Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று செய்திகள்....வெஸ்ட் இண்டீஸ் அணி சாதிக்குமா?

Featured Replies

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம்

 

அ-அ+

வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது.

 
 
 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம்
 
ஹராரே:

வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. சிறிய அணிகளின் வருகையால் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது என்று விமர்சனங்கள் எழுந்ததால் அணிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. தரவரிசையில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீசால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை.

எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் அரங்கேறுகிறது. தகுதி சுற்றில் களம் காணும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும்.

சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் சந்திக்காத மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் லீக்கில் தங்களால் வீழ்த்தப்பட்ட அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்தால் அதற்குரிய புள்ளியையும் எடுத்து வர முடியும். சூப்பர் சிக்ஸ் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் மிக வலுவாக திகழ்ந்தது. ஆனால் இப்போது குட்டி அணி போல் மாறிவிட்டது. ஜாசன் ஹோல்டர் தலைமையில் களம் இறங்கும் அந்த அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், சாமுவேல்ஸ், பிராத்வெய்ட் ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 115 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த ஸ்கோரை வைத்து கொண்டு எப்படியோ வெற்றி பெற்று விட்டது. இதுவரை எந்த உலக கோப்பை போட்டியையும் தவற விடாத வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த வரலாற்றை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.

போட்டியை நடத்தும் கிரீமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, நியல் ஓ பிரையன், கெவின் ஓ பிரையன் ஆகிய சகோதரர்களை உள்ளடக்கிய அயர்லாந்து, ரஷித்கான், முஜீப் ரகுமான் போன்ற இளம் சுழல் புயல்களை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் கடும் சவால் அளிக்க காத்திருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய 4 அணிகளில் இரண்டு தான் உலக கோப்பை வாய்ப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே ஆடுகளங்கள் கொஞ்சம் மெதுவான தன்மையுடன் இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

தகுதி சுற்றில் முதல் நாளான, நாளைய தினம் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா-ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து-நெதர்லாந்து, ஜிம்பாப்வே-நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 6-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை ஹராரே நகரில் எதிர்கொள்கிறது.

முதல்முறையாக உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 34 ஆட்டங்கள் நடைபெற இருந்தாலும் இறுதிப்போட்டி உள்ளிட்ட 10 முக்கியமான ஆட்டங்களை மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. அதே சமயம் எல்லா ஆட்டங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததால் இந்த தொடரில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/03062100/1148666/World-Cup-Qualifier-starts.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக கிண்ண கிரிக்கெட் - ஸ்காட்லாந்து, சிம்பாப்வே வெற்றி

 

 
10 அணிகள் இடையிலான 12-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி சிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடக்கும் இந்த தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன.

வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (பி பிரிவு) சந்தித்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 255 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.

வெற்றிக்கு வித்திட்ட கலும் மெக்லியோட் 157 ஓட்டங்கள் (146 பந்து, 23 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் சிம்பாப்வே 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை ( பி பிரிவு) நொறுக்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 6 விக்கெட் இழப்புக்கு 380 ஓட்டங்கள் குவித்தது. பிரன்டன் டெய்லர் (100 ஓட்டங்கள்), ஷிகந்தர் ராசா (123 ஓட்டங்கள், 7 பவுண்டரி, 9 சிக்சர்) சதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய நேபாளம் அணி 8 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்களே எடுத்து தோல்வியை தழுவியது. இதே போல் அயர்லாந்து அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவையும் தோற்கடித்தன.

http://tamil.adaderana.lk/news.php?nid=100419

  • தொடங்கியவர்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று- வெஸ்ட்இண்டீஸ் - ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

 

 
 

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐக்கிய அரபு அணி மோதுகிறது.

