Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகள் இல்லாத கிழக்கு முஸ்லிம்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Paddy-15-1024x683.jpg

 

உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான
அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். இன்று பலஸ்தீனம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் முஸ்லிம்களை வேரறுத்து, அந்த மண்ணைக் கைப்பற்றி, அங்கிருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கான பல்நோக்கு யுத்தமென்றே கூற வேண்டும். ஏனென்றால் நிலம் அல்லது காணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் இருப்புக்கும் வாழ்தலுக்குமான அடிநாதமாக திகழ்கின்றது.


காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உலக வரலாற்றினூடு மட்டுமல்லாமல் இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதாவது, விடுதலைப் போராட்டமும், அதற்கெதிரான அரச நடவடிக்கையும் வெறுமனே அரசியல் உரிமைகள் தொடர்பான இராணுவ முன்னெடுப்பு மட்டுமல்ல. மாறாக, அதற்குப் பின்னால் காணி அதிகாரம் என்ற ஒரு விடயமும் இருந்தது நாமறியாத சங்கதியல்ல.
குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்ட தனிநாட்டுக் கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். இது ஆளும் அதிகாரத்தை தமிழர்களுக்குப் பெற்று அதனூடாக காணி அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பெறும் வேட்கையாகும். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து இனப் பிரச்சினை தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் தேசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.



முஸ்லிம்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் கோரி வருகின்றனர் என்பது கவனிப்பிற்குரியது. இதனூடாக தாம் இழந்த காணி உரிமைத்துவங்களை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் காணிப்பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் என்று தமிழ் தேசியம் மிகவும் திடமாக நம்புகின்றது.

மறுபுறத்தில்,அவ்வாறு காணி அதிகாரம் சிறுபான்மைச் சமூகத்திற்கு போய்விடக் கூடாது என்று பெருந்தேசியம் எண்ணிக் கொண்டிருக்கின்றது.
ஆயிரக்கணக்கான ஏக்கர்
இவ்வாறு உலக நாடுகளும் நமது சகோதர சமூகமும் நிலத்தை தம்வசப்படுத்துவதிலும் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் இத்தனை அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலப் பகுதியில் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்வோர் தங்களது காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதில் எந்தளவுக்கு முனைப்பாக உள்ளனர்? வடக்கிலும் கிழக்கிலும் உள்ள காணிகளை தற்போதிருக்கின்ற இன விகிதாசாரத்தின்படி பகிர்ந்து பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள்?


வடக்கு, கிழக்கில் பல ஹெக்டேயர் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் முஸ்;லிம்களுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில்  குறைந்தது 70 ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன. இதில் அரைவாசி காணிகள் தொடர்பான பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர். எத்தனை முஸ்லிம் கட்சிகள், எத்தனை தேசிய தலைமைகள், அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நமது முஸ்லிம் சமூகம் பெற்றிருந்தும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் இவர்களால் ஆன பலன் என்ன?


வட மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு பல்லாயிரம் ஹெக்டேயர் கணக்கிலான காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான காணிப் பிரச்சினை இதில் முதன்மையானதும் நாட்பட்டதும் ஆகும்.


வடக்கில் இருந்து தனது 10 வயதில் வெளியேறிய ஒரு சிறுவனுக்கு இன்று 38 வயது. அவனுக்கு பிள்ளைகளும் இருக்கும். இவ்வாறு விருத்தியடைந்துள்ள மக்கள் தொகைக்கு வாழ்வதற்கான காணியை உறுதிப்படுத்துவது அவசியமானது. இது தவிர ஆக்கிரமிப்புக்கள், சுவீகரம், வர்த்தமானி ஊடாக பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப் படுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலும் வடமாகாண முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்ட 40ஆயிரம் ஹெக்டேயரில் முஸ்லிம்களுக்கு 90 சதவீதமான காணிகள் உள்ளன.


கிழக்கில் நிலைமை

வடக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் இல்லை. ஆனால் கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (42வீதம்) வாழ்கின்றனர். திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இனக்குழுமமாக முஸ்லிம்களே இருக்கின்றனர். கிழக்கில் இன்னும் பத்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை 50 வீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாடசாலைகளில் தரம் 1 இற்குச் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து இதனை உய்த்தறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.


ஆனால், ஏற்கனவே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகளையே தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இதுவரை எடுத்திராத முஸ்லிம் அரசியல்வாதிகள், இனிவரும் காலத்தில் பல்கிப்பெருகக் கூடிய மக்கள் தொகையினர் வாழ்வதற்குரிய காணிகளை இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் பங்கிட்டுப் பெற்றுக் கொள்ளவது பற்றி சிந்தித்திருக்கின்றார்களா? குறைந்த பட்சம் இத்தனை ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினை இருக்கின்றது என்ற புள்ளிவிபரமாவது இவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை.


