Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுடரும் புன்னகை!

Featured Replies

சுடரும் புன்னகை!

 

 
kadhir9

பேப்பர்காரரை இன்னும் காணோமே? மணி ஏழரை ஆகப்போகிறது. மற்ற நாள்ன்னா வீட்டை பூட்டிவிட்டு போயிறலாம். அவரும் வரண்டாவில் பேப்பரை போட்டு விட்டு போயிருவாரு. அவரு கைமாற்றாக இரண்டாயிரம் ரூபாய் கேட்டாரு. "வீட்டு வாடகைக்கு கொடுக்கணும். ஒரு வாரத்தில் மகனுக பணம் அனுப்பினதும் கொண்டுவந்து தர்றேன் சாரு'ன்னாரு என்று முணுமுணுத்தவாறே சுவர்க்கடிகாரத்தையும், வீட்டு வாசலுக்கும் இவரது கண்கள் பந்தாடிக் கொண்டிருந்தன.
மனைவி குளித்து தயாராவதற்குள் பேப்பர்காரர் வீட்டிலேயே கொடுத்துட்டு வந்துறலாமே. அவருக்கும் வீட்டு வாடகைப் பிரச்னை தீரும். நமக்கும் மனசு அலை பாயாம ஓர்மையா வெளியூர் கிளம்பத் தோதாயிருக்கும் என்று பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ""வெளியே போயிட்டு அஞ்சு நிமிஷத்தில் வந்துர்றேன், நீ தயாராயிரு'' என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் இவர் கிளம்பினார்.
மனைவியிடம் விவரம் சொன்னால் எங்கே, எதுக்கு என்ற கேள்விகளோடல்லாமல், ""யாராவது வீடு தேடிப் போய் கடன் கொடுப்பாங்களா? அதுவும் பேப்பர் போடறவருக்கு'' என்று கிண்டலாக கேட்டு இவரை இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லாத அப்பாவிப் பிறவி போல "சுருக்'கென்று குத்தி வெடிச்சிரிப்பை உதிர்ப்பாள்.
மனைவியின் கேள்வியில், ஆதங்கத்தில் நியாயம் இருக்கும். இவரது செயல்பாடுகளில் எண்ணங்களில் வெளிப்படும் நோக்கங்களும் அர்த்தங்களும் தன் காரியார்த்தவாதிகளுக்கு கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கும்.
இவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். இவருக்கே கூட உறுத்தலாக உணர்ந்தார். பேப்பர் போடறவரைத் தேடிப்போய்க் காசு கொடுக்கணுமா? இன்னிக்கு நாம வெளியூர் போயிட்டோம்ன்னா நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போயிடுறாரு. இது என்ன வீட்டு வாடகையை ஒரு நாள் தள்ளிக் கொடுத்தால் என்ன பெரிய விபரீதம் நடந்திடும். அவருக்கென்ன அவ்வளவு
முக்கியத்துவம்?