 
 
 
 
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று- வெஸ்ட்இண்டீஸ் - ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்
 
ஹராரே:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. தரவரிசையில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நேற்று முன்தினம் ஜிம்பாப்வேயில் தொடங்கியது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், சாமுவேல்ஸ், பிராத்வெய்ட் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ரோஹன் முஸ்தபா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை வென்ற உத்வேகத்துடன் களம் காணுகிறது. அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வெஸ்ட்இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்ற லீக் ஆட்டங்களில் ஹாங்காங்-ஸ்காட்லாந்து, அயர்லாந்து-பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு நடக்கிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/06095709/1149238/ICC-World-Cup-Qualifiers-2018-West-Indies-v-United.vpf

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை குவாலிபையர் - கிறிஸ் கெயில், ஹெட்மையர் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

 

 
 

உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

 
 
 
 
உலகக்கோப்பை குவாலிபையர் - கிறிஸ் கெயில், ஹெட்மையர் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
 
உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

201803070034497767_1_mxzdpmcg._L_styvpf.jpg

அதன்படி கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மையர் களம் இறங்கினார். இவரும் கிறிஸ் கெய்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஹெட்மையர் 93 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 127 ரன்களும், கிறிஸ் கெய்ல் 91 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சருடன் 123 ரன்களும் குவித்தனர். இருவரின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் ஹயாத், முஸ்தபா, ஹைடர், ரசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முஸ்தபாவும், சுரியும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீசின் ஹோல்டரின் அபாரமான பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் நிலைகுலைந்தனர்.

அந்த அணி 69 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இறங்கிய ரமீஸ் ஷசாத் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு அன்வர் ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். இதனால் அந்த அணி ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஆனாலும், அன்வர் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின் முப்தி 34 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிவரை போராடிய ஷசாத் 107 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் அணி வெற்றி பெற்றது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/07003449/1149401/west-indies-beat-united-arab-emirates-by-60-runs-in.vpf

 

 

சதம் அடித்து கெய்ல் சாதனை

 

 
 

உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக வயதில் சதத்தை ருசித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பை கெய்ல் பெற்றுள்ளார்.

 
 
 
 
சதம் அடித்து கெய்ல் சாதனை
சதம் அடித்த மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்துள்ளார். அவரது 23-வது சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் கெய்ல் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை அந்த இடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (22 சதம்) 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஒரு நாள் போட்டியில் அதிக வயதில் சதத்தை ருசித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பை கெய்ல் பெற்றுள்ளார். கெய்லின் தற்போதைய வயது 38 ஆண்டு 166 நாட்கள். இதற்கு முன்பு தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் (38 ஆண்டு 18 நாள்) இந்த பெருமையை தக்கவைத்திருந்தார். 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/07073553/1149422/Chris-Gayle-century-record.vpf

  • தொடங்கியவர்
ஆப்கானிஸ்தானை வென்றது சிம்பாப்வே
 

image_49abbed68d.jpg

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், புலவாயவோவில் நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இரண்டு ஓட்டங்களால் சிம்பாப்வே வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரண்டன் டெய்லர் 89 (88), சிகண்டர் ராசா 60 (68) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், முஜூப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் தலா 3, டவால்ட் ஸட்ரான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஹ்மத் ஷா 69 (91), மொஹமட் நபி 51 (56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிளஸிங் முஸர்பனி 4, சிகண்டர் ராசா 3, பிரயான் விற்றோரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தை மேற்கிந்தியத் தீவுகளும் பப்புவா நியூ கினியை அயர்லாந்தும் ஹொங் கொங்கை ஸ்கொட்லாந்தும் வென்றிருந்தன.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஆப்கானிஸ்தானை-வென்றது-சிம்பாப்வே/44-212406

  • தொடங்கியவர்

கண்ணை மறைத்த ஆத்திரம்: முக்கிய வீரருக்கு தடையால் சிக்கலில் ஆப்கான் அணி

 

 
MohammadShahzad8

ஆத்திரத்தினால் பின்னடைவு. மொகமத் ஷஜாத்.   -  படம். | ஏ.என்.ஐ.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாபவே அணிக்கு எதிராக ஆடிய ஆப்கன் அணியின் விக்கெட் கீப்பர் மொகமத் ஷஜாத் குரூப் பி-யின் மீதமுள்ள இருபோட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 197 ரன்கள் இலக்கை ஆப்கான் அணி விரட்டியது. அப்போது 3 பவுண்டரிகள் அடித்து ஓரளவுக்கு நிலைபெற்று விட்ட நிலையில் ஷஜாத் 2வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இன்னிங்சின் 9வது ஓவரில் தெண்டை சடாரா பந்தில் மால்கம் வாலரிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் கடும் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த ஷஜாத் ஆடுகளத்திற்கு பக்கத்திலிருந்த மற்றொரு ஆட்டக்களத்தில் மட்டையால் ஓங்கி அடிக்க பிட்சில் பள்ளம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி 24 மாதக்காலத்தில் அவரது தகுதியிழப்புப் புள்ளிகள் 4 ஆக அதிகரித்தது. மேலும் 24 மாத காலத்தில் 2வது தவறான நடத்தை என்பதால் முழு சம்பளத்தையும் இழந்தார்.

