவேண்டும்" என டிம் பெய்ன் குறிப்பிட்டார். 

http://www.kamadenu.in/news/sports/1480-ball-tampering-australian-cricket-scandal-tim-paine-pressmeet.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.