Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோணி! … வ.அ.இராசரத்தினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோணி! … ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம்.

June 21, 2018
தோணி! …  ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம்.

சிறப்புச் சிறுகதைகள் (3) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘தோணி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_%E0%AE%B5.%E0%AE%85.%E0%AE%87%

 

கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு. எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்ணீர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.

அநேகமாகக் காலை வேளையில் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும் போதே எழுந்து கடலுக்குப் போய் விடுவார். அம்மாவிற்கு வெளியே என்ன வேலை இருக்குமோ, என்னால் ஊகித்துக் கொள்ள முடியாது. ஆனால், அம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் பனையோலைப் பெட்டியில் அரிசியும், மரவள்ளிக் கிழங்கும், தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மா வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம், அப்பாவும் தூண்டிற்கயிறுகளோடும், சவளோடும் மீன்கோவையோடும் வீட்டுக்கு வந்து விடுவார். அப்பாவும் அம்மாவும் வீட்டிலில்லாத நேரங்களில் ஒரே குஷிதான்!

ஏறுவெய்யிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப்போல வட்ட வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட, அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் நான் அதை மறைக்க, அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக்கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். ஆனால் கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம், என்னால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறபடியால் நான் என் விளையாட்டை முடித்துக் கொள்வேன்.

குடிசைக்கு வெளியே வந்தால், அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன் என்னைவிட நோஞ்சான். பாய்மரக் கம்புபோல நீளமாக இருப்பான் இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னைமரத்து வட்டைத் தொட்டு விடுவான் என்று என் அம்மாகூட அவனைப் பரிகசிப்பது உண்டு. செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டுப்படலையை இழுத்துச் சாத்திவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஆற்றங்கரைக்கு ஓடுவேன். ஆற்றங்கரை, வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வங்காளக் கடல் சிறிது உள்ளே தள்ளிக்கொண்டு வந்து ஒரு சிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஓடையில் பூரணையன்று வெள்ளம் வரும்போது தண்ணீர் வீட்டு முற்றத்திற்கே வந்துவிடும். அந்த ஆற்றங்கரையின் ஓரமாக, ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக்கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஓசைப்படாமல் இருகைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்குப் பரம திருப்தி; என்றாலும் இந்த விளையாட்டில் எங்கட்கு அலுத்துப் போய்விடும். அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடுவோம். கடற்கரையில் கச்சான் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் அந்தக் காற்றில் இராவணன் மீசைகளைத் துரத்திப் பிடித்தபின், அந்த விளையாட்டிலும் எங்கட்கு அலுப்பு ஏற்பட்டுவிடும். அதன்பின்னால், நாங்கள் இருவரும் கடற்கரை வெண்மணலில் மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளில்மேல் குந்திக் கொள்வோம். பதைபதைக்கும் வெய்யிலில் அந்த அடம்பன்கொடி மெத்தை எங்களுக்குக் “கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு” வாகத்தான் இருக்கும். அந்தப்பட்டு மெத்தையின் மேல் வீற்றிருந்து கொண்டு எதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப் பரந்துகிடக்கும் கருநீலக் கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாய் விரித்தாடும் பாய்த்தோணிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச்சீலைப் பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப் பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றில் தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால், எதிலே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்குத் தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு, அதில்தான் அவர் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். அந்த நம்பிக்கையில், முகத்தில் ‘சுள்’ என்றடிக்கும் சூரியக்கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக்கொண்டு அந்தத் தோணியையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அந்தச் சமாதிநிலையில், என்னுள்ளே இன்பகரமான கனவுகளெல்லாம் எழும். இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகி விடுவேன்; அப்போது, அப்பாவிற்குப் போல, எனக்கும் ஒரு தோணி சொந்தமாகக் கிடைத்துவிடும். அந்தத் தோணிக்கு வெள்ளை வேளேரென்று அப்பழுக்கில்லாத ஒரு பாயைப் போட்டுக் கொண்டு நான் கடலிற் செல்வேன்; ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித்தாவி ஏறி இறங்கிக்கொண்டே செல்லும். எல்லாத் தோணிகளையும்விட வேகமாக ஓடுவதற்காக என் தோணியின் பாய், பெரியதாக இருக்கம். அந்தப் பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக் கொண்டிருக்கையில், என் தோணி கடற்பரப்பில் ‘விர்’ரென்று பறந்து செல்லும். நான் பின்னணியத்தில் தலைப் பாகைக்கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப் பிடித்துக் கொள்வேன்; செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத்திசை காட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னே ஏறிச் சென்று, கடைசியாய்க், கடல் வானத்தைத் தொடும் இடத்திற்குப் போய்விடும். அங்கே அம்மா இராத்திரிச் சொன்ன கதையில் வரும் ஏழு தலை நாகத்தைக் காண்பேன்….