இவருக்குள் இப்படி அலை அலையாய் எண்ணங்கள் எழுந்து குமிழ்விட்டன. இந்த பேப்பர் போடறவரின் பெயரும் இவரது அப்பாவின் பெயரும் ஒன்றே. இவர் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது அப்பாவின் பெயரை தனக்கு பிறந்த பெண் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்க்க முடியவில்லை. அதனால் இவர் அந்த பேப்பர்காரரை முழுப் பெயரைச் சொல்லித்தான் கூப்பிடுவார். அவரும் தன் பெயர் சொல்லி அழைப்பது குறித்து சலனப்பட்டுக் கொள்ளவில்லை.
ஆனால் இவருக்குத்தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது, தன்னைவிட ஐந்தாறு வயது மூத்தவரை பெயர் சொல்லி அழைக்கிறோம் என்று. ஒருநாள் இவரே அவரிடம் கேட்டுவிட்டார். 
""நான் உங்கள் பெயரைச் சொல்லி அழைப்பதில் வருத்தமில்லையே?''
""அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்களாவது என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறீகளே. என்பேரு எனக்கே மறந்து போச்சு. நான் பள்ளி கூடத்தில் படிக்கையில வாத்தியாரு என் பெயரைச் சொல்லி கூப்பிட்டதோடு சரி. வேற யாரும் என் முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட
தில்லை. என் மனைவி, மக்கள், சொந்த பந்தங்கள், முதலாளிகள் உட்பட என்னை யாரும் முழுப்பெயர் சொல்லிக் கேட்டதில்லை. எல்லாரும் சாமி, சாமின்னு கூப்பிட்டு என் பேரே எனக்கு மறந்து போச்சு. என் பேரப் பிள்ளைகளுக்குக் கூட தாத்தா பெயரில்லை. ஏதோ வாய்க்கு விளங்காம புதுசு புதுசா தினுசு தினுசா பேரு வைக்கிறாங்க. நீங்க வயசுல குறைஞ்சவரா இருந்தாலும் கவருமெண்ட் சர்வீசிலிருந்து ரிட்டயரானவரு. என்னை மாதிரி ஊர்க்காலியா திரியறவரில்லை நீங்க என் பெயரைச் சொல்லிக் கூப்பிடறதில எனக்கு வருத்தம் இல்லை என்று தலையைக் குனிந்து இடது கையால் பிடறியைத் தடவி நிமிர்ந்ததும் ஒரு புன்னகையை உதிர்த்து விரைவாகக் கிளம்பினார். வெயில்பட்டும் வறுமைபட்டும் கரும்பழுப்பாய் மின்னும் அவர் முகத்தில் கபடமில்லாத ஓர் ஒளி மிளிரும். அந்த சிரிப்புதான் அவருக்கு பெரும் கவசம். அவர் செய்யும் சிறு சிறு தவறுகளையும் மறக்கச் செய்யும்! வாழ்வின் அனுபவங்களிலிருந்து பூத்த அறிவார்ந்த சிரிப்பா, இல்லை தனக்கு விதிச்சது இதுதான் என்று வாழ்க்கையில் சுழலுக்கு ஒப்புக் கொடுத்த சிரிப்பா என்று புதிராக இருக்கும். சூழலை தன் வசப் படுத்தியிருந்தால் அவர் இன்று உயர்ந்த நிலையில் இருந்திருக்கக் கூடும்! 
அவர் கடந்து வந்த ஏற்ற தாழ்வுகளையும், ஏமாற்றங்களையும் மறந்து எப்படி அவரால் சிரிக்க முடிகிறது என்பது பெரிய ஆச்சரியம் தான். 