இதனையடுத்து 2 சஸ்பென்ஷன் புள்ளிகளைப் பெற்ற அவர் குரூப் பி-யின் கடைசி 2 லீக் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தங்களது 2 போட்டிகளையும் இழந்த நிலையில் ஷஜாத் தடை அவர்களுக்கு மேலும் 2 போட்டிகளில் வென்று அடுத்த கட்டத்தை எட்டுவதில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22984611.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தும் அயர்லாந்து, ஸ்காட்லாந்து! ஆப்கானிஸ்தான் என்ன செய்கிறது?! #WCQ2018

 
 

கிரிக்கெட் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகக்கோப்பை என்றால் சொல்லவும் வேண்டுமா? அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் போட்டிகளில் எந்தெந்த அணிகள் விளையாடப்போகின்றன என்கிற பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. ஆம், உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளைத் தேர்வுசெய்யும் தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. கடந்த சில வருடங்களாக வங்கதேச அணி சிறப்பாக விளையாடிவருவதால், பந்தயத்தில் முன்னேறி வெஸ்ட் இண்டீஸைத் தகுதிச்சுற்றுக்கு அனுப்பிவிட்டது. முதல் இரண்டு உலகக்கோப்பையை வென்ற வேஸ்ட் இண்டீஸோடு பெரிய அணிகளுக்கெல்லாம் சவால்விடும் திறமைகொண்ட ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிசுற்றுப் போட்டிகளில் விளையாடுவதால் `தகுதிபெறப்போவது யார்?' என்கிற பரபரப்பு வந்துவிடுவது இயல்புதானே!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று

 

புள்ளிப்பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மற்றும் ICC சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாங்காங், பப்புவா நியூ கினியா என நான்கு அணிகளும், இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்ற நேபாளம் மற்றும் அரபு அமீரகம் என மொத்தம் பத்து அணிகள் இந்தத் தகுதிச்சுற்றில் விளையாடிவருகின்றன. இவற்றுள் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, அரபு அமீரகம், நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா என ஐந்து அணிகள் குரூப் A-விலும், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாள் ஆகிய ஐந்து அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றுள்ளன. முதல் சுற்றில் ஒவ்வோர் அணியும், அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்தச் சுற்றில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அணிகள் `சூப்பர் 6' சுற்றுக்குத் தகுதிபெறும். `சூப்பர் 6'-ல் முதலில் வரும் இரண்டு அணிகள், ஏற்கெனவே தகுதிபெற்ற எட்டு அணிகளுடன் சேர்த்து ஐந்து ஐந்தாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். 

நடப்பு T20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மற்ற வடிவிலான போட்டிகள் என்றால் `அந்தத் திராட்சை புளிக்கும்' என்பதுபோல படுமோசமாக விளையாடுகிறது. இந்தப் பத்தில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதிபெறும் என்பதால், `இரண்டுமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தேர்வாகுமா, உலகக்கோப்பையில் விளையாடுமா?' என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் போட்டியில் கெய்ல் மற்றும் ஹெட்மேயேர் ஆகியோரின் சத்தத்துடன் 357 ரன்களை அடித்துக் குவித்தாலும், அவர்களின் பௌலிங் சுமார்தான். ஹோல்டர் மட்டும் சிறப்பாக 10 ஓவர் வீசி, 5 விக்கெட்டுகளை எடுத்தார். மற்றவர்களின் பந்துவீச்சு சொல்லுமளவுக்கு இல்லை. முதல் போட்டியை வென்றுவிட்டபோதிலும், இந்தத் தொடரை ஆதிக்கம் செலுத்தி மற்ற போட்டிகளையும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