தூரத்தே நான் குறித்து வைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார்தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும், அவர் பாயைக் கழற்றி வைத்துத் தோணியை ஓடை வழியாக இழுத்துச் சென்றார். நானும் அவரோடு சேர்ந்து கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னால் தோணியைக் கரையில் கொறகொற என்று இழுத்து வந்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கி சவளில் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள் இருந்த பழஞ் சோற்றுப் பானையையும், மீன் கோவையையும், நங்கூரத்தையும் எடுத்தத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா பின்னே வர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சப்த சமுத்திரங்களையும் கடந்து வந்த வீரனைப் போல முன்னே நடந்தேன்.

அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை பசித்தவன் விருந்துண்ணத் கனாக் காண்பதுபோல நானும் தோணியைப் பற்றியே கனாக்கண்டேன், எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஓடையில் ஐந்து புத்தம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன்னணியம் உயர்ந்து சவாரிக் குதிரைபோல இருந்த தோணியின்மேல் ஏறிக்கொண்டேன். வாடைக் காற்றானபடியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமல் கரையை நோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்துவிழும் நட்சத்திரம் போலக் கனவேகமாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய்விடுகிறது…. நான் திடீரென்று விழித்துக்கொண்டேன்.

காலையில் எழுந்தபோதுகூட எனக்குத் தோணியின் நினைவு மாறவில்லை. அன்று நான் ஓடைக் கரையில் பழுது பார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி ஒன்றைத் தள்ளிக் கொண்டு கடலிற்குப் போவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். செல்லனைக் கூட்டிக்கொண்டு போய், இருந்த தோணியை எங்கள் பலத்தையெல்லாம் கூட்டித் தள்ளிப் பார்த்தேன். தோணி அசையமாட்டேன் என்றது. அப்படியானால் நான் தோணி விடவே முடியாதா? சப்த சமுத்திரங்களையும் என்னால் தாண்டமுடியாதா? நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கையில் ஓடையில் முருக்க மரத்துண்டு ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப் போயிற்று. ஆம்; எனக்கென்று ஒரு தோணி கிடைத்து விட்டது! அந்த முருக்கங்கட்டையை முன்னாலும் பின்னாலும் ‘கொடுவாக் கத்தி’யினால் செதுக்கி உள்ளே குடைந்து தோணி ஒன்றைச் செய்தேன். பின்னர், அந்தத் தோணியில் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஓடையில் தோணிவிட்டு விளையாடினேன். மதியம் திரும்பிவிட்டது. என் தந்தை கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தோணிவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்டதும், “அடே பயலே! தோணி விடுறியா? அப்படியெண்டா நாளைக்கு என்னோட கடலுக்கு வா” என்றார். அதைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷம் தாங்க முடியாமற் போய்விட்டது. “சரியப்பா, நாளைக்கு நானும் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சவளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியில் போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந் தோணியை மறந்து விட்டேன்.

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில் வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்துச் சேவல்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூவின. அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்திக்கொண்டு சமயல் செய்யத் தொடங்கினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவியழைக்கும் சப்தம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து, “தம்பி, டேய்!” என்று என்னை எழுப்பினார். நான் சுட்டபிணம்போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். இரா முழுவதும் தூக்கம் இல்லாததினால் கண்ணிமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பா சோற்றுப்பானை நிறையத் தண்ரை ஊற்றி எடுத்துக்கொண்டு நங்கூரம், தூண்டில் கயிறு சகிதம் வெளிக் கிளம்பினார். நானும் சவளைத் தோளில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவரைப்போலச் சுளீர் சுளீர் என்று அடித்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது. மேல் துண்டை முகத்தை வளைத்துக் கட்டிக்கொண்டு முன்னால் விறுவிறு என்று நடந்தேன். தூரத்தே குடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் ‘குத்து குத்’ தென்று குத்தின. ஓடைக் கரையை அடைந்தபோது, ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டு என்று விழுந்து ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞையே அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலைப்போலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது. அப்பா கரையில் இருந்த தோணியை ஓடையிலே தள்ளினார். அதற்குள்ளே சோற்றுப் பானையையும் மற்றைய சாமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப் புறகளின் அடியில் ‘அத்தாங்கை’ வீசி இறால் பிடிக்கத் தொடங்கினார்.

நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய் குந்திக்கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல, வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. பறி நிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக் கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கிற்று. பலாரென்று விடிந்தபோது வள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்து விட்டு தூண்டிலில் இறாலைக் குத்திக் கடலில் எறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். சமுத்திரா தேவி நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து எறிந்து தாலாட்டிக் கொண்டு இருந்தாள். வெய்யில் ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத்தோலை உரித்துவிடுவதுபோலச் சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையில் கடல் தண்ரை அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டேயிருந்தார்.

ப்மதியத்தை அண்மியபோது, நாங்கள் ஆளுக்கு ஐந்து “கருங்கண்ணிப் பாரைகள்” பிடித்துவிட்டோம். என் உழைப்பைக் கண்டு எனக்கே திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்தத் திருப்தியில் பழஞ் சோற்றைக் கரைத்துக் குடித்த தண்ணீர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான் பட்டது. வயிறு நிறைந்ததும், நங்கூரத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கையில் என் உள்ளம் பகல் கனாக் காணத் தொடங்கியது. “இந்தப் பத்துக் கருங்கண்ணிப் பாரைகளைக் கண்டதும் அம்மா சந்தோஷப்படுவா. பக்கத்துப் பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனால் பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே, எதிரே வரும் பொங்கலுக்காகக் கமுகம் பூப்போன்ற பச்கையரிசியும் பாசிப்பயறும், சர்க்கரையும் முட்டி நிறையப் பாலும் வாங்கிக் கொள்ளலாம். ‘எங்கள்’ வீட்டுத் தென்னை மரத்தின் கீழே புதுப் பானை ‘களக் களக்’ என்று பொங்கும் போது நான் புது வேட்டியை எடுத்துக் கரும்பைக் கடித்துக்கொண்டு…. வள்ளம் கரையை அண்மிட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் பைசிக்கிள் தகடுகளின் மேல்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவரைப்போலத் தோணியை அங்கே திருப்பினார். தோணி கரையை அடைந்ததும் மீன்களையெல்லாம் பைசிக்கிள் காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும், வீட்டை நோக்கித் தோணியை விட்டார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. தோணி வந்துகொண்டிருக்கையில் நான் கேட்டேன்: “ஏன் அப்பா மீன்களை எல்லாம் அங்கே போட்டுவிட்டு வருகிறீர்கள்?” அப்பா சொன்னார்: “அவர்தான் நம் முதலாளி, இந்தத் தோணி-எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப் பிடித்து அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.”

“நமக்குக் காசு தரமாட்டாரா?” “நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்.” “அப்படியானால் நாம் ஒரே கடன்காரராகத்தானே இருக்க வேண்டும்? “என்னமோ அப்பா, நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணி வாங்கவும் முடியாது.” “எல்லாத் தோணிகளும அந்த முதலாளியுடையது தானா அப்பா?” “ஆம், ஓடைக்கரையிலே இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்.” வெள்ளம் ஓடைக்கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியைக் கரையில் இழுத்து வைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தோம்.

என்னுள்ளே ஒரு பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எனக்குச் சொந்தமில்லை. ஆம், தூண்டிற்காரனுக்குத் தோணி சொந்தமில்லை; அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லை; உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை. அன்றிலிருந்து தோணி எனக்குக் கனவுப் பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தால் சந்தையில் கொண்டுபோய் நம் இஷ்டத்திற்கு விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பாலும், பச்சையரிசியும் சர்க்கரையும் வாங்கலாம்… முதலாளிக்குப் பிடித்த மீனையெல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிவரத் தேவையில்லை.