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் எத்தனையாயிரம் காணிகள் முரண்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன என்ற மிகப்பிந்திய மிகச் சரியான தரவு கூட எந்த அரசியல்வாதியிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எம்.ஐ.எம்.மொஹிதீன் போன்றோரின் தரவுகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட  அண்ணளவான தரவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 65ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிப் பிரச்சினைகள் உள்ளன. இது இப்போது இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.


அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் 48  சதவீதமாக பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில் அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை, வட்டமடு ஆகிய இடங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.


காணி உரிமைக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களின் தகவல்களின்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, நிந்தவூர், சம்மாந்துறை, திருக்கோவில், தமணை பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உரிமை சார்ந்த  சர்ச்சைக்குள் சிக்கியுள்ளன. அம்பாறை மாவட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையின மக்களை திட்டமிட்டுக் குடியேற்றியமையாலும் மாவட்ட எல்லை நிர்ணயத்தாலும் சிறுபான்மையினரின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து சிங்களவர்களின் விகிதாசாரம் பல மடங்கினால் இம்மாவட்டத்தில் அதிகரித்திருக்கின்றது.

அம்பாறை மாவட்டம்

1930களில் 'அதிக உணவு பயிரிடல்' தேசிய அபிவிருத்தித் திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு எல்.டீ.ஓ. உத்தரவுப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கியதுடன், அடர்ந்த காடுகளை வெட்டி விவசாயம் செய்யும் நிலையும் உருவானது. இந்தக் காணிகளில் 30 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்தனர். பின்னர் கல்ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதன் பின்னரான செயற்றிட்டங்களின் கீழ் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களுக்காக இவற்றுள் கணிசமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நுரைச்சோலை, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சேலவட்டை, வேலாமரத்துவெளி, சியத்தரவட்டை, பொன்னன்வெளி போன்ற இடங்களில் ஒரு தொகுதி காணிகள் சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்டன.


இம் மாவட்டத்தில் சிங்கள இனப் பரம்பலை அதிகரிக்கும் வேறு குடியேற்றங்களாலும் பெருமளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன. வனவளம், இராணுவ முகாம், தொல்பொருள் மையங்கள், புனித வலய பிரகடனம் என்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு கணிசமான காணிகள் உரிமைசார்ந்த பிரச்சினைக்குள்ளாகியுள்ளன.  


பொன்னன்வெளியில் 600 ஏக்கர் காணியானது தீகவாபி புனித பிரதேச பிரகடனத்தின் கீழ் பறிபோயுள்ளது. அஷ்ரப் நகர் பிரதேசத்தில் உள்ள 150 ஏக்கர் காணியில் பெரும்பகுதி வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் உரிமை கொண்டாடப்படுகின்ற அதேநேரத்தில் அங்கு இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பலம்ஓயா கண்டத்தின் கீழ்வரும் சுமார் 750 ஏக்கர் விவசாய காணிகள் கல்லோயா அபிவிருத்தி சபை வசமாகியுள்ளது.  கீத்துப்பத்து பாவாபுரத்திலுள்ள 96 ஏக்கர் காணிகள் பெரும்பான்மை சமூகத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் மற்றும் லகுகலை எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் 140 விவசாயிகளின் 450 ஏக்கர் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் உரிமை கொண்டாடப்படுகின்றது.


கிரான்கோவை பாலையடிவட்டையில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகள் இன்று அரச வனமாக கருதப்படுகின்றன. அதேபோன்று, 1957 இல் மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் காணி உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டு நிந்தவூர் விவசாயிகளால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட கிரான் கோமாரி காணிகளில் யுத்தம் காரணமாக நீண்டகாலம் விவசாயம் மேறகொள்ளப்படவில்லை. இப்போது அதனை முஸ்லிம்கள் உரிமைகோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், மேலே விபரிக்கப்பட்ட காணிகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்டவை மாத்திரமேயாகும். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆகக்குறைந்தது 32 ஆயிரம் ஏக்கர் காணிகளின் பிரச்சினையை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.


இதை விட மிக முக்கியமாக, இப்போது தொட்டம என்றழைக்கப்படும் பிரதேசத்தில் 130 ஏக்கர் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரிமையாக்கி வர்த்தமானி வெளியிடுவதற்கு சூசமகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அத்துடன், ஹிங்குராணை சீனித் தொழிற்சாலையின் காணிகள் தொடர்பாகவும் ஒரு காய்நகர்த்தல் மேற்கொள்ள திட்டமிடப்;படுவதாக புதிய இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


இந்தப் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான எல்லாக் கரையோர தமிழ், முஸ்லிம் கிராமங்களிலும் காணித் தட்டுப்பாடு உள்ளது. இப்போதே அங்கு முஸ்லிம்கள் காணிகளை பெற்றுக் கொள்ள முடியாத அளவு வரையறுக்கப்பட்ட காணிகளே உள்ளன. இன்னும் சில வருடங்களில் நிலைமை இதைவிட மோசமடையப் போகின்றது.

