Jump to content

சூபி


Recommended Posts

பதியப்பட்டது

சூபி

 

 

காலைப் பொழுதின் வருகையை அந்த சங்கின் ஊதல் அறிவித்தது. வழக்கத்துக்கு மாறாக ஒரு மணிநேரம் முன்பாகவே சங்கு ஊதியது. இங்கே  இப்படித்தான். ஒருநாள் சீக்கிரம் ஊதும். சில நாட்கள் தாமதமாக ஊதும். ஊதியதும் புறப்பட வேண்டும். சூபி (SOOBI) வேண்டா வெறுப்பாக எழுந்தான்.  தூங்க முடியாது. தூங்கக் கூடாது. களத்திற்குச் செல்ல வேண்டும். இரவு 11 வரை உழைக்க வேண்டும். வெளியே எட்டிப் பார்த்தான். DARK CITY  மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பல்புகள் எரிந்தும் அணைந்தவாறும் இருந்தன. ஊழியர்கள் களத்துக்குப் போய்க்  கொண்டிருந்தார்கள். எதற்கு இந்த அர்த்தமற்ற ஓட்டம்? யாருக்காக? எதற்காக?
3.jpg
சில காலமாக இந்தக் கேள்வி களை சூபி கேட்கத் தொடங்கியிருந்தான். பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளை யாரும் இங்கே கேட்கக் கூடாது. தடை  செய்யப்பட்ட கேள்விகள் இவை. கர்ம யோகம்தான் இங்கே வாழும் நெறி. சாகும்வரை மாங்கு மாங்கென்று வேலை செய், அடிமையாக இரு,  மேலிடத்தைக் கேள்வி கேட்காதே, கிளர்ச்சி செய்யாதே, தனித்து இயங்காதே, தேடல் கொள்ளாதே! ‘நான் யார்? ஓர் அடிமை. இந்தப் புதிரான  அமைப்பில் லட்சக்கணக்கான அடிமைகளில் ஒருவன். பெயர் இல்லை. எண்தான். என் எண் 50081’. இதை எழுத்தில் எழுதிப் பார்த்தால் SOOBI  போல வந்தது. எனவே தன்னைத் தானே சூபி என்று அழைத்துக் கொள்கிறான்.

பக்கத்து வீட்டில் வலது பக்கம் 50082. இடது பக்கம் 50080. சூபி களத்தை நோக்கி நடந்தான். விடுப்பு எடுக்க முடியாது. வேலை செய்யாதவர்கள்  அழிந்து போவார்கள். Perform or perish என்பது இந்த டார்க் சிட்டியின் விதி. வழிநெடுகிலும் மற்ற ஆட்கள் சாரை சாரையாகப் போய்க்  கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் உணர்ச்சிகள் இல்லை. தனக்கு உணர்வு வந்ததாக சூபி காட்டிக் கொள்ளாமல் காலை உணவுக்கான  சங்கிலியில் தன்னை இணைத்துக் கொண்டான். உணவு தாமதமாவது போல இருந்தது. ஓர் அடிமை இவனைப் பார்த்துக் கையசைத்தான். இவனும்  பதிலுக்கு புன்னகைத்தான். இதெல்லாம் சகஜம்தான். எல்லாரும் 100% ஜோம்பிகள் கிடையாது.

பேசுவார்கள், பகிர்வார்கள், கூடுவார்கள். ஆனாலும் கேள்வி கேட்கத் தெரியாத சுயசிந்தனை அற்ற முட்டாள்கள். விழித்துக் கொள்ளுதல் ஒரு  சாபக்கேடு. நான் எதற்கு விழித்துக் கொண்டேன்? காலை உணவு எல்லாருக்கும் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் பிரிந்து சென்ற ராட்சதக்  குழாய்களில் எல்லாரும் சென்று வாய் வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்குரிய உணவு உள்ளே சென்றது. சூபியும் சென்று வாய் வைத்தான்.  இவனுக்குத் தெரிந்து இதுவரை யாரும் குழாயை சுத்தம் செய்ததில்லை. இதைப்பற்றி எல்லாம் யோசிக்காத முட்டாள் குடிகள் ரசித்து ருசித்து காலை  உணவை உள்ளே செலுத்திக் கொண்டிருந்தனர். சற்று நேரம் கழித்து அன்றைக்கான ஆரோக்கிய மருந்து வழங்கப்பட்டது.