* * * நாட்கள் கடந்துவிட்டன. நான் பெரியவனாகிவிட்டேன். சொந்தத் தோணி இன்னமும் வெறுங்கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார் வாழ்ந்துவரும் அதே பாதையிற்றான் என் வாழ்வும் போய்க்கொண்டிருந்தது. இந்த வாழ்வில், எனக்கு நேரகாலத்தில் கல்யாணம் முடித்து வைத்துவிடவேண்டும் என்பதே அம்மாவின் ஆசை.

ஒருநாட் சாயந்திரம் ஓடைக்கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக்கொண்டிருந்தேன். மேலே நீல நிறமான ஆகாயம் ஓடையின் தெளிந்த தண்ரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒடை முகத்துவாரத்தில் இருந்த மணல் தீவில் கடற்புட்கள் கூட்டம் கூட்டமாக வந்து விழுந்து கொண்டிருந்தன. “தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத் தாகமாயிருந்தது. வீட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தேன். கனகம் செம்பிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள். கனகம் எங்கள கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக்கொடியைப்போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவன் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீவனப போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலிலே மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம். அவள் அருகால் வந்தபோது, “கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போறியா?” என்று கேட்டேன் நான். கனகம் ஒன்றும் பேசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.

நான் தண்ரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். அம்மாவைக் கண்டதும், கனகம் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்தவள்போல வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டாள். அம்மா சொன்னாள்: “என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே நீ கல்யாணம் முடிக்கப் போகிறாய்?” “போ அம்மா, எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்” என்றேன் நான். “ஏண்டா! அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுவார் அவர்” என்றாள் அம்மா. நான் யோசித்தேன். எனக்குக் கல்யாணத்திலோ கனகத்திடமோ அக்கறை இல்லாவிட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதே! தோணி மட்டும் கிடைத்து விட்டால் என் உழைப்பீன் பயனை நானே அனுபவிக்க முடியும். என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும்… அதன் பிறகெல்லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி மூலையில் குந்திக்கொண்டு நானும் கனகமும் எவ்வளவோ கதைத்திருக்கிறோம்! கனகம் எப்பொழுதுமே தன் தோணியைப்பற்றிப் பெருமைப் பட்டுக்கொள்வாள். அந்தத் தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கிறபடியாற்றான் கனகம் நல்ல சேலை கட்டியிருக்கிறாளாம். கையில் தங்கக் காப்புப் போட்டிருக்கிறாளாம்!’ அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்’ என்று என் மனதுள் எண்ணிக் கொள்வேன்.

ஆனால், இரண்டு வாரத்துள் அந்தத் துக்ககரமான செய்தி கிடைத்தது. கிராமமே பரபரப்படைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலின் அகப்பட்டு மாண்டு போனார். தோணியும் திரும்பி வரவில்லை….. என் இருதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோன்றிருந்தது எனக்கு. பாவம்! எனக்குத்தான் சொந்தத் தோணி இல்லையென்றாற் கனகத்திற்குக்கூடவா இல்லாமற் போகவேண்டும்? இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் கனகம் கடற்கரைக்கு வந்தபோது அவளை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவள்கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. விம்மி விம்மி அழத் தொடங்கினாள். என் மடியிற் தலையைப் புதைத்துக்கொண்டு. கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள? கனகத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் எண்ணினேன். என்னிடமோ தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது. என் தகப்பனாரப்போல நானும் தலை நரைக்கும் வரை உழைத்து, உழைத்துச் சாகவேண்டியதுதான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாகவேண்டும்? பாவம் கனகம்… எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். என் கண் முன்னால் அவள் அழகான சேலையும், தங்கக் காப்பும் அணிந்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழவேண்டும். அவள் வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்… நான் எண்ணியது சரியாகப் போய்விட்டது. அமாவாசையன்றிரவு, புங்கை மரத்தின்கீழே இருந்த வைரவர் கோவிலடியில் கனகத்துக்கும் செல்லனுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப் பார்க்கவோ எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. என் கையில் இருந்த அரும்பொருள் இன்னொருவனுக்குப் போய் விட்டது… ஆனாலும், என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப் போலக் கடன்காரனல்ல, செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று கிடையாமல் நான் எந்தப் பெண்ணின் வாழ்வையும் பாழாக்கப் போவதில்லை…

ஆனால், இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான், எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லாருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை விற்றுச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணமும் என்னைப்போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும்! அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?

ஈழகேசரி (1954)

 

http://akkinikkunchu.com/?p=58992

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.