Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

Featured Replies

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

 

தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார்.

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி Image captionமுத்துக்கண்ணம்மாள்

பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது.

விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார்.

ஏழு வயதில் விராலிமலை சுப்ரமணியசாமிக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்ட இவர், ஆங்கிலேயர் காலத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார்.

1947ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பின்னர் கோயில் சேவகத்தைப் பலர் நிறுத்திவிட்டாலும், தான் மட்டும் நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை என்றும் அதை இன்றும் தொடர்வதாகவும் கூறுகிறார் அவர்.

ஏழு வயதில் தொடங்கிய நடனம்

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

''ஏழு வயதில் ஆரம்பித்த நடனம், எப்போதும் என் கால்கள் ஆடுவதையும், என் நாவு பாடுவதையும் நிறுத்தமுடியாது. சுப்ரமணியசாமியே என்னைப் போன்ற 32 தேவரடியார்களுக்கும் முதல் கணவன். இறைவனை துதித்துப் பாடவும், ஆடவும் நாங்கள் பிறந்துள்ளோம் என்று என் பாட்டி சொல்லுவார். தினமும் 400 படிக்கட்டுகள் ஏறிப்போய் காலையும், மாலையும் சுப்ரமணியசாமியைப் பாடி, வணங்கிவிட்டு வரவேண்டும்,'' என்று கூறுகிறார் முத்துக்கண்ணம்மாள்.

''அதிகாலை ஆடல் பயிற்சி, வழிபாடு, பள்ளிப் படிப்பு, மாலை நடனப்பயிற்சி, வழிபாடு என ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு சேவகம் செய்வதே எங்கள் பிறப்பின் நோக்கமாக முன்னோர்கள் சொல்லிப் போனார்கள். தற்போது உடல் தளர்ச்சியால், தினமும் செய்ய முடியாவிட்டாலும், திருவிழா காலங்களில் சாமிக்கு பாடுவதும், ஆடுவதும் என் கடமை என்றே என் மனம் சொல்கிறது, அதையே செய்கிறேன்,'' என தனது தினசரி வாழ்க்கையை முத்துக்கண்ணம்மாள் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

கோயில்களில் முதல் மரியாதை

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

முத்துக்கண்ணம்மாளின் மகள் கண்ணாமணி தனது தாய் கோயில் சேவகத்திற்காக நடனம் ஆடிய காட்சிகள் இன்றும் தன் நினைவில் பசுமையாக உள்ளதாக கூறுகிறார்.

''தை மற்றும் மாசி மாதங்களில், விராலூர் கிராமத்தில் சுப்ரமணியசாமி கோயில் தேர்த் திருவிழாவில், தாத்தா பாடுவார், அம்மா நடனம் ஆடுவார். ஊரில் உள்ள பெரியவர்கள் வந்து மரியாதை செய்து, அம்மாவுக்கு பட்டுப்புடவை தருவார்கள்'' என்று தனது அம்மாவின் கச்சேரியைப் பார்த்த அனுபவங்களை கண்ணா மணி தெரிவித்தார்.

முத்துக்கண்ணம்மாள் சதிர் நடனம் ஆடுவதற்கு வெகு குறைவான வாய்ப்புகள் இருந்ததால், தனது தாயிடம் இருந்து கற்றுக்கொண்டு தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்பதாலும், தேவரடியார்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லாததாலும், நடனம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் கண்ணா மணி.

ஏழு தலைமுறையாக தேவரடியாராக இருந்த குடும்பத்தில் இனி யாரும் சதிர் நடனம் ஆடப்போவதில்லை என்பது முத்துக்கண்ணம்மாளுக்கு வருத்தம் தரும் விஷயமாகிவிட்டது.

தற்போது வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் சதிர் நடனம் ஆடி, தேவரடியார்களின் வரலாற்றை இளைஞர்களிடம் கூறிவருகிறார் இந்த மூத்த சதிர் நடனக்கலைஞர்.

தந்தைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

சென்னையில் தக்சின் சித்ரா காலசார மையத்தின் 2018ஆம் ஆண்டின் 'தக்சின் சித்ரா விருது' நிகழ்வில் தனது வாழ்க்கை குறித்துப் பேசியதோடு அல்லாமல், சதிர் நடனத்தையும் முத்துக்கண்ணம்மாள் ஆடிக்காட்டினர்.

நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த தொழில்முறை நடனம் பயிலும் பல பெண்களை தன்னுடன் கும்மியடி நடனம் ஆடவைத்தார். நொட்டுஸ்வரம் (முத்துசாமி தீக்ஷிதர் வடிவமைத்த, அயர்லாந்து நாட்டு இசை மெட்டுகளை கர்நாடக இசையில் பாடும் முறை), பாம்பு நடனம் மற்றும் விராலிமலை குறவஞ்சி ஆகியவற்றில் சில நடன அசைவுகளை விளக்கமாக இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார்.

“விராலிமலை கோயிலில் என்னை உள்ளிட்ட 32 தேவரடியார்களுக்கும் குருவாக நடனம் சொல்லித்தந்தவர் என் அப்பா ராமச்சந்திரன். விராலிமலை குறவஞ்சியை ஆசைப்பட்டு கேட்ட எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்தார். அவரிடம் நடன அசைவுகளைக் கற்றுக்கொண்ட பரதக்கலைஞர்கள், அவருக்கான அங்கீகாரத்தை அளிக்காமல் போய்விட்டார்கள் என்ற வருத்தம் எனக்கு அதிகமாகவே உள்ளது,''என்று தனது தந்தைக்கான அங்கீகாரத்திற்காக போராடவேண்டிய நிலை குறித்து முத்துக்கண்ணம்மாள் கூறினார்.

80 வயதிலும், பாடிக்கொண்டே, பாடலுக்கேற்ற பாவத்துடன், அவர் நடனம் ஆடியபோது, நிகழ்ச்சியைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

பரதநாட்டியம் பயிலும் மாணவிகளும், ஆசிரியர்கள் பலரும் முத்துக்கண்ணம்மாளுடன் பாடிக்கொண்டே ஆட முயற்சித்து களைப்புற்றனர்.

சதிர்-பரதநாட்டியம் என்ன வித்தியாசம்?

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

பரத நாட்டியம் தமிழகத்தின் முக்கியமான கலாசார நடனமாக அறியப்பட்டு, பரதக் கலைஞர்கள் உலகளவில் பல மேடைகளில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கி்றது என்ற போதிலும், பரதத்தின் தொடக்க வடிவமான சதிர் நடனம் அழியும் தருவாயில் இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார் முத்துக்கண்ணம்மாள்.

நவீன கால பரத நாட்டியத்திற்கும், சதிர் நடனத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றி பேசிய அவர், ''சதிர் நடனத்தில் நாங்கள் பாடிக்கொண்டே ஆடுவோம். நம் நடனத்திற்கு ஏற்றவாறு நாமே பாடவேண்டும் என்பது அடிப்படை பயிற்சி. ஒரு பாடலை புரிந்துகொண்டு ஆடுவது என்பதைத் தாண்டி, அந்த பாடலே நாமாக மாறிக்கொண்டு, முகபாவங்களைக் கொண்டும், உடல் அசைவுகளைக் கொண்டும் இயல்பாக நாங்கள் ஆடுவோம். பாடிக்கொண்டே ஆடுவது என்பது சதிர் நடனத்தின் முக்கிய அங்கம். சதிர் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பரதநாட்டியத்தில் நட்டுவனார் என்ற கலைஞர் பாட, நடனம் ஆடுபவர், முத்திரையுடன் ஆடுவது என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது,'' என்று விளக்கினார்.

தேவரடியார்களின் வாழ்க்கை நிலை

தன்னுடைய காலத்தில் தேவரடியாராக வாழ்ந்த பெண்களின் நிலை பற்றி கேட்டபோது முத்துக்கண்ணம்மாள் விரிவாகப் பேசினார்.

''விராலிமலை முருகனை முதல் கணவனாக ஏற்றவர்கள் நாங்கள். நித்திய சுமங்கலி என்று எங்களை கூறுவார்கள். திருமணங்களில் நாங்கள் நலங்கு பாடல்கள் பாடி தாலி எடுத்துக்கொடுக்கும் வழக்கமும் இருந்தது. கோயில்களில் நடனம் ஆடுவதால், எங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். நான் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடத்திற்கு அரசு அதிகாரிகள் வந்தால், என்னை தான் முதல் வரிசையில் நிறுத்தி, பாடவும், ஆடவும் அழைப்பார்கள். மற்ற பிள்ளைகளும் எங்களை கண்ணியமாக நடத்துவார்கள்,'' என்று கூறினார்.

இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

தேவரடியார்களாக இருந்தவர்களுக்கு பாலியல் தொல்லைகள் இருந்ததா, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, ''நானும் என்னுடைய தோழிகளும் பிரச்சனைகளை சந்தித்ததில்லை. நாங்கள்தான் கடைசி தலைமுறை தேவரடியார்கள். தினமும் கோயிலில் எங்களுக்கான வருகைப் பதிவேடு இருந்தது. அன்றாடம் கோயிலில் உணவு கொடுப்பார்கள். என் பாட்டி அம்மிணியம்மாளுக்கு 18 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார்கள்".

"அந்த நிலத்தின் விளைச்சலில் ஒரு பகுதியை கோயிலுக்கு தந்தது போக மீதமுள்ளதை எங்கள் பயன்பாட்டுக்கு சேமித்துக்கொள்வோம்.

பருவம் வந்ததும், இணையரை தேர்ந்தேடுத்துக்கொள்ளும் உரிமை தேவரடியார்களுக்கு இருந்ததால், முறைப்படி திருமணம் செய்யாவிட்டாலும், வாழ்க்கைத் துணையாக ஓர் ஆணுடன் வாழ்வது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

எங்களுடன் வாழ்க்கை நடத்தும் ஆண்கள் எங்களின் வேலைகளை புரிந்தவர்களாகவும், கண்ணியமாக எங்களை நடத்துபவர்களாகவுமே இருந்தனர். ஆனால் பிற ஊர்களில் தேவரடியார்கள் எப்படி நடத்தப்பட்டனர் என்று தெரியவில்லை'' என்று கூறினார் முத்துக்கண்ணம்மாள்.

சதிர் நடனத்தை மீட்க முயற்சி

நடனக்கலையைக் காப்பாற்ற முயற்சிக்கும் தமிழகத்தின் கடைசி தேவதாசி

முத்துக்கண்ணம்மாளின் மேலாளர் தரணியின் ஊக்குவிப்பால், கோவையில் 15 பரத நாட்டிய ஆசிரியர்களுக்கு சதிர் நடனத்தின் பிரத்யேக அசைவுகளை சொல்லிக்கொடுத்ததாக அவர் கூறினார்.

''சதிர் நடனம் என்னோடு அழிந்து போய்விடுமோ என்ற பயத்தால் யாரெல்லாம் ஆர்வமாக இருக்கிறார்களோ, அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவரடியார்கள் என்ற ஒரு கலை இனத்தின் கடைசி அடையாளமாக நான் இருப்பதாக நினைக்கிறன். காலம் மாறிவிட்டது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இந்த கலைவடிவத்தை நம் சமூகம் மறந்துவிட்டால், தேவரடியார் என்ற ஒரு இனத்தின் வரலாற்றையும் மக்கள் மறந்துவிடுவார்கள்,'' என்று உணர்ச்சி பொங்க முத்துக்கண்ணம்மாள் குறிப்பிட்டார்.

''சமூக அந்தஸ்து குறைந்துபோனது''

தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த பின்னர், ஏதோ காரணங்களுக்காக தங்களது குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 17 ஏக்கர் நிலம் கைவிட்டுப்போனது என்றும் ஒரே ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் இன்றும் பயிர் செய்து, முன்னோர்கள் சொன்னபடி கோயிலுக்கு தருவதாக முத்துக்கண்ணம்மாள் கூறுகிறார்.

''அரசாங்கம் தேவரடியார் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் பரம்பரை பரம்பரையாக கோயில் சேவகம் செய்த எங்களின் நலனில் அக்கறை காட்டாமல் போய்விட்டார்கள். கோயில் சடங்குகளில் இருந்த முக்கியத்துவமும் குறைந்துவிட்டதால், சமூக அந்தஸ்தும் இல்லாமல், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்'' என்று அவர் கூறினார்.

அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தங்களது குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அரசு அளித்துவரும் நாட்டுப்புறக் கலைஞர் உதவித் தொகையான மாதம் ரூ.1,500 மட்டுமே தனக்கு கிடைப்பதாக முத்துக்கண்ணம்மாள் கூறுகிறார்.

“தமிழக அளவில், தேவரடியாராக இருந்தவர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. எனக்கு அளிக்கப்படும் மாத உதவித்தொகையை உயரத்திக்கொடுத்தால், என் மருத்துவச் செலவுக்கு உதவியாக இருக்கும்,'' என்றும் கூறினார் முத்துக்கண்ணம்மாள்.

https://www.bbc.com/tamil/india-43849576

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சித்திரம் சிந்திக்கிறது / சிரிக்கிறது ...... மிகவும் பாராட்டப் பட வேண்டிய தாயார்.......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.