மட்டு, திருமலை நிலவரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 22 கிலோமீற்றர் நிலப்பரப்பிற்குள், சனத்தொகை அடிப்படையில் சிறுபான்மையாக வாழ்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு கூட அவர்களது சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லை என்பதுடன் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளேயே அவர்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். மறுபுறத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட, பிரகடனப்படுத்தப்பட்ட, பறிபோன காணிகள் பற்றிய பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை.


இம்மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. அது ஒருபுறமிருக்க, 1980களின் பிற்பகுதியில் வாகரையில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லிம்களின் மீள்குடியேற்றப்படவில்லை என்பதுடன் அவர்களது காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரம், கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி. காரமுனை போன்ற கிராமங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வெளியேறிய முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகன் இன்னும் தீர்க்கப்படவில்லை.


இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் கடுமையான காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். வழக்கமான காணி பிரச்சினைகளை விட அண்மைக்காலத்தில் நில ஆக்கிரமிப்புக்கள், பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


திருமலையில் 42 வீதமாக காணப்படுகின்ற முஸ்லிம்களின் இனப் பரம்பலுக்கு ஏற்றாற்போல் காணிகள் இல்லை. குறைந்த நிலப்பரப்பில் அளவுக்கதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன் இம்மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்று உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.


கரிமலையூற்று பள்ளிவாசலுக்கு முழுமையாக நிலத்தை வழங்க மனமில்லாத அதிகாரத் தரப்பினர் அங்குள்ள சில விகாரைகளுக்கு தலா 500 ஏக்கர் காணிகள் இருந்ததாக உரிமை கொண்டாடுவதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது. சிங்கள பிரதேசங்களில் குறைந்தளவான மக்களுக்கு அதிக நிலமும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான மக்களுக்கு வரையறுக்கப்பட்ட காணி உரிமையும் இருப்பதை... திருகோணமலையிலும் காண முடிகின்றது.


வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களுக்கும் காணிப் பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகள், பிணக்குகள் நெடுங்காலமாக இருக்கின்றன. வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றால் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படுவதுடன் பாதுகாப்புத் தரப்பினரின் தேவை மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் கணிசமானளவு காணிகளை முஸ்லிம்கள் தினமும் இழந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு மேலதிகமாக, சட்ட விரோத தனிநபர் நில ஆக்கிரமிப்புக்களும் இடம்பெறாமலில்லை.

காணிப் பங்கீடு


இன விகிதாசாரத்திற்கு அமைவாக காணிப்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்ற சமகாலத்தில்,டி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் காணிகளுக்கு  சட்டபூர்வ உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பல வருடங்களுக்கு முன்னமே பரிந்துரைத்துவிட்டது. ஆனால் பொறுப்புள்ள அரசாங்கம் இதுவிடயத்தில் ஒரு அடியைத்தானும் முன்னோக்கி எடுத்துவைத்ததாக தெரியவில்லை.


இந்தக் காணிப்பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. அதற்கு நீண்டநாள் உழைக்க வேண்டியுள்ளது. சில பிரச்சினைகளை நிர்வாக ரீதியாக தீர்த்துக் கொள்ள முடியும். சில விவகாரங்களுக்கு உயர்மட்ட கலந்துரையாடல்களின் ஊடாக தீர்வைத் தேடலாம். வேறு சில காணிப் பிணக்குகளை தீர்க்க அரசியல் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதிக ஏக்கர் காணிகள் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிப் பங்கீட்டை மேற்கொள்ளவும் முஸ்லிம்கள் ஜனநாயக அடிப்படையில் போராடியேயாக வேண்டிய நிலை காணப்படுகின்றது.


வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்காக பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பிராந்திய தளபதிகளும் காணிப் பிரச்சினைகளை தீர்த்து தருவதாக வாக்குறுதி வழங்காத மேடைகள் இல்லை. இராஜாங்க அமைச்சராக இருந்த போது எம்.ரி.ஹசனலி நீண்டதொரு அறிக்கையை பிரதமருக்கு சமர்ப்பித்திருந்தார். வேறுபலரும் முயற்சிகளை மேற்கொண்டனர்தான். இல்லை என்று சொல்லவில்லை.


ஆனால், முஸ்லிம்களின் ஒரு ஐநூறு ஏக்கர் காணிப் பிரச்சினையாவது தீர்க்கப்பட்டிருக்கின்றதா? என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டிவரும். ஆனால் தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் மூலமும் போராட்ட குணத்தின் ஊடாகவும் அதனை மெல்ல மெல்ல சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.


அந்த அடிப்படையில், மூன்று முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் முஸ்லிம்களுக்கு தற்போதிருக்கின்ற காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதுடன், இன விகிதாசாரத்தின் பிரகாரம் காணிகள் எமது சமூகத்திற்கு கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாவர்களே, வானம் ஏறி வைகுண்டம் போவார்கள் என்று முஸ்லிம் சமூகம் நம்பியிருக்கின்றது.


ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 10.06.2018)
 
www.madawalaenews.com
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.