கொஞ்சம் கசப்பு. தொழிற்சாலையில் நுழைய வேண்டும். குறைந்தது 12 மணிநேர வேலை. பல சமயம் ஓ.டி. பார்க்க வேண்டும். அபூர்வமாக சில  நாட்களில் 9 மணிக்கே போகச்சொல்லி விடுவார்கள். மதிய சாப்பாடு ஒரு மணி வாக்கில் கிடைக்கும். பிரம்மாண்டமான தொழிற்சாலை. அடிமை  மனிதர்கள் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தார்கள். இவனும் வேலையை ஆரம்பிக்க வேண்டும். சூபிக்கு ஓய்வெடுக்க வேண்டும் போல் இருந்தது.  நேற்று ஓ.டி. சரியான சாப்பாடில்லை. காலையில் சீக்கிரச் சங்கு. உடம்பு வலித்தது. இன்று என்ன வேலை? தெரியாது! ஒவ்வொரு நாள் ஒவ்வொரு  வேலை. சிலருக்கு தினமும் ஒரே வேலை. வேறு சிலருக்கு ஓடிக்கொண்டே இருப்பதுதான் வேலை.

இன்னும் சிலர் 24 மணிநேரமும் வேலை செய்கிறார்களாம். கண்டிப்பாக அவர்கள் மனிதர்களாக இருக்க இயலாது. ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்  கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய லோடுகளைக் கைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். லோடுகள் எங்கே போகின்றன? உள்ளே என்ன  இருக்கிறது? சிலர் எதையோ போட்டு அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று freeze என்று மேலிடத்து உத்தரவு வரும். செய்து  கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்த வேண்டியதுதான். சிலர் குழுக்களாக உட்கார்ந்து எதையோ கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் கட்டியதை  உடைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள்.  இந்தக் குழுக்கள் அடிக்கடி கலைக்கப்படும்.

ஒரு குழுவில் இருந்து ஒருவனை திடீரென இன்னொரு அன்னியக் குழுவுக்கு மாற்றுவார்கள். சில சமயம் அன்னியக் குழுவில் நம்மைத் தாழ்வாக  நடத்துவார்கள். கேள்வி கேட்கக் கூடாது. மேனேஜர் வந்தான். கொஞ்சம் மேம்பட்ட ஜோம்பி. ‘‘50081, என்ன மசமசவென்று நின்று கொண்டிருக்கிறாய்?  இங்கே வா! செய்தித் தொடர்புப் பிரிவில் நீ இன்றிலிருந்து சில மாதங்கள் வேலை செய்யவேண்டும். இதற்குமுன் எந்த டிபார்ட் மென்டில் இருந்தாய்?’’  ‘‘ஆப்டிகல் சார்...’’ ‘‘ஓகே. நேராகப் போய் இடது புறம் திரும்பு. உன் டிபார்ட்மென்ட் வரும். அந்த சூப்பர்வைசர் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று  சொல்வார்...’’ பிரம்மாண்டமான இந்தத் தொழிற்சாலையின் இதயம் அதாவது கட்டுப்பாட்டுக் கேந்திரம் எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து விட  வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சூபி.

ஆனால், அது சிதம்பர ரகசியம். இதுவரை யாருக்கும் தெரியாத மறைவிடம் அது. இத்தனை பெரிய தொழிற்சாலையில் எங்கிருக்கிறது அது?  தொழிற்சாலையை யாரும் தேவையில்லாமல் சுற்றிப் பார்க்கக் கூடாது. தனியாக நிற்கக் கூடாது. இழுத்து ஒரு அறை விடுவார்கள். தொழிற்சாலையின்  வரைபடம் எங்கும் மாட்டி யிருக்கவில்லை. எப்படியாவது கண்டறிந்து விடவேண்டும். வலது கோடியில் உள்ள ஓர் அறையில் இருந்து சுரங்கப் பாதை  ஒன்று செல்வதாக ஒருநாள் 40010 சொன்னான். சுரங்கத்துக்கு அப்பால் இதே போன்ற இன்னொரு தொழிற்சாலை இருக்கிறதாம்! செய்தித் தொடர்பு  டிபார்ட்மென்ட் போய்ச் சேர்ந்தான் சூபி. அங்கே இரண்டு குழுககளுக்கு இடையே பெரும் சண்டை நடந்துகொண்டிருந்தது.