கெய்ல் - உலகக் கோப்பை தகுதிச் சுற்று

இந்தத் தொடரில் மிரட்டி, ஆராவாரத்துடன் உலகக்கோப்பைக்கு வந்துசேரும் என்று நினைத்த ஆப்கானிஸ்தான் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி. இளம்வயதில் கேப்டனான ரஷீத் கானின் தலைமையில் அதிரடி விக்கெட் கீப்பர் சேஷாத், முகமது நபி என சிறந்த வீரர்களுடன் திறமைவாய்ந்த அணியாகக் கிளம்பியது ஆப்கானிஸ்தான். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர்களுக்கு கடினம் குடுத்து கடைசி வரை போட்டியைக் கொண்டுசெல்ல மட்டுமே முடிந்தது. அவர்கள் நிதானமாக அந்தப் போட்டியை வென்று சென்றார்கள். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனாலும் வெறும் இரண்டு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே போட்டியை வென்றுவிட்டது. இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் ரொம்பவே சுமார்தான். இதன் பிறகு வரும் அனைத்து போட்டிகளையும் வென்றால்தான், உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் கனவையாவது காண முடியும் என்கிற நிலைமையில் உள்ளது ஆப்கானிஸ்தான். 

எதிர்பார்த்ததுபோலவே இரண்டு போட்டிகளையும் எளிதாக வென்றுவிட்டது அயர்லாந்து. முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூ கினியாவையும் எளிதாக வென்றுவிட்டது. அயர்லாந்தில் ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்படுவதால் எளிதில் தகுதிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருக்கும். மற்றபடி அடுத்த சுற்றுக்கு இப்போதே வருகிறது அயர்லாந்து அணி. இரண்டு போட்டிகளை வென்று சற்று  மகிழ்ச்சியான நிலையிலேயே உள்ளது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே - உலகக் கோப்பை தகுதிச் சுற்று

 

ஆப்கானிஸ்தானையே எளிதாக வென்ற ஸ்காட்லாந்த்து, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை பந்தாடியது. அந்த அணியின் பேட்டிங் சற்று சுமார்தான். எனினும், பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. சிறப்பான இரண்டு வெற்றிகள் மூலம் இந்தத் தொடரின் வலுவான அணியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது ஸ்காட்லாந்து. கத்துக்குட்டி அணிகள் நன்றாக விளையாடினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி மீதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். `ஒருகாலத்துல எப்படி இருந்த டீம் தெரியுமா!' என மூத்த கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் இப்போது ஃபீலிங்கில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இந்த கரீபியப் புயல்கள் இந்தத் தொடரை வெல்லவேண்டும்.

https://www.vikatan.com/news/sports/118658-ireland-and-scotland-started-very-well-in-world-cup-qualifiers.html

  • தொடங்கியவர்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஆப்கானிஸ்தான் அணி 3-வது தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கிடமும் மண்ணை கவ்வியது.

 
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஆப்கானிஸ்தான் அணி 3-வது தோல்வி
 
ஹராரே:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.

நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 150 ரன்கள் இலக்கை ஸ்காட்லாந்து அணி 41.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கைல் கொயட்ஸிர் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்த ஸ்காட்லாந்து அணி சூப்பர்-6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதே போல் ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.

‘பி’ பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்குடன் மோதியது. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஹாங்காங் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

அதே சமயம் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக தழுவிய 3-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளிடமும் தோல்வி கண்டிருந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணிக்கு சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/09100237/1149830/World-Cup-qualifying-round-Afghanistan-3rd-loss.vpf

 

 

உலகக்கோப்பை குவாலிபையர் - பிராத்வொயிட்டின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் பிராத்வொட்யிட் பந்துவீச்சு மற்றும் ஹோல்டரின் பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தியது.