அவர் இந்த நகரத்திலேயே மிகப் பெரிய உணவகத்தை நடத்தி வந்தார். அவர் சமையல் நுட்பத்தில் பெரும் நிபுணர். அவர் என்ன பலகாரம் செய்தாலும், என்ன உணவு வகைகளைச் செய்தாலும் தனித்துவமான அபார ருசி இருக்கும். அப்படி ஒரு கை பாவம். அவரது நளபாகத்துக்காகவே உணவத்தில் கூட்டம் கூட்டமாக உணவகத்துக்கு உண்ண வருவார்கள். இந்த கைபக்குவத்தினை நம்பி வருபவர்களின் ருசி பாவத்துக்கு பங்கம் வந்திரக்கூடாது என்பதற்காகவே அவர் சமையல் கட்டில் இருந்து கொண்டு தனது அண்ணன் மகனை கல்லாவில் உட்கார வைத்தார். உணவுப்பாண்டங்கள் விற்றுத் தீர்கின்றன. கல்லாவில் பணம் இல்லை. பல சரக்கு கடையில் கடன் தொகை ஏறிக்கொண்டே போனது.
காலம் கடந்த ஞானம் வந்தென்ன பயன்? கடையை மூடநினைத்தார். சமையல் பொறுப்பை அவரே ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நல்ல கெüரவமான சம்பளம் கொடுத்து கடையை வாங்க ஒருத்தர் முன்வந்தார். கடன் தொலைந்தால் சரி என்று ஒப்புக்கொண்டார். தானே ராஜா தானே மந்திரி என்றிருந்தவருக்கு ஒத்துவரவில்லை. முதலாளிக்கும் அவருக்கும் கருத்து மோதல் கெüரவ யுத்தமாக வெடித்தது. முதலாளியும் ஒருத்தரை நம்பியே தொழில் பண்ணுவது ஆபத்தில் முடியும் என்று உணவகத்தின் ஒருபகுதியில் துரித உணவு வகைகளையும் தயாரிக்க புதிய சமையல்காரரைக் கொண்டு வந்தார். இம்முயற்சி நம்மவருக்குப் பிடிக்கவில்லை. உடல் நலம் பாதிப்பு என்று விலகுவதாக தெரிவித்தார்.
ருசி பாவம், புதுப்புது பலகாரம் என்று குனிந்து குனிந்து அடுப்படியில் வெந்தவர் உடல் கூனி நிறம் கறுத்து வெளியே வந்தார். கடன் இல்லை என்ற ஆறுதல் தவிர, வேறு இல்லை.
இவரது சமையல் கலையைப் பயன்படுத்திக் கொள்ள கல்யாண சமையல் ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டார்கள். யார் அதிகம் பணம் தருகிறார்கள் என்பதைவிட, யார் மதிக்கிறார்களோ அவர்களது குழுவில் சேர்ந்து சமைத்தார். சமையல் காரர்களோடு ஊர் ஊராய்த் திரிவது ஒத்துவரவில்லை. இருந்தாலும் இரு பையன்கள் ஒரு பெண் கல்யாணம் வரை தேசம்விட்டு தேசம் பறந்து சமைத்தார். அவருக்குச் சிரமம் கொடுக்காது குடும்பத்தைப் பாதுகாத்து வந்த மனைவி உடல் நலிந்து தனிமையில் துயரப்படுவதை உணரவும் சமையல் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவர் அடுப்படிக்கு போவது மனைவிக்காக மட்டுமே என்ற முடிவில் சந்தோசம் கண்டார்.
ஊருக்கே உணவளித்தாலும் அவருக்கு சொந்த வீடில்லை, வாடகை வீடுதான். பிள்ளைகள் பணத்தைக் கொண்டு வீட்டு வாடகை மற்றும் இருவருக்குமான உணவு, மருந்து தேவைகளுக்கு இழுபறியாக இருந்தது. அதிகாலையில் எழுந்து பழகியவருக்கு தூக்கம் வராமல் நடந்த ஒரு அதிகாலைப் பொழுதில் செய்தித்தாள் போடும் வேலை கிடைத்தது. அவருடைய பழைய ராலே சைக்கிளுக்கும் மறுவாழ்வு கிடைத்தது. இப்படியாகத்தான் அவர் இவர் வீட்டில் பேப்பர் போடும் போது நெருக்கமானார். "வாழ்ந்து கெட்டாலும் விழுந்து விடாமல் நம்பிக்கையோடு அலையறாரே மனுஷன்' என்று இவருக்கு அவர்மீது தனி மரியாதை உருவானது.