சூபி ஆர்வம் காட்டவில்லை. இது மேலதிகாரிகளே தூண்டி விடும் சண்டை. ‘இரண்டு பிரிவும் சண்டை போடுங்கள், யார் ஜெயிக்கிறீர்களோ  அவர்களுக்கு இந்த வேலை கொடுக்கப்படும், எக்ஸ்ட்ரா மதிய உணவு கிடைக்கும்!’ ஒருநாள் இவனும் இப்படி சண்டை போட்டாக வேண்டும்! இங்கே  நமது கோபம் கூட இன்னொருவரால் தீர்மானிக்கப்படுகிறது. செய்தித் தொடர்பு மானேஜர் அழைத்தார். ‘‘உன் நம்பர் என்ன 50081ஆ? இப்படி வந்து  நில்...’’ நூற்றுக்கணக்கான ஜோம்பிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஆர்வமோ, வெறுப்போ காட்டாத முகங்கள். ‘‘சவுண்டு இன்ஜினியர்கள்  உங்களிடம் சில பெட்டிகளைக் கொண்டு வந்து தருவார்கள். ஸ்டோரேஜ் டிபார்ட்மென்ட் ஆட்கள் சில பெட்டிகளைத் தருவார்கள்.

இரண்டையும் ஒப்பிடுவதுதான் உங்கள் வேலை. பொருந்தினால் அதைக் கொண்டு போய் இன்னொரு செட் ஆட்களிடம் கொடுக்கவேண்டும். கவனம்.  இந்த டிபார்ட்மென்ட் நமக்கு மிகவும் ரெவின்யூ தரும் ஒன்று. சொதப்பினால் மரண தண்டனை! போய் வேலையை ஆரம்பியுங்கள். ட்ரெய்னிங்குக்கு  ஒரு மணி நேரம் டைம். பழைய ஊழியர்கள் இதை எப்படி செய்கிறார்கள் என்று கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறுகளை இங்கே அனுமதிக்க  முடியாது...’’ என்றான் மேலதிகாரி. அடிமைகள் உடனே கற்றுக்கொள்ள ஓடின. சூபி சலித்துக் கொண்டான். என்ன மாதிரியான வேலை இது? இதற்கு  செத்துப் போவதே மேல். ஒருமணிநேர ட்ரெய்னிங் முடிந்து வேலை ஆரம்பித்தது. பெரிய பிரம்ம சூத்திரம் ஒன்றும் இல்லை.

இரண்டு பெட்டிகளைத் திறந்து பார்த்து ஒப்பிடும் சார்ட்டர் வேலைதான். சீக்கிரமே கற்றுக் கொண்டான் சூபி. இங்கே கற்றுக்கொள்ள வாரக் கணக்கில்  பயிற்சி கொடுக்கமாட்டார்கள். ஆன் தி ஜாப் ட்ரெய்னிங். கற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற சாக்கில் நேரத்தை வீணடிக்க முடியாது. சூபிக்கு அழுகை  வந்தது. அடக்கிக் கொண்டான். பெட்டி ஒன்றைக்  கை மாற்றும்போது 80051 அதைத் தவற விட்டான். ‘‘லூசுக் கிரகமே 80051... இதைக் கூட சரியாகப்  பிடிக்க மாட்டாயா?’’ என்றான் சூபி. ‘‘என்னை பூஸி என்று அழையுங்கள். 80051 அல்ல! வெல்கம் டு தி ரிபல் கிளப்!’’ அவன் கண்ணடித்தான்.  ‘‘மெய்யாலுமா?’’ ‘‘ம்...’’ ‘‘இன்னும் எத்தனை பேர்?’’ ‘‘ஆயிரக் கணக்கானோர். எல்லாமே இந்த டிபார்ட்மென்ட்! புரட்சி வெடிக்கப் போகிறது.

நம் அடிமை வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது. இன்னும் சில மணித் துளிகளில் தொலைத்தொடர்பு கேந்திரத்தைத் தகர்த்தெறியப் போகிறோம்!’’  ‘‘எப்படி இது சாத்தியமானது பூஸி?’’  ‘‘சமீபகாலமாக உங்களைப் போலவே பலருக்கு விழிப்பு வந்துள்ளது. அவர்களையெல்லாம் மெல்ல மெல்ல ஒன்று  திரட்டி நாங்கள் தீட்டிய ரகசியத் திட்டம் இது...’’  ‘‘அருமை!’’ ‘‘மைய கேந்திரத்தையும் இன்னும் சில நாட்களில் கண்டுபிடித்து விடுவோம். உளவாளிகள்  தேடிப் போயிருக்கிறார்கள்...’’  ‘‘நான் காண்பது கனவா?’’ ‘‘உஷ், மேலதிகாரி வருகிறான். உழைப்பது போல் நடியுங்கள்!’’  சில மணிநேரத்தில் அங்கே சிறு  கிளர்ச்சி வேர் விட்டு கலவரமாக மாறியது. எங்கிருந்தோ ஒரு பெரிய கதவு திறந்து கொண்டது.