 
 
 
 
உலகக்கோப்பை குவாலிபையர் - பிராத்வொயிட்டின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
 
ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, டோனி உரா, மோரியா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டோனி உரா ஓரளவு விளையாடி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. கேப்டன் ஆசாத் வலா மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 59 ரன்கள் எடுத்தார். மேலும் சார்லஸ் அமினி, நார்மன் வனுவா ஆகியோரும் தலா 35 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில், அந்த அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிராத்வொயிட் 5 விக்கெட்டும், மிலர் 2 விக்கெட்டும், நர்ஸ், வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லெவிசும், ஹெய்மரும் களமிறங்கினர். இருவரும் விரைவில் அவுட்டாகினர். அதன்பின் களமிறங்கிய ஹோப் நிதானமாக ஆடினார். அவருக்கு ஜேசன் ஹோல்டர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து அரை சதமடித்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டிஸ் அணி 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோல்டர் ஒரு ரன்னில் சதத்தையும், ஹோப் ஒரு ரன்னில் அரை சதத்தையும் எடுக்காமல் அவுட்டாகாமல் இருந்தனர்.

பப்புவா நியூ கினியா தரப்பில் வனுவா, நாவ் மற்றும் அமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் அணி வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/09042026/1149801/west-indies-beat-papua-new-guinea-by-6-wickets-in.vpf

  • தொடங்கியவர்

உலக கிண்ண தகுதி போட்டியில் ஜிம்பாபே அணி 3 ஆவது வெற்றி!

உலக கிண்ண தகுதி போட்டியில் ஜிம்பாபே அணி 3 ஆவது வெற்றி!


உலக கிண்ண தகுதி போட்டியில் ஜிம்பாபே அணி 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை விட, ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்று நடைபெற்ற 15 ஆவது போட்டியில் ஜிம்பாபே மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதியுள்ளன.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹொங்கொங் அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை மட்டும் பெற்று, 89 ஓட்டங்களால் ஜிம்பாபே அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/world-cup-qualifiers-2018-15th-match

உலக கிண்ண தகுதி போட்டியில் நெதர்லாந்து அணி முதலாவது வெற்றி!

 
 
 
 
 

உலக கிண்ண தகுதி போட்டியில் நெதர்லாந்து அணி முதலாவது வெற்றி!


உலக கிண்ண தகுதி போட்டியில் நெதர்லாந்து அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை விட, ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்று நடைபெற்ற 14 ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் பப்புவா நியூ கெனியா அணிகள் மோதியுள்ளன.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பப்புவா நியூ கெனியா அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டும் பெற்று 57 ஓட்டங்களால் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/world-cup-qualifiers-2018-14th-match

உலக கிண்ண தகுதி போட்டியில் மேற்கிந்தியா 3 ஆவது வெற்றி!

 

 

உலக கிண்ண தகுதி போட்டியில் மேற்கிந்தியா 3 ஆவது வெற்றி!


உலக கிண்ண தகுதி போட்டியில் மேற்கிந்தியா அணி 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை விட, ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்று நடைபெற்ற 13 ஆவது போட்டியில் மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியுள்ளன.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்ட ங்களை மட்டும் பெற்று 52 ஓட்டங்களால் மேற்கிந்தியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/world-cup-qualifiers-2018-13th-match

உலக கிண்ண தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது வெற்றி!

 

உலக கிண்ண தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது வெற்றி!


உலக கிண்ண தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை விட, ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் இன்று நடைபெற்ற 16 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் அணிகள் மோதியுள்ளன.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய நேபால் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்று, 6 விக்கெட்டுக்களால் நேபால் அணியை வெற்றி பெற்றுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/world-cup-qualifiers-2018-16th-match

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து

 
அ-அ+

உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டிய அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

 
 
 
 
உலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து
 
ஹராரே:

உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டிய அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும். இதற்கிடையே, முதல் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

நேற்று நடந்த போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 44 ஓவராக குறைக்கப்பட்டது.

அயர்லாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டர்பீல்டும் பால் ஸ்டிர்லிங்கும் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக விளையாடினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 205 ஆக இருக்கும்போது போர்டர்பீல்டு 92 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதமடித்த பால் ஸ்டிர்லிங்க் 117 பந்துகளில் 5 சிக்சர், 15 பவுண்டரியுடன் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய கெவின் ஓ பிரையன் 27 பந்துகளில் அரைசதமடித்து அவுட்டானார். இதனால் அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் மொகமது நவீத் 3 விக்கெட்டும், இம்ரான் ஹெய்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அயர்லாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சிக்கி 29.3 ஓவரில் 91 ரன்களில் சுருண்டது.