 

ஒரு சமயம் பத்து நாள்களாக அவரைப் பார்க்கவில்லை. ஆனால் பேப்பர் மட்டும் சரியாக வந்து கொண்டிருந்தது. பதினோராம் நாள் முகமெல்லாம் வெண்தாடி பூக்க வழுக்கை தலை ஒளிர வந்தார்.
""என்னங்க ரொம்பநாள் பார்க்க முடியலை உடம்புக்கு சரியில்லையா?'' என்று விசாரிக்கையில் நெகிழ்ந்த குரலில் சொன்னார்.
""அம்மா வண்டி ஏறிட்டாங்க'' இமைக்கும் பொழுதுக்கும் குறைவான நேரத்தில் ஒரு புன்னகையை உதிர்த்து தலையைக் குனிந்து நிமிர்ந்தார். இவருக்கு இதயக்குலையைச் சுண்டி இழுத்தது போல் இருந்தது.
""ஆமாம், அவளுக்கு முந்தி நான் செத்துட்டா இந்த பசங்கள்கிட்ட இழுபட்டுச் சாவாளேன்னு கவலைப்பட்டேன். எனக்கு முந்தி புண்ணியவதி பிராணனை விட்டு என் கவலையைக் குறைச்சிட்டா.. இந்த மூணு மாசம் அவளுக்கு எல்லாம் நான்தான். நாற்பது வருஷம் என்னைக் கலங்காம காத்தவளுக்கு என்னால முடிஞ்ச பணிவிடை செஞ்சேன்'' என்று இறுகிய குரலிலும் பிசிறில்லாமல் பேசி பளிச்சென ஒரு சிரிப்பு சிரித்தார்.
அவரின் இந்த உருக்கமான குரலும், "பளிச்' சிரிப்பும் இவரை இம்சித்தது எனினும் அவர் மீதான மரியாதை கூடியது.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல இடங்களில் கட்டிக் கொடுக்கப்பட்டு அவர்கள் நல்ல உத்தியோகம், சொந்த வீடுன்னு குறைவில்லாமதான இருக்காங்க. இவரையும் மனைவியையும் அவர்களோடு வந்து இருக்கச் சொல்கிறார்கள். சின்னமகள் வீட்டில் இருப்பதா? பெரிய மகள் வீட்டில் இருப்பதா? என்ற தடுமாற்றம் ஒரு புறம். இருந்தாலும் சம்பந்தகாரர் வீட்டில் எப்படி நிரந்தரமாய்த் தங்குவது? வசதி வாய்ப்பா இல்லை? இருவருக்கும் ஓய்வூதியம் இருக்கிறது, சொந்த வீடு, நட்புடன் உறவாட நண்பர்கள் இவர்களை எல்லாரையும் விட பணியாற்ற, சிந்தனை பரிமாற பழைய சங்க நண்பர்கள்! இயன்றவரை உதவி நாடி வந்தவருக்கு உதவும் வாய்ப்பு இவற்றை எல்லாம் உதறி தன் பிள்ளை தன் பெண்டு என்று இருக்க முடியுமா? ஆனாலும் தன்னை விட தனது மனைவியின் உதவியும், ஒத்தாசையுமே பிள்ளைகளுக்குத் தேவைப்படுவதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் தனது மனைவிக்கு முன்னரே தன் வாழ்க்கை முடிந்துவிட வேண்டும். அதுதான் தனக்கும் தனது மனைவிக்கும் நல்லதென்று நினைத்துக் கொள்வார்.
இந்த பேப்பர் சாமியின் கூற்று அவரை புரட்டிப் போட்டுவிட்டது. அவர் வசதி, வாய்ப்பு இல்லாத நிலையிலும் மனைவிக்கு எந்தச் சிரமமில்லாத வாழ்வின் இறுதிப்பகுதி அமைய வேண்டும் என்று நினைத்தவாறே பூர்த்தி செய்த பெருந்தன்மை எங்கே? நாம் எங்கே? என்று இவர் தனக்குள்ளே மனம் வருந்தினார். ஆனாலும் பேப்பர்க்கார சாமி மீது இவருக்கு மரியாதை இன்னும் கூடியது. தான் பலருக்கு ஆசிரியராக இருந்தாலும் இவர் நமக்கு ஆசிரியர் என்று மனதுக்குள் வரித்துக் கொண்டார்.
பேப்பர் சாமி இப்படி மனதளவில் உயர்ந்து நின்றதால்தான் கடன் கொடுக்கத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறார். பேப்பர் சாமி அடித்தட்டு மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் ஓர் ஓட்டுவீட்டில் குடியிருந்தார். வண்டியை ரோட்டில் நிறுத்திவிட்டு சந்துக்குள் நடந்து போனார்.

வீட்டின் முன் கூட்டமாக ஆள்கள் நின்றிருந்தனர். அசாதாரணமான அமைதியிடையே கிசுகிசுத்த குரல்கள் வீட்டின் முன் இவரது சைக்கிளில் பேப்பர் பை தொங்கியது. பை நிறைய செய்திதாள்கள். சைக்கிள் கேரியரிலும் செய்தித் தாள்கள் இருந்தன.
இவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார். 
""மணி எட்டாகப் போகுது சைக்கிள்ள பேப்பரை வச்சிட்டு சாமி வீட்டுக்குள்ளே என்ன செய்யிறாருன்னு எட்டிப்பார்த்தேன். அவரே டீ போட்டு பாதி டீ யை குடித்தபடி கீழே கிடந்தார். சாமி சாமின்னு எழுப்பினேன். குரல் இல்லை. அசையாமல் கிடந்தார். உயிரில்லை. இப்போது தான் எல்லாருக்கும் தகவல் சொல்லிக்கிட்டிருக்கோம்''
வீட்டில் பேப்பர் சாமியின் தலைமாட்டில் பூ போட்ட போட்டோவில் அவரது மனைவி முறுவலித்தபடி இருந்தார். போட்டோவிற்கு கீழே பக்கத்து வீட்டம்மாள் விளக்கேற்றி இருந்தார். அதன் சுடரில் பேப்பர்சாமி என்ற ராஜகோபாலின் புன்னகை ஒளிர்ந்து அலைந்தது! 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.