ஊழியர்கள் பெருங்கோஷமிட்டபடி ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு கதவு வழியாக ஓட ஆரம்பித்தார்கள். பிரபல நியூராலஜிஸ்ட் ரவிச்சந்திரன் முன்  அமர்ந்திருந்தான் தினேஷ். அவன் இரு பக்கமும் அவன் அப்பா, அம்மா. முகங்களில் கவலை. ‘‘எத்தனை நாளா பேச முடியலை?’’ ‘‘காலைல இருந்து  டாக்டர்...’’ ‘‘எப்படி நடந்தது?’’ ‘‘முந்தாநேத்து ராத்திரி லேட்டா படுத்தான் டாக்டர். சாப்பிடலை. நேத்து காலைல அஞ்சு மணிக்கே எழுந்துட்டான். ஆறு  மணிக்கு காபி தந்தேன். சர்க்கரை தூக்கலா இருக்குன்னான். காலைலயே தலைவலி மாத்திரை கேட்டான். கொடுத்தேன். டிஸ்டர்ப்டா இருந்தான்.  வேலைக்குப் போறேன்னான்... போகலைன்னான்... நாக்கு குளறுச்சு. சம்பந்தம் இல்லாம உளறினான். ஏழு மணி வாக்குல பேச்சு வரலை.

லீவ் போட்டு, சரியா தூங்கி எழுந்தா சரியாயிடும்னு நினைச்சோம்...’’  ‘‘இவரைக் கொஞ்சம் வெளில கூட்டிப் போக முடியுமா?’’  தினேஷ் வெளியே  வந்தான் அம்மாவுடன். ‘‘பாருங்க சார்... உங்க பையன் நிலைமை சீரியஸா இருக்கு...’’  ‘‘என்ன சொல்றீங்க டாக்டர்?’’ ‘‘நம்ம மூளை emergence  தத்துவத்துல வேலை செய்யுது. அதாவது இடது மூளையோ, வலது மூளையோ, உள்ள இருக்கிற கோடிக்கணக்கான நியூரான்களுக்கு தாங்க என்ன  வேலை செய்யறோம்னு தெரியாது! கொடுக்கிற வேலையை செய்யும். சிலசமயம் நியூரான் ஒண்ணு சிக்னலைக் கடத்தும். தகவல் பொட்டலங்களை  ஆய்வு செய்யும். ஆனா, ஏன் செய்யறோம்னு நியூரான்ஸுக்கு தெரியாது. ஒரு குழுவுல இருக்கிற நியூரான் இன்னொரு குழுவுக்கு மாறும். அதாவது  பார்வை கேந்திரத்துல இருக்கிற நியூரான் பேச்சு கேந்திரத்துக்கு மாறும்.

சில சமயம் ஒரே முடிவை எட்ட நியூரான் குழுக்களுக்கு இடைல போட்டி கூட நடக்கும். உதாரணமா, நீங்க இன்னைக்கு கார்ல போறதா பைக்ல  போறதானு யோசிச்சு முடிவெடுக்கிறப்ப இது நிகழும். கோடில ஒருத்தருக்கு சில புதிரான காரணங்களால திடீர்னு இந்த நியூரான்ஸ் இஷ்டத்துக்கு  செயல்பட ஆரம்பிக்கும். தங்களுக்குள்ளயே பர்சனாலிட்டியை வளர்த்துக்கும். உங்க பையன் தினேஷ் மூளைல இப்படி நியூரான்ஸ் கிளர்ச்சி செய்ய  ஆரம்பிச்சிருக்கு! இந்த நியூரான் அஜிடேஷன் மத்த பகுதிகளுக்கும் இப்ப பரவுது. சீக்கிரத்துல உங்க சன் கோமா ஸ்டேஜுக்கு போகக் கூடும்...’’ டாக்டர்  சொல்லி முடித்ததும் தினேஷின் அப்பா அழ ஆரம்பித்தார். ‘‘வெற்றி, வெற்றி! அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது. இப்போதுதான் தகவல் கிடைத்தது,  அதிகார மையத்துக்கான வழி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நம் வீரர்கள் அங்கே படைகளுடன் விரைகிறார்கள்!’’  
 

http://www.kungumam.co.in

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.