அயர்லாந்து சார்பில் ரான்கின் 4 விக்கெட்டும், சிமி சிங் 3 விக்கெட்டும் மெக்கார்த்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, உலக கோப்பை தகுதிச்சுற்றின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின, இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து அணி 28.4 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த சுற்று போட்டிகள் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/13052133/1150559/ireland-beats-united-arab-emirates-by-226-runs-in.vpf

  • தொடங்கியவர்

ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் சூப்பர் சிக்ஸ்- வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

 

ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் சூப்பர் சிக்ஸில் வெஸ்ட் இண்டீசை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

 
 
ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் சூப்பர் சிக்ஸ்- வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
 
ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் முடிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஆறு அணிகள் தகுதிப் பெற்றது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

கெய்ல் 1 ரன்னிலும், லெவிஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹெட்மையர் 15 ரன்னிலும், சாமுவேல்ஸ் 36 ரன்னிலும் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் திணறியது. அதன்பின் வந்த சாய் ஹோப் 43 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய ரஹ்மத் ஷா 68 ரன்களும், மொஹமது நபி 31 ரன்களும் அடிக்க 47.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/15205817/1151196/ICC-World-Cup-Qualifiers-Super-Sixes-Afghanistan-beats.vpf

  • தொடங்கியவர்

சூப்பர் சிக்ஸ்: கெய்ல் சொதப்பல்; கேட்ச்கள் நழுவல்; ஆப்கானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த மே.இ.தீவுகள்

 

 
mujeeb

ஆப்கான் வீரர் ஆட்ட நாயகன் முஜீப் உர் ரஹ்மான்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டத்தின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் மே.இ.தீவுகளுக்குப் பாடம் கற்பித்த ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆப்கான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளித்தது. இது இந்தத் தொடரில் மே.இ.தீவுகளின் முதல் தோல்வியாகும்.

தோல்விக்கு மே.இ.தீவுகளின் பீல்டிங்கும் 60% காரணமாகும். அரைசதம் எடுத்த ரஹ்மத் மற்றும் ஷென்வாரி, நபி, ரஷீத் கான் ஆகியோருக்கு கேட்ச்களைக் கோட்டை விட்டனர், இதனால் ஒரு 50 ரன்கள் ஆப்கானுக்குக் கிடைத்தது, இதுதான் மே.இ.தீவுகள் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாக அமைந்தது.

இந்த அணிகளுக்கிடையே சக்தி வாய்ந்த மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் பலத்துக்குச் சாதகமான பிட்ச்தான் ஹராரே பிட்ச். மேலும் இந்தத் தொடரில் 300 ரன்களை சர்வசாதாரணமாக மே.இ.தீவுகள் எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்கானில் தொடக்கத்தில் வீசிய தவ்லத் ஸத்ரான் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் அபாரமாக வீசினர்.

9 பந்துகள் விளையாடிய கெய்ல் திக்கித் திணறி கடைசியில் 1 ரன்னில் மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆன முஜிப் உர் ரஹ்மான் பந்து சற்றே திரும்ப பீட் செய்து ஆஃப் ஸ்டம்பில் பட வெளியேறினார், அபாரமான பந்து. முஜீப் என்ன வீசுகிறார் என்பது கெய்லுக்குப் புரியவில்லை, ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட்டில் இருவரும் ஒரே அணிக்கு ஆடுவதால் பிற்பாடு புரியவரலாம்.

முஜீப் உர் ரஹ்மான் ஆஃப் பிரேக், கூக்ளி, கேரம் பந்து என்று தினுசு தினுசாக வீசி மே.இ.தீவுகள் வீரர்களின் கையில் உள்ள மட்டையை பேசா மடந்தையாக்கினார். எவின் லூயிஸ் வந்து ஸ்வீப் பவுண்டரி அடித்தார். ஹெட்மைய்ர் 22 ரன்களில் மொகமது நபி பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் அது மட்டையில் பட்டது தெரியவந்தது, துரதிர்ஷ்டவசமான அவுட். எவின் லூயிஸ் இறங்கி அடித்த 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களில் நஜ்புல்லாவின் அபாரமான பீல்டிங் மற்றும் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

53/3-லிருந்து மர்லன் சாமுவேல்ஸ் (36, 64 பந்து 2 பவுண்டரி), ஷேய் ஹோப் (43, 94 பந்து பவுண்டரி இல்லை) ஆகியோர் 55 ரன்களை 18 ஓவர்கள் ஆடி போராடி சேர்த்தனர் கடைசியில் கட்டிப்போட்ட வெறுப்பில் நபி பந்தை ஒரு சுற்று சுற்றி கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஹோல்டரும் (28 ரன்கள், 26 பந்து 2 பவுண்டரி 1 சிக்ஸ்), ஹோப்பும் இணைந்து அடுத்ததாக 50 ரன்களை 10 ஒவர்களில் சேர்த்தனர். ஷேய் ஹோப், ஹோல்டர் ஆகியோரை முஜிபுர் ரஹ்மான் பெவிலியன் அனுப்பினார். நஜ்புல்லா ஸத்ரானின் இரண்டு கேட்ச்களும் ஒரு நேர் ரன் அவுட்டும் அவரது பீல்டிங் திறமைக்கு சான்றாக விளங்குகிறது. ஒரு வழியாக மே.இ.தீவுகள் ஆப்கானின் கடும் நெருக்கடியைச் சமாளித்து ஆல் அவுட் ஆகாமல் 197/8 என்று முடிந்தது. முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மொகமது நபி 2 விக்கெட்டுகள், புதிர் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் 31 ரன்களுக்கு 1 விக்கெட்.

ரஹ்மத் ஷாவின் அபார அரைசதத்தினால் வெற்றி:

ஆப்கான் அணி குறைந்த ரன் இலக்குதானே, அதனை மெதுவாக ஆடி சொதப்பி விடக்கூடாது என்ற ரீதியில் ஷாட் தேர்வில் கடும் தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை இழந்தனர். ஷஜாத் 8 ரன்களில் கவரில் ஹோல்டர் பந்தை கொடியேற்றினார். ஜாவேத் அகமட் அறிமுக பவுலர் பாலிடம் எல்.பி.ஆனார்.

முதலில் அகமட் ஷா, ஷென்வாரியுடன் (27) 66 ரன்கள் கூட்டணி அமைத்தார். 27 ரன்கள் எடுத்த ஷென்வாரி மில்லர் பந்தை சரியாக ஆடாமல் கெய்லிடம் கேட்ச் கொடுத்தார். 83/3 என்ற நிலையில் மீண்டும் ரஹ்மத் ஷாவுடன் மொகமது நபி (31) இணைந்து 49 ரன்கள் கூட்டணி அமைத்து ஸ்கோரை 132 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், நபி டீப் ஸ்கொயர் லெக் திசையில் அருமையான புல்ஷாட்டை ஆடினார், ஆனால் அங்கு பவுண்டரியில் அதை விட அருமையாக டைவ் அடித்து ஹெட்மையர் கெட்ச் எடுத்து மே.இ.தீவுகளுக்கு உயிர் கொடுத்தார்.

மேலும் 20 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அபாரமாக ஆடி 109 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா கட் ஆட முயன்று கேட்ச் ஆனார். இப்போது ஆப்கான் அணி நடுங்கத் தொடங்கியது. ஆனால் நஜ்புல்லா ஸத்ரான் (19), நபி (10), ரஷீத் கான் (13), ஷராபுதின் அஷ்ரப் (7) ஆகியோரின் உறுதியினால் 47.4 ஓவர்களில் 198/7 என்று ஆப்கான் அணி அபாரமாக வென்றது.

ஆட்ட நாயகனாக 3 விக்கெட் வீழ்த்திய முஜீப் உர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 2 அருமையான கேட்ச்கள் ஒரு நேர் த்ரோ ரன் அவுட், பிறகு முக்கிய கட்டத்தில் 19 ரன்கள் எடுத்த நஜ்புல்லா ஸத்ரான் தான் உண்மையான ஆட்ட நாயகர்.

http://tamil.thehindu.com/sports/article23267780.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.